Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா?

என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா?

அதிகாரம் 16

என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா?

மிட்செல் தன் அப்பா மரித்த அந்த நாளை நினைவுபடுத்திக் காண்கிறான்: “நான் மன அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்தேன். . . . ‘இது உண்மையாயிருக்க முடியாது,’ என எனக்கு நானே விடாமற் சொல்லிக்கொண்டிருந்தேன்.”

ஒருவேளை நீ நேசிக்கும் ஒருவர்—பெற்றோர் ஒருவரோ, சகோதரனோ, சகோதரியோ, அல்லது நண்பனோ—மரித்துவிட்டார். உனக்குத் துக்க உணர்ச்சியுண்டாவது மட்டுமேயல்லாமல், கோபம், மனக்குழப்பம், மற்றும் பயமும் உண்டாகிறது. நீ எவ்வளவு முயன்றாலும் கண்ணீரைத் தடுத்து நிறுத்த முடிகிறதில்லை. அல்லது நீ உணரும் வேதனையை உனக்குள் அடைத்து வைத்திருக்கிறாய்.

மெய்யாகவே, நாம் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் உணர்ச்சிவசத்துடன் பிரதிபலிப்பது இயல்பானதே. இயேசு கிறிஸ்துவுங்கூட, நெருங்கிய ஒரு நண்பனின் மரணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “ஆவியிலே பொங்கித் துடித்து, . . . கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:33, 36, தி.மொ.; 2 சாமுவேல் 13:28-39-ஐ ஒத்துப்பார்.) நீ உணருவதுபோல் மற்றவர்களும் உணர்ந்தார்களென அறிவது உன் இழப்பைத் தாங்க உனக்கு மேலும் உதவிசெய்யலாம்.

உண்மையை ஏற்க மறுத்தல்

முதன்முதல் நீ மரத்துப்போன நிலையிலிருக்கலாம். ஒருவேளை உன் உள்ளத்தின் ஆழத்தில், அது வெறும் ஒரு கெட்ட கனவுதான், எவராவது வந்து உன்னை எழுப்பிவிடுவார்கள் காரியங்கள் எப்பொழுதும் இருந்ததுபோலவே இருக்குமென நீ நம்பலாம். உதாரணமாக, சின்டியின் தாய் புற்றுநோயால் மரித்துவிட்டார்கள். சின்டி விளக்குவதாவது: “அவர்கள் போய்விட்டார்கள் என்பதை என்னால் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சென்ற காலத்தில் நான் அவர்களுடன் கலந்துபேசின ஏதாவது நடக்கும்போது, ‘நான் அதை அம்மாவிடம் சொல்லவேண்டும்,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வதைக் காண்கிறேன்.”

இழப்புக்கு ஆளான ஆட்கள் மரணம் ஏற்பட்டதென்பதை ஏற்க மறுக்கும் போக்குடையோராய் இருக்கின்றனர். மரித்தவரை வீதியில், கடந்துசெல்லும் ஊர்தியில், சுரங்கப்பாதையில் திடீரென்று காண்பதாகவும் அவர்கள் எண்ணலாம். தோற்றத்தில் சிறிதளவு ஒத்திருக்கும் ஒருவரை காண்பதும்கூட, நடந்ததெல்லாம் ஒரு பிழையாக இருந்திருக்கலாமென்ற நம்பிக்கையை ஒருவேளை எழுப்பிவிடலாம். கடவுள் மனிதனைச் சாகும்படியல்ல, உயிர்வாழ்ந்திருக்கும்படியே உண்டாக்கினார் என்பதை நினைவுபடுத்திக்கொள். (ஆதியாகமம் 1:28; 2:9) ஆகையால் மரணத்தை ஏற்பது நமக்குக் கடினமாய் இருப்பது இயல்பானதே.

“அவர்கள் எவ்வாறு இதை எனக்குச் செய்யலாம்?”

மரித்த ஆளின்மேல் சிறிது கோப உணர்ச்சியுங்கூட நீ அடையும் நேரங்கள் இருந்தால் ஆச்சரியப்படாதே. சின்டி நினைவுபடுத்திக் கூறுவதாவது: “அம்மா மரித்தபோது, ‘நீங்கள் சாகப்போகிறீர்களென எங்களுக்கு உண்மையில் சொல்லவுமில்லை. நீங்கள் வெறுமென சட்டென்று விட்டுச் சென்றுவிட்டீர்கள்,’ என்று நான் எண்ணிய நேரங்களும் உண்டு. நான் கைவிடப்பட்டவளாக உணர்ந்தேன்.”

ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் மரணமும் இவ்வாறே இத்தகைய உணர்ச்சிகளைக் கிளப்பிவிடும். “மரித்த ஒருவரின்பேரில் கோப உணர்ச்சியடைவது பெரும்பாலும் ஏளனத்திற்குரியதாயிருக்கிறது,” என்று கேரன் விளக்குகிறாள், “ஆனால் என் சகோதரி மரித்தபோது, என்னால் அத்தகைய உணர்ச்சியடையாமல் இருக்கமுடியவில்லை. ‘அவள் மரித்து என்னைத் தன்னந்தனிமையில் விட்டுச்செல்ல எவ்வாறு முடிந்தது? அவள் இதை எனக்கு எவ்வாறு செய்யலாம்?’ என்பவற்றைப்போன்ற எண்ணங்கள் என் மனதில் விடாது ஓடிக்கொண்டிருந்தன.” உடன்பிறந்தவரின் மரணம் உண்டுபண்ணின எல்லா வேதனைக்காகவும் அவன் அல்லது அவள்மீது கோபங்கொள்வதை சிலர் தங்களுள் உணருகின்றனர். சிலர் நோயுற்றிருந்த சகோதரன் அல்லது சகோதரி சாவதற்கு முன்னால் பெற்ற எல்லா நேரம் மற்றும் கவனத்தினிமித்தம், தாங்கள் கவனிக்காது விடப்பட்டதுபோலும், ஒருவேளை மனக்கசப்பாயுங்கூட உணருகின்றனர். ஆழ்ந்தத் துக்கத்தால் பீடிக்கப்பட்ட பெற்றோர் மற்றொரு பிள்ளையை இழக்கும் பயத்தால், திடீரென்று மட்டுக்குமீறி பாதுகாப்புசெய்பவர்களாவதும் மரித்தவரின் பேரில் வெறுப்பைத் தூண்டிவிடலாம்.

“அதை மட்டும் நான் . . . செய்திருந்தால் . . .

குற்றமுள்ள உணர்ச்சியும் அடிக்கடி ஏற்படும் ஒரு பிரதிபலிப்பாகும். கேள்விகளும் சந்தேகங்களும் மனதினூடே ஓடுகின்றன. ‘நாம் செய்திருக்கக்கூடிய வேறு ஏதாவது இருக்கிறதா? வேறொரு மருத்துவரை நாம் கலந்தாலோசித்திருக்க வேண்டுமா?’ பின்னும் ‘அதை மட்டும் நான் . . . செய்திருந்தால்’ என்பவையும் இருக்கின்றன. ‘நான் அவ்வளவு சண்டை போட்டிராவிடில்.’ ‘நான் மட்டும் இன்னும் அன்பாயிருந்திருந்தால்.’ ‘நான் மட்டும் அவனுக்குப் பதிலாகக் கடைக்குச் சென்றிருந்தால்.’

மிட்செல் பின்வருமாறு கூறுகிறான்: “நான் என் தகப்பனுடன் மேலுமதிகப் பொறுமையுடனும் புரிந்துகொள்ளும் தன்மையுடனும் இராமற்போனேனே. அவர் வீட்டுக்கு வந்தபோது சுலபமாயிருக்கும்படி வீட்டில் மேலுமதிகக் காரியங்களைச் செய்யாமற்போனேனே.” மேலும் எலைஸா சொன்னதாவது: “அம்மா நோயுற்று அவ்வளவு திடீரென்று மரித்தபோது, நாங்கள் ஒருவருக்கொருவர் தீர்த்து முடிவுசெய்யாத இந்த எல்லா உணர்ச்சிகளும் இருந்தன. நான் இப்பொழுது அவ்வளவு குற்றமுள்ளவளாய் உணருகிறேன். நான் அவர்களிடம் சொல்லியிருக்கவேண்டிய எல்லாக் காரியங்களையும், நான் சொல்லியிருக்கக்கூடாத எல்லாவற்றையும், நான் செய்த தவறான எல்லாக் காரியங்களையும் பற்றி நினைக்கிறேன்.”

நடந்தக் காரியத்துக்காக உன்னை நீயே குற்றப்படுத்திக்கொண்டும் இருக்கலாம். சின்டி நினைவுபடுத்திக் கூறுவதாவது: “எங்களுக்குண்டான ஒவ்வொரு தர்க்கத்தின்பேரிலும், நான் அம்மாவுக்கு உண்டுபண்ணின எல்லாத் தொல்லைகளுக்காகவும் குற்றமுள்ளவளாய் உணர்ந்தேன். நான் அவர்களுக்கு உண்டுபண்ணின எல்லாத் தொல்லைகளும் அவர்கள் நோய்ப்படுவதற்குக் காரணமாயிருந்திருக்கலாமென நான் உணர்ந்தேன்.”

“என் நண்பர்களிடம் நான் என்ன சொல்லுவேன்?”

ஒரு விதவை தன் மகனைப்பற்றிப் பின்வருமாறு சொன்னாள்: “ஜானி தன் தகப்பன் மரித்துப்போனாரென மற்றப் பிள்ளைகளிடம் சொல்வதை வெறுத்தான். அது அவனுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்தது, மேலும் அது அவனுக்குக் கோபமும் உண்டாக்கியது, அவன் மனக்கலக்கமடைந்ததன் காரணத்தினிமித்தமே.”

குடும்பத்தில் மரணமும் துயரமும் என்ற புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: “‘நான் என் நண்பர்களிடம் என்ன சொல்லுவேன்?’ என்பது உடன்பிறந்தோர் பலருக்கு (உயிரோடிருக்கும் சகோதரர் சதோதரிகளுக்கு) மிக அதிக முக்கியத்துவமுடைய கேள்வியாக இருக்கிறது. உடன்பிறந்தவர்கள் தாங்கள் அனுபவிப்பதைத் தங்கள் நண்பர்கள் விளங்கிக்கொள்கிறதில்லையென உணருகின்றனர். இழப்பின் பாதிப்பைப் பகிர்ந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள், மற்றவர்களின் மலைப்படைந்த வெறுமையான உறுத்தப் பார்வைகளையும் திகைப்பான நோக்குகளையுமே எதிர்ப்படலாம். . . . இதன் விளைவாக, உடன்பிறந்தவரை இழந்த சகோதரனோ சகோதரியோ ஒதுக்கப்பட்டவனாக, தனிமைப்படுத்தப்பட்டவனாக, மேலும் சில சமயங்களில், மனத்தடுமாற்றமடைந்தவனாயும் உணரலாம்.”

எனினும், துயரப்படும் நண்பனுக்கு என்ன சொல்வதென மற்றவர்கள் சிலசமயங்களில் முற்றிலும் அறியாதிருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்—ஆகையால் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. நீ இழந்தது, தாங்களும் நேசமான ஒருவரை இழக்க முடியுமென அவர்களுக்கு நினைப்பூட்டவும் கூடும். அதைப்பற்றி நினைப்பூட்டப்பட விரும்பாமல், அவர்கள் உன்னிடமிருந்து தயக்கத்துடன் விலகலாம்.

உன் துயரத்தைத் தாங்குதல்

உன் துயரம் இயல்பானதேயென அறிவது அதைக் கையாளுவதில் பெரும் உதவியாயிருக்கிறது. ஆனால் உண்மையை மறுப்பது துயரம் தொடரும்படி அதை நீடிக்கவே செய்கிறது. சிலசமயங்களில் ஒரு குடும்பத்தார் சாப்பாட்டு மேசையில் ஓர் இடத்தை மரித்தவருக்காகக் காலியாய் விட்டுவைப்பார்கள், மரித்தவர் சாப்பாட்டுக்காக வரவிருப்பதுபோல் அவ்வாறு செய்வார்கள். எனினும் ஒரு குடும்பத்தார், காரியங்களை வேறுபட்டமுறையில்கையாளத் தெரிந்துகொண்டனர். அந்தத் தாய் சொல்வதாவது: “நாங்கள் அதற்குமேலும் சமையலறை மேசையில் அதே ஒழுங்கில் ஒருபோதும் உட்காரவில்லை. என் கணவர் டேவிட்டின் நாற்காலியில் உட்கார்ந்தார், அது வெறுமையை நிரப்ப உதவிசெய்தது.”

நீ சொல்லியிருக்க அல்லது செய்திருக்க வேண்டிய அல்லது செய்திருக்கக் கூடாதக் காரியங்கள் இருக்கலாமெனினும், பொதுவாய் அவை உனக்கு நேசமானவர் மரித்ததற்குக் காரணங்கள் அல்ல என்பதை உணருவதும் உனக்கு உதவிசெய்கிறது. அல்லாமலும், “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.”—யாக்கோபு 3:2.

உன் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல்

டாக்டர் எர்ள் கிரோல்மன் பின்வருமாறு ஆலோசனை கூறுகிறார்: “உன் மனப்போராட்ட உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்வது போதுமானதல்ல; நீ அவற்றை வெளிப்படையாய்க் கையாள வேண்டும். . . . இதுவே உன் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான சமயம்.” இது உன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்வதற்குச் சமயமல்ல.—நீதிமொழிகள் 18:1.

துயரத்தைத் தெரிவிக்க மறுப்பதால், “நீ அந்த மனவேதனையை நீடிக்கவே செய்து துயரத்தின் இயல்பான போக்கைத் தாமதம் செய்கிறாய்,” என டாக்டர் கிரோல்மன் சொல்கிறார். அவர் ஆலோசனை கூறுவதாவது: “நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்கும் ஒருவரை, உன் பல்வேறு உணர்ச்சிகள் உன் கடுமையானத் துயரத்தின் இயல்பான பிரதிபலிப்புகளேயென விளங்கிக்கொள்ளும் நண்பர் ஒருவரைக் கண்டுபிடி.” பெற்றோர் ஒருவர், ஒரு சகோதரன், சகோதரி, நண்பன், அல்லது கிறிஸ்தவ சபையிலுள்ள ஒரு மூப்பர் உண்மையான ஆதரவளிப்பவராய்ப் பெரும்பாலும் நிரூபிக்கலாம்.

அழவேண்டுமென்ற உணர்ச்சி உனக்கு உண்டானால் என்ன செய்வது? டாக்டர் கிரோல்மன் மேலும் சொல்வதாவது: “சிலருக்கு, பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும், கண்ணீர் விடுவது உணர்ச்சிவச நெருக்கடிக்கு மிகச் சிறந்த மருத்துவமாகும். அழுவது கடுந்துயரத்தைத் தணித்து மனவேதனையை நீக்குவதற்கு இயல்பான வழியாகும்.”

குடும்பமாக ஒன்றாய் ஒத்துழைத்தல்

இழப்புக் காலத்தில் உன் பெற்றோரும் மிகுந்த உதவியாயிருக்கலாம்—நீயும் அவர்களுக்கு உதவியாயிருக்கலாம். உதாரணமாக, இங்கிலாந்திலுள்ள ஜேனும் சாராவும் தங்கள் 23-வயது சகோதரன் டரலை மரணத்தில் இழந்துவிட்டனர். தங்கள் துயரத்தை அவர்கள் எவ்வாறு தாங்கினார்கள்? ஜேன் பதில் சொல்வதாவது: “நாங்கள் நான்குபேர்கள் இருந்ததால், நான் போய் அப்பாவுடன் எல்லாவற்றையும் செய்தேன். அதேசமயத்தில் சாரா அம்மாவுடன் எல்லாவற்றையும் செய்தாள். இவ்வாறு நாங்கள் தனித்திருக்கவில்லை.” ஜேன் மேலும் நினைவுபடுத்திச் சொல்வதாவது: “அப்பா அழுவதை நான் முன்னொருபோதும் கண்டதில்லை. ஒருசில தடவைகள் அவர் அழுதார், ஒரு விதத்தில் அது நல்லதாயிருந்தது, அதை எண்ணிப் பார்க்கையில், அவருக்கு ஆறுதல் சொல்லவாவது நான் அங்கிருந்தேனே என்று நான் இப்பொழுது திருப்தியடைகிறேன்.”

தளராமல் தொடரச் செய்யும் நம்பிக்கை

இங்கிலாந்திலுள்ள இளைஞன் டேவிட், ஹாட்கின் நோயுற்ற தன் 13-வயது சகோதரி ஜானட்டை மரணத்தில் இழந்துவிட்டான். அவன் சொல்வதாவது: “எனக்கு மிகவும் உதவிசெய்த காரியங்களில் சவ அடக்கப் பேச்சில் எடுத்துக் குறிப்பிட்ட ஒரு வசனமாகும். அது சொல்வதாவது: கடவுள் ‘ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை, இயேசுவை, மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை [பொறுப்புறுதியை, NW] எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.’ உயிர்த்தெழுதலைக் குறித்தப் ‘பொறுப்புறுதி’ என்றப் பதத்தைப் பேச்சாளர் அழுத்தியுரைத்தார். அது அந்த அடக்கத்துக்குப்பின் எனக்கு மிகுந்த பலமளித்த ஊற்றுமூலமாயிருந்தது.”—அப்போஸ்தலர் 17:31; மாற்கு 5:35-42; 12:26, 27; யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:3-8-ஐயும் பார்க்கவும்.

பைபிள் கொடுக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை துயரத்தை நீக்குவதில்லை. நீ நேசித்தவரை ஒருபோதும் மறந்துவிடமாட்டாய். எனினும், பைபிளிலுள்ள வாக்குகளில் பலர் உண்மையான ஆறுதலைக் கண்டடைந்திருக்கின்றனர், மேலும் அதன் பலனாக, தாங்கள் நேசித்த ஒருவரை இழந்த மனவேதனையிலிருந்து படிப்படியாய் மீண்டு தங்கள் இயல்பான முன்னிலையை அடைந்திருக்கின்றனர்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ உனக்கு மிக நேசமானவர் மரித்துவிடுகையில் அவருக்காகத் துயரப்படுவது இயல்பானதென நீ உணருகிறாயா?

◻ துயரப்படும் ஒருவர் என்ன உணர்ச்சிகளை அனுபவிக்கலாம், ஏன்?

◻ துயரப்படும் இளைஞன் அல்லது இளம் பெண் தன் உணர்ச்சிகளை கையாளுவதற்கு சில வழிகள் யாவை?

◻ தான் நேசித்தவரை இழந்த ஒரு நண்பனை நீ எவ்வாறு ஆறுதல்படுத்தலாம்?

[பக்கம் 128-ன் சிறு குறிப்பு]

“அவர்கள் போய்விட்டார்கள் என்பதை என்னால் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. . . . ‘நான் அதை அம்மாவிடம் சொல்லவேண்டும்,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வதைக் காண்கிறேன்”

[பக்கம் 131-ன் சிறு குறிப்பு]

“அம்மா மரித்தபோது, . . . ‘நீங்கள் சாகப்போகிறீர்களென எங்களுக்கு உண்மையில் சொல்லவில்லையே. நீங்கள் வெறுமென சட்டென்று விட்டுச் சென்றுவிட்டீர்கள்,’ என்று நான் எண்ணினேன். நான் கைவிடப்பட்டவளாக உணர்ந்தேன்”

[பக்கம் 129-ன் படங்கள்]

“இது உண்மையில் எனக்கு நடந்து கொண்டில்லை.”

[பக்கம் 130-ன் படங்கள்]

நாம் நேசிக்கும் ஒருவரை மரணத்தில் இழக்கையில், பரிவுள்ள ஒருவரின் ஆதரவு நமக்குத் தேவை