Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்கள் யார்?

அவர்கள் யார்?

அவர்கள் யார்?

யெகோவாவின் சாட்சிகளோடு நீங்கள் நன்றாகப் பழக்கப்பட்டவர்களாக வேண்டுமென்பதே அவர்களுடைய விருப்பமாகும். அவர்களை அயலகத்தாராகவும் உடன் வேலைசெய்பவர்களாகவும் அல்லது வாழ்க்கையின் அன்றாட அலுவல்கள் ஏதாவது ஒன்றிலும் நீங்கள் சந்தித்திருக்கலாம். தெருவில் நின்றுகொண்டு கடந்துசெல்பவர்களுக்குத் தங்களுடைய பத்திரிகைகளை அவர்கள் அளிப்பதை நீங்கள் ஒருவேளை பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் கதவண்டையில் நீங்கள் அவர்களோடு சிறிது நேரம் பேசியிருக்கலாம்.

உண்மையில், யெகோவாவின் சாட்சிகள் உங்களிலும் உங்கள் நலனிலும் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்கு நண்பர்களாக இருந்து தங்களையும் தங்கள் நம்பிக்கைகளையும் தங்கள் அமைப்பைபற்றியும் மக்களைப்பற்றியும் நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தைப்பற்றியும் தாங்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதையும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, இந்தச் சிற்றேட்டை அவர்கள் உங்களுக்காக தயாரித்திருக்கிறார்கள்.

அநேக வழிகளில் யெகோவாவின் சாட்சிகள் மற்ற எல்லாரையும் போலவே இருக்கின்றனர். அவர்களுக்கு—பொருளாதார, உடல்சம்பந்தமான, உணர்ச்சிசம்பந்தமான—பிரச்னைகள் உண்டு. சில சமயங்களில் தவறுகள் செய்துவிடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பரிபூரணராக, ஆவியால் ஏவப்பட்டவர்களாக அல்லது தவறிழைக்காதவர்களாக இல்லை. ஆனால் தங்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய்பவர்களாகவும் தேவையான திருத்தங்களைச் செய்ய பைபிளை ஊக்கமாக படிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கு அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், மேலும் அந்த ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றுவதற்காக தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். தங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் அவர்கள் கடவுளுடைய வார்த்தை மற்றும் அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடுகிறார்கள்.

தங்களுடைய நம்பிக்கைகள் வெறுமனே மனித ஊகிப்புகளை அல்லது மத கோட்பாடுகளை அல்லாமல் அவை பைபிளை ஆதாரமாக கொண்டிருப்பது அவர்களுக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அப்போஸ்தலன் பவுல் ஆவியால் ஏவப்பட்டபோது வெளிப்படுத்திய விதமாகவே அவர்கள் உணருகிறார்கள்: “கடவுளே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யனென்றுங் காணப்படட்டும்.” (ரோமர் 3:4, NW a) பைபிள் சத்தியம் என்று அளிக்கப்படும் போதகங்களுக்கு வரும்போது, அவர்கள் அப்போஸ்தலன் பவுல் பிரசங்கித்ததைக் கேட்டபோது பெரோயர்கள் பின்பற்றின போக்கைப் பலமாக ஆதரிக்கின்றனர்: “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து”பார்த்தார்கள். (அப்போஸ்தலர் 17:11) தாங்கள் அளிக்கும் போதனையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவரும் அளிக்கும் போதனையாக இருந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகள் எல்லா மத போதகங்களும் வேதவாக்கியங்களோடு ஒத்திருக்கின்றனவா என்ற இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று நம்புகிறார்கள். அவர்களோடு நீங்கள் கலந்துரையாடுகையில் இதைச் செய்யும்படியாக உங்களை அழைக்கிறார்கள்—துரிதப்படுத்துகிறார்கள்.

இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக நம்புகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. அதனுடைய 66 புத்தகங்களும் ஆவியால் ஏவப்பட்டவையாகவும் வரலாற்றுப்பூர்வமாக திருத்தமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். பொதுவாக புதிய ஏற்பாடு என்றழைக்கப்படுவதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள் என்று குறிப்பிடுகிறார்கள், பழைய ஏற்பாட்டை எபிரெய வேதாகமங்கள் என்று அழைக்கிறார்கள். கிரேக்க மற்றும் எபிரெய வேதாகமங்கள் ஆகிய இரண்டையுமே நம்புகிறார்கள், மேலும் சொற்றொடர்கள் அல்லது அமைப்புகள் உருவகமாக அல்லது அடையாள அர்த்தமுள்ளதாக இருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் இடங்களைத் தவிர அவற்றை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கின்றனர். பைபிளின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன, மற்றவை நிறைவேறிவருகின்றன, இன்னும் மற்றவை நிறைவேற காத்திருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

வர்களுடைய பெயர்

யெகோவாவின் சாட்சிகள்? ஆம், அப்படித்தான் அவர்கள் தங்களைக் குறிப்பிடுகின்றனர். இது யெகோவாவையும் அவருடைய தேவத்துவத்தையும் அவருடைய நோக்கங்களையும் குறித்து அவர்கள் சாட்சிப்பகர்வதை சுட்டிக்காட்டும் ஒரு வருணனைப் பெயராக இருக்கிறது. “கடவுள்,” “கர்த்தர்,” மற்றும் “சிருஷ்டிகர்,” என்பவை—“ஜனாதிபதி,” “அரசன்” மற்றும் “தளபதி” போன்றவற்றைப் போல—பட்டப்பெயர்களாகவும் பல்வேறு பிரமுகர்களுக்கும் பயன்படுத்தப்படக்கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் “யெகோவா” என்பது ஒரு தனிப்பட்ட பெயராக, சர்வவல்லமையுள்ள கடவுளும் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருமானவரை குறிப்பிடுவதாய் இருக்கிறது. கிங் ஜேம்ஸ் பைபிள் வெர்ஷனின் பிரகாரம் இது சங்கீதம் 83:17-ல் காண்பிக்கப்பட்டுள்ளது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உண”ரவேண்டும்.

யெகோவா என்ற பெயர் (அல்லது ரோமன் கத்தோலிக்க ஜெரூசலம் பைபிள் மற்றும் சில நவீன கல்விமான்கள் விரும்புகிறபடி யாவே) மூல எபிரெய வேதாகமங்களில் ஏறக்குறைய 7,000 தடவைகள் காணப்படுகிறது. பெரும்பாலான பைபிள்கள் அதை அவ்விதமாகவே காண்பிக்காமல், அதற்கு பதிலாக “தேவன்” அல்லது “கர்த்தர்” என்று மாற்றியிருக்கின்றன. இருப்பினும், இந்தப் பைபிள்களிலும்கூட, மூல எபிரெய வேதாகமங்களில் யெகோவாவை எங்கே பயன்படுத்துகிறது என்பதை ஒருவர் பொதுவாக சொல்லிவிடமுடியும், ஏனென்றால் அந்த இடங்களில் பதில் வார்த்தைகள் தேவன், கர்த்தர் என்பவை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. பல நவீன மொழிபெயர்ப்புகள் நிச்சயமாகவே யெகோவா அல்லது யாவே என்ற பெயரை பயன்படுத்துகின்றன. ஆகவே, ஏசாயா 42:8-ல் புதிய உலக மொழிபெயர்ப்பு இவ்விதமாக வாசிக்கிறது: “நான் யெகோவா, அது என் பெயர்.”

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பெயருக்காக பயன்படுத்தும் வேதாகமப் பதிவு ஏசாயாவின் 43-ம் அதிகாரத்தில் உள்ளது. அங்கே உலக காட்சியானது ஒரு நீதிமன்ற நாடகமாக கருதப்படுகிறது: தேசங்களின் கடவுட்கள் தாங்கள் உரிமைபாராட்டும் நீதி வழக்குகளை நிரூபிப்பதற்கு சாட்சிகளைக் கொண்டுவருவதற்கு அல்லது யெகோவாவின் சார்பாக சாட்சியங்களைக் கேட்டு சத்தியத்தை ஒப்புக்கொள்ளும்படியாக அழைக்கப்படுகின்றனர். யெகோவா அங்கே தம்முடைய மக்களிடமாக இவ்வாறு அறிவிக்கிறார்: “நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான் நானே யெகோவா, என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.”—ஏசாயா 43:10, 11, அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வெர்ஷன்.

யெகோவா தேவன் கிறிஸ்துவுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்போது பூமியில் தம்முடைய சாட்சிகளைக் கொண்டிருந்தார். எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் விசுவாசிகளாயிருந்த அந்த மனிதர்களின் சிலருடைய பெயர்களை பட்டியலிட்டபிறகு, எபிரெயர் 12:1 சொல்கிறது: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” பொந்தியு பிலாத்துவுக்கு முன்பாக இயேசு சொன்னார்: “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என்று அவர் அழைக்கப்படுகிறார். (யோவான் 18:37; வெளிப்படுத்துதல் 3:14) இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.

ஆகவே, கிறிஸ்து இயேசுவின் மூலமாக ஆளப்படும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் இன்று சொல்லிவரும் 40,00,000-க்கும் அதிகமான ஆட்கள் தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று சரியாகவே குறிப்பிடப்படுவதாக கருதுகிறார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a மற்றபடி குறிப்பிட்டிருந்தாலொழிய, இந்தச் சிற்றேட்டில் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

அவர்கள் உங்களில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக அவர்கள் ஒப்புக்கொடுத்தவர்களாக இருக்கிறார்கள்

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதாக அவர்கள் நம்புகிறார்கள்

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

ஒரு நீதிமன்ற நாடகத்தில் சம்பந்தப்பட்ட பெயர்

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

230-க்கும் மேற்பட்ட தேசங்களில் 40,00,000-க்கும் அதிகமான சாட்சிகள்

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

பூர்வ எபிரெயுவில் கடவுளுடைய தனிப்பட்ட பெயர்