Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி?

ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி?

அதிகாரம் 32

ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி?

“விவாக நோக்குடன் பழகுவது தோல்வியுறுவதால்தான் அநேக விவாகங்களும் தோல்வியடைகின்றன. இக்குறிப்பை அடிக்கடி திரும்பத்திரும்ப சொல்ல வேண்டியதில்லை.” இவ்விதமாகக் குடும்ப வாழ்க்கை என்ற பொருளின்பேரில் ஆராய்ச்சி செய்த பால் H. லாண்டிஸ் சொல்கிறார். இந்த வாக்கு மூலம் சரி என்பதை லூயிஸ் உறுதியாக சொல்ல முடியும். அவள்: “நான் செய்த பெரிய தவறு, ஆண்டி ஒரு நபராக எப்படிப்பட்டவர் என்று பார்க்க என்னை அனுமதிப்பதற்கு முன் அவரோடு பாச உணர்ச்சியோடு பிணைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் விவாக நோக்குடன் பழகுதல், ஒருவரோடொருவர் என்ற தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு மட்டுப்பட்டதாக இருந்தது. ‘விரும்பத்தகும்’ இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அவர் எப்படிப் பிரதிபலித்தார் என்று நான் பார்க்கவே இல்லை” என்று சொல்லுகிறாள். அவர்களுடைய விவாகம் விவாகரத்துவினால் சின்னாபின்னமாகியது, இப்படியான சோகக் கதையை தவிர்ப்பதற்கு எது அவசியம்? விவாக நோக்குடன் பழகுதல் வெற்றிபெறச் செய்தல்!

எதிர்பாலாருடன் பழகுவதற்கு முன்பாக

“விவேகியோ (ஆணோ, பெண்ணோ) தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) உனக்குத் தெரியாத ஒருவரிடம் காதல் உணர்ச்சிகளை வளர்ப்பது அழிவைத் தேடிக்கொள்வதாகும்—அந்த நபர் கவர்ச்சிகரமானவராக தோன்றினாலும்கூட. உன்னுடைய உணர்ச்சிகள், இலக்குகள் இவைகளினின்று தொலை தூரமாக வித்தியாசமான ஒருவரை விவாகம் செய்வதற்கு இது உன்னை நடத்திச் செல்லக்கூடும்! ஆகவே அந்த நபரை மற்றவர்களோடு இருக்கும் சூழ்நிலையில் கவனிப்பது விவேகமாக இருக்கிறது, ஒருவேளை அவர் ஏதோ ஒரு விதமான பொழுதுபோக்கைச் சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருக்கும்போது கவனிக்கலாம்.

பத்துவருட காலமாக விவாகத்தில் சந்தோஷமாயிருக்கிற டேவ் சொல்வதாவது: “ஆரம்பத்திலேயே நெருங்கி செல்வேனானால், என்னுடைய பாச உணர்ச்சிகள் நான் செய்யும் முடிவை மேகம்போல் மூடிடும் என்பதை நான் அறிந்திருந்தேன். அவளில் நான் சிரத்தை உடையவனாய் இருக்கிறேன் என்பதை அவள் அறியாதவிதத்தில் ரோஸை தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் மற்றவர்களை எப்படி நடத்தினாள், அல்லது விளையாட்டுக் காதலில் ஈடுபடுகிற பெண்ணா என்று பார்க்க முடிந்தது. சாதாரணப் பேச்சுகளிலே, அவளுடைய சூழ்நிலைகளையும், இலக்குகளையும் நான் கண்டுபிடித்தேன்.” அவன் அல்லது அவளுக்கு எப்பேர்ப்பட்ட பெயர் இருக்கிறது என்பதை அந்த நபருக்கு நன்கு தெரிந்த ஒருவரோடு பேசிக் கண்டுபிடிப்பதும் உதவக்கூடியதாய் இருக்கிறது.—நீதிமொழிகள் 31:31-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.

எதிர்பாலாருடன் பழகுவதற்கான முதல் சந்திப்புகள்

ஒருவர் உங்களுக்குத் தகுதியான விவாகத் துணைவராக இருப்பார் என்று கண்டறிந்த பின்னர் அவரிடம் சென்று அவரை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசை இருப்பதாகத் தெரிவிக்கலாம். a அவர் அதற்கு இணங்குகிறார் என்று எடுத்துக்கொண்டால், உன்னுடைய முதல் சந்திப்பு ஒரு விரிவான விவகாரமாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை மத்தியான சாப்பாட்டின்போது பழகுவதற்கான சந்திப்பாகவும் அல்லது கூட்டத்தின் ஒரு பாகமாக இருப்பதனாலும்கூட நீங்கள் அவரை மேலுமாக அறிந்துகொள்ள உதவும், அப்பொழுது அந்த உறவை மேலுமாகத் தொடர வேண்டுமா என்பதை நீ தீர்மானிக்க முடியும். காரியங்களை சாதாரண அளவில் வைத்துக் கொள்வதானது, இருவரும் முதலில் உணரக்கூடிய அதிர்ச்சியை குறைவாக்குவதற்கு உதவும். உன்னை நிபந்தனைக்குட்படுத்திடும் கூற்றுகளை அவசரப்பட்டுச் சொல்வதைத் தவிர்ப்பதன் மூலம் உங்களில் ஒருவர் சிரத்தையை இழக்கும்போது நிராகரிக்கப்பட்ட அல்லது சங்கடமான நிலையின் உணர்ச்சிகளை நீ குறைத்துக்கொள்ளலாம்.

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளின் திட்டங்கள் என்னவாயிருந்தாலும், சரியான நேரத்தில், நல்ல பொருத்தமான உடை அணிந்து செல். நல்ல சம்பாஷணை செய்யும் திறமைகளை வெளிக்காட்டு. கவனித்து செவிசாய்ப்பவராயும் இரு. (யாக்கோபு 1:19) இப்படிப்பட்ட காரியங்களில் இப்படித்தான் கண்டிப்பாக செய்யவேண்டும் என்று இல்லாவிட்டாலும், ஓர் இளம் மனிதன் அந்த நாடுகளில் அனுசரிக்கப்படும் உபகாரங்களைக் கைக்கொள்ள விரும்புவார். இளம் பெண்ணுக்காகக் கதவைத் திறந்துவிடுதல், அல்லது ஆசனத்தில் அமர உதவிசெய்தல் போன்றவை இதில் உட்படலாம். ஓர் இளம் பெண் தன்னை ராஜ குமாரத்தியாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காமல் பழகுவதற்கான சந்திப்பு முயற்சிகளோடு அடக்கமாக ஒத்துழைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மரியாதையோடு நடத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்பதற்கு ஒரு மாதிரியை வைக்கக்கூடும். ‘பலவீனப் பாண்டமாக, மனைவிக்குக் கனத்தைக் கொடுக்கும்படி’ கணவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. மனைவியும் ‘தன் புருஷனுக்கு ஆழ்ந்த மரியாதை’ காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.—1 பேதுரு 3:7; எபேசியர் 5:33.

கைகளைப் பிடிப்பது, முத்தமிடுதல், அல்லது கட்டி அணைத்தல் பொருத்தமானதா? அப்படியானால் எப்பொழுது? அன்பைத் தெரிவிக்கும் செயல்கள், தன்னல காம உணர்ச்சியின் வெளிக்காட்டாக இல்லாமல், நேசத்தின் மெய்யான வெளிக்காட்டாக இருக்குமானால், அவை சுத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கின்றன. பைபிள் புத்தகமாகிய சாலொமோனின் உன்னதப்பட்டு சூலேமியப் பெண்ணுக்கும் அவள் நேசித்து மணந்துகொள்ளப்போகும் மேய்ப்பப் பையனுக்கும் இடையே நேசத்துக்குரிய பொருத்தமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்று காட்டுகிறது. (சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:2; 2:6; 8:5) ஆனால் அந்தச் சுத்தமான ஜோடியைப் போல, நேசத்தின் வெளிக்காட்டுதல்கள் அசுத்தமாகவோ அல்லது பாலின ஒழுக்கக் கேட்டிற்கு வழிநடத்தவோ இல்லாதபடி மேலுமாக தொடர்ந்து கவனித்துக்கொள்வது அவசியம். b (கலாத்தியர் 5:19, 21) நியாயமாகவே, நேசத்தின் இந்த வெளிக்காட்டுதல்கள், ஒருவருக்கொருவருக்கிடையே பரஸ்பரமான ஒப்படைப்பு வளர்க்கப்பட்டு, விவாகம் கண்டிப்பாக இருக்கிறது என்று தெளிவாக இருக்கும் நிலை எட்டும்போது மட்டுமே காட்டப்பட வேண்டும். தன்னடக்கத்தைக் காட்டுவதன் மூலமாக விவாக நோக்குடன் பழவதில் வெற்றி காண்பதன் பிரதான நோக்கத்திலிருந்து விலகிப் போகாமல் இருக்கலாம். அதாவது . . .

“இருதயத்தின் அந்தரங்க ஆளைத்” தெரிந்துகொள்வது

ஆங்கிலத்திலுள்ள திருமணம் மற்றும் குடும்பப் பத்திரிகை (Journal of Marriage and the Family) என்ற 1980 மே மாத வெளியீட்டில் ஓர் ஆராய்ச்சி குழு இவ்விதமாக அறிக்கை செய்தது: “மக்கள், ஒருவர் மற்றொருவரின் உள்ளார்ந்த ஆளை நன்றாக, முழுமையாக அறிந்துகொண்டு, அதன்பின் விவாகத்துக்குள் நுழைந்தால், விவாகங்கள் முறிவைத் தப்பித்து, செழிந்தோங்க அதிக சாத்திம் இருக்கும்,” ஆம், உன் துணைவருடைய “இருதயத்தின் அந்தரங்க ஆளை” தெரிந்துகொள்வது முக்கியம்.—1 பேதுரு 3:4.

என்றாலும், இன்னொருவருடைய இருதயத்தின் எண்ணங்களை வெளியே ‘மொண்டெடுப்பதற்கு’ முயற்சியும், பகுத்தறிவும் தேவையாக இருக்கிறது. (நீதிமொழிகள் 20:5) ஆகவே உன் துணைவரின் உள்ளான ஆளைப் பார்ப்பதற்கு உனக்குப் பெரும்பாலும் உதவக்கூடிய கிரியைகளைத் திட்டமிடு. ஒரு திரைப்படத்திற்கு அல்லது சங்கீதக் கச்சேரிக்குச் செல்வது முதலில் போதுமானதாக இருந்தபோதிலும், சம்பாஷிப்பதற்கு இடமளிக்கும் கிரியைகளில் (ரோலர்-ஸ்கேட்டிங், பந்து வீச்சு, மிருகக் காட்சிசாலை, அருட்காட்சியகம், மற்றும் கலை அரங்குகளுக்குச் செல்லுதல் போன்வற்றில்) ஈடுபடுவதானது மற்றவரை சிறந்த விதத்தில் புரிந்துகொள்ள உனக்கு அதிகம் உதவும்.

உன் துணைவருடைய உணர்ச்சிகளைச் சற்று அறிய விடைகளைத் தாராளமாக வரப்பண்ணும் கேள்விகளைக் கேட்க முயற்சி செய். உதாரணமாக, ‘உங்களுடைய ஓய்வு நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள்?’ ‘பணம் உங்களுக்கு ஒரு தடையாக இல்லாவிட்டால், எதை செய்ய நீங்கள் விரும்புவீர்கள்?’ ‘கடவுளுடைய வணக்கத்தின் எந்த அம்சம் உங்களுக்கு அதிகப் பிரியம்? ஏன்?’ இக்கேள்விகளுக்குக் கிடைக்கும் உள்ளார்ந்த பதில்கள் உன் துணைவர் எதை அதிக விலைமதிப்புள்ளதாகக் கருதுகிறார் என்பதை நீ கற்றறிய உதவும்.

உறவு ஆழமாகச் சென்று நீங்கள் இருவரும் விவாகத்தை அதிக கவனத்தோடு சிந்திக்கும்போது, உங்கள் மதிப்பீடுகள்; எங்கே, எப்படி நீங்கள் வாழ்வீர்கள்; பண விஷயங்கள், இருவருமே வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வீர்களா ஆகியவற்றை உட்பட; பிள்ளைகள்; குடும்பக் கட்டுப்பாடு; விவாகத்தில் ஒவ்வொருவர் வகிக்கும் பாகத்தைக் குறித்து உங்கள் கருத்துகள்; சமீப காலத்துக்கு மற்றும் தூர எதிர் காலத்துக்கு உங்கள் இலக்குகள், மற்றும் அவற்றை எப்படி அடைவது ஆகியவற்றைக் குறித்து நிதானமாகக் கலந்துபேசுவது அவசியம். அநேக இளம் யெகோவாவின் சாட்சிகள் பள்ளி முடித்த பிறகு முழுநேர சுவிசேஷ வேலையை செய்கிறார்கள், விவாகம் ஆனபிறகும் அவ்விதமாகவே தொடர்ந்திருக்க விரும்புகிறார்கள். உங்கள் இருவருடைய ஆவிக்குரிய இலக்குகளும் இணங்கிச் செல்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள உங்கள் இருவருக்கும் இதுவே சமயம். ஒருவேளை கடந்த காலத்தில் நடந்தவைகளை, அதாவது ஒருவேளை விவாகத்தைப் பாதிக்கப்போகிறவைகளைத் தெரியப்படுத்துவதற்கும் இது சமயமாக இருக்கும். ஏதாவது பெரிய கடன்கள் அல்லது கடமைகள் இருந்தால் அவைகளும் இதில் உட்படும். சுகாதார காரியங்கள், உதாரணமாக, ஏதாவது ஆபத்தான வியாதி பற்றியும், அதனுடைய விளைவுகளைப் பற்றியும் வெளிப்படையாக பேசிக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகளில், எலிகூவின் மாதிரியைப் பின்பற்றுங்கள். அவன் சொன்னான்: “என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்.” (யோபு 33:3) தான் விவாக நோக்குடன் பழகியபோது தன்னை ஒரு சந்தோஷமான விவாகத்துக்குத் தயார் செய்தது எப்படி என்பதை விவரிப்பவளாய் எஸ்தர் சொன்னாள்: “நான் கருத்தில் வேறுபடும்போது, ஜே-உடன் ஒத்துபோவதுபோல் ‘பாசாங்கு’ செய்யவோ அல்லது ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்லவோ இல்லை. இப்பொழுதும் அவ்வாறு செய்வதில்லை. எப்பொழுதுமே உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன்.”

உன் துணைவரை சங்கடமான நிலைக்குள்ளாக்கிவிடுமோ என்று பயந்து உணர்வுகளை எளிதில் பாதிக்கும் காரியங்களைத் தட்டிக்கழிக்கவோ அல்லது மேலோட்டமாகவோ விடவேண்டாம். பெத் ஜானோடு விவாக நோக்குடன் பழகியபோது இந்தத் தவறைச் செய்தாள். எதிர்காலத்துக்காக மிச்சப்படுத்தவேண்டும், பணத்தை வீணாக செலவழிக்கக்கூடாது என்று தான் நினைத்ததாக பெத் சொன்னாள். ஜான் அவள் சொல்வதுடன் தான் ஒத்துக்கொள்வதாக சொன்னான். பெத் இதைவிட மேலும் ஆழமாகச் செல்லவில்லை. பண விஷயத்தில் இருவரும் ஒரே கருத்துள்ளவர்களாக இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள். ஆனால் ஜானுடைய கருத்தின்படி எதிர்காலத்துக்காக மிச்சப்படுத்துவது என்றால், ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் கார் வாங்குவதற்காக மிச்சப்படுத்தவேண்டும் என்பது பிறகுதான் அவளுக்குத் தெரியவந்தது! பணத்தை எப்படிச் செலவிடுவது என்பது பற்றி தாங்கள் ஒத்திசைவில்லாமல் இருந்தது விவாகத்திற்குப் பின் வேதனையளிக்கும் வகையில் தெரியவந்தது.

இப்படியான தப்பெண்ணங்கள் தவிர்க்கப்படலாம். முன்பு சொல்லப்பட்ட லூயிஸ் தான் விவாக நோக்குடன் பழகின சமயத்தைப் பற்றி பின்னால் யோசித்து சொல்கிறாள்: “நான் வேறு அநேக கேள்விகளும் கேட்டிருக்க வேண்டும். உதாரணமாக, ‘நான் கர்ப்பவதியாகி, ஆனால் உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டாமென்று எண்ணினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?’ அல்லது ‘நாம் கடன்பட்டிருக்கையில், நம் குழந்தையைக் கவனிக்க வீட்டிலிருக்க நான் விரும்பினால், நீங்கள் காரியங்களை எப்படிக் கையாளுவீர்கள்?’ அவருடைய பிரதிபலிப்புகளை நான் கவனமாக பார்த்திருப்பேன்.” இப்படிப்பட்ட உரையாடல்கள் விவாகத்திற்கு முன்பே சிறந்த விதமாய் வெளிப்படக்கூடிய இருதயத்தின் குணங்களை மேலுக்கு கொண்டுவரக்கூடும்.

அவரை அல்லது அவளை செயலில் பாருங்கள்!

“உன்னோடு நேருக்கு நேர் தனியாக பழகும்போது ஒரு நபர் உன்னிடத்தில் வெகு நன்றாக நடந்துகொள்ளக்கூடும்,” என்று எஸ்தர் விவரிக்கிறாள். “ஆனால் மற்றவர்களும்கூட இருக்கும்போது, அவர் எதிர்பாராத சூழ்நிலைகளுக்குள் கொண்டுவரப்படுகிறார். உன் சிநேகிதர்களில் ஒருவர் உன் துணைவரிடம் அவருக்குப் பிடிக்காத காரியத்தைச் சொல்லலாம். அழுத்தத்தின் கீழ் இப்பொழுது எப்படிப் பிரதிபலிக்கிறார் என்று நீ பார்க்கலாம். நிறுத்திவிடு என்று அவரை அதட்டுகிறாரா அல்லது ஏளனமாக பேசுகிறாரா?” அவள் முடிவாக சொல்லுகிறாள்: “விவாக நோக்குடன் நாங்கள் பழகும்போது, ஒருவர் மற்றொருவரின் சிநேகிதர்களோடு அல்லது குடும்ப அங்கத்தினரோடு இருந்ததானது பெருத்த விதமாய் எங்களுக்கு உதவி செய்தது.”

பொழுதுபோக்கின்போது மட்டுமல்ல, ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதிலும் நேரத்தைச் செலவிடுங்கள். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது மற்றும் கிறிஸ்தவ ஊழியம் உட்பட கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சேர்ந்து பங்குகொள்ளுங்கள். விவாகத்துக்குப் பின் வாழ்க்கை முறையாக ஆகிவிடும் அன்றாட வேலைகளையும் செய்யுங்கள்—உணவுப்பொருட்களை வாங்குவதற்காகக் கடைக்குச் செல்வது, உணவு தயாரிப்பது, சாமான்களைக் கழுவுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்று. உண்மையான வாழ்க்கைச் சூழ்நிலையில்—உங்கள் துணைவரை, அவனுடைய அல்லது அவளுடைய மிகச் சிறந்த சுபாவம் வெளிப்படுகையிலும் அல்லது குறைபாடுகள் வெளிப்படும் சூழ்நிலையிலும்—ஒன்றாக இருப்பதன் மூலமாக, கடை சாமான்களை வெளிப்படுத்துவதற்கான கண்ணாடித் திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்று நீங்கள் கண்டுகொள்ளலாம்.

சாலொமோனின் உன்னதப்பாட்டின் மேய்ப்பப் பையன், தான் நேசித்த பெண் எதிர்பார்த்தது நடக்காமல் போனபோது எப்படி நடந்துகொண்டாள் அல்லது கொடுமையான வெயிலில் அவள் வேலை செய்து வேர்வையோடு, களைப்பாக இருந்தபோது எப்படிப் பிரதிபலித்தாள் என்பதையும் பார்த்தான். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:5, 6; 2:15) ஐசுவரியனாகிய சாலொமோன் அரசனின் கவர்ச்சிகளை எப்படி உத்தமத் தன்மையோடு எதிர்த்தாள் என்பதையும்கூட பார்த்த பிறகு அவன் விவரிக்கிறான்: “என் பிரியமே, நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.” (சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:7) நிச்சயமாகவே அவள் பூரணமுள்ளவளாக இருந்தாள் என்ற அர்த்தத்தில் அவன் அவ்வாறு சொல்லவில்லை. அடிப்படையான ஒழுக்கத்தில் ஒரு குறையும், களங்கமும் இல்லை. அவளுடைய சரீர அழகு, அவளுடைய ஒழுக்கத்தின் பெலத்தினால் மேம்படுத்தப்பட்டது. இதனால் அவளுடைய ஏதேனும் குறைகளும் பின்னால் மறைப்படக்கூடியதாக இருந்தது.—யோபு 31:7-ஐ ஒத்துப்பாருங்கள்.

காரியங்களை இப்படியாக நிதானிப்பதற்கு நேரம் எடுக்கிறது. ஆகவே அவசரப்பட்டு எதிர்பாலாருடன் விவாக நோக்கோடு பழகுவதைத் தவிருங்கள். (நீதிமொழிகள் 21:5) சாதாரணமாக ஓர் ஆணோ, பெண்ணோ மற்றொருவருடைய அன்பைச் சம்பாதிக்க தன்னால் கூடுமானவற்றைச் செய்வார்கள். ஆனால் காலம் கொடுக்கப்படும்பொழுது, விரும்பப்படாத பழக்கங்கள், மனச்சாய்வுகள் எல்லாம் எவ்விதத்திலாவது மேலெழும்புகிறது. ஆகவே அப்படிப் பழகும்போது நேரமெடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அந்த நேரத்தை நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு ஜோடி, விவாகத்திற்குப் பின் ஒருவர் மற்றொருவருடைய சுபாவத்துக்கேற்ப இசைந்துபோவது பெரும்பாலும் சுலபமாகக் காண்பார்கள். தெளிவான பார்வையுடன் கருத்து வேற்றுமைகளை எப்படிச் சரிசெய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு விவாகத்தில் பிரவேசிக்கலாம். விவாக நோக்குடன் பழகுவதில் வெற்றி காண்பது அவர்களை வெற்றிகரமானதும், சந்தோஷம் நிறைந்ததுமான விவாகத்திற்கு ஆயத்தம் செய்திருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a இது எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகள் ஒரு பழக்கமாக இருக்கும் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமான நடத்தை என்று எண்ணப்படுகிற நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரணமாக ஆண் முதலில் சிரத்தையை காட்டுகிறார். ஆகிலும், ஓர் இளம் மனிதன் வெட்கப்படுபவராகவோ அல்லது தயங்குபவராகவோ இருப்பாராகில், ஓர் இளம் பெண்ணும்கூட அடக்கமான முறையில் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதைத் தடைச்செய்யும் எந்தப் பைபிள் நியமமும் இல்லை.—சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6-ஐ ஒப்பிடவும்.

b 24-ம் அதிகாரம், “விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?” என்பதைப் பாருங்கள்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻எதிர்பாலாரோடு விவாக நோக்குடன் பழகுதலின் அடிப்படைக் குறிக்கோள் என்ன, மணவாழ்க்கையின் சந்தோஷத்துக்கு அது எப்படி முக்கியம்?

◻இன்னொருவருடைய ‘உள்ளான ஆளை’த் தெரிந்துகொள்ள எது உதவி செய்யும்?

◻எப்படிப்பட்ட சம்பாஷணைகள் விவேக நோக்குடன் பழகுவதில் வெற்றி காண்பதற்குக் காரணங்களாக இருக்கும்?

◻பல்வேறு சூழ்நிலைகளில் ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதானது ஏன் உதவியாயிருக்கும்?

◻ஓர் உறவு குறைவுள்ளதாயிருக்கிறதென்று காட்டுபவை எவை?

◻விவாக நோக்குடன் பழகுவது எப்பொழுது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்?

[பக்கம் 255-ன் சிறு குறிப்பு]

“மக்கள், ஒருவர் மற்றொருவரின் உள்ளார்ந்த ஆளை நன்றாக, முழுமையாக அறிந்துகொண்டு, அதன்பின் விவாகத்துக்குள் நுழைந்தால், விவாகங்கள் முறிவைத் தப்பித்து, செழிந்தோங்க அதிக சாத்திம் இருக்கும்.”—திருமணம் மற்றும் குடும்பப் பத்திரிகை

[பக்கம் 256,257-ன் பெட்டி/படம்]

நாம் உறவை முறித்துக்கொள்ள வேண்டுமா?

ஒரு காதல் விவகாரம் முக்கியமான தீர்மானம் செய்ய வேண்டிய கட்டத்தை அணுகும்போது சந்தேகங்கள் எழும்புவது அசாதாரணமான காரியமாக இல்லை. இப்படிப்பட்ட சந்தேகங்கள் நீ பழகும் ஆளில்தாமே இருக்கும் பலமான குறைகளிலிருந்தும் அல்லது அந்த உறவில்தாமே இருக்கும் குறைகளிலிருந்தும் எழும்பினால் என்ன செய்வது?

உதாரணமாக, ஒருவரை ஒருவர் நேசிக்கும் மக்கள்கூட சில சமயங்களில் ஒத்துப்போகாமலிருப்பது மெய்யே. (ஆதியாகமம் 30:2; அப்போஸ்தலர் 15:39 ஒத்துப்பார்க்கவும்.) ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை என்றால், ஒவ்வொரு தடவைப் பேசும்போதும் கடைசியிலே கூச்சலிலே முடிவடைந்தால், அல்லது உங்கள் உறவு என்றும் தீராததாய் முறிந்தும், பிறகு கூடிக்கொள்ளுதலுமாய்ச் சுற்றி வந்து கொண்டிருந்தால், எச்சரிக்கையாயிருங்கள்! 400 டாக்டர்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வு, சதா பூசலிடுதல் “உணர்ச்சி விஷயத்தில் விவாகத்துக்குத் தயாரில்லமைக்குப் பலமான அடையாளம்” என்றும் “தம்பதிகளுக்கிடையே ஒப்புரவு ஏற்பட முடியாத போராட்டம்” என்றும்கூட வெளிப்படுத்தியது.

சிந்திப்பதற்கு மற்றொரு காரணம் விவாகம் செய்து கொள்ளப் போகிற உன் துணைவரில் நீ கண்டுபிடித்துள்ள ஆள்தன்மையைப் பற்றிய கலங்கச் செய்யும் குறைகள். கோபத்தைக் காட்டுதல், வன்மையான அல்லது தன்னல குறிப்புகள், முதிர்ச்சியில்லாமை, சமயங்களில் குணம் மாறுதல், அல்லது பிடிவாதத்தனம் போன்ற காரியங்கள் இருக்குமானால் அந்த ஆளோடு எஞ்சிய வாழ்க்கையை நடத்த விரும்புவேனா என்பது குறித்து நீ யோசிக்கக்கூடும். என்றாலும் அநேகர் இவைகளைப் பாராமல் அல்லது குறைகளுக்குப் பரவாயில்லை என்று நியாயம் சொல்லி, எப்படியாகிலும் உறவை செயற்படுத்திட வேண்டும் என்று தீர்மானமாய் இருப்பதாகத் தெரிகிறது. ஏன் அப்படி?

விவாக நோக்குடன் பழகுதல் கிறிஸ்தவர்களுக்குள்ளே அதிக கவனத்துக்குரிய காரியமாக கருதப்படுவதால்—அப்படித்தான் கருதப்பட வேண்டும்—தாங்கள் பழகும் எதிர்பாலாரை விவாகம் செய்துகொள்ளவேண்டிய அழுத்தத்திலிருப்பதாக சிலர் உணருகின்றனர். அந்த நபரிடம் இதைக் குறித்து நேருக்குநேர் பேசவேண்டுமே, அவரை ஒருவேளை புண்படுத்திவிடுவோமோ என்றுகூட பயப்படக்கூடும். வேறு சிலர் தாங்கள் விவாகம் செய்வதற்கு வேறொருவரைக் கண்டுபிடிக்க இயலாது என்று வெறுமென பயப்படலாம். என்னவாக இருந்தாலும், பிரச்னைகளால் நிறைந்த ஓர் உறவை விவாக நோக்குடன் தொடருவதற்கு, இவை எல்லாம் நல்ல காரணங்கள் அல்ல.

விவாக நோக்குடன் பழகுதலின் நோக்கமே விவாகம் செய்துகொள்ள முடியுமா என்று ஆராய்வதற்காகத்தான். ஒரு கிறிஸ்தவன் நல் எண்ணத்தோடு இந்த உறவை ஆரம்பித்து, ஆனால் அது சரியில்லாததாக நிரூபித்தால் அவனோ, அவளோ அதைத் தொடர வேண்டிய கடமையில் இல்லை. ‘ஒருவேளை மற்றொருவரைக் கண்டுபிடிக்க முடியாது’ என்ற பாவனையிலே தேய்ந்தழிந்து கொண்டுபோகும் உறவைத் தொடர்வது தப்பிதமும், தன்னலமாகவும் இருக்கும் அல்லவா? (பிலிப்பியர் 2:4-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆகையால் இருவருமாக, உங்களுடைய பிரச்னைகளைத் தட்டிக் கழிக்காமல், அதைச் சந்திப்பதுதான் முக்கியம். நீங்கள் பழகும் அந்த நபரை உணர்ச்சிவசப்படாது நோக்க ஆரம்பியுங்கள்.

உதாரணமாக, இந்தப் பெண் கீழ்ப்படிதலுள்ள, திறமைசாலியான மனைவியாக இருப்பாள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? (நீதிமொழிகள் 31:10-31) இந்த மனிதன் தன்னையே தியாகம் செய்யும் அன்பைக் காண்பித்து, சிறந்த விதத்தில் சவரட்சணை செய்வார் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறதா? (எபேசியர் 5:28, 29; 1 தீமோத்தேயு 5:8) ஒரு நபர் வைராக்கியமுள்ள தேவனுடைய ஊழியக்காரன் என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் இப்படிப்பட்ட விசுவாசத்தை உடையவராக உரிமை பாராட்டுவதற்கு அதற்கேற்ற கிரியைகள் இருக்கின்றனவா?—யாக்கோபு 2:17, 18.

சந்தேகமில்லாமல், ஓர் உறவை வளர்ப்பதற்கு அதிக நேரத்தையும் உணர்ச்சியையும் செலவழித்திருப்பீர்களானால், அவனோ அல்லது அவளோ பூரணமாக இல்லை என்று கண்டுபிடித்ததற்காக உறவை முறித்துப் போடுவதற்கு அவசரப்படாதீர்கள். (யாக்கோபு 3:2) ஒருவேளை அந்த நபரின் தப்பிதங்கள் நீங்கள் பொறுத்துக்கொள்ளக்கூடியவையாக இருக்கக்கூடும்.

அப்படியில்லாவிட்டால் என்ன? காரியங்களை மறுபடியும் கலந்து பேசுங்கள். இலக்குகளிலோ அல்லது எண்ணங்களிலோ அடிப்படையான வித்தியாசங்கள் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது அவை வெறும் தப்பெண்ணங்களா? ஒருவேளை நீங்கள் இருவருமே எப்படி “உங்கள் ஆவியை அடக்கக் கற்றுக்கொள்ளவும்,” சாவதானமாகக் காரியங்களை ஒழுங்குபடுத்தவும் வேண்டியவர்களாக இருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 25:28) எரிச்சலூட்டும் ஆள்தன்மை உங்களைக் கவலைப்படுத்துவதாக இருக்குமானால், அவனோ அல்லது அவளோ தாழ்மையுடன் தன் தப்பிதத்தை ஒத்துக்கொண்டு முன்னேற்றம் செய்யவதற்கு விருப்பத்தைக் காண்பிக்கிறாரா? உங்களுடைய பாகத்தில் சீக்கிரம் புண்படாமல் இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்க்கிறீர்களா? (பிரசங்கி 7:9) ‘அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கு’தல் ஒரு நல்ல விவாகத்துக்கு உயிர் நாடியாக இருக்கிறது.—எபேசியர் 4:2.

உங்கள் உறவை அழித்துவிடுவதற்குப் பதிலாக, காரியங்களை வெளிப்படையாகப் பேசுதல் எதிர்கால வளர்ச்சிக்கு எவ்வளவு சக்திவாய்ந்ததாய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும்! ஆனால் கலந்தாலோசித்தல் மறுபடியும் இன்னொரு தொந்தரவான காரியத்தில் விளையுமானால், எதிர்ப்படப்போகிற ஆபத்தின் தெளிவான அறிகுறிகளை அசட்டை செய்திட வேண்டாம். (நீதிமொழிகள் 22:3) விவாகத்திற்குப் பின் காரியங்கள் அபிவிருத்தி அடைவதற்கு சாத்தியமில்லை. உங்கள் இருவருடைய நலன் கருதி விவாக நோக்குடன் பழகுவதை நிறுத்திவிடுவதே நல்லது.

[பக்கம் 253-ன் படம்]

ஒரு கூட்டத்தில் ஒருவரையொருவர் கவனிப்பது, காதல் விவகாரம் இல்லாமல் நீங்கள் அவரைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்

[பக்கம் 254-ன் படம்]

ஆங்காங்கேயுள்ள நடத்தை முறைகளைக் கடைப்பிடிப்பதும் மரியாதையுள்ள நடத்தைக்குரிய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும் மணவாழ்வுக்குள்ளும் தொடர்ந்திருக்கும் பரஸ்பர மரியாதையுள்ள நடத்தைக்கு ஒரு மாதிரியாக இருக்கக்கூடும்

[பக்கம் 259-ன் படம்]

விவாக நோக்குடன் பழகும்போது, அது செயற்படுவதாயில்லை என்பது தெளிவாகும் சமயத்தில், அந்த உறவு ஏன் முறிய வேண்டும் என்பதை ஒரு நேருக்கு நேர் கலந்தாலோசிப்பின் மூலமாக விளக்குவதே செய்யவேண்டிய தயவான காரியம்