Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது?

எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது?

அதிகாரம் 38

எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது?

“எதிர்காலத்தைக் குறித்து எனக்குப் பயமாக இருக்கிறது. அணு யுத்த அச்சுறுத்தல்கள் நிறைந்த உலகில் எதிர்காலத்தைக் குறித்து எனக்குப் பயமாக இருக்கிறது.” இவ்வாறாக ஒரு ஜெர்மானிய இளைஞன் அவனுடைய நாட்டின் அதி உயர்ந்த அரசியல் அதிகாரியிடம் பேசினான்.

ஒருவேளை, அணுத்தீப்பந்தம் ஒன்றில் அமிழ்ந்துபோகும் பிரமை, எதிர்காலத்தைப் பற்றிய உங்களுடைய நோக்குநிலையைக் குலைக்கலாம். “நான் ஏன் நல்ல மதிப்பெண்களைப் பெற அக்கறை எடுக்க வேண்டும்? இந்த உலகம் எப்படியும் வெடித்துவிடும்.” இப்படி ஓர் இளைஞன் கேட்டான். உண்மையில், பள்ளிப் பிள்ளைகளைப் பற்றிய சுற்றாய்வு ஒன்றில், அணு ஆயதப் போரைத் தங்களுடைய மிகப்பெரிய பயம் என்று வாலிபப் பையன்கள் குறிப்பிட்டனர். பெண்கள் இதை இரண்டாவதாக, “என் பெற்றோர் மரித்துப்போகும்” பயத்திற்கு அடுத்ததாக மதிப்பிட்டனர்.

இருப்பினும், எதிர்கால அடிவானில் தெரியும் இருண்ட மேகம் அணுயுத்தம் மட்டுமேயல்ல. “பேரளவான ஜனத்தொகை, இயற்கை வளங்கள், தீர்ந்துபோதல், சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு” மற்றும் இதர நெருங்கி நிற்கும் பேரழிவுகள், புகழ்பெற்ற உளநூல் நிபுணராகிய பி. எஃப். ஸ்கின்னர் என்பவரை இந்த முடிவுக்கு வழிநடத்தியது: “நம்முடைய இனம் அற்றுப்போகும் ஆபத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. நான் அதிக நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறேன். உண்மையில் நாம் நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்போவதில்லை.”

கற்றறிந்த பார்வையாளர்களும்கூட எதிர்காலத்தைப் பயத்தோடு நோக்குவதால் அநேக இளைஞர்கள் இந்த மனப்பான்மையை வெளிக்காட்டுவது வியப்பாக இல்லை; “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்.” (1 கொரிந்தியர் 15:32) உண்மையில், உன் எதிர்காலம் அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் திறமையின்மீது சார்ந்திருந்தால் அது உண்மையில் பயங்கரமானதாகவே இருக்கும். ஏனென்றால் எரேமியா 10:23 (NW) சொல்லுகிறது: “மனுஷனுடைய வழி அவனுக்கு உரியதல்ல, தன் நடைகளை நடத்துவது நடத்துகிறவனுக்கு உரியதல்ல.”

இது, தன்னைத்தான் ஆளுவதற்கு மனிதனுக்குத் திறமையில்லை என்று வெறுமென அர்த்தங்கொள்வதில்லை. அது மனிதனுக்கு ‘உரியதல்ல’ என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்—பூமியின் எதிர்காலத்தை நிர்வகிக்க அவனுக்கு உரிமையில்லை. அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடிவடையும். அந்தக் காரணத்தின் நிமித்தமே எரேமியா தெய்வீகக் குறுக்கீட்டிற்காக ஜெபித்தான். “இருப்பினும் யெகோவாவே, நியாயத்தீர்ப்பினால் என்னைத் திருத்தும்.” (எரேமியா 10:24, NW) இது நம்முடைய எதிர்காலத்தை, நம்முடைய சிருஷ்டிகர் தீர்மானிப்பார் என்று அர்த்தங்கொள்கிறது. ஆனால், அத்தகைய எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

பூமிக்கான கடவுளுடைய நோக்கமும்—உன் எதிர்காலமும்

மனிதனைச் சிருஷ்டித்த பிறகு கொஞ்ச காலத்தில் கடவுள் முதல் மனித ஜோடிக்குச் சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) இவ்வாறாக உலகளாவிய பரதீஸில் வாழ்வதற்கான எதிர்பார்ப்பு மனிதனுக்கு அளிக்கப்பட்டது.

இருப்பினும், முதல் தம்பதிகள் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தனர். சாலொமோன் பின்னால் எழுதியதுபோல “தேவன் மனுஷரைச் செம்மையானவனாக உண்டாக்கினார், அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்.” (பிரசங்கி 7:29) மனிதனின் திட்டங்கள் அழிவிற்கேதுவாக நிரூபித்திருக்கின்றன. அவை இந்தத் தற்போதைய சந்ததிக்குத் துன்பத்தையும், மிகக் கவலையூட்டும் வருங்கால எதிர்பார்ப்புகளையுமே பரம்பரைச் சொத்தாக விட்டுவைத்திருக்கின்றன.

இது, பூமியைக் கடவுள் தூய்மைக்கேடும் கதிரியக்கம் நிறைந்த, ஒருவேளை உயிரினம் வாழத்தகாத கோளமாக ஆகும்படி அதைக் கைவிட்டுவிட்டார் என்று அர்த்தப்படுத்துகிறதா? அப்படி இருக்கமுடியாது! அவரே “பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தினவர்.” ஆக, பூமியைக் குறித்ததில் அவர் தெரிவித்திருக்கும் நோக்கம் நிச்சயமாக நிறைவேறும்!—ஏசாயா 45:18; 55:10, 11.

ஆனால், எப்போது, எவ்வாறாக? நீயே லூக்கா 21-வது அதிகாரத்தை வாசித்துப் பார். இந்த நூற்றாண்டில் மனித இனத்தை வாட்டியிருக்கும் அதே பிரச்னைகளை இயேசு முன்னுரைத்தார்: சர்வதேச போர்கள், பூமியதிர்ச்சிகள், நோய், உணவு குறைபாடுகள், பரவலான குற்றச்செயல். இந்தச் சம்பவங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன? இயேசுவே விளக்கம் தருகிறார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள். . . . அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.”—லூக்கா 21:10, 11, 28, 31.

அந்த ராஜ்யமே உங்கள் எதிர்காலத்துக்குத் திறவுகோல். எளிதாக சொன்னால், அது ஓர் அரசாங்கம். அதன் மூலமே கடவுள் பூமியை ஆட்சி செய்வார். அந்த ராஜ்ய அரசாங்கம் மனித கைகளிலிருந்து பூமிக்குரிய ஆதிக்கத்தைப் பலவந்தமாக பறித்துக்கொள்ளும். (தானியேல் 2:44) “பூமியைக் கெடுத்தவர்கள்” கடவுளுடைய கரங்களில் அழிவைச் சந்திப்பார்கள். இப்படியாக, பூமியும் மனித இனமும் மனிதரின் துர்ப்பிரயோகத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்படும்.—வெளிப்படுத்துதல் 11:18; பிரசங்கி 1:4.

கடவுளுடைய ராஜ்ய நிர்வாகத்தின் பாதுகாப்பின் கீழ் பூமியானது படிப்படியாக உலகளாவிய பரதீஸாக மாறும். (லூக்கா 23:43) இப்படியாக ஒரு பரிபூரண உயிரின-சுற்றுச் சூழல் சமநிலை திரும்ப நிலைநாட்டப்படும். ஏன், மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையேயும் ஒத்திசைவு இருக்கும். (ஏசாயா 11:6-9) போரும், போர்க்கருவிகளும் இல்லாமற்போகும். (சங்கீதம் 46:8, 9) குற்றச்செயல், பசி, வீட்டு வசதி பற்றாக்குறை, வியாதி—மரணமும்கூட நீக்கப்பட்டுவிடும். பூமியின் குடிமக்கள், “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11; 72:16; ஏசாயா 65:21, 22; வெளிப்படுத்துதல் 21:3, 4.

கடவுளுடைய வாக்குறுதிகளைச் ‘சோதித்துப்’ பார்த்தல்

ஒரு பரதீஸில் நித்தியகால வாழ்க்கை—அது உங்களுடைய எதிர்காலமாக இருக்கக்கூடும்! இந்தக் கருத்து கவர்ச்சியுள்ளதாகத் தொனித்தாலும், எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்திற்குச் செல்கிறார்கள் என்ற நம்பிக்கையைக் கைவிட உங்களுக்குக் கடினமாக இருக்கலாம் அல்லது பைபிளைக் குறித்தும்கூட உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலே சில இளைஞரும்கூட தங்களுடைய விசுவாசம் சில சமயங்களில் அபாயகரமாக தடுமாறும் நிலைக்குள்ளாவதை கண்டிருக்கின்றனர். உதாரணமாக, மிஷெல், சாட்சி பெற்றோரால் வளர்க்கப்பட்டாள். பைபிளைச் சத்தியமென ஏற்பது இரவைப் பின்தொடர்ந்து பகல் வருகிறதை ஏற்பதுபோல் இருந்தது. இருப்பினும், ஒரு நாள் அவளுக்கு இது தெரிய வந்தது—அவள் பைபிளை ஏன் நம்பினாள் என்பதற்கான காரணம் அவளுக்குத் தெரியாது என்பது. அவள் சொன்னாள்: “என் தாயும் தகப்பனும் அதை நம்பினதால் இதுவரை நானும் அதை நம்பினேன் என்று நினைக்கிறேன்.”

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:6) இருப்பினும், உன்னுடைய தாயும் தகப்பனும் விசுவாசம் கொண்டிருப்பதால், அது உன்னுடைய உங்களுடைய உடைமையாக ஆகிவிடுவதில்லை. உன்னுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கவேண்டுமென்றால் பலமான அத்தாட்சியின் அடிப்படையில் நீ விசுவாசத்தைக் கட்ட வேண்டும்—அது, “நம்பப்படுகிறவைகளின் உறுதி”யாக இருக்கிறது. (எபிரெயர் 11:1) பைபிள் சொல்வதுபோல, நீங்கள் “எல்லாக் காரியங்களையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.” (NW), அல்லது ஆங்கிலத்தில் தி லிவ்விங் பைபிளிலுள்ள விரிவுரையில் சொல்லுகிறபடி, “சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அது சத்தியமென நிச்சயப்படுத்திக்கொள்ள சோதித்துப் பாருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21.

பைபிள் உண்மையானது என்பதை உனக்கு நீயே நிரூபித்தல்

பைபிள் உண்மையிலேயே “தேவாவியால் ஏவப்பட்டு” எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நீ முதலாவது சோதித்தறிய வேண்டும். (2 தீமோத்தேயு 3:16) நீ இதை எப்படிச் செய்யலாம்? சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவரே ‘அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு’ தவறாமல் அறிவிக்க முடியும். (ஏசாயா 43:9; 46:10) அவர் இவ்வாறு பைபிளில் திரும்பத் திரும்ப அறிவிக்கிறார். லூக்கா 19:41-44, 21:20, 21-ல் பதிவு செய்யப்பட்ட எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசனங்களை வாசித்துப்பார். அல்லது ஏசாயா 44:27, 28, 45:1-4-ல் பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்த தீர்க்கதரிசனங்களை வாசி. இந்தச் சம்பவங்களை பைபிள் எவ்வளவு பிழையின்றி முன்னறிவித்தது என்பதை உலக சரித்திரம் நிரூபிக்கிறது. “அதன் தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை ஆராய்ந்து பார்த்த பின்பு, அதில் சொல்லியிருக்கும் இந்த எல்லாவற்றையும் அது எவ்வாறு முன்னறிவிக்க முடிந்ததென்பதைக் கண்டு நான் முற்றிலும் திகைத்துப் போனேன்,” என்று 14-வயது ஜெனைன் சொல்கிறாள்.

பைபிளின் சரித்திரப் பூர்வமான துல்லியம், நேர்மைத் தன்மை ஒளிவுமறைவின்மை மற்றும் முரண்பாடின்மை போன்றவை, பைபிளில் விசுவாசம் வைப்பதற்கான மேலுமான காரணங்கள். a ஆனால் யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் புரிந்துகொண்டிருக்கும் முறை சரியானது என்பதை எப்படி அறிய முடியும்? பூர்வ பெரோயா பட்டணத்து மக்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் பைபிள் விளக்கங்களைக் கேள்வியேதுமின்றி ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள், ‘காரியங்கள் இப்படி இருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தனர்’.—அப்போஸ்தலர் 17:11.

அதேபோன்று நீயும் பைபிள் போதகங்களை ஆழ்ந்த ஆய்வு செய்யுமாறு உன்னை நாங்கள் துரிதப்படுத்துகிறோம். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் மற்றும் ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் போன்ற பிரசுரங்கள் (உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்தது) இந்தப் போதகங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. உன்னுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பின் உனக்கு இருக்கும் ஏதாவது கேள்விகளைக் குறித்து உதவி செய்ய அவர்களால் முடியும் என்பதில் சந்தேகமில்லை. “இதன் சம்பந்தமாக உனக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் உன் பெற்றோரிடம் நேர்மையாய்க் கலந்து பேசு” என்று ஜெனல் என்ற ஓர் இளம் பெண் ஆலோசனை கூறுகிறாள். “ஏதோவொன்றை நம்புவது கடினமாயிருப்பதாகக் கண்டால் கேள்விகளைக் கேள்.” (நீதிமொழிகள் 15:22) உண்மையாகவே பைபிள் சத்தியங்களின் பேரில் மகத்தான புரிந்துகொள்ளுதலை யெகோவா தமது சாட்சிகளுக்கு அளித்து ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நீ காலப்போக்கில் சந்தேகமின்றி போற்றுவாய்!

பிரெண்டிஸ் என்ற இளைஞர் சொல்கிறார்: “இந்த உலகம் இருக்கிற நிலைமையைக் கண்டு நான் சிலவேளைகளில் மனச்சோர்வடைவதுண்டு. வெளிப்படுத்துதல் 21:4 போன்ற வேத வசனங்களை எடுத்துப் பார்க்கையில் நம்பிக்கை அருளக்கூடிய சில காரியங்களை அது எனக்குக் கொடுக்கிறது.” ஆம், கடவுளுடைய வாக்குறுதிகளில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பது உங்களுடைய எதிர்நோக்கை நிச்சயமாக பாதிக்கும். எதிர்காலத்தை நம்பிக்கையின்மையோடு அல்ல, மாறாக, சந்தோஷத்தோடு எதிர்பார்ப்பீர்கள். உங்களுடைய தற்போதைய வாழ்க்கை, நோக்கமற்ற போராட்டமாக அல்ல, மாறாக, ‘நித்திய ஜீவனைப் (உண்மையான ஜீவனை, NW) பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்க’ உதவும் ஒரு வாய்ப்பாக மாறும்.—1 தீமோத்தேயு 6:19.

ஆனால், இந்த ‘உண்மையான ஜீவனை’ப் பெறுவதற்கு பைபிள் போதகங்களைக் கற்பதை மற்றும் நம்புவதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறதா?

[அடிக்குறிப்புகள்]

a பைபிளின் உண்மைத்தன்மைப் பற்றிய மேலும் விரிவான தகவலுக்கு வேதவாக்கியங்களைக் கொண்டு நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் பிரசுரத்தில் பக்கங்கள் 56-68-ஐப் பார்க்கவும். (உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்தது.)

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻அநேக இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்து என்ன பயத்தைக் கொண்டிருக்கின்றனர்?

◻பூமிக்கான கடவுளுடைய ஆதிநோக்கம் என்ன? கடவுளுடைய நோக்கம் மாறவில்லை என்பதில் நாம் ஏன் திடநம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம்?

◻பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் ராஜ்யம் என்ன பாகம் வகிக்கிறது?

◻பைபிள் போதகங்களின் உண்மைத் தன்மையை நீ சோதித்துப் பார்ப்பது ஏன் அவசியம்? அதை எவ்வாறு நீங்கள் செய்யக்கூடும்?

◻பைபிள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை உனக்கு நீயே எப்படி நிரூபித்துக்காட்டுவாய்?

[பக்கம் 306-ன் சிறு குறிப்பு]

“நான் அதிக நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறேன். உண்மையில் நாம் நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்போவதில்லை.”—உளநூல் நிபுணர் பி. எஃப். ஸ்கின்னர்

[பக்கம் 307-ன் படம்]

மனிதன் நம்முடைய கிரகத்தை அழிக்க பூமியின் சிருஷ்டிகர் அனுமதிக்க மாட்டார்

[பக்கம் 309-ன் படம்]

பைபிளின் உண்மைத் தன்மையைக் குறித்து நீ உன் மனதைத் திருப்திப்படுத்திக் கொண்டாயா?