Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடித்தல்—ஏன் கூடாது?

குடித்தல்—ஏன் கூடாது?

அதிகாரம் 33

குடித்தல்—ஏன் கூடாது?

குடிப்பது தவறா? உண்மையாகவே அது கெடுதலா? அல்லது மற்ற வயது வந்தவர்களுக்குச் சரியாக இருக்க நான் குடிப்பது தவறா?’ இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் மனதிற்குள் செல்லக்கூடும். ஒருவேளை உங்கள் பெற்றோர் அதில் ஈடுபடலாம். உங்கள் வயதில் உள்ள (சட்டப்பூர்வமான வயது வரம்புகள் இருந்தும்கூட) அநேக இளவயதினர் குடிக்கின்றனர். டி.வி. காட்சிகளும் திரைப்படங்களும் அதைக் கவர்ச்சிகரமாக ஆக்குகிறது.

மது மிதமாக உபயோகப்படுத்தப்படும்பொழுது மெய்யாகவே இன்பத்துக்கு ஊற்றாக இருக்கக்கூடும். திராட்சரசம் இருதயத்தை மகிழ்ச்சிகரமாக்கும் அல்லது உணவின் ருசியை அதிகரிக்கச்செய்யும் என்று பைபிள் ஒத்துக்கொள்ளுகிறது. (பிரசங்கி 9:7) என்றாலும் தகாதவிதமாக உபயோகிக்கப்படும்பொழுது மது பயங்கர பிரச்னைகளை, பெற்றோர், ஆசிரியர், போலீஸ் இவர்களோடு மோதுவதிலிருந்து அகால மரணம்வரை கொண்டு செல்லக்கூடியதாய் இருக்கிறது. பைபிள் சொல்லுகிறபடி: “திராட்சரசம் பரியசம் செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” (நீதிமொழிகள் 20:1) ஆகவே குடிப்பதைப் பற்றிய உத்தரவாதமான தீர்மானத்தை எடுப்பது முக்கியம்.

ஆனால் மதுவைப்பற்றியும் அதனுடைய விளைவுகளைப் பற்றியும் உண்மையாகவே உங்களுக்கு எவ்வளவு தெரியும்? பின்வரும் பரீட்சை அதை நீங்கள் கண்டுபிடிக்க உதவும். பின்வருபவற்றை சரி அல்லது தவறு என்று வெறுமென குறிப்பிடுங்கள்.

1. மதுபானங்கள் விசேஷமாக உற்சாகத்தை எழுப்பிவிடும் பானங்களே․ ____

2. எந்த அளவிலும் மது மனித உடலுக்குக் கெடுதலை விளைவிக்கிறது․ ____

3. எல்லா வகையான மதுபானங்களும்—சாராயம், திராட்சரசம், பீயர்—இரத்த ஓட்டத்தில் அதே வேகத்தில் கிரகிக்கப்படுகிறது․ ____

4. கருங்காப்பி குடித்தால் அல்லது குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் ஒருவர் வெகு சீக்கிரத்தில் தெளிந்துவிடக்கூடும்․ ____

5. ஒரே அளவான மதுவை குடிக்கும்பொழுது, குடிக்கும் ஒவ்வொருவர் மேலும் ஒரே அளவு விளைவைத்தான் உண்டுபண்ணும்․ ____

6. குடிவெறியும் குடிக்கு ஆட்பட்டிருப்பதும் ஒன்றே․ ____

7. மதுவையும், தூக்க மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்பொழுது அதனதன் விளைவுகளை அதிகரிக்கும்படி செய்கிறது․ ____

8. வேறு மதுவகைகளுக்கு மாறிக்கொள்வது ஒருவர் குடிவெறி கொள்வதிலிருந்து தவிர்க்கும்․ ____

9. உணவைச் சீரணிப்பதைப் போலவேதான் சரீரம் மதுவையும் சீரணிக்கும்․ ____

இப்பொழுது உங்கள் பதில்களை பக்கம் 270-ல் உள்ளவைகளோடு ஒத்துப்பார்க்கவும். மதுவைப்பற்றிய உங்களுடைய சில கருத்துகள் தவறாக உள்ளதா? அப்படியானால் மதுவைப்பற்றிய உங்கள் அறியாமை மரணத்தையும் விளைவிக்கும். சரியான விதமாக உபயோகிக்காவிட்டால் “அது பாம்பைப்போல கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 23:32.

ஜான், உதாரணமாக பருவ வயதுள்ளவனாயிருக்கையில் விவாகம் செய்தான். ஓர் இரவு இளம் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, குடிப்பேன் என்ற தீர்மானத்தோடு வெளியே சென்றான். ஒரு முழு பைன்ட் வோட்காவை கடகட என்று குடித்துவிட்ட பின்னர், உணர்விழந்த நிலைக்குள் விழந்துவிட்டான். மருத்துவர்கள், செவிலியர்களுடைய முயற்சிகள் இல்லையேல் ஜான் மரித்திருக்கக்கூடும். அதிக அளவு மதுவை கடகட என்று விரைவாகத் தொண்டையில் ஊற்றுதல், மரணத்தையும் கொண்டுவரும் என்பதை அவன் உணரவில்லை. அறியாமை கொஞ்சங்குறைய அவனுடைய ஜீவனையே எடுப்பதாக இருந்தது.

திரும்பவும் தாக்கும் விளைவு

இதுதான் மதுபானத்தின் மறைமுகமான கண்ணியைப்போன்ற விளைவுகளில் ஒன்று. மதுபானம் தளர்ச்சியை உண்டாக்குமே தவிர ஊக்குவிக்காது. குடித்த உடனே உங்களை உயர்த்துவதாகக் காண்பிப்பது எது என்றால் மது. உங்களுடைய கவலையின் அளவை தளர்த்துகிறது அல்லது கீழே கொண்டு வருகிறது. நீங்கள் தளர்ந்த மனநிலையில், குடிப்பதற்கு முன்னாக இருந்ததைப் பார்க்கிலும் கவலையில் குறைந்தவர்களாக உணருவீர்கள். மதுவை மிதமாக சாப்பிடுவது, ஓரளவு ஒருவன் தன் “வருத்தத்தை நினையாமல்” இருக்கும்படி செய்யும். (நீதிமொழிகள் 31:6, 7) உதாரணமாக, பால் என்ற வாலிபன் குடும்பப் பிரச்னைகளைத் தவிர்க்க குடித்தான். அவன் நினைவுகூருவதாவது: “நான் இருந்த அழுத்தத்தில் இருந்து என்னை விடுவிக்க குடித்தல் ஒரு வழி என்று சீக்கிரமாகவே கற்றுக்கொண்டேன். என் மனதைத் தளரும்படி செய்தது.”

எந்தத் தீங்கும் விளையவில்லை. சரியா? இல்லை, தவறு! மதுபானத்துக்குத் திரும்பத் தாக்கும் விளைவும் உண்டு. மதுவின் மயக்கம் ஒருசில மணி நேரங்களுக்குப் பின் குறைந்த பிறகு உங்கள் கவலையின் அளவு மறுபடியும் குதித்தெழும்புகிறது, பழைய நிலைக்கு அல்ல, குடிப்பதற்கு முன்பு இருந்ததைப் பார்க்கிலும் அதிக உயரத்துக்குக் குதித்தெழும்புகிறது. எப்பொழுதும் இருந்ததைவிட அதிகக் கவலையுள்ளவர்களாக, விறைப்புள்ளவர்களாகிவிடுவீர்கள். கவலை மறக்கச் செய்யும் மதுவின் பாதிப்பு 12 மணிநேரத்தில் கழிந்துவிடும். உண்மைதான், மறுபடியும் நீங்கள் மது உட்கொள்வீர்களானால் உங்களுடைய கவலையின் அளவு மறுபடியும் கீழ் சென்றுவிடும். ஆனால் ஒருசில மணி நேரங்கள் கழித்து அது உயர எழும்பும். இந்தத் தடவை முந்தி இருந்ததைவிட உயரச்செல்லும்! இவ்விதம் உயர எழும்பி, கீழே சென்று, உயர எழும்பி, கீழே சென்றுகொண்டே இருக்கும்.

ஆக, காலா காலத்தில் மது உங்களுடைய கவலையை உண்மையாகவே குறைத்துவிடாது. அது அதிகரிக்கத்தான் செய்யும். மது போதை தெளியும்போது உங்கள் பிரச்னைகள் இன்னும் அங்கேதான் இருந்துகொண்டிருக்கிறது.

உணர்ச்சி விஷயத்தில் சிறுத்திருக்கிறது

மது, அவர்கள் நன்றாக வேலை செய்யும்படி செய்கிறது என்று உரிமை கொண்டாடுகின்றனர். உதாரணமாக, டென்னிஸ், வெகுவாக கூச்சப்படுகிறவனாக இருந்தான். சாதாரணமாக ஒருவரிடத்தில் பேசுவதற்கும்கூட கஷ்டப்படுவான். ஆனால் புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்தான். “ஒருசில குடிகளுக்குப்பின், நான் தளர்ந்தவனானேன்” என்றான்.

பிரச்னை என்னவென்றால், டென்னிஸ் செய்ததுபோல் கஷ்டமான நிலைகளிலிருந்து ஒருவர் தப்பியோடுவதனால் அல்ல, அவைகளை எதிர்ப்படும்போதுதான் ஒருவர் முதிர்ச்சியுள்ளவராகிறார். வாலிபராகிய நீங்கள் எதிர்ப்படும் பிரச்னைகளை சமாளிக்கக் கற்றுக்கொள்வதானது பெரியவர்களாக நீங்கள் எதிர்ப்பட இருக்கும் சோதனைகளை சமாளிக்கப் பழகிக்கொள்வதைப்போல் இருக்கிறது. டென்னிஸ் பிற்பாடு கண்டுபிடித்தது என்னவென்றால், தன் வெட்கத்தை மேற்கொள்வதற்கு மதுவின் தற்காலிக விளைவுகள் உதவவில்லை என்பதே. “மது மயக்கம் அடங்கின பிறகு, நான் மீண்டும் என் கூட்டிற்குள் சென்றுவிட்டேன்” என்று அறிக்கை செய்தான். அநேக வருடங்களுக்குப்பின் இப்பொழுது என்ன? டென்னிஸ் தொடர்ந்து கூறுகிறான்: “என் சொந்த நிலையிலே மற்றவர்களோடு சம்பாஷிப்பதை உண்மையாகவே நான் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவ்விதமாக நான் சிறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.”

அழுத்தத்தை கையாளுவதற்கு ஓர் ஊன்றுகோலாக மதுவை உபயோகிப்பதும் இதே விதமாக உண்மையாக இருக்கிறது. பருவ வயதுள்ளவளாக இருக்கையில் அவ்வாறு செய்த ஜோனும்கூட இவ்வாறு ஒத்துக்கொள்கிறாள்: “சமீப காலத்தில் ஓர் அழுத்தமான நிலையில் நான் இப்படியாக யோசித்தேன்: ‘இப்பொழுதுதானே நான் குடிப்பது எனக்கு நன்றாக இருக்கும்.’ குடித்த நிலையில் ஒரு சூழ்நிலையைச் சிறந்த முறையில் கையாளலாம் என்று நினைக்கக்கூடும்.” அது உண்மை இல்லை!

நியு யார்க் மாநில மருத்துவ பத்திரிகையில் (New York State Journal of Medicine) பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை சொல்லுகிறது: “போதைப் பொருட்கள் (மது உட்பட)—படிப்பு, சமூக அல்லது தனிப்பட்ட ஆட்களுக்கிடையே—ஏற்படும் கஷ்டமான நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உதவும் ஒன்றாக ஆக்கப்படுமென்றால், மேற்கொள்வதற்காக உபயோகிக்கப்படும் ஆரோக்கியமான திறமைகளைக் கற்றுக்கொள்ளும் அவசியம் நீக்கப்படுகிறது. விளைவுகள் வயதுவரும்வரை உணரப்பட மாட்டாது; அப்பொழுது தனிப்பட்ட நெருங்கிய உறவுகளை உண்டுபண்ண கஷ்டமாகி தனிப்பட்ட நபரை உணர்ச்சி வசமாக தனியாக விட்டுவிடுவதாய் இருக்கிறது.” பிரச்னைகளையும் கஷ்டமான நிலைமைகளையும் நேர்முகமாக சந்தித்துக் கையாளுவதுதான் அதிக நல்லது!

“அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை”

இயேசு கிறிஸ்துவின் மாதிரியைச் சிந்தித்துப் பாருங்கள். பூமிக்குரிய வாழ்க்கையின் தம் கடைசி இரவன்று இயேசு ஒரு கஷ்டமான, அழுத்தம் நிறைந்த சம்பவத்தை சகித்தார். காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அவருக்கு எதிராக சொல்லப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை அடுத்து தொடர்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டவராய்ச் சகித்துக் கொண்டிருந்தார். கடைசியாக அவர், இரா முழுவதும் இப்படி இருந்து, கழுமரத்தில் அறைவதற்காக ஒப்புக்கொடுக்கப்பட்டார்.—மாற்கு 14:43—15:15; லூக்கா 22:47–23:25.

தம் உணர்ச்சிகளை மந்தப்படுத்திடும் ஒன்று இயேசுவுக்கு அந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டது. இந்தக் கஷ்டமான நிலையை மேற்கொள்வதை சுலபமாக ஆக்கும், சுபாவத்தை மாற்றும் ஒரு பொருள் கொடுக்கப்பட்டது. பைபிள் இவ்விதமாகச் சொல்லுகிறது: “வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.” (மாற்கு 15:22, 23) இயேசு தம்முடைய எல்லா உணர்வுகளையும் தம்மிடத்தே கொண்டிருக்கும்படி விரும்பினார். இந்தக் கஷ்டமான நிலையை நேர்முகமாக எதிர்ப்பட விரும்பினார். தப்பியோடுபவராக அல்ல! ஆனால் பிறகு, தன் தாகத்தைத் தீர்க்க, நிச்சயமாகவே மிதமான அளவில் போதை மருந்திடப்படாத திராட்சரசம் கொடுக்கப்பட்டபோது இயேசு ஏற்றுக்கொண்டார்.—யோவான் 19:28-30.

ஒத்துப்பார்க்கும்போது, உங்களுடைய பிரச்னைகள், அழுத்தங்கள், நெருக்கடிகள் எல்லாமே ஒன்றுமில்லாமல் போகிறது. என்றபோதிலும் இயேசுவின் அனுபவத்தில் இருந்து ஒரு மதிப்புள்ள படிப்பினையை நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ளலாம். நம் பிரச்னைகள், அழுத்தங்கள் மற்றும் வசதியற்ற நிலைமைகள் முதலியவைகளை மேற்கொள்ள மனநிலையை மாற்றும் வஸ்துக்களை (மது போன்றவைகளை) உபயோகிப்பதற்குப் பதிலாக அவைகளை நேர்முகமான முறையில் கையாளுவது எவ்வளவு நல்லதாக உங்களுக்கு அதிக நல்லதாக இருக்கும். வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர்ப்படுவதில் நீங்கள் சம்பாதிக்கும் அதிகமதிகமான அனுபவம், அவைகளைத் தீர்ப்பதில் அதிகம் உதவியாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமான உணர்ச்சிகளை உடைய ஒரு நபராக வளருவீர்கள்.

சட்டப்பூர்வமான வயது வரும்போது, எப்பொழுதாவது குடிக்க, அதாவது மிதமாகக் குடிக்க, தெரிந்துகொள்வதோ அல்லவோ, அந்தத் தீர்மானம் (ஒருவேளை உங்கள் பெற்றோருடையதும்) உங்களுடையதாக இருக்கும். தெரிந்து செய்கிற ஒரு தீர்மானமாக, ஒரு புத்திகூர்மையான தீர்மானமாக இருக்கட்டும். மது அருந்தாமலிருப்பது என்பது உங்கள் தெரிவாக இருந்தால், அதைக்குறித்தும் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் சட்டப்பூர்வமான வயதாகிவிட்ட பிறகு, நீங்கள் அருந்த தீர்மானிப்பீர்களானால் உத்தரவாதம் உணர்ந்தவர்களாக அருந்துங்கள். காரியங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவோ அல்லது செயற்கை முறையான தைரியத்தை சம்பாதிக்கவோ ஒருபோதும் குடிக்காதீர்கள். பைபிளின் புத்திமதி எளிமையாகவும் நேர்முகமாகவும் இருக்கிறது. “மிதமிஞ்சி குடித்தல் உங்களை சப்தமிட்டுக் கொண்டு முட்டாளாக்குகிறது. குடித்து வெறித்தல் மூடத்தனம்.”—நீதிமொழிகள் 20:1, டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻அநேக இளவயதினர் ஏன் மதுபானங்களைக் குடிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர்?

◻மதுவைப்பற்றி சாதாரணமாக இருக்கும் சில தவறான எண்ணங்கள் யாவை?

◻குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும்போது என்ன ஆபத்துகள் உள்ளன?

◻பிரச்னைகளிலிருந்து தப்புவதற்காக மதுவை உபயோகிப்பதில் உள்ள ஆபத்துக்கள் என்ன?

◻பிரச்னைகளை எதிர்ப்படும்போது ஒரு வாலிபன் என்ன செய்ய வேண்டும்? ஏன்?

[பக்கம் 268-ன் சிறு குறிப்பு]

குடித்தல் ஓர் இளவயதினரை செயற்கையான உயர்வு, கடுமையான தாழ்வு என்ற நச்சுத் திருகுச்சுருளில் சிக்கவைக்கக்கூடும்

[பக்கம் 271-ன் சிறு குறிப்பு]

“என் சொந்த நிலையிலே மற்றவர்களோடு சம்பாஷிப்பதை உண்மையாகவே நான் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவ்விதமாக, நான் சிறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.”—தவறாக மதுவை உபயோகித்த ஒரு பருவ வயதினன்

[பக்கம் 264-ன் பெட்டி]

‘நாங்கள் ஏன் குடிக்க ஆரம்பித்தோம்’

குடித்துக்கொண்டிருந்த சில முந்தைய இளவயதினரை பேட்டிகாணுதல்

பேட்டிகாண்பவர்: ஏன் நீங்கள் குடித்தீர்கள்?

பில்: என்னைப் பொருத்ததில், முதலாவதாக நான் சேர்ந்திருந்த தொகுதியின் காரணமாக, விசேஷமாக வார முடிவின்போது நாங்கள் “உள்ளே” செய்கிறவை.

டென்னிஸ்: நான் சுமார் 14 வயதாயிருக்கும்போது குடிக்க ஆரம்பித்தேன். என் தகப்பனார் ஒரு பயங்கர குடிகாரர். எங்கள் வீட்டில் எப்போதும் மதுபானம் பரிமாறப்பட்ட விருந்துகள் நடக்கும். நான் சிறுவயதாக இருந்தபோது குடிப்பதைச் சமூக ரீதியில் செய்யப்படும் ஒரு காரியமாகப் பார்த்தேன். பிறகு வயதில் பெரியவனான பிறகு, கட்டுப்பாடற்ற கூட்டத்தோடு சேர்ந்தேன். மற்ற வாலிபரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நான் குடிப்பதுண்டு.

மார்க்: நான் விளையாட்டுப் பந்தயங்களிலே ஈடுபட்டிருந்தேன். கூடைப் பந்தாட்டத்தின் ஆட்டக்காரர்களோடு சேர்ந்து சுமார் 15 வயதாக இருக்கும்போது நான் குடிக்க ஆரம்பித்தேன். விசேஷமாக அது என்னவென்று பார்ப்பதற்காக அவ்வாறு செய்தேன்.

ஜோன்: டி.வி.-யில் நான் பார்த்த காரியங்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டேன். அதிலே கதாப் பாத்திரங்கள் குடிப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அது மிகவும் பெரிய காரியமாகக் காணப்பட்டது.

பால்: என் தகப்பனார் குடிக்கு ஆட்பட்ட ஒருவர். குடிக்கு ஆட்பட்டிருந்ததுதான் எங்களுக்கிருந்த அநேக பிரச்னைகளுக்குக் காரணம் என்று நான் இப்பொழுது காண முடிகிறது. அதிலிருந்து விடுபடுவதற்குதான் நான் முயற்சி செய்தேன். ஆனால் எதிர்மாறாக, அக்காரணத்திற்கே நான் மீண்டும் குடிபழக்கத்தினிடமாகத் திரும்பினேன்.

ஜோன்: என் பெற்றோர் சாதாரணமாக அதிகம் குடிப்பதில்லை. ஆனால் என் தகப்பனாரைப்பற்றி ஒன்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. சமூகக் கூட்டுறவு சந்தர்ப்பங்களின்போது தான் எவ்வளவு குடிக்க முடியும் என்று வீம்பாகப் பேசுவார். நானும் அவ்வித மனநிலையையே விருத்தி செய்தேன்.—நான் தனித்தன்மை வாய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு சமயம் நானும் என் நண்பர்களும் குடிப்பதில் ஈடுபட்டோம். அநேக மணிநேரங்களாக, குடித்துக் கொண்டேயிருந்தோம். மற்றவர்களைப்போல உண்மையாகவே என்னை அது அதிகமாகப் பாதிக்கவில்லை. ‘நான் என் அப்பவைப் போலவே இருக்கிறேன்’ என்று யோசிக்க ஆரம்பித்தேன். மதுபானத்தைப்பற்றிய அவருடைய மனநிலை என்னை உண்மையாகவே பாதிக்க ஆரம்பித்தது.

பேட்டிகாண்பவர்: ஆனால், ஏன் வெறிக்கும் அளவுக்கு அநேகர் குடிக்கின்றனர்?

மார்க்: குடித்து வெறிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே தான் நாங்கள் குடித்தோம். உண்மையாகவே ருசியைப்பற்றி நாங்கள் கவலை கொள்ளவே இல்லை.

பேட்டிகாண்பவர்: ஆகவே நீங்கள் குடிப்பதன் விளைவுக்காகக் குடித்தீர்கள்?

மார்க்: ஆம்.

ஹேரி: நானும் அதையேதான் சொல்லுவேன். அது ஓர் ஏணியில் ஏறுவதைப்போல் இருக்கிறது. ஒவ்வொரு தடவை நீங்கள் குடிக்கும்போதும், இன்னும் மேலுக்குப் போவீர்கள்—ஏணியின் அடுத்த படிக்கு.

[பக்கம் 270-ன் பெட்டி

சரியா, தவறா என்ற பரீட்சைக்கு பதில்கள்

தவறு. மது பெரும்பாலும் தளர்வை உண்டாக்குகிறது. அது உங்கள் கவலையின் அளவைத் தளர்வுற அல்லது குறைக்கச்செய்து, குடிப்பதற்கு முன்பு இருந்ததைப் பார்க்கிலும் தளரச்செய்து, கவலையை குறைப்பதால் அது உங்களைப் போதையின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.

தவறு. மிதமாக அல்லது குறைந்த அளவில் அருந்துவது சரீரத்துக்கு ஒரு விதத்திலும் பயங்கர தீங்கை விளைவிப்பதாக தோன்றவில்லை. என்றபோதிலும் தொடர்ந்தும், அதிக அளவில் குடிப்பதானது இருதயம், மூளை, கல்லீரல் மற்றும் அங்கங்களை சேதப்படுத்தக்கூடும்.

தவறு. சாராயம் அல்லது வெளியம், திராட்சரசம் அல்லது பீயரைப் பார்க்கிலும் விரைவாக உரிஞ்சப்படுகிறது.

தவறு. காப்பி உங்களை எழுப்பிவிடும். குளிர்ந்த ஸ்நானம் உங்களை ஈரமாக்கிவிடும், ஆனால் கல்லீரலால் ஒரு மணிநேரத்துக்கு அரை அவுன்ஸ் விதம் சீரணிக்கப்படும்வரை, மது உங்களுடைய இரத்த ஓட்டத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

தவறு. அநேக அம்சங்கள், உங்களுடைய உடம்பின் எடை, நீங்கள் சாப்பிட்டீர்களா இல்லையா, என்பவற்றைப் பொருத்து மது உங்களை எவ்விதம் பாதிக்கும் என்பது உள்ளது.

தவறு. குடிவெறி அதிக அளவில் குடிப்பதன் விளைவு. குடிக்கு ஆட்பட்டிருப்பது குடிப்பதில் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. என்றபோதிலும் குடிப்பவர்கள் அனைவரும் குடிக்கு ஆட்பட்டவர்கள் அல்லர். குடிக்கு ஆட்பட்டவர்கள் அனைவரும் குடித்து வெறிப்பவர்களும் அல்லர்.

சரி. மதுவோடு மருந்துகள் கலக்கப்படும்போது மதுவினாலோ அல்லது மருந்துவினாலோ தனிப்பட்ட விதமாக ஏற்படும் விளைவுகளைப் பார்க்கிலும் வெகுவாக அதிகரிக்கச் செய்கிறது. உதாரணமாக மதுவோடு, தூக்க மாத்திரைகள் அல்லது மயக்க மருந்துகள் கலக்கப்படும்போது கடினமாக விலகல் அறிகுறிகளிலும், கோமாவிலும், மரணத்திலும்கூட விளையச் செய்யும். இவ்விதமாக ஒரு கோப்பை மதுவும் அதோடு ஒரு மயக்க மாத்திரையும் சேர்ப்பதானது நீங்கள் கற்பனை செய்து பார்க்கும் அளவைவிட அதிகமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. மருந்தின் விளைவு மூன்று மடங்கு, நான்கு மடங்கு, பத்து மடங்கு அல்லது அதற்கு அதிகமாகவும் பெருக்கப்படுவதாக இருக்கிறது.

தவறு. குடிபோதை, உட்கொள்ளப்பட்ட முழு மது அளவின் விளைவைக் காட்டுவதாக இருக்கிறது, அது ஜின், விஸ்கி, வோட்கா அல்லது எதுவானாலும்சரி.

தவறு. மற்ற உணவுப் பொருட்களைப் போல மது மெல்ல சீரணிக்கப்படுவதில்லை. மாறாக 20% இரைப் பையின் சுவர்களின் வழியாய் உடனே இரத்த ஓட்டத்திற்குள் செல்வதாக உள்ளது. மீதி, இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் சென்று அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது.

[பக்கம் 261, 262-ன் பெட்டி/படங்கள்]

வாகனம் ஓட்டுதலும் குடித்தலும்—சாவுக்கேதுவான ஒரு கூட்டு

“16 முதல் 24 வயதை உடைய இளவயதினரின் மரணத்துக்கு முக்கிய காரணம் குடித்து வாகனங்களை ஓட்டுவதுதான்” என்று 1984-ம் வருடத்திய குடித்துவிட்டு ஓட்டுதல் என்பதன் பேரில் வாலிபருக்கான தேசிய மாநாட்டின் அறிக்கை சொல்லுகிறது. சொல்லப்போனால் “வேறு எந்த ஓட்டுநரைப் பார்க்கிலும், மது சம்பந்தப்பட்ட விபத்தைக் கொண்டிருக்கும் சாத்தியம் இளவயதினனுக்கு நான்கு மடங்காக இருக்கிறது.” (வெறுமென ஓட்டுவதற்காக) இப்படி இந்த வேண்டப்படாத அழிவு, மதுவினுடைய விளைவுகளைப்பற்றி அநேக கதைகளை நம்புவதினாலேயாகும். இங்கே ஒருசில பொருத்தமான உதாரணங்கள் மாதிரிகள்:

கட்டுக்கதை: ஓரிரண்டு பீயர்கள் மட்டுமே குடித்திருப்பது ஓட்டுவதற்கு பாதுகாப்பாக இருக்கிறது.

உண்மை: “12 அவுன்ஸுகளைக் கொண்ட இரண்டு பீயர் புட்டிகளை 1/2 மணிநேரத்துக்குள் உட்கொள்வது ஓட்டுநரின் பிரதிபலிப்பை 2/5 விநாடிகளுக்கு குறைக்கும்—மணிக்கு 55 மைல் வேகத்தில் செல்லும் காரை, 34 அடிகள் கூடுதலாக செல்ல அனுமதித்துவிடும்—தப்பித்துக் கொள்வதற்கும் விபத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.”—நடுத்தர வயதினருக்கு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மது அருந்துதலைப்பற்றிய நிகழ்ச்சி நிரலின் அபிவிருத்தி—ஜேம்ஸ் L. மால்பெட்டி எட்டி மற்றும் டார்லீன் J. விண்டர், Ph.D. ஆகியோர் எழுதியது.

கட்டுக்கதை: குடித்திருப்பதாக நீ உணராதவரைக்கும் ஓட்டுவது சரிதான்.

உண்மை: நீ எப்படி உணருகிறாய் என்பதன் பேரில் சார்ந்திருப்பது ஆபத்து. நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்ற ஒரு பொய்த் தோற்றத்தை மது உண்டுபண்ணுகிறது. அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதராக உணரச்செய்கிறது. உண்மையில் ஓட்டுநருடைய திறமைகள் குறைந்து போய்விட்டிருக்கின்றன.

குடித்து ஓட்டுவது எவருக்கும் ஆபத்தாக இருந்தபோதிலும் பருவ வயதினருக்கு அது கூடுதலான ஆபத்தாக இருக்கிறது. குடிக்கும் இளவயதினரின் ஓட்டும் திறமை நடுவயதினரின் திறமைகளைவிட அதிக அளவில் மோசமாகிறதன் காரணம், ஓட்டுவது என்பது அவர்களுக்குப் புதியதானதும் அதிகமாக பழக்கப்படாத திறமையுமாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் பெரும்பாலான இளவயதினர் அனுபவமில்லாத ஓட்டுநர்களாகவும், அனுபவமில்லாத குடிகாரர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் குடித்தலையும் ஓட்டுதலையும் ஒன்றாக சேர்த்து செய்வதில் அதிக அளவு அனுபவமில்லாதவர்களாக இருக்கின்றனர்.—நடுத்தர வயதினர், போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மது அருந்துதலைப் பற்றிய நிகழ்ச்சிநிரல் தலைவரின் வழிகாட்டி, டார்லீன் J. விண்டர், Ph.D. எழுதியது.

வயதுவந்த பெரியவர்களை வெறிக்கப் பண்ணுவதற்கு வேண்டிய மதுவைப் பார்க்கிலும் குறைவான அளவு ஓர் இளவயதினரை வெறிக்கப் பண்ணப் போதுமானது. வயதுவந்த பெரியவர்களைப் பார்க்கிலும் இளவயதினர் எடையில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றனர். ஒரு குறைவான எடையுள்ளவருக்கு அவருடைய உடம்பில் உள்ள குறைவான திரவத்தில்தான் அவர் குடிக்கும் மதுபானம் கலக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களுடைய இரத்த ஓட்டத்தில் மதுவிகிதம் அதிகமாக இருக்க இருக்க அதிக போதைவெறி கொள்கிறவர்களாகவும் ஆவீர்கள்.

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான். பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) குடித்து ஓட்டுதலில் உள்ள ஆபத்துகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது, அவ்விதம் இரண்டையும் ஒன்றாக செய்யாமல் இருக்க உங்களுக்கு நீங்களே சத்தியம் பண்ணிக்கொள்வது “விவேக”மாயிருக்கிறது. இவ்விதமாக உங்களை ஊனமுற்றோராவதிலிருந்தும் மரணத்திலிருந்தும் காயங்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய உயிருக்கும் மரியாதை காட்டுகிறீர்கள்.

நீங்கள் மேலும் தீர்மானிக்க வேண்டியது: (1) நான் இனிமேலும் குடித்திருக்கும் ஓட்டுநரைக் கொண்டுள்ள காரில் செல்லமாட்டேன். (2) குடித்திருக்கும் நண்பர் ஒருவர் ஓட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இது உங்கள் நண்பரை விசனப்படுத்தலாம். ஆனால் அவர் புத்தி தெளிந்த பிறகு நீங்கள் செய்ததைப்பற்றி போற்றக்கூடும்.—சங்கீதம் 141:5-ஐ ஒத்துப்பாருங்கள்.

[படங்கள்]

குடித்திருக்கும் ஓட்டுநரைக் கொண்டுள்ல காரில் ஒருபோதும் செல்லாதீர்கள், குடித்திருக்கும் நணேபனை ஓட்ட அனுமதிக்காதீர்கள்

[பக்கம் 262-ன் படங்கள்]

சகாக்கள், டிவி., மற்றும் சில சமயங்களில் பெற்றோருங்கூட இளவயதினர் குடிக்க ஆரம்பிப்பதைத் தூண்டக்கூடும்

[பக்கம் 265-ன் படம்]

மதுபானம் தவறாக உபயோகப்படுத்தப்பட்டால், ‘பாம்பைப்போல் கடிக்கும்’

[பக்கம் 269-ன் படங்கள்]

குடித்தலும், வாகனங்களை ஓட்டுதலும் இதற்கு வழிநடத்திச் செல்லும்