Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பால் சிட்சிப்பதன் உயர் மதிப்பு

அன்பால் சிட்சிப்பதன் உயர் மதிப்பு

அதிகாரம் 10

அன்பால் சிட்சிப்பதன் உயர் மதிப்பு

கீழ்ப்படிதலுள்ள அன்புள்ள, நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள் வெறும் தற்செயலாக உண்டாகிவிடுகிறதில்லை. முன்மாதிரியின் மூலமாகவும் சிட்சையின் மூலமாகவும் அவர்கள் உருப்படுத்தி உண்டாக்கப்படுகிறார்கள்.

2“உங்கள் பிள்ளையை நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு சமயத்திலும், உங்கள் பிள்ளையைப் பகைக்கிறீர்களென்று நீங்கள் காட்டுகிறீர்களென்பதைத் தாய்மார்களே நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா?” என்று ஓர் உளநூல் வல்லுநர் சொன்ன பிரகாரம் பிள்ளை சம்பந்தப்பட்ட உளநூல் வல்லுநர் பலர் பிள்ளைகளைக் குறித்ததில் “தொடாதே” என்ற அடையாளத்தைப் போடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கடவுள் தம்முடைய வார்த்தையில் பின்வருமாறு கூறுகிறார்: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்.” (நீதிமொழிகள் 13:24) சில பத்தாண்டுகளுக்கு முன்பாக, முக்கியமாய் மேற்கத்திய நாடுகளில், பிள்ளை பயிற்றுவிப்பைப் பற்றிய புத்தகங்கள், பிள்ளைகள் கட்டுப்பாடில்லாமல் விடப்பட வேண்டும் என்ற கோட்பாடுகளுடன், கடைகளில் பேரளவாய் வந்து குவிந்திருந்தன. சிட்சை பிள்ளையை கட்டுப்படுத்தி தடைசெய்து அதன் வளர்ச்சியைக் குறுக்கிவிடும் என்று உளநூல் வல்லுநர்கள் சொன்னார்கள்; மேலும், அடிப்பதைக் குறித்ததில் அதன் எண்ணம்தானே அவர்களுக்குத் திகிலூட்டுவதாய் இருந்தது. அவர்களுடைய கோட்பாடுகள் யெகோவாவின் ஆலோசனைக்கு நேர் எதிராக முரண்பட்டது. ‘எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்’ என்று அவருடைய வார்த்தை சொல்லுகிறது. (கலாத்தியர் 6:7) ஒரு சில பத்தாண்டுகள் கட்டுப்பாடில்லாமல் விடும் விதைகளை விதைத்து வந்தது என்னவாக நிரூபித்திருக்கிறது?

3தீய செயல்கள், கடமை தவறுதல் ஆகியவற்றில் அமோக விளைச்சலானது நன்றாக அறியப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் நிறைந்த பல தேசங்களில் நடக்கும் வினைமையான தீய செயல்களில் 50 சதவீதத்திற்கு மேலானவை இளைஞர் புரியும் குற்றச் செயல்களாகக் கணக்கிடப்படுகின்றன. உலகத்தின் சில பாகங்களில் பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களே, வகுப்பு அமைதிகுலைவு சண்டைகள், அவமரியாதையான வாய்ப் பேச்சுகள், ஆபாசமான நடத்தைகள், கலையழிவு செய்தல், திடீர் தாக்குதல், பயமுறுத்தி பணம் பறித்தல், தீக்கொளுத்தி அழித்தல், கொள்ளைகள், கற்பழித்தல், குடிவெறி, கொலைகள் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சிக்குகந்த இடங்களாக இருக்கின்றன. ஒரு பெரிய நாட்டில் கல்வி ஆசிரியர்களின் கூட்டிணை கழகத்திற்குப் பேச்சாளராயிருக்கும் ஒருவர் இந்தச் சிட்சை பிரச்னையை, சிறுவயதிலேயே பிள்ளைகளை எட்ட பள்ளி தவறினதே காரணமென்பதாக அலசி ஆராய்ந்து கண்டார், மேலும் கடமை தவறுதலின் காரணம், குடும்பம் படிப்படியாய்த் தரம் குறைந்து கொண்டு போவதும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நடத்தைக்குரிய நியாயமான தராதரங்களை வைக்க மனமற்றிருப்பதுமே என்று குற்றஞ்சாட்டினார். ‘குடும்பத்தின் சில அங்கத்தினர் தீய செயல்களைச் செய்கிறவர்களாகையில் மற்ற அங்கத்தினர் அவ்வாறு ஆகாமலிருப்பது ஏன்,’ என்ற இந்தக் கேள்வியை ஆழ்ந்து ஆலோசிப்பதாய் தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “குடும்ப சிட்சைக்குரிய திட்டப் போக்குகள் ஒருவேளை மட்டுக்குமீறி தளர்ந்தவையாக அல்லது மட்டுக்குமீறி கடுமையாக, அல்லது மட்டுக்குமீறி முரண்பாடானவையாக இருக்கக்கூடும். நியாயப்படி சரியாயிராத சிட்சையே குற்றச் செயலில் ஈடுபட்ட மனிதரில் 70 சதவீதமானவர்களுக்குக் காரணமாக சம்பந்தப்படுத்தப்படலாமென்று அமெரிக்கன் ஆராய்ச்சி ஆலோசனை கூறுகிறது.”

4அனுபவிக்கப்பட்ட இந்த விளைவுகள் இந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும்படி பலரை வழிநடத்தி சிட்சை கொடுப்பதற்குத் திரும்பும்படி செய்திருக்கிறது.

சிட்சையின் பிரம்பு

5ஓர் அடி பிள்ளையின் உயிரைக் காப்பதாக நிரூபிக்கக்கூடும், ஏனெனில் கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “பிள்ளையைச் சிட்சியாமல் விடாதே, பிரம்பால் அடித்திடின் மரணத்துக்குத்தப்புவான். ஆம், நீ அவனைப் பிரம்பால் அடிப்பதால், பாதாளத்துக்கு [ஷியோலுக்கு அல்லது பிரேதக்குழிக்கு] அவன் உயிரைத் தப்புவிப்பாய்” மறுபடியுமாக, “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும், சிட்சையின் பிரம்பு அதை அவனைவிட்டு அகற்றும்.” (நீதிமொழிகள் 23:13, 14; 22:15) பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை அக்கறைகளைத் தங்களுக்கு அருமையானதாக வைத்திருக்கிறார்களென்றால், சிட்சைக்குரிய நடவடிக்கை பலவீனமாய் அல்லது கவலையீனமாய்த் தங்கள் கைகளிலிருந்து நழுவிப்போகவிடமாட்டார்கள். தேவைப்படுகையில் ஞானமாயும் தக்க முறையிலும் நடவடிக்கையெடுக்கும்படி அன்பு அவர்களைத் தூண்டி செயல்படச் செய்யும்.

6சிட்சையைத்தானே குறித்ததில், இது தண்டிப்பதற்கு மாத்திரமே மட்டுப்பட்டதாயில்லை. சிட்சை என்பது அடிப்படையாய் ‘ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு அல்லது உருவமைப்பைக் கடைப்பிடிக்கிற போதனை அல்லது பயிற்றுவிப்பு’ என்று அர்த்தங்கொள்ளுகிறது. இதன் காரணமாகவே நீதிமொழிகள் 8:33 (NW) ‘சிட்சையை உணரும்படி’ அல்ல, ‘சிட்சைக்குச் செவிகொடுத்து ஞானவானாகும்படியே’ சொல்லுகிறது. 2 தீமோத்தேயு 2:24, 25-ன் பிரகாரம் கிறிஸ்தவன் “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் போதக சமர்த்தனும் தீயோரைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்களுக்கு . . . சாந்தமாய் . . . போதித்து பயிற்றுவிக்க வேண்டும்.” இங்கே “போதித்து” என்ற இந்தச் சொல், சிட்சை என்பதற்கான கிரேக்கச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதே கிரேக்கச் சொல் எபிரெயர் 12:9-ல் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: “சரீரப்பிரகாரமான நமது பிதாக்கள் நம்மைச் சிட்சித்து வந்தார்கள், நாம் பயந்து நடந்தோம்; அப்படியிருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவியின் பிரகாரமான பிதாவுக்கு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டியது அவசியமல்லவா?”—தி.மொ.

7தீவினைகள் தண்டிக்கப்படாதபடி தொடர்ந்து நடந்து கொண்டிருக்க அதிபதிகள் அனுமதிக்கையில் குடிமக்களின் மரியாதையை அவர்கள் அடைய முடியாது, அதைப்போலவே சிட்சை கொடுக்கத் தவறுகிற பெற்றோரும் பிள்ளையின் மரியாதையை அடைய முடியாது. சிட்சை, சரியான முறையில் கொடுக்கப்படுகையில், அது, பிள்ளைக்குத் தன்னுடைய பெற்றோர் தன்னைப்பற்றிக் கவலையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. இது வீடு சமாதானமுள்ளதாயிருப்பதற்குத் தன் பங்கைச் செய்கிறது, எப்படியெனில் “அதில் பயிற்றப்பட்டவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபிரெயர் 12:11, தி.மொ.) கீழ்ப்படியாத, ஒழுங்காய் நடந்துகொள்ளாத பிள்ளைகள் எந்த வீட்டிலும் எரிச்சலுக்குக் காரணமாக இருக்கின்றனர், இப்படிப்பட்ட பிள்ளைகள் ஒருபோதும் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறதில்லை, தங்களுக்குள்ளேதானேயும் சந்தோஷமாக இருப்பதில்லை. “உன் மகனைச் சிட்சை செய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.” (நீதிமொழிகள் 29:17) உறுதியுடனும் அன்புடனும் திருத்தப்பட்ட பின்பு, பிள்ளை ஓரளவான புதிய மன நிலையையும் புதிய தொடக்கத்தையும் அடையக்கூடும், அநேகமாய் முன்னிருந்ததைப் பார்க்கிலும் அதிக இன்பமான கூட்டாளியாக இருக்கக்கூடும். சிட்சை, நிச்சயமாகவே ‘சமாதான பலனைத் தருகிறது.’

8“யெகோவா எவனிடம் அன்பு கூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” (எபிரெயர் 12:6, NW) உண்மையில் தன் பிள்ளைகளின் மிகச் சிறந்த அக்கறைகளை இருதயத்தில் கொண்டிருக்கிற பெற்றோரைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. சிட்சை அன்பினால் தூண்டப்பட்டே கொடுக்கப்பட வேண்டும். பிள்ளையின் தவறான செயலால் எரிச்சலூட்டப்படுகையில் கோபம் வருவது இயல்பானதாயிருக்கலாம், ஆனால் பைபிள் காட்டுகிறபடி, ஒருவன் “தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்.” (2 தீமோத்தேயு 2:24) தன் கோபம் தணிந்த பின்பு சிறு பிள்ளைத்தனமான ஒரு பாவம் ஒருவேளை அவ்வளவு பெரியதாகத் தோன்றாது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” (நீதிமொழிகள் 19:11; பிரசங்கி 7:8, 9-ஐயும் பாருங்கள்.) குற்றத்தைக் குறைவாக்கக்கூடிய சூழ்நிலைமைகள் இருக்கலாம்: ஒருவேளை பிள்ளை மட்டுக்கு மீறி களைப்பாக இருக்கலாம் அல்லது நல்ல சுகமில்லாமல் இருக்கலாம். ஒருவேளை தனக்குச் சொல்லப்பட்டதை அவன் உண்மையில் மறந்துவிட்டிருக்கலாம்; பெரியவர்களுங்கூட இவ்வாறு செய்கிறார்கள் அல்லவா? கவனியாமல் விட்டுவிட முடியாத ஏதோ தவறான செயலாக இருக்கிறதென்றாலுங்கூட, சிட்சை அடங்கா கோபாவேசமாக அல்லது பெற்றோரின் கோப உணர்ச்சி வேகத்தை வெறுமென வெளிப்படுத்திவிடுகிற ஓர் அடியாக இருக்கக்கூடாது. சிட்சை போதனை உட்பட்டதாயிருக்கிறது, வெடிக்கும் கோபாவேசத்தால், பிள்ளை தன்னடக்கத்தைப் பற்றியதில் அல்ல, தன்னடக்கமில்லாமையைப் பற்றியதிலேயே ஒரு பாடத்தைக் கற்கிறது. சரியான முறையில் சிட்சை கொடுக்கப்படுகையில் பிள்ளை தான் கவனிக்கப்பட்டு வருவதாக உணருகிற அந்த உணர்ச்சிகள் இவ்வகையில் சிட்சை கொடுக்கப்படுகையில் அதற்கு உண்டாகிறதில்லை. அப்படியானால், சமநிலை இன்றியமையாததாயிருக்கிறது, சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கிறது.

உறுதியான கட்டுப்பாடுகளை வைத்தல்

9பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் எல்லைக் குறிகளைக் கொடுக்க வேண்டும். “என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து அவைகளை உன் கழுத்திலே கட்டிக் கொள். நீ நடக்கும்போது அது உனக்கு வழி காட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.” பெற்றோரின் கட்டளைகள் பிள்ளையை வழிநடத்தவும் பாதுகாக்கவும் வேண்டும், இவை பிள்ளையின் சுகநலம், மகிழ்ச்சி ஆகியவற்றின்பேரில் பெற்றோருக்கு இருக்கும் அக்கறையைப் பிரதிபலிக்கின்றன.—நீதிமொழிகள் 6:20-23.

10இதில் தவறுகிற தகப்பன் உத்தரவாதத்தைச் சுமக்க வேண்டியவனாயிருக்கிறான். பூர்வ இஸ்ரவேலில் பிரதான ஆசாரியனாயிருந்த ஏலி, தன்னுடைய குமாரர்கள் பேராசையிலும், அவமதிப்பு செய்வதிலும் ஒழுக்கக்கேட்டிலும் மனம்போன போக்கில் செல்ல அனுமதித்தான்; ஓரளவு அவர்களைக் கண்டித்துப் பேசினான், ஆனால் அவர்களுடைய தீய செயல்களை நிறுத்துவதற்கு மெய்யான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடவுள் பின்வருமாறு கூறினார்: “அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப் பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம் நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்.” (1 சாமுவேல் 2:12-17, 22-25; 3:13) இதைப் போலவே, ஒரு தாய் தன் கடமையில் தவறுகிறாளென்றால், அவள் அவமானத்தை அனுபவிக்கிறாள்: “பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் [ள்].”—நீதிமொழிகள் 29:15.

11பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவை. அவை இல்லாமல் அவர்கள் இருப்புக்கொள்ளா நிலையுடையவர்களாக இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளை உடையவர்களாகவும் அவற்றைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருப்பது பிள்ளைகளை ஒரு தொகுதியின் பாகமாக உணரச் செய்கிறது; இந்தத் தொகுதியின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் காரணமாக தாங்கள் அதற்குரியவர்களாகவும் அதால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். கட்டுப்பாடில்லாமல் விடுவது இளைஞரைக் கைவிட்டு அவர்கள் தங்கள் போக்கில் தடுமாறி சீர்கெட்டுப் போகவிடுகிறது. கட்டுப்பாடுகளைப் பற்றிய உறுதியான நம்பிக்கைகளை உடையவர்களும், இவற்றை பிள்ளைகளுக்குக் கடத்தக் கூடியவர்களுமான முதியோர் பிள்ளைகளுக்குத் தேவை என்று இதன் விளைவுகள் காட்டுகின்றன. பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவென்றும், இது அவரவருடைய சொந்த சந்தோஷத்திலும் நன்மையிலுமே பலனடைகிறதென்றும் பிள்ளைகள் தெரிந்துணருவது அவசியம். நம்முடைய சுயாதீனப் பரப்பெல்லையை மற்றவர்கள் ஒப்புக்கொண்டு, அவர்களுடையதை நாம் ஒப்புக்கொண்டால் மாத்திரமே சுயாதீனத்தை அனுபவித்து மகிழக்கூடும். சரியான கட்டுப்பாடுகளை மீறுவதானது, மீறுகிறவன் ‘தன் சகோதரனுடைய உரிமைகளைக் கெடுத்து அவற்றிற்குள் அடாத முறையில் நுழைகிற நிலைக்குச்’ செல்கிறவனாக இருக்கிறான் என்றே கட்டாயமாக அர்த்தங்கொள்ளுகிறது.—1 தெசலோனிக்கேயர் 4:6, NW.

12சரியான கட்டுப்பாடுகளை எதிர்ப்பதானது ஏதோ ஒரு வகையான சிட்சையைக் கொண்டு வருகிறதென்பதைப் பிள்ளைகள் கற்றுக் கொள்கையில் அவர்கள் தங்கள் சொந்த வரம்புகளைக் கண்டுணருகிறவர்களாகிறார்கள், மேலும் பெற்றோருடைய உறுதியினாலும் வழிநடத்துதலினாலும், திருப்தியளிக்கிற வாழ்க்கைக்குத் தேவையான சுய-கட்டுப்பாட்டை அவர்கள் வளர்த்து வருகிறார்கள். நாம் நம்முடைய உள்ளத்தில் நம்மை நாமே சிட்சித்துக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், அல்லது வெளியிலுள்ள ஏதோ ஒன்றால் கட்டுப்படுத்தப்படுவோம். (1 கொரிந்தியர் 9:25, 27) நமக்குள் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதை நாம் வளர்த்து முன்னேற்றி நம்முடைய பிள்ளைகளும் அவ்வாறே செய்யும்படி உதவி செய்து வருவோமாகில், நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய வாழ்க்கையும் மிகுந்த சந்தோஷமுள்ளதாய், தொல்லைகளுக்கும் இருதய வேதனைகளுக்கும் விடுபட்டதாக இருக்கும்.

13வழிகாட்டும் நடைமுறைகளும் கட்டுப்பாட்டு வரையறைகளும் பிள்ளைகளுக்குத் தெளிவாகவும், நியாயமானவையாகவும், இரக்கமுள்ள சலுகைகளுள்ளவையாகவும் இருக்கவேண்டும். மிக அதிகத்தை அல்லது மிகக் குறைவை எதிர்பார்க்காதேயுங்கள். அவர்களுடைய வயதை நினைவில் வையுங்கள், வயதுக்கு ஏற்றவாறு அவர்கள் செய்வார்கள். அவர்கள் சின்னஞ்சிறு முதியவர்களாக இருக்கும்படி எதிர்பார்க்காதேயுங்கள். தான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போல நடந்ததாக அப்போஸ்தலன் கூறினான். (1 கொரிந்தியர் 13:11) ஆனால் ஒரு தடவை நியாயமான கட்டுப்பாட்டொழுங்கு உறுதிப்படுத்தப்பட்டு உங்கள் பிள்ளைகள் அவற்றை விளங்கிக் கொண்டதும் உடனடியாகவும் நிலையாகவும் அவற்றைச் செயற்படுத்துங்கள். ‘ஆம் என்பது ஆம் எனவும் இல்லை என்பது இல்லை எனவும் அர்த்தங்கொள்வதாக.’ (மத்தேயு 5:37) தங்கள் வார்த்தையைத் தவறாமல் கடைப்பிடித்து, மாறாமல் நிலையாகவும் முன்னுரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கிற பெற்றோரைப் பிள்ளைகள் உண்மையில் மதிக்கிறார்கள், எப்படியெனில் தங்கள் பெற்றோரின் பலம் தங்களை ஆதரிப்பதை அவர்கள் உணருகிறார்கள், மேலும் ஏதாவது தொந்தரவு உண்டாகி தங்களுக்கு உதவி தேவைப்படுகையில் தாங்கள் அதில் நம்பியிருக்கக்கூடுமென்றும் உணருகிறார்கள். தவறு செய்தலைத் திருத்துவதில் தங்கள் பெற்றோர் நியாயமாயும் என்றபோதிலும் நம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கிறார்களென்றால், இது பிள்ளைகளுக்கு பாதுகாப்பும் உறுதியுமான ஓர் உணர்ச்சியைக் கொடுக்கிறது. தாங்கள் எங்கே நிலை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய பிள்ளைகள் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோரையுடையவர்கள் இதை நிச்சயமாகவே அறிந்திருக்கிறார்கள்.

14பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய பிள்ளை பின்வாங்குகையில் உறுதியைக் காண்பிக்க பெற்றோரின் பங்கில் திட தீர்மானம் வேண்டியதாயிருக்கிறது. அப்பொழுது, தாங்கள் சொன்னதைச் செய்யும்படி அதைச் செய்விக்க, சில பெற்றோர், அதற்குக் கிடைக்கக்கூடிய தண்டனையைக் கூறி பயமுறுத்துவதைத் தெரிந்து கொள்ளுகிறார்கள், அல்லது பிள்ளையுடன் பயனற்றத் தர்க்கத்தில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஏதாவது பொருள் கொடுத்து வசப்படுத்த முயலுகிறார்கள். அநேகமாய்த் தேவைப்படுகிறதெல்லாம், வெகு உறுதியுடனிருந்து, அறிவுறுத்தும் வகையில் பிள்ளையிடம் அவன் அதைக் கட்டாயம் செய்ய வேண்டும் இப்பொழுதே செய்ய வேண்டும் என்று சொல்வதேயாகும். வந்து கொண்டிருக்கும் மோட்டார் வண்டிக்கு முன்னால் பிள்ளை காலெடுத்துவைக்க இருக்கிறதென்றால் கட்டாயமாகச் செய்து தீர வேண்டுமென்று அறிவுறுத்தும் வார்த்தைகளில் பெற்றோர் அது என்ன செய்ய வேண்டுமென்பதை அதற்குச் சொல்வார்கள். இந்தப் பொருளின் பேரில் ஆராய்ச்சி செய்த சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுக் காட்டுவதுபோல்: “ஏறக்குறைய பெற்றோர் எல்லாருமே தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குப்போக வைக்கிறார்கள், . . . தங்கள் பற்களை விளக்க, கூரைக்குச் செல்லாமலிருக்க, குளிக்க, இப்படிப்பட்ட மற்றும் பல காரியங்களைச் செய்ய வைக்கிறார்கள். பிள்ளைகள் அடிக்கடி இவற்றிற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் உடன்படுகிறார்கள், ஏனென்றால் பெற்றோர் சொன்னது விளையாட்டான காரியமல்ல, செய்து தீர வேண்டிய காரியம் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.” ‘உங்கள் வழிகாட்டும் போதனைகளையும் கட்டளைகளையும்,’ நீங்கள் உங்கள் பிள்ளைகளில் நிலையாய்த் திரும்பத் திரும்ப செலுத்தி பலப்படுத்திவந்தால் மாத்திரமே இவற்றை அவர்கள் தங்கள் ‘இருதயத்தில் இடைவிடாமல் கட்டி வைத்துக் கொண்டிருக்கும்படி’ நீங்கள் எதிர்பார்க்கக்கூடும்.—நீதிமொழிகள் 6:21, NW.

15வழிகாட்டும் கட்டுப்பாடுகளைப் பெற்றோர் அந்த விநாடிக்குரிய திடீர் திடீர் மனப்போக்கின்படி விட்டு விட்டு செயற்படுத்தி வருவார்களானால் அல்லது கீழ்ப்படியாமைக்குக் கொடுக்க வேண்டிய சிட்சையை வெகு காலம் தாமதித்து வருவார்களானால், பிள்ளைகள் தாங்கள் எவ்வளவு தூரம் செல்லக்கூடும் எவ்வளவு அதிகமாகத் தாங்கள் தண்டனைப் பெறாமல் தப்பிக்கொள்ளக்கூடும் என்பதைக் காண, துணிந்து சில மீறுதல்களைச் செய்யத் தகாத் தைரியங் கொள்ளுகிறவர்களாகிறார்கள். தகுந்த தண்டனை கொடுப்பது தாமதமாவதாகத் தோன்றுகையில், பிள்ளைகள் தவறு செய்வதில் துணிகரமாவதில் பெரியவர்களைப் போல் இருக்கிறார்கள். “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனு புத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.” (பிரசங்கி 8:11) ஆகையால் நீங்கள் உண்மையில் கருதுவதைச் சொல்லுங்கள், நீங்கள் சொல்வதை உண்மையில் கருதுங்கள். அப்பொழுது உங்கள் பிள்ளை, இதை விளங்கிக் கொண்டு, தான் உதட்டைப் பிதுக்குவதோ, தர்க்கிப்பதோ, நீங்கள் கொடுமையாய் நடத்துவதைப் போலவும் அன்பற்றவர்களாய் இருப்பதைப் போலவும் தான் உணருவதாக நடிப்பதோ, எதுவும் பயனில்லாதிருக்குமென்பதைத் தெளிவாக உணருவான்.

16இது, பேசுவதற்கு முன்பாகச் சிந்திப்பதைத் தேவைப்படுத்துகிறது. யோசியாமல் உண்டாக்கின சட்டங்கள் அல்லது கட்டளைகள் அநேகமாய் நியாயமற்றவையாக இருக்கின்றன. “கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதிற்குத் தாமதமாயுங் கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவன்.” (யாக்கோபு 1:19, தி.மொ.) சிட்சை நியாயப்படியும் முரண்பாடற்றதாயும் இல்லையென்றால், பிள்ளைகள் இயல்பாய்க் கொண்டிருக்கிற நியாய உணர்ச்சி புண்படுத்தப்படும், மனக்கசப்பு தோன்றி வளரும்.

பொழுதுபோக்கைக் கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள்

17விளையாட்டு, பிள்ளையுடைய வாழ்க்கையின் இயல்பான பாகமாயிருக்கிறது. (சகரியா 8:5) பெற்றோர் பிள்ளையின் வாழ்க்கைக்குள் வேலைக்கான மதித்துணர்வையும் பொறுப்புக்குரிய ஓர் உணர்ச்சியையும் படிப்படியாய்ப் புகுத்தி பழக்கத்திற்குக் கொண்டு வருகையில், பெற்றோர் இதைப் பாவித்து நடத்த வேண்டும். பின்பு, பிள்ளைக்குக் கொடுக்கப்படுகிற வீட்டு வேலைகள் எதுவாயிருந்தாலும் பொதுவாய் அவற்றை முதலாவதாகச் செய்து முடிப்பது மிகச் சிறந்தது; விளையாட்டு இரண்டாவதாக வருகிறது.

18சில பிள்ளைகள் வேறு எங்கேயாவது பொழுதுபோக்கைத் தேடுவதன் காரணமாக “தெரு பிள்ளைகள்” ஆகிறார்கள் அல்லது வீட்டில் செயலளவில் உண்மையாக அந்நியராகிறார்கள். கூட்டுறவு மோசமாக இருக்கிறதென்றால் அதன் விளைவுகளும் மோசமாக இருக்கும். (1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) மக்களைப் புரிந்து கொள்வதை விரிவாக்கி அந்தத் திறமையை வளர்ப்பதற்கு, வீட்டுக்கு வெளியில் ஓரளவு கூட்டுறவு, நிச்சயமாவே பிள்ளைக்கு நன்மை பயக்குவதாயிருக்கிறது. ஆனால் மட்டுக்கு மீறிய வெளி கூட்டுறவு வைத்துக் கொள்கையில் அல்லது இவ்விதக் கூட்டுறவு கட்டுப்பாடில்லாமல் விடப்படுகையில், குடும்ப வட்டாரம் பலவீனப்பட்டதாகிறது அல்லது முறிந்து துண்டு துண்டாகிறது.

19இதைத் திருத்த பெற்றோர், தாங்கள் கொடுக்கும் சிட்சையோடு கூட, வீட்டைத் தங்கள் பிள்ளைகளுக்கு மேலுமதிக மகிழ்ச்சிக்குரிய இடமாக்கத் தாங்கள் என்ன செய்யலாம் என்றும் தங்களைக் கேட்டுக் கொள்வது நல்லது; தங்கள் பிள்ளைகளுக்கு வெறுமென போதித்துக் கொண்டும் அவர்களைச் சிட்சித்துக் கொண்டும் வருவது மாத்திரமேயல்ல, அவர்களுக்கு உண்மையான நண்பர்களாகவும் தோழர்களாகவும் இருப்பதிலுங்கூட பிள்ளைகளோடு தாங்கள் போதிய நேரத்தைச் செலவிட்டு வருகிறார்களா என்றும் கேட்டுக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிட, அவர்களோடு விளையாட நீங்கள் பொதுவாய் “மட்டுக்குமீறிய வேலையுள்ளவர்களாக” இருக்கிறீர்களா? பிள்ளையோடு காரியங்களைச் செய்வதற்கான இந்த வாய்ப்புகளை ஒரு தடவை நீங்கள் தவற விடுவீர்களானால் மறுபடியும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் திரும்பிவரா. காலம் ஒரே திசையை நோக்கிச் செல்லுகிறது, பிள்ளையும் நிலையாய் நிற்பதில்லை தொடர்ந்து வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டுமிருக்கிறது. பருவங்கள் பாய்ந்தோடி விடுகின்றன, உங்கள் மகன் குழந்தையாய் நடக்கக் கற்றுக் கொண்டிருந்தது நேற்றுதான் என்பது போல் தோன்றுகிறபோதிலும் அவன் வாலிபனாகிக் கொண்டிருக்கிறான் என்பதையும், உங்கள் சிறிய பெண் வாலிபப் பெண்ணாக மாறிவிட்டிருக்கிறாள் என்பதையும் நீங்கள் திடீரென்று உணருவீர்கள். நீங்கள் தாமே உங்கள் நேரத்தை உபயோகிப்பதில் ஒரு நல்ல சமநிலையைக் காத்து உங்களை நீங்களே கட்டுப்படுத்தி வருவீர்களானால், இந்த அருமையான காலப்பகுதி அளிக்கிற வாய்ப்புகளைப் புறக்கணிப்பதை நீங்கள் தவிர்க்கக்கூடும்—அல்லது மிக இளைஞராய் இருக்கையிலேயே உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து தூரமாக விலகிப்போவதைக் காண்பதைத் தவிர்க்கக்கூடும்.—நீதிமொழிகள் 3:27.

20டெலிவிஷன் பொதுவான பொழுதுபோக்கிற்குரிய மூலமாக இருக்கிற இடங்களில், அதன் உபயோகத்தின் பேரில் கட்டுப்பாடுகள் வைப்பது அவசியமாயிருக்கலாம். பெற்றோர் சிலர் டெலிவிஷனை குழந்தையுடனிருந்து கவனிக்கும் ஆளாக உபயோகிக்கின்றனர். இது ஒருவேளை வசதியாக இருக்கலாம், மலிவாயிருப்பதாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில் இது மிகப் பெரும் செலவு பிடிப்பதாக நிரூபிக்கக்கூடும். டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்கள் அநேகமாய் வன்முறையாலும் பாலுறவு சம்பந்தப்பட்டவற்றாலும் நிரம்பி ததும்புகின்றன. வன்முறையானது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஏற்கத் தகுந்த முறை என்ற அபிப்பிராயம் கொடுக்கப்படுகிறது; கள்ளத்தனமான பாலுறவு அன்றாட வாழ்க்கையின் ஏற்கத் தகுந்த பாகமாகத் தோன்றுகிறது. இது ஓர் ஆளின், முக்கியமாய் இளைஞரின் கூர் உணர்ச்சியை மழுங்கிப் போகச் செய்து இப்படிப்பட்ட செயல்களை அவர்களுக்குப் பழக்கமாக்கி விடக்கூடுமென்று பல ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன. உங்கள் பிள்ளைகள் அசுத்தப்படுத்தப்படாத ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டுமென்று நீங்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறீர்கள். அவர்களுடைய மனம் எவற்றால் உணவூட்டப்படுகிறதென்பதைப் பற்றி இதைப் பார்க்கிலும் அதிக அக்கறையுள்ளவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இயேசு காட்டினபடி, உணவு நம்முடைய இருதயங்களுக்குள் செல்லுகிறதில்லை, ஆனால் நம்முடைய மனதுக்குள் நாம் ஏற்பவை நம்முடைய இருதயத்துக்குள் நுழையக்கூடும்.—மாற்கு 7:18-23.

21டெலிவிஷனில் என்ன வகையான நிகழ்ச்சிகள் பார்க்கப்பட்டு வருகின்றன, எவ்வளவு நேரம் அதற்கு முன்பாகச் செலவிடப்படுகிறது ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது பிள்ளையின் முன்னேற்ற வளர்ச்சியில் பெரும் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். டெலிவிஷனானது மகிழ்ச்சி தரத்தக்க சில பொழுதுபோக்குக் காட்சிகளையும், கல்வியையுங்கூட அளிக்கலாம்; என்றாலும் கட்டுப்பாடில்லாமல் விடப்பட்டால் அது ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவதாகிவிடும், பேரளவான நேரத்தை வீணாக்கிவிடக்கூடும். நேரம் வாழ்க்கையாக இருக்கிறது, இந்த நேரத்தில் சிறிது பாகம் அதிக பலன்தரத்தக்க மற்ற வழிகளில் நிச்சயமாகவே செலவிடப்படலாம். இது ஏனென்றால் டெலிவிஷனானது செயல்கள் இருக்கவேண்டிய இடத்தை வெறுமென பார்த்தல் எடுத்துக் கொள்ளும்படி செய்து விடுகிறது. இது உடல் உழைப்புக்குரிய செயலை மாத்திரமல்ல, வாசித்தலையும் உரையாடலையுங்கூட தள்ளி அவற்றினிடத்தைத் தான் எடுத்துக் கொள்ளுகிறது. ஒரு குடும்பத்திற்கு பேச்சுத் தொடர்பும், ஒன்று சேர்ந்து காரியங்களைச் செய்தலும் தேவையாயிருக்கிறது, ஒரே அறையில் வெறுமென அமைதியாய் ஒன்றாக உட்கார்ந்து டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டிருப்பது இந்தத் தேவையைத் திருப்தி செய்யப்போகிறதில்லை. மட்டுக்குமீறி டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டிருத்தல் ஒரு பிரச்னையாக இருக்கிற வீடுகளில், பெற்றோர், டெலிவிஷனுக்குப் பதிலாக மற்றச் செயல்களில் ஆரோக்கியமான விளையாட்டு, வாசித்தல், குடும்ப நடவடிக்கைகள்—ஆகியவற்றில் மதித்துணர்வைத் தங்கள் பிள்ளைகளில் வளர்த்து வரலாம், முக்கியமாய் பெற்றோர் தாமே வழிகாட்டி, முன்மாதிரியை வைப்பதன்மூலம் இதைச் செய்யலாம்.

நீங்கள் சிட்சிக்கையில், தெரிவியுங்கள்!

22பெற்றோர் ஒருவர் தம்முடைய அனுபவத்தைப் பின்வருமாறு கூறினார்:

“என்னுடைய மகன் மூன்று வயதாகத் தானே இருந்தபோது பொய்ப் பேசுவதைப் பற்றிய ஒரு பெரிய பிரசங்கத்தை அவனுக்குக் கொடுத்தேன், நீதிமொழிகள் 6:16-19-ஐயும் மற்ற வேத வசனங்களையும் உபயோகித்து, பொய்யர்களைக் கடவுள் எவ்வாறு வெறுக்கிறார் என்று காட்டினேன். அவன் கவனித்துக் கேட்டு சரியான பதில்கள் கொடுத்ததுபோல் தோன்றிற்று. ஆனால் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை என்ற ஓர் உணர்ச்சி எனக்கு இருந்தது. ஆகையால், ‘மகனே, பொய் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?’ என்று நான் அவனைக் கேட்டேன். அவன், ‘தெரியாது’ என்று சொன்னான். அதிலிருந்து வார்த்தைகளுக்கு அர்த்தத்தையும் தான் சிட்சிக்கப்படுவதன் காரணத்தையும் அவன் தெரிந்து கொண்டானாவென்று நான் எப்பொழுதும் உறுதிப்படுத்திக் கொள்வதுண்டு.”

23பிள்ளைகள் இன்னும் குழந்தைகளாக இருக்கையில், பெற்றோர், சுடும் அடுப்பைத் தொடுவது போன்றதில், “தொடக்கூடாது” என்று மாத்திரமே பொருட்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக இருக்கலாம். என்றபோதிலும் இந்த முதல் எளிய எச்சரிக்கைகளைக் குறித்ததிலும் காரணங்கள் கொடுக்கப்படலாம். அது ஒருவேளை, அடுப்பு “சூடாக!” இருக்கிறது அதைத் தொட்டால் “சுட்டுவிடும்!” என்பதாக இருக்கலாம். என்றபோதிலும், தொடக்கத்திலிருந்தே அதில் உட்பட்டது பிள்ளையின் நன்மைக்காகவே என்ற இந்த நியமத்தைப் பிள்ளைக்கு முன்பாக வைத்து வாருங்கள்; பின்பு, தயவு, மற்றவர்களுடைய நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை, அன்பு ஆகியவற்றைப் போன்ற பண்புகளின் விரும்பத்தக்கத் தன்மையை விளக்கமாகத் தெரியும்படி செய்யுங்கள். இந்தப் பண்புகளே எல்லா நேர்மையான கட்டளைகளுக்கும் அல்லது கட்டுப்பாடுகளுக்கும் அடிப்படையாய் இருக்கின்றன என்பதை மதித்துணர பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். குறிப்பிட்ட செயல் இந்த விரும்பத்தக்கச் சிறந்த பண்புகளை ஏன் வெளிப்படுத்துகிறது அல்லது வெளிப்படுத்துகிறதில்லை என்பதையுங்கூட அறிவுறுத்தி வாருங்கள். இது முரண்பாடில்லாமல் செய்யப்பட்டு வந்தால், நீங்கள் பிள்ளையின் மனதை மாத்திரமல்ல அவனுடைய இருதயத்தையும் எட்டக்கூடியவர்களாய் இருப்பீர்கள்.—மத்தேயு 7:12; ரோமர் 13:10.

24இதைப்போலவே, அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதலையும் மரியாதையையும் காட்ட வேண்டிய அவசியத்தைப் பிள்ளையின் மனதில் படிப்படியாய் ஆழப் பதிய வைத்து வரவேண்டும். பிள்ளையுடைய வாழ்க்கையின் முதல் ஆண்டின் போது பெரியவர்களுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய பிள்ளை மனமுள்ளவனாயிருப்பது அல்லது மனமற்றவனாயிருப்பது வெளிப்படத் தொடங்கும். பிள்ளையின் மனவளர்ச்சி இதற்கு இடமளித்தவுடனே, கடவுளிடமாகப் பெற்றோருக்கு இருக்கும் இந்த உத்தரவாதத்தைப் பற்றிய மதித்துணர்வை அவன் மனதில் ஆழப் பதிய வையுங்கள். இது பிள்ளையின் பிரதிபலிப்பில் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். இந்த மதித்துணர்வு இல்லையென்றால், கீழ்ப்படிதலானது, பெற்றோர் தங்களைவிட பெரியவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் இருப்பதன் காரணமாகத்தானே தாங்கள் காட்டவேண்டிய ஒன்றென்பதாகப் பிள்ளைகள் கருதக்கூடும். இதற்குப் பதிலாக பெற்றோர், தங்கள் சொந்த எண்ணங்களையல்ல, சிருஷ்டிகர் சொல்வதையே, அவருடைய வார்த்தை சொல்வதையே பிள்ளைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணும்படி பிள்ளை உதவி செய்யப்பட்டால், வேறு எதுவும் கொடுக்க முடியாத வண்ணமாய் இது பெற்றோரின் ஆலோசனைக்கும் வழி நடத்துதலுக்கும் உறுதியைக் கொடுக்கக்கூடும். பிள்ளையின் இளம் வாழ்க்கையில் கரடுமுரடான பகுதிகள் தோன்றத் தொடங்கி, அவன் அல்லது அவள் சோதனைக்கு அல்லது நெருக்கடிக்கு எதிரில் சரியான நியமங்களைக் கடைப்பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சியின் கடுமையை உணரத் தொடங்குகையில், இது தேவைப்படும் பலத்தின் உண்மையான ஊற்றுமூலமாயிருக்கக்கூடும்.—சங்கீதம் 119:109-111; நீதிமொழிகள் 6:20-22.

25“குற்றத்தை மூடுவோன் சிநேகத்தை நாடுபவன், அதைத் திரும்பப் பேசுபவன் உயிர்த்தோழரைப் பிரிப்பான்.” (நீதிமொழிகள் 17:9, தி.மொ.) பெற்றோர்—பிள்ளை உறவுகளிலுங்கூட இது உண்மையாயிருக்கிறது. ஒரு தடவை பிள்ளைக்கு அவனுடைய குற்றத்தை உணர்த்தி, தான் ஏன் சிட்சிக்கப்படவேண்டுமென்பதை அவன் விளங்கிக்கொண்டு, சிட்சை கொடுக்கப்பட்டான பின்பு அந்தக் குற்றத்தைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கும்படி அன்பு பெற்றோரைத் தூண்டி இயக்குவிக்க வேண்டும். என்ன செய்யப்பட்டாலும், நீங்கள் வெறுப்பது பிள்ளையை அல்ல, அந்தத் தவறையே என்பதைப் பிள்ளைக்குத் தெளிவாக்க நிச்சயமாயிருங்கள். (யூதா 23) தான் ‘தன்னுடைய மருந்தை உட்கொண்டதாக’ பிள்ளை உணரக்கூடும். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி குறிப்பிடுவது, தான் அவசியமில்லாமல் தாழ்த்தப்படுவதாகப் பிள்ளை உணரக்கூடும். இது பிள்ளை மனமுறிந்து, பெற்றோரிடமிருந்தோ குடும்பத்திலுள்ள மற்றப் பிள்ளைகளிடமிருந்தோ தன் உறவை தொலைவாக்கிக் கொள்வதில் விளைவடையக்கூடும். ஒரு தவறான மாதிரி போக்கு தோன்றி வளருகிறதைப் பற்றி பெற்றோர் கவலையாக இருக்கிறார்களென்றால் அப்பொழுது இந்தக் காரியம் பின்னால் குடும்ப கலந்தாலோசிப்பில் கையாளப்படலாம். கடந்த கால செயல்களை வெறுமென எடுத்து ஓதிக் கொண்டும் திரும்பத் திரும்ப நினைப்பூட்டிக் கொண்டும் இருப்பதற்குப் பதிலாக, உட்பட்ட நியமங்களையும், அவை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கப்படுகின்றன, நிலையான சந்தோஷத்திற்கு அவை ஏன் அவ்வளவு முக்கியமானவை என்பவற்றைச் சிந்தியுங்கள்.

சிட்சிப்பதற்கு வெவ்வேறுபட்ட வழிகள்

26“மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.” (நீதிமொழிகள் 17:10) வெவ்வேறு பிள்ளைகளை வெவ்வேறுபட்ட முறைகளில் சிட்சிக்க வேண்டியதாயிருக்கலாம். தனிப்பட்ட பிள்ளையின் உணர்ச்சியியல்பும் மனப்போக்கும் கருதப்படவேண்டும். ஒரு பிள்ளை எளிதில் புண்படக்கூடியதாயிருக்கலாம், அடித்தல் போன்ற உடல் சம்பந்தப்பட்ட தண்டனை அதற்கு ஒருவேளை எப்பொழுதும் அவசியமாயிராது. மற்றொரு பிள்ளையைக் குறித்ததில் அடித்தல் பலன் தரத்தக்கதாயிராது. அல்லது ஒரு பிள்ளை, நீதிமொழிகள் 29:19-ல் விவரிக்கப்பட்ட அடிமையைப்போல், “சிட்சிக்கப்படுவது வார்த்தையாலல்ல, அவன் அதை அறிந்தாலும் அடங்கான்,” என்பதாக இருக்கலாம். இப்படிப்பட்ட பிள்ளையுடைய காரியத்தில் அதற்கு உடல் சம்பந்தப்பட்ட தண்டனை தேவையாயிருக்கும்.

27ஒரு தாய் பின்வருமாறு அறிவித்தாள்:

“இன்னும் முழுமையாய் இரண்டு வயதையடையாதிருந்த என் மகன் சுவரில் எழுதினபோது—அதாவது தரைக்குச் சற்று உயரத்தில் ஏதோ சிவப்புக் குறிகளைக் கிறுக்கினபோது அவனுடைய தகப்பன் அவற்றை அவனுக்குக் காண்பித்து அதைப் பற்றி அவனைக் கேட்டார். அவருக்குக் கிடைத்த பதிலெல்லாம் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததேயாகும், ஆம் அல்லது இல்லை என்ற எந்தப் பதிலும் வரவில்லை. கடைசியாக அவனுடைய தகப்பன், ‘மகனே உனக்குத் தெரியுமா, நான் ஏறக்குறைய உன்னுடைய வயதாயிருக்கையில் நான் சுவரில் எழுதினேன். இது ஒரு வகையான விளையாட்டாக இருக்கிறதல்லவா?’ என்றார். இப்பொழுது சிறுவனின் விறைப்பு தணிந்தது, அவனுடைய முகம் புன்சிரிப்புகளால் மலர்ந்தது, அது எவ்வளவு விளையாட்டாக இருந்தது என்பதன் பேரில் ஆர்வமிகுந்த ஓர் உரையாடலைத் தொடங்கிவிட்டான். அப்பாவுக்கு விளங்கினதென்று அவன் அறிந்தான்! என்றபோதிலும், அது விளையாட்டாக இருந்தாலுங்கூட, சுவர்கள் கிறுக்குவதற்கான இடமல்ல என்று அவனுக்கு விளக்கப்பட்டது. பேச்சுத் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இந்தப் பிள்ளைக்குத் தேவையாக இருந்ததெல்லாம், காரணத்தோடு கூடிய மேலுமான சிறிது விளக்கமேயாகும்.”

28சிட்சை செய்கையில், கற்பித்து வழிநடத்தும்படி காரணங்களைக் கொடுப்பது சிறந்தது, ஆனால் பிள்ளையுடன் தர்க்கிப்பது சாதாரணமாய் உசிதமானதல்ல. ஒரு தாய் தன்னுடைய பிள்ளை ஏதோ ஒரு வேலை செய்வதைப் பற்றி தர்க்கித்தபோது வெறுமென பின்வருமாறு கூறினாள்: “அதை நீ செய்து முடித்த பின்பு நாம் பூங்காவுக்குப் போவோம்,” இது அந்த நாளில் அந்தச் சிறுபிள்ளைக்கு கொடுக்கப்போகிற ஓர் இன்ப சலுகையாக இருந்தது. கொடுக்கப்பட்ட அந்த வேலை செய்து முடிக்கப்படும் வரையில் ஏதோ இன்பம் அல்லது இன்பப் பயணம் நிறுத்தி வைக்கப்படும். செய்து முடிக்கப்பட்டதாவென்று தாய் திரும்ப வந்து பார்க்கையில், இன்னும் முடிக்கப்படாதிருந்தால், அவள், “இன்னும் முடிக்கப்படவில்லையா? நீ முற்றிலும் முடித்த பின்பு நாம் போவோம்,” என்று சொல்லுவாள். அவள் தர்க்கிக்கவில்லை, என்றாலும் அவளுக்குப் பலன்கள் கிடைத்தன.

29தவறான செயல்களின் விரும்பத்தகாத விளைவுகளை உணருவது சரியான நியமங்களின் ஞானத்தைக் கற்றுக் கொள்ள பிள்ளைகளுக்கு உதவி செய்யக்கூடும். பிள்ளை ஓர் இடத்தை அழுக்காக்கியதா? அவனையே அதைச் சுத்தம் செய்ய வைப்பது ஒருவேளை அதை அவன் மனதில் திடமாய்ப் பதியவைக்கும். அவன் நேர்மையற்றவனாக அல்லது அவமரியாதையாக நடந்துகொண்டானா? வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்கக் கற்றுக்கொள்வது தவறான போக்கைத் திருத்திக் கொள்ள மிக அதிகத்தைச் செய்யக்கூடும். ஒரு நொடி கோபத்தில் அவன் ஏதோவொன்றை உடைத்திருக்கக்கூடும். அவன் போதிய வயதானவனாக இருக்கிறானென்றால், அதற்குப் பதிலாக வேறொன்றை வாங்கி வைக்க அந்தப் பணத்தைச் சம்பாதிக்கும்படி அவன் கட்டளையிடப்படலாம். சில பிள்ளைகளுடைய காரியத்தில், சிறிது காலத்திற்கு ஏதோ சில சிலாக்கியங்களை மறுப்பது தேவையான பாடத்தை மனதில் பதிய வைக்கக்கூடும். கிறிஸ்தவ சபையில் சிநேகப் பான்மையான கூட்டுறவை விலக்குவது, குற்றஞ்செய்யும் சிலரை வெட்கப்பட செய்வதற்கு உபயோகப்படுத்துகிற ஒரு வழியாய் இருக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 3:6, 14, 15) இளைஞரைக் குறித்ததில், குடும்பக் கூட்டுறவிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைத்தல், அடியைப் பார்க்கிலும் அதிக பலன் தரத்தக்கதாய் இருக்கக்கூடும். பிள்ளையை வீட்டுக்கு வெளியில்விட்டு கதவைப் பூட்டுவது போன்ற மட்டுக்குமீறிய தண்டனைகள், அன்பு கட்டளையிடுவதற்கு மேலாக மீறிப் போவதாயிருக்கிறது. என்ன முறை உபயோகப்படுத்தப்பட்டாலும், பிள்ளைகள் தங்கள் நடத்தைக்குரிய விளைவுகளைச் சுமக்கவேண்டுமென்பது அவர்களுக்கு காட்டப்படவேண்டும். இது அவர்களுக்குப் பொறுப்பைக் கற்பிக்கிறது.

அன்பால் சிட்சியுங்கள்

30“மேலிருந்து வருகிற ஞானம் . . . நியாயமுள்ளது,” என்பதை மனதில்வைத்து “அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.” (பிலிப்பியர் 1:10; யாக்கோபு 3:17, NW) விடுபட வழிதேடிக் கொண்டிருக்கும், நிறைய சக்தி நிரப்பப்பட்ட பொதியுறைகளைப் போல் இளம் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும், புதிய காரியங்களைக் கற்றுக்கொள்ளவும் தேடி கண்டுபிடிக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்களென்பதையும் நினைவில் வையுங்கள். கட்டுப்பாடுகளையும் வழிகாட்டும் எல்லைகளையும் வைக்கையில் நல்ல நியாயமான தன்மையைக் காட்டி தெரிந்தெடுக்கும் பாங்குடையவர்களாக இருங்கள். எது முக்கியமானது எது முக்கியமானதல்ல என்பதற்கிடையே ஒரு சமநிலை வைக்கப்படவேண்டும். கட்டுப்பாட்டு எல்லைகளைத் தெரியப்படுத்தின பின்பு ஒவ்வொரு சிறு சிறு நுட்ப காரியங்களையும் அடக்கியாள முயலுவதற்கு மாறாக, அந்த எல்லைகளுக்குள் பிள்ளை தாராளமாயும் நம்பிக்கையுடனும் நடந்து இன்பமனுபவிக்க அனுமதியுங்கள். (நீதிமொழிகள் 4:11, 12) மற்றபடி உங்கள் பிள்ளைகள் ‘எரிச்சலுண்டாக்கப்பட்டவர்களாக’ ‘மனந்தளர்ந்து போவார்கள்’ நீங்களும் உண்மையில் அதிக முக்கியத்துவமில்லாத காரியங்களைப் பெரிய காரியங்களாகப் பொருட்படுத்திக் கொள்வதன் காரணமாகச் சோர்வுற்றுப் போயிருப்பதாக உங்களைக் காண்பீர்கள்.—கொலோசெயர் 3:21.

31ஆகையால் பெற்றோரே, “நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் [மகளைச்] சிட்சை செய்”யுங்கள், ஆனால் கடவுளுடைய முறையாகிய அன்பால் சிட்சியுங்கள். அவருடைய மாதிரியைப் பின்பற்றுங்கள்: “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல கர்த்தரும் [யெகோவாவும் தி.மொ.] எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” உங்கள் சிட்சை, உங்கள் சிருஷ்டிகருடைய சிட்சையைப் போல் உயர் மதிப்புள்ளதாயும் அன்புள்ளதாயும் இருக்கச் செய்யுங்கள், ஏனெனில் இப்படிப்பட்ட “போதக சிட்சையே ஜீவ வழி.”—நீதிமொழிகள் 19:18; 3:12; 6:23.

[கேள்விகள்]

1. தன்னுடைய பிள்ளைகள் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் என்ன அவசியமாயிருக்கிறது?

2. பிள்ளை சம்பந்தப்பட்ட உளநூல் வல்லுநரின் கருத்துக்கள் எப்படிப் பைபிளின் ஆலோசனைக்கு முரண்படுகிறது?

3, 4. வீட்டில் சரியான சிட்சை கொடுக்கப்படாதது எதில் விளைவடைந்திருக்கிறது? ஆகையால் பலர் எதைச் சிபாரிசு செய்கிறார்கள்?

5. அடிப்பதைப் பற்றியதில் பைபிளின் கருத்து என்ன?

6. சிட்சையில் அடங்கியிருப்பதென்ன?

7. பெற்றோரால் சிட்சிக்கப்படுவதனால் உண்டாகும் பலன்கள் யாவை?

8. பெற்றோர் எப்படி அன்பால் சிட்சிக்கக்கூடும்?

9. நீதிமொழிகள் 6:20-23-க்கு இசைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்?

10. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சிட்சிக்கத் தவறுகையில் என்ன நேரிடக்கூடும்?

11. பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடுகளை வைப்பது ஏன் அவசியம்?

12. சுய-கட்டுப்பாடு ஏன் முக்கியமாயிருக்கிறது, இதைத் தங்களில் வளர்த்து முன்னேற்றுவிக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்யக்கூடும்?

13. தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் கட்டுப்பாடுகளை வைக்கையில் பெற்றோர் மனதில் வைத்திருக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் யாவை?

14. பெற்றோருடைய கட்டளைக்குப் பிள்ளைகள் கீழ்ப்படியாதிருக்கையில், பெற்றோருடைய பங்கில் ஏன் உறுதி முக்கியமானதாய் இருக்கிறது?

15. வழிகாட்டும் கட்டுப்பாடுகளை நடைமுறையில் செலுத்துவதில் பெற்றோர் உறுதியற்று மாறுபடுகிறவர்களாக இருக்கையில் பிள்ளைகள் எப்படிப் பாதிக்கப்படக்கூடும்?

16. நியாயமற்ற கட்டளைகளைக் கொடுப்பதைத் தவிர்க்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்?

17. வேலையையும் விளையாட்டையும் பற்றிய என்ன கருத்தைப் பிள்ளைகள் மதித்துணருகிறவர்களாக வேண்டும்?

18. கூட்டுறவுகள் பிள்ளைகளை எப்படிப் பாதிக்கக்கூடும்?

19. வீட்டைத் தங்கள் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிக்குரிய ஓர் இடமாக்கி வருகிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும்படி பெற்றோர் தங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்த்துக் கொள்ளக்கூடிய சில காரியங்கள் யாவை?

20, 21. வீட்டில் ஒரு டெலிவிஷன் இருக்கிறதென்றால், பெற்றோர் என்ன பொறுப்பை ஏற்க வேண்டும்? ஏன்?

22. தங்கள் பெற்றோர் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளைப் பிள்ளைகள் விளங்கிக் கொள்வது ஏன் முக்கியமாய் இருக்கிறது?

23. ஒரு குறிப்பிட்ட நடத்தைப் போக்கின் சரியான தன்மையைக் காண பிள்ளைகளுக்கு உதவி செய்வதில் எதையும் உள்ளடக்க வேண்டியதாய் இருக்கலாம்?

24. அதிகாரத்திற்கு மரியாதை கொடுப்பது ஒரு பிள்ளைக்கு ஏன் முக்கியமானது?

25. தங்கள் பிள்ளைகளைச் சரியான முறையில் சிட்சிக்க நீதிமொழிகள் 17:9-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை எப்படி உதவி செய்யக்கூடும்?

26. ஒரே வகையான சிட்சைக்கு எல்லாப் பிள்ளைகளும் ஏன் விரும்பத்தக்க முறையில் பிரதிபலிக்கிறதில்லை?

27. சுவரில் கிறுக்குவதை நிறுத்த தன் சிறு பையனுக்கு ஒரு தகப்பன் எப்படி உதவி செய்தார்?

28. பிள்ளையுடன் தர்க்கிப்பதைப் பெற்றோர் எப்படித் தவிர்க்கலாம்?

29. தன்னுடைய தவறான செயலின் விரும்பத்தகாத விளைவுகளை ஒரு பிள்ளை உணரும்படி செய்ய என்ன செய்யலாம்?

30. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் எல்லைகளை வைக்கையில் சமநிலை ஏன் முக்கியமானது?

31. சிட்சை கொடுப்பதில் யெகோவா தேவன் என்ன முன்மாதிரியை வைத்திருக்கிறார்?