Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களுடைய நவீனகால அபிவிருத்தியும் வளர்ச்சியும்

அவர்களுடைய நவீனகால அபிவிருத்தியும் வளர்ச்சியும்

அவர்களுடைய நவீனகால அபிவிருத்தியும் வளர்ச்சியும்

யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன வரலாறு நூறாண்டுகளுக்குச் சற்று முன்பாக வடிவம்பெற்றது. அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவில் இப்பொழுது பிட்ஸ்பர்க்கின் ஒரு பாகமாக இருக்கும் அலகேனி நகரில் 1870-களின் முற்பகுதியில், மிகச் சிறிய ஒரு பைபிள் படிப்பு தொகுதி ஆரம்பமானது. சார்ல்ஸ் டேஸ் ரஸல் தொகுதியின் முக்கிய கருத்துப் படைப்பாளராக இருந்தார். ஜூலை மாதம், 1879-ல் ஸயன்ஸ் உவாட்ச் டவர் அண்ட் ஹெரால்ட் ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் பத்திரிகையின் முதல் பிரதி வெளியானது. அந்த ஒரு சிறிய பைபிள் படிப்பிலிருந்து 1880-க்குள் இருபதுக்கும் அதிகமான சபைகள் அருகாமையிலுள்ள மாநிலங்களுக்குள் பரவிவிட்டிருந்தன. ஸயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸையிட்டி 1881-ல் உருவாக்கப்பட்டு 1884-ல் ரஸலை தலைவராகக் கொண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. சங்கத்தின் பெயர் பின்னால் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி என்பதாக மாற்றப்பட்டது. அநேகர் வீட்டுக்கு வீடு சாட்சிப்பகர்ந்து பைபிள் பிரசுரங்களை அளித்துக்கொண்டிருந்தனர். ஐம்பது பேர் 1888-ல் இதை முழுநேரமாக செய்துகொண்டிருந்தனர்—தற்போது உலக முழுவதும் சராசரி எண்ணிக்கை 6,20,000-ஐ தாண்டிவிட்டது.

வேலை 1909-க்குள் அனைத்து நாடுகளிலும் செய்யப்படலாயிற்று, சங்கத்தின் தலைமைக்காரியாலயம் நியூ யார்க், புரூக்லினில் தற்போதிருக்கும் அதனுடைய இடத்துக்கு மாற்றப்பட்டது. அச்சடிக்கப்பட்ட பிரசங்கங்கள் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டன, 1913-க்குள் இவை ஐக்கிய மாகாணங்கள், கனடா, மற்றும் ஐரோப்பாவில் 3,000 செய்தித்தாள்களில் நான்கு மொழிகளில் பிரசுரமாயின. புத்தகங்கள், சிறு புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரதிகள் கோடிக்கணக்கில் விநியோகிக்கப்பட்டிருந்தன.

சிருஷ்டிப்பின் நிழற்பட நாடகத்தின் (Photo-Drama of Creation) மீது வேலை 1912-ல் ஆரம்பமானது. ஸ்லைடுகள் மற்றும் ஒலியோடுகூடிய ஓடும் படங்கள் பூமியின் சிருஷ்டிப்பு முதற்கொண்டு கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவு வரையாக சித்தரித்தன. இது 1914-ல் காண்பிக்கப்பட ஆரம்பித்தது, ஒவ்வொரு நாளும் 35,000 பேர் இதைப் பார்த்தனர். ஒலியோடுகூடிய ஓடும் படங்களுக்கு இது ஒரு முன்னோடியாக இருந்தது.

ண்டு 1914

மிக முக்கியமான ஒரு காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. பைபிள் மாணாக்கரான சார்ல்ஸ் டேஸ் ரஸல் 1876-ல் நியூ யார்க், புரூக்லினில் பிரசுரமான பைபிள் எக்ஸாமினர்-க்கு “புறஜாதியாரின் காலங்கள்: அவை எப்போது முடிவடைகின்றன?” என்ற கட்டுரையை அளித்தார். இது அதனுடைய அக்டோபர் மாத பிரதியில் பக்கம் 27-ல் “ஏழு காலங்கள் கி.பி. 1914-ல் முடிவடையும்,” என்று சொன்னது. புறஜாதியாரின் காலங்கள் என்பது இயேசு “ஜாதிகளுக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” என்று குறிப்பிட்ட காலப்பகுதியாகும். (லூக்கா 21:24) நடக்கும் என்பதாக எதிர்பார்த்த அனைத்துமே 1914-ல் நடக்கவில்லை, ஆனால் அது நிச்சயமாகவே புறஜாதியாருடைய காலங்களின் முடிவை குறித்தது, விசேஷித்த முக்கியத்துவமுள்ள ஆண்டாக இருந்தது. மனித வரலாற்றில் 1914 ஒரு திரும்புகட்டமாக இருந்தது என்பதை அநேக வரலாற்றாசிரியர்களும் கருத்துரையாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பின்வரும் மேற்கோள்கள் இதைக் காண்பிக்கின்றன:

“வரலாற்றில் முற்றிலும் ‘இயல்பான நிலையில்’ இருந்த கடைசி ஆண்டு முதல் உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன்னான ஆண்டாகிய 1913 ஆகும்.”—வாஷிங்டன், D.C., டைம்ஸ்-ஹெரால்ட், தலையங்கம், மார்ச் 13, 1949.

“உலகின் போக்குகளை உணர்ந்துகொண்டிருக்கும் அனைவரும் 1914 முதற்கொண்டு, விதிக்கப்பட்டதும் முன்தீர்மானிக்கப்பட்டதும் போல் தோன்றியிருக்கும் எக்காலத்திலுமிருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய பேரழிவை நோக்கிய அணிவகுப்பினால் வெகுவாக கலங்கிப்போய் இருக்கிறார்கள். அழிவில் மூழ்கிப்போவதைத் தடுப்பதற்கு எதையும் செய்வதற்கில்லை என்பதாக அநேக நிதான புத்தியுடைய ஆட்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.”—பெட்ரான்ட் ரஸல், தி நியூ யார்க் டைம்ஸ் மேகஸீன், செப்டம்பர் 27, 1953.

“முழு உலகமும் உண்மையில் முதல் உலகப் போரைக் குறித்து அமைதியிழந்து கிளர்ந்தெழுந்தது, அது ஏனென்று இன்னும் நமக்கு தெரியாதிருக்கிறது. அதற்கு முன்னால், இலட்சிய உலகம் பார்க்கக்கூடிய நிலையிலிருப்பதாக அநேக ஆட்கள் நினைத்தார்கள். அங்கே அமைதியும் செழிப்பும் இருந்தது. பின்னர் அனைத்துமே அமைதியிழந்து கிளர்ந்தெழுந்தது. அப்போது முதற்கொண்டு சாவில்லாமல் உணர்ச்சியற்றுக் கிடக்கும் நிலையில் நாம் இருந்துவருகிறோம் . . . வரலாறு முழுவதிலும் கொல்லப்பட்டவர்களைக் காட்டிலும் அதிகமான ஆட்கள் இந்த நூற்றாண்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.”—டாக்டர் வாக்கர் பெர்சி, அமெரிக்கன் மெடிக்கல் நியூஸ், நவம்பர் 21, 1977.

ஜெர்மன் நாட்டு அரசியல் மேதை கோன்ராட் அடினோயர் 1914-க்கு பின் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளான பின்பு எழுதினார்: “மக்களின் வாழ்க்கையிலிருந்து பாதுகாப்பும் அமைதியும் 1914 முதற்கொண்டு மறைந்துவிட்டிருக்கிறது.”—தி வெஸ்ட் பார்க்கர், கிளீவ்லாண்ட், ஒஹாயோ, ஜனவரி 20, 1966.

சங்கத்தின் முதல் தலைவர் C. T. ரஸல் 1916-ல் மரித்தார், அவரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஜோசப் F. ரதர்ஃபோர்ட் தலைவரானார். அநேக மாற்றங்கள் நிகழ்ந்தன. காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு கூட்டுப் பத்திரிகையாக கோல்டன் ஏஜ் பத்திரிகை அறிமுகப்படுத்தப்பட்டது. (இப்பொழுது 60-க்கும் அதிகமான மொழிகளில் 1,20,00,000-க்கும் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வரும் விழித்தெழு!) வீட்டுக்கு வீடு சாட்சிப்பகர்தல் அதிக முக்கியத்துவம் பெறலானது. கிறிஸ்தவமண்டல பிரிவுகளிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்காட்ட, இந்தக் கிறிஸ்தவர்கள் 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றனர். இந்தப் பெயர் ஏசாயா 43:10-12-ஐ அடிப்படையாகக் கொண்டது.

வானொலி மிகப் பரவலாக 1920-களிலும் 1930-களிலும் பயன்படுத்தப்பட்டது. சங்கம் 1933-க்குள் பைபிள் சொற்பொழிவுகளை ஒலிபரப்ப 403 வானொலி நிலையங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. பின்னர், வானொலிக்குப் பதிலாக பெரும்பாலும் சாட்சிகள் தூக்கிச் செல்லக்கூடிய ஒலிக்கருவிகளையும் பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுக்களையும் கொண்டு அதிகப்படியான வீட்டுக்கு வீடு சந்திப்புகளைச் செய்தனர். அக்கறை இருந்த இடங்களில் வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற வெற்றிகள்

இந்த வேலையைச் செய்ததற்காக 1930-களிலும் 1940-களிலும் சாட்சிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர், பேச்சு, எழுத்து, கூட்டம் மற்றும் வணக்க சுயாதீனத்தைக் காத்துக்கொள்ளும்பொருட்டு அநேக வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில், கீழ் நீதிமன்றங்களிலிருந்து மேல் முறையீடு செய்தபோது, ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்தில் சாட்சிகள் 43 வழக்குகளில் வெற்றிபெறுவதில் விளைவடைந்தது. அதேவிதமாகவே, மற்ற தேசங்களில் உயர் நீதிமன்றங்களிலிருந்து சாதகமான தீர்ப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. இந்த நீதிமன்ற வெற்றிகளைக் குறித்து பேராசிரியர் C. S. ப்ராடன், சாட்சிகளைக் குறித்து இவர்களும்கூட நம்புகிறார்கள் (These Also Believe) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு சொன்னார்: “தங்கள் குடி உரிமைகளைப் கட்டிக்காப்பதற்காக தங்கள் போராட்டத்தின் மூலம் இவர்கள் மக்களாட்சிக்குக் குறிப்பிடத்தக்க சேவைப் புரிந்திருக்கிறார்கள், ஏனென்றால் தங்களுடையப் போராட்டத்தில் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு சிறுபான்மை தொகுதியும் அந்த உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அதிகத்தைச் செய்திருக்கிறார்கள்.”

விசேஷித்த பயிற்சி திட்டங்கள்

J. F. ரதர்ஃபோர்ட் 1942-ல் மரித்தபோது N. H. நார் தலைமைப் பொறுப்பேற்றார். ஒருமுகப்பட்ட பயிற்சி திட்டம் ஆரம்பமானது. மிஷனரிகளுக்கு 1943-ல் உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட் என்றழைக்கப்பட்ட விசேஷித்த பயிற்சி பள்ளி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அந்தச் சமயம் முதற்கொண்டு, இந்தப் பள்ளியின் பட்டதாரிகள் உலகின் 140-க்கும் மேற்பட்ட தேசங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். சபைகள் ஏதுமில்லாத தேசங்களில் புதிய சபைகள் தோன்றியிருக்கின்றன, உலகம் முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கிளைக்காரியாலயங்களின் எண்ணிக்கை இப்போது ஏறக்குறைய 100 ஆகும். அவ்வப்போது, சபை மூப்பர்கள், கிளைக்காரியாலயங்களிலுள்ள விருப்பார்வ ஊழியர்கள், (பயனியர்களாக) சாட்சிகொடுக்கும் வேலையில் முழு நேரமாக ஈடுபடுகிறவர்கள் ஆகியவர்களைப் பயிற்றுவிப்பதற்காக விசேஷித்த பயிற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

N. H. நார் 1977-ல் மரித்தார். அவருடைய மரணத்துக்கு முன்பாக அவர் பங்குகொண்ட கடைசி அமைப்பு சம்பந்தப்பட்ட மாற்றங்களில் ஒன்று புரூக்லினில் தலைமைக்காரியாலயத்திலுள்ள நிர்வாகக் குழுவை விரிவுபடுத்தியதாகும். நிர்வாகப் பொறுப்புகள் 1976-ல் பிரிக்கப்பட்டு நிர்வாகக் குழுவின் அங்கத்தினர்களடங்கிய பல்வேறு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டன. (1993-ல்) அதனுடைய 11 அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ஏறக்குறைய 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக சாட்சிப்பகரும் வேலைக்கு தங்கள் முழு நேரத்தையும் அர்ப்பணித்தவர்களாக இருந்தனர்.

ச்சு வசதிகள் விரிவாகின்றன

நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வரலாறு கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்ததாய் இருந்திருக்கிறது. பென்ஸில்வேனியாவில் 1870-ல் ஒரு சிறிய பைபிள் படிப்பு தொகுதியிலிருந்து சாட்சிகள் 1993-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதிலும் 73,000-க்கும் மேற்பட்ட சபைகளாக வளர்ந்திருக்கின்றனர். முதலில் அனைத்து இலக்கியங்களும் வர்த்தக நிறுவனங்களில் அச்சடிக்கப்பட்டன; பின்னர், 1920-ல், சாட்சிகளின் சில இலக்கியங்கள் வாடகை தொழிற்சாலை கட்டடங்களில் உற்பத்திசெய்யப்பட்டன. ஆனால் 1927 முதற்கொண்டு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் நியூ யார்க், இங்க்.-க்குச் சொந்தமான எட்டு மாடி தொழிற்சாலை கட்டடத்திலிருந்து அதிகமான இலக்கியங்கள் வர ஆரம்பித்தன. இது இப்பொழுது ஏழு தொழிற்சாலை கட்டடங்களாகவும் ஒரு பெரிய அலுவலக வளாகமாகவும் விரிவடைந்திருக்கிறது. புரூக்லினில் அருகாமையிலுள்ள மற்ற கட்டடங்கள், பிரசுர வசதிகளை இயக்குவதற்குத் தேவைப்படுகிற 3,000-க்கும் மேலான விருப்பார்வ பணியாட்களுக்கு இடமளிக்கின்றன. நூற்றுக்கும் அதிகமானோர் நியூ யார்க், பாட்டர்ஸனிலுள்ள கல்வித்திட்ட கட்டடத்தில் சேவைசெய்கிறார்கள். மேலும், நியூ யார்க்கின் வால்கிலுக்கு அருகில் ஏறக்குறைய ஓராயிரம் விருப்பார்வ பணியாட்களைக்கொண்ட ஒரு கூட்டுப் பண்ணையும் தொழிற்சாலையும் உள்ளது; இது காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அச்சடிக்கும் வேலையையும் கையாளுகிறது, இந்த ஆயிரக்கணக்கான விருப்பார்வ பணியாட்களுக்கான உணவையும் உற்பத்திசெய்கிறது. தனிப்பட்ட தேவைகளுக்காக மிதமான ஒரு செலவீட்டுத் தொகையை ஒவ்வொரு விருப்பார்வ பணியாளரும் பெறுகிறார்.

சர்வதேச மாநாடுகள்

முதல் பெரிய மாநாடு 1893-ல் அ.ஐ.மா. இல்லினாய்ஸிலுள்ள சிகாகோவில் நடத்தப்பட்டது. அதற்கு 360 பேர் ஆஜராயிருந்தனர், 70 புதியவர்கள் முழுக்காட்டப்பட்டனர். கடைசி மிகப் பெரிய தனியொரு சர்வதேச மாநாடு 1958-ல் நியூ யார்க் நகரில் நடத்தப்பட்டது. அது யாங்கி ஸ்டேடியத்தையும் அப்போதிருந்த போலோ விளையாட்டு மைதானத்தையும் பயன்படுத்தியது. உச்ச ஆஜர் எண்ணிக்கை 2,53,922; முழுக்காட்டப்பட்ட புதியவர்களின் எண்ணிக்கை 7,136. அப்போது முதற்கொண்டு சர்வதேச மாநாடுகள் அநேக தேசங்களில் தொடர்ச்சியான அசெம்பிளிகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுது சர்வதேச தொடர் மாநாடுகள் 100-க்கும் அதிகமான தேசங்களில் 1,500-க்கும் மேற்பட்ட அசெம்பிளிகளை உட்படுத்துகின்றன.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

ஒலியோடு ஆரம்ப கால திரைப்படங்கள்

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

மனித வரலாற்றில் ஒரு திரும்புகட்டம்

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

குடி உரிமைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சேவை

[பக்கம் 6-ன் படம்]

“காவற்கோபுரம்” ஒரே மொழியில் 6,000 பிரதிகளிலிருந்து 115-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1,60,00,000-க்கும் அதிகமான பிரதிகள்

[பக்கம் 10-ன் படம்]

நியூ யார்க், வால்கில் மற்றும்

. . . நியூ யார்க், புரூக்லினில் அச்சு வசதிகள்