Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நித்திய எதிர்காலத்திற்காகக் குடும்பமாய்ச் சேர்ந்து கட்டுதல்

நித்திய எதிர்காலத்திற்காகக் குடும்பமாய்ச் சேர்ந்து கட்டுதல்

அதிகாரம் 14

நித்திய எதிர்காலத்திற்காகக் குடும்பமாய்ச் சேர்ந்து கட்டுதல்

காலம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. சென்றுபோன காலம் நமக்குக் கனிவான பல நினைப்பூட்டுதல்களைக் கொண்டதாக இருக்கலாம், ஆனால் நாம் சென்றுபோன காலத்தில் வாழ முடியாது. சென்றுபோன காலத்திலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளலாம். சென்றுபோன கால பிழைகளிலிருந்துங்கூட கற்றுக்கொள்ளலாம். ஆனால் நாம் நிகழ்காலத்தில் மாத்திரமே வாழக்கூடும். என்றபோதிலும் தற்போது ஒரு குடும்பம் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தாலுங்கூட, நிகழ்காலம் கண நேரமே உள்ளது; இன்றைய தினம் விரைவில் நாளைய தினமாகி விடுகிறது, நிகழ்காலம் சீக்கிரத்தில் சென்ற காலமாகிவிடுகிறது. ஆகையால் நாம் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிக் கொண்டும், அதற்காகத் தயார் செய்துகொண்டும், அதற்காகத் திட்டமிட்டுக் கொண்டும் இருப்பது குடும்ப சந்தோஷத்திற்கு இன்றியமையாதது. நமக்கும் நமக்கு நெருங்கியவர்களுக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்குமென்பது, இப்பொழுது நாம் செய்யும் தீர்மானங்களின் பேரிலேயே பேரளவாய்ச் சார்ந்திருக்கும்.

2எதிர்பார்ப்புகள் யாவை? மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையருக்கு, எதிர்காலத்திற்காக அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் குறுகிய ஒரு சில ஆண்டுகள் அளவாகவே அநேகமாய் நீடிப்பவையாக இருக்கின்றன. எதிர்காலத்திற்குள் வெகுதூரம் நோக்காமல் இருக்கவே பலர் தெரிந்துகொள்கின்றனர். ஏனென்றால் அவர்கள் முன் காணக்கூடியதெல்லாம் துக்ககரமான ஒரு முடிவாகவே இருக்கிறது, மரணத்தால் குடும்ப வட்டாரம் முறிந்து போவதையே காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பலருக்கு, அவர்களுடைய கண நேர மகிழ்ச்சி விரைவில் வாழ்க்கைக்குரிய கவலைகளால் மூடி மறைக்கப்படுகிறது. ஆனால் ‘வானத்திலும் பூமியிலுமுள்ள ஒவ்வொரு குடும்பமும் தன் பெயருக்காக யாருக்குக் கடன்பட்டிருக்கிறதோ’ அவருக்குச் செவிகொடுப்பதன் மூலம் வாழ்க்கைக்கு அதிகம் ஆம், மிக அதிகம் இருக்கக்கூடும்.—எபேசியர் 3:14, 15, NW.

3முதல் மனித ஜோடி சிருஷ்டிக்கப்பட்டபோது, அவர்களோ அல்லது அவர்களுடைய எதிர்கால பிள்ளைகளோ இக்கட்டான ஒரு சில ஆண்டுகள் தானே வாழ்ந்து பின்பு மரித்துப் போவது கடவுளுடைய நோக்கமாக இல்லை. அவர் அவர்களுக்கு ஒரு பரதீஸ் வீட்டைக் கொடுத்து முடிவற்ற வாழ்க்கையின் இந்த எதிர்பார்ப்பை அவர்களுக்கு முன்பாக வைத்தார். (ஆதியாகமம் 2:7-9, 15-17) தங்கள் உயிர் யார் மேல் சார்ந்திருந்ததோ அவருடைய, அதாவது, கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே மீறுவதன் மூலம் இந்த எதிர்பார்ப்பை அவர்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் இழந்து விட்டார்கள். பைபிள் இதைப் பின்வருமாறு விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது . . . எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.”—ரோமர் 5:12.

4என்றபோதிலும், கடவுள் மனித குடும்பத்தை மீட்கும்படியாக அன்புடன் ஏற்பாடு செய்தார். அவருடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆதாமின் சந்ததியார் எல்லாருக்காவும் தம்முடைய பரிபூரண மனித உயிரைக் கொடுத்தார். (1 தீமோத்தேயு 2:5, 6) இவ்வாறு இயேசு, ஆதாம் நமக்கு இழந்துவிட்டதைத் திரும்ப விலை கொடுத்து வாங்கினார் அல்லது மீட்டார், இந்த ஏற்பாட்டில் விசுவாசத்தைக் காட்டுகிறவர்களுக்கு, அந்த முதல் மனித ஜோடிக்கு முன்பாகக் கடவுள் வைத்திருந்த வாழ்க்கைக்குரிய அதே வாய்ப்பை அடைவதற்கு வழி திறக்கப்பட்டது. இன்று கடுமையான நோய் அல்லது விபத்து வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் ஏற்பட்டிராவிடில் ஒருவன் 70 அல்லது 80 ஆண்டுகள் வாழக்கூடும், ஒரு சிலர் இதற்குச் சிறிது மேற்பட்ட ஆண்டுகளும் வாழ்கின்றனர். “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.”—ரோமர் 6:23.

5இது உங்கள் குடும்பத்திற்கு எதைக் குறிக்கக்கூடும்? கடவுளுடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவற்றிற்குக் கீழ்ப்படிகிற ஆட்களுக்கு இது ஒரு நித்திய எதிர்காலத்தைக் குறிக்கக்கூடும். (யோவான் 3:36) இந்தத் தற்போதைய காரியங்களின் கொடுங்கோன்மையான ஒழுங்குமுறையைத் தாம் நீக்கிப்போட்டு, தாமே அளிக்கும் பரிபூரணமும் நீதியுமுள்ள ஓர் அரசாங்கத்தால், மனிதவர்க்கத்தின் விவகாரங்கள் முழுவதும் நிர்வகிக்கப்படும்படி செய்வார் என்று கடவுள் தம்முடைய தவறாத வார்த்தையில் வாக்குக் கொடுக்கிறார். (தானியேல் 2:44) இதைக் காட்டுவதாய், அவருடைய வார்த்தையானது, “பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும், . . . கிறிஸ்துவுக்குள் . . . கூட்டிச் சேர்க்கப்படும்”படி அவர் நோக்கங் கொண்டிருக்கிறார் என்று நமக்குச் சொல்லுகிறது. (எபேசியர் 1:10) ஆம், அப்படியானால் அங்கே சர்வலோக ஒத்திசைவு இருக்கும், மனித குடும்பமானது, ஜாதிபேத பகைக்கடுத்த சச்சரவு, அரசியல் பிரிவினை இரக்கமற்றக் குற்றச்செயல், யுத்தக்கொடுமை ஆகியவற்றிலிருந்து விடுதலையானதாய் பூமியெங்கும் ஒற்றுமைப்படுத்தப்பட்டிருக்கும். குடும்பங்கள் பாதுகாப்பில் தங்கி வாழ்வார்கள். “பயப்படுத்துவார் இல்லாமல்” இருப்பார்கள். (சங்கீதம் 37:29, 34; மீகா 4:3, 4) ஏனென்றால், அப்பொழுது வாழும் எல்லாரும் “பிரியமான பிள்ளைகள்போல் கடவுளைப் பார்த்து நடக்கிறவர்களாகி,”யிருக்கிற ஆட்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் “தொடர்ந்து அன்பிலே நடந்து கொண்டு”ம் இருப்பார்கள்.—எபேசியர் 5:1, 2, தி.மொ.

6கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் வழிநடத்துதலின் கீழ் மனித குடும்பமானது சிருஷ்டிகர் நோக்கங்கொண்ட அந்தப் பரதீஸ் நிலைக்கு, அதாவது மனிதவர்க்கம் முழுவதற்கும் ஏராளமான உணவளிக்கும் ஒரு தோட்ட வீடாகப் பூமியைக் கொண்டுவரும் மகிழ்ச்சி மிகுந்த செயல்முறை ஏற்பாட்டில் ஒன்றுபட்டவர்களாய் உழைப்பார்கள். பூமி முழுவதிலுமிருக்கும் மிகமிகப் பேரளவான பல்வேறு வகைப்பட்ட பறவை, மீன் மற்றும் மிருகவாழ்க்கை, மனிதரின் அன்பிரக்கமுள்ள ஆட்சியின்கீழ் வந்து, அவர்களுக்கு இன்பந்தருபவையாகச் சேவிக்கும் ஏனெனில் இதுவே கடவுளுடைய முன்கூறப்பட்ட நோக்கமாக இருக்கிறது. (ஆதியாகமம் 2:9; 1:26-28) நோயோ, வேதனையோ, தளர்ந்து சோர்வுறச் செய்யும் முதுமையின் விளைவுகளோ, மரணபயமோ, மனித குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதை இனிமேலும் கெடுக்காது. “ஞாபகார்த்தக் கல்லறைகளில் இருக்கிறவர்களுங்கூட வாழ்க்கை அப்பொழுது அளிக்கப்போகிற மகத்தான வாய்ப்புகளில் பங்கு கொள்ள திரும்பிவருவார்கள்.”—யோவான் 5:28, 29, NW; வெளிப்படுத்துதல் 21:1-5.

7இந்த எதிர்பார்ப்புகளின் நிறைவேற்றத்தை உங்கள் குடும்பம் உண்மையாய் அனுபவிக்கும்படி உதவிசெய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

நாம் செய்ய வேண்டியதென்ன?

8“நல்ல வாழ்க்கை” என்று நாம் கருதுகிற பிரகாரம் வாழ்வதன் மூலம், கடவுளுடைய புதிய காரிய ஒழுங்குமுறையில் உயிரடைய போகிறவர்களுக்குள் நாம் இருப்போமென்ற இந்தத் தவறான முடிவுக்கு நம்மில் ஒருவரும் வரக்கூடாது. தகுதிகள் யாவை என்பதைத் தீர்மானிப்பது நமக்குரியதல்ல கடவுளே சரியாக அதைச் செய்கிறார். ஒரு நாள் இயேசு யூதேயாவில் கற்பித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதன் பின்வருமாறு கேட்டான்: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?” இதற்குப் பதிலானது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவினிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக,” என்பதே. (லூக்கா 10:25-28) நாம் கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று வெறுமென சொல்லிக் கொள்வது அல்லது பைபிள் கலந்தாராயப்படுகிற கூட்டங்களுக்கு அவ்வப்போது போய்வருவது அல்லது குறிப்பிட்ட ஆட்களுக்குத் தயவான காரிங்களை எப்போதாவது செய்வது ஆகியவற்றைப் பார்க்கிலும் மிக அதிகம் உட்பட்டிருக்கிறதென்பது தெளிவாயிருக்கிறது. இதற்கு மாறாக நாம் வெளிப்படுத்திக் கூறும் விசுவாசம் ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் நம்முடைய சிந்தனைகளின் பேரிலும் விருப்பங்களின் பேரிலும் செயல்களின் பேரிலும் ஆழமாய்ச் செல்வாக்குச் செலுத்த வேண்டும்.

9கடவுளுடன் கொண்டுள்ள நம்முடைய உறவை மனதில் வைத்து அருமையாய்க் காத்து வருவதானது ஞானத்துடன் நடக்கும்படி நமக்கு உதவி செய்யும், மேலும் கடவுளுடைய அங்கீகாரத்தையும் உதவியையும் நமக்கு நிச்சயப்படுத்தும். (நீதிமொழிகள் 4:10) வாழ்க்கையின் எல்லா விவகாரங்களையும் அவருக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் அவை சம்பந்தப்பட்டிருக்கிற பிரகாரம் நோக்குவதன் மூலம், நாம், நம்முடைய வாழ்க்கையை உபயோகிக்கும் முறையில் நல்ல சமநிலையைக் காத்துக் கொள்ளக்கூடியவர்களாக இருப்போம். நம்முடைய உடல் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கவனித்துக் கொள்ள நாம் வேலை செய்ய வேண்டும். ஆனால் மன அமைதி குலைந்த மீறிய கவலையுடன் மீறிய ஆவலுடனும் பொருள் சம்பந்தமானவற்றை நாடித் தொடருவது சற்றேனும் நம்முடைய வாழ்நாளை நீடிக்கச் செய்யாது; முதலாவதாகக் கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக் கொண்டிருப்பதே அதை முடிவில்லாதபடி நீடிக்கச் செய்யும் என்று கடவுளுடைய குமாரன் நமக்கு நினைப்பூட்டுகிறார். (மத்தேயு 6:25-33; 1 தீமோத்தேயு 6:7-12; எபிரெயர் 13:5) நம்முடைய குடும்ப வாழ்க்கையை நாம் முற்றிலுமாய் அனுபவித்து மகிழ வேண்டுமென்றே கடவுள் நோக்கங் கொள்ளுகிறார். என்றாலும் குடும்ப வட்டாரத்திற்குப் புறம்பேயுள்ளவர்களுக்கு உண்மையான அன்பைக் காட்டத் தவறுமளவாகக் குடும்ப விவகாரங்களில் அவ்வளவாய் மூழ்கியிருப்பவர்களாகிவிடுவது நம்மை நாமே தோல்வியுற செய்வதாயிருக்கும், வாழ்க்கையின் பேரில் நம்முடைய குடும்பத்திற்கு ஒரு குறுகிய மனப்பான்மையைக் கொடுத்து கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாம் அடையாதபடி செய்யக்கூடும். குடும்ப விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவை, கடவுளின் பேரிலுள்ள அன்பை பின்னே மறைவுக்குள் நெருக்கித்தள்ள ஒருபோதும் அனுமதியாமல், அவற்றிற்குரிய இடத்தில் வைக்கப்பட்டு வந்தால் மிக அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. (1 கொரிந்தியர் 7:29-31; 2 தீமோத்தேயு 3:4, 5) குடும்பமாகவோ தனியாட்களாகவோ எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய வார்த்தையின் ஆரோக்கியமான நியமங்களுக்கு இசைய செய்து வருவதன் மூலம், நம்முடைய வாழ்க்கையானது உண்மையான நிறைவேற்ற உணர்ச்சியுடன் ஆழ்ந்த மனத் திருப்தியுள்ளதாயிருக்கும், மேலும் ஒரு நித்திய எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான அஸ்திபாரத்தைப் போடுகிறவர்களாகவும் நாமிருப்போம். ஆகையால், “நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும், யெகோவாவுக்கென்று முழு ஆத்துமாவோடும் அதில் உழைப்பீர்களாக, ஏனென்றால் அதற்குரிய சுதந்தரமாகிய பலனை நீங்கள் யெகோவாவிடமிருந்தே பெறுவீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.”—கொலோசெயர் 3:18-24, NW.

குடும்பமாகக் கட்டுதல்

10குடும்பத்தின் அங்கத்தினர் இதே இலக்குகளை நோக்கித் தொடர்ந்து உழைத்து வருகிறார்களென்றால், கடவுளுடைய வார்த்தையைக் குடும்பமாகக் கலந்தாராய்ந்து வருவது மிக அதிக மதிப்பு வாய்ந்தது, உண்மையில் இன்றியமையாதது. ஒருவன் காண்கிற மற்றும் செய்கிற காரியங்களில் சிருஷ்டிகரின் நோக்கங்களைத் தொடர்புபடுத்தி எடுத்துக் கூறுவதற்கு ஒவ்வொரு நாளும் பல வாய்ப்புகளை அவனுக்கு அளிக்கிறது. (உபாகமம் 6:4-9) எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பைபிளை, வாசித்து கலந்தாராய்வதற்கு ஒருவேளை பைபிளை விளக்குகிற பிரசுரங்களின் உதவியைக் கொண்டு அவ்வாறு செய்வதற்கு ஒழுங்காக நேரங்களை ஒதுக்கி வைப்பது நல்லது. இதைச் செய்வதுவருவது குடும்பத்தை ஒற்றுமைப்படுத்துகிற பலனைக் கொண்டு வருகிறது. அப்பொழுது குடும்ப அங்கத்தினர், எழும்பக்கூடிய பிரச்னைகளை வெற்றிகரமாய்ச் சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு கடவுளுடைய வார்த்தையை உபயோகிக்கக்கூடும். இப்படிப்பட்ட குடும்ப பைபிள் கலந்தாராய்வு நேரங்களை வேறு அக்கறைகள் எளிதில் தலையிட்டு எடுத்துக் கொள்ள அனுமதியாமல் பெற்றோர் நல்ல முன்மாதிரியை வைக்கையில், இது பிள்ளைகளின் மனதில், கடவுளுடைய வார்த்தைக்கு ஆழ்ந்த மரியாதையும் நன்றியுணர்வும் காட்ட வேண்டியதன் இந்த இன்றியமையாத முக்கியத்துவத்தை ஆழமாய்ப் பதிய செய்கிறது. அவருடைய குமாரன் பின்வருமாறு கூறினார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய [யெகோவாவுடைய] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—மத்தேயு 4:4.

11ஓர் உடலில், “பிரிவினையுண்டாகாமல் அவயவங்கள் ஒன்றையொன்று ஒரே விதமான கவலையாய்ப் பார்க்க” வேண்டும். (1 கொரிந்தியர் 12:25, தி.மொ.) ஒரு குடும்ப உடலைக் குறித்ததிலும் இதுவே உண்மையாய் இருக்க வேண்டும். விவாகத் துணைவரில் ஒருவர் தன் துணையின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு உண்மையான அக்கறையைக் காட்டத் தவறுமளவாக, தான் தானே அறிவிலும் தெளிந்துணர்விலும் முன்னேறும்படி தன் சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்திலேயே மூழ்கியிருக்கக்கூடாது. உதாரணமாக, கணவன் தன் மனைவியினுடைய ஆவிக்குரிய தேவைகளுக்குப் போதுமான கவனம் கொடுக்காமல் இருக்கிறானென்றால், காலப்போக்கில் அவள் தன் கணவன் கொண்டிருக்கிற அதே இலக்குகளை இனிமேலும் ஆவலோடு மதித்து ஏற்பவளாக இருக்க மாட்டாள். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியில் போதிய தனிப்பட்ட அக்கறை எடுக்கிறதில்லையென்றால், கடவுளுடைய வார்த்தையின் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது, வாழ்க்கையில் எப்படி மிக அதிக சந்தோஷத்தைக் கொண்டு வரக்கூடுமென்பதைக் காண அவர்களுக்கு உதவி செய்கிறதில்லையென்றால், தங்கள் பிள்ளைகளின் இருதயமும் மனதும், அவர்களைச் சுற்றியுள்ள பொருள் பேராசை கொண்ட இவ்வுலகத்தின் ஆவியால் இழுத்துச் செல்லப்பட்டுப் போவதை அவர்கள் அநேகமாய்க் காண்பார்கள். உங்கள் முழு குடும்பத்தின் நித்திய நன்மைக்காக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவை உட்கொண்டு வருவதை, உங்கள் குடும்ப வாழ்க்கையின் தவறாத, இன்றியமையாத பாகமாக வையுங்கள்.

12‘அன்பு வீட்டில் தொடங்குகிறதென்றால்’, நிச்சயமாகவே, அது அங்கேதானே முடிவடையக்கூடாது. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள், இந்தத் தற்போதைய காரிய ஒழுங்கு முறையிலுங்கூட, சகோதரரும் சகோதரிகளும் அடங்கிய உலகெங்கும் பரவியுள்ள ஒரு குடும்பமாவர் என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது. நாம் “நமக்குச் சமயம் வாய்ப்பதற்குத்தக்கபடி யாவருக்கும் விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கு,” “உலகத்திலுள்ள [நம்முடைய முழு] சகோதரக் கூட்டத்தா”ருக்கு, “நன்மை செய்ய” வேண்டுமென்று அவர் நமக்குச் சொல்லுகிறார். (கலாத்தியர் 6:10; 1 பேதுரு 5:9) குடும்பமாக, இந்தப் பெரிய “குடும்பத்”தைச் சேர்ந்தவர்களுடன் தவறாமல் ஒன்றாய்க் கூடி வருவது மிகுந்த சந்தோஷமாக இருக்க வேண்டும், மற்ற அக்கறைகளின் ஆதரவாக எளிதில் விட்டுவிடுகிற ஒன்றாய் இது இருக்கக்கூடாது.—எபிரெயர் 10:23-25; லூக்கா 21:34-36.

13ஆனால் நம்முடைய அன்பானது ஏற்கெனவே “கடவுளின் வீடாகிய” அவருடைய சபைக்குள் இருக்கிறவர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. (1 தீமோத்தேயு 3:15, தி.மொ.) கடவுளுடைய குமாரன் சொன்னபடி, நம்மை நேசிக்கிறவர்களை மாத்திரமே, நம்முடைய சகோதரர்களை மாத்திரமே நாம் நேசிக்கிறோமென்றால், ‘என்ன விசேஷித்த காரியத்தை நாம் செய்து விட்டோம்?’ நம்முடைய பரலோகத் தகப்பனைப் போலிருக்க, நாம் எல்லா ஆட்களையும் இருதயப் பூர்வமாய் எட்டி, நாமே முதலாவதாக முயற்சியெடுத்து கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை எப்பொழுதும் அவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தேடுகிறவர்களாய் எவருக்கும் எல்லாருக்கும் தயவையும் உதவி செய்யும் தன்மையையும் காட்ட வேண்டும். குடும்பமாக இம்முறையில் தெய்வீக அன்பை நாம் வெளிப்படுத்துகையில் நம்முடைய வாழ்க்கை உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் ஏற்பதாகிறது. கடவுள் அன்பு காட்டுகிற முறையில் அன்பை அதன் முழு அளவில் காட்டுவது எதைக் குறிக்கிறதென்று அனுபவத்தை நாமெல்லாரும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுபோல் அனுபவிக்கிறோம். (மத்தேயு 5:43-48; 24:14) இப்படிப்பட்ட இருதயப் பூர்வ கொடுத்தல் மாத்திரமே கொண்டு வரக்கூடிய இந்த முழு சந்தோஷத்தில் நாமுங்கூட பங்கு கொள்ளுகிறோம்.—அப்போஸ்தலர் 20:35.

14இப்படிப்பட்ட அன்பை வெளிப்படுத்துகிற குடும்பங்களுக்கு முன்னால் எதிர்காலத்தில் ஆ, எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன! தங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குவதற்கான அந்த வழியானது கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பதே என்பதை அவர்கள் கற்றிருக்கின்றனர். எல்லா ஆட்களையும் பாதிக்கிற வாழ்க்கையின் பிரச்னைகளும் நெருக்கடிகளும் தங்களுக்கும் இருக்கிற போதிலும், இவ்வாறு செல்வதிலிருந்து இப்படிப்பட்ட குடும்பங்கள் இப்பொழுதேயுங்கூட பல நல்ல பலன்களை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்கள் நிகழ்காலத்திற்கு அப்பால் நோக்குகின்றனர். மரணம் எல்லாவற்றிற்கும் முடிவைக் கொண்டு வருவற்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையின் ஒரு சில ஆண்டுகளைத்தானே கொண்ட காலவரையறை வீதத்தில் சிந்தனை செய்கிறவர்களாக அவர்கள் இல்லை. கடவுளுடைய வாக்குத்தத்தங்களின் நம்பத்தக்கத் தன்மையில் திட நம்பிக்கையுடையவர்களாய், குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும், நித்திய எதிர்காலத்திற்காக மகிழ்ச்சியுடன் கட்டி வருவர்.

15இந்தப் பூமியைச் சிருஷ்டிப்பதில் கடவுளுடைய நோக்கமானது அதைக் குடியிருக்கச் செய்யப்பட வேண்டுமென்பதே என்று இந்தப் புத்தகம் பைபிளிலிருந்து காட்டியிருக்கிறது. இதை நிறைவேற்றுவதற்கே அவர் குடும்பத்தை நிலைநாட்டினார். மேலும், தகப்பன்மாருக்கும் தாய்மாருக்கும், பிள்ளைகளுக்கும் வழிநடத்தும் நியமங்களையும் கட்டளைகளையும் கொடுத்தார், இவையும் ஆழ்ந்து ஆலோசிக்கப்பட்டன. இந்த நியமங்களில் சிலவற்றை உங்கள் குடும்பத்தில் நீங்கள் பொருத்திப் பிரயோகிக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறீர்களா? இவை உங்கள் குடும்ப வாழ்க்கையை மேலுமதிக மகிழ்ச்சியுள்ளதாக்குவதற்கு உங்களுக்கு உதவி செய்திருக்கின்றனவா? அப்படிச் செய்திருக்குமென்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் எதிர்காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்ன வைத்திருக்கிறது?

16இந்தப் பூமியைக் கவனித்துக் கொள்வதிலும், வயல்கள் வளமான மிகுந்த விளைச்சல்களை விளையச் செய்வதிலும், அதன் வனாந்தரங்கள் செழித்து மலர்ச்சியுறுவதிலும் உதவி செய்ய நீங்கள் விரும்புவீர்களா? முட்செடிகளும் நெருஞ்சில்களும் விலகி, பழத் தோட்டங்களுக்கும் கம்பீரமான காடுகளுக்கும் இடங்கொடுப்பதைக் காண நீங்கள் விரும்புவீர்களா? நீங்களும் உங்கள் குடும்பமும், துப்பாக்கிகளையும், சாட்டைகளையும், இரும்பு கம்பி தடுப்புகளையும் கொண்டல்ல, அன்பின் மூலமும் பரிமாற்றமான நம்பிக்கையின் மூலமும் மிருகங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தப் பிரியப்படுவீர்களா?

17பட்டயங்கள் கலப்பை கொழுக்களாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் அடிக்கப்பட்டு, அணுகுண்டுகளைச் செய்கிறவர்கள் அல்லது யுத்தத்தைத் தூண்டி விடுகிறவர்கள் இராமற்போகும் அந்தக் காலத்திற்காக உங்களுடைய இருதயம் வாஞ்சிக்கிறதென்றால், அப்பொழுது நீங்கள் யெகோவாவின் புதிய காரிய ஒழுங்குமுறையில் மகிழ்ந்து களிகூருவீர்கள். கொடுங்கோன்மை செலுத்தும் அரசியல் ஆட்சியும், வியாபார பேராசையும், மத மாய்மாலமும் கடந்தகால காரியங்களாக இருக்கும். ஒவ்வொரு குடும்பமும் அதன் சொந்த திராட்சச் செடியின் கீழும் அத்திமரத்தின் கீழும் சமாதானமாய்த் தங்கி வாழும். இந்தப் பூமியானது உயிர்த்தெழுப்பப்பட்ட பிள்ளைகளின் சந்தோஷ ஆரவார தொனியிலும் மிகப் பல பறவைகளின் கிளர்ச்சியூட்டும் பாட்டுகளாலும் ஒலித்துக் கொண்டிருக்கும். காற்றானது இயந்திரத் தொழிற்சாலைகளால் உண்டாகும் தூய்மைக் கேட்டால் நிறைந்து திக்குமுக்காடச் செய்வதற்குப் பதிலாகப் பூக்களின் நறுமணத்தால் நிறைந்து உயிர்ப்பூட்டி மகிழ்விப்பதாயிருக்கும்.—மீகா 4:1-4.

18முடவன் மானைப்போல் குதிப்பதைப் பார்க்கவும், ஊமையனுடைய நாவு பாடுவதைக் கேட்கவும் குருடனுடைய கண்கள் திறப்பதைக் கவனிக்கவும் செவிடருடைய செவிகள் திறவுண்டதென்பதை அறியவும், பெருமூச்சும் அழுகையும் விலகிப் போய் புன்சிரிப்புக்கும், கண்ணீரும் புலம்பலும் விலகி சிரிப்புக்கும், வேதனையும் மரணமும் விலகி உடல்நலத்திற்கும் நித்திய ஜீவனுக்கும் இடமளிப்பதைக் கண்கூடாகக் காணவும் வேண்டுமென்பது உங்களுடைய இருதயப் பூர்வமான நம்பிக்கையாக இருக்கிறதென்றால், இப்படிப்பட்ட நிலைமைகள் என்றும் நிலைத்திருக்கப் போகிற யெகோவாவின் புதிய ஒழுங்கு முறையில் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உதவி செய்வதற்கு உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள்.—வெளிப்படுத்துதல் 21:1-4.

19அந்தக் காலத்தில் பூமியை நிரப்பப்போகிற அந்த மகிழ்ச்சியுள்ள திரள் கூட்டங்களுக்குள் உங்கள் குடும்பமும் இருக்குமா? இது உங்களைப் பொருத்ததாயிருக்கிறது. குடும்ப வாழ்க்கைக்காகக் கொடுத்திருக்கிற யெகோவாவின் கட்டளைகளை இப்பொழுதே பின்பற்றுங்கள். அந்தப் புதிய ஒழுங்குமுறையின் வாழ்க்கை நடைப்பாங்குக்குள் நீங்கள் சரியாய்ப் பொருந்துவீர்களென்று இப்பொழுது நிரூபிக்க, குடும்பமாய் உழைத்து வாருங்கள். கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள். அதை உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகியுங்கள். முன்னால் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். இப்படிச் செய்து வருவதன் மூலம், குடும்பமாக நீங்கள் கடவுளுடன் “ஒரு நல்ல பெயரை” உண்டு பண்ணுகிறவர்களாக இருப்பீர்கள். “திரளான செல்வங்களைப் பார்க்கிலும் நற்பெயரே மேம்பட்டதாகத் தெரிந்து கொள்ளப்படவேண்டும்; வெள்ளியையும் பொன்னையுங்கூட பார்க்கிலும் தயையே மேலானது.” இப்படிப்பட்ட ஒரு பெயரை யெகோவா மறந்து விடமாட்டார்: “நீதிமான் பேரால் ஆசீர்வாதம் வழங்கும்.” (நீதிமொழிகள் 22:1, NW; 10:7, தி.மொ.) யெகோவாவின் தகுதியற்ற தயவினால் நீங்களும் உங்கள் குடும்பமும் ஈடற்ற உயர் மகிழ்ச்சிக்குரிய ஒரு நித்திய எதிர்காலத்தை உடையவர்களாக இருக்கும்படி ஆசீர்வதிக்கப்படலாம்.

[கேள்விகள்]

1. குடும்ப சந்தோஷத்தை முன்னேறச் செய்வதில் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது ஏன் நல்லது?

2. (எ) ஏன் பல ஆட்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க விரும்புகிறதில்லை? (பி) மகிழ்ச்சியான ஓர் எதிர்காலத்தை நாம் விரும்புகிறோமென்றால் நாம் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?

3. (எ) முதல் மானிடருக்கு முன்பாக என்ன எதிர்பார்ப்புகளைக் கடவுள் வைத்தார்? (பி) காரியங்கள் ஏன் வேறு விதமாய்த் திரும்பின?

4. மனிதவர்க்கத்தைப் பற்றிய தம்முடைய முதல் நோக்கம் உண்மையாய் நிறைவேற்றமடையும்படி யெகோவா தேவன் என்ன ஏற்பாட்டைச் செய்தார்?

5-7. (எ) நாம் கடவுளுடைய சித்தத்தை இப்பொழுது செய்கிறோமென்றால், எதிர்காலத்தில் எதை நாம் ஆவலோடு எதிர்பார்க்கக்கூடும்? (பி) உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்வதைப் பற்றியதில் என்ன கேள்வியை நீங்கள் எழுப்பக்கூடும்?

8. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நம்மிடம் கேட்கப்படுவது என்ன?

9. வாழ்க்கைக்குரிய சாதாரண விவகாரங்களைப் பற்றிய நம்முடைய நோக்குநிலையில் சமநிலையுள்ளவர்களாக இருக்க என்ன வேதப் பூர்வ நியமங்கள் நமக்கு உதவி செய்யக்கூடும்?

10. வீட்டில் தவறாமல் ஒழுங்காக பைபிளைக் கலந்தாராய்வது எவ்வளவு முக்கியமானது?

11. ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு வருகையில், குடும்பத்தில் என்ன போக்கைத் தவிர்க்க வேண்டும்?

12. யாருடன் கூட்டுறவு கொள்வதை நாம் தவறவிடக்கூடாது?

13. கிறிஸ்தவ சபைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமாக நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

14. எந்த அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பது குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தை வளரச் செய்கிறது?

15. இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்ட வேதப் பூர்வ வழிநடத்தும் நியமங்களையும் கட்டளைகளையும் பற்றி என்ன கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளக்கூடும்?

16-18. என்ன மகத்தான நிலைமைகளை யெகோவா தேவன் இந்தப் பூமிக்காகத் தம் நோக்கத்தில் வைத்திருக்கிறார்?

19. எப்படி கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழப்போகிறவர்களுக்குள் நீங்களும் உங்கள் குடும்பமும் இருக்கக்கூடும்?

[பக்கம் 189-ன் முழுபடம்]