Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி

அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி

அதிகாரம் 5

அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி

‘என் கணவர் என்னை நேசிக்கிறார், ஆனால் அவர் அதை ஒருபோதும் சொல்லுகிறதில்லை. எப்பொழுதாவது அவரை நான் வலுக்காட்டாயப்படுத்தி சொல்ல வைப்பேனானால் உண்டு, ஆனால் நான் தூண்டாமல் அதை அவர் சொல்வாராகில் அது எவ்வளவு மிக அதிகத்தைக் குறிக்கும்,’ என்று ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் குறை கூறினாள்.

2. அந்த மற்ற பெண் பின்வருமாறு பதிலளித்தாள்: ‘எனக்குத் தெரியும். ஆண்கள் அப்படித்தான். ஒரு சமயம் நான் என் கணவனை, அவர் என்னை நேசிக்கிறாரா என்று கேட்டேன், அதற்கு அவர், “நான் உன்னை விவாகம் செய்தேன் அல்லவா? நான் உன்னைப் பராமரிக்கிறேன், உன்னோடு நான் வாழ்கிறேன்; நான் உன்னை நேசியாவிட்டால் இதை நான் செய்யமாட்டேன்,” என்று சொன்னார்.’

3. அவள் ஒரு விநாடி சற்று நிறுத்தி, பின்பு மேலும் தொடர்ந்து கூறினதாவது: ‘என்றபோதிலும் அன்று ஒரு சாயங்காலம் வெகுவாய் உள்ளங்கனிய வைத்த ஒன்று நடந்தது. அந்தப் பகலின்போது நான் அவருடைய படிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அவருடைய எழுது மேசையின் இழுப்பறைகளில் ஒன்றில் ஒரு நிழற்படத்தை நான் கண்டேன். அது, என்னுடைய பழைய குடும்ப நிழற்படங்கள் சேகரித்து வைக்கும் ஏடு ஒன்றிலிருந்து நான் அவருக்குக் காட்டியிருந்த ஒரு படமாயிருந்தது. நான் ஏழு வயதாயிருந்தபோது குளிப்பு உடையில் இருந்த என்னுடைய படமே அது. அவர் அதை அந்தச் சேகரிப்பு ஏட்டிலிருந்து இழுத்தெடுத்து தம்முடைய எழுதுமேசை இழுப்பறையில் வைத்திருந்தார்.’

4. இதை நினைவு கூர்ந்த போது புன்சிரிப்பினால் அவள் முகம் மலர்ந்தது, பின்பு தன் சிநேகிதியைப் பார்த்தாள். ‘அந்தச் சாயங்காலம் வேலையிலிருந்து அவர் வீடு திரும்பினபோது அந்தப் படத்தோடு அவரை நான் எதிர்ப்பட்டேன். அவர் அந்த நிழற்படத்தைத் தன் கையில் எடுத்து புன்முறுவல் செய்து, “இந்தச் சிறுமியை என் நெஞ்சத்தில் வைத்து பேணுகிறேன்,” என்று சொன்னார். பின்பு அதைக் கீழே வைத்துவிட்டு தம்முடைய இருகரங்களிலும் என் முகத்தை அணைத்துப் பற்றி, “அவள் என்னவாகியிருக்கிறாளோ அவளையுங்கூட நான் என் நெஞ்சத்தில் வைத்துப் பேணுகிறேன்.” என்று சொன்னார். மேலும் அவர் என்னை வெகு கனிவாய் முத்தம் செய்தார். இது என் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது.’

5. தன் கணவனுக்குத் தான் வெகு அருமையானவள் என்று அறிந்திருக்கிற மனைவி தனக்குள் அனலாகவும் பாதுகாப்பாயும் உணருகிறாள். தங்கள் மனைவிகளிடமாக இப்படிப்பட்ட அன்பையுடையவர்களாக இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை ஆண்களுக்கு ஆலோசனை கூறுகிறது. “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாக பாவித்து, அவர்களில் அன்பு கூரவேண்டும். தன் மனைவியில் அன்பு கூருகிறவன் தன்னில் தான் அன்பு கூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே, . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான் . . . இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (எபேசியர் 5:28, 29, 31) நாம் ஏற்கெனவே கலந்தாலோசித்தபடி மனைவி தன் கணவனிடமாக ஆழ்ந்த மரியாதையுடையவளாக இருக்க வேண்டும், என்றாலும் கணவன் அந்த மரியாதையைச் சம்பாதிப்பதற்கேதுவான முறையில் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கணவர் உங்களை நேசித்து தன் நெஞ்சத்தில் வைத்துப் பேணும்படி புத்திமதி கூறப்படுகிற இந்தக் காரியத்திலேயும் இதுவே உண்மையாயிருக்கிறது, அதாவது: உங்கள் கணவர் இருதயப் பூர்வமாய் அவ்வாறு செய்யும்படி அவரைத் தூண்டக்கூடிய முறைகளில் நீங்கள் உங்களை நடத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஆதரவைக் கொடுக்கிறீர்களா?

6. மனைவி அருமையாய் நேசிக்கப்படுவதற்கு அவள் வெறுமென தன் கணவனின் தலைமை வகிப்புக்குக் கீழ்ப்பட்டிருப்பதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது. நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டு தனக்கு அடங்கியிருக்கும் ஒரு குதிரையையோ நாயையோ அவர் கொண்டிருக்கக்கூடும். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுடன் மிருகங்கள் இருந்தன. அவை அவனுக்கு அடங்கியிருந்தன. என்றபோதிலும் அவனுடைய இனத்தைக் குறித்ததில் அவன் இன்னும் தனிமையாகவே இருந்தான். தன்னைப் பூர்த்தி செய்பவளாகவும் தன்னோடு வேலை செய்வதற்கு ஒரு துணை அல்லது உதவியாளாகவும் இருக்கக்கூடிய நுட்ப அறிவுள்ள ஒரு மனித கூட்டாளி அவனுக்கு தேவையாயிருந்தது. “தொடர்ந்து தனியாக இருப்பது மனிதனுக்கு நல்லதல்ல, அவனைப் பூர்த்தி செய்பவளாக, அவனுக்கு ஒரு துணையை நான் உண்டாக்கப் போகிறேன்,” என்று யெகோவா தேவன் சொன்னார்.—ஆதியாகமம் 2:18, NW.

7. ஒரு கணவனுக்குத் தேவையாயிருப்பது தன்னை நேசித்து தனக்கு மரியாதை கொடுக்கிறவளாக மட்டுமல்லாமல் உண்மையான துணை அல்லது உதவியாளாகவும் இருந்து, தான் செய்யும் தீர்மானங்களில் தன்னை ஆதரிக்கிறவளாக இருக்கும் ஒரு மனைவியேயாகும். தீர்மானங்கள், இருவரும் கலந்து பேசினபின் இருவரும் ஒப்புக் கொண்டவையாக இருக்கையில், இவ்வாறு செய்வது கடினமாயிராது. ஆனால் நீங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லையென்றால் அல்லது நீங்கள் ஒருவேளை ஒப்புக் கொள்ளுகிறதில்லையென்றால் அதை ஆதரிப்பது அவ்வளவு எளிதாக இராது. இப்படிப்பட்ட விஷயத்தில் உங்கள் கணவனை மாறாத உண்மையுடன் ஆதரிக்கக் கூடுமா? அவருடைய தீர்மானம் சட்டத்துக்கு மாறான அல்லது வேத எழுத்துக்களுக்கு மாறான நடவடிக்கையாக இருந்தால்தவிர, அவருடைய தீர்மானத்தைச் செயல்படும்படி செய்ய உங்களாலான மிகச் சிறந்ததைச் செய்வீர்களா? அல்லது, ‘அப்படியாகுமென்று நான் உமக்குச் சொன்னேன் அல்லவா?’ என்று நீங்கள் சொல்லக்கூடும்படி, பிடிவாதமாய் ஒன்றும் செய்யாதிருந்து, அவர் தோல்வியடைவதைக் காண எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களா? உங்களுக்கு அதில் நம்பிக்கையில்லையென்றாலும்கூட, அந்தத் திட்டம் வெற்றியடைவதற்காக நீங்கள் கடினமாய் உழைப்பதை அவர் காண்பாராகில் உங்கள் பங்கில் இப்படிப்பட்ட உண்மை தவறா ஆதரவு அவர் உங்களை இன்னும் அதிகமாகவே நேசிக்கும்படி செய்விக்குமல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

8. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய தலைமை வகிப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளும்படி முயலாதேயுங்கள்! இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்களானால், நீங்கள் அவரை விரும்ப மாட்டீர்கள்; அவரும் உங்களை விரும்பமாட்டார், தன்னைத்தானேயும் விரும்பமாட்டார். ஒருவேளை அவர் தாம் செய்ய வேண்டியபடி தலைமை தாங்கி வழிநடத்தாதிருக்கலாம். அப்படிச் செய்யும்படி அவருக்கு நீங்கள் உற்சாகமூட்டக்கூடுமா? தலைமை தாங்கி நடத்த அவர் ஏதாவது முயற்சி செய்கையில் அதை நீங்கள் போற்றி நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறீர்களா? அவர் தானாக முன் வந்து ஏதாவது முயற்சி செய்கையில் அவரோடு நீங்கள் ஒத்துழைத்து அவரை உற்சாகப்படுத்துகிறீர்களா, அல்லது அவர் செய்வது தவறு, அவருடைய திட்டம் செயல்படாது என்று அவருக்குச் சொல்லுகிறீர்களா? சில சமயங்களில் தன்னுடைய கணவன் தலைமை தாங்கி வழிநடத்தாததற்கு மனைவியும் குற்றப் பொறுப்பில் பங்குகொள்ள வேண்டியவளாக இருக்கிறாள்—உதாரணமாக, அவருடைய அபிப்பிராயங்களை மதிப்புக் குறைவாக்கி அல்லது அவருடைய முயற்சிகளை எதிர்க்கிறாளென்றால் அல்லது அவருடைய திட்டம் பரிபூரணத்தில் சற்றுக் குறைவுபடுகையில், ‘அது நடக்காதென்று நான் உமக்குச் சொன்னேனே,’ என்ற முறையில் பதில் கொடுப்பாளாகில் அவ்வாறு இருக்கிறாள். இது முடிவில், நிச்சயமில்லாத, தயக்க நிலையிலுள்ள ஒரு கணவரை உண்டுபண்ணும். மறுபட்சத்தில், உங்கள் உண்மை தவறாமையும், ஆதரவும், அவரில் கொண்டுள்ள, உங்கள் நம்பிக்கையும், பற்றுறுதியும், அவரைப் பலப்படுத்தி அவருடைய வெற்றிக்கு உதவி செய்யும்.

“திறமையுள்ள மனைவி”

9. அருமையாய் நேசிக்கப்படுகிற ஒரு மனைவியாயிருக்க, வீட்டில் உங்கள் உத்தரவாதங்களை நீங்கள் நன்றாய்க் கவனிப்பதுங்கூட அவசியம். இப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.” (நீதிமொழிகள் 31:10) நீங்கள் இப்படிப்பட்ட ஒரு மனைவியாக இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட மனைவியாயிருக்க விரும்புகிறீர்களா?

10. “திறமையுள்ள மனைவியின்” செயல்களை விவாதித்துப் பேசுவதாய் நீதிமொழிகள் புத்தகம் பின்வருமாறு அறிவிக்கிறது: “இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங் கொடுக்”கிறாள். (நீதிமொழிகள் 31:15) சமைப்பது எப்படியென்று தங்கள் தாய்மார்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுக்காததன் காரணமாக இளம் பெண்கள் பலர் வாய்ப்புக் குறைவான நிலையில் விவாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்; என்றாலும் அவர்கள் கற்றுக் கொள்ளக்கூடும். மேலும் ஞானமுள்ள பெண், நன்றாய் சமைப்பது எப்படியென்பதையும் கற்றுக்கொள்வாள்! சமைத்தல் ஒரு கலையாயிருக்கிறது. சாப்பாடு நன்றாயத் தயாரிக்கப்படுகையில், அது வயிற்றை நிரப்புவது மாத்திரமல்லாமல் இருதயத்திலிருந்துங்கூட பிரதிபலிப்பைக் கொண்டு வருகிறது.

11. உணவு தயாரிப்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளக்கூடியது அதிகம் இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் உடல் நலத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளக்கூடும்படி உணவு சத்துக்களைப் பற்றிய அடிப்படைகளை நீங்கள் தெரிந்து கொள்வது நன்மை பயக்குவதாயிருக்கும். ஆனால் சத்துள்ள உணவை உங்கள் கணவருக்கு முன்பாக வைப்பது மாத்திரமே அவருடைய போற்றுதலை அடையும்படி செய்துவிடப்போவதில்லை. ஈசாக்கின் மனைவியாகிய ரெபெக்காள் “ருசியுள்ள” வகையில், தன்னுடைய கணவனுக்குப் பிரியமான அப்பேர்ப்பட்ட முறையில் உணவை தயாரிப்பது எப்படியென்று அறிந்திருந்தாள் என்பதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (ஆதியாகமம் 27:14) அவளுடைய முன்மாதிரியிலிருந்து மனைவிகள் பலர் நன்மை அடையலாம்.

12. உலகத்தின் சில பாகங்களில் பெண்கள் அந்நாளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு தினந்தோறும் காலையில் கடைக்குச் செல்கின்றனர். மற்ற இடங்களில் ஒருவேளை வாரத்துக்கு ஒரு முறை கடைக்குச் சென்று கெட்டுப்போகக்கூடிய பொருட்களைக் குளிர்காப்புப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். எப்படியிருந்தாலும், வீட்டு பணவருவாய்களைக் கவனமாய் உபயோகித்து, குடும்ப வரவு செலவு திட்டப்பட்டியலை மதிக்கிற ஒரு மனைவியை ஒரு கணவன் பாராட்டாமல் இருக்க முடியாது. நல்ல தரமுள்ள உணவையும் உடையையும் இன்னதென்று அடையாளங் கண்டு கொள்வதெப்படி என்பதை அவள் கற்றுக்கொண்டு, அவற்றின் மதிப்பைத் தெரிந்திருப்பாளாகில், தான் காண்கிற முதல் பொருளை அவள் எப்பொழுதும் வாங்க மாட்டாள். அதற்கு மாறாக, நீதிமொழிகள் 31:14 சொல்லுகிறபடி: “அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டு வருகிறாள்.”

13. தன்னுடைய வேலையைப் பற்றிய மனச்சாட்சியுள்ள இந்த அக்கறை அவளுடைய வீட்டின் நிலைமைகளிலுங்கூட பிரதிபலிப்பது அவசியம். திறமையுள்ளவளாயிருப்பதாக ஒரு மனைவியை அடையாளங் காட்டுவது என்னவென்பதன் பேரில் மேலுமாகக் குறிப்பு சொல்வதாய் நீதிமொழிகள் 31:27 பின்வருமாறு சொல்லுகிறது: “அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.” பிந்தி படுக்கைக்குப் போவதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டு, மட்டுக்கு மீறிய மணி நேரங்களை அயலகத்தாரோடு வீண் பேச்சு பேசுவதில் செலவிடுவதாகிய இப்படிப்பட்ட காரியங்கள் அவளுக்குரியதல்ல. எப்போதாவது ஒரு சில சமயங்களில் நோய் அல்லது எதிர்பாராத சந்தர்ப்ப நிலைமைகள் அவள் தன் வீட்டு வேலையில் பின்தங்கும்படி ஒருவேளை செய்யக்கூடுமென்றாலும், பொதுவாய் அவளுடைய வீடு ஒழுங்காயும் சுத்தமாயும் இருக்கும். தன்னைப் பார்க்க நண்பர்கள் வருவார்களேயானால், தங்கள் வீட்டுத் தோற்றத்தால் தான் சங்கட நிலைக்குட்படமாட்டானென்று அவளுடைய கணவன் திட நம்பிக்கையுள்ளவனாக இருக்கவேண்டும்.

14. தங்களுடைய சொந்த தோற்றத்திற்கும்கூட கவனம் செலுத்துவது முக்கியமானதென்று பெண்கள் பலருக்குச் சொல்வது அவசியமாயில்லை, என்றாலும் சிலருக்கு இதைப் பற்றிய நினைப்பூட்டுதல் அவசியமாயிருக்கிறது. ஒரு பெண்ணின் தோற்றமானது, அவள் தன்னைப் பற்றி அதிகம் நினைக்கிறதில்லையென்று காட்டுகையில், அப்படிப்பட்டவளிடமாகப் பாச உணர்ச்சி கொள்வது எளிதாக இல்லை. பெண்கள், “தகுதியான (சீராக அமைக்கப்பட்ட, NW) வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் . . . தங்களை அலங்கரிக்க வேண்டும்,” என்று பைபிள் சிபாரிசு செய்கிறது. என்றாலும் சிகை அலங்காரத்தின் பேரிலும், அணிந்திருப்பவர் மேல் தகாத கவனத்தை இழுக்கும் நகை வகைகளும், மிக விலையுயர்ந்த ஆடைகளுமானவற்றின் பேரிலும் மட்டுக்கு மீறிய அழுத்தத்தை வைப்பதற்கு எதிராகவுங்கூட பைபிள் புத்திமதி கூறுகிறது.—1 தீமோத்தேயு 2:9.

15. இப்படிப்பட்ட அலங்காரத்தைப் பார்க்கிலும் மிக அதிக மதிப்பு வாய்ந்தது அதை அணிந்திருக்கிறவளுடைய மனநிலையேயாகும். “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே . . . தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது,” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவ மனைவிகளுக்குச் சொல்லுகிறான். (1 பேதுரு 3:3, 4) மேலும் நீதிமொழிகள், திறமை வாய்ந்த ஒரு மனைவியின் தனிப்பண்புகளை விவரித்துக் கூறுகையில், “ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்” என்றும் “தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது” என்றும் மேலுமாகக் கூட்டுகிறான். அவள் தன்னலமுள்ளவளாகவோ, “சிடுமூஞ்சி”யாகவோ இருக்கிறதில்லை. அதற்கு மாறாக தாராள மனதுடையவளாகவும் கனிவிரக்கமுள்ளவளாகவும் இருக்கிறாள். (நீதிமொழிகள் 31:20, 26) இந்த விவரிப்பு மேலுமாகத் தொடர்ந்து, “செளந்தரியம் வஞ்சனை, அழகு வீண், யெகோவாவுக்குப் பயப்படும் பெண்ணே புகழ்ச்சிக்குரியவள்,” என்று சொல்லுகிறது.—நீதிமொழிகள் 31:30, தி.மொ.

16ஆம், இப்படிப்பட்ட பெண்ணானவள், சிருஷ்டிகரின் நோக்கு நிலையில் பங்கு கொள்ளுகிற எந்த கணவனாலும் அருமையாய் நேசிக்கப்படுவாள். நீதிமொழிகளின் எழுத்தாளனால் பின்வருமாறு வெளிப்படுத்திக் கூறப்படுவதைப் போலவே அவன் தன் மனைவியைப் பற்றி உணருவான்: “அநேகம் பெண்கள் குணசாலிகளாய் (திறமையுள்ளவர்களாய், NW) இருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்.” (நீதிமொழிகள் 31:28, 29) மேலும், தான் இவ்வாறு உணருகிறான் என்பதை அதிகத் தூண்டுதலில்லாமல் தானாக உள்ளங்கனிவுற்று தன் மனைவிக்குத் தெரிவிக்கிறவனாயிருப்பான்.

பாலுறவைப் பற்றிய உங்கள் கருத்து ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது

17. திருப்தியற்ற பாலுறவுகள் பல விவாகப் பிரச்னைகளின் அடிப்படை காரணமாக இருக்கின்றன. சில காரியங்களில், கணவன் தன் மனைவியின் உடல் மற்றும் உணர்ச்சி வேக சம்பந்த தேவைகளுக்குக் கரிசனையோடுகூடிய கவனம் செலுத்தாமலும், அவற்றை விளங்கிக் கொள்ளாமலும் இருப்பது இதற்குக் காரணமாயிருக்கிறது. மற்றும் சிலர் காரியங்களில், மனைவி, இந்த அனுபவத்தில் உடல் சம்பந்தமாயோ உணர்ச்சிவேக சம்பந்தமாயோ தன் கணவனோடு பங்கு கொள்ள தவறுவதன் காரணமாயிருக்கிறது. கணவனும் மனைவியுமாகிய இருவராலும் மனப்பூர்வமாயும் அன்போடும் பங்கு கொள்ளப்படுகிற இந்தப் பாலுறவு செயல் அவர்கள் ஒருவருக்கொருவர் உணருகிற அன்பின் மிக உள்ளார்ந்த தெரிவிப்பாயிருக்க வேண்டும்.

18. மனைவி கிளர்ச்சியற்றிருப்பது அவளுடைய கணவன் கரிசனையோடு கூடிய பரிவு காட்டாததன் காரணமாக இருக்கலாம் என்றாலும் மனைவியின் எழுச்சியற்ற தன்மை கணவனுக்குங்கூட கேடு செய்கிறது, மனைவி வேண்டாவெறுப்பு காட்டுவது அவனுடைய உள்ளார்ந்த ஆற்றலைக் கொல்லக்கூடும் அல்லது வேறொருவரிடமாகக் கவர்ந்திழுக்கப்படுவதாகவுங்கூட அவன் உணரும்படி செய்விக்கக்கூடும். வேண்டா வெறுப்பு மனநிலையோடு மனைவி வெறுமென விட்டுக் கொடுப்பாளாகில், கணவன், தன் மனைவிக்குத் தன் பேரில் அக்கறையில்லை என்பதற்கே இது அத்தாட்சியென்று அர்த்தப்படுத்திக் கொள்வான். பாலுறவு பிரதிபலிப்பை உணர்ச்சி வேகங்கள் ஆட்கொள்ளுகின்றன, மனைவி பிரதிபலிக்காமல் இருப்பாளாகில் பாலுறவைக் குறித்ததில் தன் சொந்த மனநிலையை அவள் திரும்பச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாயிருக்கலாம்.

19. “அதை ஒருவருக்கொருவர் அனுபவியாதபடி விலக்கிக் கொள்ளாதேயுங்கள்,” என்று பைபிள் கணவனும் மனைவியுமாகிய இருவருக்குமே புத்திமதி கூறுகிறது. வாரக்கணக்காக அல்லது மாதக்கணக்காகவுங்கூட மனைவி அதைத் தன் கணவனுக்குக் கொடுக்க மறுப்பதைப் போல், பாலுறவை தன் துணையைத் தண்டிக்கும் அல்லது கோபத்தையோ மனக்கசப்பையோ வெளிப்படுத்தும் வழிவகையாக உபயோகிப்பதற்குக் கடவுளுடைய வார்த்தை எவ்விதமும் இடமளிக்கிறதில்லை. அவன் “தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய” வேண்டியதைப் போல் அவளுங்கூட “தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.” (1 கொரிந்தியர் 7:3-5) இது, ஒழுக்கப்பிரகாரமாய் வெறுப்பளிப்பதாக அவள் காண்கிற நெறி பிறழ்வான ஏதாவது செயலுக்கு மனைவி பணிந்து இடமளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதைக் குறிக்கிறதில்லை; தன் மனைவியை நேசித்து உயர்வாய் மதிக்கிற ஒரு கணவன், அவள் அப்படிச் செய்யும்படி கேட்கமாட்டான். “அன்பு . . . அயோக்கியமானதைச் செய்யாது.” (1 கொரிந்தியர் 13:4, 5) விவாகத் துணைவர்களுடைய நடத்தையின் தகுதி அல்லது தகாத தன்மையின் பேரில் தீர்ப்பு செய்ய, விவாக இணைப்புக்குப் புறம்பேயுள்ள எவரிடமாவது கேட்பதற்கு அவசியம் இருக்க வேண்டியதில்லை. பைபிள், 1 கொரிந்தியர் 6:9-11-ல் யெகோவா தேவனின் வணக்கத்தார் ஈடுபடக்கூடாதென்று கட்டளையிடப்பட்ட பழக்கச் செயல்களைத் தெளிவாய்க் குறிப்பிடுகிறது: வேசித்தனம், விபசாரம், முறைதகாப் புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி ஆகியவை. (லேவியராகமம் 18:1-23-ஐ ஒத்துப்பாருங்கள்.) “புதிய ஒழுக்கநெறியை”—உண்மையில் ஒழுக்கக்கேட்டை—பழக்கமாய்க் கடைப்பிடித்து வருகிற நவீனகால முற்போக்காளர்களில் சிலர், இந்தத் தகாததென்று கட்டளையிடப்பட்ட பாலுறவு செயல்களைச் சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கதாக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்கின்றனர், அதே சமயத்தில் கண்டிப்பாய் மாறுதல் விரும்பாத மற்றவர்கள் இந்தத் தடையுத்தரவுகளோடுகூட மேலும் கூட்டவேண்டுமென்கின்றனர். பைபிளானது சம நிலையான கருத்தைக் கொடுக்கிறது. பொதுவாய்ச் சொல்லவேண்டுமானால் விவாகத்தில் மற்ற எல்லா உறவுகளும் நல்லதாக இருக்கிறதென்றால், அன்பும், மரியாதையும், நல்ல பேச்சுத் தொடர்பும், விளங்கிக் கொள்ளுதலும் இருந்தால், அப்பொழுது பாலுறவு ஒரு பிரச்னையாயிருப்பது வெகு அரிதே.

20. மிக அருமையாய் நேசிக்கப்படுகிற ஒரு மனைவி, பாலுறவை நிபந்தனைகளை வைத்துப் பேரம் பேசும் நோக்கங்களுக்கு உபயோகிக்கிறதில்லை. நிச்சயமாகவே எல்லா மனைவிகளும் பாலுறவை வைத்துப் பேரம் செய்கிறதில்லை. என்றாலும் சிலர் அவ்வாறு செய்கின்றனர். தங்கள் கணவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்கு, மறைமுகமான சூழ்ச்சி முறைகளில் அவர்கள் பாலுறவை பயன்படுத்தக்கூடும். இதன் விளைவென்ன? ஓர் உடையை விற்கிற ஆளிடமாக உங்களுக்குக் கனிவான பாச உணர்ச்சி உண்டாகாது அல்லவா? அவ்வாறே கணவனும் தன்னிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காகப் பாலுறவைக் கொடுக்கல் வாங்கல் விற்பனை செய்கிற மனைவியினிடமாகக் கனிவான பாச உணர்ச்சியடைகிறதில்லை. இவ்வாறு செய்கிற பெண் பொருள் சம்பந்தமாய்ப் பலன்பெறக்கூடும், என்றாலும் உணர்ச்சி சம்பந்தமாக மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாய் இழந்து போகிறாள்.

அழுகிறவர்களும் ஓயாது நச்சுப்படுத்துகிறவர்களும்

21. சிம்சோன் பலவானாக இருந்தான், ஆனால் தங்கள் காரியத்தைச் சாதிப்பதற்கு அழுகையையோ நச்சரிப்பையோ உபயோகித்த பெண்களின் தொல்லையை அவன் சகிக்க முடியாதவனானான். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய மனைவியாகப் போகிறவளாயிருந்த பெண் அழுகையினால் தன்னைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதை எதிர்ப்பட்டான். நியாயாதிபதிகள் 14:16, 17-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி அவள்: “அவனுக்கு முன்பாக அழுது நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு விடுவிப்பேனோ என்றான்.” நியாயத்தைக் கவனிக்கும்படி அழைத்த சிம்சோனின் வேண்டுகோள் செயல்படவில்லை. உணர்ச்சி வேகங்கள் மீறிய வண்ணமாய் உயர்ந்து கொண்டிருக்கையில் நியாயம் செயல்படுவது அரிதாகவே இருக்கிறது. “விருந்துண்கிற ஏழு நாளும் அவள் அவன் முன்பாக அழுது கொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை அலட்டிக் கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.”

22. உங்கள் கணவர், உங்கள் சொந்த வழிக்கு எப்பொழுதும் விட்டுக் கொடுக்கிறதில்லை என்பதனால் தானே அவர் உங்களை நேசிக்கிறதில்லையென்று எண்ணாதேயுங்கள். சிம்சோனின் மனைவியாகப் போகிறவளாக இருந்தவள் அவன் தன்னை நேசிக்கவில்லையென்று குற்றஞ்சாட்டினாள், ஆனால் உண்மையில் அவளே அவனை நேசியாதவளாக இருந்தாள். அவன் இனிமேலும் தாங்கக்கூடாத அப்பேர்ப்பட்ட நிலையை அடையும் வரையில் அவன் பேரில் கடும் அழுத்தத்தைக் கொண்டுவந்தாள். அவன் தன் விடுகதையை அவளுக்குச் சொன்னபோதோ, அவள் நம்பிக்கை துரோகம் செய்பவளாய் உடனடியாக அவனுடைய இரகசியத்தை அவனுடைய சத்துருக்களுக்குச் சொல்லும்படி ஓடி நம்பிக்கைத் துரோகம் செய்தாள். முடிவில், அவள் மற்றொரு மனிதனின் மனைவியானாள்.

23. பின்னால் சிம்சோன், தெலீலாள் என்ற பெயர் கொண்ட மற்றொரு பெண்ணிடமாகக் கவரப்பட்டவனானான். உடல் சம்பந்தப்பட்டதில் அவள் கவர்ச்சிகரமாய் இருந்திருக்கலாம். ஆனால் அவள், அவன் உண்மையில் பாசத்தோடு தன் நெஞ்சில் வைத்திருக்கக்கூடிய பெண்ணாகத் தன்னை நிரூபித்தாளா? தன்னல அனுகூலத்திற்காகத் தான் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தகவலை சிம்சோனிடமிருந்து பசப்பி ஏய்த்துப் பிடுங்கும்படி தெலீலாள், ஓயாது நச்சுப்படுத்துவதைத் தன் கருவியாக உபயோகித்தாள். அந்த விவரப் பதிவு பின்வருமாறு சொல்லுகிறது: “இப்படி அவனைத் தினம் தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்”டது. இதன் முடிவான விளைவுகள் துயர் நிறைந்தவையாக இருந்தன.—நியாயாதிபதிகள் 16:16.

24. அழுவதும் நச்சுப்படுத்துவதும் ஞானமான காரியங்களல்ல. அவை விவாக வாழ்க்கையைப் பாழாக்குகின்றன. அவை, கணவனின் உறவை துண்டிக்கின்றன. தி நியூ இங்கிலிஷ் பைபிள் என்ற ஆங்கில பைபிளிலிருந்து எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வேத வசனங்கள் காட்டுகிறபடி, இப்படிப்பட்ட பழக்கங்களுக்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது: “ஏதோவொன்றின் பேரில் அலுக்கும்படி பேசிக் கொண்டேயிருக்கிறவள் நட்பு முறிய செய்கிறாள்.” “நச்சுப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு மனைவி ஓயாமல் ஒழுகிக் கொண்டிருக்கும் தண்ணீரைப் போன்றவள்.” “ஓயாது நச்சுப்படுத்துகிறவளும் எரிச்சல் மனநிலையுடையவளுமாகிய ஒரு மனைவியோடு வாழ்வதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் தனியே வாழ்வது மேல்.” “அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கு—அதைப் போன்றவளே ஓயாது நச்சுப்படுத்தும் மனைவி. அவளை அடக்குவது காற்றை அடக்க முயலுவது போலாம்! ஒருவனின் விரல்களில் எண்ணெயைப் பிடித்தெடுக்க முயலுவது போலாம்!”—நீதிமொழிகள் 17:9; 19:13; 21:19; 27:15, 16.

25. இந்தப் புத்திமதியைக் கொடுக்க வேத எழுத்துக்கள் மனைவியைத் தனியே தேர்ந்தெடுப்பதேன்? ஒருவேளை, பெண்கள் பொதுவாக அதிகப்படியாய் உணர்ச்சி வசத்துக்குட்படுகிறவர்களாகவும், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு அதிகப்படியாய் மனம் சாய்கிறவர்களாகவும், முக்கியமாய் ஏதோவொன்றைப் பற்றி மன அமைதி குலைக்கப்பட்டிருக்கையில் அவ்வாறு இருப்பதன் காரணமாகவும் இருக்கலாம். மேலும், அதுவே தங்களுக்கு இருக்கிற ஒரே போராயுதம் என்பதாகவும் அவர்கள் உணரக்கூடும். வீட்டின் தலைவனாக கணவன் அதிகாரத்துடன் தன் விருப்பப்படி செல்லக்கூடும், ஆகையால் மனைவியானவள் உணர்ச்சிவேக அழுத்தத்தை வைக்கத் தான் தேட வேண்டுமென்று உணரலாம். மனைவியாகிய நீங்கள் இப்படிப்பட்ட போராட்ட சூழ்ச்சி முறைகளில் ஈடுபடும்படி உங்கள் மனதைச் செல்ல விடக்கூடாது; உங்கள் கணவரும், நீங்கள் அப்படிச் செய்யும்படி வற்புறுத்தப்படுகிற நிலையில் இருப்பதாய் உணரும்படி செய்யக்கூடாது.

26. நீங்கள் சுகமில்லாதிருப்பதாய் உணரும் சமயங்கள் இருக்கலாமென்பது உண்மையே. ஒருவேளை நீங்கள் அழாமல் இருக்கவேண்டுமென்று விரும்பும் போதுங்கூட கண்ணீருக்கு இடங்கொடுப்பதாக உங்களை நீங்கள் காணக்கூடும். ஆனால் இது, உங்கள் சொந்த விருப்பத்தைச் சாதித்துக் கொள்ளும்படி மிக அதிகத் தீவிர உணர்ச்சிவேகத்துக்குட்பட்ட காட்சிகளை உருவாக்குவதிலிருந்து அல்லது வெறுமென பிரயோகிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

27. தங்கள் மனைவிகளை உண்மையாய் நேசிக்கிறார்களென்றால், தனிப்பட்ட விருப்பங்கள் உட்பட்ட காரியங்களில், பெரும்பான்மையான தங்களுடைய விருப்பங்களைப் பார்க்கிலும் தங்கள் மனைவிகளின் விருப்பங்களுக்கே கணவன்மார் அதிக ஆதரவு அளிப்பார்கள். உங்கள் கணவரைப் பிரியப்படுத்துங்கள், அவர் பெரும்பாலும் உங்களைப் பிரியப்படுத்துவதற்கு வாய்ப்புகளைத் தேடுவார்.

“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு”

28. ‘என் கணவர் என்னிடம் ஒருபோதும் பேசுகிறதில்லை,’ என்று மனைவிகள் பலர் முறையிடுகின்றனர். குற்றம் அவருடையதாக இருக்கலாம். என்றபோதிலும், பல தடவைகள் ஒரு கணவன் தன் மனைவியிடம் பேச விரும்பலாம். ஆனால் அவள் அதை அவனுக்கு எளிதாக்குகிறதில்லை. எவ்வாறு? எல்லாப் பெண்களும் ஒன்றுபோல் இருக்கிறதில்லை. என்றாலும் பின்வரும் இந்த விவரிப்புகளில் ஒன்று உங்களுக்குப் பொருந்துகிறதாவென்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

29. முதல் உதாரணமாக, ஒரு பெண் அக்கம் பக்கத்திலுள்ள மற்றப் பெண்களுடன் பேசுவதில் எவ்வித இடையூறும் இல்லாதவளாக இருக்கிறாள். ஆனால் அவளுடைய பேச்சு நடை பாங்கு எப்படிப்பட்டது? அந்த மற்ற பெண் மூச்செடுக்க சற்று நிறுத்துகையில், இவள் உடனடியாகப் பேசத் தொடங்குகிறாள். ஒன்றிரண்டு கேள்விகளை, அவள் போடலாம், அல்லது முற்றிலும் வேறுபட்ட பொருளின் பேரில் பேசத் தொடங்கிவிடக்கூடும். தன் பேச்சு குறுக்கிட்டு தொடர்பறுக்கப்பட்ட அந்தப்பெண் மறுபடியுமாக பேசத் தொடங்கி, அந்த உரையாடலில் தன் பங்கை சிறிது நேரத்திற்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள். எல்லாரும் கலந்து கொள்ளுகிற ஒழுங்கு கட்டுப்பாடற்ற இந்த உரையாடலை இருவருமே பொருட்படுத்திக் கொள்ளாததுபோல் தோன்றுகிறது.

30. இப்பொழுது அவளுடைய கணவன் வீட்டுக்கு வருகிறான், சொல்வதற்கு ஏதோ செய்தியை அவன் வைத்திருக்கிறான். அவன் வாசலுக்குள் நுழைகையிலேயே, ‘வேலையில் என்ன நடந்ததென்று உன்னால் நினைக்கவே முடியாது . . . ’ என்று உடனடியாகப் பேசத் தொடங்குகிறான். அவ்வளவு தான், அதற்கு மேல் அவன் தொடர்ந்து பேச முடிகிறதில்லை. அவள் அவன் பேச்சைக் குறுக்கிட்டு, ‘உங்களுடைய மேற் சட்டையில் அந்தக் கறை எப்படி உண்டாயிற்று? தரையை தயவு செய்து அழுக்காக்கி விடாதீர்கள். நான் இப்பொழுது தான் அதை சுத்தம் செய்தேன்’, என்கிறாள். அதன் பின் அவன் தன் கதையைத் தொடர்ந்து சொல்லத் தயங்கக்கூடும்.

31. அல்லது, ஒருவேளை அவர்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம், அவன் ஓர் அனுபவத்தைச் சொல்லுகிறான், ஆனால் சில நுட்ப விவரங்களை விட்டு விடுகிறான் அல்லது எல்லா நுட்பங்களையும் சிறிதும் பிறழாமல் சரியாய்ச் சொல்லுகிறதில்லை. அவனுடைய மனைவி குறுக்கிடுகிறாள். முதலாவதாகப் பிழைகளைத் திருத்தவும், பின்பு கதையின் குறைகளை நிரப்பவும் அவ்வாறு செய்கிறாள். சீக்கரத்தில் அவன் பெருமூச்சு விட்டு, ‘ஏன், நீயே தான் சொல்லிவிடலாமே?’ என்கிறான்.

32. மற்றொரு பெண் தன் கணவனைப் பேசும்படி உற்சாகப்படுத்துகிற வகையானவள். அக்கறையற்றவள் போல் தோன்ற முயன்று கொண்டு, அதே சமயத்தில் அறிய கடும் ஆர்வ இயல்புடையவளாய் அவள் ‘நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ ‘அங்கே யார் இருந்தது?’ ‘என்ன நடந்தது?’ என்று கேட்கிறாள். வாழ்க்கையின் நடைமுறையான காரியங்கள் அல்ல, அதைவிட நம்பிக்கைக்குரிய இரகசியமாகத் தோன்றுகிற காரியங்களே அவளுடைய ஆவலைக் கிளறுகிறவகையாக இருக்கின்றன. தான் பொறுக்கிச் சேகரிக்கக்கூடிய சிறுசிறு துணுக்குத் தகவல்களை அவள் ஒன்றாக இணைத்து நடுநடுவே இடைவெளி போன்ற கிடைக்கக்கூடாத தகவல் நுட்பங்களை ஓரளவு கற்பனையால் நிரப்புகிறாள். இந்தத் தகவலில் சில காரியங்கள் அவளுடைய கணவன் பலரறியக்கூறக்கூடாதவையாக இருந்திருக்கலாம். மற்றவை தன் மனைவியுடன் கலந்து பேசுவதற்குத் தகுந்தவையாக இருந்திருக்கலாம், என்றாலும் வெளிப்படுத்தக்கூடாத, இரகசியங்களாக சொல்லப்பட்டிருக்கலாம். இந்தத் தகவலைப் பற்றி மற்றவர்களிடம் அவள் இப்பொழுது பேசுவாளாகில், நம்பிக்கைத் துரோகம் செய்தவளாவாள். “பிறர் இரகசியத்தை நீ வெளியிடாதே,” என்று நீதிமொழிகள் 25:9 (தி.மொ.) எச்சரிக்கிறது. அவள் அப்படி வெளிப்படுத்துவாளாகில் அது பிரச்னைகளை உண்டுபண்ணும். எதிர்காலத்தில் தயக்கமற்றவனாக அவளுடன் பேசுவதைப் பற்றி அவன் எப்படி உணரக்கூடும்?

33. இன்னும் மூன்றாவது வகையான பெண், அவள் தானேயும் அதிகமாகப் பேசுகிறவளல்ல. வீட்டைச் சுற்றி அவசியமான வேலைகளை எப்படிச் செய்வதென்று அவள் அறிந்திருக்கிறாள் ஆனால், அவள், ஒரு சில வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர அதிகம் பேசுவது வெகு அரிதாகவே இருக்கிறது. அவளோடு உரையாட முயலுகிற எவரும் தாங்கள் தாமே எல்லாப் பேச்சையும் பேசி முடிக்க வேண்டியதாயிருக்கிறது. ஒருவேளை அவள் வெட்கப்பட்டு ஒதுங்குகிறவளாக இருக்கலாம், அல்லது அவள் சிறு பிள்ளையாக இருக்கையில் கல்வி பயிலுவதற்கு அதிக வாய்ப்பு இருந்திருக்காது. காரணம் என்னவாக இருந்தாலும், அவளோடு உரையாட எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன.

34. ஆனால் மாற்றங்கள் செய்யப்படலாம். உரையாடும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளலாம். ஒரு பெண் தன் வீட்டு வேலையை மாத்திரமல்லாமல், பயனுடைய வாசிப்பையும் மற்ற ஆட்களுக்குத் தயவான செயல்களையும் செய்கிறாளென்றால் தன் துணைவரோடு பகிர்ந்து கொள்ள அவளுக்குக் கட்டியெழுப்பும் காரியங்கள் இருக்கும். வெற்றிகரமான உரையாடலுக்குப் பகிர்ந்து கொள்ளுதல் தேவைப்படுகிறது. மரியாதையுங்கூட தேவைப்படுகிறது—கணவன் சொல்வதைச் சொல்லி முடிக்கும்படி விடுவதற்கும், அதை அவன் தன் சொந்த முறையில் சொல்ல விடுவதற்கும் தகவலை நம்பிக்கைக்குரிய அந்தரங்கமாக வைத்திருக்க வேண்டியபோது அவ்வாறு வைக்கத் தெரிந்திருப்பதற்கும் போதிய மரியாதை தேவை. பிரசங்கி 3:7 சொல்லுகிற பிரகாரம்: “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.”

35. ஆகையால், உங்கள் கணவர் வெகு அரிதாகவே உங்களிடம் பேசுகிறார் என்று முறையிடுவதற்குப் பதிலாக, பேசுவதை அவருக்கு ஓர் இன்பமாக்கும்படி செய்ய நீங்கள் பிரயாசப்படலாம் அல்லவா? அவர் செய்யும் காரியங்களில் அக்கறையுள்ளவர்களாக இருங்கள். அவர் பேசுகையில் ஆவலுடன் கவனமாய்ச் செவி கொடுங்கள். உங்களுடைய பிரதிபதிலானது, அவரிடமாக நீங்கள் கொண்டிருக்கிற அனல் கொண்ட அன்பையும் ஆழ்ந்த மரியாதையையும் பிரதிபலிக்கட்டும். நீங்கள் எந்தக் காரியங்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறீர்களோ அவை உடன்பாடான கட்டியெழுப்பும் இயல்புடையனவாக இருக்கும்படி நிச்சயமாயிருங்கள். உரையாடல் உங்களிருவருக்கும் இன்பமாயிருப்பதாக நீங்கள் சீக்கிரத்தில் காணக்கூடும்.

“போதனையின்றி ஆதாயப்படுத்திக் கொள்ளுதல்”

36. சில சமயங்களில், வார்த்தைகளைப் பார்க்கிலும் செயல்கள் சத்தமாய்ப் பேசுகின்றன, முக்கியமாய் கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கையுள்ள உடன் விசுவாசிகளாக இராத கணவர்களைக் குறித்ததில் இவ்வாறு இருக்கிறது. இவர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு கூறினான்: “பயபக்தியோடுகூடிய (ஆழ்ந்த மரியாதையோடுகூடிய, NW) உங்கள் கற்புள்ள நடக்கையை, அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) தன்னுடைய மனைவி எப்பொழுதும் தனக்குப் “பிரசங்கித்துக் கொண்டிருப்ப”தாகவும் தான் அதை வெறுப்பதாகவும் அவிசுவாசியான கணவன் குறைகூறுவது பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்மாறாக, கடவுளுடைய வார்த்தையின் சத்தியம் தங்கள் மனைவிகளில் உண்டுபண்ணியிருக்கிற மாற்றத்தைக் காண்பதன் மூலம் மற்ற கணவர்கள் விசுவாசிகளாகியிருக்கின்றனர். ஒரு பிரசங்கத்தைக் கேட்பதைப் பார்க்கிலும் அதைக் காண்பதன் மூலமே பெரும்பாலும் மக்கள் மனதில் ஆழ்ந்து கவரப்படுகிறார்கள்.

37. அவிசுவாசியான உங்கள் துணைவரிடம் நீங்கள் பேசுகையில் வேதவசனம் சொல்லுகிற பிரகாரம், “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்,” ருசியுள்ளதாயும், அல்லது “உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” பேசுவதற்கு ஒரு காலமுண்டு. “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்,” என்று பைபிள் சொல்லுகிறது. அவர் ஏதோவொன்றைப் பற்றி சோர்வடைந்திருக்கிறாரா? ஒருவேளை வேலை செய்கிற இடத்தில் காரியங்கள் ஏதோ தவறாகச் சென்றிருக்கலாம். இப்பொழுதுதானே அவருடைய நிலையை விளங்கிக் கொண்டு சொல்லும் ஒரு சில வார்த்தைகளை, அவர் அருமையானதாக இருதயத்தில் வைத்துப் பாராட்டக்கூடும். “இனிய சொற்கள் . . . ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” (கொலோசெயர் 4:6; நீதிமொழிகள் 25:11; 16:24) அல்லது, சூழ்நிலைமையைப் பொறுத்ததாய், உங்கள் கையை அவருடைய கைக்குள் வைப்பது தானே எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடும்: எனக்கு விளங்குகிறது, நான் உம்முடைய சார்பில் இருக்கிறேன், என்னால் கூடுமானால் நான் உதவி செய்வேன், என்று சொல்வது போல் இது இருக்கும்.

38. உங்களுடைய விசுவாசத்தில் அவர் உங்களோடு ஒருமைப்பட்டவராக இல்லை என்றபோதிலுங்கூட, நீங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. உங்களுடைய நல் நடத்தையானது ஏற்ற காலத்தில் அவரை மாற வைத்து, இவ்வாறாக அவர் உங்கள் விசுவாசத்தில் பங்கு கொள்ளும்படி செய்யக்கூடும். அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த நாளாயிருக்கும்! அந்தக் காலம் வந்தால், உங்களை நேசிப்பதற்கு தான் முன்னொரு போதும் அறிந்திராத அதிக காரணங்கள் தனக்கு இருக்கிறதென்பதை அவர் உணருவார். ஏனென்றால் உங்கள் பயபக்தியும், அதோடுகூட, சரியென்று நீங்கள் அறிந்ததன் சார்பாக நிலைநின்ற உங்கள் உறுதியும், அவர் “மெய்யான ஜீவனைப்” பற்றிக் கொள்ள அவருக்கு உதவி செய்திருக்கும்.—1 கொரிந்தியர் 7:13-16; 1 தீமோத்தேயு 6:19.

39. தங்கள் கணவர்கள் விசுவாசிகளாக இருந்தாலும் சரி, அவிசுவாசிகளாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மனைவிகள், “கடவுளின் வசனம் தூஷிக்கப்படாதபடி, தங்கள் புருஷரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும் நிதான புத்தியுள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டு வேலை செய்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷருக்கு அடங்கி நடக்கிறவர்களுமாயிருக்கும்படி” வேத எழுத்துக்கள் ஊக்கமூட்டுகின்றன.—தீத்து 2:4, 5.

40. மனைவியாகிய நீங்கள் உங்கள் திறமையால் கூடிய மிகச் சிறந்த வண்ணமாய் இதைச் செய்வீர்களானால், உங்கள் கணவனால் மாத்திரமல்ல, யெகோவா தேவனாலுங்கூட நீங்கள் மிக அருமையாய் நேசிக்கப்படுவீர்கள்.

[கேள்விகள்]

1-4. கணவர்கள் தங்கள் அன்பை மனைவிகளுக்கு நிச்சயப்படுத்துவதைப் பற்றி பெண்கள் சில சமயங்களில் என்ன குறை கூறுகிறார்கள்?

5. தன் கணவரால் அருமையாய் நேசிக்கப்படுவதற்கு மனைவி தன்னை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும்?

6, 7. (எ) எந்தப் பாகத்தை வகிக்கும்படி பெண்ணைத் தாம் உண்டாக்கினதாக யெகோவா ஆதியாகமம் 2:18-ல் சொன்னார்? (பி) மனைவி தன் கணவனுக்கு உண்மையான துணையாக இருப்பதற்கு அவள் பங்கில் என்ன செய்வது அவசியமாயிருக்கிறது?

8. தன் கணவர் சரியான தலைமை வகிப்பைச் செலுத்துவதற்கு மனைவி அவருக்கு எப்படி உற்சாகமூட்டக்கூடும்?

9. திறமையுள்ள மனைவியைப் பற்றி நீதிமொழிகள் 31:10 என்ன சொல்லுகிறது?

10, 11. நீதிமொழிகள் 31:15-ன் விவரிப்புக்குத் தான் பொருந்துகிறாளென்று ஒரு மனைவி எப்படிக் காட்டக்கூடும்?

12. நீதிமொழிகள் 31:14-ல் சொல்லப்பட்டதற்கிசைய ஒரு பெண் நடப்பதில் எதுவும் சேர்த்துக் கொள்ளப்படலாம்?

13. நீதிமொழிகள் 31:27-ன் படி வீட்டைக் கவனிப்பதன் சம்பந்தமாக, திறமையுள்ள மனைவியிடம் என்ன எதிர்பார்க்கப்படலாம்?

14, 15. உடை, அலங்காரம் ஆகியவற்றைக் குறித்ததில் பெண்ணுக்குப் பைபிள் என்ன புத்திமதி கொடுக்கிறது?

16. நன்றி மதித்துணரும் கணவன் இப்படிப்பட்ட மனைவியைப் பற்றி எவ்வாறு உணருவான்?

17, 18. பாலுறவைப் பற்றிய மனைவியின் கருத்து எப்படி அவளுடைய கணவன் அவளைப் பற்றி எவ்வாறு உணருகிறான் என்பதைப் பாதிக்கக்கூடும்?

19. (எ) நீண்ட காலப்பகுதிகளாக தன் துணைக்குப் பாலுறவுகளை மறுப்பது தவறாக இருக்குமென்று பைபிள் எப்படிக் காட்டுகிறது? (பி) பாலுறவு சம்பந்தப்பட்ட காரியங்களில் விவாகத் துணைவர்களுடைய நடத்தையின் தகுதி அல்லது தகாத தன்மையின் பேரில் தீர்ப்பு செய்யும்படி, விவாக இணைப்புக்குப் புறம்பேயுள்ள ஆட்களைக் கேட்பது ஏன் அவசியமாயிருக்கக்கூடாது?

20. நிபந்தனைகளை வைத்து பேரம் செய்யும் நோக்கங்களுக்காக பாலுறவை ஒரு மனைவி பயன்படுத்துகிறாளென்றால், அதன் விளைவு என்னவாயிருக்கிறது?

21-23. சிம்சோனின் காரியத்தில் விளக்கமாய்க் காட்டப்பட்டிருக்கிறபடி, ஒரு பெண்ணின் அழுகையும் ஓயாமல் நச்சுப்படுத்துதலும் எப்படி மகிழ்ச்சியைக் கெடுக்கக்கூடும்?

24-27. (எ) மனைவி ஓயாமல் நச்சுப்படுத்துவதன் விளைவைப்பற்றி நீதிமொழிகளின் புத்தகம் என்ன சொல்லுகிறது? (பி) இந்தப் புத்திமதியைக் கொடுப்பதற்கு இது ஏன் பெண்களைத் தனித்து தேர்ந்தெடுக்கிறது? (சி) எது, தன் மனைவிக்கு இனிய காரியங்களைச் செய்ய ஆவல் கொள்ளும்படி ஒரு கணவனை அநேகமாய்த் தூண்டக்கூடும்?

28-35. (எ) தன் மனைவியோடு உரையாடுவதை கணவனுக்குக் கடினமாக்கக்கூடிய உரையாடல் பழக்க வழக்கங்களை விவரியுங்கள். (பி) கணவனுக்கும் மனைவிக்குமிடையில் உரையாடலை முன்னேற்றுவிக்க என்ன செய்யப்படக்கூடும்?

36-38. உடன் விசுவாசியாக இராத ஒரு துணையின் இருதயத்தை எட்டுவதற்கு சில வழிகள் யாவை?

39, 40. தீத்து 2:4, 5-ல் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள எந்தப் பண்புகள் ஒரு மனைவியைத் தன் கணவனுக்கு மாத்திரமல்லாமல், யெகோவா தேவனுக்குங்கூட அருமையானவளாக்குகிறது?

[பக்கம் 57-ன் படம்]

“ஒரு திறமையுள்ள மனைவி . . . அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.”-நீதிமொழிகள் 31:10

[பக்கம் 64-ன் படம்]

சிம்சோனின் வாழ்க்கையில் பெண்கள்