Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?

என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?

அதிகாரம் 3

என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?

வார இறுதி நாட்களில் வெளியில் பிந்தித் தங்கியிருக்க நான் போதிய வயதானவன் என நீ சொல்கிறாய். நீ வீட்டுக்குச் சரியான நேரத்தில் வந்துவிடவேண்டுமென அவர்கள் சொல்கிறார்கள். எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் புதிய திரைப்படத்தைப் பார்க்கவேண்டுமென நீ சொல்கிறாய். நீ அதைப் பார்க்கக்கூடாதென அவர்கள் சொல்கிறார்கள். கூடச்சேர்ந்து வெளிச்செல்ல விரும்பும் சில நல்ல பிள்ளைகளைச் சந்தித்தாயென நீ சொல்கிறாய். உன் நண்பர்களைத் தாங்கள் முதல் சந்திக்க விரும்புவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

நீ பருவ வயதிலிருக்கையில், உன் பெற்றோர் உன் வாழ்க்கையின்பேரில் அசையவிடாமல் இறுக்கமான பிடியைக் கொண்டிருப்பதுபோல் சில சமயங்களில் உணரச்செய்யலாம். “நான் விரும்புகிறேன்” என்று நீ சொல்லும் ஒவ்வொன்றுக்கும் “இல்லை, கூடாது” என்ற கட்டாய பதில் பின்தொடருவதாகத் தோன்றுகிறது. மேலும் உன் வாழ்க்கையின் எந்தப் பாகமும் உன் பெற்றோரின் “துருவி நோக்கும் கண்களிலிருந்து” பாதுகாப்பாயில்லை. 15-வயது டெபி பின்வருமாறு கூறுகிறாள்: “நான் எங்கிருக்கிறேன், வீட்டுக்கு எந்த நேரத்தில் வந்து சேருவேன் என்பதை என் அப்பா எப்பொழுதும் தெரிந்திருக்க விரும்புகிறார். பெரும்பான்மையான பெற்றோர் அவ்வாறு செய்கின்றனர். எல்லாவற்றையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டுமா? அவர்கள் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரவேண்டும்.”

தங்கள் பெற்றோர் தங்களை மதிக்கிறதில்லை என்று இளைஞர் மேலும் முறையிடுகின்றனர். தங்களை நம்புவதற்குப் பதில், ஏதாவது தவறாகிவிட்டால் விசாரணைசெய்யாமலே தங்களைக் குற்றமுள்ளவர்களெனத் தீர்க்கின்றனர். தங்களுக்குத் தாங்களே தெரிந்துகொள்வதற்கு அனுமதிப்பதற்குப் பதில், கட்டளைகளைக் கொண்டு தங்களை நெருக்குகின்றனர்.

“மன வேதனை”

சில சமயங்களில் உன் பெற்றோர் உன்னைச் சிறு பிள்ளையைப்போல் நடத்துகிறார்களா? அப்படியானால், சிறிது காலத்துக்கு முன்னால் நீ உண்மையில் சிறு பிள்ளையாக இருந்தாய் என்பதை நினைவுபடுத்திக்கொள். ஒன்றுஞ்செய்ய இயலாதக் குழந்தையாயிருந்த உன் உருவம் உன் பெற்றோரின் மனதில் இன்னும் மங்காது புத்தம்புதியதாக இருக்கிறது. அது அவ்வளவு எளிதில் மனதிலிருந்து விலகுவதில்லை. நீ செய்தச் சிறுபிள்ளைத்தனமான தவறுகள் அவர்களுடைய நினைவில் இருக்கின்றன, இதனால் உன்னைப் பாதுகாக்க அவர்கள் விரும்புகிறார்கள்—உனக்கு அத்தகைய பாதுகாப்பு வேண்டியதாயினும் வேண்டாவிடினும்.

உன்னைப் பாதுகாக்கும்படியான அந்த மனத்தூண்டுதல் வல்லமைவாய்ந்தவண்ணம் பலத்தது. அம்மாவும் அப்பாவும் உனக்குத் தங்க இடமளிப்பதிலோ, உடுத்துவிப்பதிலோ, உணவூட்டுவதிலோ சுறுசுறுப்பாய் ஈடுபட்டிராதபோது, உன்னை எப்படிக் கற்பிப்பது, பயிற்றுவிப்பது, மேலும், ஆம், எப்படி பாதுகாப்பது ஆகிய இந்தப் பிரச்னைகளோடு அடிக்கடிப் போராடுகிறார்கள். இது எப்பொழுதாவது ஒருமுறை உன்னில் காட்டும் அக்கறை அல்ல, இது அதைவிட ஆழமானது. அவர்கள் உன்னை வளர்க்கும் முறைக்குக் கடவுள் முன்னிலையில் பொறுப்புள்ளோராய் இருக்கின்றனர். (எபேசியர் 6:4) ஏதாவது உன் நல்-வாழ்வைப் பயமுறுத்துவதாகத் தோன்றுகையில், அவர்கள் மனக்கவலையடைகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பெற்றோரைக் கவனி. எருசலேமுக்குப் போய் வருகையில், அவர்கள் அறியாமல் அவரில்லாது வீட்டுக்குத் திரும்பினர். அவர் இல்லாதது தெரிய வந்தபோது, அவர்கள் சோராக் கடும் முயற்சியுடன்—மனத்துயரவேதனையுடனும்—அவரைத் தேடினார்கள்! கடைசியில் அவரை “தேவாலயத்தில் கண்ட,” போது இயேசுவின் தாய், “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே [மன வேதனையோடே, NW] உன்னைத் தேடினோமே,” என்று உணர்ச்சிமீதூரக் கூறினாள். (லூக்கா 2:41-48) இயேசு—பரிபூரண பிள்ளை—தன் பெற்றோருக்கு மனக்கவலை உண்டுபண்ணினாரென்றால், நீ உன் பெற்றோருக்கு எவ்வளவு மிகக் கவலையுண்டுபண்ணுவாயென எண்ணிப்பார்!

உதாரணமாக, எந்த நேரத்துக்குள் நீ வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்பதன்பேரில் ஏற்படும் அந்த முடிவற்றச் சச்சரவை எடுத்துக்கொள். இம்முறையில் கட்டுப்படுத்தப்படுவதற்கு எந்தக் காரணத்தையும் நீ ஒருவேளை காண்கிறதில்லை. ஆனால் உன் பெற்றோரின் நோக்குநிலையிலிருந்து காரியங்களை நீ எப்பொழுதாவது கண்டிருக்கிறாயா? பெற்றோரைப்பற்றிப் பிள்ளைகளின் புத்தகம் என்ற ஆங்கில புத்தகத்தில் பள்ளிசெல்லும் வயதுள்ள இதன் நூலாசிரியர்கள் அவ்வாறு செய்ய முயன்றனர். “தங்கள் பிள்ளைகள் சரியான நேரத்தில் வீட்டில் இராவிடில் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைப்பற்றிப் பெற்றோரின் தலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கற்பனை உருபடைப்புக் காட்சிகள்,” என்று தாங்கள் அழைப்பதன் ஒரு பட்டியலை அவர்கள் தொகுத்து இயற்றினார்கள். இந்தப் பட்டியலில், ‘போதை மருந்துகளில் உட்படுதல், ஊர்தி விபத்துக்குள்ளாதல், பூங்காக்களில் உலாவித்திரிதல், கைதுசெய்யப்படுதல், ஆபாசமான திரைப்படங்களுக்குச் செல்வது, போதைப் பொருட்களை விற்பது, கற்பழிக்கப்படுதல் அல்லது தாக்கப்படுதல், சிறைச்சாலையில் முடிவுற்று, குடும்பப் பெயருக்கு அவமானம் விளைவிப்பது’ போன்ற இத்தகைய காரியங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எல்லாப் பெற்றோரும், பெரும்பாலும் நிகழக்கூடாதவையெனத் தோன்றும் இத்தகைய முடிவுகளுக்கு உடனடியாக வரமாட்டார்கள். ஆனால் இளைஞர் பலர் இத்தகைய காரியங்களில் கட்டாயமாகவே உட்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையல்லவா? ஆகையால் நேரம் பிந்தி வருவதும் தவறானவகை சகவாசமும் தீங்குண்டாக்கக்கூடியவை என்ற ஆலோசனையின்பேரில் நீ மனக்கசப்படையவேண்டுமா? இயேசுவின் பெற்றோர்தாமே இயேசு எங்கிருந்தாரென்று அறிய விரும்பினர்!

அவர்கள் அகக்கொந்தளிப்படைவதன் காரணம்

இளைஞர்கள் சிலர், தங்களுக்குத் தீங்குவருமென தங்கள் பெற்றோர் பயப்படுவது சித்தப்பிரமையை நெருங்கியதாயிருக்கிறதென்று சொல்கின்றனர்! ஆனால், மிகுந்த நேரமும் மன உருக்கமான உணர்ச்சியும் உன்மீது செலவிடப்பட்டிருக்கிறதென்பதை நினைவுபடுத்திக்கொள். நீ வளர்ந்து முடிவில் வீட்டைவிட்டுச் செல்லும் எண்ணம்தானேயும் உன் பெற்றோருக்கு மனக்கலக்கத்தை உண்டாக்கலாம். பெற்றோர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “என் மகன், ஒரே பிள்ளை, இப்பொழுது பத்தொன்பது வயது, அவன் வீட்டைவிட்டு வெளியேறுவதன் எண்ணத்தை என்னால் பொறுக்கமுடிகிறதில்லை.”

இவ்வாறு சில பெற்றோர் மனக்கொந்தளிப்படையும் அல்லது மட்டுக்குமீறி பாதுகாக்கும் இயற்பாங்குடையோராய் இருக்கின்றனர். எனினும் உன் பங்கில் மட்டுக்குமீறி எதிர்த்து நடப்பது நிச்சயமாய்த் தவறாகும். ஓர் இளம் பெண் பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறுகிறாள்: “நான் 18 வயதை அடையும் வரையில், என் தாயும் நானும் மிக நெருங்கியிருந்தோம். . . . [ஆனால்] நான் மேலும் பெரியவளாகையில் எங்களுக்குப் பிரச்னைகள் உண்டாகத் தொடங்கின. நான் சிறிது சுதந்திரமாய் நடக்க விரும்பினேன், அதை எங்களுடைய உறவுக்குப் பயமுறுத்தலாக அவர்கள் கண்டிருக்கவேண்டும். அவர்கள், தன் முறையாக, என்னை மேலும் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்படி முயற்சி செய்ய தொடங்கினார்கள், நான் மேலுமதிகமாய்த் தூர விலகும்படி இழுப்பதன் மூலம் பிரதிபலித்தேன்.”

ஓரளவு சுதந்திரம் நல்லதே, ஆனால் அதை உன் குடும்ப இணைப்புகளை இழப்பதன்பேரில் பெறாதே. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், மற்றும் மதித்தல் ஆகியவற்றின்பேரில் ஆதாரங்கொண்ட மேலும் முதிர்ந்த உறுதியான பிடிப்பில் உன் பெற்றோருடன் உன் உறவை நீ எவ்வாறு நிலைநாட்டலாம்? ஒரு காரியம் என்னவெனில், மரியாதை மரியாதையைப் பிறப்பிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒருமுறை பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறினான்: “நம்மைச் சிட்சிக்க நம்முடைய மாம்சத்துக்குரிய தகப்பன்மார் நமக்கு இருந்துவந்தார்கள், நாம் அவர்களுக்கு பயந்து நடந்தோம்.” [மரியாதை கொடுத்துவந்தோம், NW] (எபிரெயர் 12:9, தி.மொ.) இந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் பெற்றோர் தவறுசெய்யாதவர்களல்ல. (10-ம் வசனத்தில்) பவுல் தொடர்ந்து சொல்வதாவது: “நம்முடைய மனிதத் தகப்பன்மார் . . . தாங்கள் மிக நல்லதென எண்ணினதை மாத்திரமே செய்ய முடிந்தது.”—தி ஜெருசலெம் பைபிள் (ஆங்கிலம்).

சில சமயங்களில் இந்த மனிதர் தங்கள் கருத்தில் பிழைப்பட்டனர். எனினும் தங்கள் பிள்ளைகளின் மரியாதைக்குத் தகுதியுடையோராயிருந்தனர். உன் பெற்றோரும் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் ஒருவேளை மட்டுக்குமீறி பாதுகாக்கும் வகையோராய் இருப்பது அவர்களுக்கு அடங்காது எதிர்த்து நிற்பதற்குக் காரணமல்ல. உனக்கு நீ விரும்புகிற அதே மரியாதையை அவர்களுக்கும் கொடு.

தவறாகப் புரிந்துகொண்டவை

உன்னால் தடுக்கமுடியாதச் சூழ்நிலைமைகளின் காரணமாக நீ எப்பொழுதாவது வீட்டுக்குப் பிந்தி வந்ததுண்டா? உன் பெற்றோர் மிகைப்பட்ட முறையில் பிரதிபலித்தார்களா? இத்தகைய தவறாகப் புரிந்துகொள்ளுதல் நீ மரியாதையைப் பெற உனக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கிறது. மன அமைதிக் குலைந்த இயேசுவின் பெற்றோர் அவரைக் கடைசியில் தேவாலயத்தில், குற்றமற்றவராய்ச் சில போதகரோடு கடவுளுடைய வார்த்தையைக் கலந்துபேசிக்கொண்டிருக்கக் கண்டபோது அவர் தம்மை எவ்வாறு நடத்திக்கொண்டாரென்பதை நினைவுபடுத்திப் பார். இயேசு உணர்ச்சிவசப்பட்டு கோபக் கண்டனப்பேச்சில் ஈடுபட்டாரா, அவர்கள் தன் உள்நோக்கங்களைச் சந்தேகித்தது எவ்வளவு அநியாயமென அழுது, அல்லது சிணுங்கிக் குறைதெரிவித்தாரா? அவருடைய அமைதியான பதிலைக் கவனி: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவின் வீட்டில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களோ”? (லூக்கா 2:49, தி.மொ.) இயேசு இங்கே காட்டின முதிர்ச்சி அவருடைய பெற்றோரின் மனதை ஆழமாய்த் தொட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “சாந்தமான பதில் கோபத்தை அகற்று”வது மட்டுமல்லாமல் உன் பெற்றோரின் மரியாதையைப் பெறவும் உதவிசெய்யும்.—நீதிமொழிகள் 15:1, தி.மொ.

விதிகளும் கட்டளைகளும்

உன் பெற்றோரின் கட்டளைகளுக்கு நீ பிரதிபலிக்கும் முறையும்கூட நீ நடத்தப்படப்போகும் முறையை வெகுவாய்ப் பாதிக்கிறது.. சில இளைஞர் சிணுங்கி சிடுசிடுக்கின்றனர், பொய்ச் சொல்லுகின்றனர், அல்லது வெளிப்படையாய்க் கீழ்ப்படியாதிருக்கின்றனர். பெருந்தன்மையான முறையை முயற்சிசெய்துபார். நேரம் பிந்தி வருவதற்கு அனுமதி வேண்டுமென்றால், சிறுபிள்ளைத்தனமாய் வற்புறுத்திக் கேட்காதே அல்லது “மற்ற எல்லாப் பிள்ளைகளும் வெகுநேரம் பிந்தி தங்கியிருக்க முடிகிறதே,” என்று சிணுங்காதே. எழுத்தாளர் ஆன்ட்ரியா ஈகன் அறிவுரை கூறுவதாவது: “சூழ்நிலைமையை அவர்கள் உண்மையில் விளங்கிக்கொள்ளும்படி, நீ செய்ய விரும்புவதைப்பற்றி உன்னால் கூடிய அதிக அளவு அவர்களுக்குச் [சொல்]. . . . நீ எங்கிருப்பாய், யாருடன் மற்றும் பிந்தித் தங்கியிருப்பது உனக்கு ஏன் முக்கியம் என்ற எல்லாவற்றையும் பற்றி நீ அவர்களுக்குச் சொன்னால் . . . , அவர்கள் வெறுமென சரி என்று சொல்லலாம்.”

அல்லது உன் பெற்றோர்—தங்களால் செய்யவேண்டியபடி—உன் நண்பர்களை வகைப்படுத்தித் தேர்ந்தெடுக்க விரும்பினால் சிறுபிள்ளையைப்போல் சிணுங்காதே. பதினேழு என்ற ஆங்கில பத்திரிகை சிபாரிசு செய்வதாவது: “அவ்வப்போது நண்பர்களை உன்னுடன் வீட்டுக்கு அழைத்துவா, இவ்வாறு நீ பில்லுடன் திரைப்படத்திற்குச் செல்கிறாயெனச் சொல்கையில், உன் தகப்பன் அடுத்த அறையிலிருந்து, ‘பில்லா? யார் அந்தப் பில்?’ என கத்துவதற்குக் காரணமிராது.”

“மேலும் கொடுக்கப்படும்”

ஜிம் தன் இளைய சகோதரன் ரானைப்பற்றிப் பேசுகையில் புன்சிரிப்புகொள்கிறான். “எங்களுக்கிடையிலுள்ள வேறுபாடு 11 மாதங்களே,” என்று அவன் சொல்கிறான், “ஆனால் எங்கள் பெற்றோர் எங்களை அவ்வளவு வேறுபட்ட முறையில் நடத்தினார்கள். எனக்கு அவர்கள் மிகுந்த சுதந்தரத்தைக் கொடுத்தார்கள். நான் குடும்ப ஊர்தியைப் பயன்படுத்தலாம். ஓர் ஆண்டின்போது நியு யார்க் நகரத்துக்குச் சென்ற பயணத்தில் இளைய சகோதரன் ஒருவனை அழைத்துச் செல்லவும் அவர்கள் என்னை அனுமதித்தார்கள்.

“எனினும், ரான் காரியத்தில் வேறுபட்டிருந்தது,” என்று ஜிம் தொடர்ந்து சொல்கிறான். “அவனுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்படவேயில்லை. அவன் ஏற்ற வயதானபோது ஊர்தியை ஓட்டும் முறையை அவனுக்குக் கற்பிக்கவும் அப்பா கவலைப்படவில்லை. தான் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளைத் தொடங்க போதிய வயதானவனாக உணர்ந்தபோது, என் பெற்றோர் அவனை விடவில்லை.”

பட்சபாதமா? இல்லை. ஜிம் விளக்குகிறான்: “ரான் பொறுப்புணர்ச்சியற்று நடக்கும் போக்குடையவனாயிருந்தான். முன்வந்து முயற்சியைத் தொடங்கும் ஆற்றலில் குறைவுபட்டான். தனக்கு நியமித்த வேலையைச் செய்ய அடிக்கடி தவறினான். நான் ஒருபோதும் என் பெற்றோரை எதிர்த்துப் பேசாதபோதிலும், ரான் தான் ஒத்துக்கொள்ளவில்லையென அவர்களுக்குத் தெரிவிப்பான். இது அவனுக்கு அடிக்கடி விரும்பத்தகாத விளைவைக் கொண்டுவந்தது. மத்தேயு 25:29-ல் இயேசு பின்வருமாறு சொன்னார்: “உள்ளவனெவனோ அவனுக்குக் [மேலும், NW] கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”

உனக்கு அதிக சுதந்திரமும் பொறுப்பும் வேண்டுமா? அப்படியானால் உன்னைப் பொறுப்புணர்ச்சியுள்ளவனாக நிரூபி. உன் பெற்றோர் உனக்கு நியமிக்கும் வேலைகள் எதுவாயினும் அதைக் கவலையுடன் ஏற்றுச் செய். இயேசுவின் உவமைகள் ஒன்றில் குறிப்பிட்ட அந்த இளைஞனைப்போல் இராதே. “மகனே, நீ போய் இன்றைக்குத் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்,” என தகப்பன் சொன்னபோது, அவன், “போகிறேன் ஐயா,” என்று சொன்னான், “எனினும் போகவில்லை.” (மத்தேயு 21:28, 29) உன் பெற்றோர் ஏதாவது செய்யும்படி உன்னைக் கேட்டால், அது எவ்வளவு சிறிய காரியமாயினும், அது செய்துமுடிக்கப்பட்டதென்று எண்ணுமளவுக்கு உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கச்செய்.

“நான் பொறுப்பேற்று நிறைவேற்றமுடியுமென என் பெற்றோருக்குக் காண்பித்தேன்,” என்று ஜிம் நினைவுபடுத்திக் கூறுகிறான். “அவர்கள் என்னை வங்கிக்கு அனுப்புவார்கள், தண்ணீர், மின்சாரம் முதலியவற்றிற்குச் செலுத்தவேண்டிய பணத்தைச் செலுத்தும்படி விடுவார்கள், சிறப்பங்காடிக்குச் சென்று பொருட்கள் வாங்கிவர செய்வார்கள். என் அம்மா வெளியில் சென்று வேலைபெற வேண்டியிருந்தபோது, குடும்பத்துக்குச் சாப்பாடுங்கூட சமைத்தேன்.”

தானாக முன்வந்து முயற்சியைத் தொடங்குதல்

இத்தகைய வேலைகளைப் பெற்றோர் உனக்குக் கொடுப்பதேயில்லையென்றால் என்ன செய்வது? நீயே பற்பல வேலைகளை முன்வந்து செய்ய முயற்சிசெய். பதினேழு என்ற பத்திரிகை ஆலோசனை கூறுவதாவது: “குடும்பத்துக்கு ஒருமுறை சாப்பாடு சமைக்க உன்னை முன்வந்து அளி, திட்டம்போடுவது, தேவைப்படும் பொருட்களின் பட்டியலைத் தயாரிப்பது, வரவு செலவுத் திட்டப்பட்டியல் உருவாக்குவது, கடைக்குச் செல்வது, சமைப்பது, சுத்தப்படுத்துவது ஆகிய எல்லாவற்றையும் செய்ய விரும்புவதாக உன் பெற்றோருக்குச் சொல்.” சமைப்பதில் நீ தகைமைப்பெற்றில்லையெனில், வேறு ஏதாவது செய்ய தேவைப்படுகிறதாவென சுற்றி பார்வைச் செலுத்து. பாத்திரங்கள் கழுவப்பட, தரை பெருக்கிச் சுத்தப்படுத்தப்பட, அல்லது அறைகள் ஒழுங்குபடுத்தப்படவிருக்கையில் நீ செயலில் ஈடுபட பெற்றோர் உனக்குக் குறிப்பிட்டுச் சொல்வதற்குத் தேவையில்லை.

வேனிற்கால விடுமுறையின்போது அல்லது வாரஇறுதி நாட்களின்போது இளைஞர் பலர் பகுதி-நேர வேலை ஏற்றுச்செய்கின்றனர். நீயும் அவ்வாறே செய்கிறாயென்றால், உன் பணத்தைச் சேர்த்துவைத்துத் தக்கவாறு பயன்படுத்த நீ திறமையுள்ளவனாக உன்னை நிரூபித்திருக்கிறாயா? உன் அறைக்கும் உணவுவசதிக்கும் பங்களித்து உதவ நீயே முன்வந்திருக்கிறாயா? (உன் சமுதாயத்தில் ஓர் அறையை எடுப்பதற்கு நீ விசாரித்துப் பார்த்தால் உயர்ந்துகொண்டேபோகும் வாடகை நிலையை நீ உண்மையில் விளங்கிக்கொள்ள முடியும்.) இவ்வாறு செய்வதனால் உனக்குரிய சில்லறைச் செலவுக்கான பணம் குறையலாம், ஆனால் உன் பெற்றோர் நீ பணத்தைக் கையாளும் முதிர்ச்சிவாய்ந்த முறையைக் கவனிக்கையில், உனக்கு மேலுமதிக சுதந்திரத்தைக் கொடுக்கும்படி மனவிருப்பங்கொள்வார்கள்.

பெற்றோர்மீதே சார்ந்திருப்பதைச் சற்றுத் தளர்த்தல்

பெற்றோரை நம்முடைய நம்பிக்கைக்குரிய நண்பர்களாக, ஆலோசனையும் அறிவுரையும் பெறும் நிறைவான தோற்றுமூலங்களாகக் கொண்டிருக்கவேண்டும். (எரேமியா 3:4-ஐ (NW) ஒத்துப்பார்.) எனினும், இது ஒவ்வொரு சின்னஞ்சிறிய தீர்மானத்துக்கும் நீ அவர்கள்பேரில் சார்ந்திருக்கவேண்டுமென பொருள்கொள்கிறதில்லை. உன் “பகுத்தறியும் ஆற்றல்களைப்” பயன்படுத்துவதன்மூலமே தீர்மானங்களைச் செய்யும் உன் திறமையில் உனக்கு நம்பிக்கை உண்டாகும்.—எபிரெயர் 5:14.

சிறு இக்கட்டு முதல் தோன்றினவுடனே உன் பெற்றோரிடம் ஓடுவதற்குப் பதில், அந்தப் பிரச்னையை உன் சொந்த மனதில் யோசித்துத் தீர்க்கப் பிரயாசப்படு. காரியங்களைப்பற்றிப் “பதற்றமுள்ளவ”னாய், அல்லது திடீர்உணர்ச்சிக்கு ஆட்படுபவனாய் இராமல், பைபிளின் அறிவுரையைப் பின்பற்றி முதலாவது “அறிவை உணர்ந்துகொள்.” (ஏசாயா 32:4) சிறிது ஆராய்ச்சி செய், முக்கியமாய் பைபிள் நியமங்கள் உட்பட்டிருந்தால் அவ்வாறு செய்யவேண்டும். அமைதியாய்க் காரியங்களைச் சீர்தூக்கிப் பார்த்தப் பின்பே உன் பெற்றோரை அணுகு. ‘அப்பா, நான் என்ன செய்யவேண்டும்?’ அல்லது, ‘அம்மா, நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று எப்பொழுதும் சொல்வதைப் பார்க்கிலும் அந்தச் சூழ்நிலைமையை விளக்கிக்கூறு. அந்த நிலைமையை நீ பகுத்தாராய்ந்த முறையை அவர்கள் கேட்கச் செய். பின்பு அவர்களுடைய கருத்தை அறிவிக்கும்படி கேள்.

நீ சிறுபிள்ளையைப்போல் அல்ல முதிர்ச்சியுள்ளவனாய்ப் பேசுவதை உன் பெற்றோர் இப்பொழுது காண்கிறார்கள். நீ ஓரளவு சுதந்திரத்துக்குத் தகுதியுள்ள முதியவனாகிவருகிறாயென்று நிரூபிப்பதைநோக்கி ஒரு பெரிய முன்னேற்றப்படியை எடுத்துவிட்டாய். உன் பெற்றோர் உன்னை ஒரு முதியவனைப்போல் நடத்த நன்றாய்த் தொடங்கலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதையும் அவர்கள் இருக்குமிடத்தை அறிவதையும் பற்றி அடிக்கடி அவ்வளவு அக்கறையுடனிருக்கிறார்கள்?

◻ உங்கள் பெற்றோரை நீங்கள் மரியாதையுடன் நடத்துவது ஏன் முக்கியம்?

◻ பெற்றோர் தவறாகப் புரிந்துகொண்டவற்றை எவ்வாறு மிக நல்ல முறையில் கையாளலாம்?

◻ உன் பெற்றோரின் விதிகளுக்கும் கட்டளைகளுக்கும் ஒத்துழைத்து அதேசமயத்தில் ஓரளவு சுதந்திரத்தைக் கொண்டிருப்பது எவ்வாறு?

◻ நீ பொறுப்புணர்ச்சியுள்ளவனென உன் பெற்றோருக்கு நிரூபிக்கக்கூடிய சில வழிகள் யாவை?

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

“நான் எங்கிருக்கிறேன், வீட்டுக்கு எந்த நேரத்தில் வந்து சேருவேன் என்பதை என் அப்பா எப்பொழுதும் தெரிந்திருக்க விரும்புகிறார். . . . எல்லாவற்றையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டுமா?”

[பக்கம் 27-ன் படம்]

‘உன் பெற்றோர் வேலிக்குள் உன்னை அடைத்துவைப்பதாக’ நீ உணருகிறாயா?

[பக்கம் 30-ன் படம்]

தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஏற்படுகையில் அமைதலாக இருப்பது நீ மரியாதையைப் பெறுவதற்கு ஒரு வழியாகும்