Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் விவாகத்திற்கு நல்ல அஸ்திபாரத்தைப் போடுதல்

உங்கள் விவாகத்திற்கு நல்ல அஸ்திபாரத்தைப் போடுதல்

அதிகாரம் 2

உங்கள் விவாகத்திற்கு நல்ல அஸ்திபாரத்தைப் போடுதல்

ஒரு வீடு, வாழ்க்கை அல்லது விவாகமானது எவ்வளவு நல்லதாயிருக்கிறதென்பது அது அமைந்திருக்கிற அஸ்திபாரத்தைப் பொறுத்ததாயிருக்கிறது. இயேசு, தம்முடைய உபமானங்கள் ஒன்றில் இரண்டு ஆட்களைப் பற்றி பேசினார்—ஒருவன் உறுதியான கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின விவேகமுள்ளவன், மற்றொருவன் மணற்பாங்கான நிலத்தின் மேல் கட்டின புத்தியில்லாதவன். பெரும் புயல் எழும்பி, பெரு வெள்ளமும் காற்றும் அந்த வீடுகளின் மேல் மோதியடித்தபோது, உறுதியான கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு உறுதியாய் நின்றது. மணலின் மேல் கட்டப்பட்டது பெரும் அழிவுடன் நொறுங்கி வீழ்ந்தது.

2வீடுகளை எப்படிக் கட்டுவதென்று இயேசு மக்களுக்குக் கற்பித்துக் கொண்டில்லை. தங்களுடைய வாழ்க்கையை நல்ல அஸ்திபாரத்தின் மேல் கட்டவேண்டிய அவசியத்தையே அவர் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். கடவுளுடைய செய்தியைக் கொண்டுவந்தவராக அவர் பின்வருமாறு கூறினார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன்” உறுதியான கற்பாறையின் மேல் கட்டின மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். ஆனால் “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன்” மணலின் மேல் கட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்.—மத்தேயு 7:24-27, தி.மொ.

3இரண்டு காரியங்களிலும் விவேகமான ஆலோசனையை வெறுமென கேட்பதும் என்ன செய்வதென்று அறிந்திருப்பதும் மாத்திரமே போதுமானதல்ல என்று இயேசு காட்டுகிறார். வெற்றிக்கும் தோல்விக்குமுள்ள வித்தியாசத்தை உண்டுபண்ணுவது அந்த விவேகமான ஆலோசனை சொல்வதைச் செய்வதேயாகும். ‘இந்தக் காரியங்களை அறிந்திருக்கிறீர்களென்றால், இவற்றைச் செய்வீர்களானால் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பீர்கள்.’—யோவான் 13:17.

4விவாகத்தைக் குறித்ததில் இது நிச்சயமாக உண்மையாயிருக்கிறது. நம்முடைய விவாகத்தைக் கற்பாறையைப் போன்ற அஸ்திபாரத்தின் மேல் நாம் கட்டுவோமானால், அது வாழ்க்கையின் நெருக்கடிகளைத் தாங்கி நிற்கும். ஆனால் இந்த நல்ல அஸ்திபாரம் எங்கிருந்து வருகிறது? விவாகத்தை உண்டுபண்ணினவராகிய யெகோவா தேவனிடமிருந்தே வருகிறது. முதல் மனித ஜோடியைக் கணவனும் மனைவியுமாக ஒன்றாகக் கொண்டு வந்தபோது அவர் விவாகத்தைத் தொடங்கி வைத்தார். பின்பு அவர்களுடைய சொந்த நன்மைக்காக ஞானமான கட்டளைகளை அவர் அவர்களுக்குக் கொடுத்தார். இந்த ஞானமான கட்டளைகளை அவர்கள் பின்பற்றினார்களா இல்லையா என்பது ஒரு நித்திய மகிமையான எதிர்காலம் அவர்களுக்கு இருந்ததா அல்லது ஓர் எதிர்காலம் அவர்களுக்கு இல்லவே இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாயிருக்கும். அவர்கள் இருவரும் கடவுளுடைய கட்டளைகளைத் தெரிந்திருந்தார்கள், ஆனால் விசனகரமாய், தன்னலம் இந்த வழிகாட்டும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்கும்படி அவர்கள் அனுமதித்தார்கள். அந்த ஆலோசனையைப் புறக்கணிக்க அவர்கள் தெரிந்து கொண்டார்கள், இதன் விளைவாக, அவர்களுடைய விவாகமும் அவர்களுடைய வாழ்க்கையும் மணலின்மேல் கட்டப்பட்ட புயல் மோதிய வீட்டைப்போல் நொறுங்கி வீழ்ந்தன.

5யெகோவா தேவன் அந்த முதல் ஜோடியை விவாகத்தில் ஒன்றாய் இணைத்து வைத்தார், ஆனால் இன்று தம்பதிகளுக்கு விவாக ஏற்பாடுகளை அவர்தாமே செய்கிறதில்லை. என்றபோதிலும், மகிழ்ச்சியான விவாகங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற ஞானமான ஆலோசனைகள் இன்னும் கிடைக்கக்கூடியவையாயிருக்கின்றன. இந்த ஆலோசனைகளைத் தான் பொருத்திப் பிரயோகிப்பானா என்பதைத் தீர்மானிப்பது, இன்று விவாகம் செய்யும்படி சிந்தனை செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தனி ஆளையும் பொறுத்ததாயிருக்கிறது. எதிர்கால துணையைக் குறித்ததில் ஞானமான தீர்மானம் செய்வதற்கு உதவி செய்யும்படி நாம் கடவுளைக் கேட்கலாம் என்று கடவுளுடைய வார்த்தையுங்கூட காட்டுகிறது.—யாக்கோபு 1:5, 6.

6நிச்சயமாகவே, சந்தர்ப்ப சூழ்நிலைமைகள், பூமியின் வெவ்வேறு பகுதிகளில் பெரிதளவாய் வேறுபடுகின்றன. இன்று பல பகுதிகளில் ஆண்களும் பெண்களும் விவாகத் துணையைத் தாங்கள்தாமே தெரிந்து கொள்ளுகின்றனர். ஆனால் பூமியின் ஜனத்தொகையில் ஒரு பெரும் பகுதியாருக்குள் பெற்றோரே விவாகத்தை ஏற்பாடு செய்கிறார்கள், சில சமயங்களில் “விவாக இணைவு செய்கிறவர்களின்” மூலமாக அவ்வாறு ஏற்பாடு செய்கிறார்கள். சில பகுதிகளில் ஓர் ஆணானவன் பெண்ணுடைய பெற்றோருக்கு “மணமகள் விலையைச்” செலுத்தின பின்பே மனைவியை அடைகிறான், மேலும் அந்த விலையின் அளவு அவ்வளவு அதிக உயர்வாயிருக்க அந்த ஆண் அந்த விவாகத்தை எட்ட முடியாமலுங்கூட செய்துவிடக்கூடும். என்றபோதிலும், சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும், விவாகம் நிலையாய் வெற்றிகரமாயிருப்பதற்கேதுவாக உதவி செய்யக்கூடிய ஆலோசனையை பைபிள் அளிக்கிறது.

முதலாவதாக உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்

7விவாகத்திலிருந்து நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? உடல் சம்பந்தமாய், உணர்ச்சி சம்பந்தமாய், ஆவிக்குரிய பிரகாரமாய் உங்களுடைய தேவைகள் என்ன? இவற்றை அடைவதற்கு உங்கள் உள்ளார்ந்த பண்பு, மதிப்புகள், உங்கள் இலக்குகள், உங்கள் முறைகள் யாவை? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். ஒருவன் ஒருவேளை நினைக்கக்கூடியதுபோல் இது அவ்வளவு எளிதாக இல்லை. நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பதற்கு உணர்ச்சி சம்பந்தப்பட்ட முதிர்ச்சி வேண்டியதாயிருக்கிறது, அப்பொழுதுங்கூட ஒவ்வொரு நுட்பத்திலும் நாம் உண்மையில் இருக்கிறபடி நம்மை நாமே பார்ப்பது கூடாததாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 4:4-ல் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினபோது இதைக் குறிப்பிட்டுக் காட்டினான்: “என்னிடம் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் நான் நீதிமானாகத் தீர்க்கப்படுகிறது அதனாலல்ல; என்னை நியாயம் விசாரிக்கிறவர் ஆண்டவரே [யெகோவாவே, NW].”—தி.மொ.

8ஒரு சந்தர்ப்பத்தில், யோபு தெளிவாக உணரத் தவறின சில உண்மைகளை அவன் விளக்க விவரமாகக் காணும்படி செய்ய சிருஷ்டிகர் விரும்பினார், ஆகவே கடவுள் அவனிடம், “நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு,” என்று கூறினார். (யோபு 38:3) நம்மை நாமே அறிவதற்கும் உள் நோக்கங்களைக் கண்டுபிடித்துக் கொள்வதற்கும் கேள்விகள் நமக்கு உதவி செய்யக்கூடும். ஆகையால் விவாகத்தில் உங்களுக்குள்ள அக்கறையைப் பற்றி உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

9உடல் சம்பந்தமான தேவைகளை—உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை—திருப்தி செய்து கொள்வதற்காகவா நீங்கள் விவாகம் செய்ய விரும்புகிறீர்கள்? “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்,” என்று பைபிள் சொல்லுகிற பிரகாரம் இவை நம்மெல்லாருக்கும் அடிப்படையான தேவைகள். மேலும் பாலுறவுக்கான தேவையினிமித்தமாகவா? இதுவுங்கூட இயல்பான ஆசையே. காம உணர்ச்சியால் “வேகிறதைப் பார்க்கிலும் விவாகஞ் செய்து கொள்ளுகிறது நலம்.” (1 தீமோத்தேயு 6:8; 1 கொரிந்தியர் 7:9, தி.மொ.) தோழமைக்காகவா? இந்த விவாக ஏற்பாட்டைக் கடவுள் ஸ்தாபித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இதுவாக இருந்தது. மற்றொரு காரணம் இரண்டு ஆட்கள் வேலையில் ஒன்றாக ஒத்துழைப்பதற்காகும். (ஆதியாகமம் 2:18; 1:26-28) நல்ல வேலையை நிறைவேற்றுவதானது மனத்திருப்திக்கு ஊற்றுமூலமாயிருக்கிறது மேலும் அதன் பலனையுடையதாயிருக்க வேண்டும்: “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:13.

10காதல் கொண்டிருக்கும் ஆட்கள் இருதயத்தைத் தங்கள் உணர்ச்சிகளுக்குரிய ஒரு சின்னமாக வெகு காலமாய்க் கருதிவந்திருக்கின்றனர். என்றபோதிலும், பைபிளானது இருதயத்தைப் பற்றி பின்வருமாறு தடுமாறவைக்கும் ஒரு கேள்வியைக் கேட்கிறது: “அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) உங்கள் இருதயத்தில் இருப்பதை அறிந்திருக்கிறீர்களென்று நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா?

11அநேக தடவைகளில், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சி மற்ற உணர்ச்சிவசப்பட்ட தேவைகளைக் காணாதபடி நம் கண்களைக் குருடாக்குகிறது. துணையைத் தேடுவதில், புரிந்து கொள்ளும் ஆற்றல், பரிவு, இரக்கம் ஆகியவற்றைப் பெறுவதற்கான உங்கள் தேவைக்கு நீங்கள் போதிய முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? நம்மெல்லாருடைய அடிப்படையான தேவைகளானவை: நம்பிக்கையோடு அந்தரங்கங்களைப் பேசக்கூடும்படி, புண்படுத்தப்படுவோம் என்ற பயமில்லாமல் நம்மை வெளிப்படுத்தக்கூடும்படி, நமக்கு மிக நெருங்கியவராக இருக்கும் ஒருவரே ஆம், “தன்னுடைய கனிவான இரக்கங்களுக்குரிய கதவை” நமக்கு மூடிக்கொள்ளாத ஒருவரே. (1 யோவான் 3:17, NW) இவையெல்லாவற்றையும் உங்கள் துணைக்கு நீங்கள் கொடுக்கக்கூடமா, பதிலுக்குத் தன் பங்காக அவன் அல்லது அவள் இவற்றை உங்களுக்குக் கொடுப்பானா[ளா]?

12“தங்கள் ஆவிக்குரிய தேவையைப் பற்றி உணர்வுள்ளவர்களாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3, NW) உங்களுடைய ஆவிக்குரிய தேவை என்ன? இது ஒரு வாழ்க்கைத் தொழிலை, செல்வங்களை, பொருளுடைமைகளைத் தேடுவது சம்பந்தப்பட்டதா? இவற்றை நாடித் தொடருவது உள்ளான சமாதானத்தையும் திருப்தியையும் கொண்டு வருகிறதா? பொதுவாகக் கொண்டுவருகிறதில்லை. ஆகவே உடல் சம்பந்தமான எல்லாத் தேவைகளும் திருப்தி செய்யப்பட்ட பின்புங்கூட எல்லா ஆட்களுக்குள்ளும் இந்த ஆவிக்குரிய பசி இருந்து கொண்டிருக்கிறதென்பதை நாம் மதித்துணர வேண்டும். நம்முடைய ஆவி அடையாளங் கண்டுணருவதற்குப் பசியாயிருக்கிறது—நாம் யார், நாம் என்னவாக இருக்கிறோம், நாம் ஏன் இங்கே இருக்கிறோம், நாம் எங்கே போகிறோம் என்பவற்றை அறிய ஆவல் கொள்ளுகிறது. இந்த ஆவிக்குரிய தேவைகளையும் இவற்றைத் திருப்தி செய்து கொள்வதற்கான வழியையும் பற்றி நீங்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கிறீர்களா?

இசைவு பொருத்தம்

13உடல், மனம், ஆவி ஆகியவற்றின் இந்த எல்லாத் தேவைகளையும் நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களென்றால், உங்கள் எதிர்கால துணைவி அல்லது துணைவனுங்கூட இவற்றைப் புரிந்து கொண்டிருக்கிறாளா[னா] இல்லையா என்பது உங்களுக்குத் தெரியுமா? விவாகத்தில் மகிழ்ச்சியடைவதற்கான உங்களுடைய சொந்த குறிப்பிட்ட தேவைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது மட்டுமேயல்லாமல், உங்கள் துணைவி அல்லது துணைவனின் தேவைகளையுங்கூட தெளிவாக உய்த்துணர வேண்டும். உங்களுடைய துணைவி அல்லது துணைவனுங்கூட மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்று நீங்கள் நிச்சயமாகவே விரும்புகிறீர்கள். ஒருவருக்கு மகிழ்ச்சியின்மை இருவருக்குமே மகிழ்ச்சியின்மையைக் குறிக்கும்.

14இசைவு பொருத்தமில்லாமையின் காரணமாகப் பல விவாகங்கள் மகிழ்ச்சியின்மையில் அல்லது விவாகரத்துவில் முடிவடைகின்றன. இசைவு பொருத்தமில்லாமை என்பது ஒரு பெரிய வார்த்தையாயிருக்கிறது, என்றாலும் விவாகத்தில் அதன் முக்கியத்துவம் அதைப்பார்க்கிலும் பெரியதாயிருக்கிறது. ஒத்துழைக்கும் ஒரு குழுவாக இரண்டு ஆட்கள் நன்றாய்ப் பொருத்தமாக அமையவில்லையென்றால், வாழ்க்கையை நடத்துவது கடினமாய் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலைமையானது, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் செய்யப்பட்ட அந்த ஏற்பாட்டை மனதுக்குக் கொண்டுவருகிறது; அங்கே வேறுபட்ட உடலமைப்பையும் பலத்தையுமுடைய இரண்டு மிருகங்களை ஒரே நுகத்தில் ஒன்றாய்க் கட்டக்கூடாதென்று அது இரக்கத்துடன் தடைக் கட்டளையிட்டது; அவ்விதம் செய்வதனால் உண்டாகக்கூடிய கடினத்தின் காரணமாக அவ்வாறு கட்டளையிட்டது. (உபாகமம் 22:10) நல்ல பொருத்தமான இணையில்லாதவர்களாக இருந்தும் விவாகத்தில் ஒருமிக்க இணைக்கப்படுகிற ஓர் ஆணையும் பெண்ணையும் குறித்ததில் இவ்வாறே இருக்கிறது. விவாக ஜோடிகள் ஒருவருக்கொருவர் வேறுபட்ட அக்கறைகளையும், நண்பர்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வேறுபட்ட சுவையுணர்வுகளையும் உடையவர்களாய், ஏதோ ஒரு சில காரியங்களில் மாத்திரமே ஒருவாறு ஒத்திருப்பவர்களாக இருக்கிறார்களென்றால், விவாகப் பிணைப்புகள் மீறிய கடும் சிரமத்திற்குள்ளாகின்றன.

15“கலந்து ஆலோசியாவிடின் எண்ணிய காரியம் பலியாது,” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 15:22, தி.மொ.) விவாகம் செய்ய எண்ணமிடுகையில், நடைமுறையான காரியங்கள் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கின்றனவா? ஆணின் உத்தியோகம் அந்த விவாகத்திற்குள் எப்படிப் பொருந்தும்? இது, நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள், நடைமுறையான தேவைகளைப் பூர்த்திசெய்ய எவ்வளவு பண வருமானம் வந்துகொண்டிருக்கும் என்பவற்றைத் தீர்மானிக்கும். குடும்ப வரவு செலவுத் திட்டத்தை யார் கையாளுவார்? மனைவி வேலை செய்வதற்கு அவசியம் இருக்கிறதா, இது விரும்பத்தக்கதா? திருமண சம்பந்தத்தினால் உறவினராகிறவர்களுடன் உங்கள் உறவு தொடர்பு என்னவாயிருக்கவேண்டும், முக்கியமாய் இருதரப்பினரின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்டதில்? பாலுறவு, பிள்ளைகள், பிள்ளைகளைப் பயிற்றுவித்தல் ஆகியவற்றைக் குறித்ததில் ஒவ்வொருவரும் எவ்வாறு உணருகிறீர்கள்? ஒருவர் மற்றொருவரின் மேல் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறீர்களா, அல்லது பரிவான சிந்தனை இவ்வுறவை ஆட்கொள்ளுமா?

16இந்தக் கேள்விகளெல்லாம், மேலும் மற்றவையுங்கூட, அமைதியான மனநிலையோடும் நேர்மை பொருத்தத்துடனும் கலந்தாலோசிக்கப்பட்டு, நீங்கள் இருவரும் அமரிக்கையாய் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு முறையில் முடிவுசெய்யப்படக்கூடுமா? பிரச்னைகளை ஒன்றாக எதிர்ப்பட்டு தீர்த்து பேச்சுத்தொடர்புக்குரிய வழி எப்பொழுதும் திறந்திருக்கும்படி வைக்கப்படக்கூடுமா? இது வெற்றிகரமான விவாகத்திற்கு உயிர் நாடியாய் இருக்கிறது.

17ஒரே வகையான சூழ்நிலை அனுபவங்களிலிருந்து வந்த இரண்டு ஆட்களுக்கிடையே வழக்கமாய் அதிகப்படியான இசைவு பொருத்தம் இருந்து வருகிறது. எய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டாண்டிங் என்ற ஆங்கில புத்தகமானது, பக்கம் 1114-ல் பைபிள் காலங்களில் நடந்த விவாகத்தைப் பற்றி பின்வருமாறு சொல்லுகிறது:

“ஓர் ஆண் ஒரு மனைவிக்காகத் தன் சொந்த உறவினரின் அல்லது கோத்திரத்தின் வட்டாரத்திற்குள்ளேயே தேடுவது பொதுவாய் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நியமமானது, லாபான் யாக்கோபிடம் கூறின பின்வரும் வார்த்தைகளில் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: ‘நான் அவளை [என் குமாரத்தியை] அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப் பார்க்கிலும் அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம்.’ (ஆதி. 29:19) முக்கியமாய், இது, யெகோவாவின் வணக்கத்தாருக்குள் கடைப்பிடிக்கப்பட்டது. ஆபிரகாம் இதற்கு மாதிரியாயிருந்தான். தான் அவர்களுக்குள் தங்கியிருந்த அந்தக் கானானியரின் குமாரத்தி ஒருத்தியைத் தன் குமாரனாகிய ஈசாக்குக்குத் தெரிந்து கொள்வதற்கு மாறாக, அவனுக்கு ஒரு மனைவியைக் கொண்டுவரும்படி தன் சொந்த நாட்டிலிருந்தத் தன் உறவினரிடத்திற்கு ஆள் அனுப்பினான். (ஆதி. 24:3, 4)”

18இன்று ஒருவன் வெகு நெருங்கிய உறவினரை விவாகம் செய்வது உசிதமென்று இது நிச்சயமாகவே அர்த்தம் கொள்ளுகிறதில்லை, ஏனெனில் இது ஊனமுள்ள குழந்தைகளில் விளைவடையக்கூடிய பிறப்பு மூலத்துக்குரிய பிரச்னைகளை உண்டுபண்ணக்கூடும். என்றபோதிலும் ஆட்கள் கொண்டிருக்கிற உள்ளார்ந்த பண்பு மதிப்புகள் அவர்கள் வளர்ந்த குடும்ப சூழ்நிலை அனுபவங்களின் பேரில் அதிகம் சார்ந்திருக்கின்றன. பாலிய பருவத்தின்போதும் வாலிபப் பருவத்தின்போதும் ஒருவனின் நடத்தையும் உணர்ச்சிகளும் இயல்பாய்க் குடும்பச் சூழ்நிலையால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றன. இருதரப்பினரின் வளர்ப்பு சூழ்நிலை அனுபவங்கள் ஒத்தவையாக இருக்கையில், ‘அதே மண்ணில் வளர்ந்து அதே தட்பவெப்ப நிலையில் செழித்தோங்குவதை’ அவர்கள் சாதாரணமாய்ச் சுலபமாகக் காண்கின்றனர். என்றபோதிலும், வேறுபட்ட வளர்ப்பு சூழ்நிலை அனுபவங்களையும் தொடக்கங்களையும் உடைய ஆட்களுங்கூட விவாகத்தில் தக்கவாறு நல்ல சரிப்படுத்தல்களைச் செய்து கொள்ளக்கூடும், முக்கியமாய் உணர்ச்சிவசம் சம்பந்தப்பட்டதில் இருவரும் முதிர்ச்சியுள்ளவர்களாய் இருப்பார்களேயானால் அவ்வாறு செய்துகொள்ளலாம்.

19உங்களுடைய எதிர்காலத் துணையின் குடும்பத்தைப் பற்றி நீங்கள் ஏதாவது அறியக்கூடுமானால் அது நன்மை பயக்குவதாயிருக்குமென்பது தெளிவாயிருக்கிறது. என்றாலும் அவன் அல்லது அவள் குடும்பத்துடன்—பெற்றோருடன் சகோதர சகோதரிகளுடன் எப்படிப்பட்ட உறவு உடையவனாயிருக்கிறான்[றாள்] என்பதையும் காணுங்கள். வயதில் பெரிய ஆட்களை அவன் அல்லது அவள் எப்படி நடத்துகிறான்[றாள்] அல்லது இளம் பிள்ளைகளுடன் எப்படி நடந்து கொள்கிறான்[றாள்]?

20இந்த எல்லா முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளெல்லாம் எடுத்திருந்தாலுங்கூட, இதை, அதாவது: இரண்டு ஆட்களுக்கிடையே இசைவு பொருத்தம் ஒருபோதும் பரிபூரணமாயிராது என்பதை நீங்கள் இன்னும் நினைவில் வைக்கவேண்டும். இருவருக்கும் குறைபாடுகள் இருக்கும். சிலவற்றை விவாகத்திற்கு முன்பாகவே அவர்கள் கண்டுணர்ந்து கொள்ளக்கூடும்; வேறு சில குறைபாடுகள் பின்னால் அவர்களுக்குத் தெரியவரும். அப்பொழுது என்ன செய்வது?

21குறைபாடுகள் தாமே விவாகங்களைத் தோல்வியடையச் செய்வதில்லை, துணைவன் அல்லது துணைவி அதைப் பற்றி எப்படி உணருகிறான்[றாள்] என்பதே தோல்வி அல்லது வெற்றிக்குக் காரணம். குறைபாடுகளைவிட நல்ல நன்மைகளே எடையில் மேம்பட்டு நிற்பதை நீங்கள் காண்கிறீர்களா அல்லது கெட்டதன் பேரிலேயே உங்கள் கவனத்தை ஊன்றச் செய்து அதையே விடாமல் காண்கிறவர்களாக இருக்கிறீர்களா? மற்றவர்கள் உங்களுக்குப் பொறுத்து இடமளிப்பது தேவையாயிருக்கிறது, அதை நீங்கள் விரும்புகிறவர்களாயுமிருக்கிறீர்கள், அதேவிதமாக நீங்களும் மற்றவர்களுக்குப் பொறுத்து இடமளிக்கப் போதியளவு இசைந்து கொடுக்கிறவர்களாக இருக்கிறீர்களா? “அன்பு திரளான பாவங்களை மூடும்,” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறினான். (1 பேதுரு 4:8) விவாகம் செய்யும்படி நீங்கள் சிந்தனை செய்து கொண்டிருக்கிற அந்த ஆளிடமாக இவ்வகையான அன்பையுடையவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா? இல்லையென்றால் அந்த ஆளை நீங்கள் விவாகம் செய்யாதிருப்பது உங்களுக்கு நல்லதாயிருக்கும்.

‘அவரை மாற்ற என்னால் முடியும்’

22‘அவரை’ அல்லது ‘அவளை’ மாற்ற என்னால் முடியும், என்று நீங்கள் சொல்லுகிறீர்களா? ஆனால் நீங்கள் யாரில் காதல் கொண்டிருக்கிறீர்கள்? அவனோ அவளோ இப்பொழுது இருக்கிறபடியான இந்த ஆளிலா, அல்லது உங்கள் மாற்றியமைக்கும் முயற்சிகளுக்குப் பின் இருக்கப்போகிற அந்த ஆளிலா? நம்மை நாமே மாற்றிக் கொள்வதுதானேயும் கடினமாயிருக்கிறது, மற்றவர்களை மாற்றுவது அதைவிட மிக அதிகக் கடினமாயிருக்கிறது. என்றபோதிலும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் வல்லமை வாய்ந்த சத்தியங்கள் அந்தத் தனியாள் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளச் செய்யக்கூடும். மனதைத் தூண்டும் சக்தியில் புதியவனாக்கப்படுகிறவனாய் ஓர் ஆள் “பழைய சுபாவத்தைக் களைந்து போடக்”கூடும். (எபேசியர் 4:22, 23, NW) ஆனால் எதிர்கால துணைவி அல்லது துணைவன் உங்களுக்காக ஒரு திடீர் மாற்றத்தைச் செய்வதாகக் கொடுக்கும் வாக்கைக் குறித்து வெகு சந்தேகமுள்ளவர்களாக இருங்கள்! கெட்ட பழக்கங்கள் நிறுத்தப்படக்கூடும் அல்லது மட்டுப்படுத்தப்படக்கூடுமென்றாலும், இது கால மெடுக்கலாம், பல ஆண்டுகளுங்கூட எடுக்கலாம். பரம்பரையாக அடைந்திருக்கும் பண்புகளும் வளர்ப்பு சூழ்நிலை காரியங்களும் நமக்குத் திட்டவட்டமாய் ஓர் இயல்பான உடல் மற்றும் மனோபாவங்களைக் கொடுத்து நம்மைத் தனித்தனி ஆட்களாக்கும்படி குறிப்பிட்ட வழிகளில் நம்மை உருப்படுத்தி வைத்திருக்கின்றனவென்ற இந்த உண்மையையும் நாம் கவனியாமல் விட முடியாது. முன்னேற்ற மடையவும் பலவீனங்களை மேற்கொள்ளவும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய உண்மையான அன்பு நம்மைத் தூண்டி இயக்கக்கூடும் ஆனால் ஒரு துணையை, அவன் அல்லது அவளுக்குப் புதியதாகவும் இயல்புக்கு மாறானதுமான ஓர் உறவுக்குள்ளாவதற்கு வற்புறுத்த முயலும்படி அன்பு நம்மைத் தூண்டுவிக்காது.

23சிலர் தங்கள் மனதில் தங்கள் கற்பனை சார்பான ஓர் உருவச் சிலையை வைத்திருக்கின்றனர், மேலும் தங்கள் மனதைக் கடக்கும் ஒவ்வொரு மோக மயக்கத்தையும் இந்த உருவச் சிலைக்குள் பொருத்த அவர்கள் முயலுகிறார்கள். சாத்தியமல்லாத ஒரு கனவுக்குப் பொருத்தமாயிருக்க நிச்சயமாகவே ஒருவராலும் முடியாது, ஆனால் மோகக் கற்பனை மயக்கங் கொண்டவன்[வள்] அதை விடாப்பிடியாய் மனதில் ஊன்ற வைத்துக் கொண்டு அதை நிறைவேறும்படி தான் நேசிப்பவளை[னை] வற்புறுத்த முயற்சி செய்கிறான்[றாள்]. இது தோல்வியடைகையில் அவன் அல்லது அவள் மயக்கம் தெளிவிக்கப்பட்டவனாய்[ளாய்] தங்கள் மனக்கோட்டையின்படி வேறு ஓர் ஆளை தேடுகிறார்கள். அந்தக் கற்பனை வடிவான ஆளை ஒருபோதும் கண்டடைகிறதில்லை. தங்கள் சொந்த மனக்கோட்டை வடிவங்களுக்கப்பால் இராத ஒரு கனவுக் காட்சியிலுள்ள ஆளை அவர்கள் தேடுகிறார்கள். இவ்வாறு சிந்திக்கிற ஆட்கள் நல்ல விவாகத்திற்கு ஏற்றவர்களல்லர்.

24ஒருவேளை உங்களுக்கு இப்படிப்பட்ட மனக்கோட்டைகள் இருந்திருக்கலாம். தம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட காலங்களில் நம்மில் பலருக்கு இவ்வாறு இருக்கிறது; வாலிபர் பலருக்கு உண்டு. ஆனால் உணர்ச்சி சம்பந்தமான முதிர்ச்சி அதிகரித்துக் கொண்டு வர வர இப்படிப்பட்ட மனக்கோட்டைகள் செயல்படுத்த முடியாத வீண் காரியங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துணருகிறோம். விவாகத்தில் முக்கிய கவனிப்புக்குரியது மெய்ம்மையே, வெறும் கற்பனையல்ல.

25உண்மையான அன்பு பலர் எண்ணுவது போல் குருடாயில்லை. உண்மையான அன்பு திரளான குறைபாடுகளை மூடும், ஆனால் அது அவற்றை அறியாமலில்லை. மற்றவர்கள் முன்காணக்கூடிய பிரச்னைகளைக் காண மறுத்து, குருடாயிருப்பது அன்பல்ல, அது தீவிர காமமே. தொல்லைப்படுத்தும் தன் சொந்த சந்தேகங்களையுங்கூட அது மேலெழும்பாதபடி அமிழ்த்துகிறது; என்றாலும் பின்னால் அவை மேலெழும்புமென்று நிச்சயமாயிருங்கள். காதல் கொள்ளும் காலத்தின்போது வெறுப்புண்டாக்குகிற உண்மைகளுக்கு உங்கள் கண்களை மூடிக்கொள்வீர்களானால், விவாகத்திற்குப் பின்பு அவற்றை நீங்கள் நிச்சயமாகவே எதிர்ப்படுவீர்கள். நாம் பிரியப்படுத்த அல்லது கவர்ந்திழுக்க நம்புகிற ஒருவரிடம் நம்முடைய மிகச் சிறந்த தோற்றத்தைப் போட்டுக் கொள்வது நம்முடைய இயல்பான போக்காக இருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அந்த முழுமையான உண்மை தோற்றம் காணப்பட்டுவிடும், அந்த மற்ற ஆள், அவன் அல்லது அவள் உண்மையில் இருக்கிறபடி காண்பதற்கு உங்களுக்குக் காலத்தை அனுமதியுங்கள், மேலும் உங்களையும் நீங்கள் உண்மையில் இருக்கிறபடி காட்டுவதில் நேர்மையுள்ளவர்களாக இருங்கள். 1 கொரிந்தியர் 14:20-ல் கொடுக்கப்பட்டிருக்கிற அப்போஸ்தலனின் பின்வரும் புத்திமதியுங்கூட ஒரு துணையைத் தேடுவதில் பொருத்திப் பிரயோகிக்கப்படலாம்: “விளங்கிக் கொள்ளும் திறமைகளில் சிறுபிள்ளைகளாகாதேயுங்கள் . . . முழு வளர்ச்சியடைந்தவர்களாகுங்கள்.” (NW)

விவாகத்தில் செய்யப்பட்ட வாக்குறுதி

26விவாகத்தில் செய்யப்பட்ட வாக்குறுதிகளை ஒருவர் அமைதியாய் அறிவுத் தெளிவுடன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இருவரில் ஒருவருடைய வாக்குறுதி திடமானதாகவும் உறுதிவாய்ந்ததாகவும் இல்லையென்றால், விவாகமானது ஆட்டங்கொடுக்கிற அஸ்திபாரத்தின்மேல் தங்கியிருக்கும். இன்று உலகத்தின் பல பாகங்களில், விவாகங்கள் செய்யப்படுகின்றன, ஆனால் அவை சீக்கிரத்தில் முறிந்துவிடுகின்றன. அநேகமாய், விவாகத்திற்குட்படுகிற ஆட்கள், விவாக வாக்குறுதி நீதிமுறைப்படி கட்டுப்படுத்துகிறதென்பதாகக் கருதாமல், அதற்குப் பதிலாக, ‘அது சரியாய்ச் செயல்படுகிறதில்லையென்றால், நான் அதை முடிவு செய்துவிடுவேன்,’ என்ற நிலையை மேற்கொள்வதன் காரணமாகவே இப்படிப்பட்ட முறிவுகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட எண்ணம் இருந்துவருகிறதென்றால், அந்த விவாகம் தொடக்கத்திலிருந்தே அநேகமாய்க் கேட்டுக்குரியதாக முடிவு செய்யப்பட்டதாயிருக்கிறது, அது மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு மாறாக பொதுவாய்க் கடுந்துயரத்தையே விளைவிக்கிறது. இதற்கு நேர் மாறாக, பைபிளானது, விவாகம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டிய ஓர் உறவு என்று காட்டுகிறது. அந்த முதல் ஜோடியைக் குறித்து கடவுள், அவ்விருவரும் “ஒரே மாம்சமாக வேண்டும்,” என்று கூறினார். (ஆதியாகமம் 2:18, 23, 24 NW) அந்த ஆணுக்கு வேறு எந்தப் பெண்ணும் இருக்கக்கூடாது, அந்தப் பெண்ணுக்கு வேறு எந்த ஆணும் இருக்கக்கூடாது. கடவுளுடைய குமாரன் பின்வருமாறு சொல்லி இதை உறுதிப்படுத்தினார்: “அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” ஆகையால் பாலுறவு சம்பந்தமாய் உண்மையற்ற நடத்தை மாத்திரமே இந்த விவாகக் கட்டை முறிப்பதற்கு நியாயமான ஆதாரமாயிருக்கும்.—மத்தேயு 19:3-9.

27விவாகத்தின் பார பொறுப்புக்குரிய தன்மையைக் கருதுகையில், அதில் வெற்றிகரமாயிருக்க விரும்புகிற ஒரு பெண், தான் உயர்வாக மதிக்கக்கூடிய மனிதனை மாத்திரமே, அதாவது உறுதியும் சமநிலையும், நல்ல பகுத்துணர்வும் உள்ளவனும், உத்தரவாதத்தைக் கையாளக்கூடியவனும், உதவியான குறை எடுத்துக்காட்டுகளை ஏற்பதற்குப் போதிய முதிர்ச்சியுள்ளவனுமாக இருக்கிறவனையே விவாகம் செய்வது நல்லது. உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: அவன் நன்கு பராமரிப்பவனும், விவாக ஒற்றுமையின் ஆசீர்வாதமாக உண்டாகக்கூடிய எந்தப் பிள்ளைகளுக்கும் நல்ல தகப்பனாகவும் இருப்பானா? விவாகப் படுக்கையைக் கனத்துக்குரியதாகவும் அசுத்தப்படாததாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது நீங்கள் இருவரும் உறுதியாய்த் தீர்மானித்திருக்கக் கூடும்படி அவனுக்கு உயர்ந்த ஒழுக்கத் தராதரங்கள் இருக்கின்றனவா? அவன் மனத்தாழ்மையையும் பணிவையும் காட்டுகிறானா அல்லது பெருமையாயும் தன்முனைப்புள்ளவனாகவும், தன் தலைமைவகிப்பைப் பகட்டாரவாரம் செய்ய விரும்புகிறவனாக, தானே எப்பொழுதும் சரி என்று எண்ணி காரியங்களில் நியாயப்படி கலந்தாலோசிக்க மனமற்றவனாய் இருக்கிறானா? விவாகத்திற்கு முன்பாகப் போதிய காலம் அந்த மனிதனோடு பழகுவதன் மூலம் இந்தக் காரியங்களைத் தெளிவாக கண்டறிந்து கொள்ளக்கூடும், முக்கியமாய், ஆராய்ந்து முடிவு செய்வதற்குத் தராதரமாக பைபிள் நியமங்கள் கடைப்பிடிக்கப்பட்டால் அவ்வாறு தெரிந்து கொள்ளலாம்.

28இதைப்போலவே, தன் விவாகம் வெற்றிகரமாய் இருக்கவேண்டுமென்பதைக் கவலையோடு கருதுகிற ஆண், தன்னுடைய சொந்த மாம்சத்தைப்போல் தான் நேசிக்கக்கூடிய ஒரு மனைவியைத் தேடுவான். ஒரு வீட்டை ஸ்தாபிப்பதில் அவள் ஒரு துணையாக அவனைப் பூர்த்தி செய்கிறவளாக இருக்க வேண்டும். (ஆதியாகமம் 2:18) வீட்டை அமைப்பவளாக இருப்பது பற்பல பொறுப்புகளைக் கொண்ட மிகத் தேவைப்படுகிற வாழ்க்கைத் தொழிலாக இருக்கிறது. இது, சமைப்பவளாக, வீட்டை அழகு செய்பவளாக, சிக்கனமாய்ச் செலவு செய்பவளாக, தாயாக, கற்பிக்கிறவளாக, இன்னும் பல துறைகளில் சேவிப்பவளாகத் தன் தனித் திறமைகளைச் செயல்படுத்திக் காட்டும்படி கேட்கிறது. அவள் வகிக்கும் பாகமானது, புதுமை கற்பனையாற்றலுள்ளதாயும் சவாலுள்ளதாயும் இருந்து, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் திருப்திக்கும் பல வாய்ப்புகளை அளிக்கக்கூடும். ஒரு நல்ல மனைவியானவள், தகுதியுள்ள ஒரு கணவனைப்போல், உழைப்பாளியாக இருக்கிறாள்: “அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.”—நீதிமொழிகள் 31:27.

29ஆம், தனிப்பட்ட சுத்தம், ஒழுங்கு அல்லது அவை இல்லாதிருப்பது; சுறுசுறுப்பு அல்லது, அதற்குப் பதிலாக சோம்பல்; பிடிவாதத்திற்கும் தற்பெருமைக்கும் எதிராக நியாயமும் மற்றவர்பேரில் பரிவும்; சிக்கனம் அல்லது உதாரித்தனம்; மகிழ்ச்சியுடன் உரையாடுவதற்கும் ஆவிக்குரிய பயன் பெறுவதற்கும் ஏதுவான சிந்திக்குந் திறமை; இதற்கு மாறாக உடல் சம்பந்தப்பட்ட அன்றாடகத் தேவைகளுக்கு மட்டுமே அன்றி வேறு எதற்கும் அதிகக் கவனஞ் செலுத்தாமல் ஒரே ரீதியாய்ச் செல்வதாய் வாழ்க்கைக்குச் சலிப்பூட்டுகிற மனசம்பந்தப்பட்ட சோம்பல், ஆகியவற்றிற்கு அத்தாட்சியாகத் தாங்கள் காண்பவற்றிற்கு இருவரும் சிந்தனை செலுத்துவது நல்லது.

30ஒருவருக்கொருவர் உண்மையாய் ஆழ்ந்த மரியாதை கொண்டிருப்பது வெற்றிகரமான விவாகத்திற்கு உயிர் நிலையான முக்கிய அம்சமாயிருக்கிறது. மேலும் காதல் கொள்ளும் காலத்தின்போது அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதன் சம்பந்தமாகவும் இது பொருந்துகிறது. மட்டுக்குமீறிய நெருங்கிய பழக்கம் அல்லது கட்டுப்பாடற்ற காமம் விவாகம் தொடங்குவதற்கு முன்பே அந்த உறவை மதிப்புக் குறைவாக்கும். பாலுறவு ஒழுக்கக்கேடானது, அதன் மேல் விவாகத்தைக் கட்டத் தொடங்குவதற்கு ஒரு நல்ல அஸ்திபாரமல்ல. இது, அந்த மற்ற ஆளின் எதிர்கால மகிழ்ச்சியைப் பற்றிய அக்கறையில்லாத தன்னலத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. உடைக்க முடியாத இணைப்பை உண்டுபண்ணுவதுபோல் அந்தக் கண நேரத்திற்குத் தோன்றுகிற அந்தக் கடும் காம உணர்ச்சி வேகம் விரைவில் குளிர்ந்துபோய் சில வாரங்களுக்குள் அல்லது நாட்களுக்குள்ளேயுங்கூட, அந்த விவாகம் சாம்பலாக மாறிவிடக்கூடும்.—தாமாருக்காக அம்னோன் கொண்டிருந்த காமத்தைப் பற்றி 2 சாமுவேல் 13:1-19-ல் கூறப்பட்டுள்ள இந்த விவரத்தை ஒத்துப் பாருங்கள்.

31காதல் கொள்ளுகையில் காமத்தைக் காட்டுவது சந்தேகத்துக்குரிய விதைகளை விதைப்பதாகக்கூடும், இது, பின்னால், விவாகம் செய்வதற்கான உண்மையான உள்நோக்கத்தைக் குறித்ததில் அநிச்சயத்தை எழுப்பக்கூடும். விவாகம் செய்தது வெறுமென காம உணர்ச்சியைத் திருப்தி செய்தவற்கான வழியை ஏற்படுத்திக் கொள்வதற்கா, அல்லது ஓர் ஆளாக மெய்யாய் மதித்து நேசிக்கப்படுகிற ஒருவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதற்கா? விவாகத்திற்கு முன்பாகத் தன்னடக்கமில்லாமை அடிக்கடி விவாகத்திற்குப் பின்னும் அவ்வாறு இருக்கப் போவதை முன்குறித்துக் காட்டுகிறது, இது நம்பிக்கைத் துரோகத்திலும் மகிழ்ச்சியற்ற நிலையிலும் விளைவடையும். (கலாத்தியர் 5:22, 23) விவாகத்திற்கு முன்னால் ஈடுபட்ட ஒழுக்கக்கேட்டின் நினைவுபடுத்தல்கள் விவாகத்தின் தொடக்க நிலைகளில் உணர்ச்சிவச வேற்றுமைகளை ஒத்திசைவுடன் சரிப்படுத்திக் கொள்வதைத் தடை செய்யக்கூடும்.

32இதைவிட அதிகக் கவலைக்கேதுவானதாக, இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடு, நம்முடைய சிருஷ்டிகருடன் நமக்கு இருக்க வேண்டிய உறவைக் கெடுத்து, நமக்கு மிக இன்றியமையாத வண்ணமாய்த் தேவைப்படுகிற அவருடைய உதவியை அடையாமற்போகச் செய்கிறது. “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, . . . இந்த விஷயத்தில் ஒருவனுக்கு மீறாமலும் தன் சகோதரனை [அல்லது, நியாயமாகவே, தன் சகோதரியை] வஞ்சியாமலும் இருக்க வேண்டும்; . . . ஆகையால் அசட்டை பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான்.”—1 தெசலோனிக்கேயர் 4:3-8.

கற்பாறை அஸ்திபாரம்

33உங்கள் வீட்டார் அதாவது உங்கள் குடும்பம், கற்பாறை அஸ்திபாரத்தின் மேல் அமைந்திருக்குமா அல்லது மணல் அஸ்திபாரத்தின் மேல் அமைந்திருக்குமா? விவாகத் துணையைத் தெரிந்தெடுக்கையில் உபயோகப்படுத்தப்பட்ட ஞானத்தின் அளவின் பேரில் இது ஓரளவு சார்ந்திருக்கிறது. அழகும் பால் வேறுபாட்டுக் கவர்ச்சியும் போதுமானவையல்ல. இவை மனது மற்றும் ஆவிக்குரிய இசைவு பொருத்தமில்லாமையை நீக்கிச் சரிப்படுத்திவிடாது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனையே விவாகத்தில் கற்பாறை அஸ்திபாரத்தை அளிக்கிறது.

34வெளித் தோற்றத்தைப் பார்க்கிலும் உட்புறத்தில் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறான் என்பதே அதிக முக்கியமானதென்று பைபிள் காட்டுகிறது. “செளந்தரியம் வஞ்சனை, அழகு வீண், யெகோவாவுக்குப் பயப்படும் பெண்ணே புகழ்ச்சிக்குரியவள்,” என்று தேவாவியால் ஏவப்பட்ட நீதிமொழி சொல்லுகிறது. (நீதிமொழிகள் 31:30, தி.மொ.) விவாகம் செய்திருந்தவனான அப்போஸ்தலனாகிய பேதுரு “இருதயத்தின் அந்தரங்க ஆளும்” “அமைதலும் சாந்தமுமுள்ள ஆவி”யுமே “கடவுளுடைய கண்களில் மிகுந்த மதிப்புள்ள”வையாயிருப்பதாகப் பேசுகிறான். (1 பேதுரு 3:4, NW) கடவுள், ‘மனிதனின் வெளித்தோற்றத்தைப் பார்த்து தீர்க்கிறதில்லை,’ நாமுங்கூட எதிர்கால விவாகத் துணையின் வெறும் வெளித்தோற்றத்தால் தவறாகக் கவர்ந்திழுக்கப்படுவதற்கு எதிராக நம்மைக் காத்துக் கொள்வதன் மூலம் அவருடைய முன்மாதிரியிலிருந்து நன்மையடையக்கூடும்.—1 சாமுவேல் 16:7.

35ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்து பின்வரும் இந்த முடிவுக்கு வந்தான்: உண்மையான “கடவுளுக்குப் பயந்து, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; எல்லா மனிதருடைய கடமையும் இதுவே.” (பிரசங்கி 12:13, தி.மொ.) கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கையில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் வணக்க முறையில் பங்கு கொள்ளாத ஆட்களுடன் விவாக சம்பந்தங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று முக்கியமாய்க் கட்டளையிடப்பட்டனர், அவை அவர்களைக் கவர்ந்திழுத்து உண்மையான கடவுளை விட்டு விலகிப்போகச் செய்யாதபடி அவ்வாறு கட்டளையிடப்பட்டனர். “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப் பண்ணுவார்கள்.”—உபாகமம் 7:3, 4.

36கடவுளுடைய “புதிய உடன்படிக்கையில்” இருக்கிறவர்களுக்கு, அதாவது, கடவுளுடைய கிறிஸ்தவ சபையில் இருக்கிறவர்களுக்கு இதைப்போன்ற காரணங்களினிமித்தமாக “கர்த்தருக்குள்” மாத்திரமே விவாகம் செய்யும்படி புத்திமதி கொடுக்கப்பட்டது. (எரேமியா 31:31-33; 1 கொரிந்தியர் 7:39) மத வெறியைக் காட்டுவதற்கு மாறாக இது ஞானத்தாலும் அன்பாலும் உள் தூண்டுதலளிக்கப்படுகிறது. சிருஷ்டிகருக்கு ஒன்றுபட்ட பயபக்தியைச் செலுத்துவது விவாகத்திற்குக் கொடுக்கும் உறுதியைப் பார்க்கிலும் அதிகப்படியான உறுதியைக் கொடுக்கக்கூடியது வேறெதுவும் இல்லை. கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் கொண்டிருக்கிறவரும், உங்களைப் போலவே அதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுகிறவருமான ஓர் ஆளை நீங்கள் விவாகம் செய்வீர்களானால் ஆலோசனைக்காகச் செல்வதற்கு உங்களுக்குப் பொதுவாயுள்ள ஓர் அதிகாரத்துவம் இருக்கும். இது இன்றியமையாததென்பதை நீங்கள் ஒருவேளை உணராதிருக்கலாம், ஆனால் “மோசம் போகாதிருங்கள்; துர்ச்சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) என்றபோதிலும், கிறிஸ்தவ சபைக்குள்ளேயுங்கூட, எதிர்கால விவாகத் துணை இவ்வுலகத்தின் மனப்பான்மைகளிடமாகவும் பழக்க வழக்கச் செயல்களிடமாகவும் பேரளவாய்ச் சாய்ந்து கொண்டு அதே சமயத்தில் கிறிஸ்தவத்தின் கரையோரத்தில் வாழ முயன்று கொண்டிருக்கிறவனாக[ளாக] அல்ல, உண்மையில் முழு இருதயத்தோடு சேவிக்கும் கடவுளுடைய ஊழியனாக இருக்கிறானா[ளா] என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் கடவுளோடு நடந்து கொண்டும் உலகத்தோடு ஓடிக்கொண்டும் இருக்க முடியாது.—யாக்கோபு 4:4.

37“உங்களில் கோபுரங்கட்ட விரும்பும் எந்த மனிதன் முதலாவது உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டு அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பொருள் உண்டா என்று பாராமலிருப்பான்?” என்று இயேசு கேட்டார். மற்றப்படி “அஸ்திபாரமிட்டபின் கட்டி முடிக்க வகையற்றுப் போ”கிறவனாக இருப்பானே. (லூக்கா 14:28, 29, தி.மொ.) விவாகத்திற்கும் இதே நியமமே பொருந்துகிறது. விவாகத்தைக் கடவுள் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிற ஓர் இணைப்பாகக் கருதுகிறதனால் ஒரு துணையைத் தெரிந்தெடுப்பது நிச்சயமாகவே அவசரப்பட்டு செய்யப்படக்கூடாது. மேலும் நீங்கள் தொடங்கியிருப்பதை முடிக்க நீங்கள் தாமே ஆயத்தமாக இருக்கிறீர்களா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். காதல் கொள்வதுங்கூட ஒரு விளையாட்டைப் போல், இலேசாக எடுத்துக் கொள்வதற்குரிய ஒரு காரியமல்ல. மற்றொருவருடைய பாச உணர்ச்சிகளுடன் விளையாடுவது குரூரமான விளையாட்டாயிருக்கிறது, அது உண்டுபண்ணுகிற உணர்ச்சிவச காயங்களும் இருதய வேதனையும் வெகுகாலத்திற்கு நீடித்திருக்கக்கூடும்.—நீதிமொழிகள் 10:23; 13:12.

38விவாகம் செய்யும்படி சிந்தித்துக் கொண்டிருக்கிற விவேகமுள்ள வாலிபர்கள் முதியோருடைய, முக்கியமாய், உங்களுடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கானவற்றைத் தங்கள் இருதயத்தில் கொண்டிருப்பதாகக் காட்டியிருக்கிறவர்களுடைய ஆலோசனைக்குச் செவி கொடுப்பது நல்லது. இதன் மதிப்பை நமக்கு நினைப்பூட்டி யோபு 12:12 பின்வருமாறு சொல்லுகிறது: “முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.” இந்த அனுபவக் குரல்களுக்குச் செவிகொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, “உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [யெகோவாவில், NW] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப் படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.

39இந்த வார்த்தைகளை வாசிக்கிற பலர் ஒருவேளை ஏற்கெனவே விவாகம் செய்தவர்களாக இருக்கலாம். ஓரளவுக்கு உங்கள் அஸ்திபாரம் ஏற்கெனவே போடப்பட்டிருக்கிறபோதிலும், தேவைப்படுகிற இடத்தில் சரிப்படுத்தல்களைச் செய்யவும், இவ்வாறு பலன்தரும் விளைவுகளை அடையவும் பைபிள் உங்களுக்கு உதவி செய்யக்கூடும். உங்கள் விவாக நிலை என்னவாக இருந்தாலும், குடும்ப மகிழ்ச்சியின் பேரில் கொடுக்கும் சிருஷ்டிகருடைய ஆலோசனைகளை மேலுமாக ஆழ்ந்து சிந்தனை செய்து பார்ப்பதன் மூலம் அது மேம்படுத்தப்படக்கூடும்.

[கேள்விகள்]

1-3. மத்தேயு 7:24-27-ன் படி வாழ்க்கையில் உண்மையான வெற்றி எதன்பேரில் சார்ந்திருக்கிறது?

4. முதல் மனித ஜோடியின் விவாகத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சில காரியங்கள் யாவை? (ஆதியாகமம் 2:22–3:19)

5, 6. விவாகம் செய்தவர்களாக இருக்கிறவர்களுக்கும், விவாகம் செய்ய சிந்தித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும் என்ன உதவியைக் கடவுள் அளிக்கிறார்?

7-10. (எ) விவாகம் செய்ய சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒருவன் தன்னைப் பற்றித் தான் அறிய வேண்டியவை யாவை? இவற்றை அவன் எப்படிக் கண்டறியக்கூடும்? (பி) விவாகம் செய்வதற்கான காரணங்களின் நேர்மையான தகுதியைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?

11. என்ன அடிப்படையான உணர்ச்சிவசத் தேவைகள் விவாகத்தில் திருப்தி செய்யப்பட வேண்டும்?

12. உடல் மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளைத் திருப்தி செய்வது மாத்திரமே ஒரு மகிழ்ச்சியான விவாகத்திற்கு ஏன் போதுமானதல்ல?

13. ஒரு மகிழ்ச்சியான விவாக வாழ்க்கை செய்ய, உங்கள் சொந்தத் தேவைகளோடுகூட வேறு எதையும் நீங்கள் தெரிந்துணர வேண்டும்?

14. அநேக விவாகங்களில், துணைகள் ஏன் தாங்கள் இசைவு பொருத்தமில்லாதவர்கள் என்று காண்கிறார்கள்?

15, 16. எதிர்கால விவாக துணையிடம் கலந்து பேசவேண்டிய சில காரியங்கள் யாவை? எப்படி?

17-19. குடும்ப வளர்ப்பு சூழ்நிலை அனுபவங்கள் ஏன் விவாகத்தில் இசைவு பொருத்தத்தைப் பாதிப்பவையாக இருக்கின்றன?

20, 21. ஒரு துணையைத் தெரிந்தெடுக்கையில், தனிப்பட்டவரின் குறைபாடுகளை எவ்வாறு கருதவேண்டும்?

22-24. தன்னுடைய வழிகளை மாற்றிக் கொள்வதாக வாக்குக் கொடுப்பதை அல்லது அந்த ஆளை மாற்ற முயற்சி செய்யப்போகும் நோக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எவரையாவது விவாகம் செய்வது ஏன் ஞானமற்றதாயிருக்கிறது?

25. உண்மையான அன்புக்கும் தீவிர காமத்திற்குமுள்ள வித்தியாசமென்ன?

26. வேத எழுத்துக்களின்படி, விவாக இணைப்பு எந்த அளவாகக் கட்டுப்படுத்துவதாயிருக்கிறது? (ரோமர் 7:2, 3)

27-29. (எ) எதிர்கால துணையில் எந்தக் காரியங்களைக் கவனிப்பது ஒரு பெண்ணுக்கு நல்லது? (பி) ஓர் ஆண் தன் எதிர்கால துணைவியில் என்ன காரியங்கள் இருக்க வேண்டுமென்று விவேகமாய்க் கவனிப்பான்?

30, 31. காதல் கொள்ளும் காலத்தின் போது ஒழுக்கக்கேடான நடத்தை ஏன் ஒரு நல்ல விவாகத்தை ஒருவன் அனுபவித்து மகிழ்வதற்குத் தடங்கலாயிருக்கும்?

32. காதல் கொள்ளும் காலத்தின்போது ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடுவது எப்படி கடவுளோடு ஒருவனுக்கு இருக்கும் உறவைப் பாதிக்கக்கூடும்?

33, 34. ஒரு விவாகத் துணையைத் தெரிந்தெடுக்கையில் உடல் சம்பந்தப்பட்ட தோற்றத்தைப் பார்க்கிலும் என்ன பண்புகள் மிக அதிக முக்கியமானவையாக இருப்பதாய் வேத எழுத்துக்கள் காண்பிக்கின்றன?

35, 36. (எ) கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் கொண்டுள்ள ஒருவரை விவாகம் செய்வது ஏன் முக்கியமானது? (பி) உங்கள் எதிர்கால துணை எந்த அளவுக்கு இந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?

37, 38. (எ) காதல் கொள்வதிலோ விவாகம் செய்வதிலோ அவசரப்பட்டு ஈடுபடுவதை ஒருவர் ஏன் தவிர்க்க வேண்டும்? (பி) விவாகம் செய்யும்படி சிந்தித்துக் கொண்டிருக்கிறவர்கள் யாருடைய ஆலோசனைக்குச் செவிகொடுப்பது நல்லது?

39. ஏற்கெனவே விவாகம் செய்திருக்கிறவர்களுக்குப் பைபிள் எப்படி உதவி செய்யக்கூடும்?

[பக்கம் 12-ன் படம்]

புயல்போன்ற நெருக்கடியான காலங்களை உங்கள் விவாகம் தாங்கிநிற்குமா?