என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?
அதிகாரம் 14
என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?
அது சனிக்கிழமை இரவு. அந்தப் பையன் தன் அறையில் தனிமையாய் உட்கார்ந்திருக்கிறான்.
“வாரமுடிவுகளை நான் வெறுக்கிறேன்!” என அவன் கத்துகிறான். ஆனால் பதில்சொல்ல அந்த அறையில் ஒருவரும் இல்லை. ஒரு பத்திரிகையை எடுக்கிறான். அதில் இளைஞர்களின் ஒரு கூட்டம் கடற்கரையில் இருக்கும் ஒரு படத்தைக் காண்கிறான். அந்தப் பத்திரிகையை சுவரில் வீசி எறிகிறான். கண்களில் கண்ணீர் ததும்புகிறது. தன் பற்களால் தன் கீழ் உதட்டைக் கடிக்கிறான், ஆனால் கண்ணீர்கள் தொடர்ந்து வெளியோடுகின்றன. இனிமேலும் அடக்கமுடியாமல், தன் படுக்கையின்மீது விழுந்து, “நான் ஏன் எப்பொழுதும் விட்டுவிடப்படுகிறேன்?” என்று சொல்லி விம்மியழுகிறான்.
நீ சிலசமயங்களில் அவ்வாறு—உலகத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டு, தனிமையாயும், பயனற்றும், வெறுமையாயும் இருப்பதைப்போன்ற உணர்ச்சியடைகிறாயா? அப்படியானால், மனக்கசப்படையாதே. தனிமை உணர்ச்சியடைவது விளையாட்டல்லவெனினும், அது உயிருக்கு ஆபத்தான ஏதோ ஒரு நோயல்ல. எளிதாய்ச் சொல்லவேண்டுமானால், தனிமையுணர்வு ஓர் எச்சரிப்புக் குறியாகும். பசி உனக்கு உணவு தேவையென உன்னை எச்சரிக்கிறது. தனிமை உனக்குத் தோழமை, சிநேகம், நெருங்கிய உறவுநிலை தேவையென உன்னை எச்சரிக்கிறது. நாம் நல்ல முறையில் செயற்பட நமக்கு உணவு தேவை. அவ்வாறே, நாம் நன்றாய் இருப்பதாக உணர நமக்குத் தோழமை தேவை.
தழல் விட்டு எரியும் நிலக்கரி குவியலை நீ எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா? அந்தக் குவியலிலிருந்து ஒரு நெருப்புத் துண்டை வெளியெடுத்தால், அந்தத் துண்டின் சிவப்பு ஒளி தணிந்துபோய்விடுகிறது. ஆனால் அந்த நிலக்கரித் துண்டை அந்தத் தழல் குவியலுக்குள் திரும்ப வைத்தப்பின் அது மறுபடியும் செந்தழலொளி வீசுகிறது! தனிமையாக ஒதுக்கப்பட்ட நிலையில், மனிதராகிய நாம் அவ்வாறே நீடித்தகாலத்துக்கு “ஒளி வீசு”வதில்லை, அல்லது நல்ல முறையில் செயற்படுவதில்லை. தோழமைக்கான தேவை நம்முடைய உடலமைப்புக்குள் கட்டப்பட்டுள்ளது.
தன்னந்தனியாக ஆனால் தனிமையுணர்ச்சியுடனல்ல
கட்டுரையாளர் ஹென்ரி டேவிட் தொரியா பின்வருமாறு எழுதினார்: “தனிமையைப்போல் அவ்வளவு இசைந்தத் தோழமைத்தரத்தக்க ஒரு தோழனை நான் ஒருபோதும் கண்டதில்லை.” நீ இதை ஒப்புக்கொள்கிறாயா? “ஆம்,” என்று 20-வயது பில் சொல்கிறான். “எனக்கு இயற்கையின் மேல் விருப்பம். சிலசமயங்களில் நான் என் சிறு படகில் ஏறி ஏரியில் தூரச் செல்கிறேன். அங்கே தன்னந்தனிமையாய் பலமணிநேரங்கள் உட்காருகிறேன். இது, நான் என் வாழ்க்கையைக்கொண்டு என்ன செய்கிறேனென சிந்தித்துப் பார்க்க எனக்கு நேரமளிக்கிறது. இது உண்மையில் பெரும் பயனுள்ளது,” என்கிறான். இருபத்தோரு வயது ஸ்டீஃபனும் இதை ஒத்துக்கொள்கிறான். அவன் சொல்வதாவது, “நான் ஒரு பெரிய அடுக்குக் கட்டிடத்தில் வாழ்கிறேன். சில சமயங்களில் நான் தனிமையாய் இருக்கும்படியே அந்தக் கட்டிடத்தின் மேல்மாடிக்குச் செல்கிறேன். சிறிது சிந்தனைசெய்து முடித்து ஜெபிக்கிறேன். அது புது புத்துணர்ச்சி ஊட்டுகிறது.”
ஆம், தனிமையாயிருக்கும் நேரங்களை நன்றாய்ப் பயன்படுத்தினால், அவை நமக்கு ஆழ்ந்தத் திருப்தியைக்கொடுக்கும். இயேசுவும் இத்தகைய நேரங்களை அனுபவித்து மகிழ்ந்தார்: “அவர் [இயேசு] அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான [தனிமையான, NW] ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற்கு 1:35) ‘மனிதன் சிறிது நேரம் தனிமையாயிருப்பது அவனுக்கு நல்லதல்ல’ என்று யெகோவா சொல்லவில்லை. அதற்கு மாறாக, மனிதன் “தனிமையாகத் தொடர்ந்திருப்பது” அவனுக்கு நல்லதல்லவென்றே கடவுள் சொன்னார் என்பதை நினைவுபடுத்திக்கொள். (ஆதியாகமம் 2:18-23, NW) அப்படியானால், நீண்ட காலத்துக்குத் தனிமையாயிருப்பதே, தனிமையுணர்ச்சிக்கு வழிநடத்தலாம். பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்பவன் சுய இச்சையின்படி நடந்து, சகல விவேகத்திற்கும் முரணாக நடந்து கொள்வான்.”—நீதிமொழிகள் 18:1, NW.
தற்காலிகமான தனிமையுணர்ச்சி
புதிய இடத்துக்கு மாறிப்போகையில் நெருங்கிய நண்பர்களிடமிருந்து தூரத்தில் இருப்பதைப்போன்று, நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைமைகளால் தனிமை சில சமயங்களில் நம்மீது வற்புறுத்தப்படுகிறது. ஸ்டீஃபன் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “முன்னிருந்த இடத்தில் ஜேம்ஸும் நானும் நண்பர்களாயிருந்தோம், சகோதரரைப் பார்க்கிலும் நெருங்கியவர்களாயிருந்தோம். நான் மாறிச் சென்றபோது, அவன் இல்லாக்குறையை நான் மிக உணரப்போகிறேனென எனக்குத் தெரியும்.” அந்தப் பிரிந்தத் தருணத்தை மனதில் காட்சிப்படுத்தி அனுபவிப்பதுபோல் ஸ்டீஃபன் பேசுவதைச் சற்று நிறுத்துகிறான். “நான் விமானத்தில் ஏறவிருந்தபோது, உணர்ச்சிமிகுந்து என் தொண்டை அடைத்தது. நாங்கள் இறுகத் தழுவிக்கொண்டோம், நான் பிரிந்துசென்றேன். மிக அருமையான ஒன்று போய்விட்டதென நான் உணர்ந்தேன்.”
தன் புதிய சூழ்நிலையை ஸ்டீஃபன் எவ்வாறு கண்டான்? “அது கடுமையாயிருந்தது,” என்று அவன் சொல்கிறான். “முன்னிருந்த இடத்தில் என் நண்பர்கள் என்னை விரும்பினார்கள், ஆனால் இங்கே என்னுடன் வேலைசெய்த ஆட்கள் சிலர் நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்பதுபோல் என்னை உணரச் செய்தனர். நான் கடிகாரத்தைப் பார்த்து பின்னாக நான்கு மணிநேரத்தைக் கணக்கிட்டு (அதுவே நேர வேறுபாடு) நானும் ஜேம்ஸும் அந்தச் சமயத்தில்தானே என்ன செய்துகொண்டிருக்கலாமென எண்ணிக்கொண்டிருந்ததை நான் நினைவுகூருகிறேன். நான் தனிமை உணர்ச்சியடைந்தேன்.”
காரியங்கள் நல்லமுறையில் நடக்காதபோது, கடந்தகாலத்தில் நமக்கிருந்த மேம்பட்ட காலங்களின்பேரில் நினைவை ஊன்றவைக்கிறோம். எனினும், பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்ததேன் எனக்கேட்காதே.” (பிரசங்கி 7:10, தி.மொ.) ஏன் இந்த அறிவுரை கொடுக்கப்படுகிறது?
ஒரு காரணமென்னவெனில் சூழ்நிலைமைகள் மேம்பட்ட நிலைக்கு மாறக்கூடும். இதனிமித்தமே ஆராய்ச்சியாளர் “தற்காலிகத் தனிமை உணர்வைப்”பற்றிப்
பேசுகின்றனர். இவ்வாறு ஸ்டீஃபன் தன் தனிமையுணர்வை மேற்கொள்ள முடியும். எவ்வாறு? “அக்கறைகொண்டுள்ள ஒருவரோடு என் உணர்ச்சிகளைப் பற்றிப் பேசினது உதவிசெய்தது. நீ கடந்த காலத்திலேயே தொடர்ந்து மனதை வைத்துக்கொண்டிருக்க முடியாது. மற்ற ஆட்களைச் சந்திக்கவும், அவர்களில் அக்கறை காட்டவும் நான் என்னைக் கட்டாயப்படுத்தினேன். அது நன்மைபயக்கியது; நான் புதிய நண்பர்களைக் கண்டடைந்தேன்.” ஜேம்ஸைப் பற்றியதென்ன? “நான் நினைத்தது தவறு. இடம் மாறிச் செல்வது எங்கள் நட்பை முடித்துவிடவில்லை. அன்று நான் தொலைபேசியில் அவனிடம் பேசினேன். நாங்கள் ஒரு மணிநேரமும் 15 நிமிடங்களும் பேசினோம், பேசினோம், பேசிக்கொண்டேயிருந்தோம்.”தீராதத் தனிமையுணர்ச்சி
எனினும், சிலசமயங்களில், தனிமையுணர்ச்சியின் அரித்துத்தின்னும் வேதனை விடாமல் தொடருகிறது, அதிலிருந்து வெளியேற எந்த வழியும் இல்லாததுபோல் தோன்றுகிறது. உயர்தரப்பள்ளி மாணாக்கனான ரோனி, பின்வருமாறு கூறுகிறான்: “இந்த மாகாணத்தில் நான் எட்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன், ஆனால் அந்தக் காலமெல்லாம் ஒரு நண்பனையுங்கூட அடைய என்னால் ஒருபோதும் முடியவில்லை! . . . நான் உணருவதை ஒருவரும் அறியார் ஒருவரும் அக்கறைகொள்வதுமில்லை. இனிமேலும் என்னால் இதைச் சகிக்கவே முடியாதென சிலசமயங்களில் நான் நினைக்கிறேன்!”
ரோனியைப்போல், பருவ வயதுக்குட்பட்ட இளைஞர் பலர் தீரா தனிமையுணர்ச்சியென அடிக்கடி அழைக்கப்படுவதை அனுபவிக்கின்றனர். இது தற்காலிகத் தனிமையுணர்ச்சியைப் பார்க்கிலும் அதிக வினைமையானது. உண்மையில், இந்த இரண்டிற்கும் “சாதாரண சளிக்கும் நிம்மோனியாவுக்கும் உள்ள அவ்வளவு வித்தியாசமுண்டு” என ஆராய்ச்சியாளர் சொல்கின்றனர். ஆனால் நிம்மோனியாவைச் சுகப்படுத்த முடிவதுபோல், தீரா தனிமையுணர்ச்சியையும் போக்க முடியும். அதன் காரணத்தை விளங்கிக்கொள்ள முயற்சி செய்வது முதற்படியாகும். (நீதிமொழிகள் 1:5) தீரா தனிமையுணர்ச்சியின் மிகச் சாதாரண காரணத்தை 16-வயது ரோன்டா பின்வருமாறு குறிப்பிடுகிறாள்: “நான் மிகத் தனிமை உணர்ச்சி கொண்டிருப்பதன் காரணமென்னவென நான் நினைப்பதென்னவெனில்—உன்னைப்பற்றி நீ மோசமாய் உணர்ந்தால் நீ நண்பர்களைக் கொண்டிருக்க முடியாது. நான் என்னை அவ்வளவு அதிகம் விரும்புகிறதில்லையென நினைக்கிறேன்.”—அமெரிக்காவில் தனிமை.
ரோண்டாவின் தனிமையுணர்ச்சி உள்ளுக்குள்ளிருந்து வருகிறது. அவளுடைய தாழ்ந்தத் தன்-மதிப்பு ஒரு தடையை உண்டுபண்ணுகிறது, இது முன்வந்து பேசி நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதிலிருந்து அவளைத் தடுத்துவைக்கிறது. ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்வதாவது: “‘நான் கவர்ச்சியற்றவள்,’ ‘நான் ஆர்வத்தைத் தூண்டாதவள்,’ ‘நான் பயனற்றவள்,’ என்பவற்றைப்போன்ற எண்ணங்கள் தீரா தனிமையுணர்ச்சி கொண்டிருப்போருக்குள் பொதுவான கருத்துக்களாயிருக்கின்றன.” இவ்வாறு உன் தனிமையுணர்ச்சியை அடக்கி மேற்கொள்வதற்கு இன்றியமையாதது உன் தன்-மதிப்பைக் கட்டியெழுப்புவதில் அடங்கியிருக்கலாம். (12-ம் அதிகாரத்தைப் பார்.) தயவு, மனத்தாழ்மை, சாந்தம் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் “புதிய பண்பியல்பு” என பைபிள் அழைப்பதை நீ படிப்படியாய் வளர்த்துவருகையில் உன் தன்-மதிப்பு நிச்சயமாய் வளரும்!—கொலோசெயர் 3:9-12, NW.
மேலும், உன்னை நீ விரும்பக் கற்றுக்கொள்கையில், மற்றவர்கள் உன் கவர்ச்சிகரமான பண்புகளிடம் கவர்ந்திழுக்கப்படுவர். ஒரு மலரின் முழு நிறங்களை அது விரிந்தப் பின்பே நீ காண முடிவதைப்போல், மற்றவர்களிடம் நீ பேசிப் பழகுகையிலேயே அவர்கள் உன் பண்புகளை முழுமையாய் மதித்துணர முடியும்.
பேச்சைத் தொடங்கும் சங்கடத்தை மேற்கொள்ளுதல்
‘தனிமையுணர்ச்சியுடைய ஓர் ஆளுக்கு மிகச் சிறந்த அறிவுரையானது, மற்ற ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே,’ என ஐ.மா. மன ஆரோக்கிய தேசீய ஸ்தாபனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் சொல்லியிருக்கிறது. அந்த அறிவுரை “விரிவாகும்”படியான மேலும் “அனுதாபம்” காட்டும்படியான அல்லது மற்றவரிடத்தில் நம்மை வைத்து அவர்கள் உணர்ச்சிகளை விளங்கிக்கொள்ளும்படியான பைபிளின் அறிவுரையோடு ஒத்திருக்கிறது. (2 கொரிந்தியர் 6:11-13, NW; 1 பேருரு 3:8) இது நன்மை பயக்குகிறது. மற்றவர்களுக்காகக் கவலைப்படுதல் உன் சொந்தத் தனிமையுணர்ச்சியிலிருந்து உன் மனதை விலக்குவதுமட்டுமல்லாமல் மற்றவர்கள் உன்னில் அக்கறை எடுக்கவும் அவர்களைத் தூண்டுகிறது.
இவ்வாறு, வெறுமென உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் தனக்கு முகமன் கூறும்படி காத்திருப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைத் தான் செய்யப்போவதாகப் பத்தொன்பது வயது நட்டாலி தீர்மானித்தாள். ‘நானுங்கூட சினேகப்பான்மையுடன் இருக்கவேண்டும். மற்றப்படி நான் செருக்குள்ளவளென ஆட்கள் நினைப்பார்கள்,’ என்று அவள் சொல்கிறாள். ஆகையால் புன்சிரிப்புடன் தொடங்கு. மற்றவரும் உன்னை நோக்கி பதில் புன்சிரிப்புறலாம்.
அடுத்தப்படியாக, ஓர் உரையாடலைத் தொடங்கு. “முதல் தடவையாக அந்நியர்களிடம் சென்றது உண்மையில் பயமூட்டினது. அவர்கள் என்னை ஏற்கமாட்டார்களென நான் பயந்தேன்,” என 15 வயது லில்லியன் ஒப்புக்கொள்கிறாள். லில்லியன் எவ்வாறு உரையாடலைத் தொடங்குகிறாள்? அவள் சொல்வதாவது: “‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ ‘இவர்கள் உங்களுக்குத் தெரியுமா?’ என்பவற்றைப்போன்ற எளிய கேள்விகளை நான் கேட்கிறேன். எங்கள் இருவருக்குமே தெரிந்த ஓர் ஆள் இருக்கலாம். சீக்கிரத்தில் நாங்கள் பேச ஆரம்பித்துவிடுகிறோம்.” தயவான செயல்களும் தயாள மனப்பான்மையும் அவ்வாறே அருமையான நட்புறவுகளை வளர்க்க உனக்கு உதவிசெய்யும்.—நீதிமொழிகள் 11:25.
உன்னை ஒருபோதும் கைவிடமாட்டாத ஒரு நண்பரை நீ கொண்டிருக்க முடியுமென்பதையும் நினைவுபடுத்திக்கொள். இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.” (யோவான் 16:32) யெகோவா உனக்குங்கூட மிக அதிக நெருங்கிய நண்பராக முடியும். பைபிளை வாசிப்பதன்மூலமும் அவருடைய படைப்பைக் கூர்ந்து கவனிப்பதன்மூலமும் அவருடைய பண்பியல்பை அறிந்துகொள். ஜெபத்தின்மூலம் அவருடன் உன் நட்பை உறுதியாக்கு. முடிவில், யெகோவா தேவனுடன் கொண்டுள்ள நட்பே தனிமையுணர்ச்சியைப் போக்குவதற்கு மிகச் சிறந்த நிவாரணமாகும்.
அவ்வப்போது உனக்கு இன்னும் தனிமையுணர்ச்சி ஏற்பட்டால், மனதைத் தளர்த்திடு. அது முற்றிலும் இயல்பானதே. மிதமீறிய வெட்க உணர்ச்சி, நட்புறவு கொள்ளவும் மற்றவர்களோடுகூட இருக்கவும் உன்னைத் தடைசெய்கிறதென்றால் என்ன செய்வது?
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻ தனிமையாயிருப்பது கட்டாயமாய்க் கெட்டதா? தனிமையில் நன்மைகள் உண்டா?
◻ பெரும்பான்மையான தனிமையுணர்ச்சி ஏன் தற்காலிகமானது? உன் சொந்தக் காரியத்தில் இதை உண்மையென நீ கண்டிருக்கிறாயா?
◻ தீரா தனிமையுணர்ச்சி என்பது என்ன, இதை நீ எவ்வாறு போராடி வெல்ல முடியும்?
◻ மற்றவர்களோடு ‘பேச்சைத் தொடங்கும் சங்கடத்தை மேற்கொள்வதற்குச்’ சில வழிகள் யாவை? எந்த வழி உனக்குப் பயன்பட்டிருக்கிறது?
[பக்கம் 119-ன் சிறு குறிப்பு]
‘தனிமையுணர்ச்சியுடைய ஓர் ஆளுக்கு மிகச் சிறந்த அறிவுரையானது, மற்ற ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே,’ என ஐ.மா. மன ஆரோக்கிய தேசீய ஸ்தாபனம் சொல்லியிருக்கிறது
[பக்கம் 116,117-ன் படங்கள்]
நண்பர்கள் தூர இடங்களிலிருந்தாலும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்
[பக்கம் 118-ன் படம்]
தனிமையான நேரங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவை