Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் விவாகத்துக்குத் தயாரா?

நான் விவாகத்துக்குத் தயாரா?

அதிகாரம் 30

நான் விவாகத்துக்குத் தயாரா?

விவாகம் ஒரு விளையாட்டல்ல, மனிதன் வேறொருவரோடு கொள்ளும் தொடர்பைப் பார்க்கிலும், நெருங்கிய விதமாக ஒரு நிரந்தரமான பிணைப்பைக் கணவன்மார்களுக்கும் மனைவிமார்களுக்குமிடையே உண்டுபண்ண கடவுள் எண்ணங் கொண்டார். (ஆதியாகமம் 2:24) ஆகவே ஒரு விவாகத் துணைவர் உங்களுடைய ஜீவிய காலம் முழுவதும் நீங்கள் அவருடன் ஒட்டிக்கொள்ளும்—அல்லது ஒட்டப்பட்டிருக்கும்—ஒருவராக இருக்கிறார்.

எந்த விவாகமும் கண்டிப்பாகக் கொஞ்சம் “உபத்திரவத்தையும் துயரத்தையும்” கொண்டிருக்கும். (1 கொரிந்தியர் 7:28) ஆனால் மார்சியா லாஸ்வெல், நடத்தைக்குரிய அறிவியல் பேராசிரியர் இவ்விதம் எச்சரிக்கிறார்: “விவாகம் நிலைபெறுமா, நிலைபெறாதா என்பதைக் குறித்து சவால் விடப்படாத தகவல் ஒன்று எங்களிடம் இருக்குமானால், அதுதான் மிக இளவயதிலே விவாகம் பண்ணுகிறவர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்பது.”

இள வயது விவாகங்கள் ஏன் தோல்வியுறுகின்றன? இதற்குப் பதில் எதன்மீது பலமாக சார்ந்திருக்கிறது என்றால், நீங்கள் விவாகம் பண்ண தயாராக இருக்கிறீர்களா, இல்லையா என்று தீர்மானிப்பதில்தான்.

பெரிய எதிர்பார்ப்புகள்

ஓர் இளவயதுப்பெண் “விவாகம் என்பதைப் பற்றி அதிகம் எங்களுக்குத் தெரியவே இல்லை” என்று ஒத்துக்கொள்கிறாள். “வந்து போய்க் கொண்டிருக்கலாம். இஷ்டமானதைச் செய்யலாம், பாத்திரங்களைக் கழுவவோ, கழுவாமலோ இருக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் அவ்வாறாக இல்லை.” அநேக இளவயதினர் விவாகத்தைப் பற்றி இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற நோக்குநிலையைக் கொண்டுள்ளனர். அதை ஒரு காதல் கற்பனை என்று நினைக்கின்றனர். தாங்கள் வயதை அடைந்து பெரியவர்களாகிவிட்டனர் என்று தோன்ற கோயில் பீடத்துக்கு விரைகின்றனர். மற்றும் சிலர் வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது சமூகத்திலோ ஒரு மோசமான நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள வெறுமென அப்படி செய்கின்றர். ஒரு பெண் தன் காதலனிடம் இரகசியமாக சொல்லுகிறாள்: “நாம் விவாகம் செய்வோமானால் நான் வெகுவாக சந்தோஷப்படுவேன். ஏனென்றால் நான் தீர்மானங்களை இனிமேல் செய்ய வேண்டிய அவசியமில்லை!”

விவாகம் ஒரு கற்பனையோ அல்லது எல்லாப் பிரச்னைகளையும் குணமாக்கும் மருந்தோ அல்ல. சொல்லப்போனால் கையாளுவதற்கு முழுவதும் புதிதான பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. “அநேக பருவ வயதினர் அப்பா அம்மா விளையாட்டு விளையாட விவாகம் செய்கின்றனர்” என்று 20-வது வயதில் தன் முதல் குழந்தையைப் பெற்ற விக்கி சொல்லுகிறாள். “ஓ, அது எப்பேர்ப்பட்ட ஒரு விளையாட்டாகத் தோன்றுகிறது! குழந்தையை ஒரு சிறு பொம்மையைப்போல் நினைக்கிறீர்கள், எவ்வளவு சிறிதாகவும் அழகாகவும் இருக்கிறது, அதைக்கொண்டு விளையாடலாமென்று நினைக்கிறீர்கள், ஆனால் அது இருப்பதில்லை.”

உடல் உறவைப்பற்றியும்கூட அநேக இளைஞர்களுக்கு நடைமுறையற்ற போலி எதிர்பார்ப்புகள் இருந்தன. 18 வயதில் விவாகம் செய்த ஓர் இளைஞன்: “நான் விவாகம் செய்தபிறகு பாலுறவுபற்றி இருந்த ஒரு பெரிய கவர்ச்சி வெகு சீக்கிரமாகவே மறைந்துவிட்டதைக் கண்டேன். அதன்பிறகு உண்மையான சில பிரச்னைகள் ஆரம்பித்தன.” இளவயது ஜோடிகளைப்பற்றிய ஓர் ஆய்வில், அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதங்களில் பொருளாதார பிரச்னைகளுக்கு அடுத்ததாக இருப்பது அநேக விவாதங்கள் உடலுறவைப் பற்றியவை. திருப்திகரமான விவாக உறவுகள் தன்னலமில்லாமையிலும், தன்னடக்கத்திலும்தான் விளைகிறது என்பதில் சந்தேகமில்லை—இக்குணங்களைத்தான் இளைஞர் விருத்திசெய்ய பெரும்பாலும் தவறுகின்றனர்.—1 கொரிந்தியர் 7:3, 4.

ஞானமாக பைபிள் “இளமையின் மலரும் பருவம்” கடந்தபிறகு கிறிஸ்தவர்களை விவாகம் செய்ய உற்சாகப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 7:36, NW) காமம் அதன் உச்சநிலையில் இருக்கும்போது விவாகம் பண்ணுவது உங்கள் யோசனையை மாறச்செய்து, நீங்கள் விவாகம் செய்யவிருக்கும் துணையின் தப்பிதங்களைப் பார்க்காதபடி கண்களை மறைத்துப்போடுகிறது.

தங்கள் பாகங்களை வகிக்கத் தயாராயில்லை

இளவயதான ஒரு மணப்பெண் தன் கணவனைப்பற்றி குறிப்பிடுகிறாள்: “நாங்கள் இப்பொழுது விவாகம் செய்துகொண்டுவிட்டப்படியால், என்னில் அவர் சிரத்தை கொள்ளும் ஒரே நேரம் அவர் பாலுறவு கொள்ள விரும்பும் போதுதான். என்னுடன் இருப்பதுபோல அவருடைய சிநேகிதப் பையன்களோடுகூட இருப்பதும் அதிக முக்கியம் என்று நினைக்கிறார். அவருக்கு நான் ஒருத்திதான், ஒரே ஒருத்தி என்று நினைத்தேன். நான் முட்டாளாகிவிட்டேன்.” இளம் ஆண்களுக்கிடையே உள்ள தப்பிதமான எண்ணத்தை இது எடுத்துக் காட்டுகிறது: கணவன்மார்களாக இருந்தும், விவாகமாகாத ஆண்கள் வாழும் வாழ்க்கையை இன்னும் கொண்டிருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

இளம் மனைவிமார்கள் இடையே உள்ள பொதுவான பிரச்னையைக் குறிப்பிடுகிறாள் ஒரு 19-வயது மணப்பெண்: “வீட்டைச் சுத்தப்படுத்தி, சாப்பாட்டை தயார் செய்வதைவிட டி.வி.-யைத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன். என் கணவனின் பெற்றோர் வீட்டுக்கு வரும்போது வெட்கப்படுகிறேன், ஏனென்றால் அவர்கள் வீட்டை அழகாக, ஒழுங்காக வைத்துக்கொள்ளுகின்றனர், நானோ அசிங்கமாக வைத்திருப்பேன். நான் சரியாக சமையல் செய்யவும் மாட்டேன்.” ஒரு பெண் வீட்டை சரியாக கவனிக்கவில்லை என்றால் விவாகத்திலே எவ்வளவு அழுத்தத்தை அது உண்டாக்குகிறது! (முன் குறிப்பிடப்பட்ட) விக்கி சொல்லுகிறாள்: “விவாகம் உண்மையாகவே நிபந்தனைகளைக் கொண்டு வருகிறது. இது ஒரு விளையாட்டல்ல. விவாகத்தின் தமாஷ் தீர்ந்துவிட்டது. அது அன்றாட வாழ்க்கையின் காரியமாகிவிட்டது, அது அவ்வளவு சுலபமாக இல்லை.”

அனுதினமும் ஒரு குடும்பத்திற்கு பண ஆதரவு தருவதைப் பற்றி என்ன? விக்கியின் கணவர் மார்க் சொல்லுகிறார்: “முதலில் எனக்கு இருந்த வேலைக்குச் செல்ல, காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்று ஞாபகம் வருகிறது. நான் யோசித்துப் பார்த்தேன்: “இது கடினமான வேலை. எப்பொழுதாவது விடுதலை கிடைக்குமா?” நான் வீடு திரும்பும்பொழுது எனக்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள விக்கியினால் முடியவில்லை.”

பணப்பிரச்னை

விவாகமான இளம் ஜோடிகளிலே விவாகத்தில் ஒத்திசைவு இல்லாததற்கு மற்றொரு காரணத்திற்கு இது நம்மைக் கொண்டுவருகிறது: பணம். “குடும்ப வருமானத்தைச் செலவழிப்பது” என்ற தங்களுடைய பெரிய பிரச்னை விவாகம் ஆகி மூன்று மாதங்களுக்குப் பிறகுதானே வந்ததாக நாற்பத்தெட்டு இளம் ஜோடிகள் ஒத்துக்கொண்டனர். சுமார் முப்பத்தேழு வருடங்கள் கழித்து இந்த ஜோடிகளிடத்தில் இதே கேள்வி கேட்கப்பட்டது. பணப்பிரச்னைகள்தான் திரும்பவும் முதலாவதாக இருந்தது—அவர்களுடைய துயரம் இன்னும் அதிகமாக இருந்தது! “நீங்கள் திருப்தியாகும்படி வேண்டிய பொருட்களை வாங்க ஒருபோதும் உங்களுக்குப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்? . . . ஒரு சம்பள நாளிலிருந்து மறு சம்பள நாள் வரைக்கும் செலவுக்கு போதுமான பணம் இல்லை என்றால், அது அநேக சண்டைகளையும் சந்தோஷமில்லாமையையும் துவங்கிவிடும்” என்று பில் சொல்லுகிறார்.

பணப்பிரச்னை இள வயதினரில் சாதாரணமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்களிடத்தில்தான் வேலையில்லாத விகிதம் அதிகமாக இருக்கிறது, சம்பளமும் குறைவாக இருக்கிறது. “என்னுடைய குடும்பத்தைப் பராமரிக்க என்னால் முடியாததால், என் பெற்றோர்களோடு வசிக்கும்படி ஆகிவிட்டது” என்று ராய் ஒத்துக்கொள்கிறார். “இது உண்மையாகவே பெரும் அழுத்தத்தை உண்டாக்கிவிட்டது, குறிப்பாக, ஒரு குழந்தையும் எங்களுக்கு இருந்தபடியால் அப்படி இருந்தது. நீதிமொழிகள் 24:27 இவ்விதமாக புத்திமதி கூறுகிறது: “வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.” பைபிள் காலங்களிலே ஒரு குடும்பத்தை ஆதரிக்கக்கூடிய நிலையில் இருப்பதற்காக ஆண்கள் கடினமாக உழைத்தனர். இப்படிப் போதுமான முன்தயாரிப்பைச் செய்யத் தவறுவதனால் அநேக இளம் கணவன்மார் இன்று பராமரிக்கும் பாகத்தை ஒரு பெரிய பளுவாகக் காண்கின்றனர்.

அதிக அளவு பண வருமானம் இருந்தாலும், தம்பதிகள் பொருள் விஷயங்களிலே குழந்தைத்தன எண்ணத்தை உடையவர்களாக இருந்தார்களானால் பணப்பிரச்னை ஓயாது. ஓர் ஆய்வில் வெளியாக்கப்பட்டது என்னவென்றால், “இளவயதினர் தங்கள் பெற்றோர் ஒருவேளை அநேக வருஷங்களில் சம்பாதித்த பொருட்களில் பலவற்றை உடனடியாகவே தங்கள் குடும்பத்துக்கு வாய்க்கச்செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.” இப்படிப்பட்ட பொருட்களை இப்பொழுதே அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளவர்களாய், அநேகர் கடனில் ஆழ மூழ்கியுள்ளனர். ‘உண்ணவும் உடுக்கவும்’ இருந்தால் போதும் என்ற முதிர்ந்த மனப்பான்மையை இழந்தவர்களாய், தங்களுடைய விவாகத்தில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டனர்.—1 தீமோத்தேயு 6:8-10.

“தொலைதூரம் வேறுபாடு”

மோரீன் நினைவுகூருகிறாள்: “நான் டானிடம் காதல் கொண்டேன். அவன் அவ்வளவு அழகன், பலசாலி, நல்ல பந்தய ஓட்டக்காரன், எல்லாராலும் விரும்பப்பட்டவன் . . . எங்களுடைய விவாகம் கட்டாயம் வெற்றியடையவேண்டும்.” ஆனால் அது நடக்கவில்லை. கசப்பு எந்த அளவுக்கு எட்டினது என்றால், மோரீன் சொல்லுகிறாள், “டான் செய்த ஒவ்வொரு காரியமும்—சாப்பிட்டபொழுது தன் உதடுகளை சப்பின விதமுங்கூட—எனக்குப் பிடிக்கவில்லை. கடைசியாக நாங்கள் இருவரும் இனிமேலும் தாக்குபிடிக்கமுடியவில்லை.” அவர்களுடைய விவாகம் இரு வருடங்களுக்குள் முறிந்துவிட்டது.

பிரச்னை? “வாழ்க்கையில் எங்கள் இலக்குகள் தொலைதூர வேறுபாடுடையதாக இருந்தன,” என்று மோரீன் விளக்குகிறாள். “அறிவுக்கூர்மையோடு நான் காரியங்களை எடுத்துக் கூறுவதைச் செவிகொடுத்து கேட்கும் ஒருவர் எனக்கு அவசியம் என்பதை நான் இப்பொழுது உணர்ந்தேன். ஆனால் டானின் முழு வாழ்க்கையுமே ஒரு விளையாட்டாக இருந்தது. 18 வயதில் அதிக முக்கியம் என்று நான் எண்ணின காரியங்கள் திடீரென்று எனக்கு முக்கியமற்றவையாக ஆகிவிட்டன.” இளவயதினர் அநேக சமயங்களில் தங்களுடைய விவாகத் துணைவரில் விரும்பும் காரியங்களைக் குறித்து முதிர்ச்சியற்ற நோக்கை உடையவர்களாய் இருக்கின்றனர், நல்ல தோற்றம் அவர்களுக்கு முதன்மையாக இருக்கிறது. நீதிமொழிகள் 31:30 எச்சரிக்கிறது: “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்.”

சுய-சோதனை செய்தல்

கடவுளுக்குப் பரிசுத்தமான ‘பொருத்தனையைச் செய்தபிறகு யோசிக்கிறவனை’ அவசரக்காரன் என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 20:25) ஆகவே அதிக கனத்த விவாகப் பொருத்தனையைச் செய்ய நுழைவதற்கு முன் வேதவாக்கியங்களின் வெளிச்சத்திலே உங்களைச் சோதித்துப் பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் அல்லவா? வாழ்க்கையில் உங்கள் இலக்குகள்தான் என்ன? விவாகத்தினால் இவை எப்படிப் பாதிக்கப்படும்? வெறுமென உடல் உறவுகளை அனுபவிக்கவும் அல்லது பிரச்னைகளிலிருந்து வெளியேறுவதற்காகவுமா விவாகம் செய்ய விரும்புகிறீர்கள்?

மேலும், எந்த அளவுக்கு கணவனாக, மனைவியாக உங்கள் பாகத்தை வகிக்க தயாராக இருக்கிறீர்கள்? வீட்டை நிர்வகிக்கவும், ஒரு வாழ்க்கையை நடத்தவும் உங்களால் கூடுமா? உங்கள் பெற்றோரோடு சதா போராட்டம் உடையவர்களாக உங்களைக் காண்பீர்களானால், விவாகத் துணைவரோடு நீங்கள் ஒன்றாக ஒத்துப்போவீர்களா? விவாகத்தில் வருகிற சோதனைகளையும், கஷ்டங்களையும் உங்களால் தாங்க முடியுமா? பணத்தைக் கையாளும் விஷயத்திற்கு வரும்போது, ‘குழந்தைக்குரியவைகளை’ உண்மையாகவே ஒழித்துவிட்டீர்களா? (1 கொரிந்தியர் 13:11) நீங்கள் எவ்விதம் சமாளிக்க முடியும் என்பதைப்பற்றி உங்கள் பெற்றோருக்குச் சந்தேகமில்லாமல் தெரியும்.

விவாகம், மிகுந்த சந்தோஷத்துக்கோ அல்லது கடும் துயரத்துக்கோ காரணமாக இருக்கலாம். அதற்கு நீ எந்தளவுக்கு ஆயத்தமாக இருக்கிறாய் என்பதன்பேரில் அது சார்ந்திருக்கிறது. இன்னும் நீ பருவயதினனாக இருப்பாயானால் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளை ஆரம்பிப்பதற்கு ஏன் இன்னும் கொஞ்சம் பொறுக்கக்கூடாது? காத்திருப்பது உனக்குத் தீங்கு செய்யாது. விவாகம் என்ற அந்தக் கனத்த—நிரந்தரமான—அடியை நீ எடுத்து வைக்கும்போது, உண்மையாகவே நீ தயாராக இருப்பதற்கு தேவையான நேரத்தை அது உனக்குக் கொடுக்கும்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻சில இளைஞர் விவாகத்தைப் பற்றி முதிர்ச்சியில்லாத என்ன எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர்?

◻வெறுமென பாலின காரியங்களுக்காக விவாகம் செய்வது, நடைமுறையற்றது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?

◻இளைஞர் சிலர் கணவன் மனைவிமார்களாக இருந்து வகிக்கும் பாகத்திற்கு தயாரற்றவர்களாகத் தங்களை எப்படி நிரூபித்திருக்கின்றனர்?

◻இளம் தம்பதிகளுக்கு ஏன் அடிக்கடி பணம் சம்பந்தமான காரியங்களின் பேரில் வினைமையான பிரச்னைகள் வந்துள்ளன?

◻விவாகத் துணைவரைத் தெரிந்துகொள்வதில் என்ன தவறைச் சில இளைஞர் செய்கின்றனர்?

◻விவாகத்துக்குத் தயாராக இருக்கிறாயா என்பதைப் பற்றி உன்னை நீயே என்ன கேள்விகளைக் கேட்கக்கூடும்? இந்த விஷயங்களை ஆலோசித்த பிறகு விவாகம் செய்துகொள்வதற்கு எவ்வளவு தயாராக இருக்கிறாய் என்று நீ உணருகிறாய்?

[பக்கம் 240-ன் சிறு குறிப்பு]

“விவாகம் நிலைபெறுமா, நிலைபெறாதா என்பதைக் குறித்து சவால் விடப்படாத தகவல் ஒன்று எங்களிடம் இருக்குமானால், அதுதான் மிக இளவயதிலே விவாகம் பண்ணுகிறவர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்பது.”—மார்சியா லாஸ்வெல், நடத்தைக்குரிய அறிவியல் பேராசிரியர்

[பக்கம் 237-ன் படம்]

இளவயதினர் அநேகர், படத்தில் காணும் இவர்களைப் பார்க்கிலும் சற்று அதிக ஆயத்தமுள்ளவர்களாகவே விவாகத்திற்குள் பிரவேசிக்கிறார்கள்