Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்?

நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்?

அதிகாரம் 39

நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்?

நெருங்கி வருவதா—கடவுளிடமா? அநேகருக்குக் கடவுள் என்பது தூரத்தே ஒதுங்கி நிற்கும் உருவமாக, ஆள்தன்மையற்ற ‘முதல் காரணி’யாக இருக்கிறது. ஆகவே, அவருடன் நெருங்கி இருப்பது என்பது உனக்குக் கலக்கமூட்டுவதாயும், பயமூட்டுவதாயும்கூட இருக்கக்கூடும்.

உன் அனுபவம் லிண்டா என்ற இளம் பெண்ணினுடையது போன்றிருக்கலாம். லிண்டா கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டவள். அவள் நினைவுகூருகிறாள்: “அந்த ஆண்டுகள் (13-19 வயது) அனைத்திலும் நான் கிறிஸ்தவ கூட்டத்திற்குப் போகாத நாட்கள் இருக்குமானால் அது வெகு அபூர்வமே. மேலும் ஊழியத்தில் நான் ஒரு மாதம்கூட போகாமல் இருந்தது கிடையாது. என்றபோதிலும் நான் யெகோவா தேவனுடன் ஒரு தனிப்பட்ட உறவை உண்மையில் வளர்க்கவே இல்லை.”

உன் எதிர்காலமோ கடவுளிடம் நெருங்கி வருவதைச் சார்ந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மை . . . அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) இந்த “அறிவு,” கற்றுக்கொள்ளும் மற்றும் உண்மைகளை மனப்பாடமாய் சொல்லும் திறமையைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது—ஏனென்றால் அந்தத் திறமையை ஒரு நாத்திகனும்கூட பெற்றிருக்கலாம். இது கடவுளுடன் ஓர் உறவை வளர்ப்பதை, அவருடைய சிநேகிதனாக மாறுவதை உட்படுத்துகிறது. (யாக்கோபு 2:23-ஐ ஒப்பிடவும்.) அணுகமுடியாதவராக அவர் இல்லை. மாறாக, கடவுள் “கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மை தேடும்படிக்கு” நம்மை அழைக்கிறார், ஏனென்றால், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:27.

நீ கடவுளை எப்படி அறியவரலாம்

நீ எப்பொழுதாவது தூரத்து நட்சத்திரங்களை உற்றுப் பார்த்திருக்கிறாயா, கடலின் ஆர்ப்பரிப்பை ஆச்சரியத்தோடு கேட்டிருக்கிறாயா, அழகான வண்ணத்திப் பூச்சியால் வசீகரிக்கப்பட்டிருக்கிறாயா அல்லது சின்னஞ்சிறு இலையின் மென்மையான அழகில் வியப்படைந்திருக்கிறாயா? கடவுளின் இந்தப்படைப்புகள் எல்லாம் அவருடைய அளவிலா வல்லமை, ஞானம் மற்றும் அன்பின் வெறும் ஒரு சிறு தோற்றமே. “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள் உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே . . . தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:19, 20.

இருப்பினும், கடவுளைப்பற்றி சிருஷ்டிப்பு மட்டுமே வெளிக்காட்டுவதைப் பார்க்கிலும் அதிகத்தை நீ அறிவது அவசியம். எனவேதான், கடவுள் தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையை அளித்திருக்கிறார். அந்தப் புத்தகம் கடவுளை ஒரு பெயரற்ற பொருளாக அல்லது ஆள்தன்மையில்லா சக்தியாக அல்ல, மாறாக, ஒரு பெயருடைய உண்மையான ஆளாக வெளிக்காட்டுகிறது. “யெகோவாவே, தேவன் என்று அறியுங்கள்” என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறான். (சங்கீதம் 100:3, NW) அந்தப் பெயரைத் தாங்கிய நபரையும் பைபிள் வெளிப்படுத்துகிறது: அவர் “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6) மனித இனத்தோடு கடவுள் கொண்ட செயல் தொடர்புகளின் இந்த விவரமான பதிவு உண்மையில் கடவுள் செயல்படும் விதத்தை நாம் பார்க்க அனுமதிக்கிறது! ஆகவே, பைபிளை வாசிப்பது கடவுளிடம் நெருங்கிவருவதில் இன்றியமையாத பாகமாக இருக்கிறது.

பைபிள் வாசிப்பை இன்பமூட்டுவதாக்குதல்

பைபிள், வாசிப்பதற்கு ஒரு நீண்ட புத்தகம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. அதனுடைய வெறும் பருமனே அதை வாசிப்பதிலிருந்து இளைஞரை பயமூட்டி விரட்டுவதாயிருக்கிறது. சிலர் பைபிள் சலிப்பூட்டுவதாக இருக்கிறது என்று புகார் செய்கின்றனர். இருப்பினும், பைபிள் மனிதனுக்கான கடவுளுடைய திருவெளிப்பாடு, அது நாம் எப்படி இங்கு வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்கிறது. பரதீஸிய பூமியிலே என்றுமாக வாழ நாம் குறிப்பாக எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அது சலிப்பூட்டுவதாக எப்படி இருக்கக்கூடும்? பைபிள், வாசிப்பதற்கு இலகுவானது அல்ல, அதில் “சில காரியங்கள் அறிகிறதற்கு கடினமாயிருக்கிறது” என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. (2 பேதுரு 3:16, NW) ஆனால் பைபிள் வாசிப்பது வேண்டா வெறுப்பான வேலையாக இருக்க வேண்டியதில்லை.

மர்வின் என்ற இளைஞன் பைபிள் வாசிப்பு அதிக சுவாரஸ்யமாக இருக்க ஒரு நடைமுறையான வழியை அளிக்கிறான். அவன் சொல்கிறான்: “நான் பின்னணி அமைப்பைக் கற்பனை செய்து அந்தச் சூழ்நிலையில் என்னை வைத்துப் பார்க்க முயற்சி செய்கிறேன்.” உதாரணமாக, தானியேல் 6-வது அதிகாரத்திலுள்ள விவரத்தை எடுத்துக்கொள்ளலாம். வெறுமென வாசிப்பதற்குப் பதிலாக, நீயே தானியேலாக இருப்பதுபோன்று கற்பனை செய்ய முயற்சி செய். நீ உன் தேவனுக்கு ஜெபத்தை ஏறெடுத்ததற்காக தகாத வகையில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறாய். அதற்குத் தண்டனை? மரணம்! பெர்சிய இராணுவவீரர் உன்னை பிரேதக் கல்லறைக்கு—சிங்கங்கள் நிறைந்த கெபிக்கு, முரட்டுத்தனமாக இழுத்துச் செல்கின்றனர்.

மெல்லிய ‘கடகட’ என்ற ஒலியோடு கெபியை மூடியிருக்கும் பெரிய கல் பின்னால் உருட்டப்படுகிறது. கீழே இருக்கும் சிங்கங்கள் மயிர்க்கூச்செரியும் கர்ச்சனை எழுப்புகின்றன. திகிலடைந்து பின்வாங்கும் உன்னை, ராஜாவின் இராணுவ வீரர் மேற்கொண்டு உன்னை மரணக் கெபியில் தூக்கி எறிந்து துவாரத்தின் மீது மறுபடியும் கல்லை உருட்டி வைக்கின்றனர். உன்னைச் சூழ்ந்திருக்கும் இருளிலே, ரோமம் நிறைந்த உருவங்கள் உன் மீது உராய்கின்றன. . . .

சலிப்பூட்டுகிறதா? நிச்சயமாக இல்லை! ஆனால் நினைவில் வை. நீ பொழுதுபோக்குக்காக வாசிப்பதில்லை. அந்த விவரம் யெகோவாவைப் பற்றி என்ன போதிக்கிறது என்பதை பகுத்துணர முயற்சி செய். உதாரணமாக, தானியேலின் அனுபவங்கள், யெகோவா தன்னுடைய ஊழியக்காரர் கடினமான சோதனைகளை எதிர்ப்பட அனுமதிக்கிறார் என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதில்லையா?

ஓர் ஒழுங்கான வாசிப்பு அட்டவணையைக் கொண்டிருக்க முயற்சி செய். ஏன், பைபிளை வாசிக்க நீ ஒரு நாளைக்கு வெறுமென 15 நிமிடம் செலவழித்தால், சுமார் ஓர் ஆண்டில் அதை முடித்துவிடலாம்! குறைந்த முக்கியத்துவம் உடைய அலுவல்களிலிருந்து—தொலைக்காட்சி பார்ப்பது போன்றதிலிருந்து—‘காலத்தை வாங்கு.’ (எபேசியர் 5:16, NW) பைபிள் வாசிப்புக்கு உன்னை நீ ஈடுபடுத்தும்போது நீ ஒருபோதும் இல்லாத வகையில் கடவுளுடன் நெருங்கி இருப்பதை உணருவது நிச்சயம்.—நீதிமொழிகள் 2:1, 5.

ஜெபம் அவரிடம் நெருக்கமாக உன்னை இழுக்கும்

லாவெர்ன் Laverneஎன்ற பருவவயது பெண் ஒருத்தி இவ்வாறு குறிப்பிட்டாள்: “நீ ஒருவரிடம் பேசவில்லையென்றால் நீ அவருடன் உண்மையில் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியாது.” “ஜெபத்தைக் கேட்கிறவராக” யெகோவா அவரிடம் பேச நம்மை அழைக்கிறார். (சங்கீதம் 65:2) நாம் அவரிடமாக விசுவாசத்துடன் ஜெபிக்கையில், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் செவிகொடுக்கிறார்.”—1 யோவான் 5:14.

லிண்டா (முன்பு குறிப்பிடப்பட்டவள்) சொந்த அனுபவத்தின் மூலம் இதைக் கற்றறிந்தாள். அவளுடைய வாழ்க்கையில் ஒரு சமயம், பிரச்னைகளும், கடும் அழுத்தங்களும் குவிய ஆரம்பித்தபோது ‘தன்னுடைய பிரச்னைகளின் விடைக்காக பலநாட்களாக விடாப்பிடியாக ஜெபித்ததாக’ அவள் நினைவுகூருகிறாள். முன்பு அவளுக்குத் தூரமாக இருப்பதாகத் தோன்றிய கடவுள், அவள் தன்னுடைய துன்பங்களைக் கையாளுவதற்கான பெலத்தைப் பெற்றபோது, அவளுக்கு அருகாமையில் இருப்பதாகக் கண்டாள். கேய் என்ற பெயருடைய இன்னொரு இளம் பெண் ஜெபத்தின் மதிப்பை இதுபோன்றே கற்றறிந்தாள்: “சில சமயங்களில் உன்னுடைய உள்ளான உணர்வுகளை யாரோ ஒருவருக்கு தெரிவிக்க வேண்டுமென நீ உணருவாய். அவைகளைத் தெரிவிப்பதற்கு யெகோவாவைக் காட்டிலும் மேம்பட்டவர் ஒருவருமில்லை. ஏனென்றால் யெகோவா புரிந்துகொள்கிறார். மேலும் உனக்கு உதவக்கூடியவர் அவர் ஒருவரே என்பதை நீ அறிவாய்.”

ஆனால் ஜெபம் வெறுமென உணர்ச்சிப் பிரகாரமான பளுவை மட்டுமே நீக்குவதாயிருக்கிறதா? இல்லை, பலவிதமான சோதனைகளைச் சந்திக்கும்போது நாம் தொடர்ந்து கடவுளிடம் கேட்கவேண்டும். ஏனென்றால் அவர் “யாவருக்கும் சம்பூர்ணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன் . . . அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும்,” என்று யாக்கோபு 1:2-5 நமக்கு உறுதியளிக்கிறது. கடவுள் சோதனையை அனுபவிக்காமல் தப்பிக்கொள்ளும்படி செய்யமாட்டார், ஆனால் அந்தச் சோதனையைக் கையாளுவதற்குத் தேவையான ஞானத்தை அளிக்க உறுதியளிக்கிறார்! அந்தக் காரியத்தைச் சார்ந்திருக்கும் பைபிள் நியமங்களை அவர் உன் மனதுக்குக் கொண்டுவரலாம். (யோவான் 14:26-ஐ ஒப்பிடவும்.) உன்னுடைய தனிப்பட்ட பைபிள் படிப்பு அல்லது கிறிஸ்தவக் கூட்டங்கள் மூலமாக சில காரியங்கள் உன் கவனத்திற்குக் கொண்டுவரும்படி அவர் பார்த்துக்கொள்வார். மேலும், மறந்துவிடவேண்டாம்: “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல் . . . அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்.” ஆம், அவர் உன்னை “இடர்ப்பாடான நிலையில் கைவிட” மாட்டார். (1 கொரிந்தியர் 10:13; 2 கொரிந்தியர் 4:9, NW) ஒரு சோதனையைக் கையாளுவதில் கடவுளுடைய உதவியை அனுபவித்திருப்பதன் காரணமாக நீ அவருடன் நெருங்கி வந்திருப்பதை உணரமாட்டாயா?

ஆனால் சொந்தப் பிரச்னைகளைக் குறித்து மட்டுமே ஜெபிக்க வேண்டாம். இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுவதற்கும், அவருடைய ராஜ்ய வருகைக்கும் மற்றும் கடவுளுடைய சித்தம் நிறைவேற்றம் அடைவதற்கும் பிரதான முக்கியத்துவத்தைக் கொடுத்தார். (மத்தேயு 6:9-13) “ஸ்தோத்திரத்தோடே கூடிய வேண்டுதலும்” ஜெபத்தின் இன்றியமையாத ஓர் அம்சமாக இருக்கிறது.—பிலிப்பியர் 4:6, NW.

ஒருவேளை ஜெபம் செய்வது சங்கடமான ஒன்றாக தோன்றும்போது என்ன? அதைக் குறித்து ஜெபம் செய்! இருதயத்தை அவருக்கு முன்பாக திறந்துவைக்க உதவும்படி கடவுளிடம் கேள். “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திரு,” அப்போது காலப்போக்கில் நீ ஒரு நெருங்கிய நண்பனோடு பேசுவதைப்போல யெகோவாவிடம் தாராளமாக பேசமுடியுமென நீ காண்பாய். (ரோமர் 12:12) “எனக்கு ஒரு பிரச்னை இருக்கும்போதெல்லாம் வழிநடத்துதலுக்காக நான் யெகோவாவிடம் திரும்பமுடியும் என்றும் அவர் எனக்கு உதவி செய்வார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்,” என்று மரியா என்ற இளம்பெண் சொல்கிறாள்.

கடவுளுடன் பேசுவதற்கு புதுமையான அல்லது பகட்டான மொழி அவசியமில்லை. சங்கீதக்காரன் சொல்கிறான்: “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.” (சங்கீதம் 62:8) உன்னுடைய உணர்வுகளையும், அக்கறைகளையும் அவர் அறிந்துகொள்ளட்டும். உன் பலவீனங்களைக் கையாள உதவிக்கு அவரைக் கேள். உன்னுடைய குடும்பத்தின் மீதும், உடன் கிறிஸ்தவர்கள் மீதும் அவருடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபி. நீ தவறு செய்கையில் மன்னிப்புக்காக அவரிடம் மன்றாடு. உயிரை அவர் பரிசாக தந்திருப்பதற்காக தினமும் அவருக்கு நன்றி சொல். ஜெபம் உன் வாழ்க்கையில் ஒழுங்கான பாகத்தை வகிக்கும்போது, அது உன்னை யெகோவா தேவனோடு ஒரு நெருங்கிய, சந்தோஷமான உறவுக்குள் கொண்டுவரக்கூடும்.

கடவுளுடன் உள்ள உன் நட்பை வெளியரங்கமாக அறிவித்தல்

கடவுளோடு ஒரு நட்புறவை அனுபவிக்க ஆரம்பித்தப்பின் மற்றவர்களும் அந்த அருமையான உறவை அடைவதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய நீ ஆவலாக இருக்க வேண்டாமா? உண்மையில், “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணுவது” கடவுளுடைய சிநேகிதர்களாக இருக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு தேவையாக இருக்கிறது.—ரோமர் 10:10.

அநேகர் தங்கள் விசுவாசத்தைப் பள்ளித் தோழர்கள், அயலகத்தார் மற்றும் உறவினரோடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்துகொள்கின்றனர். பிற்பாடு, “வீட்டுக்கு வீடு” செய்யும் பிரசங்க வேலையில் யெகோவாவின் சாட்சிகளோடு அவர்கள் சேர்ந்துகொள்கின்றனர். (அப்போஸ்தலர் 5:42, NW) இருப்பினும், சில இளைஞர்களுக்கு இந்தப் பகிரங்கமான வேலை ஓர் இடறலாக இருக்கிறது. “வீட்டுக்கு வீடு போவது அநேக இளைஞர்களுக்கு ஒரு சங்கடமான காரியம் என்று நான் நினைக்கிறேன்” என்று சொல்கிறான் ஓர் இளம் கிறிஸ்தவன். “அவர்களுடைய நண்பர்கள் தங்களை எப்படி நோக்குவார்கள் என்பதைக் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள்.”

ஆனால் யாருடைய அங்கீகாரத்தை நீ உண்மையில் மதிப்புள்ளதாகக் கருதுகிறாய்—உன் சகாக்களுடையதையா அல்லது உன் பரலோக சிநேகிதராகிய யெகோவாவுடையதையா? பயம் அல்லது சங்கடம் இரட்சிப்பை அடைவதிலிருந்து உன்னைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க வேண்டுமா? அப்போஸ்தலனாகிய பவுல், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்று துரிதப்படுத்துகிறான். (எபிரெயர் 10:23) போதுமான பயிற்சியும் தயாரிப்பும் இருக்கும்போது நீ பிரசங்க வேலையில் உண்மையான மகிழ்ச்சியைப் பெறக்கூடும் என்பதை நீ காண்பாய்!—1 பேதுரு 3:15.

காலப்போக்கில் உன் பரலோக சிநேகிதருக்கான உன்னுடைய போற்றுதல் எவ்வித நிபந்தனையுமின்றி கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதலினால் அதை அடையாளப்படுத்த உன்னை உந்துவிக்க வேண்டும். (ரோமர் 12:1; மத்தேயு 28:19, 20) கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட சீஷனாக மாறுவதற்கு வெளியரங்கமாக அறிக்கையிடுவதை இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது “தன் சொந்தம் கைவிடுவதை”—தனிப்பட்ட பேராவல்களை அகற்றிவிட்டு, யெகோவா தேவனின் அக்கறைகளை முதன்மையாக நாடுவதை உட்படுத்துகிறது. (மாற்கு 8:34) மேலுமாக யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய அமைப்பில் ஒருவராக உன்னை அடையாளப்படுத்திக்கொள்வதை இது உட்படுத்துகிறது.

“அநேக இளைஞர்கள் முழுக்காட்டப்படுவதற்குத் தயங்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டான் ராபர்ட் என்ற ஓர் இளைஞன். “இது பின்வாங்க முடியாத கடைசி படியென எண்ணி அதைக்குறித்து பயப்படுகிறார்கள்.” ஒருவன் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு அதனின்று பின்வாங்கமுடியாது என்பது உண்மைதான். (பிரசங்கி 5:4-ஐ ஒப்பிடவும்.) ஆனால் முழுக்காட்டப்பட்டிருந்தாலும், முழுக்காட்டப்படாதிருந்தாலும், “ஒருவன் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்!” (யாக்கோபு 4:17) கேள்வி என்னவென்றால் நீ கடவுளுடைய நட்புறவைப் போற்றுகிறாயா? அவரை என்றுமாக சேவிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் நீ தூண்டப்பட்டிருக்கிறாயா? அப்படியிருப்பின், கடவுளுடைய சிநேகிதனாக உன்னை அறிவிக்க பயம் உனக்குத் தடையாக இருக்க அனுமதியாதே!

கடவுளுடைய சிநேகிதர்களுக்கு நித்திய நன்மைகள்!

கடவுளுடைய சிநேகத்தை தெரிந்துகொள்வது உலகம் உன்னைப் பகைக்கும் நிலையில் வைக்கும். (யோவான் 15:19) நீ பரிகாசத்திற்கு இலக்காகக்கூடும். இடையூறுகள், பிரச்னைகள், மற்றும் சோதனைகள் உன்னைத் தாக்கலாம். ஆனால் எவரும் அல்லது ஏதொன்றும் கடவுளிடமாக உள்ள உன் உறவைக் கொள்ளையிட அனுமதிக்காதே. அவர் என்றும் தவறாத ஆதரவை கொடுப்பதாக வாக்களிக்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”—எபிரெயர் 13:5.

யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் உன்னுடைய நித்திய நலனில் உள்ள அக்கறைக்கு ஓர் அத்தாட்சியே இப்புத்தகம். இந்தப் பக்கங்களிலே உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பிரச்னைகளுக்கும் கவனம் செலுத்த முடியாதிருந்தபோதிலும், பைபிளானது ஞானத்தின் என்னே ஒரு வற்றாத ஊற்றுமூலம் என்பதை நீ முன்னொருபோதையும்விட அதிகமாக போற்றுவாய் என்பது நிச்சயம்! (2 தீமோத்தேயு 3:16, 17) பிரச்னைகள் உனக்கு மனக்குழப்பத்தைக் கொண்டுவரும்போது அந்தப் பரிசுத்த புத்தகத்தில் பதிலுக்காகத் தேடு. (நீதிமொழிகள் 2:4, 5) உனக்குத் தெய்வபயமுள்ள பெற்றோர் இருந்தால், நீ ஆவிக்குரிய ஞானம் மற்றும் ஆதரவுக்கு இன்னொரு ஊற்றுமூலத்தைக் கொண்டிருக்கிறாய்—நீ உன் இருதயத்தை அவர்களுக்குத் திறந்து வைத்தால்.

எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவன் சகலத்துக்கும் தீர்வுகளைக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வை. அவர், “துன்பகாலங்களில் உடனடியாகக் கிடைக்கும் உதவியாக இருக்கிறார்,” எந்தத் துன்பத்திலும் உன்னை வழிநடத்தக்கூடியவர். (சங்கீதம் 46:2, NW) ஆகவே, ‘இப்பொழுதே, உன் வாலிபப் பிராயத்திலே உன் [மாட்சிமையுள்ள, NW] சிருஷ்டிகரை நினை.’ (பிரசங்கி 12:1) யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கும் வழி இதுவே. (நீதிமொழிகள் 27:11) மேலும் ஒருபோதும் மறைந்துபோகாத பரதீஸில் நித்திய வாழ்வை—கடவுள் தன்னுடைய சிநேகிதர்களுக்காக வைத்திருக்கும் வெகுமதியைப் பெறக்கூடிய வழியும் இதுவே.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ கடவுளுடன் ஒரு நெருங்கிய உறவை நீ கொண்டிருப்பது ஏன் முக்கியமானது?

◻ கடவுளைப்பற்றி பைபிள் என்ன வெளிப்படுத்துகிறது?

◻ பைபிள் வாசிப்பை நீ இன்பமூட்டுவதாயும் பலன் தருவதாயும் எவ்வாறு ஆக்கக்கூடும்?

◻ உன் விசுவாசத்தை “வெளியரங்கமாக அறிக்கை” செய்வது எதை உட்படுத்துகிறது? அப்படிச் செய்ய நீ உந்துவிக்கப்பட்டிருக்கிறாயா? ஏன்?

◻ கடவுளிடம் நெருங்கிவருவதில் கூட்டங்கள் என்ன பாகம் வகிக்கின்றன? அவற்றிலிருந்து அதிகத்தை நீ எப்படிப் பெறலாம்?

◻ கடவுளுடைய சிநேகிதனாக இருப்பதில் என்ன நன்மைகள் இருக்கின்றன?

[பக்கம் 311-ன் சிறு குறிப்பு]

கடவுளோடு நெருங்கி இருப்பது உண்மையில் எனக்குக் கூடிய காரியமா?

[பக்கம் 312-ன் சிறு குறிப்பு]

பைபிள் மனிதனுக்கான கடவுளுடைய திருவெளிப்பாடு. அது நாம் எப்படி இங்கு வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்குச் சொல்கிறது

[பக்கம் 316, 317-ன் பெட்டி/படம்]

கூட்டங்கள்—கடவுளிடம் நெருங்கிவர ஓர் உதவி

“யெகோவாவை நேசிப்பவர்களோடு நெருங்கிய கூட்டுறவு கொள்ளுதல் நான் அவரோடு நெருங்கியிருக்க உதவுகிறது என்பதைக் கண்டிருக்கிறேன்.”—ஓர் இளம் நைஜீரிய வாலிபன் இவ்வாறு சொன்னான். இத்தகைய கூட்டுறவிற்கான காலப்பகுதிகளை யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் ஏற்பாடு செய்கின்றனர். (எபிரெயர் 10:23-25) “ராஜ்ய மன்றத்தில் உண்மையான நண்பர்களை நான் கண்டேன்” என 16 வயது அனிதா சொன்னாள்.

இருப்பினும், இக்கூட்டங்கள் வெறுமென சமூக நிகழ்ச்சிகள் அல்ல. வாரத்திற்கு ஐந்து கூட்டங்கள் அடங்கிய பைபிள் கல்விக்கான பாடமுறையை ராஜ்ய மன்றங்கள் அளிக்கின்றன. பலதரப்பட்ட தலைப்புகள் சிந்திக்கப்படுகின்றன: குடும்ப வாழ்க்கை, பைபிள் தீர்க்கதரிசனம், நடத்தை, கோட்பாடுகள், கிறிஸ்தவ ஊழியம் போன்றவை அவற்றில் சில. மிகப் பெரிய அளவில் அமைந்த மேடை தயாரிப்புகளாக இல்லாவிடினும், இக்கூட்டங்கள் உற்சாகமான விதத்தில் நடத்தப்படுகின்றன, பேட்டிகளும், உற்காகமூட்டும் நடிப்புகளும் இடையிடையே அமைந்த பேச்சுகளும் கலந்துரையாடல்களும் அளிக்கப்படுகின்றன. தேவராஜ்ய ஊழியப்பள்ளி விசேஷ தனிச்சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அது ஆயிரக்கணக்கானோரை திறம்பட்ட மேடை பேச்சாளர்களாக பழக்கியிருக்கிறது.

நீ ஏற்கெனவே கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தாயானால் எப்படி? அவற்றிலிருந்து மிக அதிகத்தைப் பெற முயற்சி செய். (1) தயாரி: “கூட்டங்களில் நாங்கள் உபயோகிக்கும் புத்தகங்களை படிக்க குறிப்பிட்ட நேரத்தை நான் ஒதுக்கி வைத்திருக்கிறேன்,” என்று அனிதா சொல்கிறாள். இப்படி செய்வது நீ எளிதில் (2) பங்குகொள்வதற்கு உதவும்: இளைஞனாயிருக்கையில் இயேசு ஆலயத்தில் ஆவிக்குரிய விஷயங்கள் கலந்து பேசப்படும்போது கவனமாய் செவி கொடுத்தார், கேள்விகள் கேட்டார் மற்றும் பதில்கள் சொன்னார். (லூக்கா 2:46, 47) நீயும்கூட குறிப்புகள் எழுதுவதன் மூலம் மனதை ஊன்ற வைத்து, “கேட்கப்படும் காரியங்களுக்கு கூடுதலான கவனம் செலுத்த” முடியும். (எபிரெயர் 2:1) சபையார் பங்குகொள்ளும்படி அழைக்கப்பட்டால், குறிப்புகள் சொல்வதில் கலந்துகொள்.

உதவக்கூடிய மற்றொரு ஆலோசனை (3) நீ கற்றுக்கொள்வதை உபயோகி: நீ கற்றுக்கொள்ளும் குறிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள். மேலும் முக்கியமாக, நீ கற்றுக்கொள்பவற்றை உன்னுடைய வாழ்க்கைக்குப் பொருத்து, தேவையான மாற்றங்கள் செய். சத்தியம் உனக்குள்ளே “கிரியை செய்கிறது” என காண்பி.—1 தெசலோனிக்கேயர் 2:13.

கூட்டங்களுக்கு முதன்மையான இடம் கொடு. உனக்கு அசாதாரணமாக அளவுக்கு அதிக வீட்டுப்பாடம் இருந்தால், அதைக் கூட்டத்திற்கு முன்பாக முடிக்க முயற்சிசெய். “கூட்டங்களுக்குப் பின் எல்லாரோடும் பேச, கடைசி வரை இருக்க எனக்கு அதிகப் பிரியம்” என்று சிமியோன் என்ற வாலிபன் கூறுகிறான். “ஆனால், எனக்குப் பள்ளிப் பாடம் இருந்தால் அதை செய்து முடிப்பதற்கு கூட்டம் முடிந்தவுடம் சென்று விடுவேன்.” எனினும், உன் விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு கூட்டங்களுக்கு ஒழுங்காக வர உன்னால் ஆனதைச் செய். உன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவை அத்தியாவசியமானவை.

[பக்கம் 315-ன் படம்]

பைபிளை வாசிப்பது கடவுளிடம் நெருங்கி வருவதில் இன்றியமையாத பாகமாக இருக்கிறது

[பக்கம் 318-ன் படங்கள்]

“எனக்கு ஒரு பிரச்னை இருக்கும்போதெல்லாம் வழிநடத்துதலுக்காக நான் யெகோவாவிடம் திரும்ப முடியும் என்றும், அவர் எனக்கு உதவி செய்வார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்”