Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிச்சிக்கு இன்றியமையாத அடிப்படையைக் கண்டடைதல்

குடும்ப மகிச்சிக்கு இன்றியமையாத அடிப்படையைக் கண்டடைதல்

அதிகாரம் 1

குடும்ப மகிழ்ச்சிக்கு இன்றியமையாத அடிப்படையைக் கண்டடைதல்

மகிழ்ச்சிக்கான மனிதரின் பல தேவைகள் குடும்ப வட்டாரத்தில் திருப்தி செய்யப்படக்கூடும். நாம் எல்லாரும் இயல்பாய் ஆவல் கொள்ளும் காரியங்களாகிய, தேவைப்படுகிறோம் என்ற உணர்ச்சி, நன்றியோடு மதிக்கப்படவேண்டும், நேசிக்கப்படவேண்டும் என்பவற்றை அங்கே நாம் கண்டடையலாம். பாசமுள்ள குடும்ப உறவானது இந்த ஆவல்களை அதிசயமான முறையில் திருப்தி செய்யக்கூடும். இது நம்பிக்கை, புரிந்துகொள்ளுதல், பிரிவு ஆகியவை நிரம்பிய ஒரு சூழ்நிலையை உண்டுபண்ணக்கூடும். அப்பொழுது வீடானது புறம்பேயுள்ள தொல்லைகள், குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து இளைப்பாறுவதற்குரிய உண்மையான புகலிடமாகிறது. பிள்ளைகள் பாதுகாப்பாய் உணரக்கூடும், அவர்களுடைய தனிப் பண்புகள் தங்கள் முழு உள்ளார்ந்த ஆற்றலுடன் வெளித் தோன்றி மலர்ச்சியடையக்கூடும்.

2இதுவே நாம் வாழவேண்டுமென்று விரும்பக்கூடிய குடும்ப வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் இதில் எதுவும் தானாக வந்துவிடுகிறதில்லை. இதை எப்படி அடையக்கூடும்? இன்று இவ்வுலத்தின் பல பாகங்களில் குடும்ப வாழ்க்கை ஏன் அந்த அளவாக ஆழ்ந்த குழப்ப நிலைக்குள்ளாகியிருக்கிறது? விவாக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கும் விவாக வாழ்க்கை துக்கம் நிறைந்ததாயிருப்பதற்கும், பாசமுள்ள ஒற்றுமைப்பட்ட குடும்பத்திற்கும் பாசமில்லாமல் பிளவுபட்டிருக்கும் குடும்பத்திற்கும் இடையில் இவ்வித்தியாசத்தை உண்டுபண்ணுகிற அடிப்படைக் காரணமென்ன?

3உங்கள் குடும்பத்தின் சுகநலத்திற்காகவும் வெற்றிக்காகவும் ஆழ்ந்த அக்கறையை நீங்கள் உணருகிறீர்களென்றால், நல்ல காரணத்துடன்தானே அவ்வாறு உணருகிறீர்கள். குடும்ப ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை விவரித்து, தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா (1973) பின்வருமாறு சொல்லுகிறது:

“குடும்பமானது எல்லாவற்றையும் விட மிகப் பழமையான மனித அமைப்பாகும். பல முறைகளில் இது மிக அதிக முக்கியமானது. இது சமுதாயத்தின் மிக ஆழ்ந்த அடிப்படை அம்சமாயிருக்கிறது. குடும்ப வாழ்க்கை உறுதியுள்ளதாகவோ உறுதியற்றதாகவோ இருந்ததன் பேரில் சார்ந்ததாய், முழு சமுதாய நாகரிகங்கள் அழியாது தொடர்ந்திருக்கின்றன அல்லது அடியோடு அழிந்து போய்விட்டிருக்கின்றன.”

4ஆனால் இன்று எத்தனை குடும்பங்களில், குடும்பத்தார் உறுதியான அன்பிணைப்புகளால் நெருங்க ஒன்றுபட இணைக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்? பரிவு, நன்றியுணர்வு, தயாளம் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் காட்டும் அனல்கொண்ட பாசத்தை எத்தனை குடும்பங்கள் அனுபவித்து மகிழ்கின்றன? ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது,’ என்ற இந்தக் கூற்றின் உண்மையை எத்தனை குடும்பங்கள் கற்றிருக்கின்றன?

5இன்று வெகு வித்தியாசப்பட்ட ஓர் ஆவி (சுபாவம்) பூமியெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய உலகத்தில் இது வெகு முனைப்பாய்த் தோன்றி நிற்கிற போதிலும் பாரம்பரியமாய்க் குடும்ப வாழ்க்கை மாறாமல் ஓரளவாக நிலையாய் இருந்து வந்திருக்கிற கிழக்கத்திய உலகத்திலும் மற்ற நாடுகளுக்குள்ளுங்கூட இது உட்புகுந்து பரவிக் கொண்டிருக்கிறது. இன்றைய கருத்துப் போக்குகளில் பின்வருபவையும் அடங்கியிருக்கின்றன: ‘உனக்கு விரும்பினதை நீ செய், மற்றவர்கள் தாங்கள் தாமே தெரிந்து கொள்ள விட்டுவிடு.’ ‘சிட்சை பழங்கால நடைமுறை; பிள்ளைகள் தாங்களே தங்கள் சொந்த போக்கைத் தெரிந்து கொள்ளட்டும்.’ ‘எது சரி அல்லது தவறு என்பதைப் பற்றி எவ்விதத் தீர்ப்புகளையும் செய்யாதே.’ மேலும் மேலுமாகப் பல நாடுகளில் விவாகரத்து, இளம் பருவத்திலேயே பெருங்குற்றங்களில் ஈடுபடுவது, வாலிபரின் ஒழுக்கக்கேடு ஆகியவை திகிலூட்டும் விதத்தில் எழும்பிக் கொண்டே போகின்றன. உளநூல் வல்லுநர், உளநோய் மருத்துவர், மத பாதிரிமார் ஆகியோரும், அறிவுரை கூறும் மற்றவர்களும் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் குடும்பத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, பல ஆலோசகர்கள் ஒழுக்கக்கேட்டைப் பொருட்படுத்தாமல் விடுகின்றனர் அல்லது உணர்ச்சி நிலைக்குலைவைத் தணிக்கும் ஒரு வழி வகையாக ஒழுக்கக்கேட்டை சிபாரிசும் செய்கின்றனர். இந்த எல்லாவற்றிலிருந்தும் ஏற்பட்டுள்ள தீய அறுவடை பின்வரும் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துகிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”

சரித்திரம் குடும்ப ஏற்பாட்டை ஆதரிக்கிறது

6குடும்ப முக்கியத்துவத்தைப் பற்றி சரித்திரம் கற்பிக்கிற பாடங்கள், கவலையோடுகூடிய கவனம் செலுத்துவதற்குத் தகுந்தவையாக இருக்கின்றன. நாகரிகத்தின் சரிதை, பாகம் II என்ற ஆங்கில புத்தகத்தில் சரித்திராசிரியனாகிய உவில் டூரன்ட், பூர்வ கிரீஸில் குடும்பத்தின் வீழ்ச்சியைப் பற்றி விவரிக்கிறான். பின்பு அவன் தொடர்ந்து: “கிரீஸ் தேசத்தை ரோமர் வென்று கைப்பற்றினதற்கு முக்கிய காரணமானது உள்ளுக்குள் கிரேக்க நாகரிகத்தின் சிதைவே,” என்று கூறினான். மேலும் தொடர்ந்து, ரோமின் வலிமைக்குக் காரணம் குடும்பமே என்றும், ஆனால் பாலுறவு ஒழுக்கக்கேட்டால் இந்தக் குடும்ப ஏற்பாடு சீர்க்குலைந்தபோதோ, அந்த ரோம பேரரசு வீழ்ச்சியடைந்தது என்றும் காட்டுகிறான்.

7உண்மையில், “தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை,” என்ற இந்தப் பூர்வ கூற்றையே சரித்திரம் உறுதி செய்கிறது. என்றபோதிலும் வழிநடத்துதலுக்காக நாம் நோக்கக்கூடிய மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மூல அதிகாரத்துவம் இருக்கிறது என்றும் இதன் பலனாக இந்த மூல தனியமைப்பாகிய குடும்பம் வளம் பெறுகிறது என்றும் சரித்திரம் உணர்த்திக் காட்டுகிறது. ரோம பேரரசு சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கையில், “யூதர்களின் குடும்ப வாழ்க்கை சீரிய முன் மாதிரியாக இருந்தது; மேலும் சிறு கிறிஸ்தவ சமுதாயங்கள் தங்கள் கடவுள் பக்தியினாலும், உயர் ஒழுக்க முறைகளாலும், அந்த இன்பவெறி கொண்ட புறமத உலகத்திற்குத் தொல்லையாக இருந்தார்கள்,” என்று சரித்திராசிரியர்கள் அறிவிக்கின்றனர். (நாகரிகத்தின் சரிதை, பாகம் III பக். 366) இந்தக் குடும்பங்களைக் குறிப்பிடத்தக்கதாகத் தனிப்படுத்திக் காட்டினது எது? அவர்களுடைய வழிநடத்துதலின் மூல அதிகாரத்துவம் வேறுபட்டதாயிருந்தது, அதுவே பைபிள். கடவுளுடைய வார்த்தையாகிய, பைபிளின் ஆலோசனையை எந்த அளவுக்கு அவர்கள் பொருத்திப் பிரயோகித்தார்களோ அந்த அளவுக்கு அவர்கள் ஆரோக்கியமான சமாதானமுள்ள குடும்பங்களை அனுபவித்து மகிழ்ந்தார்கள். இப்பலன்கள் அந்தச் சீர்கேடடைந்த ரோம உலகத்திற்குக் குற்றமுள்ள உணர்ச்சிகளைக் கொடுத்தன.

8முந்தின பாராக்களில் மேற்கோளாக எடுத்து குறிப்பிடப்பட்ட கூற்றுகள் அதே அதிகாரத்துவமாகிய பைபிளிலிருந்தே வருகிறது. வாங்கிக் கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளையும், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்ற தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் கூற்றையும், தன் நடைகளை நடத்துவது மனிதனுக்குரியதல்ல என்ற கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் அறிவிப்பையும் பைபிளிலேயே நாம் காண்கிறோம். (அப்போஸ்தலர் 20:35; கலாத்தியர் 6:7; எரேமியா 10:23, தி.மொ.) இந்தப் பைபிள் நியமங்கள் உண்மையாய் நிரூபித்திருக்கின்றன. இயேசு மேலுமாக: “ஞானமோ தன் செயல்களால் நியாயமென்று தீர்க்கப்பட்டது,” என்றார். (மத்தேயு 11:19, தி.மொ.) குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பைபிளின் ஆலோசனை உண்மையில் செயலாற்றுகிறதென்றால், அது நம்முடைய மரியாதைக்குரிய கவனத்திற்குத் தகுந்ததாயிருக்கிறதல்லவா?

9இன்று, விவாகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் பற்றிக் கையாளும் பிரசுரங்கள் ஆயிரக்கணக்காய் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை ஏதோ சிறிதளவாவது உதவியுள்ள தகவல் அடங்கியனவாக இருக்கின்றன. என்றபோதிலும் குடும்ப வாழ்க்கையானது தொடர்ந்து படிப்படியாய் மோசமாகிக் கொண்டே போகிறது. அதிகப்படியான ஏதோவொன்று தேவைப்படுகிறது. குடும்ப வட்டாரத்தை நாசமாக்குவதாக இப்பொழுது பயமுறுத்தி வரும் நெருக்கடிகளை எதிர்த்து நிற்பதற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடிய ஏதோவொன்று தேவையாயிருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், இடையில் இருக்கக்கூடிய இயல்பான பாசமானது பலத்தைக் கொடுக்கிறது. என்றபோதிலும் இதுவுங்கூட, மிக நெருக்கடியான காலங்கள் வருகையில், பல குடும்பங்களுடைய காரியத்தில் உறுதியாய் ஒன்றுபட்ட நிலையில் வைக்கப் போதியதாக நிரூபிக்கிறதில்லை. மேலுமாக என்ன தேவைப்படுகிறது?

10தேவைப்படுவது தன்னுடைய துணைவரிடமோ பிள்ளைகளிடமோ பெற்றோரிடமோ ஓரளவான உத்தரவாத உணர்ச்சியும் பற்றுறுதியும் மாத்திரமே அல்ல. அதோடுகூட, “பரலோகத்திலும் பூமியிலும் ஒவ்வொரு குடும்பமும் அதன் பெயருக்குக் கடன்பட்டிருக்கிற அந்தத் தகப்பன்” என்பதாக பைபிள் யாரைக் குறித்துப் பேசுகிறதோ அவரிடமாகவே அதைப் பார்க்கிலும் அதிக உத்தரவாத உணர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவரே விவாகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் தொடங்கி வைத்தவரான, மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன்.—எபேசியர் 3:14, 15, NW.

குடும்ப ஏற்பாட்டில் கடவுளுடைய அக்கறை

11மனிதவர்க்கத்தின் தேவைகளை யெகோவா தேவன் அறிந்திருக்கிறார், நாம் மகிழ்ச்சியாயிருக்கும்படியே அவர் விரும்புகிறார், ஆகையால் குடும்ப வாழ்க்கையைப் பற்றியதில் அவர் நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். என்றாலும் இதைவிட மிக மேம்பட்ட ஒரு நோக்கமானது, குடும்பங்களுக்காக அவர் கொண்டுள்ள அக்கறையால் பிரதிபலிக்கப்படுகிறது. அந்த நோக்கம் என்னவென்பதை பைபிள் விளக்குகிறது. இந்தப் பூமி ஏதோ தற்செயலாக ஏற்பட்டுவிடவில்லை என்று அது காட்டுகிறது. நாமும் வெறும் தற்செயலாகத் தோன்றிவிடவில்லை. யெகோவா தேவன் இந்தப் பூமியைப் படைத்தார், அது என்றும் நிலைத்திருக்கும்படியும் அது என்றும் குடியிருக்கப்பட்டிருக்கும்படியுமே நோக்கங்கொண்டார். “பூமியை வெறுமையாயிருக்க சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து அதை உருவாக்கி நிலைப்படுத்தினவர்,” என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா பதிவு செய்தான்.—ஏசாயா 45:18, தி.மொ.

12தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, கடவுள் முதல் கணவனையும் மனைவியையும் படைத்து, ஒரு குடும்பத்தைப் பிறப்பிக்கும்படி அவர்களுக்குக் கூறினார்: “ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். கடவுள் அவர்களை ஆசீர்வதித்துப் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி . . . கொள்ளுங்களென்று அவர்களுக்குச் சொன்னார்.” (ஆதியாகமம் 1:27, 28, தி.மொ.) மேலுமாக அவருடைய நோக்கமானது, அவர்களும் அவர்களுடைய சந்ததியாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து இந்தப் பூமியைக் கவனித்துக் கொள்வதையும் தேவைப்படுத்தியது. ஆதியாகமம் 2:15 பின்வருமாறு கூறுகிறது: “கடவுளாகிய யெகோவா மனுஷனை அழைத்துக்கொண்டு போய் ஏதேனின் தோட்டத்தில் விட்டு அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.” (தி.மொ.) தோட்டத்தைப் போன்ற அந்த நிலைமைகள் நாளடைவில் பூகோளம் முழுவதையும் அளாவும்படி விரிவாக்கப்படும். பூமியைக் கவனித்துக் கொள்வதும் அதன் வள ஆதாரங்களை உபயோகிப்பதும், பூமியெங்கும் இருக்கும் மனிதவர்க்க குடும்பத்திற்கு கற்றுக் கொள்வதற்கும் தங்கள் திறமைகளை உபயோகிப்பதில் திருப்தியைக் கண்டடைவதற்கும் முடிவில்லா வாய்ப்புகளை அளிக்கும்.

13இப்பொழுது 400,00,00,000-க்கும் மேற்பட்ட ஆட்கள் பூமியில் இருக்கின்றனர், ஆனால் இந்தப் பேரெண்ணிக்கையான மக்கள், பூமிக்கான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுகிறதில்லை. இவர்களில் பெரும்பான்மையர் அவருக்குக் கீழ்ப்படிகிறதில்லை, பூமியைக் கவனித்துக் காப்பதுமில்லை. அதற்குப் பதிலாக, அதை அவர்கள் பாழ்ப்படுத்துகிறார்கள், அதன் காற்றையும், நீரையும், நிலத்தையும் தூய்மைக்கேடு செய்துவிடுகிறார்கள். கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கு இசைய, இதையெல்லாம் தாம் நிறுத்தப்போவதாக அவர் முன்னறிவித்தது மட்டுமல்லாமல், “பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்கப்” போவதாகவுங்கூட கூறியிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18, தி.மொ.

நாம் எதிர்ப்பட வேண்டிய கேள்விகள்

14இந்தப் பூமியையும் குடும்ப வாழ்க்கையையும் பற்றிய கடவுளுடைய நோக்கம் தோல்வியடையாது. “என் வாயிலிருந்து வரும் வசனமும் . . . வெறுமையாய் என்னிடம் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, . . . நிறைவேற்றுகிறது,” என்று அவர் அறிவிக்கிறார். (ஏசாயா 55:11, தி.மொ.) குடும்ப ஏற்பாட்டைக் கடவுள் தாமே ஏற்படுத்தி வைத்து அது செயல்பட வேண்டிய முறையைக் குறித்து ஆலோசனை கொடுத்தார். அவருடைய வழிகாட்டும் குறிப்புகள் குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட உண்மையில் முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன—இக்கேள்விகளில் சிலவற்றை நீங்களுங்கூட எதிர்ப்படலாம்.

15உதாரணமாக: ஒத்திசையக்கூடிய விவாகத் துணையை ஓர் ஆள் எப்படிக் கண்டடைவது? விவாகத்தில் முள்போன்ற தொல்லைக் கொடுக்கும் பிரச்னைகளைக் குறித்ததில் கருத்து ஒற்றுமையை எப்படி அடையக்கூடும்? ஒருவராக சிந்தனை செய்துவிட இருவர் கலந்தாலோசிப்பது மேலானது, ஆனால், அவ்வாறு கலந்து பேசின பின்பு யார் தீர்மானங்களைச் செய்வது? கணவன் தன் மனைவியின் மரியாதையை எப்படி அடையக்கூடும், இது ஏன் அவனுக்கு முக்கியமானது? மனைவிக்குத் தன் கணவனின் அன்பு ஏன் தேவையாயிருக்கிறது? அதைக் காத்து உறுதிப்படுத்திக் கொள்ள அவள் என்ன செய்யலாம்?

16பிள்ளைகளை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? சிலர் அவர்களை சமுதாய கெளரவ நிலையின் அடையாளமாக, அல்லது மலிவாக அடையக்கூடிய உழைப்பின் மூலமுதலாக அல்லது முதிர்வயது காப்புறுதியாகக் கருதுகின்றனர்; மற்றும் சிலர் அவர்களை ஒரு பாரமாகக் கருதுகின்றனர். ஆனால் பைபிள் அவர்களை ஆசீர்வாதம் என்று அழைக்கிறது. அவர்கள் ஆசீர்வாதமாக நிரூபிப்பார்களா என்பதை எது தீர்மானிக்கிறது? அவர்களுடைய பயிற்றுவிப்பு எப்பொழுது தொடங்கவேண்டும்? சிட்சை கொடுக்கப்பட வேண்டுமா? அப்படியானால், எவ்வளவில், எவ்வகையில் கொடுக்கப்படவேண்டும்? குடும்பத்திற்குள் ‘சந்ததி பிளவு’ இருக்க வேண்டுமா? அதை நீக்கி சரி செய்யக்கூடுமா? அதற்கும் மேம்பட்டதாய் திரும்பவும் ஒருபோதும் பிளவு ஏற்படாதபடி அதைத் தடுத்து வைக்கக்கூடுமா?

17இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களைக் கண்டுபிடிப்பதானது, உங்கள் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் காத்து உறுதிப்படுத்திக் கொள்ள அதிகம் செய்யக்கூடும். அதற்கு மேலாக, தேவைப்படும் எந்தச் சமயத்திலும் நீங்கள் உதவிக்குத் திரும்பக்கூடியவராகிய மிஞ்சமுடியாத பலத்தையும், தயவையும், ஞானத்தையும் உடைய ஒருவர் இருக்கிறார். அவர் உங்கள் குடும்பத்தை ஒருபோதும் முடிவடையாத மகிழ்ச்சிக்கு வழிநடத்தக்கூடியவர் என்ற திடநம்பிக்கையை இது உங்களுக்குக் கொடுக்கக்கூடும்.

[கேள்விகள்]

1, 2. ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை அளிக்கக்கூடிய சிறந்த காரியங்கள் யாவை? ஆகையால் என்ன கேள்விகள் எழுப்பப்படக்கூடும்?

3. குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சரித்திர உண்மைகள் என்ன வெளிப்படுத்துகின்றன?

4, 5. பல குடும்பங்களில் விரும்பத்தகாத என்ன மனப்பான்மைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்?

6. பூர்வ கிரீஸிலும் ரோமிலும் நடந்த காரியமானது குடும்பத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி எப்படி உதாரணமாக விளக்கிக் காட்டுகிறது?

7. ரோம பேரரசில் மற்றவர்கள் கவலைக்கிடமான பிரச்னைகளை அனுபவித்துக் கொண்டிருக்கையில் ஏன் குறிப்பிட்ட சில ஆட்கள் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்?

8. குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பதைக் குறித்ததில் பைபிளுக்கு நாம் கவனம் செலுத்துவது ஏன் தகுந்ததாயிருக்கிறது? (சங்கீதம் 119:100-105)

9, 10. (எ) ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை ஒருவன் அனுபவித்து மகிழும்படி செய்வதற்கு உதவியான ஆலோசனைகளும் இயல்பான பாசமும் மாத்திரமே ஏன் போதியவையாக இல்லை? (பி) வேறு எதுவும் தேவைப்படுகிறது? (வெளிப்படுத்துதல் 4:11)

11-13. இந்தப் பூமியையும் மனித குடும்பத்தையும் குறித்த கடவுளுடைய நோக்கம் என்ன?

14. குடும்ப வாழ்க்கையைப் பற்றிய கடவுளுடைய நோக்கம் தவறிப்போகாது என்று நாம் ஏன் நம்பிக்கையாயிருக்கலாம்?

15-17. (எ) குடும்ப வாழ்க்கையின்பேரில் உண்மையில் முக்கியமான கேள்விகளில் சில என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (பி) இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களைக் கண்டுபிடிப்பது ஏன் நல்லது?

[பக்கம் 4-ன் முழுபடம்]