Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டெலிவிஷன் பார்க்கும் என் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

டெலிவிஷன் பார்க்கும் என் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

அதிகாரம் 36

டெலிவிஷன் பார்க்கும் என் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

அநேக இளைஞர்களும் வயதானவர்களும் டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள். சாதாரண அமெரிக்க இளைஞன் தன்னுடைய 18 வயதிற்குள்ளாக சுமார் 15,000 மணி நேரங்கள் டெலிவிஷன் பார்த்திருப்பான் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன! டெலிவிஷன் பார்க்கும் இந்தப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க முயலுகையில், அதன்மீது அவர்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறார்கள் என்பது வெளியாகிறது.

“டெலிவிஷன் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதை நான் காண்கிறேன். அது போய்க் கொண்டிருக்கும்போது, அதை நான் புறக்கணிக்க முடிவதில்லை. அதை அணைத்துவிட முடிவதில்லை . . . அதை அணைத்துவிட நான் செல்லும்போது, என்னுடைய புயம் பெலனற்றுப் போகிறது. எனவே நான் மணிக்கணக்கில் அங்கு உட்காருகிறேன்.” இவர் ஒரு முதிர்ச்சியற்ற இளைஞரா? இல்லை. இவர் ஒரு கல்லூரி ஆங்கில ஆசிரியர்! ஆனால் இளைஞர்களும் டெலிவிஷன் பிரியர்களாக இருக்கக்கூடும். “டெலிவிஷன் விலக்கு வாரம்” என்பதற்கு ஒப்புக்கொண்ட சில இளைஞர்களின் பிரதிபலிப்புகளைக் கவனியுங்கள்:

“நான் மனச்சோர்வான நிலையில் இருந்துகொண்டிருக்கிறேன் . . . எனக்குப் புத்திக்கெட்டுப் போகிறது.”—பன்னிரண்டு வயது சூசன்.

“என்னால் இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நான் அவ்வளவு அதிகமாக டெலிவிஷனை நேசிக்கிறேன்.”—பதிமூன்று வயது லிண்டா.

“அழுத்தம் பயங்கரமாக இருந்தது. எனக்கு அந்தத் துடிப்பு இருந்துகொண்டேயிருந்தது. அதிகக் கடினமாக இருந்த சமயமானது இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை.”—பதினோறு வயது லூயிஸ்.

ஆகவே “டெலிவிஷன் விலக்கு வாரத்தை” அனுசரிப்பதில் உட்பட்டிருந்த பெரும்பாலான இளைஞர்கள் டெலிவிஷன் பார்ப்பதற்குப் பைத்தியம் பிடித்தவர்கள்போல் ஓடினார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் டெலிவிஷனைச் சார்ந்திருக்கும் பழக்கம், சிரித்து அலட்சியம் செய்யப்படக்கூடிய ஒன்று அல்ல. ஏனெனில் அதனால் ஏராளமான பிரச்னைகள் விளையக்கூடும். இவற்றில் சிலவற்றைக் கவனியுங்கள்:

குறைந்த மதிப்பெண்கள்: அதிகளவான டெலிவிஷன் பார்ப்பதானது “குறைந்தளவான பள்ளிச் சாதனைக்கு, முக்கியமாக நன்றாக வாசிப்பது இல்லாமைக்கு” வழிநடத்தக்கூடும் என்று மன நல தேசிய நிறுவனம் (ஐ.மா.) அறிக்கை செய்தது. லிட்டரஸி ஹோக்ஸ் என்ற புத்தகம் மேலும் சொல்கிறது: “படிப்பது மிகவும் எளிதாகவும் சிரமமற்றதாகவும் மற்றும் இன்பமூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்புக்கான பாதிப்பை டெலிவிஷன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிறது.” இப்படியாக டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் படிப்பதை ஒரு சோதனையாக காண்கிறான்.

மோசமான வாசிக்கும் பழக்கங்கள்: நீங்கள் கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தை முழுவதுமாக வாசித்திருக்கிறீர்கள்? மேற்கு ஜெர்மானிய புத்தக வியாபார நிறுவனத்தின் பிரதிநிதி இப்படியாகப் புலம்பினார்: “வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று டெலிவிஷன் முன்னால் தூங்கிவிழும் மக்களைக் கொண்ட ஒரு தேசமாக நாம் ஆகிவிட்டோம். நாம் வாசிப்பது குறைந்துகொண்டே போகிறது.” ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஓர் அறிக்கை அவ்விதமே சொன்னது: “ஆஸ்திரேலிய சிறுவன் வாசிப்பதற்காக ஒரு மணிநேரம் செலவழிக்கிறானென்றால், அவன் ஏழு மணி நேரம் டெலிவிஷன் பார்த்திருப்பான்.”

ஒரு மங்கிய குடும்ப வாழ்க்கை: ஒரு கிறிஸ்தவ பெண்மணி எழுதினாள்: “அளவுக்கு மிஞ்சி டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தால் நான் தனிமையாக உணர்ந்தேன். [என்னுடைய] குடும்பத்தினர் எனக்கு அந்நியர்கள் போலிருந்தனர்.” இப்படியாக நீங்களும் டெலிவிஷன் நிமித்தமாக உங்கள் குடும்பத்தினரோடு குறைந்த நேரத்தைச் செலவிடுபவர்களாக உங்களைக் காண்கிறீர்களா?

சோம்பல்: டெலிவிஷன் மந்தமான நிலையை ஏற்படுத்துவதால், “[தன்னுடைய] வாழ்க்கைத் தேவைகளை எந்த விதமான முயற்சியுமின்றி சுறுசுறுப்பில்லாமலேயே அடைந்துவிடலாம் என்று [ஓர் இளைஞனை] எண்ணிவிடச் செய்கிறது” என்று சிலர் உணருகின்றனர்.

ஆரோக்கியமற்ற செல்வாக்குகளுக்கு உட்படுதல்: கடல் கடந்துவரும் சில டெலிவிஷன் இணைப்புகள் ஒழுக்கயீனமான காரியத்தை வீட்டிற்குள் கொண்டுவருகின்றன. இந்த நிகழ்ச்சிநிரல்களை ஒழுங்காகக் கவனிப்பதானது கார் மோதல்கள், வெடிகள், குத்துதல்கள், துப்பாக்கிச் சுடுதல்கள், மற்றும் கராத்தே உதைகள் ஆகியவற்றுக்கான உணவைச் சீராக அளிக்கின்றன. ஒரு மதிப்பீட்டின் பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் ஓர் இளைஞன் தன்னுடைய 14-வது வயதிற்குள்ளாக 18,000 கொலைகளை டெலிவிஷனில் பார்த்திருப்பான்—குத்துச்சண்டைகளும் நாச வேலைகளும் நீங்கலாக.

வன்முறைமிக்க டெலிவிஷன் காட்சிகளையே பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் “ஒரு வினைமையான வன்முறைச் செயலில் ஈடுபடுவது” சாத்தியமாக இருப்பதை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் வில்லியம் பெல்சன் கண்டார். டெலிவிஷன் வன்முறை “ஆணையிடுவதையும், மோசமான வார்த்தைகளை உபயோகிப்பதையும், விளையாட்டில் மூர்க்கமாகச் செயல்படுவதையும், இன்னொரு சிறுவன்மீது வன்முறையை உபயோகிப்பதாக பயமுறுத்துவதையும், சுவர்களில் வசனங்கள் எழுதுவதையும் மற்றும் ஜன்னல்களை உடைப்பதையும்” தூண்டக்கூடும் என்று அவர் மேலுமாக சொன்னார். ஒருவேளை நீங்கள் அத்தகைய செல்வாக்குகளுக்கு உட்படாதிருப்பதாக நினைத்தாலும், டெலிவிஷன் வன்முறைக்கு உங்களை உட்படுத்துவது வன்முறைச் “சம்பந்தமாக சிறுவர்களின் உள்ளான மனநிலைகளை மாற்ற”வில்லை என்று பெல்சனின் ஆய்வு கண்டுபிடித்தது. ஒரே சீரான வன்முறை உணவு வன்முறைக்கெதிரான அவர்களுடைய உள்ளுணர்வின் தடைகளைத் தெளிவாகவே தகர்த்துவிட்டது.

இருப்பினும், இன்னும் அதிக அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், டெலிவிஷன் வன்முறையைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாவது கடவுளோடான ஒருவருடைய உறவின்மீது கொண்டிருக்கக்கூடிய பாதிப்பு. கடவுள் “கொடுமையில் பிரியமுள்ளவனை” வெறுக்கிறார்.—சங்கீதம் 11:5.

நான் டெலிவிஷன் பார்ப்பதை எப்படிக் கட்டுப்படுத்தக்கூடும்?

இது டெலிவிஷனை இயற்கையாகவே தீங்கானதாக கருத வேண்டும் என்பதை நிச்சயமாகவே அர்த்தப்படுத்தாது. எழுத்தாளர் வான்ஸ் பக்கார்ட் குறிப்பிடுகிறார்: “ஐக்கிய மாகாணங்களின் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பெரும்பாலானவை பலனளிப்பவையாக இருக்கக்கூடும் . . . அவ்வப்போது இயற்கையைச் செயலில் காட்டும் புகைப்படங்களின் அற்புதமான சாதனைகளினாலான முன் மாலைநேர நிகழ்ச்சிநிரல்கள் இருக்கின்றன—வெளவால், நீர் நாய்கள், காட்டெருமை, முற்களையுடைய உருண்டை வடிவ மீன்கள் போன்றவற்றின் செயல்கள் வருகின்றன. அரசுதுறை டெலிவிஷன் பிரமிக்கச் செய்யவும் கோஷ்டி நடனத்தையும், சங்கீத நாடகத்தையும் இசையையும் கொண்டிருக்கிறது. முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டுவருவதில் டெலிவிஷன் மிகச் சிறந்தது . . . சில சமயத்தில் ஒளியூட்டும் தத்ரூபமான தயாரிப்புகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வருகின்றன.”

இருந்தபோதிலும், ஒரு நல்ல காரியத்தை அதிகமாய்க் கொண்டிருத்தலும்கூட தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 25:27-ஐ ஒப்பிடுக.) ஒருவேளை தீங்கு விளைவிக்கும் காட்சிகளை அணைத்துவிட உங்களில் சுய கட்டுப்பாடு இல்லாமலிருப்பதை நீங்கள் காண்பீர்களானால், அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நினைவுகூருவது நல்லது: “யாதொன்றுக்கும் அடிமையாக நான் என்னை அனுமதிக்க மாட்டேன்.” (1 கொரிந்தியர் 6:12, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகவே நீங்கள் டெலிவிஷனின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளவும் டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் என்ன செய்யக்கூடும்?

எழுத்தாளர் லிண்டா நீல்சென் குறிப்பிடுகிறார்: “இலக்குகளை நிருணயிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் சுய கட்டுப்பாடு ஆரம்பமாகிறது.” முதலாவதாக, உங்களுடைய தற்போதைய பழக்கங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒரு வாரத்துக்கு என்ன காட்சிகளை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதையும் டெலிவிஷனுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறீர்கள் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அதைப் போடுகிறீர்களா? எப்பொழுது அதை நிறுத்திவிடுகிறீர்கள்? எத்தனை காட்சிகள் ஒவ்வொரு வாரமும் “பார்க்க வேண்டியவை”? விளைவுகளைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

நீங்கள் எத்தகைய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உற்று கவனியுங்கள். “வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கிறதல்லவா?” என்று பைபிள் கேட்கிறது. (யோபு 12:11) ஆகவே (உங்களுடைய பெற்றோரின் ஆலோசனையோடு) பகுத்துணர்ந்து, எத்தகைய காட்சிகள் உண்மையில் தகுதியுள்ளவை என்பதைச் சோதித்துப் பாருங்கள். சிலர் தாங்கள் பார்க்கும் காட்சிகளை முன்கூட்டியே தீர்மானித்து, அந்தக் காட்சிகளுக்கு மட்டுமே டெலிவிஷனைத் திறக்கிறார்கள்! மற்றவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாரத்தில் டெலிவிஷன் பார்க்கக்கூடாது அல்லது ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் மட்டுமே டெலிவிஷன் பார்ப்பது போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

ஆனால் அமைதியாயிருக்கும் டெலிவிஷன்தானே அதிகளவான ஆவலைத் தூண்டுவதாக இருக்குமேயானால் என்ன செய்வது? ஒரு குடும்பம் இவ்விதமாகப் பிரச்னையைத் தீர்த்தது: “நாங்கள் எங்களுடைய டெலிவிஷனைக் கீழறையில் வைத்தோம் . . . அது கீழறையில் இருக்கும்போது வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே டெலிவிஷனைப் போடுவதற்கான தூண்டுதல் இல்லை. ஏதாவதொரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒருவர் அங்கு விசேஷித்த பயணம் செய்ய வேண்டும்.” உங்களுடைய டெலிவிஷனைப் பிரத்தியேகமான அறையில் வைப்பதோ அல்லது வெறுமென அதை மின் இணைப்புகளிலிருந்து துண்டித்துவிடுவதோ பலனளிப்பதாக இருக்கலாம்.

அக்கறைக்குரிய விதமாக, “டெலிவிஷன் விலக்கு வாரத்தில்” பங்கேற்றதனால் உண்டான ‘விலக்குதலின் வேதனைகள்’ மத்தியிலும் இளைஞர்கள் டெலிவிஷனுக்குப் பதிலாக சில உடன்பாடான காரியங்கள் இருப்பதைக் கண்டார்கள். ஒரு பெண் நினைவுகூர்ந்தாள்: “நான் என்னுடைய தாயோடு பேசினேன். என் தாய் என்னுடைய கருத்தில் இன்னும் அதிக சுவாரஸ்யமுள்ளவளாக இருந்தாள், ஏனென்றால் என்னுடைய கவனம் என் தாய்க்கும் டெலிவிஷனுக்கும் இடையே பிரிக்கப்பட்டதாக இருக்கவில்லை.” இன்னொரு இளம் பெண் சமையல் செய்ய கற்றுக்கொள்ள முயன்றாள். ஜேசன் என்ற ஓர் இளைஞன் “டெலிவிஷனுக்கு பதிலாக பூங்காவிற்குச்” செல்வது, அல்லது மீன் பிடிப்பது, வாசிப்பது, அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்றவை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கண்டான்.

வையந்தின் அனுபவம் (“நான் டெலிவிஷனுக்கு அடிமையாயிருந்தேன்” என்ற தலைப்பிலான பெட்டியைப் பார்க்கவும்.) “கர்த்தருடைய கிரியையிலே பெருகுகிறவர்களாக” இருப்பதானது டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இன்னொரு அம்சமாக இருப்பதை விவரிக்கிறது. (1 கொரிந்தியர் 15:58) நீங்களும்கூட கடவுளிடம் நெருங்கிச் செல்வதும் இப்போது கிடைக்கக்கூடிய அநேக சிறந்த பிரசுரங்களின் உதவியோடு பைபிளைப் படிப்பதும், கடவுளுடைய வேலையில் சுறுசுறுப்பாக உங்களை ஈடுபடுத்திக்கொள்வதும் டெலிவிஷனைச் சார்ந்திருக்கும் பழக்கத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். (யாக்கோபு 4:8) உங்களுடைய டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதானது உங்களுக்குப் பிரியமான சில நிகழ்ச்சிகளை இழப்பதை அர்த்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் ஏன் டெலிவிஷனை முழு அளவிற்கு உபயோகித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அடிமைத்தனத்தோடு பின்தொடர வேண்டும்? (1 கொரிந்தியர் 7:29, 31-ஐப் பார்க்கவும்.) அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று உங்களை ‘ஒடுக்கிக்கொள்வது’ மேம்பட்ட காரியமாக இருக்கிறது. அவன் ஒரு சமயம் சொன்னான்: “நான் என் சரீரத்தை ஒடுக்கி, அதை ஓர் அடிமையாக நடத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27, NW) இது டெலிவிஷனுக்கு அடிமையாக இருப்பதிலும் மேம்பட்டதாக இல்லையா?

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ டெலிவிஷன் பார்ப்பது சில இளைஞர் ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் ஒரு பழக்கமாக இருக்கிறது?

◻ அதிகளவாக டெலிவிஷன் பார்ப்பதால் வரும் சாத்தியமான தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் சில யாவை?

◻ டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான சில வழிகள் யாவை?

◻ டெலிவிஷன் பார்ப்பதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்யக்கூடும்?

[பக்கம் 295-ன் சிறு குறிப்பு]

“நான் மனச்சோர்வான நிலையில் இருந்துகொண்டிருக்கிறேன் . . . எனக்குப் புத்திக்கெட்டுப் போகிறது.”—பன்னிரண்டு வயது சூசன், “டெலிவிஷன் விலக்கு வாரம்” நிகழ்ச்சியில் பங்குபெற்றவள்

[பக்கம் 292, 293-ன் பெட்டி]

‘நான் டெலிவிஷனுக்கு அடிமையாயிருந்தேன்’—ஒரு பேட்டி

பேட்டி காண்பவர்: நீ டெலிவிஷனுக்கு அடிமையானபோது உனக்கு என்ன வயது?

வையந்த்: சுமார் 10 வயது. நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த உடனேயே டெலிவிஷன் போட்டு விடுவேன். முதலில் நான் சிறுவர்களுக்குரிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். பின்பு செய்தி வரும், . . . சமையலறைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்குமா என்று பார்ப்பேன். பிறகு மறுபடியும் டெலிவிஷனுக்கு முன் போய் உட்கார்ந்து தூக்கம் வரும்வரைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

பேட்டி காண்பவர்: ஆனால் உன் நண்பர்களோடு பேசுவதற்கு உனக்கு எப்போது நேரம் இருக்கும்?

வையந்த்: டெலிவிஷன்தான் என் நண்பன்.

பேட்டி காண்பவர்: அப்படியென்றால் விளையாட்டுக்கு உனக்கு நேரம் இருக்காதா?

வையந்த்: [சிரித்துக்கொண்டு] எனக்கு எந்த விளையாட்டுத் திறமையும் இல்லை. நான் எப்போது பார்த்தாலும் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருப்பதால் அவற்றை நான் விருத்திச் செய்யவில்லை. நான் பயங்கரமாகக் கூடை பந்தாட்டம் ஆடுவேன். உடற்பயிற்சி வகுப்பில் என்னைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். என்னுடைய விளையாட்டுத் திறனை இன்னும் அதிகமாக விருத்திச் செய்திருந்தால் நன்றாக இருக்கும்—பெருமைக்காக அல்ல, என்னுடைய சந்தோஷத்திற்காகவாவது அப்படிச் செய்திருக்க வேண்டும்.

பேட்டி காண்பவர்: உன் மதிப்பெண்கள் எப்படி?

வையந்த்: இலக்கண வகுப்பில் பரவாயில்லை. நான் இரவில் விழித்து என்னுடைய வீட்டு பாடங்களைக் கடைசி நேரத்தில் செய்வேன். ஆனால் உயர்நிலைப்பள்ளியில் நான் கஷ்டப்பட்டேன், நான் மோசமான படிப்புப் பழக்கங்களைக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம்.

பேட்டி காண்பவர்: டெலிவிஷன் நிகழ்ச்சிகளை நீ இந்த அளவுக்கு பார்த்துக்கொண்டிருந்தது உன்னைப் பாதித்ததா?

வையந்த்: ஆம், நான் மற்ற ஆட்களோடு இருக்கும்போது சம்பாஷணையில் பங்குகொள்வதற்குப் பதிலாக அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன், ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியைப் பார்ப்பதுபோல். ஆட்களோடு நான் நல்ல விதத்தில் சம்பாஷிக்க முடிந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

பேட்டி காண்பவர்: ஆனால் இந்தச் சம்பாஷணையில் நீ நன்றாய் செய்தாய். தெளிவாகவே டெலிவிஷனைச் சார்ந்திருக்கும் பழக்கத்தை நீ மேற்கொண்டுவிட்டாய்.

வையந்த்: நான் உயர்நிலைப்பள்ளியில் நுழைந்த பிறகு, டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தை விட்டு விலக ஆரம்பித்தேன் . . . இளம் சாட்சிகளின் கூட்டுறவை நாடினேன். மற்றும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்ய ஆரம்பித்தேன்.

பேட்டி காண்பவர்: ஆனால் இது உன்னுடைய டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?

வையந்த்: ஆவிக்குரிய காரியங்களுக்கு என்னுடைய மதித்துணர்வு வளர்ந்தபோது, நான் வழக்கமாக பார்க்கும் அநேக காட்சிகள் உண்மையிலேயே கிறிஸ்தவர்களுக்கானவை அல்ல என்பதை நான் உணர்ந்தேன். மேலும் இது பெரும்படியான டெலிவிஷன் பார்க்கும் நேரத்தைத் துண்டிப்பதை அர்த்தப்படுத்தியது. இருப்பினும், அது சுலபமாக இருக்கவில்லை. சனிக்கிழமைக் காலை வேளையில் வரும் அந்த வேடிக்கைச் சித்திர படங்களை நான் விரும்பினேன். ஆனால் அப்போது சபையிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரர் சனிக்கிழமைக் காலையில் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் அவரோடு செல்ல என்னை அழைத்தார். அது சனிக்கிழமைக் காலையில் டெலிவிஷன் பார்க்கும் என்னுடைய பழக்கத்தைத் துண்டித்தது. இப்படியாக டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ள உண்மையிலேயே நான் கற்றுக்கொண்டேன்.

பேட்டி காண்பவர்: இன்று எப்படி இருக்கிறது?

வையந்த்: டெலிவிஷன் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்குமேயானால், நான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடிவதில்லை என்ற பிரச்னை எனக்கு இன்றும் இருக்கிறது. ஆகவே பெரும்பாலான சமயங்களில் நான் அதைப்போடுவதேயில்லை. உண்மையில், சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய டெலிவிஷன் பழுதடைந்துவிட்டது; அதைப் பழுதுபார்க்க நான் அக்கறைக் கொள்ளவில்லை.

[பக்கம் 291-ன் படம்]

டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்திற்குச் சிலர் அடிமையாகி விடுகின்றனர்

[பக்கம் 294-ன் படம்]

டெலிவிஷன் வசதியற்ற ஓர் இடத்தில் வைக்கப்பட்டால், அதைப் போடுவதற்கான தூண்டுதல் குறைவாக இருக்கும்