Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோகத்தை நான் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

மோகத்தை நான் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

அதிகாரம் 28

மோகத்தை நான் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

இளவயதினருக்காக பிரசுரிக்கப்படும் ஒரு பத்திரிகை, “பருவ வயதினருக்கு மோகம் சர்வசாதாரணமாக ஏற்படும் ஜலதோஷத்தைப் போன்றது” என்பதாக எழுதியது. ஏறக்குறைய எல்லா வாலிபரும் இதை அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் தங்களுடைய பெருமையையும், நகைச்சுவையையும் இழக்காதவர்களாய் அப்பருவத்தைக் கடந்து பெரியவர்களாகியிருக்கின்றனர். என்றபோதிலும் மோகத்தின் அழுத்தப் பிடியில் நீங்கள் பிடிபடும்பொழுது, அது சிரிப்புக்குரியதாய் இல்லை. ஒரு வாலிபன் ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறான்: “நான் குழப்பமடைந்தவனாய் இருந்தேன், ஏனென்றால் அதைப்பற்றி நான் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் என்னைவிட அதிக வயதுள்ளவளாகவே இருந்தாள் என்று தெரியும். ஆனால் அவளை விரும்பினேன். அந்த முழு விஷயத்தின் பேரிலும் நான் உண்மையிலேயே நிலைகெட்டிருந்தேன்.”

மோகத்தின் கூறுபாடு

யாரோ ஒருவரிடம் பலமான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பது ஒரு பாவமல்ல—ஆனால் அப்படிப்பட்டவை ஒழுக்கக் கேட்டிற்குரியதாகவோ அல்லது சரியில்லாதவையாகவோ (உதாரணமாக, விவாகமான ஒருவரிடமாக) இருக்கக்கூடாது. (நீதிமொழிகள் 5:15-18) என்றபோதிலும் இளவயதாக இருக்கும்போது “பாலியத்துக்குரிய இச்சைகள்” உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஆட்கொள்ளுகின்றன. (2 தீமோத்தேயு 2:22) வயதுக்கு வரும்போது ஏற்படும் புதிய பலமுள்ள ஆசைகளை அடக்கி ஆள கற்றுக்கொண்டு வருகிறபோதே, ஒரு வாலிபனுக்கு காதல் உணர்ச்சிகள் முழுமையாக ததும்பி நிற்கிறவனாய்—ஆனால் யாரிடமும் காட்ட முடியாதவனாய் இருக்கிறான்.

மேலுமாக, “பெண் பிள்ளைகள், பையன்களைவிட குறைந்த வயதிலேயே சமூகத்திலே நிதானமாக, நன்கு பழகுகிறவர்களாகத் தங்களை நடத்தக்கூடியவர்களாகிறார்கள்.” அதன் விளைவாக, தங்கள் ஆசிரியர்களோடும் அல்லது வயதில் பெரியவர்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கையில், “தங்கள் உடன் மாணவப் பையன்களை உணர்ச்சி வசப்படாதவர்களாகவும், முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் காண்கின்றனர்.” (பதினேழு என்ற பத்திரிகை) ஆகவே ஒரு பெண்பிள்ளை, தனக்குப் பிடித்தமான ஆசிரியரையோ, பாடகரையோ, ஏதோ தனக்கு முன்னதாக அறிமுகமானவரையோ “தனக்கு பொருத்தமான உயர்ந்த மனிதனாகக்” கற்பனைச் செய்யக்கூடும். பையன்களும்கூட அநேகந்தடவை இவ்விதமாக மோகம் கொள்கிறார்கள். என்றாலும், இப்படியாக தனக்கு கிடைக்கக்கூடாத நிலையிலிருக்கும் ஆட்களிடம் கொள்ளும் காதல் உணர்வு வெறுமென கற்பனையில் வேர் கொண்டுள்ளதே தவிர உண்மையானதாக இல்லை.

மோகங்கள்—ஏன் அவை தீங்கிழைக்கலாம்

மோகங்களில் அநேகம் தற்காலிகமாக இருந்தபோதிலும், அவை ஓர் இளைஞனுக்கு அதிகத் தீங்கை உண்டுபண்ணக்கூடும். ஒன்று என்னவென்றால், இளவயதில் பிரியம் வைப்பவைகளில் அநேகம் வெறுமென மதிப்புக்குரியவையாக இல்லை. ஒரு ஞானி இவ்விதமாகச் சொன்னார்: “மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்.” (பிரசங்கி 10:6) இவ்விதமாக ஒரு பாடகன் உன்னதமான நிலையில் வைக்கப்படுகிறான், ஏனென்றால் அவனுக்கு இனிமையான குரலும், பார்க்க அழகுள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் அவனுடைய ஒழுக்கங்கள் போற்றுதற்குரியவையா? அவன் அல்லது அவள் ‘கர்த்தருக்குள்’ ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவனா?—1 கொரிந்தியர் 7:39.

பைபிள் மேலும் எச்சரிக்கிறது: “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.” (யாக்கோபு 4:4) கடவுள் கண்டனம் செய்கிற நடத்தையுள்ள ஒருவர் மீது உங்கள் இருதயத்தை வைப்பீர்களானால் கடவுளோடு நீங்கள் கொண்டுள்ள உறவைக் கெடுத்துப் போடுகிறீர்கள் அல்லவா? பைபிள் மேலும் கட்டளையாக சொல்லுகிறது, “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுவீர்களாக.” (1 யோவான் 5:21) ஓர் இளைஞன் அல்லது ஓர் இளம்பெண் நட்சத்திரமாய்த் திகழும் ஒரு பாடகனின் படங்களை தன் அறை முழுவதுமாக அலங்கரித்து வைத்திருந்தால் அதை என்னவென்று சொல்வீர்கள். ‘விக்கிரகாராதனை’ என்ற சொல்லுக்குப் பொருத்தமாயிராதா? இது எப்படிக் கடவுளைப் பிரியப்படுத்தக்கூடும்?

சில இளவயதினர் தங்களுடைய கற்பனைகளை நியாயமான விதமாக இல்லாதிருக்கவும் அனுமதிக்கின்றனர். ஓர் இளம் பெண் சொல்லுகிறாள்: “நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று நான் அவரைக் கேட்கும்போது—என்னிடத்திலே எவ்வித உணர்ச்சிகளையும் கொண்டில்லை என்றே எப்பொழுதும் அவர் சொல்லுகிறார். ஆனால் அவர் பார்க்கிற விதத்திலிருந்தும் செயலிலிருந்தும் அது உண்மையில்லை என்று நான் சொல்லுவேன்.” தன்னுடைய அக்கறையின்மையை அந்த இளம் மனிதன் தயவான முறையிலே வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறான், ஆனால் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு பிரபல பாடகனிடத்தில் தவறான உணர்ச்சிகளைக் கொண்டுள்ள இன்னொரு பெண் எழுதுகிறாள்: “நான் அவனை என்னுடைய காதலனாக இருக்க விரும்புகிறேன், அது அவ்விதமாக நடக்கவேண்டும் என்று ஜெபித்து இருக்கிறேன்! அவனோடு நெருங்கியிருப்பதற்கான வழி அவனுடைய ஆல்பத்தை வைத்துக்கொண்டுதான் நான் படுப்பேன். அவனைப் பெற முடியாவிட்டால் என்னை நானே கொலை செய்துகொள்வேன்! என்ற நிலையை எட்டிவிட்டேன்.” ‘தெளிந்த எண்ணத்’தோடு சேவிக்கவேண்டும் என்று கட்டளை கொடுக்கிற கடவுளை இப்படி புத்தியில்லாத காமத்தினால் பிரியப்படுத்த முடியுமா?—ரோமர் 12:3.

நீதிமொழிகள் 13:12-ல், “நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்” என்று பைபிள் கூறுகிறது. நடக்கக்கூடாத உறவுகளைப் பற்றி காதல் எதிர்பார்ப்புகளை விருத்தி செய்வதானது நல்சுகத்திற்கு வழியல்ல. விரும்பப்படாத அன்பை நாடுவது “சோர்வுக்கும், கவலைக்கும் பொதுவான துயரத்திற்கும், தூக்கமின்மை அல்லது சோம்பேறித்தனம், நெஞ்சுவலி அல்லது மூச்சுவிட திணறுவது” போன்றவைகளுக்குக் காரணம் என்று டாக்டர்கள் சொல்லுகின்றனர். (2 சாமுவேல் 13:1, 2-ஐ ஒத்துப் பார்க்கவும்.) மோகங் கொண்ட ஒரு பெண் அறிக்கையிடுகிறாள்: “என்னால் சாப்பிடமுடியவில்லை. . . . இனிமேல் நான் படிக்கவும் முடியாது, . . . நான் அவனைப்பற்றி பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறேன். . . . பரிதாபமான நிலையில் உள்ளேன்.”

ஒரு கற்பனை, உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்ள விடுவீர்களானால் என்னே பயங்கர விளைவுகளை நீங்கள் சம்பாதிக்கிறீர்களென்று யோசித்துப் பாருங்கள். டாக்டர் லாரன்ஸ் பாமன், விரைந்து வந்து மறையும் மோகத்திற்கு முதல் அறிகுறி “பள்ளி படிப்பில் உற்சாகம் குறைதல்” என்று குறிப்பிடுகிறார். குடும்பத்திலிருந்தும், நண்பர்களிலிருந்தும் தனிமையாக்கிக் கொள்வது இன்னொரு சாதாரண விளைவு. மதிப்பை இழக்கவும் நேரிடும். “இதை ஒத்துக்கொள்வதே கடினமாக இருக்கிறது, ஆனால் ஜுடியின் பேரில் நான் கொண்டுள்ள மோகத்தினால் கோமாளியைப் போல் நடந்து கொண்டேன்” என்று எழுத்தாளர் ஜில் ஸ்வார்ட்ஸ் சொல்லுகிறார். மோகம் தணிந்துபோன பிறகும்கூட, நீங்கள் யார் பின்னாலேயோ போவது போன்றும், வெளிப்படையாக காரியங்களை செய்வதுபோன்றும், பொதுவாகச் சொன்னால் உங்களையே முட்டாளாக ஆக்கிக்கொள்வது போன்றதுமான ஞாபகங்கள் நிலைத்திருக்கும்படி செய்யும்.

உண்மையை எதிர்ப்படுதல்

இதுவரை வாழ்ந்த ஞானிகளில் ஒருவனாகிய சாலொமோன் அரசன் தன்னுடைய உணர்ச்சிகளுக்குப் பிரதிபலிக்காத ஒரு பெண்ணிடம் தீர்க்க முடியாத காதல் கொண்டான். ஒருபோதும் எழுதப்படாததையொத்த சிறந்த அழகிய பாமாலைகளை அவள் பேரில் குவித்தான். “முழுச் சந்திரனைப் போல் அழகுள்ளவளாகவும், பிரகாசிக்கிற சூரியனைப் போன்று பளிங்காகவும்” இருப்பதாக அவளை வருணித்தான். ஆனால் அவளிடம் எதுவுமே சாதிக்க முடியவில்லை!—சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:10.

என்றபோதிலும், கடைசியில் சாலொமோன் அவளை வெற்றி கொள்வதற்கான தன் முயற்சிகளைக் கைவிட்டான். நீங்களும்கூட, உங்கள் உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 28:26) காதல் கற்பனையில் சிக்கிக்கொண்டீர்களானால் அது குறிப்பாக உண்மையாக இருக்கிறது. என்றபோதிலும் “ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” இதன் அர்த்தம், காரியங்களை அதனதன் ரீதியில் பார்க்க வேண்டும் என்பதே.

“சரியான ஆதாரமில்லாத நம்பிக்கையில் இருந்து நியாயமான நம்பிக்கையை நீங்கள் எப்படி வித்தியாசப்படுத்திச் சொல்லக்கூடும்?” என்று டாக்டர் ஹோவர்டு ஹால்பேர்ன் கேட்கிறார். “உண்மை விஷயங்களை கவனமாக, பதட்டப்படாமல் பார்ப்பதன் மூலமாகத்தான்.” சிந்தியுங்கள்: “இந்த நபரோடு உண்மையான காதலை விருத்தி செய்வதில் எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது? அவர் ஒரு பிரபல நட்சத்திரமாக இருப்பாரானால், அந்த ஆளை சந்திக்கக்கூட வாய்ப்பில்லாமலே இருக்கும்! உங்களைவிட வயதானவர், அதாவது ஆசிரியரைப் போன்றவராக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வாய்ப்புகள் கருகலாகவே உள்ளது.

மேலுமாக, நீங்கள் விரும்பும் அந்த நபர், உங்களிலே இதுவரை அக்கறை காட்டியுள்ளாரா? இல்லை என்றால், எதிர்காலத்தில் காரியங்கள் மாறும் என்று நம்பிக்கைக்கொள்ள உண்மையான காரணம் ஏதாவது உள்ளதா? அவனுடைய அல்லது அவளுடைய காதல் அக்கறைகளைப் பேதமையான மாசற்ற வார்த்தைகளாகவும் செயல்களாகவுமே வாசிக்கிறீர்களா? இதற்கிடையில் அநேக நாடுகளிலே காதல் விஷயத்தில் ஆண்கள்தான் முதலில் ஆரம்பிப்பது பழக்கம். ஓர் இளம் பெண் தன்னில் அக்கறை காண்பிக்காத ஓர் ஆளை விடாப்பிடியாகத் தொடர்வதன் மூலம் தன் மானத்தை இழிவுபடுத்திக்கொள்ளக்கூடும்.

அதுவுமல்லாமல், அந்த நபர் உண்மையாகவே உங்கள் உணர்ச்சிகளுக்குப் பிரதிபலிப்பாரென்றால், அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? விவாகத்தின் உத்தரவாதங்களுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லையென்றால், கற்பனையின்பேரில் குடிகொள்வதைத் தவிர்த்து, இவ்விதமாக “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தை . . . நீக்கிப்போடு.” “சிநேகிக்க ஒரு காலமுண்டு.” அது நீங்கள் இன்னும் வயதுகடந்து வருஷங்கள் கழித்து வரலாம்.—பிரசங்கி 3:8; 11:10.

உங்கள் உணர்ச்சிகளை அலசிப்பார்த்தல்

டாக்டர் சார்ல்ஸ் ஜாஸ்ட்ரோ இவ்விதம் கூறுகிறார்: “அவள் அல்லது அவன் யாரிடத்தில் மோகம் கொண்டுள்ளனரோ அவர் மிகவும் மேம்படுத்தப்பட்டவராய் அவரை ஒரு ‘பரிபூரணக் காதலனாக’ நினைக்கிறார். அதாவது ஒரு துணைவரில் விரும்பத்தக்கதாய் உள்ள எல்லாக் குணாதிசயங்களையும் உடையவராக இருக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறார்.” என்றபோதிலும் அப்படிப்பட்ட ஒரு “பரிபூரண காதலன்” ஒருவன் இருக்கவே முடியாது. “எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள்” என்று பைபிள் சொல்லுகிறது.—ரோமர் 3:23.

ஆக, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் பிரியம் வைத்திருக்க இந்த நபரைப்பற்றி எவ்வளவு நன்றாக எனக்குத் தெரியும்? ஓர் உருவத்தில் காதல் கொண்டிருக்கிறேனா? இந்நபரின் குற்றங்களை என் கண்கள் மறைத்து விட்டிருக்கின்றனவா? நேர்முகமான பார்வையுடன் உங்கள் கற்பனைக் காதலனை நோக்கினால் உங்கள் காதல் அறிவின்மையினின்று உங்களை விடுவித்துக் கொள்ளப் போதுமாயிருக்கும்! இந்நபரிடம் எவ்வகையான பிரியத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அலசிப் பார்க்க உதவக்கூடும். எழுத்தாளரான கேத்தி மெக்காய் கூறுகிறார்: “முதிர்ச்சியற்றவர்களின் காதல் ஒரு நொடிப்பொழுது வந்து போய்விடும் . . . உற்று நோக்கப்படுவது நீயே, நீ காதல் உள்ளவனாய் இருக்கிறாய் என்ற எண்ணத்தைத்தானே வெகுவாக நேசிக்கிறாய். . . . முதிர்ச்சியற்றவர்களின் காதல் தொத்திக்கொண்டு, தனக்கென்று வைத்துக்கொண்டு, பொறாமை நிறைந்ததாய் உள்ளது. . . . முதிர்ச்சியற்றவர்களின் காதல் பரிபூரணத்தைக் கேட்பதாய் இருக்கிறது.”—1 கொரிந்தியர் 13:4, 5-ன் வித்தியாசத்தைக் காணவும்.

அவரையோ, அவளையோ, உங்கள் மனதிலிருந்து எடுத்துப்போடுதல்

இவ்வுலகத்தில் கொடுக்கப்படுகிற எந்த விதமான விவாதங்களும், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை முழுமையாக நீக்கிப்போட முடியாது. அந்தப் பிரச்னைக்குத் தூபம் போடுவதை நீங்கள் தவிர்க்கலாம். பொங்கி எழும் காதல் கதைகள், டி.வி.-யில் காதல் கதைகளைப் பார்ப்பது, அல்லது வெறுமென சில விதமான இசைகளைக் கேட்பதுதானே, உங்களுடைய தனிமையின் உணர்ச்சிகளை மோசமாக்கக்கூடும். ஆக அப்படிப்பட்ட நிலைமையில் உங்களை அனுமதிக்க வேண்டாம். “விறகில்லாமல் நெருப்பு அவியும்.”—நீதிமொழிகள் 26:20.

உங்களை நேசித்து, உங்களில் அக்கறை கொள்ளும் ஆட்களுக்கு மாற்றாக ஒரு கற்பனைக் காதல் இருக்க முடியாது. உங்களைத் தனிமையில் ஆக்கிக்கொள்ள வேண்டாம். (நீதிமொழிகள் 18:1) உங்களுடைய பெற்றோர் அதிக உதவியுள்ளவர்களாக இருப்பதை ஒருவேளை காண்பீர்கள். உங்களுடைய உணர்ச்சிகளை எவ்வளவுதான் மறைக்க முயற்சி செய்தாலும், உங்களை ஏதோ அரித்துக் கொண்டிருக்கிறது என்பது ஏற்கெனவே அவர்களுக்கு ஒருவேளை தெரியும். அவர்களிடத்தில் சென்று ஏன் உங்கள் இருதயத்தைத் திறக்கக்கூடாது? (நீதிமொழிகள் 23:26-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஒரு முதிர்ந்த கிறிஸ்தவனும்கூட நன்றாக செவிகொடுத்து கேட்பவராக இருப்பார்.

இளவயதினருக்காக எழுத்தாளர் எஸ்தர் டேவிடோவிட்ஸ் சொல்லும் புத்திமதி, “தொடர்ந்து வேலையில் சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்ளுங்கள்.” கொஞ்சம் தேகப்பயிற்சி செய்யுங்கள், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், பைபிளில் ஓர் ஆராய்ச்சி திட்டத்தைத் துவங்குங்கள். பலன்தரும் வேலைகளில் மூழ்கி நிலைத்திருப்பதானது, காதல் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விலகும் பாதிப்புகளைக் குறைத்திடும்.

மோகத்தை மேற்கொள்ளுவது சுலபமல்ல. ஆனால் காலம் செல்லச் செல்ல, துயரம் தணிந்துபோகும். உங்களைப் பற்றியும் உங்களுடைய உணர்ச்சிகளைப் பற்றியும் அதிகமான காரியங்களைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். எதிர்காலத்தில் உண்மையான காதல் உருவாகுமானால் அதைக் கையாளுவதற்கு நன்றாக ஆயத்தமுள்ளவர்களாக இருப்பீர்கள்! ஆனால் ‘உண்மையான காதலை’ எப்படி நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும்?

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

மோகம் இளைஞரில் ஏன் சாதாரணமானதாக இருக்கிறது?

பெரும்பாலும் யார் இளவயது காதல் கற்பனைகளுக்கு இலக்காகின்றனர்? ஏன்?

மோகம் ஏன் தீங்குள்ளதாக இருக்கும்?

மோகத்தின் அழுத்தத்தை மேற்கொள்ள ஓர் இளைஞன் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?

காதல் கற்பனை ஊட்டப்படாதபடி ஓர் இளைஞன் எப்படித் தவிர்க்கலாம்?

[பக்கம் 223-ன் சிறு குறிப்பு]

“என்னால் சாப்பிட முடியவில்லை. இனிமேல் நான் படிக்கவும் முடியாது, நான் அவனைப்பற்றி பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறேன். பரிதாபமான நிலையில் உள்ளேன்”

[பக்கம் 220-ன் படம்]

தங்களைவிட வயதில் மூத்தவர்களுமாயிருக்கும் எதிர்பாலார் மீது மோகம் கொள்வது சர்வ சாதாரணமானவை

[பக்கம் 221-ன் படம்]

இந்த நபரை சாதாரணமான இலக்கோடு பார்ப்பதானது, அவர் பேரிலுள்ள உங்களுடைய காதல் எண்ணங்களை நீக்கிவிடக்கூடும்