Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?

அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?

அதிகாரம் 4

அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?

“என் அப்பா எங்களைவிட்டுப் பிரிந்துசென்றது எனக்கு நினைவிருக்கிறது. என்ன நடந்துகொண்டிருந்ததென எங்களுக்குத் தெரியவில்லை. அம்மா வேலைக்குப் போகவேண்டியிருந்தது முழு நேரமும் எங்களைத் தனியே விட்டுச் சென்றார்கள். சில சமயங்களில் நாங்கள் பலகணியருகில் உட்கார்ந்து அம்மாளும் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார்களோ என மனக்கலக்கங்கொள்வோம். . . .”—விவாகரத்துச் செய்துகொண்ட குடும்பத்திலிருந்துவரும் ஒரு பெண்.

ஒருவருடைய பெற்றோரின் விவாகரத்து உலகத்தின் முடிவைப்போல், என்றென்றும் நிலைத்திருப்பதற்குப் போதிய ஆழ்ந்தத் துயரத்தை உண்டாக்கும் திடீர் விபத்தைப்போல் தோன்றலாம். இது வெட்கம், கோபம், கவலை, கைவிடப்படும் பயம், குற்றப்பழி, மனச்சோர்வு, மற்றும் உள்ளத்தின் ஆழத்தை வாட்டும் இழப்பு—பழிவாங்கும் எண்ணமுங்கூட—ஆகிய இத்தகைய உணர்ச்சிகளின் கடுந்தாக்குதலைத் தொடங்கிவைக்கிறது.

உன் பெற்றோர் சமீபத்தில்தானே பிரிவுற்றிருந்தால், நீயும் இத்தகைய உணர்ச்சிகளை அனுபவிக்கக்கூடும். எப்படியும், நீ தகப்பனும் தாயும் ஆகிய இருவராலேயும் வளர்க்கப்படவேண்டுமென்றே நம்முடைய சிருஷ்டிகர் கருதினார். (எபேசியர் 6:1-3) எனினும், இப்பொழுது, நீ நேசிக்கும் ஒரு பெற்றோர் அனுதினமும் உன்னுடன் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. “நான் உண்மையில் என் தகப்பனை உயர்வாக கருதினேன் அவருடனிருக்க விரும்பினேன்,” என்று பால் வருந்துகிறான், அவன் ஏழு வயதாயிருக்கையில் அவனுடைய பெற்றோர் பிரிந்தனர். “ஆனால் அம்மாவுக்கே எங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கிடைத்தது.”

பெற்றோர் பிரியும் காரணம்

பெரும்பாலும் பெற்றோர் தங்கள் பிரச்னையை நன்றாய் மறைத்து வைக்கின்றனர். “என் பெற்றோர் சண்டைபோட்டது எனக்கு நினைவேயில்லை,” என்று லின் சொல்கிறாள், அவள் சிறுபிள்ளையாயிருந்தபோது அவளுடைய பெற்றோர் விவாகரத்துச் செய்துகொண்டனர். “அவர்கள் ஒத்துப்போனார்கள் என்றுதான் நான் எண்ணினேன்.” பெற்றோர் கூச்சலிட்டுச் சச்சரவு செய்தாலுங்கூட, அவர்கள் உண்மையில் பிரிகையில் அது இன்னும் திடீர் மன அதிர்ச்சியைக் கொண்டுவருகிறது!

பலர் காரியங்களில், பெற்றோர் ஒருவர் பாலுறவு சம்பந்தத் தவறான நடத்தைக்குரிய குற்றப்பழியுடையோரானதனால் இந்தப் பிரிவு ஏற்படுகிறது. குற்றமற்ற மணத்துணைவர் விவாகரத்துப் பெறும்படி கடவுள் அனுமதிக்கிறார். (மத்தேயு 19:9) மற்றவர்களுடைய காரியங்களில் “மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்” வன்முறையில் ஈடுபட வைத்து, பெற்றோர் ஒருவர் தன்னுடைய மற்றும் பிள்ளைகளின் உடல்நலத்துக்கு அபாயமுண்டாகுமென்று பயப்படுவதனால் ஏற்படுகிறது.—எபேசியர் 4:31.

விவாகரத்துகள் சில அற்ப காரணங்களின்பேரில் அடையப்பெறுகின்றன எனவும் ஒப்புக்கொள்ளவேண்டியதே. தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாறாக, சிலர், தாங்கள் ‘மகிழ்ச்சியற்றிருப்பதாக’ அல்லது ‘இனிமேலும் காதலில் இல்லை’ என விவாதித்து தன்னலத்துடன் விவாகரத்துச் செய்துகொள்கின்றனர். இதைக் கடவுள் விரும்புகிறதில்லை, அவர் ‘தள்ளிவிடுதலை வெறுக்கிறார்.’ (மல்கியா 2:16) மேலும் தங்கள் மணத்துணைவர் கிறிஸ்தவராகிவிட்டதனாலும் சிலர் தங்கள் திருமணத்தை முறிவுசெய்துகொள்வரெனவும் இயேசு தெரிவித்தார்.—மத்தேயு 10:34-36.

எவ்வாறாயினும், இந்த விவாகரத்துப்பற்றி உன் பெற்றோர் மெளனமாயிருக்க அல்லது உன் கேள்விகளுக்குத் தெளிவற்றப் பதில்களையே கொடுக்கத் தெரிந்துகொண்டால் அவர்கள் உன்னை நேசிக்கிறதில்லையென பொருள்கொள்கிறதில்லை. a தங்கள் சொந்த மனவேதனையில் முழுவதும் ஆழ்ந்திருக்கும் நிலையில், அந்த விவாகரத்துப் பற்றிப் பேசுவதை உன் பெற்றோர் கடினமாய்க் காணலாம். (நீதிமொழிகள் 24:10) மேலும் தங்கள் இருவரின் தோல்வியை ஒப்புக்கொள்வது மனச்சங்கடமும் தடுமாற்றமுமாய் இருப்பதாயும் காணலாம்.

நீ செய்யக் கூடியது

உன் கவலைகளைப்பற்றி உன் பெற்றோருடன் சாந்தமாய்க் கலந்துபேச சரியான நேரத்தை ஊகித்தறிய முயற்சிசெய். (நீதிமொழிகள் 25:11) அந்த விவாகரத்துவின்பேரில் நீ அடைந்துள்ள விசனத்தையும் மனக்குழப்பத்தையும் அவர்களுக்குத் தெரிவி. ஒருவேளை அவர்கள் உனக்குத் திருப்திதரும் விளக்கத்தைக் கொடுக்கலாம். இல்லையெனில், மனமுறிவுகொள்ளாதே. இயேசு, தம்முடைய சீஷர்கள் கையாளுவதற்கு ஆயத்தமாயில்லையென தாம் உணர்ந்தத் தகவலைச் சொல்லாமல் நிறுத்திவைத்துக்கொண்டார் அல்லவா? (யோவான் 16:12) தெரிவிக்காமல் அந்தரங்கமாய் வைத்துக்கொள்ள உன் பெற்றோருக்கு உரிமை இருக்கிறதல்லவா?

கடைசியாக, அந்த விவாகரத்து, எந்தக் காரணமாயினும்,—உன்னுடன் அல்ல—அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள சச்சரவே என்பதை மதித்துணர்! விவாகரத்துச் செய்த 60 குடும்பங்களை ஆராய்ந்ததில், உவாலெர்ஸ்டீனும் கெல்லியும் அந்தத் தம்பதிகள் ஒருவரையொருவரும், தங்களை வேலைக்கு வைத்திருப்போரையும், குடும்ப உறுப்பினரையும், நண்பர்களையும் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர் சொல்வதாவது: “போதிய அக்கறையைக் கவருவதாய், ஒருவரும் பிள்ளைகளைக் குற்றஞ்சாட்டவில்லை.” உன்னிடம் உன் பெற்றோரின் உணர்ச்சிகள் மாறாதிருக்கின்றன.

காலத்தின் புண் ஆற்றும் திறமை

“குணமாக்க ஒரு காலமுண்டு,” (பிரசங்கி 3:3) எலும்பு முறிதல் போன்ற சொல்லர்த்தமான காயம், முற்றிலும் ஆறுவதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்களும் எடுப்பதுபோல், உணர்ச்சிசார்ந்த காயங்களும் ஆறுவதற்குக் காலமெடுக்கின்றன.

விவாகரத்துக்குப் பின் ஒருசில ஆண்டுகளுக்குள், “விரிவாய்ப் பரவியுள்ள பயங்கள், துயரம், அதிர்ச்சியூட்டப்பட்ட அவநம்பிக்கை . . . மங்கின அல்லது முற்றிலும் மறைந்துபோயின,” என்று விவாகரத்து ஆராய்ச்சியாளர் உவாலெர்ஸ்டீனும் கெல்லியும் கண்டார்கள். விவாகரத்துவின் மிக மோசமான நிலை மூன்று ஆண்டுகளுக்குள்தானே முடிகிறதென நிபுணர்கள் சிலர் உணருகிறார்கள். இது நீண்ட காலமாகத் தோன்றலாம், ஆனால் உன் வாழ்க்கை நிலைப்படுவதற்கு முன்னால் மிக அதிகம் நடக்கவேண்டியிருக்கிறது.

விவாகரத்து செய்ததனால் தகர்க்கப்பட்ட வீட்டின் நடைமுறை ஒழுங்கை மீண்டும் சரிசெய்து அமைப்பது செய்யப்பட வேண்டிய ஒரு காரியமாகும். உன் பெற்றோர் உணர்ச்சிசம்பந்தமாக மறுபடியும் முன்போல் நிலைநிற்பதற்கு காலம் எடுக்கும். அப்போதுதானே அவர்கள் கடைசியாக உனக்குத் தேவையான ஆதரவைத் தர முடியும். உன் வாழ்க்கை ஓரளவு ஒழுங்கு முறைமையைத் திரும்பப் பெறுகையில் நீ மறுபடியும் வழக்கம்போல் உணரத்தொடங்குவாய்.

எனினும், சாலொமோன் பின்வரும் எச்சரிக்கையைக் கொடுத்தான்: “இந்நாட்களைப் பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்ததேன் எனக் கேட்காதே; இவ்விசாரணை ஞானத்தால் விளைவதல்ல.” (பிரசங்கி 7:10, தி.மொ.) சென்றக் காலத்தின்பேரில் நினைவை ஊன்றவைப்பது தற்காலத்து உண்மையைக் காணாதபடி உன் கண்களை மறைத்துப்போடும். விவாகரத்து நடப்பதற்கு முன்னால் உன் குடும்ப நிலைமை எவ்வாறிருந்தது? “மிகுதியான சண்டைகளும்—கூச்சலிடுதலும் இழிபெயரிட்டழைப்பதுமே எப்பொழுதும் இருந்தன,” என்று அனெட் ஒப்புக்கொள்கிறாள். இப்பொழுது நீ ஒருவேளை குடும்பச் சமாதானத்தை அனுபவித்து மகிழ முடிகிறதா?

‘நான் அவர்களைத் திரும்ப ஒன்றாய்க் கொண்டுவர முடியும்’

சில இளைஞர்கள் தங்கள் பெற்றோரைத் திரும்ப ஒன்றிணைக்கும் கனவை மனதில் வளர்த்துவருகின்றனர், ஒருவேளை தங்கள் பெற்றோர் மறுமணம் செய்த பின்னுங்கூட அத்தகைய கற்பனைகளை விடாமற் பற்றிக்கொண்டிருக்கின்றனர்!

எனினும், அந்த விவாகரத்துச் செய்ததை மறுப்பது எதையும் மாற்றுவதில்லை. இந்த உலகத்தில் எல்லாக் கண்ணீர்களும், மன்றாடுதலும், வழிவகையைப் பயன்படுத்துவதும் அநேகமாய் உன் பெற்றோரை மறுபடியும் ஒன்றாய்க் கொண்டுவரா. ஆகையால் நடைபெற முடியாத ஒன்றில் உன் நினைவை ஊன்றவைத்து உன்னை நீ ஏன் வதைத்துக்கொள்ளவேண்டும்? (நீதிமொழிகள் 13:12) “இழந்ததாக விட்டுவிடுவதற்கு ஒரு காலம்” உண்டு என்று சாலொமோன் சொன்னான். (பிரசங்கி 3:6, NW) அந்த விவாகரத்துச் செய்ததன் மெய்ம்மையையும் நிலையான தன்மையையும் இரண்டையும் ஏற்றுக்கொள். இது நீ அதை மறந்துவிடுவதை நோக்கி எடுக்கும் பெரிய படியாயிருக்கிறது.

உன் பெற்றோருடன் ஒத்துப்போதல்

உன் வாழ்க்கையைக் குறுக்கிட்டுப் பிரித்ததற்காக உன் பெற்றோருடன் நீ நியாயமாகவே கோபமாயிருக்கக்கூடும். ஒரு வாலிபன் மனக்கசப்புடன் சொன்னபடி: “என் பெற்றோர் தன்னலமே கருதினர். அவர்கள் எங்களையும் அவர்கள் செய்வது எங்களை எவ்வாறு பாதிக்குமென்பதையும் பற்றி உண்மையில் சிந்திக்கவேயில்லை. தயக்கமில்லாமல் வெறுமென முன்சென்று தங்கள் திட்டங்களைச் செய்தார்கள்.” இது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் கோபமும் மனக்கசப்புமான பாரத்தைச் சுமந்துகொண்டு வாழ்க்கையினூடே சென்று உனக்குத் தீங்குசெய்துகொள்ளாமல் இருக்க முடியுமா?

பைபிளில் பின்வருமாறு அறிவுரை கூறியிருக்கிறது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:31, 32) உனக்கு அவ்வளவு ஆழ்ந்த வருத்தமுண்டாக்கின ஒருவரை நீ எவ்வாறு மன்னிக்கமுடியும்? உன் பெற்றோரை அவர்கள் மெய்ம்மையில் இருக்கிறபடி—தவறும் இயல்புடையோராய், அபூரண மனிதராய்க்—கருத முயற்சிசெய். ஆம், பெற்றோருங்கூட ‘பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிறார்கள்.’ (ரோமர் 3:23) இதை உணருவது உன் பெற்றோருடன் ஒத்துப்போவதற்கு உனக்கு உதவிசெய்யும்.

உன் உணர்ச்சிகளை வெளியிட்டுப் பேசு

“என் பெற்றோரின் விவாகரத்தைப்பற்றிய என் உணர்ச்சிகளை நான் ஒருபோதும் உண்மையில் கலந்துபேசினதில்லை,” என்று ஓர் இளைஞன் நாங்கள் அவனை நேரில் கண்டுபேசினபோது சொன்னான். தொடக்கத்தில் உணர்ச்சிகுன்றிய நிலையில் இருந்தபோதிலும், தன் பெற்றோர் விவாகரத்துச் செய்ததைப்பற்றித் தான் பேசுகையில் இந்த இளைஞன் படிப்படியாய் மிக உணர்ச்சிவசத்துக்குள்ளானான்—கண்ணீரும் சிந்தினான். நெடுங்காலம் புதைந்திருந்த உணர்ச்சிகள் எழும்பி வெளிப்பட்டன. இதன்பேரில் ஆச்சரியமடைந்து, அவன்: “இதை வெளிப்படுத்திப் பேசினது எனக்கு உண்மையில் உதவிசெய்தது,” என்று தெரிவித்தான்.

அவ்வாறே உன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்குப் பதில் யாரிடமாவது நம்பிக்கையுடன் தெரிவிப்பது உதவிசெய்வதாகக் காண்பாய். நீ உண்மையில் எவ்வாறு உணருகிறாய், உன் பயங்களும் கவலைகளும் யாவை என்பவற்றை உன் பெற்றோருக்குத் தெரிவி. (நீதிமொழிகள் 23:26-ஐ ஒத்துப்பார்.) முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களும் உதவிசெய்யலாம். உதாரணமாக, கீத், விவாகரத்துச் செய்ததால் பிளக்கப்பட்ட தன் குடும்பத்திலிருந்து பெரும்பாலும் எந்த ஆதரவும் பெறவில்லை. எனினும் வேறு இடத்தில் அவன் ஆதரவைக் கண்டடைந்தான். கீத் சொல்வதாவது: “கிறிஸ்தவ சபை என் குடும்பமாயிற்று.”

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ உன் பரலோகத் தகப்பன் உனக்குச் செவிகொடுத்துக் கேட்பதை நீ காண்பாய். (சங்கீதம் 65:2) பால் என்ற ஓர் இளைஞன், தன் பெற்றோர் விவாகரத்துச் செய்துகொண்டதன்பேரில் உண்டான மனத்துயரை மேற்கொள்ள தனக்கு எது உதவிசெய்ததென்பதை நினைவுபடுத்திப் பின்வருமாறு கூறுகிறான்: “நான் எல்லாச் சமயத்திலும் ஜெபம் செய்தேன் யெகோவா உண்மையான ஆள் என்று நான் எப்பொழுதும் உணர்ந்தேன்.”

உன் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவது

விவாகரத்துச் செய்தப்பின், காரியங்கள் எப்போதும்போல் ஒருபோதும் இரா. எனினும் இது, உன் வாழ்க்கை பயனுள்ளதாயும் மகிழ்ச்சியுள்ளதாயும் இருக்கமுடியாதென பொருள்கொள்கிறதில்லை. “உன் வேலையில் அசதியாயிராதே,” என்று பைபிளில் அறிவுரை கூறியிருக்கிறது. (ரோமர் 12:11, NW) ஆம், மனத்துயரம், புண்பட்டநிலை, அல்லது கோபம் ஆகியவை உன்னைச் செயலற்றவனாக்கிவிடும்படி அனுமதிப்பதற்குப் பதில் உன் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு! உன் பள்ளிவேலையில் உன்னை உட்படுத்து. ஓய்வுநேர விருப்பவேலையில் ஈடுபடு. “கர்த்தரின் வேலையில் செய்வதற்கு மிகநிறைய” கொண்டிரு.”—1 கொரிந்தியர் 15:58, NW

இது உழைப்பும், திடத்தீர்மானமும், காலம் கடந்துசெல்லுதலும் எடுக்கும். ஆனால் முடிவில் உன் பெற்றோரின் திருமணம் பிளக்கப்பட்டது இனிமேலும் உன் வாழ்க்கையில் முனைப்பாய் நிற்கும் காரியமாயிராது.

[அடிக்குறிப்புகள்]

a “ஆராய்ச்சி செய்த [விவாகரத்துச் செய்துகொண்ட பெற்றோரின்] மிக இளைய பிள்ளைகளில் ஐந்தில்-நான்கு பாகமானோருக்குப் போதிய விளக்கமோ அல்லது தொடர்ந்த கவனிப்பு உறுதியோ கொடுக்கப்படவில்லை. உண்மையில், அவர்கள் ஒரு காலையில் விழித்தெழுந்து பெற்றோர் ஒருவர் சென்றுவிட்டதைக் கண்டார்கள்,” என்று ஆராய்ச்சியாளர் உவாலெர்ஸ்டீன் மற்றும் கெல்லி என்பவர்கள் கண்டுபிடித்தார்கள்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ பெற்றோர் பிரிவதன் காரணங்கள் சில யாவை?

◻ அதைப்பற்றிப் பேசுவது உன் பெற்றோருக்கு ஏன் கடினமாயிருக்கலாம்? பேசுவதற்கு அத்தகைய தயக்கத்தை அவர்கள் காட்டினால் நீ என்ன செய்யலாம்?

◻ சென்ற காலத்தைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருப்பது அல்லது உன் பெற்றோரைத் திரும்பவும் ஒன்றாய்க் கொண்டுவருவதைப்பற்றிக் கற்பனை செய்துகொண்டிருப்பது ஏன் அர்த்தமற்றது?

◻ அந்த விவாகரத்தின்பேரில் உன் அதிர்ச்சியை மறக்க நீ செய்யக்கூடிய சில உடன்பாடான காரியங்கள் யாவை?

◻ உன் பெற்றோரிடம் நீ ஒருவேளை உணரும் கோபத்தை எவ்வாறு கையாளுவாய்?

[பக்கம் 36, 37-ன் பெட்டி]

‘அந்த விவாகரத்து என் வாழ்க்கையைப் பாழாக்குமா?’

தங்கள் பெற்றோர் விவாகரத்து செய்ததைப் பின்தொடர்ந்து சில இளைஞர் உண்மையில் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கின்றனர். சிலர் பள்ளியை விட்டு விலகுவதைப்போன்ற, எண்ணாது துணியும் தீர்மானங்களைச் செய்கின்றனர். மற்றவர்கள் தங்கள் மனச்சங்கடத்தையும் கோபத்தையும் நெறிதவறி நடப்பதன்மூலம் வெளியிடுகின்றனர்—விவாகரத்துச் செய்ததற்காகத் தங்கள் பெற்றோரைத் தண்டிப்பதுபோல் எண்ணி இவ்வாறு செய்கின்றனர். டென்னி நினைவுபடுத்திக் கூறுவதாவது: “என் பெற்றோர் விவாகரத்துச் செய்தபின் நான் வருத்தமும் மனச்சோர்வுமுற்றிருந்தேன். பள்ளியில் பிரச்னைகளுக்குட்படத் தொடங்கினேன் ஓர் ஆண்டு பரீட்சையிலும் தோல்வியடைந்தேன். அதன்பின் . . . நான் அந்த வகுப்புக் கோமாளியானேன் மிகுதியான சண்டைகளுக்குள் ஈடுபட்டேன்.”

திடுக்கிடவைக்கும் தகாநடத்தை ஒருவருடைய பெற்றோரின் கவனத்தை இழுக்குமென்பது சரிதான். ஆனால் அது ஏற்கெனவே இருக்கும் நெருக்கடியான நிலைமையோடு மேலும் நெருக்கடியைக் கூட்டுவதைத் தவிர, உண்மையில் நிறைவேற்றுவது என்ன? உண்மையில், தவறுசெய்ததால் தண்டிக்கப்படுகிற அந்த ஒரே ஒருவர் அந்தத் தவறு செய்தவரேயாவர். (கலாத்தியர் 6:7) உன் பெற்றோருங்கூட துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர், அவர்கள் உன்னைக் கவனியாதிருப்பது கெடு நோக்கத்தினாலல்ல என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய். டென்னியின் தாய் அறிவித்ததாவது: “நான் என் பிள்ளைகளை நிச்சயமாய்க் கவனிக்கவில்லை. விவாகரத்துச் செய்தபின், நான்தானேயும் அவ்வளவு மிகக் குழப்பத்தில் இருந்ததால், நான் அவர்களுக்குச் சற்றும் உதவிசெய்ய முடியவில்லை.”

எபிரெயர் 12:13-ல் பைபிள் பின்வருமாறு அறிவுரை கொடுக்கிறது: “முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.” பெற்றோரின் சிட்சை இல்லாவிடினும், தவறான நடத்தைக்கு எந்தச் சாக்குப்போக்கும் கிடையாது. (யாக்கோபு 4:17) உன் செயல்களுக்குப் பொறுப்பேற்று தற்கட்டுப்பாட்டை கையாளு.—1 கொரிந்தியர் 9:27.

வீட்டைவிட்டுச் செல்வதைப் போன்ற மடத்துணிச்சலானத் தீர்மானங்கள் செய்வதைத் தவிர்த்திடு. “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) இந்தத் தறுவாயில் உன் பெற்றோர் செவிகொடுத்துக் கேட்க முடியாமல் மீறிய மனக்கலக்கமுற்றிருப்பதாய்த் தோன்றினால், முதிர்வயதான நண்பர் ஒருவரிடம் உன் தீர்மானங்களைக் கலந்துபேசலாமல்லவா?

இன்னும், உன் எதிர்காலத்தைப்பற்றி உனக்குப் பல கவலைகள் இருக்கலாம். உன் பெற்றோர் திருமணத்தில் தோல்வியடைந்திருப்பதால், ஒரு வெற்றிகரமான திருமணத்தை அனுபவித்து மகிழும் உன்சொந்த எதிர்பார்ப்பைப்பற்றி நீ ஒருவேளை கவலைப்படலாம். நல்ல காலமாக, மணவாழ்க்கைக்குரிய துயரம் உன் பெற்றோரிடமிருந்து நீ பரம்பரையாய்ப் பெறும்—தோலில் ஏற்படும் புள்ளிகளைப்போன்ற—ஒன்றல்ல. நீ தனித்தன்மை வாய்ந்தத் தனி ஆள், உன்னுடைய எதிர்கால திருமணம் விளைவுறும் முறை உன் பெற்றோரின் தோல்விகளின்பேரில் அல்ல, நீயும் உன் மணத்துணையும் கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிக்கும் அளவின்பேரிலேயே சார்ந்திருக்கும்.

முன்னால் கவலையில்லாமல் எல்லாம் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த—உணவு, உடை, தங்க இடம், பணம் போன்றக்—காரியங்களைப்பற்றி நீ கவலைப்படுவதாயும் உன்னைக் காண்பாய். விவாகரத்துச் செய்தப்பின், அம்மா உலகப்பிரகாரமான வேலையை ஏற்கவேண்டியிருப்பினும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை ஆதரிக்க ஏதாவது வழிவகைகளைப் பொதுவாய்ச் செய்வார்கள். இருப்பினும், பிளவுற்றதைத் தப்பிப்பிழைத்தல் என்ற புத்தகம் நடைமுறை மெய்ம்மைப்படி பின்வருமாறு எச்சரிக்கிறது: “ஒரு குடும்பத் தொகுதியை ஆதரித்தது இப்பொழுது இரண்டு குடும்பங்களை ஆதரிக்கவேண்டும், இது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் வாழ்க்கை தராதரத்தில் குறைபாட்டை வற்புறுத்துகிறது.”

ஆகையால், புதிய உடைகள் போன்ற, நீ வழக்கமாய் அனுபவித்துவந்த காரியங்கள் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு உன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. பைபிள் நம்மைப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறது: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை . . . உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:7, 8) ஒருவேளை ஒரு புதிய குடும்ப வரவுசெலவுத் திட்டப் பட்டியலைத் தயாரிக்கவுங்கூட நீ உதவிசெய்யலாம். மேலும், யெகோவா “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன்,” என்பதையும் நினைவுபடுத்திக்கொள். (சங்கீதம் 68:5) அவர் உன்னுடைய தேவைகளைப்பற்றி ஆழ்ந்த அக்கறைக்கொண்டிருக்கிறார் என்று நீ நிச்சயமாயிருக்கலாம்.

எரேமியா பின்வருமாறு குறிப்பிட்டான்: “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.” (புலம்பல் 3:27) உண்மைதான், பெற்றோர் பிரிவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் “நல்லது” எதுவுமில்லை. ஆனால் இந்த எதிர்மறை அனுபவத்தையும் உன்னுடைய நன்மைக்கேதுவாக மாற்ற முடியும்.

ஆராய்ச்சியாளர் ஜூடித் உவாலெர்ஸ்டீன் குறிப்பிட்டதாவது: “[விவாகரத்துச் செய்துகொண்ட பெற்றோரின் பிள்ளைகளுக்குள்] குடும்பத் திரும்புகட்டத்தால் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் சார்ந்த வளர்ச்சியின் இயல்பான இயக்கம் விரைவுபடுத்தப்பட்டது மனதின் ஆழத்தைக் கவர்ந்தது, சிலசமயங்களில் உள்ளத்தைக் கனிவித்தது. அந்த இளைஞர் . . . தங்கள் பெற்றோரின் அனுபவங்களை அமைதியாக எண்ணிப்பார்த்து தங்கள் சொந்த எதிர்காலங்களுக்காகச் சிந்தனையுள்ள முடிவுகளைச் செய்தார்கள். தங்கள் பெற்றோர் செய்தப் பிழைகளைத் தவிர்க்க வழிகளைக் கண்டுபிடிப்பதில் அக்கறையுடனிருந்தனர்.”

உன் பெற்றோர் பிரிவுற்றது உன் வாழ்க்கையில் நிச்சயமாய் அதன் புண்பட்ட வடுவை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வடு மறைந்துபோகும் ஒன்றாய் இருக்கிறதா அல்லது மனதை உறுத்திக்கொண்டேயிருக்கும் புண்ணாக இருக்கிறதா என்பது பேரளவில் உன்னையே பொறுத்திருக்கிறது.

[பக்கம் 35-ன் படம்]

உன் பெற்றோரின் திருமணம் பிளவுறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பது கற்பனைசெய்யக்கூடிய அனுபவங்களில் மிக வேதனையான ஒன்றாயிருக்கலாம்

[பக்கம் 38-ன் படம்]

வாழ்க்கை முன் எவ்வாறிருந்ததென்ற நினைவுகளின்பெரில் மனதை ஊன்றவைத்துக்கொண்டிருப்பது உனக்கு மனச்சோர்வையே உண்டாக்கும்