Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பு, “ஒற்றுமையின் பரிபூரண கட்டு”

அன்பு, “ஒற்றுமையின் பரிபூரண கட்டு”

அதிகாரம் 6

அன்பு, “ஒற்றுமையின் பரிபூரண கட்டு

‘இரவு உணவை நாம் ஏன் எப்போதுமே நேரத்தில் சாப்பிடக்கூடாது?’ என்று அவள் கணவன், பகல் முழுவதும் கடினமாய் உழைத்து சோர்வுற்றவனாயும், காத்துக் காத்துக் களைத்துப் போனவனாயும் எரிச்சலோடு சொன்னான்.

2‘குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். உணவு ஏறக்குறைய தயாராகிவிட்டது,’ என்று அவள் ஆத்திரத்துடன் பதில் சொன்னாள். அவளுடைய நாளுங்கூட சுலபமாக இருக்கவில்லை.

3‘ஆனால் நீ எப்பொழுதும் பிந்தித்தான் செய்கிறாய். என்றாவது நீ நேரத்தில் செய்யக்கூடாதா?’

4‘அது உண்மையல்ல!’ என்று அவள் கத்தினாள். ‘ஏதோ ஒரு நாளாவது பிள்ளைகளைக் கவனிக்க நீங்கள் முயற்சி செய்வீர்களானால், இவ்வளவு அதிகமாய் முறையிடமாட்டீர்கள். எப்படியும், அவர்கள் உங்களுடைய பிள்ளைகளும் தானே.’

5இவ்வாறாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட துன்னெலிப் புற்றைப் போன்ற இந்தச் சிறிய காரியம் மலையளவு பெரியதாக வளர்ந்து அவர்கள் இருவரையும் கோபமாய் ஒருவருக்கொருவர் பேசாத நிலையில் விடுகிறது. இருவரும் பதிலுக்குப் பதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர், கடைசியில் இருவரும் புண்படுத்தப்பட்டவர்களாக மனக்கசப்படைகின்றனர். அவர்களுடைய அந்தச் சாயங்காலம் கெடுக்கப்பட்டுப் போயிற்று. படிப்படியாய் எழும்பிய இந்நிலையை அவர்களில் எவராவது ஒருவர் தவிர்த்திருக்கலாம். அது நடந்தபடி, இருவரும் அவரவருடைய சொந்த உணர்ச்சிகளின் பேரிலேயே மட்டுக்கு மீறி மனதை ஊன்ற வைத்திருந்தார்களே தவிர தங்கள் துணையின் உணர்ச்சிகளைக் கவனிக்க மறந்தவர்களாக இருந்தனர். ஒன்றோடொன்று தேய்ந்த நரம்பு சடக்கென்று அறுவது போல் அவர்கள் நிலை ஆயிற்று.

6இப்படிப்பட்ட பிரச்னைகள் வாழ்க்கையின் பல பகுதிகளில் எழும்பக்கூடும். அவை பணம் உட்பட்டவையாக இருக்கலாம். அல்லது தான் மற்ற ஆட்களின் கூட்டுறவை அனுபவித்து மகிழவிடாதபடி, அல்லது தன் மனைவி மட்டுக்கு மீறி தன்னை அவளுக்கு மட்டுமே உரியவனாகக் கட்டுப்படுத்துகிறவளாக இருக்கிறாள் என்பதாய் கணவன் உணரக்கூடும். மனைவி ஒருவேளை தான் கவனியாமல் விடப்படுவதாகவும், அக்கறையில்லாமல் ஏதோ அந்நேரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறவளாக இருப்பதாயும் உணரக்கூடும். ஒருபெரிய பிரச்னையின் அல்லது பல சிறிய பிரச்னைகளின் காரணமாக மன அமைதிக் குலைவு இருந்துவரக்கூடும். காரியம் என்னவாக இருந்தாலும் சரி, தற்போது நம்முடைய அக்கறையானது இந்தச் சந்தர்ப்ப நிலையை எப்படி எதிர்ப்பட்டு மேற்கொள்வது என்பதே. விவாகத்துணைவரில் ஒருவராவது, ‘மறுகன்னத்தைத் திருப்பிக் கொடுக்க’ மனமுள்ளவராக இருப்பதன் மூலம், ‘தீமைக்குத் தீமை செய்யாமல்’ அதற்குப் பதிலாக ‘தீமையை நன்மையினாலே வெல்லுவதற்கு’ மனமுள்ளவராக இருப்பதன் மூலம் இவ்வாறு மனஸ்தாபத்தை உண்டாக்குவதை நோக்கிப் படிப்படியாய் எழும்பும் போக்கைத் தடுத்து நிறுத்தக்கூடும். (மத்தேயு 5:39; ரோமர் 12:17, 21) இதைச் செய்வதற்குத் தன்னடக்கமும் முதிர்ச்சியும் வேண்டியதாயிருக்கிறது. கிறிஸ்தவ அன்பு வேண்டியதாயிருக்கிறது.

அன்பு உண்மையில் எதைக் குறிக்கிறது

7எது அன்பு எது அன்பு அல்ல என்று 1 கொரிந்தியர் 13:4-8-ல் கொடுக்கப்பட்டுள்ள விதி முறைகளில், அன்பின் பொருள் விளக்கத்தை யெகோவா தேவன் ஏவினார். அதாவது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

8அன்புக்குப் பல காரியங்கள் அடிப்படையாக இருக்கலாம்—உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சி, குடும்ப உறவு அல்லது மற்றொருவரின் தோழமையை ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் அனுபவித்தல் ஆகியவை. ஆனால் அன்பு உண்மையான மதிப்புள்ளதாயிருக்க, பாசத்திற்கும் அல்லது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள கவர்ச்சிகரத்திற்கும் அப்பால் சென்று, நேசிக்கப்படுகிறவரின் மிக உயர்ந்த நன்மைக்கேதுவாகச் செல்வாக்கு செலுத்துவதாயிருக்க வேண்டும். இந்த வகையான அன்பானது பெற்றோர் ஒருவர் தன் பிள்ளையைக் கையாளுவதைப்போல் அல்லது யெகோவா தேவன் தம்முடைய வணக்கத்தாரைக் கையாளுவதைப் போல் கண்டித்தலை அல்லது சிட்சித்தலையுங்கூட தேவைப்படுத்துவதாக இருக்கலாம். (எபிரெயர் 12:6) உணர்ச்சிகளுக்கும் மனக்கிளர்ச்சிக்கும் அங்கே இடம் உண்டு என்பது உண்மைதான், என்றபோதிலும் மற்றவர்களைக் கையாளுகையில் ஞானமான தீர்ப்பை அல்லது சரியான நியமங்களை ஒதுக்கித் தள்ள இவை அனுமதிக்கப்படுகிறதில்லை. இந்த வகையான அன்பு எல்லாரையும், சிறந்த நியமங்களாகிய பரிவோடும் நியாயத்தோடும் நடத்தும்படி ஒருவனைத் தூண்டி இயக்குகிறது.

9இது நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கு எப்படி நன்மை பயக்கக்கூடுமென்பதை மேலுமதிக நிறைவாய் மதித்துணர 1 கொரிந்தியர் 13:4-8-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை மேலுமதிக நுட்பமாய் நாம் ஆழ்ந்து ஆலோசிக்கலாம்.

10“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.” நீங்கள் உங்கள் துணைவரிடம் நீடிய சாந்தமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? சந்தர்ப்ப நிலை கோபமூட்டுவதாயிருக்கையில், ஒருவேளை நியாயமில்லாமல் குற்றஞ்சாட்டப்படுகையில், நீங்கள் தன்னடக்கத்தைப் பிரயோகிக்கிறீர்களா? யெகோவா நம்மெல்லாருடனும் நீடிய சாந்தமுள்ளவராக இருக்கிறார்; மேலும் ‘கடவுளுடைய தயவான பண்பு, மனந்திரும்பும்படி ஆட்களை வழிநடத்த முயன்று கொண்டிருக்கிறது.’ நீடிய சாந்தமும் தயவுமாகிய இவ்விரண்டுமே கடவுளுடைய ஆவியின் கனிகள்.—ரோமர் 2:4, NW; கலாத்தியர் 5:22.

11அன்பு தவறு செய்தலை அங்கீகரிக்கிறதில்லை, ஆனால் அது ‘குற்றங்கண்டுபிடிப்பதாய்’ இராது. அது பொறுமையற்றதாயிராது. மன்னிக்கக்கூடிய சந்தர்ப்ப நிலைகளை அது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுகிறது. (1 பேதுரு 4:8; சங்கீதம் 103:14; 130:3, 4) மேலும் பார கவலைக்கேதுவான காரியங்களிலுங்கூட மன்னிப்பையளிக்க அது தயாராயிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவிடம் பின்வருமாறு கேட்கையில் தான் நீடிய சாந்தமுள்ளவனாக இருந்திருப்பதாய் எண்ணினான்: “என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரம் மட்டுமா?” இதற்கு இயேசு: “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்,” என்று பதிலளித்தார். (மத்தேயு 18:21, 22; லூக்கா 17:3, 4) அன்பு திரும்பத் திரும்ப மன்னிக்கிறது, முடிவில்லாமல் தயையுள்ளதாயிருக்கிறது. நீங்கள் இவ்வாறு செய்கிறீர்களா?

12“அன்புக்குப் பொறாமையில்லை.” மெய்யான காரணமில்லாமல் பொறாமையுள்ளவராயிருக்கும் ஒரு துணையோடு வாழ்வது கடினம். இப்படிப்பட்ட பொறாமை சந்தேக மனப்பான்மையுடையதாயிருக்கிறது, மட்டுக்கு மீறி உடைமை பாராட்டுகிறது. இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது, மேலும் அந்த மற்றவர் வேறு ஆட்கள் மத்தியிலிருக்கையில் இயல்பான நிலையிலும் சிநேகப்பான்மையுடனும் இருப்பதைத் தடுத்து வைக்கிறது. பொறாமையுடன் வற்புறுத்திக் கேட்பதைத் திருப்தி செய்வதனால் அல்ல, தாராளமாய்க் கொடுப்பதினாலேயே சந்தோஷம் உண்டாகிறது.

13“பொறாமையோவென்றால் அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?” என்று பைபிள் கேட்கிறது. இது அபூரண மாம்சத்தின் கிரியைகளில் ஒன்றாயிருக்கிறது. (நீதிமொழிகள் 27:4; கலாத்தியர் 5:19, 20) பாதுகாப்பற்ற உணர்ச்சியிலிருந்து விளைந்து, கற்பனையால் ஊட்டப்படுகிற இந்த வகையான பொறாமைக்குரிய ஏதாவது குறிகளை உங்களில் நீங்கள் கண்டுபிடிக்கக்கூடியவர்களாக இருக்கிறீர்களா? மற்றொரு ஆளில் குறைகளைக் காண்பது சாதாரணமாய்க் கடினமாக இருக்கிறதில்லை, ஆனால் நம்மைநாமே ஆராய்ந்து பார்க்கையில் நாம் அதிகப்படியாய் நன்மையடைகிறோம். “பொறாமையும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.” (யாக்கோபு 3:16, தி.மொ.) பொறாமை விவாக வாழ்க்கையைப் பாழாக்கக்கூடும். பொறாமை கொண்ட கட்டுப்பாடுகளினால் உங்கள் துணையைப் பத்திரமாய்க் கைப்பற்றி வைக்க முடியாது, அன்புள்ள கவனிப்பும் ஆழ்ந்த பரிவும் நம்பிக்கையும் காட்டுவதன் மூலமே அவ்வாறு செய்யக்கூடும்.

14“அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.” பலர் இவ்வாறு செய்கின்றனர் என்பது உண்மையே, என்றாலும் தற்பெருமையான பேச்சைக் கேட்க ஒருசிலரே விரும்புகின்றனர். உண்மையில் அந்தத் தற்பெருமையாளரை நன்றாய் அறிந்திருக்கிற எவருக்கும் அது மன சங்கடத்தையே உண்டுபண்ணுவதாயிருக்கும். சிலர் தங்களைப் பற்றித் தாங்களே தற்புகழ்ச்சியான முறையில் பேசுவதன் மூலம் வீண் பெருமை பாராட்டுகையில், மற்றவர்கள் இதே காரியத்தை வேறொரு முறையில் சாதிக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைக் குற்றங்கண்டுபிடித்து, அவர்களைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். இவ்வாறு தங்களோடு ஒப்பிடுகையில், இது அவர்களைத் தங்கள் தாக்குதலுக்காளானவர்களுக்கு மேலாக உயர்த்துவதாயிருக்கிறது. ஆகவே, மற்றவர்களைத் தாழ்த்துவதன் மூலம் ஒருவன் தன்னை உயர்த்தக்கூடும். தன் துணையைச் சிறுமைப்படுத்துவதானது, உண்மையில் தன்னைப் பற்றித்தானே தற்பெருமை பேசுகிற ஒரு வழியாக இருக்கிறது.

15உங்கள் துணையின் குறைபாடுகளைப் பற்றி யாவர் முன்னும் வெளிப்படையாய்ப் பேசுகிறவர்களாக உங்களை நீங்கள் என்றாவது கண்டிருக்கிறீர்களா? இது உங்கள் துணை எப்படிப்பட்ட உணர்ச்சியடையும்படி செய்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பேசப்பட்டவர் நீங்களாக இருந்து உங்களுடைய குறைகள் யாவர் முன்னும் வெளிப்படுத்தப்பட்டிருக்குமானால் எப்படியிருந்திருக்கும்? நீங்கள் எப்படிப்பட்ட உணர்ச்சியடைந்திருப்பீர்கள்? நேசிக்கப்பட்டவர்களாக உணர்ந்திருப்பீர்களா? இல்லை, அன்பு “தன்னைப் புகழாது,” தன்னைத்தானே புகழுவதன் மூலமோ, மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதன் மூலமோ அவ்வாறு செய்யாது. உங்கள் துணையைப் பற்றிப் பேசுகையில், கட்டியெழுப்புகிறவர்களாக இருங்கள்; இது உங்களிருவருக்குள்ள அன்பிணைப்பைப் பலப்படுத்தும். மேலும் உங்களைப் பற்றிச் சொல்வதைக் குறித்ததில், நீதிமொழிகள் 27:2-ல் காணப்படுகிற பின்வரும் புத்திமதியைப் பொருத்திப் பிரயோகியுங்கள்: “உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.”

16அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது.” விபசாரம், குடிவெறி, கோபாவேசங்கள் ஆகியவற்றைப் போன்ற பல காரியங்கள் முனைப்பாக அயோக்கியமானவையாய் இருக்கின்றன. (ரோமர் 13:13) அன்புக்கு எதிர்மாறாக, இவையெல்லாம் விவாக இணைப்புக்குச் சேதத்தை உண்டுபண்ணுகின்றன. முரட்டுத்தனம், இழிவான பேச்சும் செயல்களும், அதோடுகூட தனிப்பட்ட உடல் சுத்தத்தை அலட்சியம் செய்தல், ஆகிய இவையெல்லாம் மனித யோக்கியக்குறைவைக் காட்டுகின்றன. இதைக் குறித்ததில் உங்கள் துணையின் உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தவிர்க்க நீங்கள் எவ்வளவு கவனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? நீங்கள் அவரை அல்லது அவளை பரிவோடு கூடிய முன்யோசனையுடனும், நல்லொழுக்க நடைமுறைகளுடனும், மரியாதையுடனும் நடத்துகிறீர்களா? இவையெல்லாம் விவாக வாழ்க்கை சந்தோஷமுள்ளதாய் நீடித்திருப்பதற்கு உதவி செய்கின்றன.

17அன்பு “தற்பொழிவை நாடாது, சினமடையாது.” அது தன்னலத்திலேயே கருத்தூன்றியதாயிராது. இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த விவாகத் துணைவர்கள் இவ்வாறு இருந்திருப்பார்களென்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இரவு உணவு பிந்திவிட்டதால் கணவன் தன் மனைவியிடம் சீறி விழுந்திருக்கமாட்டார், அவளும் ஆத்திரத்தோடு பதில் சொல்லியிருக்கமாட்டாள். கணவர் எரிச்சலடைந்ததன் ஒரு காரணம் அவர் களைப்பாயிருந்ததே என்பதை மனைவி யூகித்துணர்ந்திருப்பாளாகில் அவள் கோபமூளுவதற்குப் பதிலாக, ‘உணவு ஏறக்குறைய தயாராகிவிட்டது. வேலையில் இன்று உங்களுக்குக் கடினமான நாளாக இருந்திருக்கலாம், மேசையில் உணவுக்கு வேண்டியவற்றை நான் எடுத்து வைக்கையில், குடிப்பதற்கு ஒரு குவளை குளிர்ந்த பழரசபானம் உங்களுக்குக் கொடுக்கிறேன்,’ என்று பதிலளித்திருக்கலாம். அல்லது கணவர் இன்னும் கொஞ்சமதிகமாய் விளங்கிக் கொள்பவராக இருந்து, தன்னைப்பற்றி மாத்திரமே நினைத்துக் கொண்டிருந்திராவிட்டால், அவர் தான் உதவி செய்வதற்கு ஏதாவது இருக்கிறதாவென்று கேட்டிருந்திருக்கலாம்.

18உங்கள் துணை சொல்லுகிற அல்லது செய்கிற ஏதோவொன்றால் நீங்கள் எளிதில் கோபமடைகிறீர்களா, அல்லது அந்த வார்த்தை அல்லது செயலுக்கு பின்னாலுள்ள நோக்கத்தைத் தெளிந்துணர்ந்து கொள்ள முயலுகிறீர்களா? அது ஒருவேளை அறியாமல், யோசியாமல் வெறுமனே சொல்லப்பட்டதாக இருக்கலாம், புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு அன்பிருக்குமானால் ‘உங்களுடைய எரிச்சலடைந்த நிலையில் சூரியன் அஸ்தமிக்க விடமாட்டீர்கள்.’ (எபேசியர் 4:26) மன அமைதி குலைந்த ஓர் உணர்ச்சியில் உங்கள் துணை உங்களுக்கு வருத்தமுண்டாக்கவேண்டுமென்றே ஏதோவொன்றைச் சொன்னார் அல்லது செய்தார் என்றால் என்ன செய்வது? கோபம் தணியும் வரையில் காத்திருந்து அதன் பின்பு கலந்து பேசலாமல்லவா? இருவருடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கானவற்றை இருதயத்தில் வைத்து இந்தச் சந்தர்ப்ப நிலைமையை அணுகுவது சரியான காரியத்தைச் சொல்லும்படி உங்களுக்கு உதவி செய்யும். “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்.” “குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்,” மேலுமாகச் சண்டையைத் தூண்டிவிடுகிறதில்லை. (நீதிமொழிகள் 16:23; 17:9) ஒரு தர்க்கத்தைத் தொடர்ந்து உங்களைச் சரியென்று நிரூபிக்க வேண்டுமென்ற உள்ளத் தூண்டுதலை எதிர்த்துப் போராடி அமர்த்துவதன் மூலம், அன்பின் சார்பாக நீங்கள் வெற்றியடையக்கூடும்.

19உண்மையான அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” தன்னுடைய நேரத்தை உபயோகிப்பதைக் குறித்ததிலோ, பணத்தைச் செலவிடுவதிலோ, தன்னுடைய கூட்டுறவு சம்பந்தப்பட்டதிலோ, தன்னுடைய துணையை ஏமாற்றுவது புத்தி சாதுரியம் என்று அது எண்ணுகிறதில்லை. நீதியுள்ளவராகத் தோன்றும்படி அது பாதி உண்மைகளைப் பயன்படுத்துகிறதில்லை. நேர்மையில்லாமை நம்பிக்கையை அழித்துவிடுகிறது. உண்மையான அன்பு இருப்பதற்கு, நீங்கள் இருவரும் ஒருவரோடுடொருவர் சத்தியத்தைப் பேசுவதில் மகிழ்ச்சியடைய வேண்டும்.

உண்மையான அன்புக்கு பலமும் சகிப்புத்தன்மையும் உண்டு

20அன்பு “சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” விவாக வாழ்க்கையின் நெருங்கிய உறவில் இருவரும் ஒருவருக்கொருவர் இசைந்து கொடுத்து தக்கவாறு பொருந்தி அமைய கற்றுவருகையில் அன்பின்மேல் வைக்கப்படுகிற அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அது தாங்கிக் கொள்ளுகிறது. கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள எல்லா ஆலோசனையையும் அது நம்புகிறது, மனமார்ந்த அக்கறையுடன் அதைப் பொருத்திப் பிரயோகிக்கிறது, சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் சாதகமாயிராததுபோல் தோன்றுகிறபோதிலுங்கூட அவ்வாறு செய்கிறது. நேர்மையற்றத் தன்மையை மேற்கொள்ளுகிற ஆட்களிடம் செயல் தொடர்பு கொள்ளுகையில் எளிதில் ஏமாறிப் போகாதிருக்கையிலும், அன்பு தவறாக எதற்கெடுத்தாலும் சந்தேகங்கொள்ளுகிறதாயிராது. அதற்கு மாறாக, அது நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் அது மிகச் சிறந்த நன்மைக்கேதுவான நம்பிக்கையுடையதாயிருக்கிறது. இப்படிப்பட்ட நம்பிக்கையானது, பைபிளின் ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பது, தன்னால் கூடிய மிகச் சிறந்த பலன்களைத் தருமென்ற உறுதியான நம்பிக்கையின்மேல் ஆதாரங்கொண்டிருக்கிறது. இவ்வாறு, அன்பானது எதிலும் நலனை எதிர்பார்க்கிறதாகவும், நன்மையைக் காண்கிறதாகவும், முன்னோக்குள்ளதாகவும் இருக்கக்கூடும். மேலும் அன்பு அடிக்கடி மாறும் இயல்புள்ளதல்ல, கடந்துபோகும் தீவிர காமம் அல்ல. உண்மையான அன்பு சகித்து நிலைத்திருக்கிறது, வாழ்க்கைப் போக்கு கடினமாயிருக்கையில் பிரச்னைகளைத் தாங்கி சமாளிக்கிறது. அதற்குச் சோர்வுறா ஆற்றல் இருக்கிறது. அது பலமுள்ளதாயிருக்கிறது; என்றாலும் அதன் எல்லாப் பலத்தோடும் அது தயவுள்ளதாயும், கனிவுள்ளதாயும், பணிந்து கொடுப்பதாயும், கூடி வாழ்வதற்கு எளிதாயும் இருக்கிறது.

21இப்படிப்பட்ட “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” கடினமான காலங்கள் இந்த விவாகத் துணைவர்களைப் பண நெருக்கடிக்குள் ஆழ்த்துகிறதென்றால், என்ன நடக்கிறது? வேறு எங்கேயாவது சுலபமான ஒரு வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதைப் பற்றி எண்ணுவதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட அன்பையுடைய மனைவி, உண்மை தவறாதப் பற்றுடன் தன் துணைவரோடு நிலைத்திருந்து, சிக்கன முறையைக் கடைப்பிடிக்கவும் ஒருவேளை தன்னுடைய கணவனின் வருமானக் குறைவை துணைநின்று நிரப்பவும் முற்படுவாள். (நீதிமொழிகள் 31:18, 24) ஆனால் மனைவி ஏதோ ஒரு நோயால் தாக்கப்பட்டவளாகி அந்த நோய் வருடக்கணக்காய் நீடித்திருக்கிறதென்றால் எப்படி? இந்த வகையான அன்பையுடைய கணவன் அவளுக்குத் தேவையான கவனிப்பை அளிப்பதற்கும் அவள் இப்பொழுது செய்யக்கூடாமலிருக்கிற வீட்டு வேலையில் அவளுக்குத் உதவி செய்யவும், அவனுடைய தொடர்ந்த பற்றுறுதியை அவளுக்கு நிச்சயப்படுத்தவும் தன்னால் கூடியதையெல்லாம் செய்கிறான். இதைக் குறித்ததில் கடவுள் தாமே முன்மாதிரியை வைக்கிறார். தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் எந்தச் சூழ்நிலைமைக்குள் வந்தாலும் சரிதான், ‘அது தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது.’—ரோமர் 8:38, 39.

22இப்படிப்பட்ட ஓர் அன்புக்கு மேலாக எந்தப் பிரச்னைகள் மேம்படக்கூடும்? உங்கள் விவாக வாழ்க்கை இப்படிப்பட்ட அன்பையுடையதாயிருக்கிறதா? தனிப்பட்டவர்களாய் நீங்கள்தாமே இதைப் பழக்கமாய்ச் செயல்படுத்திவருகிறீர்களா?

அன்பை வளரச் செய்தல்

23அன்பு தசைநாரைப் போல், உபயோகத்தின் மூலம் பலப்படுத்தப்படுகிறது. மறுபட்சத்தில், அன்பு, விசுவாசத்தைப் போல், செயல்களில்லாமற்போனால் செத்ததாயிருக்கிறது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருக்கும் உணர்ச்சிகளால் நோக்கமளித்து தூண்டப்பட்ட வார்த்தைகளும் செயல்களும், நம்முடைய உள்நோக்கத் தூண்டுதலைப் பிரதிநிதித்துவம் செய்யும் இருதயத்திலிருந்து வருபவையாகச் சொல்லப்படுகின்றன. “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான்.” ஆனால் நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகள் பொல்லாதவையாக இருக்கிறதென்றால், “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்.”—மத்தேயு 12:34, 35; 15:19; யாக்கோபு 2:14-17.

24உங்கள் இருதயத்தில் என்ன எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நீங்கள் வளர்த்து வருகிறீர்கள்? கடவுள் அன்பைக் காட்டியிருக்கிற வழிகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற நாடுவீர்களானால் சிறந்த உள்நோக்கங்கள் பலப்படுத்தப்படும். இந்த அன்பை நீங்கள் எவ்வளவு அதிகமாய்ச் செயலில் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் அதற்கு இசைவாக நடந்தும் பேசியும் வருகிறீர்களோ அவ்வளவு அதிக ஆழமாய் அது உங்கள் இருதயத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். நாள்தோறும் சிறிய காரியங்களிலும் இதைச் செயல்படுத்தி வருவது இப்படிப்பட்ட அன்பை பழக்கமாக்கிவிடும். அப்பொழுது, ஏதோ ஒரு சில சமயங்களில் பெரிய பிரச்னைகள் எழும்புகையில் அவற்றை எதிர்த்து சமாளிக்க உங்களுக்கு உதவி செய்யும்படி இந்த அன்பு, உறுதியாய்ப் பலப்படுத்தப்பட்டதாக அங்கே இருக்கும்.—லூக்கா 16:10.

25உங்கள் துணையில் மெச்சத்தக்க ஏதோ ஒன்றை நீங்கள் கவனிக்கிறீர்களா? அதை வாய்விட்டுத் தெரிவியுங்கள்! ஓர் அன்புச் செயலை செய்யவேண்டுமென்ற உள்ளத்தூண்டுதல் உங்களுக்கு உண்டாகிறதா? அந்தத் தூண்டுதலுக்குக் கீழ்ப்படியுங்கள்! நாம் அன்பை அறுவடை செய்வதற்கு அன்பைக் காட்ட வேண்டும். இந்தக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்துவருவது உங்களையும் உங்கள் துணையையும் மேலும் மேலுமாக நெருங்க இணைத்துவரும். உங்கள் இருவரையும் ஒருவராக்கும். உங்கள் இருவருக்கும் இடையிலுள்ள அன்பை வளரச் செய்யும்.

26அன்பை வளர்க்க அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முதல் மனிதனாகிய ஆதாம், ஒரு பரதீஸில் வாழ்ந்தான். அவனுடைய உடல் சம்பந்தப்பட்ட தேவைகள் யாவும் அவனுக்கு ஏராளமாய் அருளப்பட்டிருந்தன. தொடக்கத்திலிருந்தே அவன் அழகால் சூழப்பட்டிருந்தான். அங்கே பசும்புல் வெளிகளும், பூக்களும், காடுகளும், ஆறுகளும் இருந்தது மட்டுமல்லாமல், பூமியைக் கவனித்துக் கண்காணிப்பவனாக ஆதாமின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த ஏராளமான பற்பலவகைப்பட்ட மிருகவர்க்கமும் இருந்தது. என்றபோதிலும் இந்த எல்லாம் இருந்தும் ஒரு தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது: அதாவது இந்த அழகு வாய்ந்த பரதீஸைப் பகிர்ந்து கொள்ள இன்னொரு மனித சிருஷ்டி இல்லாததே. கண்ணைக் கவர்ந்திழுக்கிற ஒரு சூரிய அஸ்தமனத்தை வியப்புடன் நீங்கள் எப்பொழுதாவது தனியே ஊன்றி கவனித்துக் கொண்டிருந்து இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள நீங்கள் நேசிக்கும் ஒருவர் அங்கே இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? அல்லது பரபரப்பூட்டுகிற நற்செய்தி உங்களுக்குக் கிடைத்து, ஆனால் அதைச் சொல்லி பகிர்ந்து கொள்வதற்கு ஒருவரும் இல்லையே என்பதாக இருந்திருக்கிறதா? யெகோவா தேவன் ஆதாமின் தேவையைத் தெளிவாக உணர்ந்து அவன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ளும்படி ஒரு துணையை அவனுக்குக் கொடுத்தார். பகிர்ந்துகொள்வது இரண்டு ஆட்களை ஒன்றாகக் கொண்டுவந்தது, அன்பு வேரூன்றி வளருவதற்கு உதவி செய்கிறது.

27விவாக வாழ்க்கையானது பகிர்ந்துகொள்வதேயாகும். ஒருவேளை இது தூரத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும் பாசமுள்ள ஒரு நொடிநேரப் பார்வையாக இருக்கலாம், அன்பாய்த் தொடுதலாக, கனிவான ஒரு வார்த்தையாக, ஒன்றுமே பேசாமல் ஒன்றாய் அமைதியுடன் உட்கார்ந்து கொண்டிருத்தலாகவுங்கூட இருக்கலாம். ஒவ்வொரு செயலும் அன்பை வெளிப்படுத்திக் காட்டக்கூடும், உதாரணமாக: படுக்கையை ஒழுங்கு செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், மனைவி விரும்புகிறதும் ஆனால் தங்கள் வரவுக்கு மிஞ்சினதாயிருப்பதன் காரணமாகக் கேட்காதிருப்பதுமான ஏதோவொன்றை வாங்குவதற்குச் சேர்த்துவைத்தல், அவனோ அவளோ வேலையில் பிந்திவிடுகையில் ஒருவருக்கொருவர் மற்றவரின் வேலையை முடிக்க உதவி செய்தல் ஆகியவை. அன்பானது, வேலையையும் விளையாட்டையும் துன்பங்களையும் இன்பங்களையும், நிறைவேற்றங்களையும் தோல்விகளையும், மனதின் எண்ணங்களையும் இருதயத்தின் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளுதலையே குறிக்கிறது. பொதுவான இலக்குகளைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாக சேர்ந்து அவற்றை அடையுங்கள். இதுவே இரண்டு ஆட்களை ஒன்றாக்குகிறது; இதுவே அன்பை வளரச் செய்கிறது.

28உங்கள் துணைக்குச் சேவை செய்வதானது அவர் மீதுள்ள உங்கள் அன்பு முதிர்ச்சியடைய உதவி செய்யும். மனைவியானவள், பொதுவாய் சாப்பாடு சமைப்பது, படுக்கைகளை ஒழுங்குபடுத்துவது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது, வீட்டு அலுவல்களைக் கவனிப்பது ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சேவை செய்கிறாள். கணவனானவன் அவள் சமைக்கிற உணவு, அவள் ஒழுங்குபடுத்துகிற படுக்கைகள், அவள் சுத்தம் செய்கிற அந்த வீடு, அவள் துவைக்கிற உடைகள் ஆகியவற்றிற்காக ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் சாதாரணமாய் சேவிக்கிறான். இந்தச் சேவையே, இவ்வாறு கொடுப்பதே, சந்தோஷத்தைக் கொண்டு வந்து அன்பை ஊட்டி வளர்க்கிறது. இயேசு சொன்னதுபோல், வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷமிருக்கிறது. அல்லது, சேவிக்கப்படுவதைப் பார்க்கிலும் சேவிப்பதிலேயே அதிக சந்தோஷம் உண்டு. (அப்போஸ்தலர் 20:35) “உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்,” என்று அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சென்னார். (மத்தேயு 23:11) இது எவ்வித போட்டிக்குரிய ஆவியையும் அகற்றி சந்தோஷமனப்பான்மை உண்டாயிருப்பதற்கு உதவி செய்யும். நாம் சேவை செய்கையில் நாம் தேவைப்படுகிறோம் என்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது, நாம் ஒரு நோக்கத்தை நிறைவேற்றுகிறோம், இது நமக்குச் சுயமரியாதையைக் கொடுத்து நம்மை மனதிருப்தியடையும்படி செய்கிறது. விவாக வாழ்க்கையானது, சேவை செய்யவும் இப்படிப்பட்ட மனதிருப்தியைக் கண்டடையவும் கணவனும் மனைவியுமாகிய இருவருக்குமே மிகுதியான வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் விவாகத்தை அன்பில் இன்னும் அதிக உறுதியாய் ஒன்றுபட இணைக்கிறது.

29இந்த விவாகத் துணைவர்களில் ஒருவர் கடவுளுடைய கிறிஸ்தவ ஊழியனாக, இந்தப் பைபிள் பூர்வ நியமங்களை நடைமுறையில் பயன்படுத்தி வருகிறவராய் இருக்கிறார், என்றாலும் அந்த மற்றத் துணை அவ்வாறு இல்லையென்றால் எப்படி? இது ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டிய முறையை மாற்றிவிடுகிறதா? அடிப்படையாய் மாற்றுகிறதில்லை. இந்தக் கிறிஸ்தவனின் பங்கில் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிப் பேசுவது ஒருவேளை அவ்வளவு அதிகமாய் இராது. என்றாலும் நடத்தை மாறுகிறதில்லை அதேவிதமாகவே இருக்கிறது. யெகோவாவை வணங்குகிற துணைக்கு இருக்கிற அதே அடிப்படையான தேவைகளே அந்த அவிசுவாசியான துணைக்கும் இருக்கின்றன, மேலும் சில காரியங்களில் விசுவாசியான துணையைப் போலவே பிரதிபலிக்கிறார். இது, ரோமர் 2:14, 15-ல் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதியார் இயற்கையால் நியாயப்பிரமாணத்திற்கிசைந்தவைகளைச் செய்யும்போது நியாயப்பிரமாணமில்லாத இவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்கள் மனச்சாட்சியுங்கூடச் சாட்சியிடுகிறதினாலும் குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்கள் சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும் நியாயப்பிரமாணத்தின் பொருள் தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” முன்மாதிரியான கிறிஸ்தவ நடத்தை பொதுவாக உயர்வாய் மதிக்கப்பட்டு அன்பை வளரச் செய்யும்.

30அன்பு தன்னை வெளிப்படுத்துவற்கு, நாடகபாணியான திடீர் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறதில்லை. சில அம்சங்களில் அன்பு உடையைப் போல் இருக்கிறது. உங்கள் உடையை ஒன்றாக இணைந்திருக்கச் செய்வது எது? கயிற்றால் கட்டப்பட்ட ஒரு சில முடிச்சுகளா? அல்லது நூலிழையாலாகிய ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு தையல்களா? இந்த ஆயிரக்கணக்கான சிறு தையல்களே, சொல்லர்த்தமான உடைகளைப் பற்றிப் பேசினாலும் சரி ஆவிக்குரிய “வஸ்திரங்களைப்” பற்றிப் பேசினாலும் சரி இதுவே உண்மையாயிருக்கிறது. நாள்தோறும் வெளிப்படுத்தப்படுகிற சிறு வார்த்தைகளும் செயல்களும் தொடர்ந்து சிறுகச் சிறுகச் சேர்ந்து குவிந்து கொண்டிருப்பதே நம்மை “உடுத்துவித்து” நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட ஆவிக்குரிய “உடை”யானது, உடலுக்குரிய உடையைப் போல் பழையதாகிக் கிழிந்து பயனற்றுப்போகாது, பைபிள் சொல்லுகிறது போல் அது, “அழியாத உடை”யாக இருக்கிறது.—1 பேதுரு 3:4, NW.

31உங்கள் விவாக வாழ்க்கை “ஒற்றுமையின் பரிபூரண கட்டால்” ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் கொலோசெயர் 3:9, 10, 12, 14-ல் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறபடி செய்யுங்கள்: “பழைய சுபாவத்தை அதன் பழக்கவழக்கங்களோடுகூட களைந்து போட்டு, புதிய சுபாவத்தால் உங்களை உடுத்துவித்துக் கொள்ளுங்கள் . . . இரக்கத்தின் கனிவான பாசங்களாலும், தயவாலும், மனத்தாழ்மையாலும், சாந்தகுணத்தாலும், நீடிய பொறுமையாலும் உங்களை உடுத்துவித்துக் கொள்ளுங்கள் . . . அன்பினால் உங்களை உடுத்துவித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே ஒற்றுமையின் பரிபூரண கட்டு”

[கேள்விகள்]

1-6. (எ) விவாகத் துணைவர்கள் அவரவருடைய சொந்த உணர்ச்சிகளின் பேரிலேயே மட்டுக்குமீறி மனதை ஊன்ற வைத்திருக்கையில் என்ன நடக்கக்கூடும்? (பி) எந்த வேதப் பூர்வ நியமங்களைக் கடைப்பிடிப்பது வினைமையான வாக்குவாதம் எழும்பிக் கொண்டே போவதைத் தடுத்து நிறுத்தக்கூடும்?

7-9. (எ) 1 கொரிந்தியர் 13:4-8-ல் அன்பு எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது? (பி) இது எவ்வகையான அன்பு?

10, 11. நீடிய சாந்தமும் தயவுமுள்ள ஒரு விவாகத் துணையிடமிருந்து நாம் என்ன எதிர்பார்ப்போம்?

12, 13. பொறாமை தன்னை எப்படி வெளிப்படுத்தலாம்? அதை அடக்கிவைப்பதற்கு ஏன் முயற்சிகள் எடுக்க வேண்டும்?

14, 15. (எ) தற்பெருமை எப்படி அன்பில்லாமையைக் காட்டுகிறது? (பி) தன் துணையைச் சிறுமைப்படுத்துவதற்குப் பதிலாக ஒருவர் என்ன செய்யவேண்டும்?

16. அன்புள்ள ஆள் தவிர்க்கும் அயோக்கியமான காரியங்கள் சில யாவை?

17. தன் சொந்த அக்கறைகளுக்கானவற்றை நாடிக் கொண்டிராத ஒருவர் சண்டைகளை எப்படித் தவிர்க்கக்கூடும்?

18. அன்பு எப்படி ஒருவரை கோபமடையாதபடி தடுத்து வைக்கக்கூடும்?

19. (எ) ‘அநியாயத்தின் பேரில் சந்தோஷப்படுவதில்’ எவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்? (பி) இது ஏன் தவிர்க்கப்படவேண்டும்?

20. அன்பு எப்படி (எ) ‘சகலத்தையும் தாங்குகிறது’? (பி) ‘சகலத்தையும் விசுவாசிக்கிறது’? (சி) ‘சகலத்தையும் நம்புகிறது’? (டி) ‘சகலத்தையும் சகிக்கிறது’?

21, 22. அன்பு ஒருக்காலும் ஒழியாதென்பதை உதாரணமாக விளக்கிக் காட்டும் சில சூழ்நிலைமைகள் யாவை?

23. அன்புள்ள காரியத்தை நாம் செய்யப்போகிறோமா, இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது?

24, 25. அன்பைக் காட்டுவதற்கு உங்கள் உள்நோக்கத்தை நீங்கள் எப்படிப் பலப்படுத்தக்கூடும்?

26, 27. காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் எப்படி ஒருவருடைய அன்பை அதிகரிக்கச் செய்யக்கூடும்?

28. சேவை செய்தல் எப்படி அன்பை முன்னேற்றுவிக்கக்கூடும்?

29. கடவுளுடைய ஊழியராக இராதவர்களுக்குங்கூட அன்பு ஏன் கவர்ச்சியுள்ளதாயிருக்கும்?

30. நாடக பாணியான திடீர் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அன்பு வெளிப்படுத்திக் காட்டப்பட வேண்டுமா? நீங்கள் ஏன் இவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?

31. கொலோசெயர் 3:9, 10, 12, 14-ல் அன்பின் பேரில் என்ன சிறந்த புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது?