Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?

தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?

அதிகாரம் 10

தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?

உன் தோற்றத்தை நீ விரும்புகிறதில்லையென நீ சொல்கிறாயா? தங்கள் தோற்றத்தில் முற்றிலும் திருப்தியடைந்திருப்பவர்கள்—எவராவது இருந்தால்—அவர்கள் ஒரு சிலரே. நீர்தேக்கத்தின் மேல் தான் கண்ட தன் சொந்த உருவத்தின் மீது காதல் கொண்ட நார்ஸிஸைப் போலிராமல், நம்மில் சிலர் நம்முடைய உருவத்தைக் காண்கையில் பெரும்பாலும் சோர்வுக்குட்படுகிறோம்.

‘என் உடலைப்பற்றி இந்த வெறுப்பு எனக்கு இருக்கிறது,’ என்று 16-வயது மரியா புலம்புகிறாள். ‘எனக்கு அவ்வளவு நல்ல தோற்றமில்லையென நான் நினைக்கிறேன்.’ பதிமூன்று வயது பாபும் இதைப்போன்றே வருந்துகிறான்: ‘என் தலைமுடி இங்கே பின்னால் விறைத்துக்கொண்டு நிற்கும் முறை எனக்குப் பிடிக்கிறதில்லை.’ காரியங்களை இன்னும் மோசமாக்க, பருவ வயதுக்குட்பட்டவர்களின் தோற்றம் அவ்வளவு விரைவாய் மாறக்கூடியதாகையால், உளநூல் வல்லுநர் ஒருவரின் பிரகாரம், இளைஞர் அடிக்கடி “தங்கள் சொந்த உடலுக்கே அந்நியரைப்போல் உணருகின்றனர்.” இவ்வாறு பலர் தங்கள் முகம், முடி, உருவம், உடலமைப்பு ஆதியவற்றைக் குறித்து மனக் கரிப்படைகின்றனர்.

நிச்சயமாகவே, கடவுள்தாமே அழகை மதிக்கிறார். “அவர் [தேவன்] யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகச் செய்திருக்கிறார்,” என்று பிரசங்கி 3:11-ல் (தி.மொ.) சொல்லியிருக்கிறது. உன் தோற்றம் நிச்சயமாகவே மற்றவர்கள் உன்னைக் கருதும் மற்றும் நடத்தும் முறையில் மிக ஆழ்ந்தப் பாதிப்பைக் கொண்டிருக்க முடியும். டாக்டர் ஜேம்ஸ் P. கோமர் மேலும் கூறுவதாவது: “உடல் சாயல் சுய-கற்பனை சாயலின் பாகமாகும். இது ஒருவரின் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையில் அவன் செய்வதையும் செய்யாததையும் பாதிக்கலாம்.” இவ்வாறாக, உன் தோற்றத்தைப்பற்றிய ஆரோக்கியமான அக்கறை அறிவுள்ள காரியமாயிருக்கிறது. எனினும், நீ மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி உன்னைப்பற்றிச் சங்கடமாய் உணருமளவுக்குத் தன்னுணர்வுள்ளவனாகையில், அப்பொழுது அத்தகைய அக்கறை இனிமேலும் ஆரோக்கியமுள்ளதாயில்லை.

நீ கவர்ச்சியற்றவனென சொல்பவர் யார்?

ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவெனில், தன் சொந்தத் தோற்றத்தின்பேரில் மனசங்கடப்படுவதற்கு எப்பொழுதும் உண்மையான உடல் ஊனங்கள் காரணமாக இருப்பதில்லை. ஒல்லியான ஒரு பெண் வகுப்பில் உட்கார்ந்து கொண்டு தான் கொஞ்சம் பருமனுள்ளவளாயிருந்தால் நலமாயிருக்கும் என ஆசைப்படுகிறாள், அதேசமயத்தில் அடுத்தப் பக்கத்திலுள்ள பருமனான பெண் தான் எவ்வளவு “தடித்து” இருக்கிறாள் என வருந்துகிறாள். இத்தகைய திருப்தியில்லாமை எங்கிருந்து வருகிறது? நல்ல உருத்தோற்றம் அமைந்த இளைஞர்கள் தாங்கள் கவர்ச்சிகரமாயில்லையென்று எண்ணச் செய்வது எது?

உள மருத்துவ பேராசிரியர் ரிச்சர்ட் M. சார்ல்ஸ் சொல்வதாவது: “வளரிளம்பருவம் மாறுதலுக்குரிய காலம். அதில் உடலின் பெரும் மறு-ஒழுங்கமைப்பு நடந்தேறுகிறது. . . . புதிய மற்றும் மாறும் உடலின் தடுமாற்றத் தன்மையைக் கையாள, வளரிளம்பருவத்தினர் பெரும்பான்மையர் தங்கள் சகாக்களின் பாதுகாப்பின்பேரில் சார்ந்திருக்கின்றனர்.” ஆனால் உன் சகாக்களின் கூர்ந்தாராயும் நோக்கின்கீழ், நீ எவ்வளவு உயரமாய், குட்டையாய், தடித்து, அல்லது ஒல்லியாய் இருக்கிறாய் என்பது—அவற்றோடுகூட உன் மூக்கு அல்லது காதுகளின் வடிவம்—பெரும் கவலைக்கேதுவான காரணமாக ஆகிவிடக்கூடும். ஆனால் மற்றவர்கள் உன்னைவிட அதிகக் கவனத்தை அடைகையில் அல்லது உன் தோற்றங்களைப் பற்றி உன்னைக் குறைகூறுகையில், நீ உன்னைப்பற்றி எளிதில் மனச் சங்கடமடைய தொடங்கக்கூடும்.

பின்னும், தொலைக்காட்சிகளின், புத்தகங்களின், மற்றும் திரைப்படங்களின் ஊடுருவும் தன்மையுள்ள பாதிப்பும் இதில் இருக்கிறது. கவர்ச்சிகரமான ஆண்களும் பெண்களும், தொலைக்காட்சி திரைகளிலும் பத்திரிகை பக்கங்களிலும், வாசனைப் பொருட்களிலிருந்து இரும்பு அறுக்கும் இரம்பங்கள் வரை எல்லாவற்றிற்குமான விளம்பரங்களிலும் தோன்றுகின்றனர். இவ்வாறு, நீ பழுதற்றத்-தோலுடைய அழகியாக அல்லது திண்ணிய தசைகளையுடைய “வசீகரமுள்ள ஆணாக” இராவிடில், நீ எங்கேயாவது ஒரு துளைக்குள் ஊர்ந்துசென்று பதுங்கிக்கொள்வது மேல்—அல்லது ஒருபோதும் பிரபலமாக அல்லது மகிழ்ச்சியாக இருப்பதைப்பற்றி மறந்துவிடவாவது வேண்டும் என்று செய்திபரப்பு சாதனங்கள் உன்னை நம்பும்படி செய்விக்கும்.

‘அவர்களுடைய அச்சுக்குள் புகுத்தப்’படாதே!

ஆனால் நீ அழகற்றவள் என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னால், எந்த அளவுக்கு உன் உடல் பழுதுகள் உண்மையானவையெனஅல்லது கற்பனைசெய்துகொள்ளப்பட்டவையென—உன்னை நீயே கேட்டுக்கொள். நீ மனச் சங்கடப்படுகிற (அல்லது கேலிசெய்யப்படுகிற) முகத்தோற்றம் உண்மையில் அவ்வளவு கவர்ச்சியற்றிருக்கிறதா? அல்லது அவ்வாறு இருக்கிறதென்று நீ எண்ணும்படி மற்றவர்கள் உன்னை வற்புறுத்தியிருக்கின்றனரா? பைபிள் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகம் அதன் சொந்த அச்சுக்குள் உங்களை புகுத்த விடாதேயுங்கள்.”—ரோமர் 12:2, ஃபிலிப்ஸ்.

எண்ணிப்பார்: நீ பலர் பாராட்டுபவனாக, வெற்றிகரமாக, அல்லது மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் குறிப்பிட்ட ஒரு தோற்றம் உனக்குத் தேவை என்ற எண்ணத்தைப் பரப்புவோர் யார்? நீ உடற்கட்டிற்கான திட்ட உணவுகளை அல்லது விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்குவதால், லாபமடைவோர் உற்பத்தியாளர்களும் விளம்பரதாரர்களுமே அல்லவா? அவர்கள் உன் சிந்தனையை உருபடுத்தியமைக்க ஏன் விடவேண்டும்? உன் சகாக்கள் உன் தோற்றத்தைப்பற்றிக் குற்றங்குறை காண்கிறார்களென்றால், உதவியாயிருக்கும்படி அவ்வாறு செய்கிறார்களா—அல்லது வெறுமென உன்னைத் தாழ்த்துவதற்கா? உன்னைத் தாழ்த்துவதற்கேயென்றால், அத்தகைய “நண்பர்கள்” யாருக்குத் தேவை?

“உணர்வுக்கு [பகுத்துணர்வுக்கு] உன் இருதயத்தைத் திருப்பு,” என்று பைபிள் மேலும் உனக்கு அறிவுரை கூறுகிறது. (நீதிமொழிகள் 2:1, தி.மொ.) பகுத்துணர்வு உன் உடல் அழகை உண்மையில் இருக்கிறபடி கருதவும் செய்திபரப்பு சாதனங்களின் ஐயப்பாட்டிற்குரிய விளம்பரத்துக்கு கவனமாயிருக்கவும் உனக்கு உதவிசெய்யும். அதிவசீகர மாடல்களைப் போன்று தோற்றமளிப்போர் வெகு சிலரே. மேலும் “அழகு ஒரு நீர்க்குமிழியே” (நீதிமொழிகள் 31:30, பையிங்டன்) தங்கள் தோற்றத்துக்காகப் பணம் பெறுகிற ஆட்கள், தங்கள் பிரபலமிக்க நிலையில் சுருக்கக் கணநேரமே இருக்கின்றனர், சீக்கிரத்தில் மற்றொரு புதுமுகம் அவர்கள் இடத்தைப் பிடித்துவிடுகிறது. மேலும், ஒப்பனைப் பொருட்கள், ஒளியூட்டுதல், மற்றும் புகைப்பட கலைத்திறன் ஆகியவற்றைக்கொண்டு அவர்கள் தோற்றத்துக்கு அதிசய மாற்றங்கள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. (அழகு சாதன ஒப்பனைப் பொருட்கள் இன்றி அழகு நட்சத்திரங்களின் தோற்றத்தைக் கண்டு சிலர் திடுக்குற்றிருக்கின்றனர்!)

இவ்வாறு, ஒரு தொலைக்காட்சி அல்லது பத்திரிகையில் விளம்பரப்படுத்தும் மாடல்களைப்போல் உன் தோற்றம் இல்லாததால் சோர்வுணர்ச்சியடைய எந்தக் காரணமுமில்லை. மேலும் கவர்ச்சிகரமாய்த் தோன்ற நீ எவ்வளவு உயரம், குட்டை, அல்லது ஒல்லியாய் இருக்கவேண்டுமென்பதற்கு உன் சகாக்கள் முடிவான தீர்ப்புச் செய்பவர்கள் அல்லர். உன் தோற்றத்தில் நீ திருப்தியுற்றிருந்தால், உன் சகாக்கள் சொல்வதற்கு கவனஞ்செலுத்தாதே. மாறாக, உன் தோற்றத்தைப்பற்றி நீ விரும்பாத அதே காரியம் மற்றொருவர் பார்த்துப் பொறாமைப்படுவதற்குக் காரணமாயிருக்கலாம்.

உன் மிகச் சிறந்தத் தோற்றத்தை அளி!

சிலசமயங்களில் இளைஞருக்குத் தோற்றம் சார்ந்த உண்மையான பிரச்னைகள் இருக்கின்றன: குறைபாடுள்ள மேனி, மீறிய உடல் எடை, உருக்குலைந்த மூக்கு, நீட்டிக்கொண்டு நிற்கும் காதுகள், மிகவும் குட்டையான உடல் ஆகியவை. நிச்சயமாகவே, வளரும் இளைஞனாக, உன் தோற்றம் இன்னும் மாறிக்கொண்டிருக்கிறது. முகப்பரு, எடையில் ஏற்ற இறக்கங்கள், மின்னல் வேகத்தில் (அல்லது வேதனையூட்டும் விதத்தில் தாமதமாய்) ஏற்படும் வளர்ச்சி பருவ வயதுக்குட்பட்டோரின் மோசமான சமயமாயிருக்கிறது. இத்தகைய பிரச்னைகள் பலவற்றைக் காலம் தீர்க்கிறது.

சில பிரச்னைகளை அவ்வாறு தீர்க்கப்படுவதில்லை. தங்கள் தோற்றங்கள் கவர்ச்சியற்றவை என்ற உண்மையுடன் இளைஞர் பலர் வாழவேண்டியிருக்கிறது. எழுத்தாளர் ஜான் கில்லிங்கர் பின்வருமாறு கூறினார்: “பெரும்பான்மையரான மக்களுக்கு, நல்லத் தோற்றம் இல்லாதது வாழ்க்கையின் மிக அதிக வேதனைதரும் உண்மைகளில் ஒன்றாயிருக்கிறது, இது அவர்கள் இளமையிலேயே அறிந்துகொள்வதும் தங்கள் வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம் தப்பிக்கொள்வதற்கு அரிதானதுமான ஒன்றாயிருக்கிறது.” எனினும், நீ உன்னால் கூடிய மிக நல்ல முறையில் உன் தோற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்!

உடல் குறைபாடுகளைத் திருத்துவதற்கு அறுவை சிகிச்சை முறை பெருஞ் செலவாகவும், ஒருவேளை அபாயமிக்க முறையாகவும் இருக்கக்கூடும். a என்றாலும், எளிதான உடல் சுத்தம், செலவில்லாததும் உன் கவர்ச்சிகரத்தை மேம்படுத்துவதற்கு அதிகம் செய்யக்கூடியதுமாகும். உன் முடி திரைபட நடிகன் அல்லது நடிகையின் முடியைப்போன்று அவ்வளவு பளபளப்புள்ளதாய் ஒருவேளை இராது, ஆனால் அது சுத்தமாயிருக்கலாம்; அவ்வாறே உன் முகம், கைகள், மற்றும் விரல்நகங்களைச் சுத்தமாய் வைக்க முடியும். வெள்ளைப் பற்களும் சுத்தமான சிவந்த ஈறுக்களும் எந்தப் புன்சிரிப்பையும் அதிகக் கவர்ச்சியுள்ளதாக்கும். மிகையான எடை உனக்குப் பிரச்னை உண்டுபண்ணுகிறதா? ஒரு திட்டமுறை உணவும் உடற்பயிற்சியும் (ஒருவேளை ஒரு மருத்துவரின் கவனிப்பின்கீழ் அவ்வாறு செய்வது) உன் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகமாய் உதவலாம்.

உன் உடலின் நற்பண்புகளைச் சிறப்படைய செய்து உன் குறைபாடுகளை மறைந்தமைய செய்யும் உடைகளையும், முடி அலங்காரங்களையும், பெற்றோரின் அங்கீகாரத்துடன் நீ முயற்சிசெய்து பார்க்கலாம். உதாரணமாக, எழுத்தாளர் ஷெரன் ஃபால்டன் சொல்கிறபடி, “ஒரு பெண், முடியை விரிந்துகவிந்துள்ள பாங்கில் விடுவதன் மூலம் அல்லது உச்சிக் கூம்புபாணிக் கொண்டை போடுவதன் மூலம் தன் பெரிய மூக்கின் தோற்றத்தை மறைந்தமைய செய்யலாம்.” கூர்மையான முகக்கட்டின் தோற்றத்தை, “அலையலையான அல்லது சுருட்டையான முடியலங்காரம்” செய்வதன்மூலம் குறைக்கமுடியும். மேலும் முகத்தில் ஏற்றமுறையில் கவனத்துடன் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்களும் ஒரு பெண்ணின் முகக் குறைபாடுகளை மறைந்திருக்கச் செய்யும். ஆணாயினும் பெண்ணாயினும், நீ தெரிந்துகொள்ளும் உடையினாலும் அதிகம் சாதிக்க முடியும். உன் முகத்தோற்றத்தை மேம்படுத்தும் நிறங்களையும் நிறைவளிக்கும் அலங்காரப் பாணிகளையும் தெரிந்துகொள். உடைகளின் கோடுகளுக்குக் கவனஞ்செலுத்து: செங்குத்துக் கோடுகள் ஒல்லியாய்த் தோன்றச் செய்யும்; கிடைக்கோடுகள், எதிர்மாறான தோற்றத்தைக் கொடுக்கும்!

ஆம்,—இயல்பாய் உனக்கு நல்லத் தோற்றம் இராவிடினும்—முயற்சியுடனும் மனதின் படைப்புத்திறமையுடனும், நீ மனதுக்குகந்தத் தோற்றத்தை அளிக்க முடியும்.

சமநிலை தேவை

உன் புறத்தோற்றத்துக்குக் கவனம் செலுத்துவது முக்கியம். எனினும், உன் தோற்றத்தை உன் வாழ்க்கையில் பெரிய காரியமாக்காதபடி கவனமாயிரு. ஆட்களின் புறத்தோற்றத்தைப்பற்றி எவ்வளவு குறைவாக பைபிள் பேசுகிறது என்பதை நீ என்றாவது கவனித்தாயா? ஆபிரகாமின், மரியாளின், அல்லது இயேசுவின் உடல்தோற்றத்தைப் பற்றியுங்கூட நமக்கு ஏன் சொல்லியில்லை? கடவுள் அதை முக்கியமெனக் கருதவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.

கவனத்தைக் கவருவதாய், ஒருமுறை கடவுள் எலியாப் என்ற ஒரு வாலிபனை அரச பதவிக்கு ஏற்க மறுத்துவிட்டார், அவனுடைய உடற்கட்டு மிகவும் கவரக்கூடியதாயிருந்தது! யெகோவா தேவன் தீர்க்கதரிசியாகிய சாமுவேலுக்குப் பின்வருமாறு விளக்கினார்: “நீ இவன் முகத்தோற்றத்தையும் இவன் சரீர வளர்த்தியையும் பார்க்கவேண்டாம்; . . . மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் பார்ப்பது முகம், யெகோவா பார்ப்பதோ அகம் [இருதயத்தைப் பார்க்கிறார், UV].” (1 சாமுவேல் 16:6, 7, தி.மொ.) உண்மையில் நமக்கு முக்கியமானவரான கடவுளுக்கு, நம்முடைய முகத் தோற்றங்கள் முக்கியமல்ல என்பதை அறிவது எத்தகைய ஆறுதலைத் தருகிறது! அவர் “இருதயத்தைப் பார்க்கிறார்.”

எண்ணிப்பார்க்க வேண்டிய மற்றொரு குறிப்பு: உன் நண்பர்களில் பெரும்பான்மையர் சராசரியான முகத்தோற்றமுடையோராய் இருக்கின்றனரல்லவா? நவீன பாணி பத்திரிகை ஒன்றின் முன்-அட்டைக்குப் படமாக உன் பெற்றோர் இருவரில் எவராவது இருக்க முடியுமா? பெரும்பாலும் இரார். நிச்சயமாகவே, அவர்களுடைய சிறந்த குணங்களை நீ அறிந்திருப்பதால் அவர்களுடைய தோற்றங்களைப்பற்றி நீ நினைப்பதே இல்லை! ஓர் ஆளாக உனக்கும்—உண்மையான அல்லது கற்பனைசெய்துகொள்ளப்படுகிற—உடல்குறைபாடுகள் எவற்றையும் மறைந்தமையச் செய்யும் வகையில் நற்பண்புகள் இருக்கின்றன.

எனினும், புறத்தோற்றங்கள் உன் சகாக்களுக்கு முக்கியமானவை, அவர்களுடைய உடை மற்றும் அலங்கார நாகரிகப் பாணிகளைப் பின்பற்றுவதற்கான செல்வாக்கு வலிமையின்கீழ் நீ உன்னைக் காணக்கூடும். இந்தச் செல்வாக்கு வலிமைக்கு நீ எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

[அடிக்குறிப்புகள்]

a கோணலான பற்களைத் திருத்துவதற்குக் கம்பிப் பட்டைகள் பயன்படுத்துவதைப்போன்ற சில மருத்துவ முறைகள் உடல்நலத்தையும் மேம்பட்ட முகத் தோற்றத்தையும் அளிக்கக்கூடும்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ இளைஞர் தங்கள் புறத்தோற்றத்தைப்பற்றி ஏன் அவ்வளவு அக்கறை கொள்கின்றனர்? உன் சொந்தத் தோற்றத்தைப்பற்றி நீ எவ்வாறு உணருகிறாய்?

◻ செய்தி பரப்பு சாதனங்களும் உன் சகாக்களும் தோற்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய என்ன கருத்தைப் பரப்புகின்றனர்? அத்தகைய செல்வாக்குக்கு நீ எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும்?

◻ முகப்பரு பிரச்னையைக் கையாளும் சில வழிகள் யாவை?

◻ உன் தோற்றங்களை எவ்வாறு மிக நல்ல முறையில் நீ பயன்படுத்திக்கொள்ளலாம்? இந்தக் காரியத்தில் ஏன் சமநிலை தேவைப்படுகிறது?

[பக்கம் 82-ன் சிறு குறிப்பு]

‘என் உடலைப்பற்றி இந்த வெறுப்பு எனக்கு இருக்கிறது . . . எனக்கு அவ்வளவு நல்ல தோற்றமில்லையென நான் நினைக்கிறேன்’

[பக்கம் 88-ன் சிறு குறிப்பு]

உடல் குறைபாடுகள் எவற்றையும் மறைந்தமைய செய்யும் வகையில் மேம்பட்டு நிற்கும் நற்பண்புகள் உனக்கும் இருக்கின்றன

[பக்கம் 84,85-ன் பெட்டி/படம்]

‘என் முகப்பருவைக் குறித்து நான் ஏதாவது செய்யமுடியாதா?’

முகப்பரு தோலின் ஒரு கோளாறு, இது தோலில் புள்ளிகள் ஏற்படவும் அல்லது பருக்கள், கரும்பருக்கள், சிவந்துள்ள வீக்கங்கள், அல்லது சிறு கொப்பளங்கள் ஆகியவற்றை உண்டாக்கி அழகைக் கெடுக்கவும் செய்யும். இளைஞர் பலருக்கு, இது, வெறும் ஒருசில மாதங்களே இருந்து மறைந்துபோகும் தொந்தரவாக இல்லாமல் வினைமையான தோல் கோளாறாயிருக்கிறது. எல்லா வயதிலுள்ள ஆட்களையும் இது தாக்குகிறது, எனினும் பருவ வயதுக்குட்பட்ட இளைஞரே இதால் மிக அதிகம் வருந்துகின்றனர். நிபுணர்கள் சிலரின் பிரகாரம், ஏறக்குறைய 80 சதவீதமானோருக்கு முகப்பரு பற்பல அளவுகளில் உண்டாகிறது.

தங்களைப்பற்றிய எதைத் தாங்கள் மிக அதிகம் விரும்புகிறதில்லையென பருவ வயதுக்குட்பட்ட 2,000 இளைஞர்கள் கேட்கப்பட்டபோது, அவர்கள் சொன்னதில் தோல் சார்ந்த பிரச்னைகளே மற்ற எல்லா மனக்குறைகளையும் எண்ணிக்கையில் மிஞ்சியது ஆச்சரியமாயில்லை. உயர்தர பள்ளியில் இருக்கையிலேயே அவ்வளவு மோசமாய் முகப்பரு உண்டாகியிருந்த இளம்பெண் சான்ட்ரா நினைவுபடுத்திக் கூறுவதாவது: “எனக்கு அவ்வளவு மோசமான முறையில் முகப்பரு உண்டாயிருந்ததால், நான் எப்பொழுதும் என் முகத்தை மற்ற ஆட்களிடமிருந்து மறைத்துக்கொண்டிருந்தேன். என் முகம் தோன்றின விதத்தைப் பற்றி எனக்கு மனச்சங்கடம் ஏற்பட்டிருந்ததால், வெட்கப்பட்டேன். . . . நான் அவ்வளவு மிக மோசமாய்த் தோன்றினேன்.”—CO-ED பத்திரிகை.

பருவ வயதில்—நீ மிகச் சிறந்த முறையில் தோன்றவேண்டுமென விரும்பும் அந்தச் சமயத்தில்தானே இந்தத் தொல்லை ஏன் ஏற்படுகிறது? ஏனெனில் நீ வளருகிறாய். பூப்புப்பருவம் தொடங்கினதோடு, தோல் சுரப்பிகள் தங்கள் செயலைப் பெருக்குகின்றன.

என்ன நடக்கிறது? தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா எளிதான பதங்களில் விளக்குகிறது. தோல் சுரப்பிகள் ஒவ்வொன்றும் மயிர்-மூட்டுப்பைக்குள்—அதாவது, ஒவ்வொரு முடியையும் சுற்றியுள்ள அந்தச் சிறு பைக்குள்—எண்ணெய்யை வடியச் செய்கிறது. இயல்பாய், அந்த எண்ணெய் தோலின் ஒரு நுண்துளையின் மூலம் வெளியே வடிந்துபோகும், ஆனால் சிலசமயங்களில் ஒரு துளை அடைபடுகிறது அந்த எண்ணெய் போதிய விரைவில் வெளியில் செல்லமுடியாமற்போகிறது. அடைபட்ட துளையில் இப்பொழுது கரும்-பரு (blackhead) என்ற ஒரு களங்கம் உருவாகிறது, ஏனெனில் அடைபட்ட எண்ணெய் பிராணவாயுடன் இணைந்து கூட்டுப்பொருளாகி, காய்ந்து, கருநிறமாகிறது. சீழ் உண்டாகையில் முகப்பரு (pimple) உண்டாகிறது. அடைபட்ட எண்ணெய்யில் கிருமிகள் பெருகுகையில் கொப்பளங்கள் (cysts) உண்டாகின்றன. இந்தக் கொப்பளங்களே நிலையான தழும்புகளை விட்டுச்செல்கின்றன. அதை நசுக்கிப் பிழிவதன் அல்லது பிய்ப்பதன் விளைவாக கிருமிகள் தொற்றினால் தவிர, முகப்பரு (pimple) தழும்பு உண்டாக்குவதில்லை. ஆகையால் அதை நசுக்காதே அல்லது பிய்க்காதே!

கவனத்தைக் கவருவதாய், மனநெருக்கடிநிலையும் உணர்ச்சி நிலைகுலைவும் தோல் சுரப்பிகளைத் தூண்டி விரைவுபடுத்தும். ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு முன்புதானே அல்லது பரீட்சைகளுக்கு முன்னாலும் அவை நடக்கும்போதும் ஒரு பெரும் முகப்பரு மலர்ந்தெழும்பும் அனுபவத்தைச் சிலர் அடைகின்றனர். இவ்வாறு இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் நடைமுறையானவை: “அடுத்த நாளைப்பற்றி ஒருபோதும் கவலைப்படாதிருங்கள், ஏனெனில் அடுத்த நாள் அதன் சொந்தக் கவலைகளைக் கொண்டிருக்கும்.”—மத்தேயு 6:34NW

வருந்தத்தக்கதாய், அற்புத சுகப்படுத்துதல் எதுவும் இல்லை. எனினும், முகப்பருவை கட்டுப்படுத்த உதவக்கூடிய பென்ஜாயில் பெராக்ஸைட் (கிருமிகொல்லி பொருள்) அடங்கிய ஜெல், கிரீம் போன்ற முகப்பசை பொருட்கள், கழுவுநீர்மங்கள், மருந்தலம்பு நீர்மங்கள், சோப்புகள், மற்றும் முகப்பரு மறைப்பு பொருட்கள் போன்றவை மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. (மேலுமான நடவடிக்கை எடுப்பதற்குத் தேவைப்பட்டால் உன் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம்.) தங்கள் தோலை சோப்பைக்கொண்டு அல்லது பென்ஜாயில் பெராக்ஸைட்டைக் கொண்ட கழுவுநீர்மத்தால் நன்றாய்க் கழுவுவது உதவியாயிருப்பதைப் பலர் காண்கின்றனர். எனினும், எண்ணெய்மிகுந்த சோப்புகளை அல்லது எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட சிங்காரிப்புப் பொருட்களைத் தவிர்த்திரு.

முழு உடலின் ஆரோக்கியத்தைக் கவனித்துப்பேணுவதாலும்—மிகுதியான உடற்பயிற்சி செய்தல், வெளியில் சுத்தமான காற்றில் கூடியளவு இருத்தல், மற்றும் போதிய தூக்கத்தைப் பெறுதல் ஆகியவற்றால்—தங்கள் முகப்பரு நிலைமை திருந்துவதைச் சில இளைஞர் கண்டிருக்கின்றனர். கொழுப்பில்லாதப் பத்திய உணவு உட்கொண்டுவருவதன் நன்மையைச் சிலர் வாதிடுகின்றனர், அதே சமயத்தில் இடையிடையே பல்வேறு சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும், அதோடு சமநிலை திட்ட உணவு உண்பதும் சந்தேகமில்லாமல் அறிவுள்ளதாகும்.

எவ்வாறாயினும், பொறுமை கட்டாயம் வேண்டும். இதை நினைவுபடுத்திக்கொள்: இந்தப் பிரச்னை ஓரளவு நீண்டக் காலப்பகுதியில் படிப்படியாய் வளர்ந்தது, ஆகையால் ஓரிரவுக்குள் அது சுகமாகிவிடாது. முன் குறிப்பிட்ட சான்ட்ரா, பின்வருமாறு சொல்கிறாள்: “என் தோல் முற்றிலும் சுகமாவதற்கு ஏறக்குறைய ஓர் ஆண்டு எடுத்ததென நான் நினைக்கிறேன், ஆனால் ஆறு வாரங்களுக்குள் என் தோலில் மாற்றங்களை நான் காண முடிந்தது.” உன் சிகிச்சையை விடாமல் ஒரு காலப்பகுதிக்கு தொடருவதால் நீ ஓரளவு பலனை அனுபவிக்கலாம்.

இதற்கிடையில், ஒருசில பருக்கள் உன் தன்மதிப்பை நொறுக்க அல்லது மற்றவர்களோடு நீ பேசுவதைத் தடைசெய்ய விடாதே. உன் தோலைப்பற்றி நீ ஒருவேளை மிகத் தன்னுணர்வுடன் இருந்தாலும், மற்றவர்கள் நீ நினைப்பதைவிட மிகக் குறைந்த அளவிலேயே அதைப் பெரும்பாலும் கவனிக்கின்றனர். ஆகையால் நம்பிக்கையான மகிழ்ச்சியுள்ள ஆவியைக் கொண்டிருக்க முயற்சி செய். உன் முகப்பருவுக்கு இப்பொழுதே உன்னால் கூடியதைச் செய்.

[பக்கம் 83-ன் படம்]

உன்னைப்பற்றி நீ விரும்பாததை மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படலாம்

[பக்கம் 86-ன் படங்கள்]

பத்திரிகை விளம்பர மாடல்கள் அழகூட்டும் ஒப்பனையாளர்களின் ஆதரவைக் கொண்டிருக்கின்றனர் என்பதை இளைஞர் நினைவில் வைக்கத் தவறுகின்றனர்