Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு அதைச் சொல்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகள்

உங்களுக்கு அதைச் சொல்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகள்

உங்களுக்கு அதைச் சொல்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகள்

கிறிஸ்தவர்கள் “சகல தேசத்தாரையும் சீஷராக்”கும்படியாக கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது அவர்கள் அழுத்தத்தைப் பயன்படுத்தி அல்லது பலவந்தமாக மற்றவர்களை மதமாற்ற வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இயேசுவின் வேலை ‘சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும்,’ ‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுவதும்,’ ‘துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்வதுமாக’ இருந்தது. (மத்தேயு 28:19, NW; ஏசாயா 61:1, 2; லூக்கா 4:18, 19) யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் இதைச் செய்ய நாடுகிறார்கள். பண்டையக் கால எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் போல, யெகோவாவின் சாட்சிகள் இன்று “சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற”வர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர்.—எசேக்கியேல் 9:4.

இன்றைய நிலைமைகளைக் குறித்து துயரப்படுகிறவர்களைக் கண்டுபிடிக்க அவர்கள் பயன்படுத்தும் அறியப்பட்ட மிகச் சிறந்த வழி வீட்டுக்கு வீடு செல்வதன் மூலமாகும். இயேசு “பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து”வந்தபோது செய்தவிதமாகவே பொது மக்களைச் சென்றெட்ட அவர்கள் உடன்பாடான முயற்சியை எடுக்கின்றனர். அவருடைய ஆரம்பகால சீஷர்களும் அப்படியே செய்தார்கள். (லூக்கா 8:1; 9:1-6; 10:1-9) இன்று, சாத்தியமாயிருக்கும் இடங்களில், யெகோவாவின் சாட்சிகள் ஓர் ஆண்டில் பல முறைகள் ஒவ்வொரு வீட்டையும் சந்திக்க முயன்று, ஏதோவொரு உள்ளூர் அல்லது உலகம் சம்பந்தப்பட்ட அக்கறைக்குரிய அல்லது கவலைக்குரிய ஒரு பேச்சுப்பொருளைப் பற்றி வீட்டுக்காரரோடு ஒருசில நிமிடங்கள் சம்பாஷிக்க நாடுகிறார்கள். சிந்திப்பதற்கு ஓரிரு வசனங்கள் காண்பிக்கப்படலாம், வீட்டுக்காரர் அக்கறைக் காட்டும் பட்சத்தில் சாட்சி மேலுமான கலந்துரையாடலுக்காக வசதியான ஒரு நேரத்தில் மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யலாம். பைபிள்களும் பைபிளை விளக்கும் இலக்கியங்களும் கிடைக்கும்படிச் செய்யப்பட்டு, வீட்டுக்காரர் விரும்புவாராகில், எந்த ஒரு கட்டணமுமின்றி ஒரு வீட்டு பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது. சராசரியாக இவ்விதம் சுமார் 45,00,000 பைபிள் படிப்புகள் 1993-ல் உலகம் முழுவதிலும் ஒழுங்காக நடத்தப்பட்டன.

மற்றவர்களுக்கு “ராஜ்யத்தின் நற்செய்தி” சொல்லப்படுகிற மற்றொரு வழி, உள்ளூர் ராஜ்ய மன்றங்களில் நடத்தப்படும் கூட்டங்களின் மூலமாகும். சாட்சிகள் அங்கே வாரந்தோறும் கூட்டங்களை நடத்துகிறார்கள். ஒரு கூட்டம் தற்கால அக்கறைக்குரிய ஒரு தலைப்புப்பொருளின் மேல் ஒரு பொது சொற்பொழிவாக இருக்கிறது, இதைத் தொடர்ந்து காவற்கோபுர பத்திரிகையை ஆதார பொருளாகப் பயன்படுத்தி ஏதோவொரு பைபிள் தலைப்பு அல்லது தீர்க்கதரிசனத்தைப்பற்றிய படிப்பு நடைபெறுகிறது. மற்றொரு கூட்டம் சாட்சிகள் நற்செய்தியின் மேம்பட்ட அறிவிப்பாளர்களாக இருப்பதற்கு அவர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகும். இதைத் தொடரும் ஒரு பகுதி உள்ளூர் பிராந்தியத்தில் சாட்சிப்பகரும் வேலையைக் கலந்தாலோசிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது. மேலும், வாரம் ஒரு முறை சாட்சிகள் சிறிய தொகுதிகளாக பைபிள் படிப்புகளுக்காக தனிநபர்களின் வீடுகளில் கூடிவருகிறார்கள்.

இந்த எல்லா கூட்டங்களும் பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன. காணிக்கைகள் ஒருக்காலும் எடுக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட கூட்டங்கள் அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கின்றன. பைபிள் சொல்கிறது: “நாம் ஒவ்வொருவரும் எவ்விதமாக மற்றவர்களை மிகச் சிறந்த முறையில் அன்புக்கும் சுறுசுறுப்பான நற்கிரியைகளுக்கும் தூண்டிடலாம் என்று பார்த்துக்கொண்டிருந்து, சிலர் செய்வது போல நம்முடைய கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடக்கூடாது, ஆனால் மாறாக, நாளானது சமீபித்து வருகிறதை நீங்கள் பார்க்கிறபடியால் அதிகமாக ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவேண்டும்.” தனிப்பட்ட படிப்பும் ஆராய்ச்சியும் அவசியம், ஆனால் மற்றவர்களோடு கூடிவருதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது: “இரும்பை இரும்பு கூராக்கும்; அப்படியே மனுஷனும் மற்றொருவனுடைய அறிவை கூராக்குகிறான்.”—எபிரெயர் 10:24, 25; நீதிமொழிகள் 27:17, தி நியூ இங்லிஷ் பைபிள்.

சாட்சிகள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் மற்ற ஆட்களோடு தொடர்புகொள்ளும் சமயத்திலும்கூட நற்செய்தியைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அது பக்கத்து வீட்டிலுள்ள ஒருவரோடு அல்லது பேருந்து அல்லது விமானத்தில் உடன் பயணம் செய்பவரோடு பரிமாறிக்கொள்ளப்படும் ஒருசில வார்த்தைகளாக, ஒரு நண்பர் அல்லது ஓர் உறவினரோடு நீண்ட ஒரு பேச்சாக, அல்லது உணவுவேளையின்போது உடன்வேலைசெய்பவரோடு ஒரு கலந்துரையாடலாக இருக்கலாம். பூமியில் இருந்தபோது இயேசு செய்த பெரும்பாலான சாட்சிக்கொடுத்தல் இத்தகையதாக இருந்தது—கடலோரமாக நடந்துசெல்கையில், ஒரு மலைச்சரிவில் உட்கார்ந்திருக்கையில், யாராவது ஒருவருடைய வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், ஒரு திருமணத்துக்குச் செல்கையில், அல்லது கலிலேயாக் கடலில் மீன்பிடிக்கும் படகில் பயணப்படுகையில். அவர் ஜெப ஆலயத்திலும் எருசலேமிலிருந்த ஆலயத்திலும் கற்பித்தார். எங்கே இருந்தாலும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கு அவர் சந்தர்ப்பங்களைக் கண்டுபிடித்தார். யெகோவாவின் சாட்சிகள் இந்த வகையிலும்கூட அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயற்சிசெய்கிறார்கள்.—1 பேதுரு 2:21.

முன்மாதிரியின் மூலம் பிரசங்கித்தல்

நற்செய்தியைச் சொல்லுகிறவர் தனக்குத்தானே போதகங்களைப் பொருத்திக்கொள்ளாவிட்டால், நற்செய்தியை உங்களுக்குச் சொல்வதற்குரிய இந்த வழிகளில் எதுவும் அர்த்தமுள்ளதாக இருக்காது. ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் செய்வது மாய்மாலம். மதச்சம்பந்தமான மாய்மாலம் லட்சக்கணக்கானோரை பைபிளிலிருந்து விலகிச்செல்ல செய்திருக்கிறது. உண்மையில் பைபிளைக் குற்றப்படுத்துவதற்கில்லை. சதுசேயர்களும் பரிசேயர்களும் எபிரெய வேதாகமங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் இயேசு அவர்களை மாய்மாலக்காரர் என்று கண்டனம் செய்தார். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து வாசிப்பதைக் குறித்து பேசிவிட்டு, தம்முடைய சீஷர்களிடம் கூடுதலாக இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” (மத்தேயு 23:3) சரியாக வாழ்வதில் ஒரு கிறிஸ்தவனின் முன்மாதிரி மணிக்கணக்காக பிரசங்கிப்பதைக் காட்டிலும் அதிகத்தைச் சொல்கிறது. இது அவிசுவாசியான கணவன்மார்களைக் கொண்டிருந்த கிறிஸ்தவ மனைவிகளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது: “உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.

ஆகவே, இம்முறையிலும்கூட யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பரிந்துரை செய்ய முயற்சிசெய்கிறார்கள்: மற்றவர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் கிறிஸ்தவ நடத்தையில் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக இருப்பதன் மூலம். அவர்கள் ‘மற்றவர்கள் தங்களுக்கு எவற்றைச் செய்ய விரும்புகிறார்களோ அதையே அவர்களுக்குச் செய்ய’ முயற்சிசெய்கிறார்கள். (மத்தேயு 7:12) வெறும் உடன் சாட்சிகள், நண்பர்கள், அயலகத்தார் அல்லது உறவினர்களோடு மாத்திரமல்ல எல்லா மனிதரோடும் இவ்விதமாக இருக்க அவர்கள் முயற்சிசெய்கிறார்கள். அபூரணராக இருப்பதால், அவர்கள் எப்போதும் 100 சதம் வெற்றிபெறுவதில்லை. இராஜ்யத்தின் நற்செய்தியை அவர்களுக்குச் சொல்வதில் மாத்திரமல்ல, எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் உதவிக்கரங்களை நீட்டுவதிலும் எல்லா ஆட்களுக்கும் நற்காரியங்களைச் செய்வது அவர்களுடைய இருதயங்களின் ஆசையாக இருக்கிறது.—யாக்கோபு 2:14-17.

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

ஒரு வார்த்தையுமின்றி ஆதாயப்படுத்திக்கொள்ளுதல்

[பக்கம் 20-ன் படங்கள்]

நடைமுறையில் பயனுள்ளதாய் வடிவமைக்கப்பட்டிருக்கும் ராஜ்ய மன்றங்கள் பைபிள் கலந்தாலோசிப்பதற்கான இடங்கள்

[பக்கம் 22-ன் படங்கள்]

தங்களுடைய சொந்த குடும்ப வாழ்க்கையிலும் மற்ற ஆட்களோடு கொள்ளும் தொடர்புகளிலும், சாட்சிகள், மற்றவர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் அதே காரியங்களையே செய்ய உண்மையுடன் முயற்சிசெய்கிறார்கள்