Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடவேண்டுமா?

நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடவேண்டுமா?

அதிகாரம் 17

நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடவேண்டுமா?

ஜாக் 25 ஆண்டுகளுக்குமேல் பள்ளி ஆஜர் அதிகாரியாக இருந்துவருகிறார். ஆகையால், மட்டம்போடும் ஓர் இளைஞன், ஜாக்கிடம் அவர் இதுவரை கேட்டிராத ஒரு சாக்குப்போக்கை எடுத்துச்சொல்வது மிகக் கடினமாகும். “‘இன்று, நான் நோயுறப்போகிறேனென நினைத்தேன்’ . . . ‘அலாஸ்காவிலுள்ள என் தாத்தா இறந்துவிட்டார்,’ என்பவற்றைப்போன்றதெல்லாம் சிறுவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்,” என்று அவர் சொல்கிறார். ஜாக்குக்குத் “தனி உவகையூட்டின” சாக்குப்போக்கு என்ன? இது மூன்று பையன்களிடமிருந்து வந்தது, அவர்கள், “மட்டுக்குமீறி மூடுபனி மூடியிருந்ததால் பள்ளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என தெரிவித்தனர்.

இத்தகைய தடுமாற்றமான பொருந்தாதச் சாக்குப்போக்குகள், பள்ளி செல்வதற்குப் பல இளைஞர்கள் கொண்டுள்ள வெறுப்பைச் சித்தரித்துக் காட்டுகின்றன, இது அடிக்கடி (“அதனாலென்ன, சரிதான்”) என்ற வேண்டாவெறுப்பிலிருந்து (“பள்ளி அருவருப்பானது! அதை நான் வெறுக்கிறேன்”) என்ற வெளிப்படையான பகைமைவரை படிப்படியாய்க் கடுமையாகிறது. உதாரணமாக, காரி பள்ளிக்குச் செல்ல எழும்புவான். உடனடியாகத் தன் வயிறுவரை குமட்டல் உணர்ச்சியடைவான். அவன் சொன்னதாவது, “நான் பள்ளி அண்மைவரை செல்வேன், நான் அவ்வளவு மிக வியர்த்து அஞ்சி நடுக்கமுறுவேன் . . . நான் கட்டாயமாக என் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.” இவ்வாறே இளைஞர்கள் பலர் பள்ளியைக் குறித்த அலைக்கழிப்பூட்டும் திகிலால் வருந்துகின்றனர்.—இதை மருத்துவர்கள் பள்ளி ஃபொபியா (அச்சக்கோளாறு) என்றழைக்கின்றனர். இது பள்ளி வன்முறை, சகாக்களின் கொடுமை, மற்றும் நல்ல மதிப்பெண்களை எட்டவேண்டுமென்ற வற்புறுத்தல் ஆகியவற்றால் பெரும்பாலும் தொடங்கிவைக்கப்படுகிறது. இத்தகைய இளைஞர்கள் (சிறிது பெற்றோரின் தூண்டுதலால்) பள்ளிக்குச் செல்வார்கள், ஆனால் அவர்கள் இடைவிடாத மனக்கலக்கத்தையும் உடல்சம்பந்த இன்னல்களையுங்கூட அனுபவிக்கின்றனர்.

கவலைக்கிடமான பெரும் எண்ணிக்கையில் இளைஞர் பள்ளிக்குச் செல்லாமலே இருந்துவிடத் தெரிந்துகொள்வது ஆச்சரியமுண்டாக்குவதில்லை! ஐக்கிய மாகாணத்தில் மாத்திரமே, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணாக்கர்கள் ஒவ்வொருநாளும் ஏறக்குறைய இருபத்தைந்து இலட்சம்பேர் பள்ளிக்கு வருவதில்லை! நியுயார்க் நகர உயர்நிலைப் பள்ளிகளில் அத்தனைபேர் (ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு) “வழக்கமாக வராதிருப்பதால் அவர்களுக்குக் கற்பிப்பது பெரும்பாலும் இயலாதுபோகிறது” என்று நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை மேலும் கூறியது.

மற்ற இளைஞர்கள் இன்னுமதிகத் தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். “பள்ளி சலிப்பு தந்தது, மட்டுக்குமீறி கண்டிப்பானது,” என உவால்டர் என்ற ஒரு வாலிபன் சொன்னான். அவன் நடுநிலைப்பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொண்டான். அன்டோனியா என்ற பெண்ணும் அவ்வாறே செய்தாள். பள்ளிப் பாட வேலை அவளுக்குக் கடினமாக இருந்தது. “நான் வாசிப்பதை விளங்கிக்கொள்ளாவிடில் அந்தப் பயிற்சியை எவ்வாறு செய்ய முடியும்?” என்று அவள் கேட்டாள். “நான் அங்கே வெறுமென உட்கார்ந்துகொண்டும் மேலும் மேலும் மெளனமாகிக்கொண்டும் இருந்தேன், ஆகையால் பள்ளிக்குப்போவதை நிறுத்திக்கொண்டேன்.”

உலக முழுவதிலும் பள்ளி ஒழுங்குமுறைகளை வினைமையான பிரச்னைகள் தொல்லைப்படுத்துகின்றனவென்பதை ஒப்புக்கொள்ளவேண்டியதே. ஆனால் இது பள்ளியில் எல்லா அக்கறையையும் இழந்து அதிலிருந்து நின்றுவிடுவதற்குக் காரணமாகுமா? பள்ளிக்குப் போகாமல் நின்றுவிடுவது பின்னால் உன் வாழ்க்கையை எம்முறைகளில் பாதிக்கலாம்? நீ முடிவாக படிப்பில் தேறும்வரை பள்ளியில் நிலைத்திருப்பதற்கு நல்லக் காரணங்கள் இருக்கின்றனவா?

கல்வியின் மதிப்பு

மைக்கல் நடுநிலைப்பள்ளிக்குச் சமமான தகுதி சான்றிதழ் பெறுவதற்குப் பள்ளிக்குத் திரும்பி வந்தான். ஏன் வந்தானென அவனைக் கேட்டபோது, “எனக்குக் கல்வி தேவையென நான் உணர்ந்தேன்,” என்று அவன் சொன்னான். ஆனால் “கல்வி” என்றாலென்ன? கவர்ச்சியூட்டும் விவரங்களை வரிசையாக ஒப்புவிக்கும் திறமையா? ஒரு செங்கற் குவியல் ஒரு வீடாகாததைப்போல் இதுவும் கல்வியாகாது.

கல்வி வெற்றிகரமான முதிய வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தமாக்க வேண்டும். 18 ஆண்டுகள் பள்ளிக் கல்வி நிலையத் தலைவராயுள்ள ஆலென் ஆஸ்டில், “எவ்வாறு யோசிப்பது, பிரச்னைகளைத் தீர்ப்பது, பகுத்தறிவுக்குப் பொருந்தியதும் பொருந்தாததுமென்ன, தெளிவாய்ச் சிந்திப்பதற்கு அடிப்படையான திறமை, உய்த்துணர உதவும் மூலகாரண அம்சங்களென்னவென அறிய மற்றும் பகுதிகளுக்கும் முழுமைக்கும் இடையேயுள்ள இணைப்புகளை அறிய, இந்தத் தீர்ப்புகளையும் வேறுபாடுகளையும் செய்ய, கற்றுணர்வதெவ்வாறென கற்றுக்கொள்வது என்பவற்றை உனக்குக் கற்பிக்கும் கல்வியைப்” பற்றிப் பேசினார்.

பள்ளி எவ்வாறு பொருந்துகிறது? பல நுற்றாண்டுகளுக்கு முன்னால் அரசன் சாலொமோன், “பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் [யோசிக்கும் திறமையையும், NW] கொடு”ப்பதற்கு நீதிமொழிகளை எழுதினான். (நீதிமொழிகள் 1:1-4) ஆம், அனுபவமில்லாமை இளமையோடு செல்கிறது. எனினும் பள்ளி, யோசிக்கும் திறமையைப் பயிற்றுவித்து வளர்க்க உனக்கு உதவிசெய்ய முடியும். இது விவரங்களை வெறுமென மனப்பாடமாக ஒப்புவிப்பதல்ல, ஆனால் அவற்றைப் பகுத்தாராய்ந்து, அவற்றிலிருந்து பலன்தரக்கூடிய எண்ணங்களைத் தோற்றுவிக்கும் திறமையாகும். சில பள்ளிகள் கற்பிக்கும் முறையைப்பற்றிப் பலர் குற்றங்குறை சொல்லியிருப்பினும், பள்ளி உன் மனதைப் பயன்படுத்தும்படி உன்னை நிச்சயமாக வற்புறுத்தி செய்யவைக்கிறது. உண்மைதான், ஜியாமெட்ரி கணக்குகளைச் செய்து விடைகாண்பது அல்லது சரித்திர தேதிகளின் பட்டியலை மனப்பாடம் செய்வது, ஒருவேளை அந்தச் சமயத்தில் உன் வாழ்க்கைக்குப் பொருத்தமாய்த் தோன்றாது. ஆனால் உயர்நிலைப் பள்ளி பிழைப்பு வழிகாட்டி: என்ற ஆங்கில புத்தகத்தில் பார்பரா மேயர் எழுதினபடி: “பரீட்சைகளில் ஆசிரியர்கள் கேட்கும் எல்லா விவரங்களையும் அறிவு துணுக்குகளையும் எல்லாரும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை, எனினும் படிப்பது எவ்வாறு, திட்டமிடுவது எவ்வாறு என்று கற்றுக்கொள்ளும் இத்தகைய திறமைகள் ஒருபோதும் மறக்கப்படாது.”

கல்வியின் நீண்டகால பாதிப்புகளை ஆராய்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் மூவர் அவ்வாறே முடிவுசெய்தனர், அதாவது, “நன்றாய்க் கல்வி பயிற்றுவிக்கப்பட்டவர்கள் நிச்சயமாகவே அதிக விரிவான மற்றும் அதிக ஆழமான அறிவைக் கொண்டிருக்கின்றனர், வெறுமென புத்தகங்களில் கற்ற உண்மைகளைப்பற்றி மட்டுமல்ல ஆனால் சமகாலத்திய உலகத்தைப்பற்றிய அறிவையும் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் அறிவை நாடித்தேடுவோராயும் தகவல் தோற்றுமூலங்களுக்குப் பொருந்தியவராயும் இருக்கின்றனர். . . . பள்ளியிலிருந்து விலகிப் பல ஆண்டுகளாகியும் முதுமைப்பட்டும் இருப்பினும் இந்த வேறுபாடுகள் நிலைத்திருந்தனவென கண்டுபிடிக்கப்பட்டது.”—கல்வியின் நீடித்துநிலைத்திருக்கும் பாதிப்புகள்.

எல்லாவற்றிலும் மிக முக்கியமானது, கல்வி உன் கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்ற உன்னைத் தகுதியுள்ளவனாக்கும். நன்றாய்ப் படிக்கும் பழக்கங்களை நீ முயன்றுபெற்று வாசிக்கும் கலையில் முழுத் தேர்ச்சியடைந்திருந்தால், நீ மேலும் எளிதாய்க் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க முடியும். (சங்கீதம் 1:2) மனதிலுள்ளவற்றைத் திறம்பட சொற்களில் தெரிவிக்கப் பள்ளியில் கற்றிருப்பதால், மற்றவர்களுக்குப் பைபிள் சத்தியங்களை நீ மேலும் எளிதாய்க் கற்பிக்க முடியும். அவ்வாறே சரித்திரம், விஞ்ஞானம், புவியியல், மற்றும் கணக்கு பயனுள்ளவை, பற்பல வளர்ப்பு சூழ்நிலைகள், அக்கறைகள் நம்பிக்கைகளுள்ள ஆட்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைக்க உனக்கு உதவிசெய்யும்.

பள்ளியும் வேலையும்

பள்ளி, உன் எதிர்கால வேலை வாய்ப்புகளின்பேரிலும் பெரும் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. எவ்வாறு?

ஞானியான அரசன் சாலொமோன் திறமையுள்ள வேலையாளனைப்பற்றிப் பின்வருமாறு கூறினான்: “அவன் தாழ்ந்தோர்முன் நில்லான், அரசன்முன் நிற்பானே.” (நீதிமொழிகள் 22:29, தி.மொ.) இது இன்றும் அவ்வாறே இருக்கிறது. “திறமைகள் இல்லாமல் வாழ்க்கையில் பேரளவான காரியங்கள் உன்னைப் பின்தங்கவிட்டுச் செல்லக்கூடும்,” என்று ஐ.மா. தொழிலாளர் துறையிலுள்ள எர்னஸ்ட் கிரீன் சொன்னார்.

அப்படியானால், பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொள்வோருக்கு வேலைகிடைக்கும் எதிர்கால வாய்ப்பு மிகக் குறைவாயுள்ளதென்பது விளங்கிக்கொள்ளத்தக்கதே. (முன் குறிப்பிட்ட) உவால்டர் இதைக் கடினமான முறையில் கற்றான். “மிகப் பல தடவைகள் நான் வேலைகளுக்காக மனுச் செய்தேன் எனக்கு கல்வி தேறின சான்றிதழ் பத்திரம் இல்லாததனால் அவை எனக்குக் கிடைக்கவில்லை.” அவன் மேலும் ஒப்புக்கொண்டதாவது: “சிலசமயங்களில் ஆட்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை நான் விளங்கிக்கொள்ள முடிகிறதில்லை, நான் முட்டாள்தன உணர்ச்சியடைகிறேன்.”

உயர்நிலைப்பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொண்ட 16-லிருந்து 24 வயதான இளைஞர்களுக்குள் வேலையின்மை “கல்வியில் தேறின தங்கள் சகாக்களோடு ஒப்பிட ஏறக்குறைய இரண்டுமடங்காகவும் முழுமையான வேலையில்லாமை வீதத்துக்கு ஏறக்குறைய மூன்றுமடங்காகவும் இருக்கிறது.” (தி நியு யார்க் டைம்ஸ்) “தங்கள் கல்வியைத் தொடராதவர்கள் வாய்ப்பு கிடைக்காதபடி செய்துகொள்கிறார்கள்,” என்று வளர் இளம் பருவத்தினர் என்ற தன் ஆங்கில புத்தத்தில் நூலாசிரியர் F. ஃபிலிப் ரைஸ் மேலும் சொல்கிறார். பள்ளிக்குப் போகாமல் நின்றுவிடும் ஒருவன் எல்லாவற்றிலும் மிக எளிய வேலையைக் கையாளத் தேவைப்படும் அடிப்படை திறமைகளிலும் பெரும்பாலும் தேர்ச்சியடையாதிருக்கலாம்.

எழுத்தறிவு ஏமாற்றம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் பால் காப்பர்மன் எழுதுவதாவது: “சமையற்காரனாக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு ஏழாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும், இயந்திரத்தொழிலாளனாக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு எட்டாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும், பொருள் வழங்கும் எழுத்தராக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு ஒன்பதாவது அல்லது பத்தாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும் ஏறக்குறைய தேவைப்படுகிறதென சமீப ஆராய்ச்சி காட்டுகிறது.” அவர் மேலும் தொடர்ந்து கூறுவதாவது: “ஓர் ஆசிரியராக, செவிலியராக, கணக்கராக, அல்லது பொறியியலாளராக செய்யும் வேலைக்கு மேலும் உயர்ந்த வாசிப்புத் திறமைக்குரிய படிப்புநிலை கட்டாயமாக வேண்டுமென்பது நியாயமான முடிவென நான் நம்புகிறேன்.”

அப்படியானால், வாசிப்பைப்போன்ற அடிப்படையான திறமைகளைக் கற்பதற்குக் கருத்தூன்றி தங்களை உண்மையில் ஈடுபடுத்தும் மாணாக்கர்களுக்கு, மேலும் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்குமென்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் செல்வதனால் வாழ்நாளெல்லாம் நீடிக்கும் எந்த மற்றொரு நன்மையைப் பெறலாம்?

மேம்பட்ட நீ

உன் பலங்களையும் பலவீனங்களையும் நீ அறிவதே, வாழ்நாளெல்லாம் நீடிக்கும் அந்த நன்மையாகும். கம்ப்யூட்டர் துறையில் சமீபத்தில் ஒரு வேலையை ஏற்ற மிஷல், நினைவுபடுத்திக் கூறினதாவது: “பள்ளியில் நெருக்கடியின்கீழ் வேலைசெய்வது எவ்வாறு, பரீட்சையை ஏற்பது எவ்வாறு, மனதிலுள்ளவற்றை வெளிப்படுத்திச் சொல்வது எவ்வாறு என்பவற்றை நான் கற்றேன்.”

‘தோல்வியை எவ்வாறு கருதவேண்டுமென பள்ளி எனக்குக் கற்பித்தது,’ என்று மற்றொரு இளம் பெண் சொல்கிறாள். தன் பின்னடைவுகளுக்குத் தன்னையல்ல, மற்றவர்களையே காரணமாகக் கருதும் மனப்போக்கை அவள் கொண்டிருந்தாள். மற்றவர்கள் பள்ளிக் கட்டுப்பாட்டு நடைமுறையொழுங்கிலிருந்து நன்மையடைந்திருக்கின்றனர். பலர், இது இளம் மனதை அடக்கிவைக்கிறதென வாதாடி, இதனிமித்தம் பள்ளிகளைக் குறைகூறி கண்டனஞ்செய்கின்றனர். எனினும் சாலொமோன் “ஞானத்தையும் சிட்சையையும் அறி”யும்படி இளைஞரை ஊக்கப்படுத்தினான். (நீதிமொழிகள் 1:2, NW) கண்டிப்பு இருந்துவரும் பள்ளிகள் நிச்சயமாகவே கட்டுப்பாடுள்ள, எனினும் கற்பனைப்படைப்பாற்றல் மனதைக் கொண்டுள்ள பலரை உருவாக்கியிருக்கிறது.

ஆகையால் உன் பள்ளி ஆண்டுகளை நீ முழுமையாய்ப் பயன்படுத்திக்கொள்வது நல்லறிவாகும். இதை நீ எவ்வாறு செய்ய முடியும்? உன் பள்ளிப்பாடவேலையிலிருந்தே தொடங்கலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ ஏன் இத்தனை அநேக இளைஞர் பள்ளியைப்பற்றி உடன்பாடற்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்? இந்தக் காரியத்தைப்பற்றி நீ எவ்வாறு உணருகிறாய்?

◻ யோசிக்கும் திறமையை முன்னேற்றுவிக்கப் பள்ளி ஒருவருக்கு எவ்வாறு உதவிசெய்கிறது?

◻ பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொள்வது எதிர்காலத்தில் ஒரு வேலையைப் பெறும் உன் திறமையை எவ்வாறு பாதிக்கலாம், ஏன்?

◻ பள்ளியில் நிலைத்திருப்பதிலிருந்து வேறு என்ன தனிப்பட்ட நன்மைகள் உண்டாகலாம்?

[பக்கம் 135-ன் சிறு குறிப்பு]

“நான் அங்கே வெறுமென உட்கார்ந்து கொண்டும் மேலும் மேலும் மெளனமாகிக் கொண்டும் இருந்தேன், ஆகையால் பள்ளிக்குப்போவதை நிறுத்திக்கொண்டேன்”

[பக்கம் 138-ன் சிறு குறிப்பு]

“சமையற்காரனாக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு ஏழாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும், இயந்திரத்தொழிலாளனாக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு எட்டாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும், பொருள் வழங்கும் எழுத்தராக ஒரு வேலையைக் கொண்டிருப்பதற்கு ஒன்பதாவது அல்லது பத்தாவது வகுப்புக்குரிய படிப்பு நிலையும் தேவைப்படுகிறதென சமீப ஆராய்ச்சி காட்டுகிறது”

[பக்கம் 136-ன் படங்கள்]

பள்ளியில் நீ கற்கும் கட்டுப்பாடு உன் வாழ்நாளெல்லாம் உனக்கு நன்மை பயக்கும்

[பக்கம் 137-ன் படம்]

பள்ளியில் கற்பிக்கப்படும் அடிப்படை திறமைகளை முழுமையாய்க் கற்றுத்தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவே