Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?

வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?

அதிகாரம் 22

வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?

என் வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம் நான் என்ன செய்வது?’ சீக்கிரத்திலோ பிந்தியோ இந்தச் சவாலான கேள்வியை நீ எதிர்ப்படுவாய். குழப்பத்தையுண்டாக்கும் தெரிவுகள் வரிசையாக உன்முன் தோன்றுகின்றன—மருத்துவக்கலை, வாணிகம், கலை, கல்வி, கம்ப்யூட்டர் விஞ்ஞானம், பொறியியலாளர் வேலை, கைத்தொழில்கள். ஒருவேளை நீ பின்வருமாறு சொன்ன இளைஞனைப்போல் உணரலாம்: “வெற்றிகரமுள்ளதென நான் கருதுவது . . . நீ வளர்ந்துவந்த வசதியான நிலையைக் காத்துக்கொள்வதே.” அல்லது, மற்றவர்களைப்போல், வாழ்க்கையில் உன் பணவருமான வாய்ப்பு நிலையை முன்னேற்றுவிக்கும் கற்பனைக்கனாவை நீ ஒருவேளைக் காணலாம்.

வெற்றிக்கு, பொருள்சம்பந்த இலாபத்தை அடைவதைப் பார்க்கிலும் அதிகம் இருக்கிறதா? உலகப்பிரகாரமான வாழ்க்கைத்தொழில் ஏதாவது உனக்கு உண்மையான நிறைவேற்றத்தைக் கொண்டுவருமா?

‘அது ஒரு பலனுமில்லை’

மனதைக் கவருகிறது, உணர்ச்சியைக் கிளறிவிடுகிறது, மிகுவருவாயுள்ளது! இவ்வாறே திரைப்படங்கள், டெலிவிஷன், மற்றும் புத்தகங்கள் உலகப்பிரகாரமான வாழ்க்கைத்தொழில்களை அடிக்கடி வருணிக்கின்றன. வெற்றி எனப்படுவதை அடைய, வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்தை நாடி மேலேறுவோர், அங்கீகாரத்துக்காக உயிருக்கும்-மரணத்துக்குமுள்ள கடும் போராட்டத்தில் ஒருவரோடொருவர் அடிக்கடி கடும்போட்டியிட்டு மேம்பட முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. “விரைபோக்கு, உயர்-நுட்பக்கலை வாழ்க்கை முன்னேற்றத் தொழில்களையுடைய” இளம் வாலிபர்கள், பலர், எவ்வாறு “திருப்தியில்லா உணர்ச்சிகள், கவலை, மனச் சோர்வு, வெறுமையுணர்ச்சி, சித்தப்பிரமை, அவற்றோடுகூட எல்லா வகையான உடல்சம்பந்த நோய்களைத் தெரிவிக்கின்றனர்,” என்பதைப்பற்றி டாக்டர் டக்லஸ் லாபயர் சொல்கிறார்.

வெகு காலத்துக்கு முன், அரசன் சாலொமோன் வெறும் உலகப்பிரகாரமான நிறைவேற்ற வெற்றியின் பயனின்மையை வெளிப்படுத்திக் காட்டினான். உண்மையில் எல்லையற்ற வகைமுறை வாய்ப்புவளங்களால் ஆதரிக்கப்பட்டு, சாலொமோன் மிக ஆச்சரியமூட்டும் சாதனைகளை வரிசையாக நடப்பித்தான். (பிரசங்கி 2:4-10-ஐ வாசி.) எனினும், சாலொமோன் முடிவாகப் பின்வருமாறு கூறினான்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும் நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் பார்த்தபோதோ, இதோ, எல்லாம் மாயையே, காற்றை வேட்டையாடுவதே சூரியன்கீழ் பலன் ஒன்றுமில்லை [“அது ஒரு பலனுமில்லையென நான் உணர்ந்தேன்,” TEV].”பிரசங்கி 2:11, தி.மொ.

ஒரு வேலை செல்வத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டுவரலாம், ஆனால் ஒருவரின் ‘ஆவிக்குரிய தேவைகளை’ நிறைவாக்காது. (மத்தேயு 5:3) இவ்வாறு உலகப்பிரகாரமான சாதனைகளைச் சுற்றி மாத்திரமே தங்கள் வாழ்க்கையைக் கட்டுவோருக்கு மனத்திருப்தி இல்லாமற்போய்விடுகிறது.

திருப்திதரும் ஒரு வாழ்க்கைத்தொழில்

அரசன் சாலொமோன் பின்வருமாறு அறிவுரை கூறுகிறான்: “யாவற்றையும் யோசித்தபின் காரியத்தின் முடிவு இதுவே: கடவுளுக்குப் பயந்து, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; எல்லா மனிதருடைய கடமையும் இதுவே.” (பிரசங்கி 12:13, தி.மொ.) இன்று கிறிஸ்தவர்களுக்குரிய முக்கிய கடமை ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதே. (மத்தேயு 24:14) கடவுளுக்கு முன்பாகத் தங்கள் கடமையைப் பொறுப்புணர்ச்சியுடன் ஏற்கும் இளைஞர்கள்—பிரசங்கிக்கும் வேலையில் தங்களுக்கு இயல்பான மனச்சாய்வு இராவிடினும்—இந்த வேலையில் தங்களால் கூடிய முழு பங்குகொள்ளும்படியான உள்ளப்பூர்வ வற்புறுத்தலை உணருகின்றனர். (2 கொரிந்தியர் 5:14-ஐ ஒத்துப்பார்.) உலகப்பிரகாரமான முழுநேர வேலைகளை மேற்கொள்வதற்குப் பதில், ஆயிரக்கணக்கானோர் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முழு-நேர பயனியர்களாகச் சேவிக்கத் தெரிந்துகொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் மிஷனரிகளாக அயல்நாடுகளில் அல்லது உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகங்களில் சேவிக்கின்றனர்.

பயனியர் சேவை செய்யும்படியாக, செயலாட்சித்துறை செயலாளராகத் தன் வாழ்க்கைத் தொழிலை விட்டுவிட்ட எமிலி, பின்வருமாறு சொல்கிறாள்: “இந்த வேலைக்கு நான் உண்மையான அன்பை வளர்த்துள்ளேன்.” ஆம், முழு-நேர ஊழியம் கற்பனைசெய்யக்கூடிய எதைப் பார்க்கிலும் மிக அதிக மனத்திருப்தியைத் தரும், உள்ளத்தை ஊக்குவிக்கும் வாழ்க்கைத்தொழிலாகும்! “கடவுளின் உடன் ஊழியரில்” ஒருவராக இருப்பதைப்பார்க்கிலும் பெரிய சிலாக்கியம் ஒருவருக்கு என்ன இருக்க முடியும்?—1 கொரிந்தியர் 3:9.

பல்கலைக்கழகக் கல்வி—பயனுள்ளதா?

பயனியர் ஊழியர்களில் பெரும்பான்மையர் பகுதி-நேர வேலையைக்கொண்டு தங்களை ஆதரித்துக்கொள்கின்றனர். ஆனால் பின்னால் நீ ஒரு குடும்பத்தை ஆதரிக்கத் தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒருவன் தன் இளம் வயது ஆண்டுகளைக் கடவுளுடைய சேவையில் முழுவதுமாக ஈடுபடுத்தினதற்காக ஒருபோதும் வருந்தமாட்டான்! எனினும், ஓர் இளைஞன் முதல் ஒரு பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று பின்னால் ஒருவேளை போதக ஊழியத்தை மேற்கொள்வது நடைமுறைக்குகந்ததல்லவா?

ஒரு கிறிஸ்தவ இளைஞன் சரியாய் எத்தனை ஆண்டுகள் பள்ளிப் படிப்பைப் பெறவேண்டுமென நிச்சயமாகவே பைபிள் குறிப்பிட்டுக் கூறுகிறதில்லை. கல்வியை அது கண்டனம் செய்வதுமில்லை. “மேன்மைமிகுந்தப் போதகரான” யெகோவா, நன்றாய் வாசிக்கும்படியும் தங்கள் மனதிலுள்ளவற்றைத் தெளிவாய் எடுத்துரைக்கும்படியும் தம்முடைய ஜனத்தை ஊக்கப்படுத்துகிறார். (ஏசாயா 30:20; சங்கீதம் 1:2; எபிரெயர் 5:12) மேலும், கல்வி, ஜனங்களையும் நாம் வாழும் உலகத்தையும் நாம் புரிந்துகொள்வதை விரிவாக்கும்.

எனினும், பல்கலைக்கழகப் பட்டம் அதற்குச் செலவிடவேண்டியிருக்கும் மிகப் பேரளவான நேரத்துக்கும் பணத்துக்கும் தகுந்த பயனுடையதாய் எப்பொழுதும் இருக்கிறதா? a பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளிக் கல்வி தேறினவர்களைப் பார்க்கிலும் உயர்ந்த சம்பளம் சம்பாதிக்கின்றனர் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களுக்குள் குறைவாயுள்ளதென புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறபோதிலும், இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் சராசரியேயென உன் கல்லூரிக் கல்விக்குத் திட்டமிடுதல் என்ற புத்தகம் நமக்கு நினைப்பூட்டுகிறது. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவரில் ஒரு சிறுபான்மையோர் மாத்திரமே உண்மையில் மிக உயர்ந்த சம்பளங்களைப் பெறுகின்றனர்; மீதிபேர் மிக அதிகக் குறைந்த பொதுமுறையான சம்பளங்களையே பெறுகின்றனர். அல்லாமலும், “அசாதாரணத் திறமைகள், செயல் நோக்கமாயிருக்கும் தன்மை, வேலைக்கான வாய்ப்புகளுள்ள இடம், . . . தனிச்சிறப்பு அறிவாற்றல்கள்,” ஆகியவற்றைப்போன்ற காரணங்களின் பலனாகவும் உயர் வருவாய்கள் பல்கலைக்கழகப் பட்டம்பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படலாம்—வெறும் அவர்களுடைய கல்வியளவினால் அல்ல.

“[பல்கலைக்கழகப்] பட்டம் வேலை கிடைப்பதில் வெற்றிப்பெறுவதற்கு இனிமேலும் உத்தரவாதமளிப்பதில்லை,” என்று ஐ.மா. தொழிலாளர் இலாகா சொல்கிறது. “மேம்பட்ட வாழ்க்கைத்தொழில், நுட்பக்கலை, மற்றும் கண்காணிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் அமர்த்தப்பட்டவர்களின் [பல்கலைக்கழகப் பட்டதாரிகளின்] வீதம் . . . குறைந்துவிட்டது ஏனெனில், பெருகிவந்துகொண்டிருக்கும் பட்டதாரிகளை ஏற்க இந்த வேலைகள் போதியளவு விரைவில் விரிவாகவில்லை. இதன் விளைவாக, 1970-க்கும் 1984-க்கும் இடையில், வேலைபெற வந்த [பல்கலைக்கழகப்] பட்டதாரிகள் ஏறக்குறைய 5-ல் ஒருவர் வீதம் பொதுவாய்ப் பட்டம் தேவைப்படாத வேலையை ஏற்றனர். பட்டதாரிகளின் இந்த மட்டுக்குமீறிய பெருக்கம் 1990-களின் மத்திபத்தினூடே பெரும்பாலும் தொடருமெனத் தெரிகிறது.

மேலும் சிந்திக்கவேண்டிய காரியங்கள்

பல்கலைக்கழகப் பட்டம் உன் வேலை எதிர்பார்ப்புகளை ஒருவேளை முன்னேற்றுவிக்கலாம் அல்லது முன்னேறச் செய்யாமலும் இருக்கலாம். ஆனால் ஓர் உண்மை மறுக்கமுடியாதது, அதாவது: “மீந்திருக்கும் காலம் குறுகியது”! (1 கொரிந்தியர் 7:29) பல்கலைக்கழகப் பட்டம் கொண்டுவருவதாக எண்ணப்படும் அதன் எல்லா நன்மைகளும் இருப்பினும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் செலவிடுவது இந்த மீந்திருக்கும் காலத்தை மிக நல்லமுறையில் பயன்படுத்துவதாகுமா?—எபேசியர் 5:16.

பல்கலைக்கழகக் கல்வி உன் ஆவிக்குரிய இலக்குகளை நோக்கி முன்னேற உன்னை வழிநடத்துமா அல்லது அவற்றைவிட்டு விலகிச் செல்லச் செய்யுமா? உயர்ந்த வருமானம் கிறிஸ்தவ முதன்மை அல்லவென்பதை நினைவுபடுத்திக்கொள். (1 தீமோத்தேயு 6:7, 8) எனினும், ஐ.மா. பல்கலைக்கழக நிர்வாகிகளின் ஆராய்ச்சி இன்றைய மாணாக்கர்களை ‘வாழ்க்கைத் தொழில்-உணர்வுடையோராயும், பொருள்சம்பந்த நிறைவேற்றத்தில் அக்கறை கொண்டவராயும் தன்னல-அக்கறையுடையோராயும்’ இருப்பதாக விவரித்தது. மாணாக்கரின் ஒரு தொகுதி சொன்னதாவது: “பணம், நாங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியே எனத் தோன்றுகிறது.” கடுமையான போட்டியின் மற்றும் தன்னல பொருளாசையின் சூழ்நிலையில் முழ்கியிருப்பது உன்னை எவ்வாறு பாதிக்கலாம்?

பல்கலைக்கழகங்கள் 1960-ன் பத்தாண்டுகளினூடே நடந்த பெருங்கலகக் காட்சிகளை ஒருவேளை இனிமேலும் கொண்டிரா. ஆனால் பல்கலைக்கழகப் பித்துப் பிடித்தோரின் புகலிடம் குறைவுபட்டிருப்பது கல்லூரியின் சுற்றுப்புற சூழ்நிலை நற்பயன் விளைவிக்கிற இடமென சற்றும் குறிப்பதில்லை. கல்லூரியைச் சுற்றியுள்ள இடத்தின் வாழ்க்கையைப்பற்றிய ஓர் ஆராய்ச்சி பின்வருமாறு முடிவு செய்தது: “மாணாக்கர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கைக்குரிய காரியங்களில் பெரும்பாலும் எல்லையற்றச் சுதந்திரத்தை இன்னும் கொண்டிருக்கின்றனர்.” போதைப்பொருட்களும் சாராயமும் கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்தப்படுகின்றன, தாறுமாறான பாலுறவுகொள்வது—விதிவிலக்கு அல்ல—நடைமுறை விதியாக உள்ளது. உன்னுடைய நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் இவ்வாறிருந்தால், அங்கே வாழ்வது ஒழுக்கப்படி சுத்தமாய் நிலைத்திருக்க எடுக்கும் உன் முயற்சிகளைக் குலைத்துப்போடலாமல்லவா?—1 கொரிந்தியர் 6:18.

கவலைக்குரிய மற்றொரு காரியமானது, உயர் கல்விக்குத் தடை காப்பில்லாமல் விடப்படுவது “உள்ளீடான மதக் கொள்கைளைக் கடைப்பிடித்தல்” குறைவுபடுவதோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரமூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாகும். (உலகப்பிரகார சகாப்தத்தில் மதபக்தியுடையோர்) உயர் மதிப்பெண்களைக் காத்துவருவதற்கான வற்புறுத்தல் கிறிஸ்தவ இளைஞர் சிலர் ஆவிக்குரிய நடவடிக்கைகளைத் தவறவிட்டு இவ்வாறு பல்கலைக்கழகங்கள் முன்னேற்றுவிக்கும் உலகப்பிரகார சிந்தனைகளின் கடுந்தாக்குதலுக்குத் தங்களை ஆளாக்கும்படி செய்வித்திருக்கிறது. சிலர் தங்கள் விசுவாசத்தைக் குறித்துக் கப்பற்சேதத்தை அனுபவித்திருக்கின்றனர்.—கொலோசெயர் 2:8.

பல்கலைக்கழகக் கல்விக்கு மாற்றுப் பதிலானவை

இந்தக் காரியங்களை எண்ணிப் பார்த்தப்பின், கிறிஸ்தவ இளைஞர் பலர் பல்கலைக்கழகக் கல்விக்கு எதிராகத் தீர்மானித்துள்ளனர். யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் அளிக்கப்படும் பயிற்றுவிப்பு—முக்கியமாய், வாராந்தர தேவராஜ்ய ஊழியப்பள்ளி—வேலைத் தேடிப்பெறுவதில் உண்மையில் பயனுள்ளதென பலர் கண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகப் பட்டம் கொண்டிராவிடினும், இத்தகைய இளைஞர்கள், மனவுறுதியுடன் தளர்ந்த நிலையிலும், தங்கள் மனதிலுள்ளவற்றை வெளிப்படுத்திக் கூறுவதில் முழுத் தேர்ச்சிப்பெற்றும், பொறுப்பைக் கையாள முழுத் திறமையுடனும் இருக்கக் கற்றுக்கொள்கின்றனர். மேலும், உயர்நிலைப் பள்ளியில் இருக்கையில், தட்டச்சு, கம்ப்யூட்டர் திட்டமிடுதல், ஊர்திகள் பழுதுபார்த்தல், இயந்திரக்-கடை வேலை, போன்றவற்றில் சிலர் பயிற்சி பெறுகின்றனர். இத்தகைய பயிற்சிபெற்ற திறமைகள் பகுதி-நேர வேலை செய்வதற்குப் பயனுடையவையாய் இருக்கலாம் மேலும் இவை பெரும்பாலும் மிகத் தேவைப்படுகின்றன. இளைஞர் பலர் ‘தங்கள் கைகளினால் உழைப்பதை இழிவாய்க் கருதுகிறபோதிலும், பைபிள் ‘கடின உழைப்புக்கு’ உயர்ந்த மதிப்புக் கொடுக்கிறது. (எபேசியர் 4:28, தி.மொ.; நீதிமொழிகள் 22:29-ஐ ஒத்துப்பார்.) இயேசு கிறிஸ்துதாமே ஒரு கைத்தொழிலை அவ்வளவு நன்றாய்க் கற்றதால் அவர் “தச்சன்” என அழைக்கப்படலானார்!—மாற்கு 6:3.

உண்மைதான், சில நாடுகளில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் அவ்வளவு பெரும் எண்ணிக்கைகளில் வேலைத்தேடியலைந்து மலிந்துபோயிருப்பதால், கூடுதலான ஏதாவது வேலைப் பயிற்சியில்லாமல் பொதுப்படையான வேலைகள் கிடைப்பதுங்கூட கடினமாயிருக்கிறது. ஆனால் தொழில் பயிற்சி திட்டங்கள், வாழ்க்கைத்தொழில் அல்லது கலைநுட்பம் கற்பிக்கும் பள்ளிகள், மற்றும் குறுகிய கால பல்கலைக்கழகப் பயிற்சிகள் ஆகியவை இருக்கின்றன, இவை பயன்தரக்கூடிய திறமைகளைப் பெரும்பாலும் குறைந்த நேரத்திலும் பணத்துக்கும் கற்பிக்கின்றன. மேலும் வேலைதேடித்தரும் நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் கவனத்துக்குள் ஏற்றிராத மற்றொரு காரியம் இருப்பதை ஒருபோதும் மறந்துவிடாதே, அதாவது: ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதல் கவனம் செலுத்துவோருக்குத் தேவைப்படுபவற்றை அளிக்கக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—மத்தேயு 6:33.

வேலை வாய்ப்புகளும் கல்வி ஒழுங்குமுறைகளும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. இளைஞர்களுக்கு வெவ்வேறுபட்ட திறமைகளும் மனச்சாய்வுகளும் இருக்கின்றன. கிறிஸ்தவ ஊழியத்தை வாழ்க்கைத்தொழிலாகக் கொள்வது நன்மைபயக்குகிறதென சிபாரிசு செய்யப்படுகிறபோதிலும், அது இன்னும் தனிப்பட்டவர்தாமே விரும்பி தெரிவுசெய்வதற்கான காரியம். எந்த அளவான கல்வி உனக்குத் தகுந்ததெனத் தீர்மானிப்பதில் உட்பட்ட எல்லாக் காரணங்களையும் நீயும் உன் பெற்றோரும் கவனமாய்ச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இத்தகைய தீர்மானங்களைச் செய்வதில் ‘அவனவன் தன்தன் பாரத்தைச் சுமக்கவேண்டும்.’—கலாத்தியர் 6:5.

உதாரணமாக, நீ பல்கலைக்கழகக் கல்விபெறவேண்டுமென உன் பெற்றோர் விடாப்பிடியாய் வற்புறுத்தினால், அவர்களுடைய மேற்பார்வையின்கீழ் நீ வாழ்ந்துகொண்டிருக்கும் வரையில் அவர்களுக்குக் கீழ்ப்படிவதைத்தவிர உனக்கு வேறு எதுவும் தெரிந்துகொள்வதற்கில்லை. b (எபேசியர் 6:1-3) ஒருவேளை நீ தொடர்ந்து வீட்டிலேயே வாழ்ந்து பல்கலைக்கழகக் காட்சியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கலாம். நீ தேர்ச்சிபெறப் பாடங்களைத் தெரிந்துகொள்வதில் கவனமாயிருக்கலாம், உதாரணமாக, உலகப்பிரகாரமான தத்துவ ஞானங்களில் அல்லாமல் வேலைத் திறமைகளைக் கற்பதில் கவனத்தை ஊன்றவைக்கலாம். உன் கூட்டுறவுகளை எச்சரிக்கையுடன் காத்துக்கொள். (1 கொரிந்தியர் 15:33) கூட்டங்களுக்குச் செல்வது, வெளிஊழியம், மற்றும் தனிப்பட்ட படிப்பு ஆகியவற்றால் உன்னை ஆவிக்குரிய பிரகாரம் பலமாய் வைத்துக்கொள். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர் சிலர் பயனியர் செய்வதற்கேதுவாயிருந்த ஒரு பாடத் திட்டத்தைத் தெரிந்துகொள்வதன்மூலம் பயனியர் செய்வதையுங்கூட சமாளித்திருக்கின்றனர்.

உன் வாழ்க்கைத் தொழிலைக் கவனமாயும் ஜெபத்துடன் தெரிந்துகொள், இவ்வாறு அது தனிப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டுவருவதுமட்டுமல்லாமல் ‘பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவும்’ உனக்கு உதவிசெய்யும்.—மத்தேயு 6:20.

[அடிக்குறிப்புகள்]

a அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், பல்கலைக்கழக படிப்புக்கு சராசரியாக ஓர் ஆண்டுக்கு ரூ1,50,000-க்கும் அதிகம் செலவாகிறது! இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த மாணவர்களுக்கு பல ஆண்டுகள் எடுக்கின்றன.

b உன் பெற்றோரைத் திருப்திசெய்வதற்கு நான்கு-ஆண்டு பட்டம் பெறுவது தேவைப்படுகிறதில்லை. உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், ஓர் இணையான பட்டம், அலுவலக மற்றும் பொதுசேவை சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைகொடுப்பவரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மேலும் இது இரண்டு ஆண்டுகளில் பெறக்கூடியது.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ உலகப்பிரகாரமான வாழ்க்கைத்தொழில்கள் ஏன் தனிப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டுவர அடிக்கடித் தவறுகின்றன?

◻ கடவுள்-பயமுள்ள இளைஞர் எல்லாரும் முழு-நேர ஊழியத்தை வாழ்க்கைத்தொழிலாக ஏற்க ஏன் கருதவேண்டும்?

◻ எவை உயர்தர கல்வியின் நன்மைகளென விவாதிக்கப்படுகின்றன? இத்தகைய விவாதங்கள் உண்மையாய் நிரூபிக்கின்றனவா?

◻ பல்கலைக்கழகக் கல்வி என்ன அபாயங்களை எதிர்ப்பட வைக்கலாம்?

◻ பல்கலைக்கழகக் கல்விக்கு மாற்றுப்பதிலாக எவற்றை ஓர் இளைஞன் கருதலாம்?

[பக்கம் 175-ன் சிறு குறிப்பு]

ஒரு வேலை செல்வத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டுவரலாம், ஆனால் ஒருவரின் ‘ஆவிக்குரிய தேவைகளை’ நிறைவாக்காது

[பக்கம் 177-ன் சிறு குறிப்பு]

“ஒரு [பல்கலைக்கழகப்] பட்டம் வேலை கிடைப்பதில் வெற்றிப்பெறுவதற்கு இனிமேலும் உத்தரவாதமளிப்பதில்லை”