Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு?

என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு?

அதிகாரம் 18

என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு?

‘எதைப்பற்றி நீங்கள் மிக அதிகம் கவலைப்படுகிறீர்கள்?’ என்று தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் மிகப் பலரைக் கேட்டபோது, “தேர்ச்சி மதிப்பெண்களைப்பற்றி” என்று அவர்களில் 51 சதவீதம் பதிலளித்தனர்!

பள்ளித் தேர்ச்சி மதிப்பெண்கள் இளைஞர்களுக்குள் கவலைக்குப் பெரிய காரணமென்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. தேர்ச்சி மதிப்பெண்கள் வகுப்பில் தேறி முன்னேறுவதற்கும் தவறி பின்விடப்படுவதற்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெறுவதற்கும் மிகக் குறைந்த நாட்கூலி மாத்திரமே பெறுவதற்கும், பெற்றோரின் போற்றுதலைப் பெறுவதற்கும் அவர்களுடைய கடுங்கோபத்துக்குள்ளாவதற்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கலாம். தேர்ச்சி மதிப்பெண்களுக்கும் பரீட்சைகளுக்கும் அவற்றிற்குரிய இடமிருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டியதே. இயேசு கிறிஸ்துதாமே சில காரியங்களில் தம்முடைய சீஷர்கள் விளங்கிக்கொண்டார்களாவெனக் காண அடிக்கடி சோதித்தார். (லூக்கா 9:18) பள்ளியில் அளவிடுவதும் மதிப்பிடுவதும் என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பதாவது: “பரீட்சை முடிவுகள் தனித்தனி மாணாக்கர்களின் பலத்தின் மற்றும் பலவீனத்தின் பகுதிகளை வெளிப்படுத்தி எதிர்கால படிப்புக்குத் தூண்டுதலளிக்கும் கருவியாகச் செயற்படலாம்.” மேலும் உன் தேர்ச்சி மதிப்பெண்கள், பள்ளியில் நீ எவ்வாறு முன்னேறுகிறாய்—நல்ல முறையிலா மோசமாகவா—என்பதைப்பற்றி ஓரளவு அபிப்பிராயத்தை உன் பெற்றோருக்குக் கொடுக்கவும் பயன்படுகின்றன.

சமநிலையைக் காண்பது

எனினும், தேர்ச்சி மதிப்பெண்களைப்பற்றி மட்டுக்குமீறி கவலைப்படுவது ஆற்றலைக் குறைக்கும் நெருக்கடிகளை உண்டுபண்ணி கடுமையான போட்டியைத் தூண்டிவிடலாம். முக்கியமாய், கல்லூரிக்குச் செல்லும் மாணாக்கர்கள் “கல்வியறிவைப் பார்க்கிலும் தேர்ச்சி மதிப்பெண்களையும் வகுப்பு தரத்தையுமே வற்புறுத்தும் ஒரு போட்டி சிக்கல்வலையில் சிக்கிக் கொள்ளலாம்,” என்று வளரிளமையின்பேரில் எழுதப்பட்ட ஒரு பாடபுத்தகம் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, டாக்டர் உவில்லியம் கிளாஸர் சொன்னதை எடுத்துக் குறிப்பிட, மாணாக்கர்கள் “பரீட்சையில் என்ன வரப்போகிறது என்று கேட்க பள்ளியில் தொடக்கத்திலேயே கற்று . . . அந்தப் பகுதிகளை மாத்திரமே படிக்கின்றனர்.”

அரசன் சாலொமோன் பின்வருமாறு எச்சரித்தான்: “மனுஷனின் சகல உழைப்பும், பயன்படும் சகல செய்கையும் [வேலையில் தேர்ச்சியும்] ஒருவர்மேலொருவர் கொண்ட பொறாமையினால் [போட்டியால், NW] விளைவதே எனக் கண்டேன்; இதுவும் மாயையே, காற்றை வேட்டையாடுவதே.” (பிரசங்கி 4:4, தி.மொ.) பொருள் சம்பந்தச் செல்வங்களுக்காயினும் அல்லது கல்வி தேர்ச்சிநிலை புகழ்ச்சிக்காயினும், கடுமையாய்ப் போட்டியிடுவது வீணே. கடவுளுக்குப் பயப்படும் இளைஞர்கள் பள்ளியில் கருத்தூன்றி கற்கத் தங்களை ஈடுபடுத்துவதன் தேவையைக் காண்கின்றனர். ஆனால் கல்வியைத் தங்கள் வாழ்க்கையில் மிக அதிக முக்கியமான காரியமாக்குவதற்குப் பதில், அவர்கள், தங்கள் பொருள்சம்பந்தத் தேவைகளைக் கடவுள் கவனித்துக்கொள்வாரென நம்பி, ஆவிக்குரிய அக்கறைகளை நாடித் தொடருகின்றனர்.—மத்தேயு 6:33; வாழ்க்கைத் தொழில்களைத் தெரிந்துகொள்ளுதலின்பேரில் அதிகாரம் 22-ஐப் பார்.

மேலும், கல்வி என்பது பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்களைச் சேகரிப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. அது “யோசிக்கும் திறமை” என சாலொமோன் அழைத்ததை முன்னேற்றுவிப்பதாகும். அதாவது, மூலத் தகவலைத் தெரிந்தெடுத்து அதிலிருந்து சரியான நடைமுறை முடிவுகளுக்கு வருவதன் திறமையாகும். (நீதிமொழிகள் 1:4) குருட்டுப்போக்காய்க் குறிப்பிடுவதன் மூலம், உருப்போடுவதன்மூலம் அல்லது திருட்டுத்தனமாய்ப் பார்த்தெழுதி மோசடிசெய்வதன்மூலமுங்கூட பரீட்சையில் தேறும் மதிப்பெண்களைப் பெற சமாளிக்கும் ஓர் இளைஞன், யோசிப்பதெவ்வாறென ஒருபோதும் உண்மையில் கற்பதில்லை. பின்னால் ஒரு காசோலை ஏட்டைக் கணக்கிட்டு சரியீடு செய்ய முடியாத நிலையில் உன்னைக் கண்டால், கணக்கில் உயர்ந்த மதிப்பெண்ணைப் பெற்றதன் பயனென்ன?

ஆகையால் உன் தேர்ச்சி மதிப்பெண்களை இலக்காகக் கருதாமல், பள்ளியில் உன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு ஒரு வழிவகையாகக் கருதுவது முக்கியம். எனினும், உன் திறமைகளைப் பிரதிபலிக்கும் தேர்ச்சி மதிப்பெண்களை நீ எவ்வாறு அடையமுடியும்?

கற்கும் பொறுப்பேற்றுக்கொள்!

ஆசிரியை லின்டா நீல்ஸன் சொல்வதன்படி, குறைபாடுள்ள மாணாக்கர் “தங்கள் மோசமான [பள்ளி] சாதனைகளுக்கு நியாயமற்ற பரீட்சை கேள்விகள், தப்பெண்ணம் கொண்டுள்ள ஆசிரியர், கெட்டக் காலம், தலைவிதி, வானிலை ஆகிய தங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிய காரணங்களின்பேரில் குற்றஞ்சுமத்தும் போக்கைக் கொண்டிருக்கிறார்கள்.” எனினும் பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சோம்பேறி ஆசிப்பான், ஒன்றையும் பெறான்.” (நீதிமொழிகள் 13:4, தி.மொ.) ஆம், சோம்பலே குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதற்கு அடிக்கடி உண்மையான காரணமாயிருக்கிறது.

எனினும், தேர்ந்த மாணாக்கர்கள், தங்கள் படிப்புக்குப் பொறுப்பேற்கிறார்கள். ஒருமுறை ‘டீன் பத்திரிகை உயர்-தேர்வுபெறும் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் சிலரைப் பேட்டிக் கண்டு வினவினது. அவர்கள் இரகசியம் என்ன? “தனிப்பட்ட உள்நோக்கத் தூண்டுதல் தொடர்ந்து முன்னேறும்படி செய்விக்கிறது,” என்று ஒருவன் சொன்னான். “உனக்கு ஒரு திட்டம் அமைத்து உன் நேரத்தை ஒழுங்குபடுத்துவது,” என்று மற்றொருவன் சொன்னான். “உனக்கு நீ இலக்குகளை வைக்கவேண்டும்,” என்று இன்னுமொருவன் சொன்னான். ஆம், உன் தேர்ச்சி மதிப்பெண்கள் எவ்வளவு மேம்பட்டிருக்கின்றனவென்பது உன் கட்டுப்பாட்டுக்குமீறிய காரணங்களின்பேரில் அல்ல, ஆனால் மிகப்பேரளவில் உன்பேரிலேயே—பள்ளியில், படிப்பதற்கும் உன்னைக் கருத்தூன்றி ஈடுபடுத்துவதற்கும் நீ எவ்வளவு கடினமாய் முயற்சிசெய்ய மனங்கொண்டிருக்கிறாய் என்பதன்பேரிலேயே சார்ந்திருக்கிறது.

‘ஆனால் நான் உண்மையில் படிக்கிறேனே’

இவ்வாறே சில இளைஞர்கள் வாதாடுகிறார்கள். தாங்கள் ஏற்கெனவே மிகக் கடினமாய் உழைப்பதாகவும் ஆனால் எத்தகைய பலன்களும் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் உள்ளப்பூர்வமாய் உணருகிறார்கள். எனினும், ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழக (அ.ஐ.மா.) ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 770 மாணாக்கரிடம் பேட்டிக் கண்டு, அவர்கள் தங்கள் பள்ளிப்பாடவேலையில் எவ்வளவு முயற்சிசெய்ததாக உணர்ந்தனரெனக் கேட்டார்கள். வியப்புண்டாக, குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணாக்கர்கள் மற்ற எவரையும்போல் தாங்களும் அவ்வளவு கடினமாய் உழைத்ததாக எண்ணினர்! எனினும் அவர்களுடைய படிப்புப் பழக்கங்களைக் கூர்ந்தாராய்ந்தபோது, அவர்கள் உண்மையில், உயர்ந்தத் தேர்ச்சிநிலையை எட்டின தங்கள் பள்ளித்தோழரைப் பார்க்கிலும் மிகக் குறைந்த வீட்டுப்பாடவேலையைச் செய்தனரென கண்டுபிடிக்கப்பட்டது.

படிப்பினை என்ன? ஒருவேளை நீயும்கூட நீ நினைப்பதன்படி, அவ்வளவு கடினமாய் படிக்காதிருக்கலாம், சில மாற்றங்கள் செய்வது தகுதியாயிருக்கலாம். வெறுமென “வீட்டுப்பாடவேலையில் செலவிடும் நேரத்தை அதிகரிப்பது உயர்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களின் தேர்ச்சி மதிப்பெண்களை உடன்பாடானமுறையில் பாதிக்கிறது.” உண்மையில், “சராசரி குறைந்தத் திறமையுடைய மாணாக்கன், வாரத்தில் 1-லிருந்து 3 மணிநேரங்கள் வீட்டுப்பாடவேலையில் செலவிடுவதால், வீட்டுப்பாடவேலை செய்யாத சராசரி திறமையுள்ள ஒரு மாணாக்கனுக்குச் சமமான தேர்ச்சி மதிப்பெண்களைப் பெறமுடியும்,” என்று கல்விக்கடுத்த உளநூல் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை காட்டினது.

அப்போஸ்தலனாகிய பவுல், தன் இலக்குகளை எட்ட உருவகமாய்த் ‘தன் சரீரத்தை ஒடுக்க’ வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 9:27) அவ்வாறே நீயும் உன்பேரில் விட்டுக்கொடுக்காதக் கண்டிப்பான செயல்திட்ட ஏற்பாட்டை அமர்த்தவேண்டும், முக்கியமாய் டெலிவிஷன் அல்லது கவனத்தை இழுக்கும் மற்றக் காரியங்கள் படிப்பதிலிருந்து உன் கவனத்தை எளிதாய் வேறு வழியில் திருப்பினால் அவ்வாறு செய்யவேண்டும். “வீட்டுப்பாடவேலை செய்துமுடிக்கப்படும் வரையில் டெலிவிஷன் கிடையாது!” என்று சொல்லும் ஒரு நினைவு குறிப்பை டெலிவிஷன்மீது வைத்தும் முயற்சி செய்து பார்க்கலாம்.

உன் படிப்பு சூழ்நிலை

படிப்புக்காக ஒதுக்கிவைக்கும் ஓர் அமைதியான இடத்தைக் கொண்டிருப்பதால் நம்மில் மிகப் பலர் பயனடைவோம். நீ ஓர் அறையை மற்றொருவருடன் பகிர்ந்துகொண்டிருந்தால் அல்லது உன் வீட்டில் இடம் குறைவாக இருக்குமானால், அந்தச் சமயத்துக்கென ஓர் ஏற்பாடு செய்துகொள்! ஒருவேளை ஒவ்வொரு சாயங்காலமும் ஒருமணிநேரத்துக்குச் சமையலறையை அல்லது ஒருவருடைய படுக்கை அறையைப் படிப்பு இடமாக நீ பயன்படுத்தப்போவதாய் அறிவிக்கலாம். அல்லது வேறு வழியில்லையென்றால், பொது நூல்நிலையம் ஒன்றை அல்லது ஒரு நண்பனின் வீட்டை உபயோகிக்க முயற்சி செய்யலாம்.

முடியுமானால், உன் வேலையை விரித்து வைப்பதற்கு ஏராளமான இடமிருக்கும் ஒரு சாய்வு மேசையை அல்லது மேசையைப் பயன்படுத்து. அடிக்கடி எழுந்துபோகத் தேவையிராதபடி பென்சில், தாள்கள் போன்ற தேவைப்பொருட்களை வசதியாய் எட்டக்கூடிய இடத்தில் வைத்துக்கொள். படிக்கும் சமயத்தில் டெலிவிஷனை அல்லது ரேடியோவை போட்டுக்கொண்டிருப்பது பாடத்தில் மனதை ஊன்றவைப்பதற்கு எதிரிடையாக வேலைச்செய்கிறது. தொலைபேசியில் அழைப்புகள் வருவதும் அல்லது சந்திப்புகள் செய்வதும் இவ்வாறே இருக்கின்றன.

மேலும், கண்கூசச் செய்யாதப் போதிய வெளிச்சம் உனக்கு இருக்கும்படியும் நிச்சயப்படுத்திக்கொள். நல்ல வெளிச்சம் படிப்பு அயர்ச்சியைக் குறைக்கிறது உன் கண்களையும் பாதுகாக்கிறது. மேலும் கூடுமானால், காற்றோட்டத்தையும் அறை தட்பவெப்ப நிலையையும் சரிபார்த்துக்கொள். வெப்பமான அறையைப்பார்க்கிலும் குளிர்ச்சியான அறையே அதிக ஊக்கமூட்டும் படிப்பு சூழ்நிலையை அளிக்கிறது.

நீ படிக்கும் மனநிலையில் சற்றேனும் இல்லை என்றால் என்ன செய்வது? வாழ்க்கை நம் மனநிலைகளின் போக்கில் செல்லும் கவலையற்ற இன்ப வாழ்க்கையை நமக்கு அனுமதிப்பது அரிது. உலகப்பிரகாரமான ஒரு வேலையில்,—நீ வேலைசெய்யும் மனநிலையில் இருந்தாலும் இல்லாவிடினும்—ஒவ்வொரு நாளும் வேலைசெய்யவேண்டியிருக்கும். ஆகையால் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்களைச் சுயகட்டுப்பாட்டில் ஒரு பயிற்சியாக, பின்னால் வேலை அனுபவத்துக்காகப் பழக்கப்படுத்திக்கொள்ளும் தயாரிப்பாகக் கருது. காலந்தாழ்த்தாமல் வேலைமனப்பான்மையுடன் அதைச் செய்துமுடி. கல்விபுகட்டுபவர் ஒருவர் ஆலோசனை கூறுவதாவது: “கூடுமானால் படிப்பு ஒவ்வொருநாளும் அதே இடத்திலும் அதே நேரத்திலும் செய்யப்படவேண்டும். இவ்வாறு, ஒழுங்குதவறாத படிப்பு ஒரு பழக்கமாகிவிடும், மேலும் . . . படிப்பதற்கு உன் எதிர்ப்பையும் குறைக்கும்.”

உன் படிப்பு நடைமுறை ஒழுங்கு

பிலிப்பியர் 3:16-ல், பவுல், “அதே ஒழுங்காய் நடப்போமாக,” (தி.மொ.) என்று கிறிஸ்தவர்களை ஊக்கமூட்டினான். பவுல் கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்கைக் குறித்துப் பேசினான். எனினும், ஒரு நடைமுறை ஒழுங்கு அல்லது காரியங்களைச் செய்யும் ஓர் ஒழுங்கான ரீதி, நீ படிக்கும் விதத்தைக் குறித்ததிலும் உதவியாயிருக்கிறது. உதாரணமாக, நீ படிக்கப்போவதை ஒழுங்குபடுத்தியமைக்க முயற்சிசெய். ஒரே வகையான பாடங்களை (இரண்டு அந்நிய மொழிகளைப் போன்றதை) அடுத்தடுத்துத் தொடர்ந்து படிப்பதைத் தவிர். வெவ்வேறு பாடங்களுக்கிடையில் சுறுக்கமான இடை ஓய்வுகளைத் திட்டம் செய், முக்கியமாய் உன் வீட்டுப்பாடவேலை சுமை அதிக பாரமாயிருந்தால் அவ்வாறு செய்.

உனக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகுதியான வாசிப்பை உட்படுத்துகிறதென்றால், பின்வரும் முறையை நீ பயன்படுத்திப் பார்க்கலாம். முதலாவது, நீ வாசிக்கப்போவதைப் பொதுப்பார்வையிடு. கொடுக்கப்பட்ட பாடத்தின் ஒரு முழுமையான கருத்தை அடையும்படி, உபதலைப்புகள், விவரவிளக்கப் படங்கள், முதலியவற்றிற்குக் கவனத்தைச் செலுத்திக்கொண்டு அதனூடே மேலீடாகக் கண்ணோட்டமிடு, அடுத்தப்படியாக, அதிகார தலைப்புகள் அல்லது விவாதப்பொருளைக் குறிக்கும் வாக்கியங்களின்பேரில் ஆதாரங்கொள்ளும் கேள்விகளை உண்டுபண்ணு. (இது நீ வாசிப்பதன்பேரில் உன் மனதை ஒருமுகப்படுத்தி ஊன்றவைக்கச் செய்கிறது.) இப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்துக்கொண்டு வாசி. ஒவ்வொரு பத்தியையும் அல்லது பகுதியையும் நீ முடிக்கையில், நீ வாசித்ததை புத்தகத்தைப் பாராமல், மனப்பாடமாகச் சொல், அல்லது நினைவிலிருந்து உனக்குநீயே சொல்லிப்பார். உன் பாடம் முழுவதையும் இவ்வாறு வாசித்து முடிக்கையில், தலைப்புகளை ஒவ்வொன்றாய் எடுத்து ஒவ்வொரு பிரிவிலும் உன் நினைவுபடுத்தும் ஆற்றலைச் சோதித்துப் பார்ப்பதன் மூலம் விமரிசனம்செய். இம்முறை, மாணாக்கர் தாங்கள் வாசித்ததன் 80 சதவீதத்தை மறவாமல் கவனத்தில் வைத்திருக்க உதவியிருக்கிறதென சிலர் உரிமைப் பாராட்டுகின்றனர்!

கல்வி பயிற்றுவிப்பவர் ஒருவர் மேலும் சொல்வதாவது: “ஓர் உண்மை விவரம் தனித்து நிற்பதில்லை, எப்பொழுதும் மற்றத் தகவலோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறதென்பதை மாணாக்கன் தெளிவாய் உணரச் செய்வது முக்கியம்.” ஆகையால், நீ படிப்பதை நீ ஏற்கெனவே அறிந்தும் அனுபவித்தும் இருப்பவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முயற்சி செய். நீ கற்பவற்றின் நடைமுறையான மதிப்பு என்னவென தேடிப்பார்.

ஊக்கமூட்டுவதாய், கடவுள்-பயமுள்ள இளைஞனுக்கு இங்கே உண்மையான அனுகூலமிருக்கிறது. எவ்வாறெனில், பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” (நீதிமொழிகள் 1:7, NW) உதாரணமாக, இயற்பியலின் விதிகளைக் கற்பது முற்றிலும் சுவையற்றக் காரியமாய்த் தோன்றலாம். ஆனால் படைப்பின் மூலம் கடவுளுடைய ‘காணக்கூடாதப் பண்புகள் தெளிவாய்க் காணப்படுகின்றன’ என்பதை அறிவது நீ கற்பவற்றிற்குக் கூடுதலான கருத்தைக் கொடுக்கிறது. (ரோமர் 1:20) அவ்வாறே சரித்திரமும் யெகோவாவின் நோக்கங்களின் நிறைவேற்றத்தின்பேரில் அடிக்கடி சம்பந்தப்பட்டிருக்கிறது. (தற்போதைய ஆங்கில-அமெரிக்கக் கூட்டு வல்லரசு உட்பட) ஏழு உலக வல்லரசுகள் நேரடியாய் பைபிளில்தானே தர்க்கித்துப் பேசப்பட்டிருக்கின்றன!—வெளிப்படுத்துதல் 17:10; தானியேல், அதிகாரம் 7.

நீ கற்பவற்றை நீ அறிந்திருப்பவற்றோடு அல்லது உன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தோடு சம்பந்தப்படுத்துவதன் மூலம், உண்மை விவரங்கள் உனக்குக் கருத்துள்ளவையாக இருக்கத் தொடங்குகின்றன, அறிவு பகுத்துணர்வை நோக்கி வளருகிறது. மேலும் சாலொமோன் கவனித்துக் கூறியபடி, “உணர்வுள்ளோனுக்கு அறிவு லேசாய் வரும்.”—நீதிமொழிகள் 14:6, தி.மொ.

‘அடுத்த வாரம் ஒரு பரீட்சை இருக்கும்’

இந்த வார்த்தைகள் உன்னைத் திகிலடைய செய்ய வேண்டியதில்லை. முதலாவதாக, அது கட்டுரை சோதனை அல்லது பல்வேறுவகைப்பட்ட தேர்ந்தெடுப்பு போன்ற என்ன வகையான பரீட்சை என்பதை உன் ஆசிரியரின் குறிப்புகளிலிருந்து உய்த்துணர முயற்சிசெய். மேலும், இந்தப் பரீட்சைக்கு முற்பட்ட நாட்களில், அந்தப் பரீட்சையில் என்ன வருமென்பதைப்பற்றி விளக்கும் குறிப்புகளுக்குச் செவிகொடுத்துக் கேட்க முயற்சிசெய். (“இந்த அடுத்தக் குறிப்பு மிக முக்கியம்” அல்லது “இதை நினைவில் வைத்துக்கொள்ள நிச்சயமாயிருங்கள்” என்பவை மாதிரி எடுத்துக்காட்டான சாடைக்குறிப்புகள், என்று உயர்நிலைப் பள்ளிக்கல்விக்குரிய பத்திரிகை சொல்கிறது.) அடுத்தபடியாக, நீ எடுத்துள்ள நினைவுக்குறிப்புகள், பாட புத்தகங்கள், மற்றும் வீட்டுப்பாட வேலைகள் ஆகியவற்றைத் திரும்பப் பார்வையிடு.

“இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்,” என சாலொமோன் நமக்கு நினைப்பூட்டுகிறான். (நீதிமொழிகள் 27:17) ஒருவேளை ஒரு நண்பன் அல்லது உன் பெற்றோரில் ஒருவர் கேள்விகள் கேட்டு உனக்குப் பயிற்சியளிக்க அல்லது வகுப்பில் படித்த விவரங்களை நீ எடுத்துச் சொல்கையில் உனக்குச் செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளோராயிருப்பர். பின்பு அந்தப் பரீட்சைக்கு முந்திய இரவில், அமர்ந்திருந்து நல்ல இரவு தூக்கத்தை அடைய முயற்சிசெய். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று இயேசு கேட்டார்.—மத்தேயு 6:27, தி.மொ.

தோல்வியுறுதல்

பரீட்சையில் தோல்வியுறுதல்—முக்கியமாய் தேறும்படி கடினமாய் முயற்சி செய்தப்பின் அவ்வாறு தோல்வியுறுவது—உன் சுய-மரியாதையைப் பாழாக்கலாம். கல்விபுகட்டுபவர் மாக்ஸ் ரஃபெர்ட்டி நம்மைப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறார்: “நாம் வாழ்ந்திருக்கும் வரை, நமக்குத் தெரிந்திருப்பவற்றின்பேரிலும், எவ்வளவு நன்றாய்ப் பலன்களை அடைகிறோம் என்பதன்பேரிலும் மதிப்பிடப்படுகிறோம். . . . வாழ்க்கை முழுவதும் வெற்றிப் பகட்டுள்ளதாயிருக்கப்போகிறதென எண்ணும்படி சிறுவர்களை ஏமாறச் செய்விக்கும் பள்ளி ஒரு பள்ளியல்ல. அது ஒரு சொப்பன உற்பத்திச்சாலையே.” பரீட்சையில் தோல்வியுறுவதால் ஏற்படும் அவமானம், உன் பிழைகளிலிருந்து பாடம் கற்று முன்னேறும்படி உன்னைத் தூண்டி இயக்கினால் தகுதியானதேயாகும்.

ஆனால் குறைந்த மதிப்பெண்களைக் காட்டும் பரீட்சை தேர்ச்சி அறிக்கை சீட்டுடன், ஏமாற்றமடைந்த பெற்றோரை எதிர்ப்படுவது எவ்வாறு? இதன் பயம், தாமத சூழ்ச்சி வழிமுறைகளைச் சில சமயங்களில் உண்டுபண்ணியிருக்கிறது. “நான் என் பரீட்சை தேர்ச்சி அறிக்கை சீட்டை சமையலறை மேசையில் வைத்துவிட்டு, மேல்மாடிக்குச் சென்று அடுத்தநாள்வரை தூங்க முயற்சிசெய்வதுண்டு,” என ஓர் இளைஞன் நினைவுபடுத்திக் கூறுகிறான். மற்றொருவன் சொல்வதாவது, “நான் செய்வதென்னவெனில், என் தாயிடம் காட்டுவதற்குக் கடைசி வினாடி வரையில் காத்திருப்பேன். காலையில் அவர்கள் வேலைக்குச் செல்லவிருக்கும் அத்தருணத்தில்தானே அவர்களிடம் அதை எடுத்துச் சென்று, ‘இதோ, நீங்கள் இதற்குக் கையெழுத்திடவேண்டும்,’ என்று சொல்வேன். என்னைக் கையாளுவதற்கு அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.”—அந்தச் சமயத்துக்காவது நேரமிராது. சில இளைஞர்கள் தங்கள் பரீட்சை முடிவுவிவர அறிக்கை சீட்டில் பொய்யான மதிப்பெண்களைக் குறிப்பிட்டுமிருக்கின்றனர்!

எனினும், பள்ளியில் நீ எவ்வாறு முன்னேறுகிறாயென அறிய உன் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இயல்பாகவே, உன் தேர்ச்சி மதிப்பெண்கள் உன் திறமைகளைக் குறிப்பிட்டுக்காட்டும்படி அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், உன் மதிப்பெண்கள் எதிர்பார்த்ததற்குக் குறைவாயிருந்தால், தகுந்த சிட்சையைப்பெறும்படி நீ எதிர்பார்க்கலாம். ஆகையால் உன் பெற்றோருடன் நேர்மையாயிரு. “உன் தகப்பனின் சிட்சைக்குச் செவிகொடு, உன் தாயின் சட்டத்தைப் புறக்கணியாதே.” (நீதிமொழிகள் 1:8, NW) மட்டுக்கு மீறிய அளவு உன்னிடம் எதிர்பார்க்கப்படுகிறதென நீ எண்ணினால், அவர்களோடு கலந்து பேசு.—2-ம் அதிகாரத்தில் “நான் என் பெற்றோரிடம் எவ்வாறு சொல்வது?” என்ற தலைப்பைக்கொண்ட இடைச்சேர்ப்புப் பகுதியைப் பார்.

தேர்ச்சி மதிப்பெண்கள் முக்கியமாயிருப்பினும், அவை ஓர் ஆளாக உன் தகுதிமதிப்பின்பேரில் கடைசி தீர்ப்பு செய்பவையல்ல. எனினும், பள்ளியில் நீ இருக்கும் காலத்தைப் பயனுடையதாக்கிக்கொள். உன்னால் கூடிய மிக அதிகத்தைக் கற்றுக்கொள். பொதுவாய் இந்த முயற்சி உன்னையும்—உன் பெற்றோரையும்—மகிழ்விக்கும் மற்றும் திருப்தி உணர வைக்கும் தேர்ச்சி மதிப்பெண்களில் பிரதிபலிக்கும்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ தேர்ச்சி மதிப்பெண்கள் என்ன நோக்கத்துக்குப் பயன்படுகின்றன, அவற்றைப்பற்றிச் சமநிலையான நோக்கைக் கொண்டிருப்பது ஏன் முக்கியம்?

◻ படிப்பதற்குத் தனி பொறுப்பை நீ ஏற்பது ஏன் முக்கியம்?

◻ பள்ளிக்குப் பிற்பட்ட நடவடிக்கைகளில் பங்குகொள்வதைப்பற்றிக் கவனிக்கவேண்டிய சில காரியங்கள் யாவை?

◻ உன் தேர்ச்சி மதிப்பெண்களை நீ முன்னேற்றுவிக்கக்கூடிய சில வழிகள் யாவை?

◻ பரீட்சைகளுக்கு நீ எவ்வாறு ஆயத்தஞ்செய்யலாம்?

◻ தோல்வியுறுவதை நீ எவ்வாறு கருதவேண்டும், அத்தகைய தோல்வியை உன் பெற்றோரிடமிருந்து மறைத்து வைக்கவேண்டுமா?

[பக்கம் 141-ன் சிறு குறிப்பு]

குருட்டுப்போக்காய்க் குறிப்பிடுவதன்மூலம், உருப்போடுவதன்மூலம் அல்லது திருட்டுத்தனமாய்ப் பார்த்தெழுதி மோசடிசெய்வதன்மூலமுங்கூட பரீட்சையில் தேறும் மதிப்பெண்களைப் பெற சமாளிக்கும் ஓர் இளைஞன் யோசிப்பதெவ்வாறென ஒருபோதும் உண்மையில் கற்பதில்லை

[பக்கம் 144, 145-ன் பெட்டி/படம்]

பள்ளிக்குப் பிற்பட்ட நடவடிக்கைகளைக் குறித்ததென்ன?

பள்ளிக்குப் பிற்பட்ட நடவடிக்கைகள் தங்களுக்கு ஒரு நிறைவேற்ற உணர்ச்சியைக் கொடுப்பதாக இளைஞர் பலர் காண்கின்றனர். “அங்கிருந்த ஏறக்குறைய எல்லாக் கழகங்களிலும் நான் உட்பட்டிருந்தேன்,” என பால்டிமோர், மேரிலான்ட் (அ.ஐ.மா.) என்ற இடத்திலுள்ள ஒரு பையன் நினைவுபடுத்திக் கூறுகிறான். “நான் விரும்பும் காரியங்களில் உழைப்பது எனக்கு நல்ல உணர்ச்சியைத் தந்தது. கார்களில் வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததால் தானாக இயங்கும் ஊர்தி கழகத்தில் சேர்ந்திருந்தேன். கம்ப்யூட்டர்கள் எனக்குப் பிரியம், ஆகையால் அந்தக் கழகத்தில் சேர்ந்துகொண்டேன். ஒலிபரப்புப்பொறி எனக்கு விருப்பம், ஆகையால் அந்தக் கழகத்திலும் சேர்ந்துகொண்டேன்.” கல்லூரிக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் முக்கியமாய்ப் பள்ளிக்குப் பிற்பட்ட நடவடிக்கைகளில் பங்குகொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

எனினும், ஐ.மா. கூட்டரசு அரசாங்க அதிகாரி ஒருவர்—முன்னாளில் அவர்தாமே ஆசிரியராயிருந்தவர்—விழித்தெழு! பத்திரிகைக்குச் சொன்னதாவது: “பெரும்பாலும் மாணாக்கர்கள் பள்ளிப் பாடவேலையில் செலவிடுவதைப்பார்க்கிலும் அதிக நேரத்தைப் பாடத்திட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் செலவிட்டு, தேர்ச்சி மதிப்பெண்களைக் குறையாமல் காத்துவருவதைக் கடினமாக்கிக்கொண்டிருக்கலாம்.” ஆம், பாடத்திட்டத்துக்குப் புறம்பான நடிவடிக்கைகளுக்கு வருகையில் சமநிலையைக் காத்துவருவது எளிதல்ல. பள்ளி தளக்கட்டுப் பந்தாட்டக் குழுவில் விளையாடிவந்த காத்தி என்ற ஒரு பெண் பின்வருமாறு சொல்கிறாள்: “ஆட்டப் பயிற்சி செய்தபின், வேறு எதையும் செய்ய முடியாதபடி நான் மிக அதிகம் களைத்துப்போயிருந்தேன். என் பள்ளிப் பாடவேலை பாதிக்கப்பட்டது. ஆகையால் இந்த ஆண்டு நான் அதில் சேர கையொப்பமிடவில்லை.”

ஆவிக்குரிய அபாயங்களும் இருக்கின்றன. தன் பருவ வயதுவரையான ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்து கிறிஸ்தவ முதியவர் ஒருவர் சொல்வதாவது: “மூன்று நடவடிக்கைகளை: பள்ளிப்பாடவேலை, ஓட்டப்பந்தய குழுவுடன் பயிற்சி, மற்றும் ஆவிக்குரிய நடவடிக்கைள் ஆகிவற்றைப் பொருந்தவைக்க முடியுமென நான் எண்ணினேன். ஆனால் இந்த மூன்றையும் பொருந்தவைக்க முடியாத நிலை ஏற்படும்போதெல்லாம் என் வாழ்க்கையின் ஆவிக்குரிய பாகமே தியாகஞ்செய்யப்பட்டது.”

பள்ளியில் இரண்டு போட்டிப் பந்தய குழுக்களில் உட்பட்டிருந்த இளைஞன் தீமன், பின்வருமாறு ஒப்புக்கொள்கிறான்: “[ஆவிக்குரிய போதனைக்காக] நான் [ராஜ்ய] மன்றத்தில் நடந்தக் கூட்டங்களுக்குப் போகமுடியவில்லை, ஏனெனில் செவ்வாய்க்கிழமை நாங்கள் நகரத்துக்கு வெளியில் இருந்தோம், வியாழக்கிழமை நாங்கள் நகரத்துக்கு வெளியில் இருந்தோம், சனிக்கிழமை நாங்கள் நகரத்துக்கு வெளியில் இருந்தோம் விடியற்காலை இரண்டுமணி வரையில் திரும்பிவருவதில்லை.” “உடற்பயிற்சி சிறிது பயனுள்ள”போதிலும், “தேவபக்தியே எல்லாக் காரியங்களுக்கும் பயனுள்ளது” என்பதை நினைவில் வைப்பது இன்றியமையாதது.—1 தீமோத்தேயு 4:8NW.

ஒழுக்க அபாயங்களைப் பற்றியும் நினை. நல்லொழுக்கச் செல்வாக்குச் செலுத்தும் நற்பண்புள்ள நண்பர்களுடன் நீ கூடியிருப்பாயா? உரையாடலின் பொருள் என்னவாயிருக்கும்? விளையாட்டுக்குழுத் தோழர்களின் அல்லது ஒரு கழக உறுப்பினரின் செல்வாக்கு உன்னைக் கேடான முறையில் பாதிக்கக்கூடுமா? “துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்,” என்று 1 கொரிந்தியர் 15:33-ல் (NW) சொல்லியிருக்கிறது.

கவனத்தைக் கவருவதாய், யெகோவாவின் சாட்சிகளுக்குள் பல இளைஞர்கள் தங்கள் பள்ளிக்குப் பிற்பட்ட நேரத்தைப் போட்டி விளையாட்டுகளைப் பார்க்கிலும் மிக அதிக பயனுள்ள ஒன்றுக்கு, அதாவது: சிருஷ்டிகரை அறிய மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்குப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டிருக்கின்றனர். கொலோசெயர் 4:5 பின்வரும் அறிவுரை கொடுக்கிறது: “புறம்பேயிருக்கிறவர்கள் விஷயத்தில் விவேகமாய் நடந்து, காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.”

[பக்கம் 143-ன் படங்கள்]

அசதியான படிப்புப் பழக்கங்களுக்காக மாணாக்கர்கள் . . . பரீட்சையில் தவறும் மதிப்பெண்ணைப் பெறும் விளைவை அடிக்கடி அனுபவிக்கிறார்கள்

[பக்கம் 146-ன் படங்கள்]

பள்ளிக்குப் பிற்பட்ட நடவடிக்கைகளை உன் வீட்டுப்பாடவேலையோடு சமநிலைப்படுத்துவது எளிதல்ல

[பக்கம் 148-ன் படம்]

மோசமாய்ச் செய்த பரீட்சை முடிவுவிவர அறிக்கை சீட்டின்பேரில் பெற்றோர் மனஅமைதி குலைக்கப்படுவது நிச்சயம். ஆனால் அவர்கள் உன்னிடம் மட்டுக்குமீறி எதிர்பார்க்கிறார்களென நீ உணர்ந்தால், அவர்களோடு கலந்து பேசு