Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் சமுதாயத்துக்கு நற்செய்தியின் நடைமுறை மதிப்பு

உங்கள் சமுதாயத்துக்கு நற்செய்தியின் நடைமுறை மதிப்பு

உங்கள் சமுதாயத்துக்கு நற்செய்தியின் நடைமுறை மதிப்பு

இன்றைய உலகில் நாம் அடிக்கடி கேள்விப்படும் கருத்து இதுவே: “கிறிஸ்தவத்தின் நியமங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது. இன்றைய சிக்கலான சமுதாயத்தில் அவை பலன்தராது.” இருப்பினும் இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர் மோகன்தாஸ் K. காந்திக்கும் இந்தியாவின் முன்னாள் பிரிட்டிஷ் ராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வினுக்குமிடையே நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்ட ஓர் உரையாடலில் மிகவும் வித்தியாசமான ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. லார்ட் இர்வின் கிரேட் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்குமிடையிலான பிரச்னைகளை எது தீர்த்து வைப்பதாக நம்பினார் என்று காந்தியை கேட்டார். காந்தி ஒரு பைபிளை எடுத்து மத்தேயு ஐந்தாம் அதிகாரத்துக்குத் திருப்பி இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய தேசமும் என்னுடையதும் மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்து கற்பித்த போதனைகளின்படி நடந்தால், நம்முடைய தேசங்களினுடையதை மட்டுமல்லாமல் முழு உலகினுடைய பிரச்னைகளையும் நாம் தீர்த்துவிட்டிருப்போம்.”

அந்தப் பிரசங்கம் ஆவிக்குரியத்தன்மையை நாடித்தேடுவதையும் சாந்தகுணமுள்ளவர்களாயும் சமாதானமுள்ளவர்களாயும் இரக்கமுள்ளவர்களாயும் நீதியை நேசிப்பவர்களாயும் இருப்பதைப் பற்றி பேசுகிறது. கொலைசெய்வதை மட்டுமல்லாமல் மற்றவர்களோடு கோபங்கொள்வதையும், வெறுமனே வேசித்தனத்தை மட்டுமல்ல, காம இச்சையையும்கூட கண்டனம் செய்கிறது. குடும்பங்களைப் பிரித்து பிள்ளைகளைப் பலியாக்கும் பொறுப்பற்ற மணவிலக்கு செயல்களுக்கு எதிராக பேசுகிறது. அது நமக்குச் சொல்கிறது: ‘உங்களைப் பகைக்கிறவர்களையும்கூட சிநேகித்து, தேவையிலிருப்பவர்களுக்கு கொடுத்து, மற்றவர்களை இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்காமல், நீங்கள் நடத்தப்பட விரும்புகிற வகையில் மற்றவர்களை நடத்துங்கள்.’ இந்த எல்லா ஆலோசனையும் பின்பற்றப்படுமானால், மிக அதிகமான நன்மைகளைக் கொண்டுவரும். சமுதாயத்தில் அதிகமான ஆட்கள் அவற்றைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், உங்கள் சமுதாயம் அதிக மேம்பட்டதாகிறது!

யெகோவாவின் சாட்சிகள் இவ்வகையில் செல்வாக்கு செலுத்துகிறவர்களாக இருக்கின்றனர். திருமணத்தை மதிக்கும்படியாக பைபிள் அவர்களுக்குப் போதிக்கிறது. அவர்களுடைய பிள்ளைகள் சரியான நியமங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கியத்துவம் அழுத்திக்காட்டப்படுகிறது. ஐக்கியப்பட்ட குடும்பங்கள் உங்கள் சமுதாயத்துக்கும், உங்கள் தேசத்துக்கும்கூட வரப்பிரசாதமாக இருக்கின்றன. குடும்பப் பிணைப்புகள் பலவீனமடைந்து ஒழுக்கக்கேடு பெருகினபோது, உலக வல்லரசுகள் அழிந்துபோனதைப் பற்றிய உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம். அதிகமான ஆட்களையும் குடும்பங்களையும் கிறிஸ்தவ நியமங்களின்படி வாழ யெகோவாவின் சாட்சிகள் செல்வாக்கு செலுத்தும்பட்சத்தில், உங்கள் சமுதாயத்தில் மிகக் குறைவான தவறும் ஒழுக்கக்கேடும் குற்றச்செயலுமே இருக்கும்.

சமுதாயங்களையும் தேசங்களையும் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று இனதுவேஷமாகும். அதற்கு எதிர்மாறாக, அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” மேலும் பவுல் எழுதினார்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” (அப்போஸ்தலர் 10:34, 35; கலாத்தியர் 3:28) யெகோவாவின் சாட்சிகள் இதை ஏற்றுக்கொள்கின்றனர். எல்லா இனத்தவரும் நிறத்தவரும் உலக தலைமைக்காரியாலயத்தில், கிளைக்காரியாலயங்களில், சபைகளில் ஒருமிக்க வாழ்ந்து, வேலைசெய்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் ஒருசில மலைவாழ் குடிகள் கைகலப்பில்லாமல் ஒன்றாகச்சேர்ந்து கூடிவாழ முடியாதவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளிகளில், பல்வேறு மலைவாழ் குடிகள் முழுமையான ஒத்திசைவிலும் அன்பான கூட்டுறவிலும் ஒன்றாகச்சேர்ந்து உண்டு, உறங்கி, வணங்கிவருகிறார்கள். அரசாங்க அதிகாரிகள் இதைக் காண்கையில் ஆச்சரியப்படுகின்றனர். மெய்க் கிறிஸ்தவத்தின் ஐக்கியப்படுத்தும் விளைவுகளைப்பற்றிய உதாரணத்தை, 1958, ஆகஸ்ட் 2 நியூ யார்க் அம்ஸ்டர்டாம் நியூஸ் குறிப்பிட்டிருந்தது. நியூ யார்க் நகரில் 2,50,000-க்கும் அதிகமான சாட்சிகள் கூடிவந்திருந்த, முன்னால் குறிப்பிடப்பட்ட அந்தச் சர்வதேச அசெம்பிளியை கவனித்தது இந்தக் கருத்தை வரவழைத்திருந்தது.

“வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்திருந்த கறுப்பர்களும் வெள்ளையர்களும் கிழக்கத்திய தேசத்தினரும் எல்லா இடங்களிலும் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பழகினார்கள். . . . வணங்குவதற்காக 120 தேசங்களிலிருந்து வந்திருந்த சாட்சிகள் சமாதானமாக, வாழ்ந்து ஒன்றாகச்சேர்ந்து தொழுதுகொண்டு, அது எவ்விதமாக சுலபமாகச் செய்யப்பட முடியும் என்பதை அமெரிக்க மக்களுக்கு காண்பித்தனர். . . . மக்கள் எவ்விதமாக ஒன்றாகச்சேர்ந்து வேலைசெய்து வாழலாம் என்பதற்கு அசெம்பிளி ஒரு சீரிய உதாரணமாகும்.”

கிறிஸ்தவத்தின் நியமங்கள் இந்த நவீன உலகில் நடைமுறைக்கு ஒத்துவராது என்பதாக அநேகர் சொல்லக்கூடும். இருப்பினும், வேறு எது பலன்தந்திருக்கிறது அல்லது பலன்தரும்? கிறிஸ்தவ நியமங்கள் இப்பொழுது பின்பற்றப்படுமேயானால் உங்களுடைய சமுதாயத்துக்கு உண்மையான மதிப்புள்ளதாக இருந்து, மனிதவர்க்கத்தின்மீது கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் பூமி முழுவதிலும் எல்லா ‘தேசங்களையும் கோத்திரங்களையும் மக்களையும்’ ஒன்றுசேர்ப்பதற்கு அவை அடிப்படையாக இருக்கும்.—வெளிப்படுத்துதல் 7:9, 10.

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

எல்லா இனத்தவரும் நிறத்தவரும் ஒன்றாகச்சேர்ந்து வேலைசெய்கிறார்கள்

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

கிறிஸ்தவம் நடைமுறை பயனுள்ளது. வேறு எது பலன் தந்திருக்கிறது?