Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா?

நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா?

அதிகாரம் 7

நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா?

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும்:

“நான் கடைசியாய்ப் பிரிந்துபோகிறேன். நான் முன்பு சொன்னதுபோல், உங்களை எவ்வகையிலும் அவமதிப்பதற்கோ பதிலுக்குப் பதில் செய்வதற்கோ நான் இதைச் செய்கிறதில்லை. நீங்கள் விரும்புவதுபோல் நான் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதில் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. இந்த வகையிலுங்கூட நான் ஒருவேளை மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன், எனினும் நான் அதைக் வெறுமென கண்டுபிடிக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு ஒரு 17-வயது பெண் தன் பெற்றோருக்கு எழுதின பிரியாவிடை கடிதம் தொடங்கினது. உதாரணமாக, ஜெர்மனியின் கூட்டுக் குடியரசுவில், 15-க்கும் 24-க்கும் இடைப்பட்ட வயதுகளில், பெண்களில் மூவரில் ஒருவரும் பையன்களில் நால்வரில் ஒருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்கின்றனர். ஒருவேளை நீயும் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்ல நினைத்திருக்கலாம்.

மணம் செய்துகொள்ளவேண்டுமென்ற ஆவல் ஒருவரை “தன் தகப்பனையும் தாயையும் விட்டுச்” செல்லும்படி செய்யும் என்று கடவுள் முன்கண்டார். (ஆதியாகமம் 2:23, 24) வீட்டைவிட்டுச் செல்வதற்கு வேறு நேர்மையான காரணங்களும் உண்டு, கடவுளுக்குச் செய்யும் தன் சேவையை விரிவாக்குவது அவற்றில் ஒன்றாகும். (மாற்கு 10:29, 30) எனினும், பல இளைஞருக்கு, வீட்டைவிட்டுச் செல்லுதல், தாங்கள் பொறுக்க இயலாதென உணரும் ஒரு சூழ்நிலைமையிலிருந்து வெறுமென வெளியேறும் ஒரு வழியாக இருக்கிறது. ஓர் இளைஞன் சொல்வதாவது: “அது நீ வெறுமென அதிக சுதந்திரத்துடன் இருக்க விரும்புவதேயாகும். பெற்றோருடன் வீட்டில் வாழ்வது இனிமேலும் திருப்திதருகிறதில்லை. எப்பொழுதும் விவாதத்துக்குட்பட நேரிடுகிறது, அவர்களும் உன் தேவைகளைப் புரிந்துகொள்கிறதில்லை. அல்லாமலும், நீ அவ்வளவு மிகக் கட்டுப்படுத்தப்பட்டவனாய் உணருகிறாய், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பெற்றோருக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.”

சுதந்திரவாழ்க்கைக்கு ஆயத்தமாயிருக்கிறாயா?

நீ சுதந்திரத்தை விரும்புவது அதற்கு ஆயத்தமாயிருக்கிறாயென பொருள்கொள்கிறதா? ஒரு காரியமென்னவெனில், உன் சொந்தச் செலவில் அவ்வாறு வாழ்க்கை நடத்துவது நீ நினைக்கிறபடி அவ்வளவு எளிதல்ல. வேலை கிடைப்பது பெரும்பாலும் அரிதாயிருக்கிறது. வீட்டுவாடகைகள் உச்ச அளவில் உயர்ந்துவிட்டிருக்கின்றன. மேலும் பொருளாதார நெருக்கடிக்குள்அகப்பட்டுக்கொள்ளும் இளைஞர்கள் அடிக்கடி என்ன செய்யும்படி வற்புறுத்தப்படும் நிலைக்குள்ளாகிறார்கள்? வீட்டைவிட்டு விலகுதல் என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்கள் பின்வருமாறு சொல்கின்றனர்: “அவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்து தங்களைப் பராமரித்துக் காப்பாற்றும் பாரத்தைப் பெற்றோர் திரும்ப ஏற்கும்படி எதிர்பார்க்கின்றனர்.”

மேலும் உன் மன, உணர்ச்சிவச, மற்றும் ஆவிக்குரிய முதிர்ச்சியைப்பற்றியதென்ன? நீ உன்னை வயதுவந்தவனாகக் கருதிக்கொள்ளலாம், ஆனால் உன் பெற்றோர் உன்னில் இன்னும் “குழந்தைக்குரிய தன்மைகளைக்” காணலாம். (1 கொரிந்தியர் 13:11, NW) அல்லாமலும், எந்த அளவான சுதந்திரத்தைக் கையாள நீ ஆயத்தமாயிருக்கிறாய் என்பதைத் தீர்மானிக்க, உண்மையில் உன் பெற்றோரே மிகச் சிறந்த நிலையில் இருக்கிறார்களல்லவா? அவர்களுடைய தீர்ப்பை எதிர்த்து உன் சொந்தமாய் நடக்கப் புறப்பட்டுச் செல்வது மிகுந்த கேட்டையே கொண்டுவரும்!—நீதிமொழிகள் 1:8.

“என் பெற்றோருடன் நான் ஒத்துப் போகிறதில்லை!”

உன் காரியத்தில் இவ்வாறு இருக்கிறதா? அப்படி இருப்பினும், இது வீட்டைவிட்டுப் புறப்பட ஆயத்தமாவதற்கு எந்தக் காரணமுமல்ல. இளைஞனாக உனக்கு உன் பெற்றோர் இன்னும் தேவைப்படுகின்றனர், வரப்போகிற பல ஆண்டுகளுக்கு அவர்களுடைய ஆழ்ந்தத் தெளிந்தறிவிலிருந்தும் ஞானத்திலிருந்தும் நீ பயனடையலாம். (நீதிமொழிகள் 23:22) அவர்களுடன் கொள்ளும் தொடர்பில் நீ ஏதோ ஒருசில முட்டுக்கட்டைகளில் மோத நேரிட்டதனால் அவர்களை உன் வாழ்க்கையிலிருந்தே முற்றிலும் துண்டித்துவிடவேண்டுமா?

முழுநேர போதக ஊழியத்தைத் தன் வாழ்க்கைத் தொழிலாகத் தொடர வீட்டைவிட்டுச் சென்ற கார்ஸ்டன் என்ற ஒரு ஜெர்மானிய இளைஞன் பின்வருமாறு சொல்கிறான்: “உன் பெற்றோருடன் பொருந்திப்போக முடியவில்லை என்ற இந்த வெறுங்காரணத்தால் வீட்டைவிட்டு ஒருபோதும் பிரிந்துசெல்லாதே. அவர்களோடு நீ பொருந்திப்போக முடியவில்லையென்றால், மற்ற ஆட்களோடு நீ எவ்வாறு பொருந்திப்போக முடியும்? வீட்டைவிட்டு வெளியேறுவது உன் பிரச்னையைத் தீர்த்துவிடாது. அதற்கு எதிர்மாறாக, உன் சொந்தமாய்ச் சுதந்திரத்துடன் நிற்பதற்கு நீ முதிர்ச்சியற்றவன் என்றே உன்னை நிரூபிக்கும், மேலும் உன் பெற்றோரிடமிருந்து மேலுமதிக நட்புமுறிவுக்கே வழிநடத்தும்.”

ஒழுக்கநெறிகளும் உள்நோக்கங்களும்

முதிர்ச்சியடைவதற்கு முன்னால் அவசரப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறுவதில் உட்பட்ட ஒழுக்க அபாயங்களை இளைஞர்கள் காணத்தவறும் போக்குடையோராயும் இருக்கின்றனர். லூக்கா 15:11-32-ல், சுதந்திரமாய் இருக்க விரும்பி தன் சொந்தப் போக்கில் புறப்பட்டுச் சென்ற ஓர் இளைஞனைப்பற்றி இயேசு சொல்கிறார். தன் பெற்றோரின் நல்ல செல்வாக்கின்கீழ் இனிமேலும் இராத அவன் பால்சம்பந்த ஒழுக்கக்கேட்டுக்குட்பட்டு “துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணத்” தொடங்கினான். சீக்கிரத்தில் அவன் தன் பணத்தையெல்லாம் ஊதாரித்தனமாய்ச் செலவழித்துவிட்டான். வேலை கிடைப்பது கடினமாயிருந்ததால், யூதர் இழிவாய்க் கருதின—பன்றிமேய்க்கும் வேலையையுங்கூட ஏற்றான். எனினும், ஊதாரி, அல்லது வீணாக்குபவன் என்றழைக்கப்பட்ட இந்தக் குமாரன் தன் நல்லுணர்வுகளுக்கு வந்தான். தன் பெருமையை அடக்கி, தன்னைத் தாழ்த்தி அவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, மன்னிக்கும்படி தன் தகப்பனிடம் கெஞ்சினான்.

கடவுளுடைய இரக்கத்தை விளக்கமாய்த் தெரியச் செய்ய இந்த உவமை சொல்லப்பட்டபோதிலும், பின்வரும் நடைமுறையான பாடத்தையும் இது கொண்டிருக்கிறது: ஞானமற்ற உள்நோக்கத்துடன் வீட்டைவிட்டுப் பிரிந்து செல்லுதல் உனக்கு ஒழுக்கப் பிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் தீங்குசெய்ய முடியும்! விசனகரமாய், சுதந்திர போக்கில் ஈடுபட புறப்பட்டுச் சென்ற சில கிறிஸ்தவ இளைஞர்கள் ஆவிக்குரிய அழிவை அனுபவித்தனர். சிலர் பணசம்பந்தமாய்த் தங்கள் செலவுக்குவேண்டிய அளவு வரவுடன் இருக்க முடியாமல், பைபிள் நியமங்களுக்கு முரண்படும் வாழ்க்கை நடைபாங்கைப் பின்பற்றும் இளைஞருடன் கூடி செலவுகளைப் பகிர்ந்துகொள்வதில் ஈடுபட்டிருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 15:33.

ஹார்ஸ்ட் என்ற பெயருடைய ஒரு ஜெர்மன் இளைஞன், வீட்டைவிட்டுச் சென்ற, தன் சொந்த வயதை ஒத்த ஓர் இளைஞனைப்பற்றி நினைவுபடுத்திக் கூறுவதாவது: “அவன் மணம் செய்யாதபோதிலும், தன் காதலியுடன் ஒன்றுசேர்ந்து வாழத் தொடங்கினான். அவர்கள் விருந்துகள் வைத்தார்கள், அங்கே மதுபானம் தாராளமாய்ப் பயன்படுத்தப்பட்டது, அவன் அடிக்கடி குடிவெறியில் முடிவடைந்தான். அவன் இன்னும் பெற்றோருடன் வீட்டில் வாழ்ந்திருந்தால் அவன் பெற்றோர் இந்த எதையும் அனுமதித்திருக்கமாட்டார்கள்.” ஹார்ஸ்ட் முடிவாகச் சொன்னதாவது: “வீட்டைவிட்டுச் சென்றுவிட்டால் உனக்கு அதிக சுதந்திரம் இருக்கிறதென்பது மெய்யே. ஆனால் முற்றிலும் நேர்மையாய்ச் சொல்லவேண்டுமானால், அது அடிக்கடி கெட்டக் காரியங்களைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறதல்லவா?”

ஆகையால் அதிக சுதந்திரத்துக்காக நீ ஏங்கினால், உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: எனக்கு ஏன் அதிக சுதந்திரம் வேண்டும்? நான் அதிக பொருளுடைமைகளைக் கொண்டிருக்கலாம் என்பதற்கா அல்லது என் பெற்றோர் தடைசெய்யும் காரியங்களை வீட்டைவிட்டு விலகினபின் செய்ய சுயாதீனம் இருக்கும் என்பதற்காகவா? எரேமியா 17:9-ல் பைபிள் சொல்வதை நினைவுபடுத்திக்கொள்: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”

வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லாவிடில் நான் எவ்வாறு முதிர்வுற முடியும்?

வளரிளமை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுவதாவது: “குடும்ப வீட்டிலிருந்து வெறுமென பிரிந்துசெல்வது வெற்றிகரமான நிலைத்திரிவு பருவத்தை (முழுவளர்ச்சிநிலையை) உறுதியளிக்காது. வீட்டில் தங்கியிருப்பது முதிர்வுக்கு வளரத் தவறுவதைக் குறிப்பதுமில்லை.” நிச்சயமாகவே, முதிர்வுக்கு வளருவதென்றால், தன் சொந்தப் பணத்தையும், வேலையையும், தனி வீட்டையும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. ஒரு காரியமென்னவெனில், பிரச்னைகளை நேர்மையானமுறையில் எதிர்ப்படுவதால் வாழ்க்கை முழு தேர்ச்சியடைய செய்யப்படுகிறது. நமக்கு விருப்பமில்லாதச் சூழ்நிலைமைகளிலிருந்து பின்வாங்கி ஓடுவதால் எந்த நன்மையும் பெறுவதில்லை. “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது,” என்று புலம்பல் 3:27-ல் சொல்லியிருக்கிறது.

உதாரணமாக, ஒத்துப்போவது மிகக் கடினமாயுள்ள அல்லது மிகக் கண்டிப்பான பெற்றோரை எடுத்துக்கொள். இப்பொழுது 47 வயதுடையவராயிருக்கும் மாக், பள்ளிக்குப் பின் செய்யவேண்டிய அனுதின வேலை பொறுப்புகளை அவர்மேல் சுமத்தின ஒரு தகப்பனைக் கொண்டிருந்தார். வேனிற்கால விடுமுறையின்போது, மற்ற இளைஞர்கள் விளையாடுகையில் மாக் வேலைசெய்ய வேண்டியிருந்தது. “நாங்கள் விளையாடி மகிழ்ச்சியனுபவிப்பதைத் தடுத்துவைப்பதற்கு அவர் உயிரோடிருக்கும் எந்த மனிதனைப்பார்க்கிலும் மிகக் கஞ்சத்தனமானவர் என்று நான் எண்ணினேன். ‘நான் மாத்திரம் இங்கிருந்து வெளியேறி என் சொந்த இடத்தைக் கொண்டிருக்க முடியுமானால் எவ்வளவு நலமாயிருக்கும்!’ என்று நான் அடிக்கடி எண்ணினேன்,” என்று மாக் சொல்கிறார். எனினும், மாக், இப்பொழுது அந்தக் காரியத்தின்பேரில் வேறுபட்ட நோக்கைக் கொண்டிருக்கிறார்: “அப்பா எனக்குச் செய்தது விலைமதியாதது. கடினமாக உழைப்பதும் கஷ்டங்களைச் சகிப்பதும் எவ்வாறென அவர் எனக்குக் கற்பித்தார். பின்னால் அதைப்பார்க்கிலும் மிக வினைமையான பிரச்னைகளை நான் எதிர்ப்பட வேண்டியிருந்தது, ஆனால் அவற்றை நேரில் எதிர்த்துநின்று சமாளிப்பது எவ்வாறென நான் அறிந்திருந்தேன்.”

போலி இன்பநிலை

எனினும் வெறுமென வீட்டில் வாழ்வது, நீ முதிர்ச்சியடைவதற்கு உறுதிதருகிறதில்லை. ஓர் இளைஞன் பின்வருமாறு சொல்கிறான்: “என் பெற்றோருடன் வீட்டில் வாழ்வது போலி இன்பநிலையில் வாழ்வதைப்போலிருந்தது. அவர்கள் எனக்கு எல்லாவற்றையும் செய்தார்கள்.” நீயே காரியங்களைச் செய்வது எவ்வாறென கற்றுக்கொள்வது முதிர்வுக்கு வளருவதன் பாகமாகும். குப்பையை வெளியில் எடுத்துச் சென்று கொட்டுவது அல்லது துணிகளைத் துவைப்பது, உனக்கு மிக விருப்பமான இசைப்பதிவுகளை இசைக்கருவிகளில் இயங்க வைப்பதுபோல் அவ்வளவு இன்பந்தருவதாக இராதென ஒப்புக்கொள்ளவேண்டியதே. ஆனால் இந்தக் காரியங்களைச் செய்வது எவ்வாறென நீ ஒருபோதும் கற்காவிடில் அதன் விளைவு என்னவாகும்? தானாக எதையும் செய்ய முடியாமல் உன் பெற்றோர் அல்லது மற்றவர்கள்மீது முற்றிலும் சார்ந்த முதிர்ந்தவனாவாய்.

நீ (இளைஞனாயினும் இளம் பெண்ணாயினும்) சமைத்தல், சுத்தம்செய்தல், சலவைப்பெட்டியிடுதல், அல்லது வீட்டிலுள்ளவற்றையோ ஊர்திகளையோ பழுதுபார்த்தல் எவ்வாறேன கற்றுக்கொள்வதனால் முடிவான சுதந்திரத்துக்கு ஆயத்தமாகிறாயா?

பணம் சம்பந்த சுதந்திரம்

செல்வமிகுந்த நாடுகளில் இளைஞர் பணத்தை எளிதில் கிடைக்கக்கூடியதெனவும் அதைவிட எளிதில் செலவிடக்கூடியதெனவும் கருதுகின்றனர். அவர்களுக்குப் பகுதிநேர வேலை ஒன்றிருந்தால், தங்கள் பணத்தைத் திட்பக்காட்சிக் கருவிகளிலும் (ஸ்டீரியோக்களிலும்) பலவித உடைகளிலும் செலவிடும் போக்கையுடையோராயிருக்கின்றனர். எனினும், இத்தகைய இளைஞர் தங்கள் சொந்தமாய் இருக்க வீட்டைவிட்டுப் பிரிந்து செல்கையில் எத்தகைய திடுக்கிடச் செய்யும் திடீர் விழிப்புணர்வுக்கு ஆளாக இருக்கிறார்கள்! (முன்பு குறிப்பிட்ட) ஹார்ஸ்ட் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “[நான் சொந்தமாய் வெளியில் வசித்தபோது] மாதம் முடிவதற்குள் என் பணப்பையும் என் அலமாரியும் வெறுமையாயிருந்தன.”

பணத்தைக் கையாளுவது எவ்வாறென நீ வீட்டில் வாழ்கையிலேயே கற்றுக்கொள்ளலாமல்லவா? இதைச் செய்வதில் உன் பெற்றோர் பல ஆண்டுகள் அனுபவப்பட்டிருக்கின்றனர், எதிர்பாராத இக்கட்டுகள் பலவற்றைத் தவிர்ப்பதற்கு அவர்கள் உனக்கு உதவிசெய்ய முடியும். வீட்டைவிட்டு விலகுதல் என்ற ஆங்கில புத்தகம் பின்வருபவற்றைப்போன்றக் கேள்விகளை அவர்களிடம் கேட்கும்படி ஆலோசனை கூறுகிறது: “ஒவ்வொரு மாதமும் மின்சாரத்துக்கு, வெப்பத்துக்கு, தண்ணீருக்கு, தொலைபேசிக்கு எவ்வளவு செலவாகிறது? என்ன வகையான வரிகளை நாம் செலுத்துகிறோம்? என்ன வாடகை நாம் செலுத்துகிறோம்?” பெற்றோருக்கு இருப்பதைப்பார்க்கிலும் வேலைசெய்யும் இளைஞருக்கு அதிகக் கைப்பணம் பெரும்பாலும் இருப்பதை அறிவது உன்னைத் திடுக்கிடச் செய்யலாம்! ஆகையால் நீ வேலைசெய்து சம்பாதிக்கிறவனாயிருந்தால், குடும்பப் பரிபாலனத்துக்காகப் பொருத்தமான ஒரு தொகையை முன்வந்து அளி.

பிரிந்துசெல்வதற்கு முன்னால் கற்றுக்கொள்

இல்லை, நீ வளர்ந்து முதிர்வதற்கு வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டியதில்லை. நீ வீட்டிலிருக்கையில் காரியங்களைப் பகுத்தறிந்து நல்ல முடிவுக்குவரும் மற்றும் அமரிக்கையாய்ச் சிந்திக்கும் திறமைகளை முன்னேற்றுவி. மேலும் மற்றவர்களோடு எவ்வாறு ஒத்துவாழ்வதென்பதையும் கற்றுக்கொள். குற்றங்குறை கூறப்படுவதை, தோல்வியை, அல்லது ஏமாற்றத்தை நீ சகிக்க முடியுமென நிரூபி. ‘தயவு, நற்குணம், சாந்தம், தன்னடக்கம்,’ ஆகியவற்றை வளர்த்துவா. (கலாத்தியர் 5:22, 23) இந்தப் பண்புத்திறமைகள் முதிர்வுக்கு வளர்ந்த கிறிஸ்தவ ஆண் அல்லது பெண்ணின் உண்மையான அடையாளமாகும்.

சீக்கிரத்திலோ பிந்தியோ, திருமணம் போன்ற சந்தர்ப்பநிலைமைகள் பெற்றோரின் வீட்டு பாதுகாப்பிடத்திலிருந்து உன்னை வெளியேறச் செய்யலாம். ஆனால் அதுவரையில், வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு ஏன் அவ்வளவு பெரும் அவசரப்படவேண்டும்? உன் பெற்றோருடன் அதைப்பற்றிக் கலந்துபேசு. நீ தொடர்ந்து அங்கு தங்கியிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சிதரும், முக்கியமாய்க் குடும்பத்தின் சுகநலத்துக்கு நீ உண்மையான உதவியளிப்பவனாயிருக்கையில் அவ்வாறு உணரலாம். அவர்களுடைய உதவியுடன், நீ அங்கே வீட்டிலேதானே தொடர்ந்து வளர்ந்தும், கற்றும், முதிர்ச்சியடைந்துகொண்டும் வரலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ இளைஞர் பலர் ஏன் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்ல ஆவலாயிருக்கின்றனர்?

◻ ஏன் இளைஞர் பெரும்பான்மையர் அத்தகைய பிரிந்துசெல்லுதலுக்கு ஆயத்தமாயில்லை?

◻ உரிய காலத்துக்கு முன்னால் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்வதனால் ஏற்படும் அபாயங்களில் சில யாவை?

◻ வீட்டைவிட்டு ஓடிப்போகிறவர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளில் சில யாவை?

◻ வீட்டில் இன்னும் வாழ்கையில் நீ எவ்வாறு முதிர்ச்சிக்கு வளர முடியும்?

[பக்கம் 57-ன் படம்]

“உன் பெற்றோருடன் பொருந்திப்போக முடியவில்லை என்ற இந்த வெறுங் காரணத்தால் வீட்டை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்லாதே . . . மற்ற ஆட்களோடு நீ எவ்வாறு பொருந்திப்போக முடியும்?”

[பக்கம் 60, 61-ன் பெட்டி]

ஓடிப்போவதே பிரச்னையின் தீர்வாகுமா?

ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பருவ வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகின்றனர். சிலர்—உடல் அல்லது பால்சம்பந்த கெடுதிக்கு உட்படுத்தப்படுவதைப்போன்ற—சகிக்கமுடியாத நிலைமைகளிலிருந்து தப்பியோடுகின்றனர். ஆனால் பெரும்பாலும், நேரக் கட்டுப்பாடுகள், பள்ளி படிப்பு தரநிலைகள், அனுதின வீட்டு வேலைகள், நண்பர்களைத் தெரிந்தெடுத்தல் போன்ற இத்தகைய காரியங்களின்பேரில் பெற்றோருடன் சொற்போராடுவதால் அவ்வாறு ஓடிப்போகும்படித் தூண்டப்படுகின்றனர்.

காரியங்களின்பேரில் உன் பெற்றோரின் மனப்பான்மையும் எண்ணமும் உன்னுடையவற்றோடு சற்றும் ஒத்திராதிருக்கலாம். ஆனால் உன் பெற்றோர் உன்னை “யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டொழுங்கிலும்” வளர்க்கும்படி கடவுளுக்குமுன் கடமைப்பட்டிருக்கிற இந்த உண்மையை நீ சிந்தித்துப் பார்த்தாயா? (எபேசியர் 6:4NW) ஆகையால் நீ மதக் கூட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் தங்களோடுகூட வரும்படி அவர்கள் கண்டிப்பாய்க் கூறலாம் அல்லது மற்ற இளைஞரோடு உன் கூட்டுறவைத் தடைவரம்புக்கும் உட்படுத்தலாம். (1 கொரிந்தியர் 15:33) இது எதிர்த்து நிற்பதற்கு அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கு ஏதாவது காரணமாகுமா? “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக,” என்ற கடமை கடவுளுக்கு முன்பாக உனக்குங்கூட இருக்கிறது.—எபேசியர் 6:1-3.

அல்லாமலும், வீட்டைவிட்டு ஓடிப்போதல் எதையும் தீர்ப்பதில்லை. “ஓடிப்போதல் உனக்கு மேலுமதிகப் பிரச்னைகளையே உண்டுபண்ணுகின்றன,” என்று 14 வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போன ஆனி நினைவுபடுத்திக் கூறுகிறாள். என் சிநேகிதி வீட்டைவிட்டு ஓடிப்போக விரும்புகிறாள் என்ற தன் புத்தகத்தில் மார்கரெட் O. ஹைட் பின்வருமாறு கூறுகிறாள்: “வீட்டைவிட்டு ஓடிப்போகிறவர்களில் ஒருசிலருக்கு வேலைகள் கிடைக்கின்றன தங்கள் சொந்தமாய் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையருக்கு, தாங்கள் வீட்டை விடுவதற்கு முன்னால் இருந்ததைவிட மிக மோசமாகவே வாழ்க்கை இருக்கிறது.” பருவ வயது பத்திரிகை குறிப்பிடுவதாவது: “பருவ வயதுக்குட்பட்டவர்கள் வீதிகளில் சுதந்திரத்தைக் கண்டடைவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் “தங்களைப்போன்று—வீட்டைவிட்டு ஓடிப்போன அல்லது தள்ளிவிடப்பட்ட மற்றவர்களை, பாழாய்க் கிடக்கும் கட்டடங்களில் வாழ்வதைக் காண்கின்றனர், அங்கே கற்பழிப்போரிடமிருந்து அல்லது கொள்ளையிடும் போக்கிரிகளிடமிருந்து அவர்களுக்கு எந்தப் பாதுகாப்புமில்லை. மேலும் இளைஞரை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதைத் தங்கள் இழிவான தொழிலாக்கிக்கொள்ளும் மிகுதியான ஆட்களையும் அவர்கள் காண்கிறார்கள், வீட்டைவிட்டு ஓடிப்போன பருவ வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இத்தகையோருக்கு எளிதான வேட்டையாயிருக்கின்றனர்.”

வீட்டைவிட்டு ஓடிப்போன ஏமியை, 22 வயது ஆண் “காதல் நட்பு” காட்டினான். அவள் “அவனுடனும் அவனுடைய நண்பர்கள் ஒன்பது பேருடனும் பாலுறவுகொள்ள செய்வதன் மூலம்” தங்குவதற்கு வாடகையைச் செலுத்தும்படி அவளை செய்வித்தான். அவளும் “வெறிக்கக் குடித்தாள். ஏராளமான போதை மருந்துகளை உட்கொண்டாள்.” சான்டி என்ற மற்றொரு பெண் தன்னை வளர்த்தப் பாட்டனாரால் தொல்லையனுபவித்து வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அவள் வீதிகளில் வாழ்ந்து பூங்காக்களிலுள்ள பெஞ்சுகளில் அல்லது தனக்குக் கிடைக்கக்கூடிய இடங்களிலெல்லாம் தூங்கினாள். வீட்டைவிட்டு ஓடிப்போகிறவர்கள் பலருடைய நிலை இவ்வாறே இருக்கிறது.

வீட்டைவிட்டு ஓடிப்போகிறவர்களில் பெரும்பான்மையருக்கு விற்பனை பொருட்கள் செய்யும் திறமைகள் மிகக் குறைவாய் இருக்கின்றன. தாங்கள் வேலைக்கு அமர்த்தப்படவும் தேவையான: பிறப்புசான்று பத்திரம், சமுதாய பாதுகாப்புச்சீட்டு, நிலையான விலாசம் போன்ற எதுவும் அவர்களுக்குப் பொதுவாய் இல்லை. “நான் திருடவும், பிச்சையெடுக்கவும் வேண்டியிருந்தது,” என்று லூயிஸ் சொல்லுகிறான், “பெரும்பாலும் திருட வேண்டியிருந்தது ஏனெனில் அங்கே ஒருவரும் உனக்கு ஒன்றும் கொடுக்கிறதில்லை.” ஓடிப்போகிறவர்களில் சுமார் 60 சதவீதம் இளம்பெண்களே, இவர்களில் பலர் வேசித்தனத்தில் ஈடுபடுவதால் தங்களை ஆதரித்துக்கொள்கின்றனர். இழிபொருள் ஓவியக்காரர், போதைப்பொருட்கள் விற்போர், மற்றும் காமத் தரகர், வீட்டைவிட்டு ஓடிப்போன இத்தகையோரை இழிவான சுயநலக்காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக நாடித்தேடி பேருந்துகள் நிற்குமிடங்களில் அடிக்கடி அலைந்து திரிகின்றனர். பயந்துகலக்கமடைந்துள்ள இளைஞருக்கு அவர்கள், படுக்க ஓர் இடத்தையும் உண்பதற்கு உணவையும் கொடுக்க முன்வரலாம். வீட்டில் அவர்கள் குறைவுபட்டதையுங்கூட—தாங்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்ற உணர்ச்சியையும்—அவர்களுக்குக் கொடுக்கலாம்.

எனினும், காலப்போக்கில், இத்தகைய “கொடையாளர்கள்” பதில்செலுத்தும்படி வற்புறுத்திக் கேட்கின்றனர். அது அவர்களுக்காக வேசித்தனத் தொழில் புரிதல், பால்சம்பந்த நெறிபிறழ்வான காரியங்களில் ஈடுபடுதல், அல்லது பரத்தையர் ஆபாச இழிசெயல் படமெடுப்புக்காகப் பாவனைசெய்து நிற்றல் ஆகியவற்றைக் குறிக்கலாம். வீட்டைவிட்டு ஓடிப்போகும் பலர் வினைமையான தீங்குக்கு ஆளாவது—அல்லது சாவில் முடிவடைவது அதிசயம் ஒன்றுமில்லை!

உன் பெற்றோருடன் கலந்துபேச—ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அவ்வாறு பேச—எல்லா முயற்சியும் எடுப்பது அறிவுள்ள காரியம். நீ எவ்வாறு உணருகிறாய், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பவற்றை அவர்களுக்குத் தெரியப்படுத்து. (2-ம், 3-ம் அதிகாரங்களைப் பார்.) உடல் அல்லது பால்சம்பந்த அவக்கேடு செய்யப்படுகிறதென்றால், வெளியிலுள்ளோரின் உதவி தேவைப்படலாம்.

என்னவாயினும், பேசு, வீட்டைவிட்டு ஓடிப்போகாதே. வீட்டில் வாழ்க்கை நல்லமுறையில் இல்லையெனினும், நீ வீட்டைவிட்டு ஓடி வெளியில் திரிகையில் காரியங்கள் அதைவிட மிகமோசமாயிருக்கும் என்பதை மனதில் வை.

[பக்கம் 59-ன் படங்கள்]

தன் சொந்தமாய் வாழ்வதற்குத் தேவைப்படும் வீட்டுக்குரிய தனித்திறமைகளை வீட்டிலேயே கற்றுக்கொள்ளலாம்