Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை?

அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை?

அதிகாரம் 19

அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை?

அந்தப் பையனின் நடை அவனுடைய பயந்த மனநிலையைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. விறைத்த நிலையிலும் தன்னைப்பற்றி உறுதியில்லாமலும், அவன் சந்தேகமில்லாமல் தன் புதிய சூழ்நிலைகளால் மனங்குழம்பியிருக்கிறான். பள்ளியில் அவன் புதிய பையனென பழைய மாணாக்கர்கள் உடனடியாகக் கண்டுகொள்கிறார்கள். கணநேரத்துக்குள் இளைஞர்கள் அவனைச் சுற்றிக்கொண்டு கேலிப் பரியாசத்தால் அவனைத் தாக்கத் தொடங்குகின்றனர்! முகம் முற்றிலும் சிவேரென்று சிவக்க, அவன் மிக அருகில் கிடைக்கும் அடைக்கலத்துக்குள்—கழிவறைக்குள்—ஓடி ஒளிகிறான். சுவர்களுக்குப் பின்னாலிருந்து உரத்தச் சிரிப்பு எதிரொலிக்கிறது.

மற்றவர்களை நச்சரிப்பதும், கேலிசெய்து தொல்லைப்படுத்துவதும், அவமதிப்பதும் பல இளைஞரின் கொடுமையான விளையாட்டுப் பொழுதுபோக்காயிருக்கின்றன. பைபிள் காலங்களிலுங்கூட சில இளைஞர்கள் இந்த இழிவான போக்கை வெளிப்படுத்தினர். உதாரணமாக, சிறு பையன்களின் ஒரு கூட்டம் ஒருமுறை தீர்க்கதரிசியான எலிசாவை நச்சரித்தனர். அவனுடைய வேலை பொறுப்புக்கு அவமதிப்புக் காட்டி: “மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ,” என்று அந்த இளைஞர்கள் அவமரியாதையுடன் கத்தினார்கள். (2 இராஜாக்கள் 2:23-25) இன்றும், அவ்வாறே இளைஞர்கள் பலர் மற்றவர்களைப்பற்றி அவமதிப்பான, மனவேதனை உண்டுபண்ணும் கூற்றுகளை எடுத்துரைக்கும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றனர்.

“என் ஒன்பதாவது வகுப்பில் நானே மிகக் குட்டையானவனாயிருந்தேன்,” என வகுப்பறையில் வளரும் வேதனைகள் என்ற புத்தகத்தின் நூலாசிரியர்களில் ஒருவர் நினைவுபடுத்திக் கூறுகிறார். “அறையில் மிகக் கூரறிவுள்ள சிறுவனாயும் மிகக் குட்டையான சிறுவனாயும் இருந்தது நடுநிலைப் பள்ளியில் ஆபத்தான சேர்க்கையாகும்: குட்டையாயிருப்பதற்காக என்னை அடிக்க விரும்பாதவர்கள் அறிவுகூர்மையுடனிருந்ததற்காக என்னை அடித்தார்கள். ‘நாலு கண்கள்,’ என்பதோடுகூட ‘நடக்கும் அகராதி,’ என்றும் 800 வேறு பழிச்சொற்களான [கெட்ட வார்த்தைகள்] பட்டப் பெயர்களைக்கொண்டும் நான் அழைக்கப்பட்டேன்.” பிள்ளைகளின் தனிமையுணர்ச்சி என்ற புத்தகத்தின் நூலாசிரியர் மேலும் சொல்வதாவது: “பேச்சுப் பிரச்னைகள், அல்லது வெளிப்படையாய்த் தெரியும், உடல் அல்லது நடக்கை விபரீதங்களைக்கொண்ட உடல்சம்பந்த குறைபாடுகளுள்ள பிள்ளைகள், மற்றப் பிள்ளைகள் நையாண்டிசெய்வதற்கு உடனடியான இலக்காகிறார்கள்.”

சிலசமயங்களில் இளைஞர்கள்: மனவேதனைதரும் அவமதிப்பான இழிச் சொற்களைக்கொண்டு (பெரும்பாலும் மற்றவரின் பெற்றோரைக் குறித்து) விடாமல் மேலும் மேலும் மிகுதியாய் ஒருவரையொருவர் பழித்துத் தாக்கும் கொடூர போட்டிக்குச் சமமானதில் சேர்ந்துகொள்வதன்மூலம் தங்கள் தாக்குதலை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால் பல இளைஞர்கள் தங்கள் சகாக்களின் நச்சரிப்புக்கெதிரில் பாதுகாப்பற்றிருக்கிறார்கள். ஓர் இளைஞன், உடன் வகுப்புத்தோழர்கள் தன்னை நச்சரித்துத் தொல்லைப்படுத்திப் பரியாசம் செய்துகொண்டிருந்ததன் காரணமாக, அவ்வளவு பயந்து மனங்கலக்கமுற்று வருந்தினதால் சில நாட்கள் ‘தான் வாந்தியெடுக்கப்போவதாய் உணர்ந்தான்’ என நினைவுபடுத்திக் கூறுகிறான். மற்ற மாணாக்கர்கள் தனக்கு என்ன செய்வார்களோவென மனக்கலக்கங்கொண்டிருந்ததனால் அவன் தன் படிப்புகளில் மனதை ஊன்றவைக்க முடியவில்லை.

சிரிப்பதற்குரிய விளையாட்டுக் காரியமல்ல

சகாக்களின் கொடூரத்துக்கு நீ ஆளாகியிருக்கிறாயா? அப்படியானால், கடவுள் அதைச் சிரிப்புக்குரிய விளையாட்டுக் காரியமாய்க் கருதுகிறதில்லை என்பதை அறிவது உனக்கு ஆறுதலளிக்கும். ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு பால்மறந்ததைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஒரு விருந்தைப் பற்றிய பைபிள் விவரத்தைக் கவனி. ஈசாக்குப் பெறப்போகிற சுதந்தரத்தைப்பற்றிப் பொறாமைகொண்டு, ஆபிரகாமின் மூத்த மகன், இஸ்மவேல், ஈசாக்கைப் ‘பரியாசம்பண்ணத்’ தொடங்கினான் எனத் தோன்றுகிறது. எனினும், அது நல்ல இயல்பான விளையாட்டாகச் சற்றும் இராமல், அந்தப் பரியாசம் ‘துன்புறுத்தினதற்கு’ ஒப்பாயிருந்தது. (கலாத்தியர் 4:29) ஈசாக்கின் தாய் சாராள், இவ்வாறு அந்தப் பரியாசத்தில் பகைமை இருந்ததை உணர்ந்தாள். தன் குமாரன் ஈசாக்கின்மூலம் “வித்துவை,” அல்லது மேசியாவைப் பிறப்பிக்கும்படியான யெகோவாவின் நோக்கத்துக்கே நேர்முக அவமதிப்பு செய்ததாக அவள் அதைக் கண்டாள். சாராளின் வேண்டுகோளின்பேரில், இஸ்மவேலும் அவனுடைய தாயும் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து விலக்கி அனுப்பிவிடப்பட்டனர்.—ஆதியாகமம்21:8-14.

அவ்வாறே, இளைஞர்கள் கெட்ட நோக்கத்துடன் உன்னைத் தொல்லைப்படுத்துகையில்—முக்கியமாய் நீ பைபிள் தராதரங்களின்படி வாழப் பிரயாசப்படுவதனால் அவர்கள் அவ்வாறு செய்தால்—அது சிரிப்புக்குரிய விளையாட்டுக் காரியமல்ல. உதாரணமாக, கிறிஸ்தவ இளைஞர்கள், தங்கள் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோராக நன்றாய் அறியப்பட்டிருக்கின்றனர். ஆனால், யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் இளைஞரின் ஒரு தொகுதி சொன்னதுபோல்: “நாங்கள் வீடு-வீடாகச் சென்று பிரசங்கிப்பதால் பள்ளியிலுள்ள சிறுவர்கள் எங்களைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் அதற்காக எங்களை இகழ்ந்து தாழ்வுபடுத்துகிறார்கள்.” ஆம், பூர்வ காலங்களிலிருந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியரைப்போல், கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் ‘நிந்தைகளையும் அனுபவிக்கிறார்கள்.’ (எபிரெயர் 11:36) இத்தகைய அவதூறுகளைச் சகிப்பதில் அவர்கள் காட்டும் தைரியத்துக்காக அவர்களைப் போற்றவேண்டும்!

அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்

எனினும், உன்னைச் சும்மா விட்டுவிடும்படி உன்னை அலைக்கழிப்போரைச் செய்யவைப்பது எவ்வாறென நீ ஒருவேளை சிந்திக்கலாம். முதலாவது, பரியாசம் செய்யப்படுவது ஏன் என்பதை ஆழ்ந்து எண்ணிப்பார். “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு,” என்று பைபிளில் நீதிமொழிகள் 14:13-ல் சொல்லியிருக்கிறது. ஒரு தொகுதி இளைஞர்கள் எவரையாவது தொல்லைப்படுத்துகையில் திடீர்சிரிப்பு கிளம்புகிறது. ஆனால் அவர்கள் ‘இருதயத்தின் நல்ல நிலைமையின் காரணமாக மகிழ்ச்சியுடன் கெம்பீரிப்பதில்லை.’ (ஏசாயா 65:14, NW) அடிக்கடி அந்தச் சிரிப்பு உட்புறக் கலவரத்தை மறைக்கும் வெறும் வழிவகையாகவே இருக்கிறது. போலித் துணிச்சலுக்குப் பின்னால், அந்த அலைக்கழிப்பவர்கள்: ‘நாங்கள் எங்களை விரும்புகிறதில்லை, ஆனால் எவரையாவது தாழ்த்துவது எங்களைச் சற்று மேம்பட்டு உணரும்படி செய்கிறது,’ என்று உண்மையில் சொல்லிக்கொள்ளலாம்.

பொறாமையுங்கூட தாக்கும்படி தூண்டுவிக்கிறது. பத்தொன்பதுக்குக் கீழ்ப்பட்ட வயதிலிருந்த யோசேப்பைப் பற்றிய பைபிள் விவரத்தை நினைவுபடுத்திப் பார், அவன் தன் தகப்பனின் தனிப்பாசத்துக்குரியவனாக இருந்ததால் அவனுடைய சொந்தச் சகோதரர்கள் அவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். கடுமையான பொறாமை, வாய்ச்சொற்களால் நிந்திப்பதற்குமட்டுமல்லாமல், கொலைசெய்ய எண்ணமிடுவதற்குங்கூட வழிநடத்தினது! (ஆதியாகமம் 37:4, 11, 20) அவ்வாறே இன்று, ஒரு மாணாக்கன் விதிவிலக்கான முறையில் அறிவுகூர்மையுடனிருப்பது அல்லது ஆசிரியர்களின் விருப்பத்துக்குகந்தவனாயிருப்பது அவனுடைய சகாக்களின் பொறாமையைத் தூண்டிவிடலாம். அவனை அவமதித்து இழிவாய்ப் பேசுவது ‘அவனை மட்டுப்படுத்தி வைப்பதுபோல்’ தோன்றும்.

இவ்வாறு உறுதியற்ற நிலையும், பொறாமையும், சுய-மதிப்புக் குறைவும் இகழ்ந்துபேசுவதற்குக் காரணங்களாயிருக்கின்றன. அப்படியானால், உறுதிநிலையற்ற யாரோ ஓர் இளைஞன் தன் சுய-மதிப்பை இழந்துவிட்டதனால் நீ ஏன் உன் சுய-மதிப்பை இழக்கவேண்டும்?

அந்த நச்சரிப்பை நிறுத்துவது

“பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமல் . . . இருக்கிற மனுஷன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW],” என சங்கீதக்காரன் சொல்கிறான். (சங்கீதம் 1:1) கவனத்தை உன்மீதிருந்து வேறுபக்கமாகத் திருப்ப நீயும் பரியாசம் செய்வதில் சேர்ந்துகொள்வது அந்த அவமதிப்பு சுழற்சி தொடர்ந்து நீடிக்கும்படியே செய்கிறது. “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . தீமையை நன்மையினாலே வெல்லு” என்பது தெய்வீக அறிவுரை.—ரோமர் 12:17-21.

பிரசங்கி 7:9-ல் மேலும் சொல்லியிருப்பதாவது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” ஆம், அந்தப் பரியாசத்தை நீ ஏன் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? உன் உடலமைப்பின்பேரில் எவராவது கேலிசெய்தால் அல்லது உன் முகக் குறைபாடு சிரிப்பூட்டுவதாகக் கண்டால், அது உன் மனதை வேதனைப்படுத்துவது உண்மைதான். எனினும் அந்தக் கூற்றுகள், விரும்பத்தகாதவையாயிருப்பினும், கட்டாயமாய்க் கெடுநோக்குடன்தான் சொல்லப்பட்டதென்பதாய் இராது. ஆகையால் எவராவது கபடமில்லாமல்—அல்லது ஒருவேளை சற்றுக் களங்கத்துடன்—உன்னைப் புண்படுத்தும் எதையாவது குத்திக் காண்பித்தால், நீ ஏன் மனம் நொறுங்குகிறாய்? சொல்லப்பட்டது இழிவானதாக அல்லது மதிப்புக்குறைவானதாக இராவிடில், அதன் நகைச்சுவையைக் காண முயற்சி செய். “நகைக்க ஒரு காலமுண்டு,” விளையாட்டான கேலியின்பேரில் புண்பட்டு கோபங்காட்டுவது மட்டுக்குமீறிய பிரதிபலிப்பாகலாம்.—பிரசங்கி 3:4.

ஆனால் அந்தப் பரியாசம் கொடுமையானதாக அல்லது கேடுசெய்வதாக இருந்தால் என்ன செய்வது? பரியாசம் செய்பவன் உன் பிரதிபலிப்பின்பேரில் எக்களிக்க, உன் அவலநிலையின்பேரில் கேளிக்கை செய்ய விரும்புகிறான் என்பதை நினைவுபடுத்திக்கொள். கோபங்கொண்டு திருப்பித் தாக்குவது, தற்காப்புச் செய்து போராடுவது, அல்லது கண்ணீர்விட்டழுவது மேலும் தொடர்ந்து நச்சரிக்கும்படி அவனை அல்லது அவளை ஊக்குவிக்கலாம். உன் மன அமைதி கெடுவதைக் காணும் திருப்தியை அவனுக்கு ஏன் கொடுக்கவேண்டும்? அவர்களைப் பொருட்படுத்தாமல் அசட்டையாய் இருந்துவிடுவதே நிந்திப்பதை நிறுத்தவைப்பதற்குப் பெரும்பாலும் மிகச் சிறந்த வழியாகும்.

“பேசப்படும் சகல வார்த்தைகளையும் கவனியாதே [“ஆட்கள் சொல்லும் எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்தாதே”—டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்]; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் கேட்க நேரிடும். பலமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்பது உன் மனதுக்குத் தெரியுமே,” என்று அரசன் சாலொமோன் மேலும் சொன்னான். (பிரசங்கி 7:21, 22, தி.மொ.) பரியாசம் செய்பவரின் குத்தலானக் கூற்றுகளுக்குக் “கவனம் [உன் இருதயத்தைச் NW] செலுத்து”வது, உன்னைப்பற்றி அவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு மட்டுக்குமீறி அக்கறை காட்டுவதைக் குறிக்கும். அவர்களுடைய தீர்ப்பு நேர்மைவாய்ந்ததா? அப்போஸ்தலன் பவுல், பொறாமைகொண்ட சகாக்களால் அநியாயமாய்த் தாக்கப்பட்டான், ஆனால் அவன் பின்வருமாறு பதில் சொன்னான்: “நான் உங்களாலாவது மனுஷரின் நியாயவிசாரணையினாலாவது தீர்ப்பைப் பெறுவதென்பது மிகவும் அற்பமான காரியம். . . . என்னை நியாயம் விசாரிக்கிறவர் ஆண்டவரே [யெகோவாவே, NW].” (1 கொரிந்தியர் 4:3, 4, தி.மொ.) கடவுளுடன் பவுலின் உறவு அவ்வளவு உறுதியாயிருந்ததால் அநியாயமான தாக்குதல்களைத் தாங்கிநிற்பதற்கு அவன் திட நம்பிக்கையையும் மனோ பலத்தையும் கொண்டிருந்தான்.

உன் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வது

சில சமயங்களில், உன் கிறிஸ்தவ வாழ்க்கைமுறையின் காரணமாக உன்னை ஏளனம் செய்யலாம். இயேசு கிறிஸ்துதாமே அத்தகைய “மாறுபாடான பேச்சைச்” சகிக்க வேண்டியிருந்தது. (எபிரெயர் 12:3, NW) எரேமியாவும் யெகோவாவின் செய்தியைத் தைரியமாய்ப் பேசினதனால் “நாளெல்லாம் நகைப்புக்கு இடமா”னான். அவன் அவ்வளவு இடைவிடாமல் அலைக்கழிக்கப்பட்டதனால், தன் உற்சாகமூட்டும் சக்தியைத் தற்காலிகமாய் இழந்தான். “நான் அவரைப் [யெகோவவைப்] பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்,” என்று அவன் தீர்மானித்தான். எனினும், கடவுளின்பேரிலும் சத்தியத்தின்பேரிலும் அவன் கொண்டிருந்த அன்பு தன் பயத்தை மேற்கொள்ள அவனை முடிவில் உந்துவித்தது.—எரேமியா 20:7-9.

இன்றும் சில கிறிஸ்தவ இளைஞர்கள் அவ்வாறே ஊக்கமிழந்த உணர்ச்சியடைந்திருக்கின்றனர். மற்றவர்கள் கேலி செய்வதை நிறுத்துவதில் அக்கறைகொண்டு, தாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை மறைக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் கடவுள்பேரிலுள்ள அன்பு தங்கள் பயத்தை மேற்கொண்டு ‘தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும்படி’ அத்தகையோரை முடிவில் அடிக்கடித் தூண்டி இயக்குகிறது! (மத்தேயு 5:16) உதாரணமாக, பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒரு பையன் பின்வருமாறு கூறினான்: “என் மனப்பான்மை மாறியது. கிறிஸ்தவனாயிருப்பது, சுற்றிச் சுமந்துசெல்லும் ஒரு பாரச்சுமையெனக் கருதுவதை நான் நிறுத்தி, அதைப் பெருமைகொள்வதற்குரிய ஒன்றாய்க் கருதத் தொடங்கினேன்.” கடவுளை அறிவதற்கும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவரால் பயன்படுத்தப்படுவதற்கும் உனக்குள்ள சிலாக்கியத்தில் நீயும் “பெருமைபாராட்ட”லாம்.—1 கொரிந்தியர் 1:30.

எனினும், மற்றவர்களை அடிக்கடி குறைகூறிக்கொண்டிருப்பதால் அல்லது உன்னை உயர்ந்தவனென எண்ணுகிறாயென்ற எண்ணத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதனால் பகைமையை வரவழைக்காதே. உன் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு எழும்புகையில், அவ்வாறு செய், ஆனால் “சாந்த மனநிலையோடும் ஆழ்ந்த மரியாதையுடனும்,” அவ்வாறு செய். (1 பேதுரு 3:15) நல்நடத்தைக்கான உன் நற்பெயர் நீ பள்ளியில் இருக்கையில் உன் மிகப்பெரிய பாதுகாப்பாக நிரூபிக்கலாம். உன் தைரியமான நிலைநிற்கையை மற்றவர்கள் ஒருவேளை விரும்பாவிடினும், அதற்காக அவர்கள் பெரும்பாலும் சகியாதப் பொறாமைகொண்ட மனநிலையுடன் உன்னை மதிப்பார்கள்.

வனீஸா என்ற ஒருபெண்ணை ஒரு தொகுதி பெண்கள் தொல்லைப்படுத்தினார்கள், அவர்கள் அவளை அடிப்பார்கள், இங்குமங்கும் தள்ளுவார்கள், அவளுடைய புத்தகங்களை அவள் கைகளிலிருந்து தட்டிக் கீழேவிழச் செய்வார்கள்—இவையாவும் அவளைச் சண்டைக்குத் தூண்டிவிட செய்வதற்கான முயற்சிகளே. சாக்கலட் பால் பானத்தை அவளுடைய தலையிலும் தூய்மையான வெள்ளை உடையிலுங்கூட ஊற்றினார்கள். எனினும் அவள் அந்தக் கோபமூட்டுதலுக்கு ஒருபோதும் இடங்கொடுக்கவில்லை. சிறிது காலத்துக்குப் பின்னால், வனீஸா அந்தத் தொகுதியின் செயல்களுக்குத் தலைமைதாங்கின பெண்ணை யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு ஒன்றில் சந்தித்தாள்! முன் கொடுமைக்காரியாயிருந்த அவள் பின்வருமாறு கூறினாள்: “நான் உன்னைப் பகைத்தேன் . . . நீ உன் அமைதியை ஒருதடவையாவது இழப்பதைக் காண விரும்பினேன்.” எனினும், வனீஸா தன் மனஅமைதியைக் காத்துவந்தது எவ்வாறென்பதை அறிய விரும்பின அவளுடைய ஆர்வம், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஒப்புக்கொள்ளும்படி அவளை வழிநடத்தினது. அவள் தொடர்ந்து கூறினதாவது: “நான் கற்றவற்றை நேசித்தேன், நாளைக்கு நான் முழுக்காட்டப்படப்போகிறேன்.”

ஆகையால் சகாக்கள் பேசும் “மாறுபாடான பேச்சு” உன் ஊக்கத்தைத் தகர்க்க இடங்கொடாதே. பொருத்தமான சமயத்தில், ஓரளவு நகைச்சுவையைக் காட்டு. அவர்கள் உனக்குத் தீமைசெய்தாலும் உன் பிரதிபலிப்பு அன்பாகவே இருக்கட்டும். சண்டையைத் தூண்டிவிட செய்யும் முயற்சிகளுக்கு ஊக்கந்தர மறுத்துவிடு, உன்னை அலைக்கழிப்பவர்கள், காலப்போக்கில், உன்னைப் பரியாசம் செய்வதற்கான இலக்காக்குவதில் அதிக இன்பத்தைக் கண்டடைய மாட்டார்கள், ஏனெனில் “விறகில்லாவிடில் நெருப்பு அவிந்திடும்.”—நீதிமொழிகள் 26:20.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ மற்றவர்களைக் கொடுமையாய்ப் பரியாசம் செய்வோரைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்?

◻ இளைஞரின் நச்சரிப்புக்குப் பின்னால் பெரும்பாலும் இருப்பதென்ன?

◻ பரியாசத்தை நீ எவ்வாறு குறைக்கலாம் அல்லது நிறுத்தவுங்கூடும்?

◻ மற்றவர்கள் உன்னைக் கேலிசெய்கையிலும், பள்ளியில் நீ ‘உன் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வது’ ஏன் முக்கியம்?

◻ பள்ளியில் வன்முறைச் செயல்களிலிருந்து உன்னைப் பாதுகாக்க நீ என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?

[பக்கம் 155-ன் சிறு குறிப்பு]

போலித் துணிச்சலுக்குப் பின்னால், அந்த அலைக்கழிப்பவர்கள்: ‘நாங்கள் எங்களை விரும்புகிறதில்லை, ஆனால் எவரையாவது தாழ்த்துவது எங்களைச் சற்று மேம்பட்டு உணரும்படி செய்கிறது,’ என்று உண்மையில் சொல்லிக்கொள்ளலாம்

[பக்கம் 152-ன் பெட்டி]

நான் அடிபடுவதை எவ்வாறு தவிர்ப்பது?

‘எந்நேரத்திலும் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நிலையிலேயே பள்ளிக்கு வரவேண்டியிருக்கிறது.’ இவ்வாறே பல மாணாக்கர்கள் சொல்கின்றனர். ஆனால் ஓர் ஆயுதத்தை வைத்திருப்பது முட்டாள்தனம் மற்றும் தொல்லையை வரவழைக்கிறது. (நீதிமொழிகள் 11:27) அப்படியானால், உன்னை நீ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

அபாயமான இடங்களை அறிந்து தவிர்த்திரு. கட்டிட முகப்பு முனைகள், சுழற்படிக்கட்டுக் கூண்டுகள், உடைமாற்றும் அறைகள் ஆகியவை சில பள்ளிகளில் பயங்கர தொந்தரவுக்குரிய இடங்கள். கழிவறைகள், சண்டைகளுக்கும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் கூடும் இடங்களாகத் தகாவழிக்குப் போர்போன அவ்வளவு மோசமான இடங்களாயிருப்பதால் இளைஞர் பலர் இந்த இடங்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கிலும் உடல் சங்கடத்தைச் சகித்துக்கொள்வதையே மேலாகத் தெரிந்துகொள்வர்.

உன் கூட்டுறவுகளுக்குக் கவனம் செலுத்து. அடிக்கடி ஓர் இளைஞன் தான் தவறான கூட்டத்துடன் கூட்டுறவுகொண்டுள்ள வெறுங்காரணத்தினிமித்தம் ஒரு சண்டைக்கு நடுவில் தன்னைக் காண்கிறான். (நீதிமொழிகள் 22:24, 25-ஐப் பார்.) நிச்சயமாகவே, உன் பள்ளித்தோழர்களுக்குப் புறக்கணிப்புக் காட்டுவது அவர்களை உன்னிடம் மனமுறிவுகொள்ள அல்லது எதிர்ப்புணர்ச்சிக் கொள்ள வைக்கலாம். நீ அவர்களிடம் சிநேகப்பான்மையுடனும் மரியாதையுடனும் இருந்தால், உன்னைச் சும்மா விட்டுவிட அவர்கள் பெரும்பாலும் மனஞ்சாயலாம்.

சண்டைகளைவிட்டு விரைந்து சென்றுவிடு. “ஒருவரோடொருவர் சண்டை போடும் அளவுக்கு நிலைமையை வற்புறுத்”துவதைத் தவிர். (கலாத்தியர் 5:26, அடிக்குறிப்பு) ஒரு சண்டையில் நீ வெற்றிப்பெற்றவனாய் வெளிவந்தாலும், உன் எதிரி திரும்பச் சண்டையிட்டுத் தன் திறமையைக் காட்டுவதற்கான சமயத்துக்காக வெறுமென காத்திருக்கலாம். ஒரு சண்டையிலிருந்து வெளியேற முதலாவது பேசிப்பார்க்க முயற்சிசெய். (நீதிமொழிகள் 15:1) பேசுவது பயன் தராவிடில் வன்முறையான எதிர்ப்புப் போராட்டத்துக்குவிலகி தூர நடந்துவிடு—அல்லது ஓடியும்விடு. “செத்த சிங்கத்திலும் உயிருள்ள நாயே சிறந்தது,” என்பதை நினைவுபடுத்திக்கொள். (பிரசங்கி 9:4) கடைசி வழிமுறையாக, உன்னைப் பாதுகாக்கவும் தற்காப்புசெய்யவும் தேவையான நியாயமுள்ள வழிவகைகளை மேற்கொள்.—ரோமர் 12:18.

உன் பெற்றோருடன் பேசு. இளைஞர்கள், “தங்கள் பெற்றோர் தங்களைக் கோழைகளென எண்ணுவார்கள் அல்லது தங்களைத் தொந்தரவு செய்வோரைத் தைரியத்துடன் எதிர்த்துநிற்காததற்காகத் திட்டுவார்களென்ற பயத்தில், தங்கள் பள்ளியில் நடக்கும் பயங்கரங்களைத் தங்கள் பெற்றோருக்கு அறிவிப்பது அரிது.” (பிள்ளைகளின் தனிமை) எனினும், பெற்றோர் ஒருவர் அதில் தலையிட்டுக் கவனிப்பதே, பெரும்பாலும் அந்தத் தொந்தரவை நிறுத்துவதற்கு ஒரே வழியாயிருக்கிறது.

கடவுளிடம் ஜெபம் செய். உடல்சம்பந்தமான தீங்கு வராதபடி காத்துவைப்பதாகக் கடவுள் உறுதிதருகிறதில்லை. ஆனால் எதிர்ப்புகளை எதிர்ப்பட அவர் உனக்குத் தைரியத்தையும் அந்த நெருக்கடிநிலையை அமரச் செய்வதற்குத் தேவைப்படும் ஞானத்தையும் அவர் உனக்குக் கொடுக்கலாம்.—யாக்கோபு 1:5.

[பக்கம் 151-ன் படம்]

பல இளைஞர்கள் தங்கள் சகாக்களின் நச்சரிப்புக்கு ஆளாகிறார்கள்

[பக்கம் 154-ன் படம்]

பரியாசம் செய்பவன் உன் அவலநிலையின்பேரில் கேளிக்கை செய்ய விரும்புகிறான். கோபங்கொண்டு திருப்பித் தாக்குவது, அல்லது கண்ணீர்விட்டழுவது மேலும் தொடர்ந்து நச்சரிக்கும்படியும் அவனை ஊக்குவிக்கலாம்

[பக்கம் 156-ன் படம்]

கேலிசெய்து தொல்லைப்படுத்துகையில் ஓரளவு நகைச்சுவை மனப்பான்மையை வெளிப்படுத்த முயற்சிசெய்