Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் எப்போதாவது ஒருமுறை இன்பமாக பொழுதைக் கழிக்கக்கூடாது?

நான் ஏன் எப்போதாவது ஒருமுறை இன்பமாக பொழுதைக் கழிக்கக்கூடாது?

அதிகாரம் 37

நான் ஏன் எப்போதாவது ஒருமுறை இன்பமாக பொழுதைக் கழிக்கக்கூடாது?

வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில், பாலீன் a கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போவது வழக்கம். அவள் அங்கு கலந்தாலோசிப்புகளை அனுபவித்தாள், ஆனால் அவள் அங்கு இருக்கையில், அவளுடைய பள்ளி நண்பர்களோ வெளியே இன்பமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையால் அவள் சில சமயங்களில் மனக்கசப்படையக் கூடியவளாக இருந்தாள்.

சபைக் கூட்டம் முடிந்து, பாலீன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பும்போது, உள்ளூரிலுள்ள இளைஞர் மன்றம் வழியாக வருவதுண்டு, அவள் நினைவுகூருகிறாள்: “சப்தமான இசையாலும் ஜொலிக்கும் விளக்குகளாலும் கவர்ந்திழுக்கப்பட்டதால், நாங்கள் கடந்துசெல்லும்போது, ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன். அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் கேளிக்கையை ஆவலுடன் கற்பனைச் செய்துகொள்வேன்.” காலப்போக்கில், நண்பர்களோடு சேர்ந்து இன்பமாக இருப்பதே அவளுடைய வாழ்க்கையில் அதிக முக்கியமான ஒன்றாக ஆனது.

பாலீன் போன்று, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதன் காரணமாக, சில சமயங்களில் ஏதோவொன்றை இழந்துகொண்டிருப்பதாக நீங்கள் உணரலாம். மற்றவர்கள் பரவலாக பேசிக்கொள்ளும் அந்த டெலிவிஷன் நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்க விரும்பலாம், ஆனால் உங்களுடைய பெற்றோர் அது அதிக வன்முறையானது என்று சொல்கிறார்கள். நீங்கள் கடைவீதிக்குச் செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் பள்ளியில் இளைஞர்களோடு சேர்ந்து இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்களுடைய பெற்றோர் அவர்களை “மோசமான சகவாசம்” என்று அழைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:33, NW) உங்களுடைய பள்ளித் தோழர்கள் எல்லாரும் கலந்துகொள்ளும் அந்த விருந்துக்குச் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் அப்பாவும் அம்மாவும் அனுமதியளிப்பதில்லை.

உங்களுடைய பள்ளித் தோழர்கள் தங்களுடைய விருப்பப்படி வந்துபோவதாயும் பொழுதுவிடியும் வரை தங்களுடைய பெற்றோரின் தலையிடுதல் இல்லாமல் இசைக் கச்சேரிகளிலும் விருந்துகளிலும் கலந்துகொள்வதாயும் உங்களுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய சுயாதீனப் போக்கு உங்களைப் பொறாமைக் கொள்ளும்படி செய்யலாம். மோசமான ஏதோவொரு காரியத்தைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் வெறுமென எப்போதாவது இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புகிறீர்கள்.

பொழுதுபோக்கு—கடவுளுடைய நோக்குநிலை

இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புவதில் தவறில்லை என்பது நிச்சயம். யெகோவா “நித்தியானந்த தேவனாக” இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) ஞானியாகிய சாலொமோன் மூலமாக அவர் சொல்கிறார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” இருப்பினும், சாலொமோன் எச்சரித்தான்: “கடவுள் இவை எல்லாவற்றின் நிமித்தமும் உன்னை நியாயம் விசாரிப்பார் என்பதை அறி.”—பிரசங்கி 11:9, 10, டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன்.

உங்களுடைய செயல்களுக்காகக் கடவுள் உங்களை உத்தரவாதமுள்ளவர்களாகக் கருதுவார் என்பதை அறிவதானது பொழுதுபோக்கை ஒரு வித்தியாசமான வெளிச்சத்தில் வைக்கும். இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்காகக் கடவுள் ஒருவரை கண்டிக்காத போதிலும், ‘சுகபோகப் பிரியர்களை,’ அடுத்த இன்பமானப் பொழுதைக் கழிப்பதற்காகவே வாழும் ஒருவரை, அவர் நிச்சயமாகவே அங்கீகரிப்பதில்லை. (2 தீமோத்தேயு 3:1, 4) இது ஏன் இப்படி? சாலொமோன் ராஜாவைக் கவனியுங்கள். தன்னுடைய பெரும் ஆஸ்திகளை உபயோகித்து, அடையக்கூடிய எல்லா மனித இன்பங்களையும் அவன் அனுபவித்தான். அவன் சொல்கிறான்: “என் கண் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைப் பண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை.” விளைவு? “இதோ, எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது.” (பிரசங்கி 2:10, 11) ஆம், சுகபோகத்தை நாடும் ஒரு வாழ்க்கையானது முடிவில் ஒருவரை வெறுமையிலும் ஏமாற்றத்திலும் விட்டுவிடும் என்று கடவுள் அறிந்திருக்கிறார்.

போதைப் பொருள் துர்ப்பிரயோகம் மற்றும் விவாகத்துக்கு முன்னதான பாலுறவு போன்ற அசுத்தமான பழக்கங்களிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் கடவுள் கேட்கிறார். (2 கொரிந்தியர் 7:1) இருப்பினும், கேளிக்கைக்காக பருவ வயதினர் செய்யும் அநேக காரியங்கள் ஒருவர் இத்தகைய பழக்கங்களில் சிக்கிக்கொள்வதில் வழிநடத்தக்கூடும். உதாரணமாக, ஓர் இளம் பெண், சில பள்ளித் தோழர்கள் ஏற்பாடு செய்த, பெரியவர்களின் மேற்பார்வை இல்லாத ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள தீர்மானித்தாள். “ஸ்டீரியோ இசை பிரமாதமாக இருந்தது, நடனம் நேர்த்தியாக இருந்தது. சுவையான சிற்றுண்டிகள் இருந்தன. ஒரே சிரிப்பும் கலகலப்புமாக இருந்தது” என்று அவள் நினைவுபடுத்துகிறாள். ஆனால் பிறகு, “ஒருவர் மரிஹுவானா புகைக் குழாயைக் கொண்டுவந்தார். அடுத்தது மதுபானம், அப்போதுதானே எல்லாமே கட்டுக்கடங்காமல் போனது.” பாலுறவு ஒழுக்கக்கேட்டில் விளைவடைந்தது. அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள்: “அந்தச் சமயம் முதற்கொண்டு நான் வேதனையாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறேன்.” பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல், எவ்வளவு சுலபமாக அத்தகைய கூட்டங்கள் “கொடிய விருந்துகளாக” அல்லது களியாட்டங்களாக மாறிவிடுகின்றன!—கலாத்தியர் 5:21, பையிங்டன்.

உங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் எப்படிக் கழிக்கிறீர்கள் என்ற காரியத்தில் உங்களுடைய பெற்றோர் அக்கறையுள்ளவர்களாக இருக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. ஒருவேளை நீங்கள் எங்கே செல்வது மற்றும் யாருடன் கூட்டுறவு கொள்வது போன்ற காரியங்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்களுடைய உள்நோக்கம்? கடவுளுடைய எச்சரிக்கைக்கு நீங்கள் செவிசாய்க்க உங்களுக்கு உதவுவதே: “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.”—பிரசங்கி 11:10.

சுகபோகத்தை நாடுபவர்கள் மீது பொறாமையா?

இவை எல்லாவற்றையும் மறந்துவிடுவதும் சில இளைஞர்கள் அனுபவிப்பதாகத் தோன்றும் சுயாதீனத்தில் பொறாமைக் கொள்வதும் எளிதே. பாலீன் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டு சுகபோகத்தை நாடும் ஒரு கூட்டத்தோடு கூட்டுறவு கொண்டாள். “தவரென்று எச்சரிக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் நான் செய்துவந்தேன்” என்று நினைவுகூருகிறாள். பாலீனுடைய சுகபோக நாட்டத்திற்கான கொண்டாட்டம், முடிவில் அவள் கைது செய்யப்படுவதிலும் வழிவிலகிச் செல்லும் பெண்களுக்கான சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவதிலும் விளைவடைந்தது.

வெகு காலத்துக்கு முன்பு, சங்கீதம் 73-ன் எழுத்தாளன் பாலீனுடையதைப் போன்ற உணர்வுகளைக் கொண்டிருந்தான். “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமைக் கொண்டேன்,” என்று அவன் ஒப்புக்கொண்டான். அவன் நீதியான நியமங்களுக்கேற்ப வாழ்வதன் மதிப்பைக் குறித்தும்கூட சந்தேகிக்க ஆரம்பித்தான். “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலேயே என் கைகளைக் கழுவினேன்” என்று அவன் சொன்னான். ஆனால் அப்போதுதானே ஓர் ஆழ்ந்த உட்பார்வை அவனுக்குக் கிடைத்தது; துன்மார்க்க ஜனங்கள் “சறுக்கலான இடங்களில்,” அழிவின் வாயிலில் இருக்கிறார்கள்!—சங்கீதம் 73:3, 13, 18.

பாலீன் இதைக் கற்றுக்கொண்டாள்—கடினமான முறையில். அவளுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கைக்குப் பின்பு, கடவுளுடைய தயவை மறுபடியும் பெற்றுக்கொள்ளும்பொருட்டு தன்னுடைய வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்களைச் செய்தாள். மறுபட்சத்தில், நீங்களோ ‘இன்பமாய் பொழுதைக் கழிப்பதன்’ விலைமதிப்பை உணர்ந்துகொள்ள சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியதில்லை, பாலுறவினால் தொற்றப்படும் நோயினால் பீடிக்கப்பட வேண்டியதில்லை அல்லது போதை மருந்து பழக்கத்தைத் தவிர்க்கும் வேதனைகளை அனுபவிக்க வேண்டியதில்லை. ஒருவர் அனுபவித்துக்களிக்க இத்தகைய அபாயங்கள் இல்லாத ஆரோக்கியமான, கட்டியெழுப்பும் வழிமுறைகள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் சில யாவை?

ஆரோக்கியமுள்ள இன்பமான பொழுதுபோக்குகள்

பருவ வயதினர், “அவ்வப்போது குடும்பமாகச் செய்யும் உல்லாசப் பிரயாணங்களையும் நடவடிக்கைகளையும் அனுபவித்துக் களிக்கின்றனர்” என்பதாக அமெரிக்க இளைஞர்களை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிக்காட்டியது. குடும்பமாக ஒன்றாகச் சேர்ந்து காரியங்களைச் செய்வதானது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக இருப்பது மட்டுமல்லாமல், அது குடும்ப ஐக்கியத்தையும்கூட பெலப்படுத்தக்கூடும்.

இது ஒன்றாகச் சேர்ந்து டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. டாக்டர் அந்தோணி பீட்ரோ பின்டோ இவ்விதமாகச் சொல்கிறார்: “டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரச்னை என்னவென்றால், மற்றவர்களோடு சேர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது தனி நபர் நடவடிக்கையாக உள்ளது. . . . ஆகிலும் உள் அரங்க விளையாட்டுகள், கொல்லைப்புற விளையாட்டுகள், விருந்துகள் சமைத்தல், கைத்தொழில் வேலைகள், சப்தமாக வாசித்தல் ஆகியவை, நவீன கால குடும்பத்தின் டெலிவிஷனில் மந்தமாக கொள்ளும் ஈடுபாட்டைக் காட்டிலும், பேச்சுத் தொடர்புக்கும், ஒத்துழைப்புக்கும், புத்திக்கூர்மையைத் தீட்டிக்கொள்வதற்கும் நிச்சயமாகவே அதிகமான வாய்ப்புகளை அளிக்கின்றன.” ஏழு பிள்ளைகளின் தகப்பன் ஜான் சொல்கிறார்: ‘சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது அல்லது வீட்டில் வர்ணம் பூசுவது போன்றவைகளும்கூட குடும்பமாகச் செய்யப்படும்போது மகிழ்ச்சியைத் தரக்கூடும்.’

உங்கள் குடும்பம் ஏற்கெனவே இப்படிப்பட்ட காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்துகொண்டில்லையென்றால், அவ்விதமாகச் செய்ய முன்வந்து உங்கள் பெற்றோரிடம் அதைப்பற்றி பேசுங்கள். குடும்பமாக வெளியே செல்வதற்கு அல்லது எதையாவது செய்வதற்கு அக்கறையூட்டும் மற்றும் கிளர்ச்சியூட்டும் ஆலோசனைகளைத் தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

இருப்பினும், நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க, எப்போதும் மற்றவர்களோடே இருக்க வேண்டியதில்லை. அவளுடைய கூட்டுறவை எச்சரிக்கையோடு கவனிக்கும் மேரி என்ற இளம் பெண், தன்னுடைய நேரத்தைத் தனிமையில் எப்படி இன்பமாகக் கழிப்பது என்பதைக் கற்றறிந்திருக்கிறாள். “நான் இசைக் கருவிகளாகிய பியானோவும் வயலினும் வாசிக்கிறேன். நான் அவைகளை வாசிக்க பழகிக்கொள்வதில் நேரத்தைச் செலவழிக்கிறேன்” என்று அவள் சொல்கிறாள். அதேவிதமாகவே மெலிஸா என்ற பெயர் கொண்ட ஒரு பருவ வயது பெண்ணும் சொல்கிறாள்: “என்னுடைய சொந்த மகிழ்ச்சிக்காக நான் சில சமயங்களில் கதைகள் அல்லது கவிதைகள் எழுதி பொழுதைக் கழிக்கிறேன்.” வாசிப்பது, தச்சு வேலை, அல்லது இசைக் கருவி ஒன்றை இசைப்பது போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நீங்களும்கூட கற்றுக்கொள்ளலாம்.

கிறிஸ்தவக் கூட்டங்கள்

அவ்வப்போது, நண்பர்களோடு ஒன்று சேர்வதும்கூட மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அநேக இடங்களில் நீங்கள் அனுபவித்துக் களிக்கக்கூடிய அநேக விதமான ஆரோக்கியமான நடவடிக்கைகள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் பந்தெரிந்து விளையாடுதல், சறுக்கி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து விளையாடுதல் போன்றவை பிரபலமான நடவடிக்கைகள். மேலும் நீங்கள் ஒரு பொருட்காட்சி சாலைக்கோ அல்லது ஒரு மிருக காட்சி சாலைக்கோ செல்லலாம். வெறுமென இசைத் தட்டுகள் போட்டு கேட்பது அல்லது உடன் கிறிஸ்தவ இளைஞர்களோடு ஓர் ஆரோக்கியமான டெலிவிஷன் காட்சியைப் பார்ப்பதும்கூட ஒன்றுசேர்ந்து வருவதற்கான ஓர் இடமாக இருக்கிறது.

ஒன்றுகூடி வருவதற்கு திட்டமிட உங்களுக்கு உதவும்படி உங்களுடைய பெற்றோரையும்கூட நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். தொகுதிகளாகப் பிரிந்து விளையாடுவது மற்றும் குழுவாக சேர்ந்து பாடுவது போன்ற பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்வதன்மூலம் அதை அக்கறையூட்டுவதாகச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களில் சிலர் இசை வல்லுநர்களாக இருந்தால், அவர்களுடைய திறமையைக் கொஞ்சம் காண்பிக்கும்படியாக கேட்கலாம். நல்ல உணவும் ஒரு நிகழ்ச்சியின் களையைக் கூட்டுகிறது. அனால் அது கவர்ச்சியாக அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் அதில் கலந்துகொள்பவர்களே வித்தியாசமான உணவு வகைகளைக் கொண்டுவரலாம்.

நீச்சல் மற்றும் பந்து விளையாட்டுகள் போன்றவற்றிற்கு வாய்ப்பளிக்கும் பூங்கா அல்லது திறந்த வெளியிடம் ஏதாவது அருகில் இருக்கிறதா? ஏன் ஒரு பிக்னிக் செல்லக்கூடாது? இங்கும்கூட எவருக்கும் பொருளாதார சுமை ஏற்படாத வண்ணம் குடும்பங்கள் உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதில் பங்குகொள்ளலாம்.

மிதமாக இருப்பதே முக்கியமாக இருக்கிறது. இசையை அனுபவித்துக்களிக்க அது பயங்கர சப்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அவசியமில்லை; நடனத்தையும்கூட அனுபவித்துக் களிக்க அது ஆபாசமானதாக அல்லது சிற்றின்பத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டியதில்லை. அதேபோன்று, வெளியில் விளையாடும் விளையாட்டுகளும் அதிகமான போட்டி மனப்பான்மையை ஊக்குவித்துவிடாதபடி அனுபவித்துக் களிக்கப்படக்கூடும். இருப்பினும், ஒரு பெற்றோர் சொல்கிறார்: “சில சமயங்களில் இளைஞர்கள் ஏறக்குறைய சண்டைப் போட்டுக்கொள்ளும் அளவுக்கு தர்க்கம் செய்கிறார்கள்.” பைபிளின் புத்திமதியைப் பின்பற்றி, ‘ஒருவரோடொருவர் போட்டிபோடும் மனப்பான்மையைத்’ தவிர்ப்பதன் மூலமாக அத்தகைய நடவடிக்கைகளை அனுபவிப்போமாக.—கலாத்தியர் 5:26, NW.

யாரை நீங்கள் அழைக்க வேண்டும்? “முழு சகோதர கூட்டுறவிலும் அன்பு கூருங்கள்” என்று பைபிள் கூருகிறது. (1 பேதுரு 2:17) அப்படியென்றால் உங்கள் வயதிலுள்ளவர்களை மட்டுமே ஏன் அழைக்க வேண்டும்? உங்கள் கூட்டுறவை விரிவாக்குங்கள். (2 கொரிந்தியர் 6:13 -ஐ ஒப்பிடுக.) ஒரு பெற்றோர் கவனித்தார்: “வயதானவர்களால் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்கூட அவர்கள் அங்கு வந்து அவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.” வயது வந்தவர்கள் இருக்கையில், காரியங்கள் கைக்கு மீறி போய்விடுவது தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் ஏதாவது ஒரு கூட்டத்துக்கு “முழு சகோதர கூட்டுறவையும்” அழைப்பது கூடாத காரியமாக இருக்கிறது. மேலும் சிறிய கூட்டங்கள் கட்டுப்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றன.

கிறிஸ்தவ கூட்டங்கள் ஒருவரையொருவர் ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்புவதற்கும்கூட சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. உண்மைதான், ஒரு கூட்டத்தில் ஆவிக்குரிய காரியங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது அங்கு கேளிக்கை மறைந்துவிடுகிறது என்பதாக சில இளைஞர்கள் உணருகிறார்கள். “நாங்கள் ஒரு கூட்டுறவுக்காக கூடி வருகையில், அது உட்கார்ந்து பைபிளை எடுத்து பைபிள் விளையாட்டுகளை விளையாடுவதாக இருக்கிறது” என்பதாக ஒரு கிறிஸ்தவ பையன் வருத்தமாகச் சொன்னான். என்றபோதிலும், “யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன் . . . பாக்கியவான்” என்பதாக சங்கீதக்காரன் சொன்னான். (சங்கீதம் 1:1, 2, NW) ஆகவே பைபிளை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களும் அல்லது விளையாட்டுகளும்கூட மகிழ்ச்சியூட்டுபவையாக இருக்கக்கூடும். முழுமையாக பங்குகொள்தவற்காக ஒருவேளை வேதவாக்கியங்களில் உங்களுடைய அறிவை நீங்கள் தீட்டவேண்டியதாக இருக்கலாம்.

மற்றொரு யோசனை, அவர்கள் எவ்விதமாக கிறிஸ்தவர்களானார்கள் என்று பலரைச் சொல்ல வைப்பதாகும். அல்லது நகைச்சுவை நிரம்பிய செய்தி துணுக்குகளைச் சொல்லும்படியாக சிலரை அழைப்பதன் மூலம் உற்சாகத்தையும் சிரிப்பையும் கூட்டுங்கள். அநேகமாக இவை மதிப்புள்ள பாடங்களைக் கற்பிக்கின்றன. இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிகாரங்களும்கூட ஒரு கூட்டத்தில் அக்கறையூட்டும் கலந்தாலோசிப்புகளுக்கு அடிப்படையாக இருக்கலாம்.

பொழுதுபோக்கைச் சமநிலையில் வையுங்கள்!

எப்போதாவது இன்பமாகப் பொழுதைக் கழித்ததில் நிச்சயமாகவே இயேசு விதிவிலக்கல்ல. கானாவில் ஒரு திருமண விருந்தில் அவர் கலந்துகொண்டார் என்று பைபிள் சொல்லுகிறது; அங்கு உணவு, இசை, நடனம் மற்றும் கட்டியெழுப்பும் கூட்டுறவு போன்றவை மிகுதியாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. அற்புத விதமாக திராட்ச ரசத்தை அளித்ததன் மூலம், அந்தத் திருமண விருந்தின் வெற்றிக்கு இயேசு காரணமாகவும் இருந்தார்!—யோவான் 2:3-11.

ஆனால் இயேசுவின் வாழ்க்கை எப்போதும் விருந்திலே மூழ்கிய ஒன்றாக இருக்கவில்லை. அவர் அதிகமான தன்னுடைய நேரத்தை ஆவிக்குரிய அக்கறைகளை நாடுவதிலும் ஜனங்களுக்கு கடவுளுடைய சித்தத்தைப் போதிப்பதிலும் செலவழித்தார். அவர் சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படிச் செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) கடவுளுடைய சித்தத்தைச் செய்ததானது சில தற்காலிகமான பொழுதுபோக்குகள் கொண்டுவரக்கூடிய சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக நிரந்தரமான சந்தோஷத்தை இயேசுவிற்கு கொண்டுவந்தது. இன்றைக்கு, “கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகம்” இன்னமும் இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:58, NW; மத்தேயு 24:14) ஆனால், அவ்வப்போது, சில பொழுதுபோக்கிற்கான தேவையை நீங்கள் உணரும்போது, அதைச் சமநிலையான, ஆரோக்கியமான விதத்தில் அனுபவியுங்கள். ஓர் எழுத்தாளர் சொன்னது: “வாழ்க்கை எப்போதும் செய்கைகளாலும் கிளர்ச்சியூட்டும் காரியங்களாலும் இடைவெளியின்றி நெருக்கமாக நிரம்பியிருக்க முடியாது. அப்படியிருக்குமேயானால் ஒருவேளை நீங்கள் களைத்துப்போவீர்கள்!”

[அடிக்குறிப்புகள்]

a அவளுடைய நிஜனமான பெயர் அல்ல.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻சில கிறிஸ்தவ இளைஞர்கள் ஏன் உலகப்பிரகாரமான இளைஞர்கள்மீது பொறாமைக் கொள்கிறார்கள்? நீங்கள் எப்போதாவது அவ்விதமாக உணர்ந்திருக்கிறீர்களா?

◻தங்களுடைய நடத்தைச் சம்பந்தமாக என்ன எச்சரிப்பைக் கடவுள் இளைஞருக்குக் கொடுக்கிறார்? இது அவர்களுடைய பொழுதுபோக்கைத் தெரிந்துகொள்ளும் காரியத்தை எவ்விதமாக பாதிக்க வேண்டும்?

◻கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் மீறி நடக்கும் இளைஞர்கள்மீது பொறாமைக்கொள்வது ஏன் முட்டாள்தனமானது?

◻ஆரோக்கியமான பொழுதுபோக்கை (1) குடும்ப அங்கத்தினரோடு, (2) நீங்களாகவே, மற்றும் (3) உடன் கிறிஸ்தவர்களோடு அனுபவிக்க சில வழிகள் யாவை?

◻பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டதில் சிமநிலையோடு இருக்க இயேசு கிறிஸ்து எப்படி ஒரு முன்மாதிரியை வைத்தார்?

[பக்கம் 297-ன் சிறு குறிப்பு]

“சப்தமான இசையாலும் ஜொலிக்கும் விளக்குகளாலும் கவர்ந்திழுக்கப்பட்டதால், நாங்கள் கடந்து செல்லும்போது ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன். அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கேளிக்கையை ஆவலுடன் கற்பனை செய்து கொள்வேன்”

[பக்கம் 302-ன் சிறு குறிப்பு]

“ஒருவர் கஞ்சா கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து வெறித்தனர். அந்தச் சமயத்திலிருந்துதான் எல்லாமே தாறுமாறாகப் போக ஆரம்பித்தது”

[பக்கம் 299-ன் சிறு குறிப்பு]

பைபிள் நியமங்களைப் பின்பற்றும் இளைஞர் இன்பமாய்ப் பொழுதைக் களிப்பதைத் தவறவிட்டனரா?

[பக்கம் 300-ன் படங்கள்]

ஒரு பொழுதுபோக்கு வேலையைக் கொண்டிருப்பது, ஓய்வு சமயங்களில் தன்னுடைய நேரத்தை ஆரோக்கிமாக செலவழிப்பதற்கு ஒரு வழியாகும்

[பக்கம் 301-ன் படங்கள்]

வித்தியாசமான காரியங்களைத் திட்டமிடும்போதும் வித்தியாசமான வயதினர் பிரதிநிதித்துவம் செய்யும்போதும் கிறிஸ்தவ கூட்டங்கள் அதிக மகிழ்ச்சியைத் தரும்