Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்றையுள்ள ஆட்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அக்றையுள்ள ஆட்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அக்றையுள்ள ஆட்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சில கேள்விகள் மற்றவற்றைக் காட்டிலும் அடிக்கடி எழும்புகின்றன. இப்படிப்பட்டவற்றில் சில இங்கே சிந்திக்கப்படுகின்றன.

கடவுள் அன்பாகவே இருப்பாராகில், அவர் ஏன் பொல்லாப்பை அனுமதிக்கிறார்?

கடவுள் பொல்லாப்பை அனுமதிக்கிறார், உலகிலுள்ள லட்சக்கணக்கானோர் வேண்டுமென்றே பழக்கமாக அதைச் செய்கின்றனர். உதாரணமாக, அவர்கள் போர்களைத் தொடுக்கின்றனர், பிள்ளைகளின் மீது குண்டுகளைப் போடுகின்றனர், பூமியைச் சுட்டெரித்து பஞ்சங்களை உண்டுபண்ணுகின்றனர். இலட்சக்கணக்கானோர் புகைபிடித்து நுரையீரல் புற்றுநோய் பெறுகின்றனர், வேசித்தனம் செய்து மேக நோய்களைப் பெறுகின்றனர், அளவுக்கு அதிகமாக மதுபானங்களைப் பயன்படுத்தி ஈரலரிப்பு மற்றும் இதுபோன்ற நோய்களைப் பெறுகின்றனர். இப்படிப்பட்ட ஆட்கள் உண்மையில் எல்லா பொல்லாப்பும் முடிவுக்கு வரவேண்டும் என்று உண்மையில் விரும்புவதில்லை. அதற்குரிய தண்டனைகள் நீக்கப்படுவதை மாத்திரமே விரும்புகிறார்கள். தாங்கள் விதைத்ததை அறுக்கும்போது “ஏன் எனக்கு?” என்று கூக்குரலிடுகிறார்கள். நீதிமொழிகள் 19:3 சொல்கிற விதமாக அவர்கள் கடவுளைக் குறைகூறுகிறார்கள்: “மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.” அவர்களுடைய தீயக்காரியங்களைக் கடவுள் முடிவுக்கு கொண்டுவந்தால், அதைச் செய்வதற்கு தங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதாக ஆட்சேபிப்பார்கள்!

தீமையை யெகோவா அனுமதிப்பதற்கு முக்கிய காரணம் சாத்தானின் சவாலுக்குப் பதிலளிக்கவே ஆகும். சோதனையின் கீழ் அவருக்கு உண்மையுள்ளவராயிருக்கும் மனிதர்களை கடவுள் பூமியில் வைக்கமாட்டார் என்று பிசாசாகிய சாத்தான் சொன்னான். (யோபு 1:6-12; 2:1-10) தன்னுடைய சவாலை நிரூபிக்க வாய்ப்பைக் கொண்டிருப்பதற்கு சாத்தான் இருக்கும்படியாக யெகோவா அனுமதிக்கிறார். (யாத்திராகமம் 9:16 ஒப்பிடவும்.) சாத்தான் தன்னுடைய சவாலை நிரூபிக்க முயற்சி செய்கையில் கடவுளுக்கு விரோதமாக மனிதர்களைத் திருப்புவதற்காக தொடர்ந்து ஆபத்துக்களை இப்பொழுது கொண்டு வருகிறான். (வெளிப்படுத்துதல் 12:12) இருப்பினும், யோபு உத்தமத்தைக் காத்துக்கொண்டார். இயேசுவும் அப்படியே இருந்தார். உண்மைக் கிறிஸ்தவர்கள் இப்பொழுது அதைச் செய்கிறார்கள்.—யோபு 27:5; 31:6; மத்தேயு 4:1-11; 1 பேதுரு 1:6, 7.

மக்கள் என்றுமாக வாழமுடிகிற பூமிக்குரிய ஒரு பரதீஸில் நான் நம்பிக்கைவைக்க விரும்புகிறேன், ஆனால் அது உண்மையாக இருக்கமுடியாதபடி அவ்வளவு நல்லதாக இருக்கிறதல்லவா?

பைபிளின் பிரகாரம் அப்படியல்ல. மனிதவர்க்கம் இத்தனை அநேக நூற்றாண்டுகளாக கெட்டதை அறிந்திருக்கும் காரணத்தினாலேயே அது உண்மையாக இருக்க முடியாதபடி மிகவும் நல்லதாகத் தோன்றுகிறது. யெகோவா பூமியைச் சிருஷ்டித்து, அதனுடைய தாவர மற்றும் மிருக உயிர்களைப் பராமரித்து அதை அழிப்பதற்குப் பதிலாக அதனுடைய அழகைக் காக்கும் நீதியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களால் நிரப்பும்படியாக மனிதவர்க்கத்திடம் சொன்னார். (பக்கங்கள் 12 மற்றும் 17 பார்க்கவும்.) வாக்குப்பண்ணப்பட்ட அந்தப் பரதீஸ் உண்மையாயிருக்க முடியாதபடிக்கு மிக நல்லதாக இருப்பதற்கு மாறாக, தற்போதைய துயரகரமான நிலை தொடர்ந்திருப்பதற்கு மிகவும் மோசமாயிருக்கிறது. பரதீஸ் அதை மாற்றிவிடும்.

இந்த வாக்குறுதிகளில் விசுவாசம் என்பது எளிதில் எதையும் நம்பிவிடும் ஒரு காரியமாக இல்லை. “விசுவாசம் கேள்விப்படுவதனாலே வரும்.” கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம், அதனுடைய ஞானம் வெளியாகிறது, விசுவாசம் வளருகிறது.—ரோமர் 10:17, NW; எபிரெயர் 11:1.

பைபிள் கட்டுக்கதை மற்றும் அறிவியல்பூர்வமற்றது என்று சொல்லி ஏளனம்செய்யும் ஆட்களுக்கு நான் எவ்வாறு பதிலளிக்கலாம்?

பைபிளின் வரலாற்றுப்பூர்வமான திருத்தமானத்தன்மையை பைபிள் புதைப்பொருள் ஆராய்ச்சி உறுதிசெய்கிறது. உண்மையான அறிவியல் பைபிளோடு ஒத்திருக்கிறது. உலகியல் கல்விமான்கள் கண்டுபிடிப்பதற்கு வெகுமுன்னரே பின்வரும் உண்மைகள் பைபிளில் இருந்தன: பூமி அதனுடைய வளர்ச்சியில் கடந்துவந்த கட்டங்களின் வரிசை, பூமி உருண்டையானது, அது விண்வெளியில் அந்தரத்திலே தொங்கிக்கொண்டிருக்கிறது, பறவைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன போன்றவை.—ஆதியாகமம், அதிகாரம் 1; ஏசாயா 40:22; யோபு 26:7; எரேமியா 8:7.

பைபிள் தேவ ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டதை, நிறைவேறி முடிந்த தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. தானியேல் உலக வல்லரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியையும், மேசியாவின் வருகை மற்றும் மரணத்துக்குட்படுத்தப்படும் காலத்தையும் முன்கூட்டியே முன்னறிவித்தார். (தானியேல் அதிகாரங்கள் 2, 8; 9:24-27) இன்று, இவையே “கடைசி நாட்கள்” என்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்னும் மற்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டு வருகின்றன. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு, அதிகாரம் 24) இப்படிப்பட்ட ஒரு முன்னறிவு மனித சக்திக்கு உட்பட்டதன்று. (ஏசாயா 41:23) அதிகமாக உறுதிசெய்துகொள்ள, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s?) மற்றும் உயிர்—இங்கே எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (LifeHow Did It Get Here? By Evolution or by Creation?) என்ற உவாட்ச் டவர் புத்தகங்களைப் பார்க்கவும்.

பைபிள்பேரில் கேள்விகளுக்கு நான் எவ்வாறு பதிலளிக்கக்கூடியவனாக முடியும்?

நீங்கள் பைபிளைப் படித்து, அதன்பேரில் தியானம்செய்து, அதேசமயத்தில் கடவுளுடைய ஆவி உங்களை வழிநடத்தும்படி கேட்கவேண்டும். (நீதிமொழிகள் 15:28; லூக்கா 11:9-13) “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்,” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:5) மேலுமாக, கலந்தாலோசிக்க தகுதியுள்ள பைபிள் படிப்பு உதவி புத்தகங்கள் இருக்கின்றன. பிலிப்பு எத்தியோப்பியனுடன் படித்ததைப் போல, பொதுவாக மற்றவர்களிடமிருந்து உதவி தேவைப்படுகிறது. (அப்போஸ்தலர் 8:26-35) யெகோவாவின் சாட்சிகள் அக்கறையுள்ள ஆட்களோடு அவர்களுடைய வீடுகளில் இலவசமாக பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இந்தச் சேவையைக் கேட்கத் தயங்கவேண்டாம்.

அநேகர் ஏன் யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்து அவர்களோடு என்னைப் படிக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள்?

இயேசுவின் பிரசங்கிப்புக்கு எதிர்ப்பு இருந்தது, அவரைப் பின்பற்றுகிறவர்களும்கூட எதிர்க்கப்படுவார்கள் என்பதாக அவர் சொன்னார். இயேசுவின் போதனைகளைக் குறித்து சிலர் ஆச்சரியப்பட்டபோது மத எதிர்ப்பாளர்கள் இவ்விதமாக எதிர்வாதம் செய்தார்கள்: “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?” (யோவான் 7:46-48; 15:20) சாட்சிகளோடு படிக்கவேண்டாம் என்று சொல்பவர்களில் அநேகர் விஷயமறியாதவர்களாக அல்லது தப்பெண்ணங்கொண்டவர்களாக இருக்கின்றனர். சாட்சிகளோடு படித்து பைபிளைப் பற்றிய உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கிறதா இல்லையா என்பதை நீங்களே பாருங்கள்.—மத்தேயு 7:17-20.

தங்களுடைய சொந்த மதத்தையுடைய ஆட்களை ஏன் சாட்சிகள் சந்திக்கிறார்கள்?

இதைச் செய்வதில் அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். அவர் யூதர்களிடம் சென்றார். யூதர்கள் தங்களுடைய சொந்த மதத்தைக் கொண்டிருந்தார்கள், ஆனால் அநேக வழிகளில் அது கடவுளுடைய வார்த்தையிலிருந்து விலகிவிட்டிருந்தது. (மத்தேயு 15:1-9) கிறிஸ்தவமென்று அல்லது கிறிஸ்தவமல்லாததென்று அழைக்கப்படுபவையாக இருந்தாலும், எல்லா தேசங்களும் ஏதோ ஒரு வகையான மதத்தைக் கொண்டிருக்கின்றன. கடவுளுடைய சொந்த வார்த்தைக்கு இசைவாக இருக்கும் நம்பிக்கைகளை மனிதர்கள் கொண்டிருப்பது இன்றியமையாத முக்கியத்துவமுடையதாகும். இதைச் செய்வதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய சாட்சிகளின் முயற்சிகள் அயலான்பேரில் அன்புகாட்டுவதாக இருக்கிறது.

சாட்சிகள் தங்களுடையதே ஒரே சரியான மதம் என்பதாக நம்புகிறார்களா?

தன்னுடைய மதத்தைக் குறித்து உள்ளார்ந்த அக்கறை எடுத்துக்கொள்கிற எவரும் அதுவே சரியான மதம் என்பதாக நினைக்கவேண்டும். மற்றபடி, அவன் அல்லது அவள் ஏன் அதில் ஈடுபாடு கொள்ளவேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படும் அறிவுரை: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) தன்னுடைய நம்பிக்கைகளுக்கு வேத ஆதாரமிருப்பதை ஒரு நபர் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் ஒரே ஓர் உண்மையான விசுவாசம் மாத்திரமே இருக்கிறது. எபேசியர் 4:5 “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,” என்று குறிப்பிட்டு இதை உறுதிசெய்கிறது. பல பாதைகள், பல மதங்கள் அனைத்துமே இரட்சிப்புக்கு வழிநடத்துகின்றன என்ற நவீன, தளர்ந்த கருத்தை இயேசு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அவர் சொன்னார்: “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” யெகோவாவின் சாட்சிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்புகிறார்கள். மற்றபடி, அவர்கள் வேறு ஒரு மதத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.—மத்தேயு 7:14.

தாங்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள் என்பதாக அவர்கள் நம்புகிறார்களா?

இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்து யெகோவாவின் சாட்சிகளாக இல்லாமல் இருந்த அநேக லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுதலில் மீண்டும் வந்து உயிர்வாழும் வாய்ப்பைப் பெறுவர். இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அநேகர் “மகா உபத்திரவம்” வருவதற்கு முன்பாக சத்தியத்துக்காகவும் நீதிக்காகவும் நிலைநிற்கை இனி எடுத்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வர். மேலுமாக, நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்று இயேசு சொன்னார். வெளிப்புறத் தோற்றத்தை நாம் பார்க்கிறோம்; இருதயத்தைக் கடவுள் பார்க்கிறார். அவர் துல்லியமாக பார்த்து இரக்கமாக நியாயந்தீர்க்கிறார். அவர் நியாயத்தீர்ப்பு வேலையை நம்மிடம் அல்ல, இயேசுவின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்.—மத்தேயு 7:1-5; 24:21, NW.

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பவர்களிடமிருந்து என்ன பொருளாதார நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன?

பண நன்கொடைகளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களிலும் மாநாட்டு அரங்கங்களிலும் ஒருபோதும் காணிக்கைகள் வசூல் செய்யப்படுவது கிடையாது. நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் அவ்விதமாகச் செய்வதற்கு வசதியாக பெட்டிகள் வைக்கப்படுகின்றன. மற்றவர்கள் என்ன கொடுக்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. சிலர் மற்றவர்களைவிட அதிகத்தைக் கொடுக்க முடிகிறவர்களாக இருக்கிறார்கள்; சிலர் எதையுமே கொடுக்க இயலாதவர்களாக இருப்பார்கள். எருசலேம் ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டியையும் அதற்கு நன்கொடை அளிப்பவர்களையும் பற்றி குறிப்பு சொன்னபோது இயேசு சரியான நோக்குநிலையைக் காண்பித்தார்: பணத்தின் தொகை அல்ல, ஆனால் கொடுப்பதற்கு ஒருவருக்கிருக்கும் திறமையும் கொடுக்கும் ஆவியுமே முக்கியமானது.—லூக்கா 21:1-4.

நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானால், அவர்கள் செய்வது போல நான் பிரசங்கிக்கும்படி எதிர்பார்க்கப்படுவேனா?

கிறிஸ்துவின் ராஜ்யத்தின்கீழ் வாக்களிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸைப் பற்றிய அறிவினால் ஒருவர் நிரப்பப்படும்போது, அவர் மற்றவர்களோடு அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். நீங்களும் அவ்வாறு விரும்புவீர்கள். அது நற்செய்தி!—அப்போஸ்தலர் 5:41, 42.

இதைச் செய்வது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்பதைக் காண்பிக்கும் ஒரு முக்கியமான வழியாகும். பைபிளில், இயேசு “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என்பதாக அழைக்கப்படுகிறார். பூமியில் இருக்கையில் அவர் “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்று சொல்லி பிரசங்கித்து அதையே செய்யும்படியாக தம்முடைய சீஷர்களை அனுப்பினார். (வெளிப்படுத்துதல் 3:14; மத்தேயு 4:17; 10:7) பின்னர், இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளையிட்டார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” முடிவுக்கு முன்பாக, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,” என்றும்கூட அவர் முன்னறிவித்தார்.—மத்தேயு 28:19, 20; 24:14, NW.

இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. நண்பர்களோடும் அறிமுகமானவர்களோடும் உரையாடல் அநேகமாக இதைச் செய்வதற்கு வழியைத் திறந்துவைக்கிறது. சிலர் கடிதங்களை எழுதுவதன் மூலமாக அல்லது தொலைபேசியை பயன்படுத்தி இதைச் செய்கிறார்கள். மற்றவர்கள் அறிமுகமான ஒருவர் விசேஷமாக அக்கறையுள்ளவராக இருப்பார் என்று அவர்கள் நினைக்கும் பொருளையுடைய பிரசுரங்களைத் தபால் மூலம் அனுப்புகின்றனர். எவரையும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற ஆசையில், சாட்சிகள் வீடு வீடாக செய்தியைக்கொண்டுச் செல்கிறார்கள்.

பைபிள் இந்த அன்பான அழைப்பைக் கொண்டிருக்கிறது: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) பரதீஸ் பூமியையும் அதன் ஆசீர்வாதங்களையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது, இந்த நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையினால் நிரம்பிய ஓர் இருதயத்திலிருந்து விருப்பார்வத்தோடு செய்யப்படவேண்டும்.

யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும்பற்றி உங்களுக்கு மற்ற கேள்விகளும் இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். ஒருவேளை அவற்றில் சில தர்க்கத்துக்கு இடமளிக்கும் இயல்புள்ளவையாக இருக்கலாம். அவற்றுக்கு பதிலளிக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தச் சிற்றேட்டில் இடம் குறைவாக உள்ளது; ஆகவே இவற்றை அவர்களுடைய ராஜ்ய மன்ற கூட்டங்களில் அல்லது உங்களுடைய வீட்டை அவர்கள் சந்திக்க வருகையில் உள்ளூர் சாட்சிகளிடம் கேட்கும்படியாக நாங்கள் உங்களை அழைக்கிறோம். அல்லது நீங்கள் Watch Tower Society-க்கு, உங்களுக்கு அருகாமையிலுள்ள கிளைக்காரியாலயத்துக்கு உங்கள் கேள்விகளை அனுப்பிவைக்கலாம்; பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.