Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முன்னுரை பலன்தரும் விடைகள்

முன்னுரை பலன்தரும் விடைகள்

முன்னுரை பலன்தரும் விடைகள்

‘என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்கிறதில்லை?’ ‘போதைப்பொருட்களையும் சாராயத்தையும் நான் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ ‘திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வதைப்பற்றியதென்ன?’ ‘அது உண்மையான அன்புதானாவென நான் எவ்வாறு அறிவது?’ ‘எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது?’

இத்தகைய கேள்விகளைக் கேட்பதற்கு நீ முதல் இளைஞனுமல்ல—கடைசியானவனுமல்ல. எனினும், இளைஞர்கள் இந்த அடிப்படை விவாதங்களை எழுப்புகையில், முரண்படும் விடைகளைக் கொண்டு பெரும்பாலும் அணையிட்டுத் தடுக்கப்படுகின்றனர். உதாரணமாக, சாராயச் சத்துள்ள மதுபானங்களைக் குடித்தல். பெற்றோர்—தாங்கள்தாமே அவற்றைப் பயன்படுத்துகிறபோதிலும்—அவற்றைக் குடிக்கக்கூடாதென தடைசெய்யலாம். பத்திரிகைகளும் டெலிவிஷன் காட்சிகளும் குடிப்பதைப் புகழ்ந்து பெருமைப்படுத்துகின்றன. சகாக்கள் குடித்துப்பார்க்கும்படி உன்னை ஊக்கப்படுத்துகின்றனர். அப்படியானால், தாங்கள் என்னதான் செய்யவேண்டுமென பல இளைஞர்கள் உண்மையில் மனக்குழுப்பமடைவதில் அதிசயம் ஒன்றுமில்லை.

இன்றைய இளைஞரின் இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான மற்றும் பயன்விளைவிக்கும் விடைகள் தேவைப்படுவதைக் கண்டுணர்ந்து, விழித்தெழு! பத்திரிகை a ஜனவரி 1982-ல் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” என்ற தலைப்பைக்கொண்ட ஒரு முக்கிய பகுதியை முதன்முதல் தொடங்கியது. இந்தக் கட்டுரைகள் வாசகரின் கவனத்தை சாதகமான முறையில் உடனடியாக கவர்ந்தது. “இந்தத் தொடர் வெளியீடு இன்று இளைஞரின் நெருக்கடிநிலையில் உங்கள் தொடர்ந்த அக்கறைக்கு அத்தாட்சியாயிருக்கிறது,” என்று மதித்துணர்வுள்ள வாசகர் ஒருவர் தெரிவித்தார். “இந்தக் கட்டுரைகள் ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென நான் நம்பி ஜெபிக்கிறேன்,” என்று மற்றொருவர் எழுதினார்.

இன்னுமொரு இளம் வாசகன் பின்வருமாறு குறிப்பிட்டான்: ‘எனக்கு 14 வயது, வளருவது இவ்வளவு கடினமாயிருக்குமென நான் ஒருபோதும் அறியவில்லை. இன்று சிறுவர்களின்பேரில் மிக அதிக எதிர்ப்பழுத்தம் கொண்டுவரப்படுகிறது. இதனால் இந்தக் கட்டுரைகளுக்காக நான் மிக நன்றியுடன் இருக்கிறேன். இவற்றைப் பிரசுரிக்கச் செய்ததற்காக, ஒவ்வொரு இரவும் நான் கடவுளுக்கு நன்றிசெலுத்துகிறேன்.’ எனினும், இந்தக் கட்டுரைகள், சிறுபிள்ளைத்தனமானவை அல்ல, மேலும் எங்கள் வாசகரை “மதிப்புக் குறைவுபடுத்தி எழுதும்படியும்” முயற்சி செய்யவில்லை. இதனால் “இளைஞர்கள் கேட்கின்றனர் . . . ” முதிர்ந்தவர்களுக்குள்ளும் மதித்துப்பாராட்டும் ஆட்களைக் கண்டடைந்தது. பெற்றோர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “எனக்கு 40 வயது, இந்தக் கட்டுரைகள் மெய்யாகவே பெற்றோரான எங்களுக்குக் கடவுள் அனுப்புபவை.” முக்கியமாய்க் கிறிஸ்தவ மூப்பர்கள் இவற்றை, யெகோவாவின் சாட்சிகளின் சபைகளிலுள்ள இளைஞர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களைக் கையாளுவதற்கும் பயனுள்ளவையாகக் கண்டனர்.

“இளைஞர் கேட்கின்றனர் . . .  ” ஏன் இத்தகைய ஆர்வங்கொண்ட மறுமொழியைத் தூண்டியது? கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உண்மையில் பலன்தருகின்றன! ஒவ்வொரு கட்டுரையும் விரிவான ஆராய்ச்சியின் பலனாகும். மேலும், இளைஞர் உண்மையில் எவ்வாறு சிந்திக்கின்றனர் மற்றும் உணருகின்றனரென்பதை உறுதிசெய்ய, விழித்தெழு! நிருபர்கள் உலக முழுவதிலும் நூற்றுக்கணக்கான இளைஞரிடம் பேசினர்! அவர்களுடைய கபடற்ற நேர்மையான தெரிவிப்புகள், இந்தக் கட்டுரைகளைக் காரியங்கள் உண்மையில் இருக்கிறபடியும் நடைமுறையில் பயன்படும்படியும் செய்வதில் மிகுந்த உதவியாயிருந்தது.

எனினும், கொடுத்துள்ள விடைகள், ஊகக்கோட்பாட்டின்பேரில் அல்லது தனிப்பட்டவர் எண்ணத்தின்பேரில் அல்ல, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் நித்திய சத்தியங்களின்பேரில் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்ட இந்த உண்மையே “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகளின் வெற்றிகரமான நிறைவேற்றத்துக்கு உண்மையான இரகசியமாகும். ‘பைபிளிலா?’ என்று நீ ஒருவேளை கேட்கலாம். ஆம், இளைஞருக்குச் சொல்வதற்கு மிகுதியானவற்றை அது கொண்டிருக்கிறது. (நீதிமொழிகள், அதிகாரங்கள் 1-7; எபேசியர் 6:1-3-ஐப் பார்.) அது நம்முடைய சிருஷ்டிகரால் ஏவப்பட்டது, அவர் “பாலியத்துக்குரிய இச்சைகளை” கூரறிவுடன் தெரிந்திருக்கிறார். (2 தீமோத்தேயு 2:20-22; 3:16) பைபிள் காலங்கள் முதற்கொண்டு மனித சமுதாயம் வெகுவாய் மாற்றமடைந்தபோதிலும், இளமைக்குரிய ஆசைகள் அதிகம் மாறவில்லை. இதனால் பைபிள் எக்காலத்தையும்போல் இக்காலத்துக்கும் நடப்பிலுள்ளது. எனினும், இளைஞர் தங்களுக்குப் பிரசங்கிப்பதுபோல் அல்லாமல், பகுத்தறிவுக்குப் பொருத்தமாய்த் தங்களிடம் கலந்துபேசுவதுபோல் உணரும் ஒரு முறையில் பைபிளின் அறிவுரையை எடுத்துக்கூற நாங்கள் முயற்சிசெய்திருக்கிறோம். கட்டுரைகள் முக்கியமாய் யெகோவாவின் சாட்சிகளின் இளைஞரை மனதில்கொண்டு எழுதப்பட்டிருப்பினும், பைபிளில் அடங்கியுள்ள நடைமுறையான ஞானத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எவரும் அதை வாசித்து மகிழ்ச்சி அனுபவிக்கலாம்.

வாசகர் பலரின் வேண்டுகோளைத் திருப்திசெய்ய, “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகளில் பலவற்றை நாங்கள் புத்தக முறையில் தொகுத்தமைத்திருக்கிறோம். இங்கே குறிப்பிட்டுள்ள இந்த 39 அதிகாரங்கள், (ஆங்கில) விழித்தெழு! பத்திரிகையில் 1982-க்கும் 1989-க்குமிடையில் தோன்றிய ஏறக்குறைய 200 கட்டுரைகளில் 100-க்கு மேற்பட்டவற்றிலிருந்து எடுத்தத் தகவலைச் சுருக்கமான முறையில் கொண்டிருக்கின்றன. புதிதான சில தகவல்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், வெவ்வேறுபட்ட நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த இளைஞரின் நிழற்படங்களைக்கொண்டு விளக்கமளித்து அது தனிமுறையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளடக்க அட்டவணையைக் கூர்ந்துபார்த்து, உனக்கு மிக அதிக அக்கறைக்கேதுவாயுள்ள கேள்விகளுக்கு நேரே செல். எனினும், பின்னால் இந்தப் புத்தகத்தை முழுவதும் வாசிக்கவும், வேதவசனங்களை உன் சொந்த பைபிள் பிரதியில் எடுத்துப் பார்க்கவும் நேரமெடுக்கும்படி நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்.

சில குடும்பங்களில், பெற்றோர்-பிள்ளைக்குரிய பேச்சுத்தொடர்பு குறைவுபடுகிறது அல்லது சங்கடமான ஒன்றாக இருக்கிறது. இதனால், ‘கலந்துபேசுவதற்கான கேள்விகள்’ என்ற ஓர் அம்சத்தை நாங்கள் சேர்த்திருக்கிறோம், இது ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் தோன்றுகிறது. இந்தக் கேள்விகள் பத்திப்-பத்தியாகப் பகுத்தாராய்வதற்குத் திட்டமிடப்படவில்லை. அல்லது பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அறிவைத் தெரிந்துகொள்ள பயன்படுத்துவதற்கும் அல்ல. இளைஞருக்கும் பெற்றோருக்குமிடையே கலந்தாலோசிப்புகளைத் தூண்டியெழுப்புவதற்கே இவை திட்டமிடப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகள் பல உன் சொந்த நோக்குநிலையைக் கொடுக்க அல்லது கலந்தாலோசிக்கும் காரியத்தை உன் சொந்தச் சூழ்நிலைமைக்குப் பொருத்திப் பயன்படுத்த இடமளிக்கின்றன.

ஆகையால் இந்தப் புத்தகத்தைச் சில சமயங்களில் குடும்பப் படிப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப் பல குடும்பங்கள் விரும்புவர். குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் பத்திகளை வாசிப்பதற்குத் தங்கள் முறையை ஏற்று, இடக்குறிப்புமட்டும் கொடுத்துள்ள வேத வசனங்களை எடுத்துப் பார்த்து அவ்வாறு படிக்கலாம். ‘கலந்துபேசுவதற்கான கேள்விகளை’ இடையிடையே, பொருத்தமான உபதலைப்புப் பகுதிகளை வாசித்து முடித்தப்பின் அல்லது முழு அதிகாரத்தையும் வாசித்தப்பின் கேட்கலாம். தங்கள் உணர்ச்சிகளை ஒளிவுமறைவில்லாமல் திறந்தமனதுடனும் நேர்மையுடனும் வெளிப்படுத்திக்கூறும்படி எல்லாரையும் ஊக்குவிக்கலாம். இளைஞர் இந்தப் புத்தகத்தைத் தங்களுக்குள் கலந்தாலோசிப்பதிலும் மகிழ்ச்சியனுபவிக்கலாம்.

இளைஞருக்குங்கூட இவை “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்.” (2 தீமோத்தேயு 3:1NW) எனினும், கடவுளுடைய வார்த்தையைப்பற்றிய திருத்தமான அறிவுடன், நீ இந்தக் கடினமான வாழ்க்கைக் காலத்தினூடே வெற்றிகரமாய் கடந்துசெல்ல முடியும். (சங்கீதம் 119:9) ஆகையால், உனக்கு மனக்குழப்பமுண்டாக்கும் கேள்விகளுக்கு, பைபிளில் ஆதாரங்கொண்டுள்ள, நடைமுறையான இந்த விடைகளை அளிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

பிரசுரிப்போர்

[அடிக்குறிப்புகள்]

a Praharidurg Prakashan Society, India, பிரசுரிக்கும் மாத வெளியீடு.

[பொருளடக்கம்]

(பிரசுரத்தை பாருங்கள்)