Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?

நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?

அதிகாரம் 13

நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?

மிலானி 17 வயதாகும் வரையில்—அவள் தாய் தன் மனதில் கொண்டிருந்த மிகச் சிறந்தப் பிள்ளைக்குரிய கருத்துக்கு ஏற்ப எப்பொழுதும் வாழ்ந்துவந்திருந்தாள். பின்பு அவள் பள்ளி நடவடிக்கைகளிலிருந்து விலகினாள், விருந்துகளுக்கு அழைப்பை ஏற்பதை நிறுத்திக்கொண்டாள், தன் பள்ளித் தேறுதல் மதிப்பெண்கள் A-க்களிலிருந்து C-க்களுக்கு இறங்கினபோதும் அவள் கவலைக் கொண்டதாகத் தெரியவில்லை. என்ன நேர்ந்துவிட்டதென அவளுடைய பெற்றோர் கனிவாய் அவளைக் கேட்டபோது, “என்னைச் சும்மா விடுங்கள்! ஒன்றும் நேர்ந்துவிடவில்லை,” என வெடுக்கென்று கோபமாய்ப் பதிலளித்தாள்.

மாற்கு 14 வயதில், வெடுக்கென்று சீறும் கோப மனநிலையுடன் திடீர் உணர்ச்சிக்கு ஆட்படுபவனும் சண்டைபோடுபவனுமாய் இருந்தான். பள்ளியில் அவன் துடிதுடிப்பாயும் ஒழுங்கைக் குலைக்கும் போக்குடனும் இருந்தான். ஏமாற்றமோ கோபமோ அடைகையில், மோட்டார் சைக்கிளில் அவன் வனாந்தரத்தினூடே விரைவேகத்தில் செல்வான் அல்லது தன் பனிச் சறுக்கு காலணியில் செங்குத்தான குன்றுகளிலிருந்து கீழே வேகமாய்ப் பாய்ந்து சறுக்கிச் செல்வான்.

மிலானியும் மாற்குவும் இருவரும் ஒரே நோய்க் கோளாறின்—மனச்சோர்வின்—வகைகளால் வருந்தினர். 10-லிருந்து 15 சதவீத பள்ளிப் பிள்ளைகள் மனநிலைக் கோளாறுகளால் வருந்தலாமென தேசீய மனோ ஆரோக்கிய நிறுவனத்தின் டாக்டர் டோனால்ட் மக்னியு சொல்கிறார். அதைவிட குறைந்த எண்ணிக்கையானோர் கடுமையான மனச்சோர்வினால் அவதியுறுகின்றனர்.

சில சமயங்களில் உடலில் உள்ள குறைகள் இந்தப் பிரச்னைக்குக் அடிப்படை காரணமாயுள்ளது. ஏதாவது நோய் நுண்மங்கள் அல்லது என்டோக்ரின் சம்பந்தப்பட்ட நோய்கள், மாவிடாய்ச் சுழலின் இயக்குநீர் நிலைமாற்றங்கள், இரத்தத்தில் குளூக்கோஸ் மிக அதிகம் குறைவுபடுதல், சில மருந்துகள், நஞ்சு உலோகங்கள் அல்லது இரசாயனப்பொருட்களைப் பாதுகாப்பின்றி கையாளுதல், உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவுகள், சமநிலையற்ற திட்ட உணவு, இரத்தச் சோகை—இவை யாவும் மனச்சோர்வைத் தொடங்கிவைக்கலாம்.

நெருக்கடிகள் மனச்சோர்வின் மூலகாரணம்

எனினும், பருவ வயதுக்குட்பட்ட ஆண்டுகள்தாமே பெரும்பாலும் உணர்ச்சிசம்பந்த நெருக்கடிகளுக்கு மூலகாரணமாயிருக்கின்றன. வாழ்க்கையின் வாழ்வு தாழ்வுகளைக் கையாளுவதில் முதிர்ந்தவரின் அனுபவம் இல்லாமல், ஓர் இளைஞன் தன்பேரில் ஒருவரும் கவலைகொள்கிறதில்லையென உணர்ந்து பொதுவாய்ச் சாதாரண காரியங்களின்பேரில் வேதனையான மனச்சோர்வடைபவனாகலாம்.

பெற்றோர், ஆசிரியர்கள், அல்லது நண்பர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை எட்டத் தவறுவது துயரார்ந்த மனச்சோர்வுக்கு மற்றொரு காரணம். உதாரணமாக, டோனல்ட், நல்ல கல்வி-தேர்ச்சிப்பெற்ற தன் பெற்றோரைப் பிரியப்படுத்துவதற்குப் பள்ளியில் தான் முதன்மைநிலைபெற வேண்டுமென உணர்ந்தான். இதை அடைய தவறினபோது, அவன் மனச்சோர்வுற்றவனும் தற்கேடு செய்துகொள்பவனுமானான். “நான் சரியான எதையும் ஒருபோதும் செய்ததில்லை. நான் எப்பொழுதும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடப்பதன் மூலம் அவர்களை ஏமாற்றமடைய செய்கிறேன்,” என்று டோனல்ட் புலம்பினான்.

தோல்வி உணர்ச்சி மனச்சோர்வைத் தூண்டிவிடுமென்பது எப்பாப்பிரோதீத்து என்ற பேர்கொண்ட மனிதனின் காரியத்திலிருந்து தெரிகிறது. முதல் நூற்றாண்டின்போது, இந்த உண்மையுள்ள கிறிஸ்தவன், சிறைப்படுத்தப்பட்டிருந்த அப்போஸ்தலன் பவுலுக்கு உதவிசெய்யும்படி ஒரு தனிப்பட்ட வேலையுடன் அனுப்பப்பட்டான். ஆனால் அவன் பவுலினிடம் போய்ச் சேர்ந்தபோது விரைவில் நோயுற்றான்—அவன் பவுலைக் கவனிப்பதற்குப் பதில், பவுல் அவனைக் கவனிக்கவேண்டியதாயிற்று! அப்படியானால், எப்பாப்பிரோதீத்து ஏன் தன்னைக் குறித்து தோல்வியுற்றவனாக உணர்ந்து, ‘வியாகுலப்பட்டிருக்கக்கூடும் [மனச்சோர்வுற்றிருக்கக்கூடும், NW]’ என்பதை நீங்கள் கற்பனைசெய்து பார்க்கலாம். தான் நோயுறுவதற்குமுன் நடப்பித்த எல்லா நல்லக் காரியங்களையும் அவன் காணத்தவறினானெனத் தெரிகிறது.—பிலிப்பியர் 2:25-30.

ஓர் இழப்பு உணர்ச்சி

சாவதற்கு மிக இளைய வயது—இளைஞரும் தற்கொலையும் என்ற தன் புத்தகத்தில் ஃபிரான்ஸின் கிளாக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறாள்: “உணர்ச்சிவேகத்தால் உண்டான மனச்சோர்வுகளில் பலவற்றின் அடிப்படையில், மிக ஆழ்ந்து நேசித்த எவரையோ அல்லது எதையோ இழந்ததனால், உள்ளத்தின் ஆழத்தில் உண்டாயுள்ள ஓர் இழப்பு உணர்ச்சி தங்கியிருக்கிறது.” இவ்வாறு பெற்றோர் ஒருவரை மரணத்தின் மூலம் அல்லது விவாகரத்தின் மூலம் இழந்தது, ஒரு வேலையை அல்லது வாழ்க்கைத் தொழிலை இழந்தது, அல்லது தன் உடல்நலத்தை இழந்ததுங்கூட மனச்சோர்வின் மூலகாரணமாயிருக்கலாம்.

எனினும், ஓர் இளைஞனுக்கு மிக அதிகம் பாழாக்கும் இழப்பு அன்பை இழப்பதேயாகும், தான் வேண்டாதவனாய், அல்லது கவனிக்கப்படாதவனாய் இருக்கும் உணர்ச்சியேயாகும். “என் தாய் எங்களை விட்டுச் சென்றபோது நான் நம்பிக்கைத்துரோகம் செய்யப்பட்டவளாயும் தனிமையாயும் உணர்ந்தேன்,” என மாரி என்ற ஓர் இளம் பெண் வெளிப்படுத்தினாள். “என் உலகம் திடீரென்று தலைகீழாகத் தோன்றிற்று.”

அப்படியானால், விவாகரத்து, குடிவெறி, முறைதகாப் புணர்ச்சி, மனைவியை அடித்தல், பிள்ளையைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது தன் சொந்தப் பிரச்னைகளில் மூழ்கியுள்ள பெற்றோர்-ஒருவர் பிள்ளையை வெறுமென ஒதுக்கிவைத்தல் போன்ற குடும்பப் பிரச்னைகளை எதிர்ப்படுகையில் இளைஞர் சிலர் உணரும் மனக்குழப்பத்தையும் மனவேதனையையும் கற்பனை செய்து பார். பின்வரும் பைபிளின் நீதிமொழி எவ்வளவு உண்மையாயிருக்கிறது: “ஆபத்துக்காலத்தில் [துயரநாளில், NW] நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் [மனச்சோர்வைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உட்பட] குறுகினது”! (நீதிமொழிகள் 24:10) ஓர் இளைஞன் தன் குடும்பப் பிரச்னைகளுக்கு ஒருவேளை தன்னைத்தானே தவறாகக் குற்றப்படுத்தியுங்கொள்ளக்கூடும்.

நோய்க்குறிகளைத் தெரிந்துள்ளுதல்

மனச்சோர்வு வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. ஓர் இளைஞன் மன அமைதியைக் கெடுக்கும் ஏதோ நிகழ்ச்சியால் தற்காலிகமாய் நெறிபிறழ்ந்திருக்கலாம். ஆனால் பொதுவாய் இத்தகைய துயரார்ந்தநிலை பெரும்பாலும் குறுகிய காலத்தில் படிப்படியாய் மறைந்துபோய்விடும்.

எனினும், அந்த மனச்சோர்வுநிலை தொடர்ந்திருந்து அந்த இளைஞன் அல்லது இளம் பெண் பயனற்ற உணர்ச்சி, கவலை, கோபம் போன்ற உணர்ச்சிகளோடு பொதுவான எதிர்மறை உணர்ச்சியைக் கொண்டிருந்தால், இது குறைந்ததர நாட்பட்ட மனச்சோர்வு என்று மருத்துவர்கள் அழைக்கும் நோயாக வளரலாம். (தொடக்கத்தில் குறிப்பிட்ட) மாற்கு மற்றும் மிலானியின் அனுபவங்கள் காட்டுகிறபடி, நோய்க்குறிகள் பேரளவில் வேறுபடலாம். ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் கவலையால் பீடிக்கப்பட்டிருக்கலாம். மற்றொருவன் எப்பொழுதும் களைப்பாயும், பசியில்லாமலும், தூக்கம்வராதத் தொந்தரவை அனுபவித்துக்கொண்டும், எடையை இழந்துகொண்டும், அல்லது வினைமையான விபத்துகளை அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம்.

சில இளைஞர்கள், ஒன்றன்பின் ஒன்றாக முடிவற்ற விருந்துகளியாட்டம், வரைமுறையற்ற பாலுறவு, வேண்டுமென்றே கலையழிவு செய்தல், மீறிய குடிவெறி, மற்றும் இவற்றைப்போன்ற தங்குதடையற்ற இன்பத்தில் மூழ்குவதன்மூலம் மனச்சோர்வை மறைக்க முயலுகின்றனர். “நான் ஏன் எப்பொழுதும் வெளியில் சென்றுகொண்டிருக்கவேண்டுமென எனக்கே உண்மையில் தெரியவில்லை, நான் தனிமையில் இருந்தால், எவ்வளவு சங்கட உணர்ச்சி எனக்கு உண்டாகிறதென்பதுதான் எனக்குத் தெரியும்,” என்று 14-வயது பையன் அறிவித்தான். இது பின்வருமாறு பைபிளில் அறிவித்துள்ளபடியே இருக்கிறது: “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு.”நீதிமொழிகள் 14:13.

துயரார்ந்த மனநிலைக்கு மீறியதாயிருக்கையில்

குறைந்ததர நாட்பட்ட மனச்சோர்வைக் கவனித்துக் கையாளாவிடில், அது மேலுமதிய வினைமையான கோளாறுக்கு—பெரும்படியான கடும் மனச்சோர்வுக்கு வளர்ந்துவிடக்கூடும். (107-ம் பக்கம் பார்.) “நான் எனக்குள் ‘செத்து’ இருந்ததைப்போல் இடைவிடாமல் உணர்ந்தேன்,” என பெரும்படியான கடும் மனச்சோர்வு நோய்க்கு ஆளான மாரி விளக்கினாள். “நான் மனக்கிளர்ச்சிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தேன். இடைவிடாதத் திகில் உணர்ச்சி எனக்கு இருந்தது.” பெரும்படியான கடும் மனச்சோர்வில் உற்சாகமற்ற துயர மனப்பாங்கு இரக்கம் காட்டாமலும் பல மாதங்களுக்குத் தொடர்ந்துகொண்டும் இருக்கலாம். இதன் விளைவாக, இந்த வகையான மனச்சோர்வே—“மறைவான கொள்ளைநோய்” என இப்பொழுது பல நாடுகளில் கருதப்படுகிற—பருவ வயதுக்குட்பட்டோரின் தற்கொலைகளுக்கு மிகச் சாதாரண காரணமாயிருக்கிறது.

பெரும்படியான கடும் மனச்சோர்வுடன் இணைந்த மிகக் கடும் விடாப்பிடியாய் நீடிக்கும் உணர்ச்சி—மற்றும் சாவுக்கு வழிவகுக்கிற மிக மோசமானது —ஓர் ஆழ்ந்த நம்பிக்கையற்ற உணர்ச்சியாகும். பேராசிரியர் ஜான் E. மாக், பெரும்படியான கடும் மனச்சோர்வு கோளாறுக்கு ஆட்பட்ட விவியன் என்ற 14 வயது பெண்ணைப்பற்றி எழுதுகிறார். எல்லா வெளித்தோற்றங்களுக்கும் அவள், அக்கறையோடு கவனிக்கும் பெற்றோரைக்கொண்ட முழுநலம்வாய்ந்த இளம் பெண்ணாயிருந்தாள். எனினும், மிகக் கடும் மன முறிவுற்ற நிலையில், அவள் தன்னைத் தூக்குப்போட்டுக்கொண்டாள்! “தன் மனச்சோர்வு என்றாவது நீங்கும், தன்னுடைய வேதனையிலிருந்து கடைசியாக விடுதலையடைக்கூடும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்தது என்பதை முன்காண விவியனுக்குத் திறமை இயலாமற்போனதே, அவள் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததன் முக்கிய காரணமாகும்,” என்று பேராசிரியர் மாக் எழுதினார்.

இவ்வாறு பெரும்படியான மனச்சோர்வால் தாக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் ஒருபோதும் சுகமடையபோவதில்லை, எதிர்காலம் என்பது தங்களுக்குக் கிடையாது என்று உணருகின்றனர். இத்தகைய நம்பிக்கையற்றத் தன்மை பெரும்பாலும் தற்கொலைக்கேதுவான நடத்தைக்கு வழிநடத்துகிறதென நிபுணர்கள் சொல்கின்றனர்.

எனினும், தற்கொலை இதற்குப் பதிலல்ல. தன் வாழ்க்கை ஓயா மனக்கிலிகொண்ட வாழ்க்கையாயிருந்த மாரி, பின்வருமாறு தெரிவித்தாள்: “தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் என் மனதுக்குள் நிச்சயமாய் வந்தன. ஆனால் நான் என்னைக் கொல்லாதிருக்கும் வரையில் எப்பொழுதும் நம்பிக்கை இருந்ததென உணர்ந்தேன்.” எல்லாவற்றையும் முடிவுசெய்துகொள்வது நிச்சயமாகவே எதையும் தீர்ப்பதில்லை. வருந்தத்தக்கதாக, மனச்சோர்வை எதிர்ப்படுகையில், இளைஞர் பலர், வேறு எவையாவது இருப்பதையோ ஆதரவான முடிவு கூடியதாயிருப்பதையோ கற்பனைசெய்து காணவும் முடிகிறதில்லை. மாரி இவ்வாறு வெறிமயக்கப்பொருளை ஊசியின்மூலம் தன் உடலில் உட்புகுத்திக்கொள்வதால் தன் பிரச்னையை மறைத்து வைக்க முயற்சி செய்தாள். அவள் சொன்னதாவது: “அந்த வெறிமயக்கப்பொருளின் பாதிப்பு நீங்கும் வரையில்—எனக்கு நிறைய தன்னம்பிக்கை இருந்தது.”

சிறிய மனவேதனையைக் கையாளுதல்

மனச்சோர்வு உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு நல்லறிவுள்ள வழிகள் இருக்கின்றன. “சிலர் தாங்கள் பசியாயிருப்பதால் மனச்சோர்வடைகின்றனர்,” என்று நியு யார்க்கில், மனச்சோர்வு நோய் நிபுணர் டாக்டர் நேதன் S. கிளைன் கவனித்துக் கூறினார். “ஓர் ஆள் காலையுண்டி சாப்பிட்டிரான் மேலும் ஏதோ காரணத்தினிமித்தம் பகலுணவையும் தவறவிட்டிருக்கலாம். பின்பு மூன்று மணிக்குள் தான் ஏன் நல்ல முறையில் உணருகிறதில்லையென சிந்திக்கத் தொடங்குகிறான்.”

நீ உண்ணும் உணவும் வேறுபாட்டை உண்டுபண்ணலாம். மனச்சோர்வுணர்ச்சியால் வாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண், டெபி பின்வருமாறு ஒப்புக்கொண்டாள்: “சிற்றுண்டி என் மனநிலைக்கு அவ்வளவு தீங்கு செய்யத்தக்கதென நான் உணரவில்லை. நான் அதைப் பேரளவில் உண்டேன். ஆனால் நான் குறைந்த இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடுகையில், நல்ல சுகஉணர்ச்சி எனக்கு இருப்பதை இப்பொழுது கவனிக்கிறேன்.” மற்ற உதவியான படிகள்: ஏதோ ஒருவகையான உடற்பயிற்சி உன் மனதெம்புகளை உயர்த்தலாம். மனச்சோர்வு உடல் நோய்க் குறியாக இருக்க முடியுமாதலால், சிலருடைய காரியங்களில், மருத்துவ சோதிப்பு செய்வது தகுந்தது.

மனதின் போராட்டத்தின்மேல் வெற்றிக்கொள்ளுதல்

உன்னைப்பற்றி எதிர்மறையான எண்ணங்கள் கொண்டிருப்பதால் மனச்சோர்வு பெரும்பாலும் கொண்டுவரப்படுகிறது அல்லது மேலும் மோசமாக்கப்படுகிறது. 16-வயது ஈவ்லின் பின்வருமாறு புலம்பினாள்: “பல ஆட்கள் உன்னைக் கடுமையாய் குற்றங்காண்பதை அனுபவித்தப் பின் நீ ஒன்றுக்கும் உதவாதவள் என்று எண்ணும்படி உன்னைச் செய்விக்கிறது.”

ஓர் ஆளாக உன் தகுதியை அளவிடுவது மற்றவர்களுக்குரியதா? கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலின்மீதும் இதைப்போன்ற பரியாசத்தைக் குவித்தார்கள். அவன் பலவீனன் அற்பப் பேச்சாளன் என்று சிலர் கூறினர். இது தன்னைப் பயனற்றவனென பவுல் உணரும்படி செய்ததா? இல்லவே இல்லை! கடவுளுடைய தராதரத்தை எட்டுவதே முக்கியமான காரியமென பவுல் அறிந்திருந்தான். கடவுளுடைய உதவியால் தான் நிறைவேற்றியிருந்ததன்பேரில் அவன் பெருமைபாராட்டலாம்—மற்றவர்கள் என்ன சொல்லிக்கொண்டிருந்தாலும் கவலையில்லை. கடவுளுடன் உனக்கும் ஒரு நிலைநிற்கை இருக்கிற இந்த உண்மையைக் குறித்து நீயும் உன்னை நினைப்பூட்டிக்கொண்டிருந்தால், அந்தச் சோர்ந்த உணர்ச்சி பெரும்பாலும் உன்னைவிட்டு நீங்கும்.—2 கொரிந்தியர் 10:7, 10. 17, 18.

ஏதோ பலவீனத்தால் அல்லது நீ செய்துவிட்ட ஏதோ பாவத்தின் காரணமாக நீ மனச்சோர்வுற்றிருந்தால் என்ன செய்வது? “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும் [வெண்மையாக்கப்படும், NW],” என்று கடவுள் இஸ்ரவேலருக்குக் கூறினார். (ஏசாயா 1:18) நம்முடைய பரலோகத் தகப்பனின் இரக்கத்தையும் பொறுமையையும் கவனிக்க ஒருபோதும் தவறாதே. (சங்கீதம் 103:8-14) ஆனால் உன் பிரச்னையை மேற்கொள்ளவும் நீ கடினமாய் உழைத்துவருகிறாயா? குற்ற உணர்ச்சிகளை நீக்கி உன் மனதுக்கு அமைதியைத் தரவேண்டுமானால், நீ உன் பங்கைச் செய்யவேண்டும். நீதிமொழிகள் சொல்கிறபிரகாரம்: “அவைகளை [தன் பாவங்களை] அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”—நீதிமொழிகள் 28:13.

மனச்சோர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கு மற்றொரு வழி நடைமுறையில் நிறைவேற்றக்கூடிய இலக்குகளை உனக்கு வைத்தலாகும். வெற்றிகரமாயிருக்க உன் பள்ளி-வகுப்பில் நீ முதலிடத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. (பிரசங்கி 7:16-18) எண்ணங்கள் நிறைவேறாமற்போதல் வாழ்க்கையின் ஒரு பாகமென்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள். இவை ஏற்படுகையில், ‘எனக்கு நடப்பதைப்பற்றி ஒருவரும் கவலைப்பட்டுக்கொள்கிறதில்லை, ஒருக்காலமும் ஒருவரும் கவலைப்படப்போவதுமில்லை,’ என்று உணருவதைவிட, ‘அதை நான் அடக்கி மேற்கொள்வேன்,’ என்று உனக்கு நீயே சொல்லிக்கொள். நன்றாய் அழுவதிலும் எந்தத் தவறும் இல்லை.

நிறைவேற்றத்தின் மதிப்பு

“மனமுறிவு தானாகப் போய்விடுகிறதில்லை. நீ வேறு போக்கில் சிந்திக்கவேண்டும் அல்லது உடல்சம்பந்தமாய் ஈடுபடவேண்டும். நீ எதையாவது செய்யத் தொடங்கவேண்டும்,” என்று நம்பிக்கையிழந்த மனச்சோர்வு உணர்ச்சிப்போக்குகளினூடே வெற்றிகரமாய் வாழ்ந்த டாஃபின் அறிவுரை கூறுகிறாள். துயரார்ந்த மனநிலையைப் போராடி மேற்கொள்ள கடினமாய் உழைத்துக்கொண்டிருந்தபோது லின்டா சொன்னதைக் கவனி: “நான் தைக்கும் வெறியில் இருக்கிறேன். நான் என் துணிமணிகள் முழுவதிலும் வேலைசெய்ய முடியும், காலப்போக்கில், என்னைத் தொல்லைப்படுத்துவதை நான் மறந்துவிடுவேன். இது உண்மையில் உதவிசெய்கிறது.” நீ நல்ல திறமைப்பெற்றக் காரியங்களைச் செய்வது உன் சுய-மதிப்பைக் கட்டியெழுப்பக்கூடும் —அது மனச்சோர்வின்போது பொதுவாய் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறது.

மேலும் உனக்கு இன்பமகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நன்மை பயக்கும். உனக்கு மகிழ்ச்சிதரும் ஏதாவதை வாங்கக் கடைக்குச் செல்ல, விளையாட்டுகள் விளையாட, உனக்கு மிக விருப்பமான பண்டத்தைச் சமைக்க, புத்தகக் கடையிலுள்ள புத்தகங்களைப் பார்வையிட, வெளியில் சாப்பிட, வாசிக்க, விழித்தெழு! பத்திரிகையில் தோன்றுபவற்றைப்போன்ற ஒரு புதிரைக் கண்டுபிடிப்பதில் முற்பட முயற்சிசெய்துபார்.

சிறு இன்பப் பயணங்களைத் திட்டமிடுவதில் அல்லது சிறு இலக்குகளைத் தனக்கு வைப்பதில் தான் தன் மனச்சோர்வு நிலையைச் சமாளிக்க முடிந்ததென டெபி கண்டாள். எனினும், மற்றவர்களுக்கு உதவிசெய்ய காரியங்களைச் செய்வதே அவளுடைய மிகப் பெரிய உதவிகளில் ஒன்றாய் நிரூபித்தது. டெபி சொன்னதாவது: “மிகச் சோர்வுற்றிருந்த இந்த இளம் பெண்ணை நான் சந்தித்தேன், பைபிளைப் படிக்கும்படி நான் அவளுக்கு உதவிசெய்ய தொடங்கினேன். இந்த வாராந்தர கலந்தாராய்ச்சிகள் அவள் எவ்வாறு தன் மனச்சோர்வை மேற்கொள்ள முடியுமென அவளுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பை அளித்தன. பைபிள் அவளுக்கு உண்மையான நம்பிக்கையைக் கொடுத்தது. அதேசமயத்தில் இது எனக்கும் உதவிசெய்தது.” இயேசு சொன்னபடி: “பெற்றுக்கொள்வதில் இருப்பதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் உண்டு.”—அப்போஸ்தலர் 20:35, NW.

அதைப்பற்றி எவரிடமாவது பேசு

“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) புரிந்துகொள்ளும் ஓர் ஆளிடமிருந்துவரும் “நல்வார்த்தை” மிக அதிக வேறுபட்டை உண்டுபண்ண முடியும். எந்த மனிதனும் உன் இருதயத்திலுள்ளவற்றை வாசித்துத் தெரிந்துகொள்ள முடியாது, ஆகையால், உதவிசெய்ய திறமையுடையவரான நீ நம்பிக்கை கொண்டுள்ள ஒருவரிடம் உன் இருதயத்தை ஊற்றிவிடு. நீதிமொழிகள் 17:17-ன் பிரகாரம்: “ஒரு நண்பன் எல்லாக் காலங்களிலும் நேசிக்கிறான், இக்கட்டுக் காலங்களில் ஒரு சகோதரனுமாகிறான்.” (The Bible in Basic English) “அதை உனக்குள்ளேயே வைத்திருந்தால் ஒரு கனத்த பாரத்தைத் தன்னந்தனிமையில் சுமப்பதைப்போல் இருக்கும். ஆனால், உதவிசெய்ய தகுதியுடைய ஒருவரோடு அதை நீ பகிர்ந்துகொள்கையில், அது மிக அதிக இலேசாகிறது,” என்று 22-வயது ஈவான் சொல்கிறாள்.

‘ஆனால் நான் அதை ஏற்கெனவே முயன்று பார்த்தேன், எனக்குக் கிடைப்பதெல்லாம் வாழ்க்கையின் மகிழ்ச்சிமிக்கப் பகுதியை நோக்கும்படி கூறும் ஒரு பேச்சேயாகும்,’ என்று நீ ஒருவேளை சொல்லலாம். அப்படியானால், புரிந்துகொள்பவரும் கவனித்துக்கேட்பவருமாக மட்டுமல்லாமல் உண்மையான ஆலோசனை கூறுபவருமாயிருக்கும் ஒருவரை நீ எங்கே கண்டடையலாம்?—நீதிமொழிகள் 27:5, 6.

உதவியைக் கண்டடைதல்

உன் பெற்றோருக்கு ‘உன் இருதயத்தைத் தருவதன்மூலம்’ தொடங்கு. (நீதிமொழிகள் 23:26) மற்ற எவரைப் பார்க்கிலும் அவர்களே உன்னை நன்றாய் அறிந்திருக்கிறார்கள், நீ அவர்களுக்கு இடங்கொடுப்பாயானால் அவர்கள் பெரும்பாலும் உதவிசெய்ய முடியும். அந்தப் பிரச்னைக் கடுமையானதென அவர்கள் கூர்ந்தறிந்தால், அத்துறையில் கைதேர்ந்தவரின் உதவியைப்பெற அவர்கள் ஏற்பாடுசெய்யலாம். a

கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் மற்றொரு உதவிமூலமாயிருக்கின்றனர். “பல ஆண்டுகளாக நான் அத்தகைய சாக்குப்போக்குச் சொல்லி மறைத்துவந்ததால் நான் உண்மையில் எவ்வளவு மனச்சோர்வடைந்திருந்தேனென்பது ஒருவருக்கும் உண்மையில் தெரியாது,” என்று மாரி வெளிப்படுத்தினாள். “ஆனால் பின்பு சபையிலுள்ள முதிர்ந்த பெண்களில் ஒருவரிடம் நான் அதை நம்பிக்கையாகத் தெரிவித்தேன். அவர்கள் அவ்வளவு கனிவாய்ப் புரிந்துகொண்டார்கள்! எனக்கிருந்த அதே அனுபவங்களில் சிலவற்றை அவர்கள்தாமே அனுபவித்திருந்தார்கள். ஆகையால் மற்ற ஆட்களும் இவற்றைப்போன்ற காரியங்களை அனுபவித்து அவற்றிலிருந்து சுகப்பட்டு வெளிவந்தனரென தெரிந்துணர்ந்தது எனக்கு ஊக்கமூட்டியது.”

இல்லை, மாரியின் மனச்சோர்வு உடனடியாகப் போய்விடவில்லை. ஆனால், கடவுளுடன் தன் உறவை அவள் மேலும் ஆழமாக்கிக் கொண்டிருந்தபோது படிப்படியாய் அவளுடைய உணர்ச்சிவேகங்களை அவள் சமாளிக்கத் தொடங்கினாள். உன் சுகநலத்தில் உண்மையாய் அக்கறைகொண்டுள்ள நண்பர்களையும் “குடும்பத்தை”யும் நீயும் யெகோவாவின் உண்மையான வணக்கத்தாருக்குள் காணலாம்.—மாற்கு 10:29, 30; யோவான் 13:34, 35.

இயல்புக்கு மீறிய வல்லமை

எனினும், மனச்சோர்வை விலக்கக்கூடிய மிக அதிக வல்லமைவாய்ந்த உதவி, கடவுளிடமிருந்து வருகிற “இயல்புக்கு மீறிய வல்லமை,” என்று அப்போஸ்தலன் பவுல் அழைத்ததேயாகும். (2 கொரிந்தியர் 4:7, NW) நீ அவர்மீதே நம்பியிருந்தால் மனச்சோர்வை எதிர்த்துப் போக்க அவர் உனக்கு உதவிசெய்ய முடியும். (சங்கீதம் 55:22) தம்முடைய பரிசுத்த ஆவியைக்கொண்டு அவர் உன் இயல்பான ஆற்றல்களுக்கு மிஞ்சிய வல்லமையைக் கொடுக்கிறார்.

கடவுளிடம் கொண்டுள்ள இந்த நட்பு உண்மையில் திரும்ப நம்பிக்கை உறுதியளிக்கிறது. ஜியார்ஜியா என்ற இளம் பெண் சொன்னதாவது, “எனக்குத் துயரமிகுந்தக் காலங்கள் உண்டாயிருக்கையில், நான் மிக அதிகம் ஜெபிக்கிறேன். எனக்கு எவ்வளவு கடுஞ்சிக்கலான பிரச்னை இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை யெகோவா அதிலிருந்து வெளியேற ஒரு வழியை அளிக்கப்போகிறார் என்று எனக்குத் தெரியும்.” டாஃப்னி இதை ஒப்புக்கொண்டு மேலும் சொல்வதாவது: “நீ யெகோவாவிடம் எல்லாவற்றையும் சொல்லலாம். உன் இருதயத்தை வெறுமென அவரிடம் ஊற்றிவிடு, எந்த மனிதனாலும் முடியாவிடினும், அவர் உன்னை உண்மையில் புரிந்துகொள்கிறார் மேலும் உன்னைப்பற்றிக் கவலைகொள்கிறார்.”

ஆகையால் நீ மனச்சோர்வுற்றிருந்தால், கடவுளிடம் ஜெபி. ஞானமும் புரிந்துகொள்ளும் தன்மையுமுள்ள ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடம் உன் உணர்ச்சிகளை மனம்விட்டு பேசு. கிறிஸ்தவ சபையில் திறமையுள்ள ஆலோசனைக்காரராயிருக்கும் “மூப்பர்களை” நீ கண்டடைவாய். (யாக்கோபு 5:14, 15) கடவுளுடன் உன் நட்பைத் தொடர்ந்து காத்துக்கொள்ளும்படி உனக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். ஏனெனில் கடவுள் உன்னைப் புரிந்துகொள்கிறார் ‘அவர் உனக்காகக் கவலைப்படுகிறவரானபடியால்’ உன் விசாரங்களையெல்லாம் அவர்மீது போட்டுவிடும்படி அவர் உன்னை அழைக்கிறார். (1 பேதுரு 5:6, 7, தி.மொ.) நிச்சயமாகவே, பைபிள் பின்வருமாறு வாக்குக்கொடுக்கிறது: “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கெள்ளும்.”—பிலிப்பியர் 4:7.

[அடிக்குறிப்புகள்]

a பெரும்படியான மனச்சோர்வு கோளாறுக்கு ஆளானவர்கள், தற்கொலைசெய்துகொள்வதன் அபாயத்தினிமித்தம், அந்தத் துறையில் கைதேர்ந்தவர்களின் உதவியைப் பெறவேண்டுமென மருத்துவ நிபுணர்கள் பெரும்பான்மையர் அறிவுரை கூறுகின்றனர். உதாரணமாக, மருத்துவத் தொழிலர் மாத்திரமே அளிக்கக்கூடிய மருத்துவம் தேவைப்படலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ ஓர் இளைஞனை மனச்சோர்வடைய செய்விக்கும் சில காரியங்கள் யாவை? நீ எப்போதாவது அவ்வாறு உணர்ந்ததுண்டா?

◻ குறைந்ததர நாட்பட்ட மனச்சோர்வின் நோய்க்குறிகளை நீ அடையாளங்கண்டுகொள்ள முடியுமா?

◻ பெரும்படியான கடும் மனச்சோர்வை அடையாளங் கண்டுகொள்வது எவ்வாறென உனக்குத் தெரியுமா? இது ஏன் அவ்வளவு வினைமையான கோளாறு?

◻ மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதற்குரிய சில வழிகளைக் குறிப்பிடு. இந்த ஆலோசனைகளில் எதாவது உனக்குப் பயன்படுகிறதா?

◻ நீ வினைமையாய் மனச்சோர்வுற்றிருக்கையில் மனதிலுள்ளவற்றை வெளிப்படுத்திப் பேசுவது ஏன் அவ்வளவு முக்கியம்?

[பக்கம் 106-ன் சிறு குறிப்பு]

கடுமையான மனச்சோர்வே பருவ வயதுக்குட்பட்டோரின் தற்கொலைகளுக்கு மிகச் சாதாரண காரணமாயிருக்கிறது

[பக்கம் 112-ன் சிறு குறிப்பு]

கடவுளுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பது கடும் மனச்சோர்வைக் கையாள உனக்கு உதவி செய்யும்

[பக்கம் 107-ன் பெட்டி]

அது கடும் மனச்சோர்வாய் இருக்கக்கூடுமா?

வினைமையான பிரச்னை இல்லாமலே பின்வரும் நோய்க்குறிகளில் ஒன்றை அல்லது மேற்பட்டவற்றை எவராயினும் தற்காலிகமாய் அனுபவிக்கலாம். எனினும், நோய்க்குறிகளில் பல விடாது தொடர்ந்துகொண்டிருந்தால், அல்லது அவற்றில் ஏதாவது உன் வழக்கமான நடவடிக்கைகளில் இடையிட்டுத் தடுத்துக்கொண்டிருக்குமளவுக்குக் கடுமையாயிருந்தால், உனக்கு (1) உடல்நோய் இருக்கலாம் ஒரு மருத்துவரால் தீர சோதிக்கப்படுவது தேவைப்படலாம். அல்லது (2) வினைமையான மனக்கோளாறு—பெரும்படியான கடும் மனச்சோர்வு இருக்கலாம்.

எதுவும் உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதில்லை. நீ ஒருகாலத்தில் மகிழ்ந்தனுபவித்தச் செயல்களில் மகிழ்ச்சியைக் காண முடிகிறதில்லை. மப்புமந்தார நிலையில் வாழ்க்கையின் இயக்கங்களினூடே வெறுமென சென்றுகொண்டிருப்பதுபோல் நீ உயிர்த்தோற்றம் குன்றியவனாய் உணருகிறாய்.

முற்றிலும் பயனற்றத்தன்மை. உடனுதவியளிப்பதற்கு உன் வாழ்க்கை முக்கியமான எதையும் கொண்டில்லை அது முற்றிலும் பயனற்றதென நீ உணருகிறாய். மிகுந்தக் குற்றப்பொறுப்புள்ளவனாய் நீ உணரலாம்.

மனநிலையில் தீவிரமான மாற்றம். ஒருகாலத்தில் நீ பிறருடன் தாராளமாய் பழகுபவனாய் இருந்தாயென்றால், நீ ஒருவேளை ஒதுங்கிப் பின்வாங்குபவனாகலாம் அல்லது அதற்கு எதிர்மாறாக இருக்கலாம். நீ அடிக்கடி அழலாம்.

முற்றிலும் நம்பிக்கையற்றத்தன்மை. காரியங்கள் மோசமாயிருக்கின்றன, அவற்றைப்பற்றி எதுவும் நீ செய்வதற்கில்லை, நிலைமைகள் ஒருபோதும் மேம்பாடடையாவென நீ உணருகிறாய்.

நீ செத்துப்போனால் நலமாயிருக்குமென விரும்புகிறாய். மனத்துயரம் அவ்வளவு அதிகமாயிருப்பதால் நீ செத்தால் நலமாயிருக்குமென அடிக்கடி உணருகிறாய்.

மனதை ஒன்றில் ஒருமுகப்படுத்திச் செலுத்த முடியாமை. சில எண்ணங்களைக் கருத்து ஏற்காமல் திரும்பத்திரும்பச் சிந்திக்கிறாய் அல்லது கருத்து மனதில் பற்றாமல் நீ வாசிக்கிறாய்.

உண்பதில் அல்லது வெளிப்போகும் பழக்கத்தில் மாற்றம். பசியின்மை அல்லது மிதமிஞ்சி உண்ணுதல். இடையிடையே மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுதல்.

தூங்கும் பழக்கங்கள் மாறுகின்றன. குறைந்த அல்லது மிதமிஞ்சிய தூக்கம். தீக்கனவுகள் உனக்கு அடிக்கடி உண்டாகலாம்.

வலிகளும் நோவுகளும். தலைவலிகள், பிடிப்புகள், அடிவயிற்றிலும் மார்பிலும் நோவுகள். எந்த நல்லக் காரணமுமில்லாமல் களைத்துப்போன உணர்ச்சியை நீ இடைவிடாது கொண்டிருக்கலாம்.

[பக்கம் 108-ன் படம்]

தன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எட்டத் தவறுவது ஓர் இளைஞனை மனச்சோர்வு உணர்ச்சியடையும்படி செய்விக்கலாம்

[பக்கம் 109-ன் படம்]

மற்றவர்களிடம் பேசி உன் இருதயத்தில் உள்ளவற்றை ஊற்றிவிடுவது எதிர்த்துச் சமாளிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று

[பக்கம் 110-ன் படம்]

மற்றவர்களுக்குக் காரியங்களைச் செய்வது மனச்சோர்வைப் போக்குவதற்கு இன்னொரு வழி