Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

அதிகாரம் 9

குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

புதிதாகப் பிறந்த பிள்ளையின் மனதானது ஒன்றும் எழுதப்படாத ஒரு பக்கத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் குழந்தை, அதன் தாயின் கருப்பையில் இருந்தபோதே அதன் மனதில் பல பதிவுகள் செய்யப்பட்டன. மேலும் பரம்பரை வழியாய்ச் சுதந்தரிக்கப்பட்ட சில தனி சுபாவ பண்புகள் அதற்குள் நிலையாய் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும், கற்றுக்கொள்வதற்கு மிகப் பேரளவான திறமை அது பிறந்த விநாடி முதற்கொண்டு அங்கே இருக்கிறது. ஒரு தனி பக்கம்தானே அல்ல, ஒரு முழு நூல் நிலையமே அதன் பக்கங்களில் தகவல்களின் பதிவுகளைப் பெற்றுக்கொள்ள காத்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.

2பிறப்பின்போது ஒரு குழந்தையின் மூளையானது, வாலிபப் பருவத்தில் அது இருக்கப்போகிற எடையில் கால்பாகமே இருக்கிறது. ஆனால் இந்த மூளை அவ்வளவு அதிக விரைவில் வளருகிறதனால் இரண்டு ஆண்டுகளில் தானே அதன் வாலிபப் பருவ எடையின் முக்கால் பாகத்தை எட்டி விடுகிறது! அறிவுத்திறனின் வளர்ச்சி உடன் தொடர்ந்து செல்லுகிறது. பிள்ளையின் அறிவுத்திறனானது அதன் வாழ்க்கையின் முதல் நான்கு ஆண்டுகளில் அதன் அடுத்தப் பதிமூன்று ஆண்டுகளின்போது வளரப் போகிற அளவுக்குச் சமமாக வளர்ந்து விடுகிறதென்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். உண்மையில், “பிள்ளை தன்னுடைய ஐந்தாவது பிறந்த நாளுக்கு முன்பாகக் கற்றுக் கொள்ளுகிற கருத்துக்கள் அவன் வாழ்க்கையில் என்றாவது எதிர்ப்படக்கூடிய மிக அதிகக் கடினமானவற்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன”வென்று சிலர் சொல்லுகின்றனர்.

3வலதுபுறம் இடதுபுறம், மேலே கீழே, நிறைவு காலி ஆகியவற்றைப் போன்ற அடிப்படை கருத்துப்பாங்குகள், அவற்றோடுகூட உருவ மற்றும் எடை அளவுகளை ஒப்பிட்டுக் காணல் ஆகிய இவையெல்லாம் நமக்கு அவ்வளவு இயல்பாயிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆனால் பிள்ளை இவற்றையும் வேறு பெருந்திரளான கருத்துக்களையும் கற்கவேண்டும். பேச்சுக்குரிய இந்தக் கருத்தமைப்புதானேயும் குழந்தையின் மனதில் ஆழப் பதியவைத்து நிலைநாட்டப்படவேண்டும்.

4மொழியைக் கற்பது, “ஒருவேளை ஒரு மனிதன் நடப்பிக்கக்கூடிய சாதனைகளில் மிகக் கடினமான ஒன்று,” என்பதாகச் சிலர் கருதுகின்றனர். ஒரு புதிய மொழியைக் கற்க நீங்கள் எப்பொழுதாவது அரும்பாடுபட்டிருப்பீர்களானால் நீங்கள் அநேகமாய் இதை ஒப்புக் கொள்வீர்கள். ஆனால் நீங்களாவது, மொழி எப்படி இயங்குகிறதென்பதை அறிந்திருக்கும் அனுகூலத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். குழந்தைக்கு இது இல்லை, என்றபோதிலும் அதன் மனமானது மொழியின் கருத்தமைப்பைப் பற்றிக் கொண்டு அதை உபயோகிக்கத் திறமையுள்ளதாயிருக்கிறது. அது மட்டுமல்ல, இரண்டு மொழிகள் பேசப்படும் வீடுகளில் அல்லது பகுதிகளில் வாழும் இளவயது பிள்ளைகள்—தாங்கள் பள்ளிக்குப் போகத் தொடங்குவதற்கு முன்பேயுங்கூட—இரண்டு மொழிகளையுமே எளிதில் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்! ஆகையால், அறிவுத்திறன் அங்கே இருக்கிறது, வளரச் செய்யும்படி காத்துக் கொண்டிருக்கிறது.

தொடங்குவதற்கான காலம் உடனடியாகவே!

5தன் தோழனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுபவனாய் அப்போஸ்தலனாகிய பவுல், “குழந்தை பருவம் முதற்கொண்டு” பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருந்ததாக அவனுக்கு நினைப்பூட்டினான். (2 தீமோத்தேயு 3:15, NW) கற்றுக் கொள்வதற்கான குழந்தையின் இயல்பான ஆவல் துடிப்பைக் கண்டுணருகிற தகப்பன் அல்லது தாய், ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள், முழு கண்களுடனும் காதுகளுடனும் வெகு விழிப்பாய்க் கூர்ந்து கவனிக்கிறவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் இதைத் தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, இந்தச் சின்னஞ் சிறியவர்கள் தகவலை உட்கொண்டு அதைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதோடு கூட்டி, முடிவுகளைச் செய்வதிலும் சுறுசுறுப்பாய் இருக்கின்றனர். உண்மையில், பெற்றோர் எச்சரிக்கையாயிராவிட்டால், சிறிது நேரத்திற்குள்ளேயே குழந்தை அவற்றைத் தன்னுடைய விருப்பங்களுக்கேற்ப எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்பதைக் கவனிக்கத்தக்க வண்ணமாய் நன்றாய்க் கற்றுக்கொள்ளக்கூடும். ஆகையால், கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் புத்திமதி பிறப்பு முதற்கொண்டு பொருந்துகிறது: “நடக்க வேண்டிய வழியில் பிள்ளையைப் பழக்கு, முதிர்வயதிலும் அவன் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6, தி.மொ.) நிச்சயமாகவே, முதல்பாடங்கள், ஏராளமான அன்புள்ள கவனிப்போடும் பாசத்தோடும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதோடுகூட அவசியமான திருத்துதல் கனிவாய் ஆனால் உறுதியுடன் கொடுக்கப்படவேண்டும்.

6குழந்தையிடம் பேசுங்கள், “மழலைப் பேச்சில்” அல்ல, எளிதான, பெரியவர்கள் பேசும் பேச்சில் பேசுங்கள், இதையே அது கற்றுக் கொள்ளும்படி நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தச் சிறிய பிள்ளை பேசக் கற்றுக் கொள்கையில் பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளால் உங்களை மூழ்க்கடிப்பான்: ‘மழை ஏன் பெய்கிறது? நான் எங்கிருந்து வந்தேன்? பகலில் நட்சத்திரங்கள் எங்கே போகின்றன? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இது ஏன்? அது ஏன்?’ இவ்வகையான கேள்விகள் முடிவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன! இவற்றிற்குச் செவிகொடுத்துக் கேளுங்கள், ஏனெனில் கேள்விகள், பிள்ளை கற்றுக் கொள்வதற்கு உபயோகமாயிருக்கும் மிகச் சிறந்த கருவிகளாயிருக்கின்றன. கேள்விகளைக் கேட்க விடாமல் அடக்கி வைப்பதானது மன வளர்ச்சியைத் தடுத்து அடக்கிவைப்பதாகக்கூடும்.

7“நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்,” என்று அப்போஸ்தலன் நினைவு கூர்ந்ததைப் போல், நீங்களும் நினைவு கூருங்கள். (1 கொரிந்தியர் 13:11) உங்களால் கூடிய மிகச் சிறந்த முறையில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுங்கள், என்றாலும் எளிதாகவும் சுருக்கமாகவும் கொடுங்கள். ‘மழை ஏன் பெய்கிறது?’ என்று ஒரு பிள்ளை கேட்கையில், சிக்கலான நுட்பவிவரமான பதில் அதற்கு வேண்டியதில்லை. ‘மேகங்கள் தண்ணீரால் கனமாகிறது, அந்தத் தண்ணீர் விழுந்து விடுகிறது,’ என்பதைப் போன்ற ஒரு பதில் அதைத் திருப்தி செய்யக்கூடும். பிள்ளையின் கவனம் செலுத்தும் அளவு குறுகியது; அது விரைவில் மற்ற காரியங்களுக்கு மாறி மாறி கவனத்தைத் திருப்பிக் கொண்டு செல்லுகிறது. குழந்தை கடின உணவுகளைச் சாப்பிடுவதற்குப் படிப்படியாய் முன்னேறும்வரையில் அதற்கு நீங்கள் பால் கொடுப்பதைப் போலவே, அதிகநுட்ப விவரமான அறிவை அது விளங்கிக் கொள்ளும் வரையில் எளிதான தகவலை அதற்குக் கொடுங்கள்.—எபிரெயர் 5:13, 14-ஐ ஒத்துப் பாருங்கள்.

8கற்பது படிப்படியாய் முன்னேற வேண்டும். குறிப்பிட்டபடி தீமோத்தேயு குழந்தைப் பருவத்திலிருந்தே வேத எழுத்துக்களோடு பழக்கப்படுத்தப்பட்டவனாய் இருந்தான். அவனுடைய சிறு பிள்ளை பருவ காலத்தை நினைவுபடுத்திப் பார்க்கையில் அவனுக்கு மனதில் வரக்கூடிய மிக முந்திய நினைவுகளில் தான் பைபிளிலிருந்து கற்பிக்கப்பட்டு வந்தது அடங்கியிருந்தது. நிச்சயமாகவே இது, இன்று ஒரு தகப்பனோ தாயோ தன் பிள்ளைக்கு வாசிக்கக் கற்பிக்கத் தொடங்குவதைப் போலவே, படிப்படியாய்ச் செய்யப்பட்டது. உங்கள் பிள்ளைக்கு வாசியுங்கள். அவன் குழந்தையாயிருக்கையில் அவனை உங்கள் மடியில் தூக்கி வைத்து, உங்கள் புயம் அவனைச் சுற்றி அணைத்திருக்க இனிமையான குரலில் வாசியுங்கள். அவனுக்குப் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அனலான உணர்ச்சியுண்டாகும், அவனுக்கு எதுவும் அதிகம் விளங்குகிறதில்லையென்றாலுங்கூட அந்த வாசிப்பு அவனுக்கு இன்ப அனுபவமாயிருக்கும். பின்னால், எழுத்துக்களை, ஒருவேளை ஒரு விளையாட்டைப் போல் நீங்கள் கற்பிக்கலாம். பின்பு வார்த்தைகளை உண்டு பண்ணுங்கள். கடைசியாக வார்த்தைகளை வாக்கியங்களாக்குங்கள். கற்கும் இந்த நடைமுறையை கூடிய வரையில் மகிழ்ச்சியுள்ளதாக்குங்கள்.

9உதாரணமாக ஒரு தம்பதிகள் தங்கள் மூன்று வயது பிள்ளைக்குச் சத்தமாய் வாசிப்பார்கள் அவ்வாறு வாசிக்கையில் பிள்ளை கவனித்துக் கொண்டு வரும்படி ஒவ்வொரு வார்த்தையையும் விரலால் காட்டிக் கொண்டே வருவார்கள். “கடவுள்,” “இயேசு,” “மனிதன்,” “மரம்,” என்பவற்றைப் போன்ற, குறிப்பிட்ட வார்த்தைகள் வருகையில் அவர்கள் நிறுத்துவார்கள். அப்பொழுது பிள்ளை அந்த வார்த்தையைச் சொல்லுவான். அவன் வாசிக்கக்கூடிய வார்த்தைகள் படிப்படியாய் அதிகரித்தன, இவ்வாறு அவன் நான்கு வயதில் அந்த வார்த்தைகளில் பெரும்பான்மையானவற்றை வாசித்தான். வாசிப்பதோடுகூட எழுதுவதும் வருகிறது, முதலாவதாகத் தனி எழுத்துக்கள், பின்பு முழுமையான வார்த்தைகள். தன்னுடைய சொந்த பெயரை எழுதுவது பிள்ளைக்கு மிகுந்த இன்ப உணர்ச்சியூட்டுகிறது!

10ஒவ்வொரு பிள்ளையும் வேறுபட்டதாய், அததற்குரிய தனிப்பட்ட சுபாவத்தையுடையதாயிருக்கிறது, ஆகவே அது சுதந்தரித்திருக்கும் அதன் தனித்த உள்ளார்ந்த ஆற்றலுக்கும், இயல்பான திறமைகளுக்கும் இசைய முன்னேறும்படி பிள்ளை உதவி செய்யப்படவேண்டும். அதனதன் சுதந்தரிக்கப்பட்ட வலிமைகளையும் திறமைகளையும் வளர்த்து முன்னேற்றுவிக்கும்படி ஒவ்வொரு பிள்ளையையும் தனித்தனியே நீங்கள் பயிற்றுவிப்பீர்களானால், ஒரு பிள்ளை மற்றப் பிள்ளைகளின் சாதனைகளின் பேரில் பொறாமை உணர்ச்சியடைவதற்கு அவசியமாயிராது. ஒவ்வொரு பிள்ளையும் அது இருக்கிறபடியே நேசித்து மதித்துப் பாராட்டப்படவேண்டும். தவறான மனச் சாய்வுகளை மேற்கொள்ள அல்லது அடக்கியாள பிள்ளைக்கு உதவி செய்கையில், நீங்கள் முன்னதாகவே தீர்மானித்துள்ள ஒரு வார்ப்புக்குள் அதை வற்புறுத்த முயலக்கூடாது. அதற்கு மாறாக, அதன் சொந்த நல்ல சுபாவ பண்புகளை மிகச் சிறந்த உபயோகம் செய்வதற்கு அதை வழிநடத்துங்கள்.

11ஒரு பிள்ளையை மற்றப் பிள்ளையோடு ஒப்பிட்டு அதற்கிருக்கும் மேம்பட்ட அல்லது கீழ்ப்பட்ட தன்மையைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதால் தாயோ தகப்பனோ தன்னல போட்டிக்குரிய ஓர் ஆவியைப் பிள்ளையில் தூண்டி வளர்க்கக்கூடும். சிறுபிள்ளைகள் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே உடன் பிறந்த தன்னலத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறபோதிலும், உயர்தரம், மேம்பட்ட நிலை என்ற எண்ணங்கள், தானே முக்கியமானவன் என்ற உணர்ச்சிகள் ஆகியவை அவர்களுக்கு முதன் முதலில் இல்லாதிருக்கின்றன. இதன் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இயேசுவின் சீஷர்கள், மேன்மையை நாடும் ஆவியையும் தங்களை முக்கியப்படுத்துவதில் அக்கறையையும் காட்டினதைத் திருத்துவதற்கு இயேசு ஒரு சிறுபிள்ளையை உதாரணமாக உபயோகிக்கக்கூடியவராயிருந்தார். (மத்தேயு 18:1-4) ஆகையால் ஒரு பிள்ளையை மற்றொன்றுடன் ஆதரவாயிராத முறையில் ஒப்பிடுவதைத் தவிருங்கள். பிள்ளை இதை, தான் வேண்டாமென்று ஒதுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடும். முதலாவதாக பிள்ளை தனக்குத் தீங்கு செய்யப்பட்டதாக உணரக்கூடும், மேலும் இவ்விதம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தால், அது அநேகமாய் எதிர்த்துப் போராடுவதாக மாறக்கூடும். மறுபட்சத்தில், மேம்பட்டதாகக் காட்டப்பட்ட பிள்ளை கர்வம் கொண்டதாகி மற்றவர்களுடைய வெறுப்பை வருவித்துக் கொள்ளக்கூடும். பெற்றோராக, உங்களுடைய அன்பும், ஏற்பும், ஒரு பிள்ளை, மற்றொன்றுடன் ஒப்பிட எப்படியிருக்கிறதென்பதன் பேரில் ஒருபோதும் சார்ந்திருக்கக்கூடாது. பல்வகை வேறுபாட்டு நிலை இன்பந்தருவதாயிருக்கிறது. இசைக் கருவியாளர்கள் குழு பல்வகை வேறுபாட்டையும் நிறைவையும் கூட்டுவதற்கு வெவ்வேறுபட்ட பல வகைகளான இசைக் கருவிகளைக் கொண்டிருக்கிறது, என்றபோதிலும் எல்லாம் இனிவாய் ஒத்திசைகின்றன. வெவ்வேறுபட்ட சுபாவத் தன்மைகள் குடும்ப வட்டாரத்திற்குத் தனிச் சுவையையும் உற்சாகத்தையும் கூட்டுகின்றன, அதே சமயத்தில் எல்லாரும் தங்கள் சிருஷ்டிகரின் சரியான நியமங்களின்படி தங்களை உருப்படுத்தியமைத்துக் கொள்கையில் இனிய ஒத்திசைவு கெடுக்கப்படாமல் இருக்கும்.

உங்கள் பிள்ளை வளர உதவி செய்யுங்கள்

12“தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. (எரேமியா 10:23, தி.மொ.) மனிதன் வசத்தில் தான் இருக்கிறதென்று மனிதர் சொல்லுகின்றனர். ஆகையால் தெய்வீக வழிநடத்துதலை அவர்கள் ஏற்க மறுத்து, மனித வழிநடத்துதலை ஏற்று ஒன்றன்பின் மற்றொன்றாகப் பல இக்கட்டுகளுக்குள் நடந்து, கடைசியாகக் கடவுளையே உண்மையுள்ளவராக நிரூபிக்கிறவர்களாய் முடிவடைகிறார்கள். மனிதனுக்குச் சரியாகத் தோன்றுகிற ஒரு வழி உண்டு, ஆனால் அதன் முடிவோ மரண வழி என்று யெகோவா தேவன் சொல்லுகிறார். (நீதிமொழிகள் 14:12) மனிதர் தங்களுக்குச் சரியாகத் தோன்றின வழியையே தெரிந்து கொண்டு வெகுகாலமாக நடந்து வந்திருக்கின்றனர். இது அவர்களை யுத்தத்திற்கும், பஞ்சத்திற்கும், நோய்க்கும், மரணத்திற்குமே வழிநடத்தியிருக்கிறது. வளர்ந்த அனுபவமுள்ள ஒரு மனிதனுக்குச் சரியாகத் தோன்றுகிற வழி மரணத்தில் முடிவடைகிறதென்றால், ஒரு சிறு பிள்ளைக்குச் சரியாகத் தோன்றுகிற வழி எப்படி வேறு எங்கேயாவது முடிவடையக்கூடும்? நடக்கிற மனிதனுக்குத் தன் நடைகளை நடத்துவது அவன் வசத்தில் இல்லையென்றால், தன்னுடைய வாழ்க்கையை நடத்துவது தத்தித்தத்தி நடந்து கொண்டிருக்கிற சிறு பிள்ளையின் வசத்தில் இருக்கக்கூடுமா? சிருஷ்டிகர் தம்முடைய வார்த்தையின் மூலமாய்ப் பெற்றோருக்கும் பிள்ளைக்கும், ஆம் இருவருக்குமே வழிநடத்துதல்களை அளிக்கிறார்.

13பெற்றோருக்கு, கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “இந்த நாளில் நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்திலே பதிந்திருக்க வேண்டும். நீ அவைகளை உன் பிள்ளைகளின் மனதில் படும்படி போதிக்க வேண்டும்; நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும் வழியில் நடக்கிறபோதும் படுத்துக் கொள்ளுகிறபோதும் எழுந்திருக்கிறபோதும் அவைகளைப் பற்றிப் பேச வேண்டும்.” (உபாகமம் 6:6, 7, தி.மொ.) எந்த மற்றும் எல்லாச் சமயங்களிலும், தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் போதனைகள் கொடுக்கப்படவேண்டும். காலை நேரம் வேலைக்கு அல்லது பள்ளிக்குப் போகத் தயாராகும் அவசர நேரமாகப் பலருக்கு இருக்கலாமென்றாலும், குடும்பம் ஒன்றாகக் காலை உணவு அருந்துகையில் உணவுக்காகக் கடவுளுக்கு நன்றியறிதலைக் கூறுவது நினைவுகளை சிருஷ்டிகரிடமாக வழிநடத்தும், மேலும், குடும்பத்திற்கு ஆவிக்குரிய நன்மை பயக்கக்கூடிய மற்றக் குறிப்புகளும் சேர்த்துக் கொள்ளப்படலாம். அந்நாளின் நடவடிக்கைகளைப் பற்றி அல்லது பள்ளியைப் பற்றி சில குறிப்புகளைப் பேசவும், அநேகமாய் எழும்பக்கூடிய பிரச்னைகளைச் சமாளித்து மேற்கொள்வதன் பேரில் ஆரோக்கியமான ஆலோசனை கொடுக்கவும் நேரம் அனுமதிக்கக்கூடும். ‘படுத்துக் கொள்ளுகிற போதாகிய’ தூங்கப் போகும் நேரத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சற்று அதிகப்படியான கவனம் கொடுப்பார்களேயானால், இது சிறு பிள்ளைகளுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்கக்கூடும். படுக்கை நேர கதைகள் சிறு பிள்ளைகளுக்கு மிக அதிகத்தைக் குறிக்கக்கூடும், கற்பிப்பதற்கு அது சிறந்த வழிவகையாயிருக்கக்கூடும். பைபிள் பல வரலாறுகள் நிறைந்ததாயிருக்கிறது, அவற்றைப் பிள்ளைக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாக எடுத்துச் சொல்ல பெற்றோருக்குச் சிறிது புத்தி சாதுரியமும் அனலுமே தேவைப்படுகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையிலிருந்து கூறும் தனிப்பட்ட அனுபவங்கள் விசேஷித்த வண்ணமாய் உங்கள் பிள்ளைகளின் மனதை உருக்கி, சில நல்ல பாடங்களை மனதில் பதிய வைக்கக்கூடும். சொல்லுவதற்குப் புதிய கதைகளைக் கண்டு பிடிப்பது ஒரு சவாலாகத் தோன்றலாமென்றாலும், அநேகமாய் பிள்ளை அதே கதைகளை மறுபடியும் மறுபடியுமாகக் கேட்கப் பிரியப்படுகிறதென்று நீங்கள் காண்பீர்கள். இந்தக் கூடுதலான நேரத்தைச் செலவிடுவதன் மூலம் உங்கள் பிள்ளைகளுடன் பேச்சுத்தொடர்புகள் மேலுமதிகம் திறந்து வைக்கப்படும். படுக்கைக்குப் போகும் நேரத்தில் சிறு பிள்ளைகளுடன் ஜெபம் செய்வதானது, அவர்களை வழிநடத்தி பாதுகாப்பதில் மற்றெல்லாரையும்விட மிக அதிகத்தைச் செய்யக்கூடியவராகிய கடவுளோடு சிறு வயதிலேயே பேச்சுத் தொடர்பை நிலைநாட்டிக் கொள்வதற்கு உதவி செய்யக்கூடும்.—எபேசியர் 3:20; பிலிப்பியர் 4:6, 7.

14நீங்கள் எங்கே இருந்தாலும் ‘வீட்டில் உட்கார்ந்திருந்தாலும்’ சரி அல்லது ‘ரோட்டில்’ பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் சரி, உற்சாகமூட்டி பயன் தரத்தக்க வழிகளில் உங்கள் பிள்ளையைப் பயிற்றுவிக்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு, இவற்றில் சில, விளையாட்டு முறையில் கற்பிக்கப்படலாம். பைபிள் படிப்புக்குரிய கூட்டத்தில் படித்தக் குறிப்புகளைத் திரும்ப நினைவுக்குக் கொண்டுவர பிள்ளைகளுக்கு உதவி செய்வதில் இது எப்படி நிறைவேற்றப்பட்டதென்பதைக் குறித்து ஒரு தம்பதிகள் பின்வருமாறு கூறினார்கள்:

‘ஒரு சாயங்காலம் ஆறு வயது சிறு பையன் ஒருவனை எங்களோடு அழைத்துச் சென்றோம், சாதாரணமாய் அவன், கூட்டங்களில் அவ்வளவு அதிகக் கவனம் செலுத்துகிறதில்லை. மன்றத்திற்குப் போய்க் கொண்டிருக்கையில், நான் பின்வருமாறு சொன்னேன்: “நாம் ஒரு விளையாட்டு விளையாடலாம். வீட்டுக்குத் திரும்பி வருகையில், கூட்டத்தில் பாடின பாட்டுகளையும் சொல்லப்பட்ட சில முக்கியக் குறிப்புகளையும் நாம் நினைவுக்குக் கொண்டுவரக் கூடுமாவென்று பார்க்கலாம்.” வீட்டுக்குத் திரும்பிப் போகையில் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாயிற்று. சாதாரணமாய் கவனம் செலுத்தாதிருக்கிற அந்த மிகச்சிறிய பையனுக்குப் பேசுவதற்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அவன் அந்தக் குறிப்புகளில் பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்தான். பின்பு எங்கள் பிள்ளைகள் தங்கள் குறிப்புகளைக் கூட்டினார்கள், கடைசியாக பெரியவர்களாகிய நாங்கள் இருவரும் குறிப்புகளைச் சொன்னோம். வேலையாக இருப்பதற்குப் பதிலாக இது அவர்களுக்கு விளையாட்டாக இருந்தது.’

15பிள்ளை பெரியதாக வளர்ந்து வருகையில் எண்ணங்களை வெளியிடவும், பொருட்களை வரையவும், சிறிது வேலை செய்யவும், ஓர் இசைக்கருவியை இயக்கி ஏதோ இசையுண்டாக்கவும் கற்றுக் கொள்வான். ஏதோ நிறைவேற்றின ஓர் உணர்ச்சி அவனுக்கு உண்டாகிறது. அவனுடைய வேலை, ஒரு கருத்தில், அவன் தன்னை விரிவுபடுத்துவதாயிருக்கிறது. அது அவனுக்கு வெகு தனிப்பட்டதாயிருக்கிறது. நீங்கள் அதைப் பார்த்து ‘வெகு நன்றாய் செய்திருக்கிறாய்,’ என்று சொல்லுவீர்களானால் பிள்ளையின் மனக் கிளர்ச்சிகள் உயர எழும்புகின்றன. நீங்கள் உண்மையான மனதுடன் போற்றக்கூடிய ஏதோவொன்றை அவனுடைய வேலையில் கண்டுபிடியுங்கள், அவன் உற்சாகமூட்டப்படுவான். சாதுரியமில்லாமல் அதில் குறை கண்டுபிடிப்பீர்களானால், அவன் வாடி மனமுறிவடையக்கூடும். அவசியமானால் அதன் ஓர் அம்சத்தைப் பற்றி ஒரு கேள்வியை எழுப்புங்கள், ஆனால் அது அவனுடைய வேலையைத் தள்ளிவிடுவதாக வரும்படி அனுமதியாதேயுங்கள். உதாரணமாக, அவன் தானாக வரைந்ததை எடுத்து அதை நீங்கள் திரும்பச் செய்வதைப் பார்க்கிலும், மற்றொரு துண்டு காகிதத்தில் ஏதாவது முன்னேற்றத்தை நீங்கள் செய்து காட்டலாம். இது அவனுக்கு விருப்பமானால், தான் வரைந்த படத்தில் சரிப்படுத்தல்களைச் செய்து கொள்ள அவனுக்கு இடமளிக்கும். அவனுடைய முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம் அவனுடைய வளர்ச்சியை நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள்; கனிவற்ற முறையில் குற்றங்கண்டுபிடிப்பதனால் நீங்கள் அவனை மனச்சோர்வுறச் செய்வீர்கள் அல்லது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும்படியான அவனுடைய ஆவலைத் தடுத்து அடக்கிவிடக்கூடும். ஆம், “அவனவன் தன் தன் சுயகிரியைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்,” என்று கலாத்தியர் 6:4-ல் கொடுக்கப்பட்டுள்ள இந்த நியமம் பிள்ளைகளுக்குங்கூட பொருந்தக்கூடும். பிள்ளைக்கு, முக்கியமாய் அவன் எடுக்கும் முதல் முயற்சிகளுக்கு ஊக்கமூட்டுதல் தேவையாயிருக்கிறது. அவனுடைய வயதுக்கு அந்த வேலை நல்லதாக இருக்கிறதென்றால், அதைப் போற்றுங்கள்! இல்லையென்றால், அவன் எடுத்த முயற்சியைப் போற்றி மறுபடியுமாக அதை முயன்று பார்க்கும்படி ஊக்கமூட்டுங்கள். அவனுடைய முதல் முயற்சியில் தானே அவன் நடந்துவிடவில்லையே.

பாலுறவை நான் எப்படி விளக்குவது?

16உங்கள் பிள்ளையின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து உங்களோடு காரியங்களைக் கலந்து பேசும்படி ஊக்குவிக்கப்படுத்துகிறீர்கள். ஆனால் அப்பொழுது திடீரென்று பாலுறவைப் பற்றி நீங்கள் கேட்கப்படுகிறீர்கள். நீங்கள் வெளிப்படையாய்ப் பதிலளிக்கிறீர்களா அல்லது சிறிய தம்பி அல்லது தங்கை மருத்துவமனையிலிருந்து வாங்கப்பட்டதென்று ஏதோ ஒன்றைச் சொல்லி தவறாக வழிநடத்தும் பதிலைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் திருத்தமான தகவலைக் கொடுப்பீர்களா அல்லது பிள்ளைகள் இழிவான, தவறாகவுங்கூட இருக்கிற பதில்களை, ஒருவேளை வெறுப்பூட்டுகிற தகாத சூழ்நிலையில் பெரிய பிள்ளைகளிடமிருந்து அடைய விட்டுவிடுவீர்களா? பாலுறவு அல்லது பிறப்புக்குரிய உறுப்புகள் சம்பந்தப்பட்ட பல காரியங்களுக்கு வெளிப்படையான குறிப்புகள் பைபிளில் அடங்கியிருக்கின்றன. (ஆதியாகமம் 17:11; 18:11; 30:16, 17; லேவியராகமம் 15:2) தம்முடைய வார்த்தை வாசிக்கப்பட வேண்டிய கூட்டங்களைக் குறித்து தம்முடைய ஜனத்திற்கு கட்டளையிடுகையில்: “முழு ஜனத்தையும் கூடிவரச் செய்யவேண்டும்; புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கேட்டுக் கற்றுக் கொள்”ளும் படிக்கு என்று கடவுள் கூறினார். (உபாகமம் 31:12) ஆகவே அந்தச் சிறிய பிள்ளைகள் இப்படிப்பட்ட குறிப்புகளை “வீதி பேச்சு” வகையில் அல்ல, பயபக்தியான மரியாதையுள்ள சூழ்நிலையில் கேட்பார்கள்.

17மெய்யாகவே, பாலுறவை விளக்குவதானது பெற்றோர் பலர் கற்பனை செய்வதைப்போல் அவ்வளவு கடினமாக இருக்க வேண்டியதில்லை. வெகு சிறுவயதிலேயே பிள்ளைகள் தங்கள் உடலைப் பற்றித் தெரிந்து கொள்ளுகிறார்கள் பற்பல பகுதிகளைக் கண்டுபிடித்துக் கொள்ளுகிறார்கள். அவற்றின் பெயர்களை உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்: கைகள், பாதங்கள், மூக்கு, வயிறு, பிட்டங்கள், ஆண்குறி, பெண்குறி முதலியன. நீங்கள் திடீரென்று மாறி, பிறப்பு உறுப்புக்களைப் பற்றிப் பேசாமல் அமைதிப்பட்டால் தவிர பிள்ளை அதைக் குறித்து குழப்பமூட்டப்படுகிறதில்லை. ஒரு தடவை கேள்வி கேட்டல் தொடங்கிவிட்டால், எல்லாவற்றையும் தாங்கள் விளக்க வேண்டியதாகி விடுமென்று பெற்றோர் எண்ணுவதே அவர்களுக்குப் பயத்தை உண்டுபண்ணுகிறது. உண்மையில் பிள்ளை தன் வளர்ச்சியின் வெவ்வேறு பருவ நிலைகளை அடைகையில் இந்தக் கேள்விகள் துண்டு துண்டாக வருகின்றன. வெவ்வேறு பருவங்களை அடைகையில், அதற்குத் தகுந்த சொற்களையும், வெகு எளிதாக மற்றும் பொதுவாயிருக்கிற விளக்கங்களையும் மாத்திரமே கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

18உதாரணமாக, ‘குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன?’ என்று ஒருநாள், நீங்கள் கேட்கப்படுகிறீர்கள். நீங்கள் வெறுமென, ‘குழந்தைகள் தங்கள் தாய்களுக்குள் வளருகின்றன’ என்பதைப் போன்று எளிதாக பதில் சொல்லலாம். அநேகமாய், இப்போதைக்கு இவ்வளவுதானே தேவைப்படுகிறது. பின்னால் உங்கள் பிள்ளை, ‘பாப்பா எப்படி வெளியே வருகிறது?’ என்று கேட்கக்கூடும். ‘அதற்கு ஒரு விசேஷித்தத் திறப்பு இருக்கிறது.’ இந்தப் பதில் இப்போதைக்குச் சாதாரணமாய் திருப்தியளித்துவிடுகிறது.

19சிறிது காலத்திற்கப்பால், ‘குழந்தை எப்படி உண்டாகத் தொடங்குகிறது?’ என்ற கேள்வி வரக்கூடும். உங்கள் பதில் பின்வருமாறு இருக்கலாம்: ‘ஒரு தகப்பனும் தாயும் ஒரு குழந்தை வேண்டுமென்று விரும்புகிறார்கள். தகப்பனிடமிருந்து வரும் ஒரு விதை தாய்க்குள்ளிருக்கும் ஒரு கருவணுவைச் சந்திக்கிறது. குழந்தை வளரத் தொடங்குகிறது. தரைக்குள்ளிருக்கும் ஒரு விதை ஒரு பூவாக அல்லது ஒரு மரமாக வளருவதைப் போல் வளருகிறது.’ இவ்வாறு, இது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு கதையாயிருக்கிறது. ஒவ்வொரு துண்டுபகுதியும் அந்தச் சமயத்திற்குப் பிள்ளையைத் திருப்தி செய்ய போதுமானதாயிருக்கிறது. பின்னால் ‘தகப்பனின் விதை தாய்க்குள் எப்படிச் செல்லுகிறது?’ என்று பிள்ளை ஒருவேளை கேட்கலாம். நீங்கள் வெறுமென பின்வருமாறு சொல்லலாம்: ‘ஒரு பையன் எப்படியிருக்கிறான் என்று உனக்குத்தெரியும் அவனுக்கு ஒரு ஆண்குறி இருக்கிறது. அது பொருந்துகிற ஒரு திறப்பை பெண் தன்னுடைய உடலில் கொண்டிருக்கிறாள். விதைவிதைக்கப்படுகிறது. தாய்க்குள் குழந்தை உண்டாகத் தொடங்கி, வளர்ந்து, கடைசியில் ஒரு குழந்தையாக வெளியே வருகிறது இவ்வகையில் மக்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள்.’

20இவ்வாறு அணுகும் நேர்மையான பேச்சு நிச்சயமாகவே பொய்க் கதைகளைப் பார்க்கிலும் அல்லது பேசாமல் மறைத்து இவ்வாறு இந்தக் காரியத்தை ஏதோ வெறுக்கத்தக்கதென்பதுபோல் தோன்ற செய்கிறதைப் பார்க்கிலும் மேலானது. (தீத்து 1:15-ஐ ஒத்துப் பாருங்கள்.) மேலும், பிள்ளை தன் பெற்றோரிடமிருந்தே இந்த உண்மை விவரங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது; பெற்றோர் தங்கள் விளக்கங்களோடுகூட, குழந்தைகள் ஏன், விவாகம் செய்து ஒருவரையொருவர் நேசிக்கிறவர்களும் குழந்தையை நேசித்துக் கவனித்து வரும்படியான பொறுப்பை ஏற்றிருக்கிறவர்களுமான ஆட்களிலிருந்து மாத்திரமே சரியானபடி வரவேண்டுமென்பதற்குக் காரணத்தையும் சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது இந்தக் காரியத்தை முழுவதும் அசுத்தமாகத் தோன்றச் செய்கிற ஒரு சூழ்நிலையில் கற்றுக் கொள்வதற்கு மாறாக ஆவிக்குரிய நிலையில் வைக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக அதிக முக்கியமான பாடங்களைப் பிள்ளைகளுக்குக் கடத்துதல்

21இயேசு ஒரு சமயத்தில், தம்முடைய காலத்திலிருந்த மக்களை, “சந்தை வெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு,” ஒப்பிட்டார். (மத்தேயு 11:16, 17) இந்தப் பிள்ளைகளின் விளையாட்டுகள் பெரியவர்களையும் அவர்களுடைய பண்டிகைகளையும் பிண ஊர்வலங்களையும் மாதிரியாகப் பார்த்து பின்பற்றினதாயிருந்தன. ஒருவரைப் பார்த்துப் பின்பற்றுவது பிள்ளையின் இயல்பான போக்காக இருப்பதனால், பிள்ளையைப் பயிற்றுவிப்பதில் பெற்றோரின் முன்மாதிரி வல்லமை வாய்ந்த பங்கை வகிக்கிறது.

22பிறந்த நேரம் முதற்கொண்டு உங்கள் குழந்தை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டு வருகிறது. குழந்தையிடம் தானேயும், உங்கள் துணையிடமும் மேலும் மற்ற ஆட்களிடமும் பேசுகையில் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்றதிலிருந்து மாத்திரமேயல்ல, அதை எப்படிச் சொல்லுகிறீர்கள் என்பதிலிருந்தும், பேசுவதில் நீங்கள் உபயோகிக்கும் குரலின் தொனியிலிருந்தும் கற்று வருகிறது. பெற்றோர் ஒருவரோடொருவரும், குடும்பத்தின் மற்ற அங்கத்தினரோடும், வீட்டுக்கு வருகிறவர்களோடும் நடந்துகொள்ளும் முறைகளைப் பிள்ளை கூர்ந்து கவனிக்கிறது. இந்தக் காரியங்களில் உங்கள் முன்மாதிரியானது, பிள்ளை நடக்க அல்லது எண்ண அல்லது வாசிக்க, எழுத கற்றுக் கொள்வதைப் பார்க்கிலும் மிக அதிக இன்றியமையாத பாடங்களைக் கொடுக்கத் தொடங்கக்கூடும். வாழ்க்கையில் உண்மையான சந்தோஷத்திற்கு வழிநடத்துகிற அறிவுக்கும் தெளிந்துணர்வுக்கும் அடிப்படை ஆதாரத்தை இது போடக்கூடும். இந்த முன்மாதிரியானது, பேச்சின் மூலமாகவும் வாசிப்பதன் மூலமாகவும் கற்பிப்பதற்குப் பிள்ளை போதிய வயதுள்ளதாகையில் நீதியுள்ள தராதரங்களை அறிவூட்டுகையில் அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி செய்யக்கூடும்.

23“நீங்கள் பிரியமான பிள்ளைகள்போல் கடவுளைப் பார்த்து நடக்கிறவர்களாகுங்கள் . . . அன்பிலே நடந்து கொள்ளுங்கள்,” என்பது கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் கொடுத்த புத்திமதி. இதற்கு முன்புதானே, கடவுளைப் பார்த்து நடப்பது எதைக் கேட்கிறதென்பதை அவன் காட்டுகிறவனாய்ப் பின்வருமாறு கூறுகிறான்: “சகல வித கசப்பும், மூர்க்கமும், கோபமும், கூக்குரலும், தூஷணமும், எவ்வித துர்க்குணத்தோடுங்கூட உங்களை விட்டு அகற்றப்படக்கடவது. ஒருவருக்கொருவர் தயாளமாயும் மன உருக்கமாயுமிருங்கள்; கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகள்போல் கடவுளைப் பார்த்து நடக்கிறவர்களாகுங்கள். . . . ” (எபேசியர் 4:31, 32; 5:1, 2) குழந்தை கேட்கிற குரல்கள், அல்லது காண்கிற செயல்கள், உரத்த சத்தத்தின் கீச்சிடுகிற வண்ணமான பேச்சு, சிணுங்கி குறை கூறுதல்கள், அகந்தை அல்லது வெடிக்கும் வண்ணமான கோபாவேசம் ஆகியவையாக இருந்து, இவற்றால் எரிச்சலூட்டுவதில் பாடங்கள் கொடுக்கப்படுகிறதென்றால், அழித்துப் போடுவதற்குக் கடினமாயிருக்கிற ஆழமான பதிவு இவற்றால் மனதில் உண்டுபண்ணப்படுகின்றன. நீங்கள் எல்லாரிடமும் தயவாயும் பரிவுடனும் இருக்கிறீர்களென்றால் உங்களுடைய ஒழுக்க தராதரங்கள் உயர்ந்தவையாகவும் உங்கள் நியாயங்கள் நல்லவையாகவும் இருக்கிறதென்றால், அப்பொழுது உங்கள் பிள்ளை இதில் உங்களைப் பார்த்து நடக்க மனம் சாய்வதாயிருக்கும். உங்கள் பிள்ளைகள் எவ்வகையில் நடக்க நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வகையில் நீங்கள் நடவுங்கள். உங்கள் பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்கள் இருங்கள்.

24ஒன்று பிரசங்கிப்பதற்கு மற்றொன்று நடைமுறையில் செயல்படுத்துவதற்கு, ஒன்று தங்கள் பிள்ளைகளுக்கு மற்றொன்று தங்களுக்கு என்பதாயுள்ள இரண்டு தொகுப்பான நியமங்களைப் பெற்றோர் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் தாமே பொய்ச் சொல்லுகிறீர்களென்றால், பொய்ச் சொல்லக்கூடாதென்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்வதில் என்ன நன்மையுண்டு? அவர்களுக்குக் கொடுக்கிற உங்கள் வாக்குகளை நீங்கள் மீறுகிறீர்களென்றால் உங்களுக்குக் கொடுக்கிற அவர்களுடைய வாக்குகளை அவர்கள் மீறாமல் நிறைவேற்றும்படி நீங்கள் எதிர்பார்க்கக்கூடுமா? பெற்றோர் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுகிறவர்களாக நடந்து கொள்ளுகிறதில்லையென்றால் தங்கள் பிள்ளை மரியாதையைக் கற்றுக் கொள்ளும்படி அவர்கள் எப்படி எதிர்பார்க்கக்கூடும்? தன் தகப்பனோ தாயோ மனத்தாழ்மையை வெளிப்படுத்துவதை பிள்ளை ஒருபோதும் கேட்கிறதில்லையென்றால், மனத்தாழ்மை எப்படி அவனுடைய தராதரமாகக்கூடும்? தான் எப்பொழுதும் சரியாயிருக்கிற எண்ணத்தைத் தகப்பனோ தாயோ கொடுத்து வருவதன் வினைமையான அபாயமென்னவென்றால்—அந்தத் தகப்பனோ தாயோ அபூரண பாவத்தன்மையை வெளிப்படுத்துகிற தவறாக இருக்கிற காரியங்களைச் செய்கையிலுங்கூட—தன் தகப்பனோ தாயோ செய்கிற எல்லாம் சரியே என்பதாகப் பிள்ளை உணரக்கூடும். சொல்வதும் ஆனால் செய்யாமலிருப்பதுமான இது பாசாங்குக்கார பரிசேயரைப் போல் இருப்பதாகும், இவர்களைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” ஆகையால், பெற்றோர்களே, உங்கள் குடும்பத்தில் சிறிய பரிசேயர்கள் உங்களுக்கு வேண்டாமென்றால், நீங்கள் பெரிய பரிசேயர்களாக இராதேயுங்கள்!—மத்தேயு 23:3.

25பிள்ளைகள் அன்பைக் காண்பதன் மூலமே முதலாவதாக அன்பைப் பற்றிக் கற்றுக் கொள்ளுகிறார்கள், மேலும் அன்பைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அன்பைக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுகிறார்கள். அன்பை வாங்க முடியாது. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுக்கக்கூடும். ஆனால் அன்பு முக்கியமாய் ஆவிக்குரிய காரியம், இருதயத்திற்குரியது, உங்களிடமிருக்கும் பணத்தைச் சார்ந்ததல்ல; பரிசுகள் மாத்திரமே உண்மையான அன்புக்கு ஒருபோதும் பதிலீடு செய்ய முடியாது. அன்பை வாங்க முயலுவது அதை மலிவாக்கி விடுகிறது. பொருள் சம்பந்தமான பரிசுகளைப் பார்க்கிலும் அதிகமாக உங்களைத்தானேயும் உங்கள் நேரத்தையும் உங்கள் சக்தியையும் உங்கள் அன்பையும் கொடுங்கள். இதைப்போன்ற அளவில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். (லூக்கா 6:38) கடவுளிடமாக நாம் கொண்டுள்ள அன்பைப் பற்றி 1 யோவான் 4:19 சொல்லுகிற பிரகாரம்: “அவர் முந்தி நம்மில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூருகிறோம்.”

26பெற்றுக் கொள்வதன் மூலம் கொடுப்தைப் பற்றி பிள்ளைகள் கற்றுக் கொள்ளக்கூடும். கொடுப்பதன், சேவிப்பதன், பகிர்ந்து கொள்வதன் சந்தோஷங்களைக் கற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு உதவி செய்யலாம். உங்களுக்கும், மற்றப் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுப்பதில் சந்தோஷம் இருக்கிறதென்பதைக் காண அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அநேகமாய் பெரியவர்கள் பிள்ளைகளிடமிருந்து பரிசுகள் ஏற்றுக் கொள்ள விரும்புகிறதில்லை; பிள்ளைகள் கொடுக்கும் பரிசுகள் அவர்கள் தங்களுக்கே வைத்துக் கொள்ளும்படி பிள்ளைகளை விடுவது அன்பு காட்டுவதாகத் தவறாய் எண்ணிக் கொள்ளுகிறார்கள். ஒருவர் பின்வருமாறு கூறினார்:

“ஒரு பிள்ளை தன் மிட்டாயில் சிலவற்றை எனக்குக் கொடுக்கையில் நான் வாங்க மறுத்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு அவ்வளவு அதிக விருப்பமானதென்று நான் அறிந்ததை அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளாதிருந்ததில் நான் கனிவாக இருந்ததாய் எண்ணினேன். ஆனால் நான் வாங்கிக்கொள்ள மறுத்து எல்லாவற்றையும் அவனுக்கே வைத்துக் கொள்ளும்படி விட்டபோது, பிள்ளை மகிழ்ச்சியைக் காட்டுமென்று நான் எண்ணினபடி காணவில்லை. அவனுடைய தாராள மனப்பான்மையை நான் ஏற்க மறுக்கிறேன், அவனுடைய பரிசுகளை ஏற்க மறுக்கிறேன், அவனையும் ஏற்க மறுக்கிறேன் என்பதை நான் அப்பொழுது உணர்ந்தேன். அதன் பின்பு, கொடுக்கும் சந்தோஷங்களை அவன் அறிந்துகொள்ளும்படி அனுமதிக்க அப்படிப்பட்ட பரிசுகளை நான் எப்பொழுதும் ஏற்றுக் கொண்டேன்.”

27ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்களுடைய சிறிய மகன் பைபிளில் 1 தீமோத்தேயு 6:18-ல் விவரிக்கப்பட்டிருக்கிறவர்களைப்போல் ‘தாராளமாய்க் கொடுக்கிறவனும் உதாரகுணமுள்ளவனுமாவதற்கு’ உதவி செய்ய வேண்டுமென்று விரும்பினர். ஆகையால், பைபிள் படிப்புக்காக ஓரிடத்தில் கூடிவருகையில், தாங்கள் நன்கொடையாகக் கொடுக்கப்போகிற பணத்தை எடுத்து தங்கள் மகனிடம் கொடுத்து, அவன் அதை நன்கொடை பெட்டிக்குள் போடும்படி விடுவார்கள். இது, ஆவிக்குரிய காரியங்களுக்கு ஆதரவளிப்பதன் மற்றும் இவை உட்படுத்தும் பொருள் சம்பந்தமான தேவைகள் எவையோ அவற்றைக் கொடுத்து உதவுவதன் மதிப்பை அவன் மனதில் பதிய வைக்க உதவி செய்தது.

28சரியான போதனையோடுகூட நல்ல முன்மாதிரியும் சேர்ந்து சென்றால் பிள்ளைகள் நேசிக்கவும் தாராள மனப்பான்மையுடன் கொடுக்கவும் கற்றுக் கொள்ளக்கூடியது போல் தகுந்த சமயத்தில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவும் அவர்கள் கற்றுக் கொள்ளலாம். பெற்றோர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “என் பிள்ளைகளிடம் நான் ஒரு தவறை செய்கையில், நான் அவர்களிடம் அதை ஒப்புக் கொள்ளுகிறேன். வெகு சுருக்கமாக, நான் ஏன் அந்தத் தவறைச் செய்தேன் என்பதையும் நானே தவறில் இருந்தேனென்றும் நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன். இது, அவர்கள், நான் பரிபூரணனல்ல நான் விளங்கிக் கொள்ளக்கூடுமென்பதை அறிகிறவர்களாய்த் தங்கள் தவறுகளை என்னிடம் ஒப்புக் கொள்வதை அவர்களுக்கு எளிதாக்குகிறது.” அந்நியர் ஒருவர் ஒரு குடும்பத்தாரைப் பார்க்க வந்திருந்து, தகப்பன் குடும்ப அங்கத்தினரை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த நோக்கு நிலையை விளக்கும் உதாரணமாயிருந்தது, பார்க்க வந்தவர் பின்வருமாறு கூறினார்:

“அங்கிருந்தவர்களெல்லாரும் அறிமுகப்படுத்தப்பட்டாய் விட்டது, அப்பொழுது சிரித்துக் கொண்டு ஒரு சிறு பையன் அந்த அறைக்குள் வந்தான். தகப்பன், ‘இது எங்களுடைய கடைசி மகன், தன்னுடைய சொக்காயில் பழப்பாகுடன் இருக்கிறவன்,’ என்று சொன்னார். அந்தப் பையனின் புன்சிரிப்பு மறைந்துவிட்டது, புண்படுத்தப்பட்ட ஒரு தோற்றம் அவன் முகத்தில் வந்தது. இந்த மனச் சங்கடம் கண்ணீரைக் கொண்டுவரப்போவதாக இருப்பதைக் கண்டு, தகப்பன் விரைவில் பிள்ளையைத் தன்னிடமாக இழுத்து ‘நான் அதைச் சொல்லியிருக்கக்கூடாது; நான் வருந்துகிறேன்,’ என்று சொன்னார். பையன் ஒரு விநாடி விம்மியழுதான். பின்பு அறையை விட்டுப் போய்விட்டான். ஆனால் விரைவில் இன்னும் பெரிய புன்சிரிப்புடன் திரும்ப வந்துவிட்டான்—மேலும் சுத்தமான வேறொரு சொக்காயைப் போட்டிருந்தான்.”

29சந்தேகமில்லாமல் இப்படிப்பட்ட மனத்தாழ்மையால் உருக்கமான அன்பின் கட்டுகள் பலப்படுத்தப்படுகின்றன. நிச்சயமாகவே, பின்னால் தகப்பன் அல்லது தாய், சிறியதோ பெரியதோ ஆன வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமநோக்கு நிலையில் ஏற்பது எப்படியென்று பிள்ளைக்கு விளக்கக்கூடும். அற்ப காரியங்களைப் பெரும் பாரமான மன நிலையுடன் நோக்காதிருக்கவும் தங்களைக் குறித்துத் தாங்களே சிரித்துக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கவும் மற்றவர்கள் தங்களில் பரிபூரணத்தை எதிர்பார்க்கத் தாங்கள் எவ்வாறு விரும்புகிறதில்லையோ அவ்வாறே மற்றவர்களில் தாங்கள் பரிபூரணத்தை ஒருபோதும் எதிர்பார்க்காமல் இருக்கவும் கற்றுக் கொள்ளும்படி தகப்பன் தன் பிள்ளைகளுக்கு உதவி செய்யக்கூடும்.

உண்மையான மதிப்புகளின் ஒரு தொகுதியைக் கொடுங்கள்

30வாழ்க்கையின் உண்மையான மதிப்புகள் யாவை என்பதைக் குறித்து இன்று பெற்றோர் பலர் குழப்பமடைந்தவர்களாக இருக்கின்றனர். இதன் விளைவாக பிள்ளைகள் பலர் மதிப்புகளின் ஒரு தொகுதி ஒருபோதும் கொடுக்கப்படாதவர்களாக இருக்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் மனப்பான்மைகளை உருப்படுத்துவற்கு தங்களுக்கிருக்கும் உரிமையையுங்கூட சில பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர். பெற்றோர் இதைச் செய்யாவிட்டால், திரைப்படங்கள், டெலிவிஷன் மற்றப் பிள்ளைகள், அயலகத்தார், ஆகியவர் இதைச் செய்வர். சந்ததி பிளவுகள், இளைஞர் எதிர்க்கிளர்ச்சிகள், போதை மருந்துகள், புதிய ஒழுக்க நெறிகள், பாலுறவு புரட்சிகள்—இதெல்லாம் பெற்றோரைப் பயமுறுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் இந்தப் பிரச்னைகள் பிள்ளையின் வாழ்க்கையில் எழும்பத் தொடங்குவதற்கு முன்பாகவே அதன் சுபாவத்தன்மை ஏற்கெனவே ஓரளவு வளர்ந்துவிட்டிருக்கிறது.

31ஒரு விஞ்ஞானப் பூர்வ பத்திரிகையில் அறிவிக்கப்பட்ட ஆராய்ச்சிகள், “ஒருவனுடைய சுபாவத் தன்மையின் பெரும் பாகமானது பள்ளிக்குப் போகத் தொடங்குவதற்கு முன்பாகவே நிலைநாட்டப்படுகிறது. பள்ளிக்குப் போகும் வயதையடையாத பிள்ளைகள் வெகு எளிதில் உள்ளத்தில் எதுவும் பதியச் செய்யக்கூடியவர்களாகவும், மாற்றியமைக்கக்கூடியவர்களாயும் இருக்கிறார்கள், என்பது நிச்சயமாகவே பொதுவாக அறியப்பட்டிருக்கிறது . . . என்றபோதிலும் மனப்பான்மைகள் அனுபவங்கள் ஆகியவற்றைக் குறித்ததில் சிறுபிள்ளை பருவத்தில் பிள்ளைகள் எதிர்ப்பட்டிருப்பவையே அநேகமாய் நிலையான, சில சமயங்களில் மாற்ற முடியாத நடத்தை மாதிரிகளை நிலைநாட்டுவதாக நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.”

32தவறான மாதிரிகள் மாற்றப்படக்கூடும், ஆனால் அருமையான ஆண்டுகள் கட்டுப்பாடில்லாமல் நழுவவிடப்பட்டிருந்ததால் என்ன நடக்கிறதென்பதை மற்றொரு ஆரய்ச்சியாளர் பின்வருமாறு விளக்குகிறார்: “பிள்ளை தன்னுடைய முதல் ஏழு ஆண்டுகளின்போது மாற்றியமைக்கக்கூடியதாய் இருந்து வருகிறது, ஆனால் எவ்வளவு நீண்டகாலமாக நீங்கள் காத்திருக்கிறீர்களோ அவ்வளவு தீவிரமாய் அவனுடைய சூழ்நிலையில் முழு மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டியதாயிருக்கும் இந்த மாற்றத்தை செய்வதற்கான சாத்தியம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செல்லச் செல்ல சிறிது சிறியதாய்க் குறைந்து கொண்டே வருகிறது.”

33சிறு பிள்ளைகள் பல அடிப்படை கருத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவற்றில் மிக அதிக முக்கியமானவை, எது உண்மை எது பொய், எது சரி எது தவறு என்பவற்றைப் பற்றிய கருத்துக்களேயாகும். எபேசிய கிறிஸ்தவர்களுக்கு எழுதுபவனாய், அப்போஸ்தலனாகிய பவுல், திருத்தமான அறிவை அடையும்படி அவர்களை ஏவி, பின்வருமாறு கூறினான்: “நாம் இனிக் குழந்தைகளாயிராமல் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாய்,” இருப்போமாக. (எபேசியர் 4:13-15) சத்தியத்தையும் நேர்மையையும் நேசிக்கும்படியும், சரியும் நல்லதுமாயிருப்பவற்றை நேசிக்கும்படியும், இவற்றிற்கான அன்பைச் சிறுவர்களில் வளர்த்துவர அவர்களுக்கு உதவி செய்வதில் பெற்றோர் தாமதமாக இருக்கிறார்களென்றால், பிள்ளைகள் தவறுக்கும் நேர்மைக் கேட்டுக்கும் எதிராகப் பாதுகாப்பற்றவர்களாய் விடப்படுவர். பெற்றோர் உணருவதற்கு முன்பாகப் பள்ளிக்குப் போவதற்கு முந்தியுள்ள ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. இவை கவனிக்கப்படாமல் நழுவிச் செல்லவிடாதீர்கள்; உங்கள் பிள்ளைகளுடைய அந்த முதல் சில, இன்றியமையாத உருப்பெறும் ஆண்டுகளில் அவர்களுக்கு உண்மையான மதிப்புகளுக்குரிய ஒரு தொகுதியைக் கொடுப்பதற்கு உபயோகியுங்கள். இவ்வாறு பிற்பட்ட ஆண்டுகளில் உங்களுக்கு இருதய வேதனை உண்டாகாதபடி காத்துக் கொள்ளக்கூடும்.—நீதிமொழிகள் 29:15, 17.

34“இவ்வுலகத்தின் கோலம் கடந்துபோகிறதே,” என்று தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் எழுதினான். இது, அதன் பொருள் சம்பந்த, உணர்ச்சிவச மற்றும் ஒழுக்கத் தராதரங்களைக் குறித்ததில் நிச்சயமாகவே உண்மையாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 7:31) இந்த உலகத்தின் நிலையான தன்மை குறைவாகவே இருக்கிறது. மனிதராயிருப்பதால் தாங்களுங்கூட இதன் சம்பந்தமாகத் தவறக்கூடுமென்பதைப் பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகளின் மிகச் சிறந்த அக்கறைகளை அவர்கள் இருதயத்தில் கொண்டு, அவர்களுடைய எதிர்கால சந்தோஷத்தைக் குறித்து உண்மையில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்களென்றால், மெய்யாகவே நிலையாயிருக்கிற தராதரங்களின் ஒரு தொகுதியைப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குழந்தை பருவ முதற்கொண்டு என்ன சந்தேகம் எழும்பினாலும் எந்தப் பிரச்னையைத் தீர்க்கவேண்டுமென்றாலும், முடிவான மிக அதிக உதவியாயுள்ள பதில்களை அடைய நாம் திரும்ப வேண்டிய இடம் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளே என்பதைக் குழந்தை பருவம் முதற்கொண்டு தங்கள் பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிய வைத்து வருவதன் மூலமே பெற்றோர் இதைச் செய்யக்கூடும். சூழ்நிலைமைகள் சில சமயங்களில் வாழ்க்கையை எவ்வளவு குழப்பமானதாக அல்லது தெளிவற்று இருண்டதாகக் காணச் செய்தாலும் கவலையில்லை, கடவுளுடைய வார்த்தை தொடர்ந்து ‘அவர்களுடைய கால்களுக்குத் தீபமும் அவர்கள் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கும்.’—சங்கீதம் 119:105.

35ஆம், உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முழுவதிலும் அவர்களை நிலைகுலையாது தாங்கி காத்துவரக்கூடிய மதிப்புகளின் ஒரு தொகுதியை அவர்களில் கட்டியெழுப்பத் தொடங்குவதற்கு இதுவே உங்களுக்கு விலை மதிக்க முடியாத வாய்ப்புக்குரிய தக்கப் பருவம். உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதைவிட பெரிய வாழ்க்கைத் தொழில் வேறு இல்லை, அதிக முக்கியமான வேலை, வேறு இல்லை. இதைச் செய்ய தொடங்கும் காலம் அவர்களுடைய குழந்தைப் பருவத்திலேயே, ஆம், அவர்கள் பிறந்தவுடனேயே!

[கேள்விகள்]

1-4. கற்றுக் கொள்வதற்கான மிகப் பேரளவான திறமை இளம் பிள்ளைக்கு இருக்கிறதென்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

5. பிள்ளையை பயிற்றுவிப்பது எவ்வளவு சீக்கிரமாய்த் தொடங்கப்பட வேண்டும்?

6. (எ) பிள்ளையுடன் என்ன வகையான பேச்சைப் பேசுவது சிறந்தது? (பி) பிள்ளை கேட்கக் கூடிய பல கேள்விகளை எவ்வாறு நோக்க வேண்டும்?

7. ஓர் இளம் பிள்ளையின் கேள்விகளுக்கு எவ்வாறு மிகச் சிறந்த முறையில் பதிலளிக்கலாம்? ஏன்?

8, 9. ஒரு பிள்ளைக்குப் படிப்படியாய் வாசிப்பற்குக் கற்பிக்க என்ன செய்யப்படக்கூடும்?

10. ஒவ்வொரு பிள்ளையும் அதனதன் சொந்த ஆற்றலை வளர்த்து முன்னேற்றுவிக்கும்படி உதவி செய்வது ஏன் ஞானமானது?

11. ஒரு பிள்ளையை மற்றப் பிள்ளையோடு ஆதரவாயிராத முறையில் ஒப்பிடுவது ஏன் ஞானமற்றதாய் இருக்கிறது?

12. ஒரு பிள்ளைக்குச் சரியான வழிநடத்துதல் தேவை என்பதை பெரியவர்களைப் பற்றிய எந்த உண்மைகள் காட்டுகின்றன?

13, 14. உபாகமம் 6:6, 7-ல் காணப்படுகிற புத்திமதிக்கு இசைய பெற்றோர் பிள்ளைகளுக்கு எப்படிப் போதனை கொடுக்க வேண்டும்?

15. பிள்ளை தன்னுடைய நிறைவேற்றங்களை மேம்பட்டதாக்க எப்படி ஊக்கமூட்டப்படலாம்?

16. பைபிள் சொல்வதைக் கவனிக்கையில் பாலுறவைப் பற்றி கேட்கும் பிள்ளையின் கேள்விகளுக்கு என்ன வகையான பதில்கள் கொடுக்கப்பட வேண்டும்?

17-19. பாலுறவைப் பற்றிய விளக்கங்கள் எப்படிப் படிப்படியாய்க் கொடுக்கப்படலாம்?

20. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலுறவைப் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பவர்களாக இருப்பது ஏன் நல்லது?

21. பிள்ளைகளுக்கு இருக்கும் எந்த இயல்பான போக்கைக் கருதுகையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியமாயிருக்கிறது?

22. பெற்றோரின் நடத்தை தங்கள் பிள்ளைகளில் என்ன பாதிப்பை உடையதாயிருக்கக்கூடும்?

23, 24. குறிப்பிட்ட தராதரங்களைத் தங்கள் பிள்ளைகள் அடைய வேண்டுமென்று பெற்றோர் விரும்புகிறார்களென்றால், தாங்கள் தாமே என்ன செய்ய மனமுள்ளவர்களாக இருக்கவேண்டும்?

25. அன்பைப் பற்றி பிள்ளைகள் எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும்?

26, 27. கொடுப்பதிலிருந்து வரும் சந்தோஷம் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிக்கப்படலாம்?

28, 29. தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவம் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிக்கப்படலாம்?

30-32. வாழ்க்கையில் உண்மையான மதிப்புகளைக் கண்டுணர தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வதை பெற்றோர் வெகு சீக்கிரத்திலேயே தொடங்குவது ஏன் இன்றியமையாததாயிருக்கிறது?

33. பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய மிக அதிக முக்கியமான கருத்துக்கள் யாவை?

34. நிலையான தராதரங்கள் ஏன் முக்கியமானவை? இப்படிப்பட்ட தராதரங்களின் மிகச் சிறந்த ஊற்றுமூலம் என்ன?

35. தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது எவ்வளவு முக்கியமானது?

[பக்கம் 117-ன் படம்]

படிப்பதை ஓர் இன்பமான அனுபவமாக இருக்கச் செய்யுங்கள்