Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்பட்ட ஆண்டுகள்

பிற்பட்ட ஆண்டுகள்

அதிகாரம் 13

பிற்பட்ட ஆண்டுகள்

நம்முடைய வாழ்க்கை, உடல் அல்லது மனம் சம்பந்தப்பட்ட ஏதோ செயலால் நிரப்பப்பட்டிராவிட்டால் நாம் சலிப்புற்றவர்களாகிறோம். வாழ்க்கை வெறுமையாகத் தோன்றுகிறது. நாம் அமைதியற்றவர்களாகிறோம். விவாகமான ஆட்களின் காரியத்தில், அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வீட்டைவிட்டுச் செல்கையில், இந்தப் பிரச்னை சில சமயங்களில் எழும்புகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவர்களுடைய வாழ்க்கை பெற்றோர் நிலைக்குரிய பொறுப்புகளால் நிரம்பியிருந்தது. இப்பொழுது, குடும்பத்தைப் பராமரித்து வளர்க்கும் இந்த எல்லா வேலையும் பொறுப்பும் திடீரென்று ஒரு முடிவுக்கு வருகிறது.

2இதுமட்டுமல்லாமல், ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல உடல் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. சுருக்கங்கள் தோன்றுகின்றன. தலை மயிர் நரைக்கத் தொடங்குகிறது, தலையில் வழுக்கை ஏற்படலாம், முன்னொருபோதும் கவனிக்கப்படாத வலிகளும் நோவும் வெளிப்படுகின்றன. உண்மை என்னவென்றால் நாம் முதுமையடைந்து கொண்டிருக்கிறோம். இந்த உண்மைகளை எதிர்ப்பட மறுக்கிறவர்களாய், சில ஆட்கள் தாங்கள் எப்பொழுதும் இருந்தபடியே இப்பொழுதும் இளைஞராக இருக்கிறார்களென்று நிரூபிக்க வெறிகொண்ட முயற்சிகளை எடுக்கின்றனர். சமுதாய கூட்டுவாழ்வு சம்பந்தப்பட்டதில்—விருந்துகளுக்கு ஓடுவதும், விளையாட்டுப் பந்தயங்களில் மட்டுக்குமீறி உட்படுகிறவர்களாயும்—அவர்கள் திடீரென்று வெகு சுறுசுறுப்பாய்ச் செயல்படுகிறவர்களாகிறார்கள். இந்தப் பரபரப்பான நடவடிக்கை ஏதோவொன்றைச் செய்வதற்குச் செயலை அளிக்கிறது, ஆனால் இது நிலையான திருப்தியைக் கொண்டு வருகிறதா? தன்னுடைய வாழ்க்கை உண்மையான அர்த்தமுள்ளதாய் இருப்பதற்கு, தான் உண்மையில் தேவைப்படுகிறவன் என்று உணரும்படி இது செய்யுமா?

3இன்பப் பொழுதுபோக்கு நிச்சயமாகவே, மகிழ்ச்சி தருவதாக இருக்கக்கூடும். உங்கள் பிள்ளைகள் இளைஞராக இருந்தபோது நீங்கள் செய்ய முடியாதிருந்த சில காரியங்களை வாழ்க்கையின் இந்தப் பிற்பட்ட ஆண்டுகளில், செய்ய உங்களுக்கு நேரமிருப்பதாய் நீங்கள் காணக்கூடும். ஆனால் இன்பத்தைத் தேடுவதையே முதலாவது வரும் முக்கிய அக்கறையாகும்படி இடங்கொடுப்பது வினைமையான பிரச்னைகளைக் கொண்டுவரக்கூடும்.—2 தீமோத்தேயு 3:4, 5; லூக்கா 8:4-8, 14.

உண்மை தவறாதவர்களாய் நிரூபிப்பதன் அழகு

4வாழ்க்கையின் இந்தக் காலப் பகுதியில், எதிர்பாலாருக்குத் தாங்கள் இன்னும் கவர்ச்சிகரமாய் இருக்கிறார்களென்று தாங்கள் நிரூபிக்க வேண்டுமென்று பல ஆட்கள் உணருவதாகத் தோன்றுகிறது. சமூகக் கூட்டுறவு கூட்டத்திலோ மற்ற இடங்களிலோ எவருடனாவது விளையாட்டுக் காதல் புரிவதில் அவர்கள் தொடங்கக்கூடும். முக்கியமாய் ஆண்கள் இளம் பெண்களுடன் “விவகாரங்களை” வைத்துக் கொள்ளுகிறார்கள். “புதிய ஒழுக்க நெறிக்”குரிய இந்தக் காலத்தில் விவாகத்திற்கு வெளியே மிகைப்பட்ட “விவகாரங்களை” வைத்துக் கொள்வதன் மூலம் திரும்பவும் நம்பிக்கையூட்டப்படும்படி தேடுகிற பெண்களும் பலர் இருக்கின்றனர். விவாகமாகி பல ஆண்டுகள் சென்றிருக்கிற போதிலும், சிலர் ஒரு “புதிய வாழ்க்கையை” ஒரு புதிய விவாகத் துணையோடு தொடங்குவதைப் பற்றிய அபிப்பிராயங்களை மனதில் வளர்த்துவர தொடங்குகிறார்கள். தங்கள் துணையின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தாங்கள் செய்து கொண்டிருப்பதைச் சரியென்று காட்ட அவர்கள் முயலக் கூடும்—அதே சமயத்தில், தங்களுடைய துணைக்கும் நீதியான நியமங்களுக்கும் தாங்கள் உண்மையற்றவர்களாயிருப்பது உட்பட தங்களுடைய சொந்த குறைபாடுகளை ஒன்றுமில்லாததுபோல் செய்து கொள்ளுகிறார்கள்.

5“எவனாகிலும் தன் மனைவியை வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி [போர்னியா: பாலுறவு சம்பந்தப்பட்ட படுமோசமான ஒழுக்கக்கேடு], அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்,” என்று இயேசு சொன்னதை அவர்கள் அறிந்திருக்கலாம். தன்னுடைய விவாகத்துணையை “எக்காரணத்தினாலாகிலும்” விவாகரத்து செய்துவிடுவது சரியல்லவென்று இயேசு இங்கே காட்டின போதிலும், விவாகரத்து செய்ய இவ்வுலகப் பிரகாரமான சட்டங்கள் அனுமதிக்கிற எந்தக் காரணத்தையாவது உபயோகிக்க அவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (மத்தேயு 19:3-9) பின்பு ஒரு புதிய விவாகத் துணையை, அநேகமாய், விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாகவே தாங்கள் தொடர்பு வைத்திருந்த ஆளை, அடைய முற்படுகிறார்கள். இப்படிப்பட்ட நடத்தையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறதென்பதை அறிந்திருக்கிற போதிலும், கடவுள் தம்முடைய மிகுந்த இரக்கத்தில் “விளங்கிக் கொள்வார்” என்று அவர்கள் தங்களுக்குத் தாங்களே விவாதித்துக் கொள்ளக்கூடும்.

6இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான சிந்தனையால் கவர்ந்திழுக்கப்படுவதைத் தவிர்க்க யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் மூலமாய், இஸ்ரவேல் ஜனத்துக்குப் பின்வருமாறு சொன்னதை நாம் ஆழ்ந்து ஆலோசிப்பது நல்லது: “நீங்கள் செய்கிற மற்றொன்றுமுண்டு யெகோவாவின் பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் மூடுகிறீர்கள்; ஆகவே அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளவுமாட்டார். காரணம் என்னவென்று நீங்கள் கேட்கிறீர்கள், யெகோவா உனக்கும் உன் இள வயதின் மனைவிக்கும் சாட்சியாயிருந்தார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே . . . ஒருவனும் தன் இள வயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடி உங்கள் ஆவிக்குள்ளேயே எச்சரிக்கையாயிருங்கள். மனைவியைத் தள்ளிவிடுவது எனக்கு வெறுப்பு என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்லுகிறார்.” (மல்கியா 2:13-16, தி.மொ.) ஆம், தன்னுடைய விவாகத் துணையுடன் நம்பிக்கைத் துரோகமாய் நடந்து கொள்வது விவாக உடன்படிக்கைக்கு அவமரியாதை செய்வது ஆகியவை கடவுளால் கண்டனம் செய்யப்படுகின்றன; இவை உயிரளிக்கிறவருடன் அவனுடைய உறவைக் கெடுத்துப் போடுகின்றன.

7வாழ்க்கையை மேம்பட்டதாக்குவதற்கு இது வழியாகுமா? நிச்சயமாகவே இல்லை. இப்படிப்பட்ட ஆட்கள் உட்பிரவேசிக்கும் எந்தப் புதிய விவாகமும் ஆட்டங்கொடுக்கும் அடிப்படையில் தங்குகிறது. ஒரு காரியமென்னவெனில் இந்த மிக அதிக அருமையான உறவிலுங்கூட அவர்களை நம்பமுடியாதென்று அவர்கள் காட்டியிருக்கிறார்கள். மெய்யாகவே, அந்த முந்தின விவாகத் துணைக்கு இராத ஏதோவொன்றை இந்தப் புதிய விவாகத் துணையின் சுபாவத்தில் கவரும் வண்ணமாய் அவர்கள் காணக்கூடும். ஆனால் இதை அடைய மற்றவருக்குக் கடும் வருத்தத்தையும் இருதய வேதனையையும் உண்டாக்குவதைப் பற்றிக் கவலையில்லாமல் அவர்கள் தங்கள் சொந்த இன்பத்தையே தேடினர். நிச்சயமாகவே இது விவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கேதுவாகக் கிரியை செய்யும் பண்பல்ல.

8விவாகத் துணைக்கு உண்மை தவறாதவர்களாய் நிலைத்திருப்பதன் அழகு உடல் சம்பந்தப்பட்ட எந்த அழகையும் வெகுவாய் மிஞ்சி விடுகிறது. உடல் அழகானது ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல தவிர்க்க முடியாதபடி குறைவுறுகிறது. ஆனால் உண்மை தவறாத பக்தியின் அழகோவெனில் ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லச் செல்ல பெருகிக் கொண்டு வருகிறது. மற்றவர் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்று நாடுவதும், அவனுடைய அல்லது அவளுடைய அக்கறைகளை உங்கள் சொந்த அக்கறைகளுக்கு மேலாக முதலில் வைக்க மனமுள்ளவர்களாக இருப்பதும் நிலையான மனத்திருப்தியைக் கொண்டு வரக்கூடும், ஏனெனில் உண்மையாகவே “பெற்றுக் கொள்வதில் இருக்கிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்” இருக்கிறது. (அப்போஸ்தலர் 20:35, NW) இருவருக்கும் விவாகமாகிப் பல ஆண்டுகள் சென்றிருக்கிறதென்றால், மேலும், அவர்கள் ஒருவரோடொருவர் பேச்சுத் தொடர்பு கொண்டவர்களாயும் ஒருவரையொருவர் முழுவதும் நம்பி ஒருவருக்கொருவர் அந்தரங்கத் துணைவர்களாயும் இருந்து வந்திருக்கிறார்களென்றால், வேலையிலும் இலக்குகளிலும், நம்பிக்கைகளிலும், கடினமான காலங்களிலும் நல்ல காலங்களிலும் பங்கு கொண்டு வந்திருக்கிறார்களென்றால்—மேலும் இதை அன்பினால் ஏவப்பட்டு செய்து வந்திருக்கிறார்களென்றால்—அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் ஒன்றுபட்டதாய் இணைந்திருக்கும், ஒன்றுக்குள் ஒன்று இணைத்துப் பின்னப்பட்டதாய் இருக்கும். மனதின் பிரகாரமாயும், உணர்ச்சிவசப் பிரகாரமாயும், ஆவிக்குரிய பிரகாரமாயும் அவர்கள் வெகுவாய் ஒத்திருக்கிறவர்களாக இருக்கிறார்கள். விவாகத்திற்கு முன்னால் ஒருவருக்கொருவர் தங்களுடைய குற்றங் குறைபாடுகளைக் காணாதபடி ஒருவாறு அவர்களுடைய கண்களை மறைத்திருக்கக் கூடிய அந்தக் காதல் உணர்ச்சி கொண்ட அன்பு, இருதயப் பூர்வமான பக்திக்கு இடமளிக்கும், இது, ஒருவர் மற்றவருடைய குறைபாடுகளை, உதவி செய்வதற்குரிய அல்லது தேவையை நிரப்புவதற்குரிய வாய்ப்பாகக் காணும்படி அவர்கள் ஒவ்வொருவரையும் செய்விக்கிறது. எந்தப் பிரச்னைகள் எழும்பினாலும் பரவாயில்லை. தாங்கள் ஒருவரையொருவர் விடாமல் உறுதியாய் நிலைத்திருப்பார்கள் என்று அறிகிறவர்களாய் அவர்கள் இருவருக்குமிடையே உண்மையான நம்பிக்கைக்குரிய மற்றும் பாதுகாப்புக்குரிய ஓர் உணர்ச்சி இருக்கிறது. ஒருவருக்கொருவர் உண்மை தவறாதவர்களாய் இருப்பது அவர்களுக்குப் பொதுவாய் இயல்பான காரியமாகத்தானே தோன்றுகிறது. மீகா 6:8 பின்வருமாறு சொல்லுகிறது: “மனிதனே, நலமானது இன்னதென அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார், நியாயஞ் செய்து இரக்கத்தைப் [உண்மை தவறாத அன்பை, NW] பாராட்டி உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்க வேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்.”—தி.மொ.

வயதுவந்த பிள்ளைகள்—ஒரு புதிய உறவு

9கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக நிலைத்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்களென்றாலும், பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் அவ்வாறு இருக்க வேண்டுமென்பது கடவுளுடைய ஏற்பாடல்ல. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வருகையில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டீர்களென்பது உண்மையே. உடல் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கொடுத்து நீங்கள் பராமரித்து வர வேண்டியதாக இருந்தது மட்டுமல்லாமல், வழிநடத்துதலுங்கூட கொடுத்துவர வேண்டியதாக இருந்தது. அவர்கள் மனப்பூர்வமாய் உடனடியாகப் பிரதிபலிக்காதபோது, அவர்களுடைய சொந்த நன்மைக்காக, சில காரியங்களைக் கட்டாயமாகச் செய்யும்படி நீங்கள் வற்புறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை ஸ்தாபிக்கையில், உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள இந்த உறவு ஓரளவுக்கு மாறுகிறது. (ஆதியாகமம் 2:24) ஆனால் இது அவர்களிடமாக உங்கள் உணர்ச்சிகள் மாறுகிறதென்று குறிக்கிறதில்லை, ஆனால் அங்கே ஒரு பொறுப்பு மாற்றம் ஏற்படுகிறதென்பதையே குறிக்கிறது. ஆகையால் நீங்கள் அவர்களுக்கு காரியங்களைச் செய்யும்முறை மாற வேண்டியதாயிருக்கிறது.

10சில சமயங்களில் அவர்களுக்கு இன்னும் ஆலோசனை தேவைப்படலாம். வாழ்க்கையில் அதிக அனுபவமுள்ளவர்களிடமிருந்து வரும் நல்ல ஆலோசனைக்கு அவர்கள் செவிகொடுத்தால் அது ஞானத்தின் அத்தாட்சியாக இருக்கிறது. (நீதிமொழிகள் 12:15; 23:22) ஆனால் சுயாதீன நிலையில் இருக்கும் குமாரருக்கோ குமாரத்திகளுக்கோ ஆலோசனை கொடுக்கையில், இப்பொழுது தீர்மானங்கள் செய்வது அவர்கள்பேரில் தங்கியிருக்கிறது என்ற இந்த உண்மையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று காட்டுகிற ஒரு முறையில் அதைச் செய்வது ஞானமாய் இருக்கிறது.

11அவர்கள் விவாகம் செய்திருக்கிறவர்களென்றால் இது மிகவும் முக்கியமானது. சில நாடுகளில் நீண்ட காலமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பழக்கமானது மணமகளை அவளுடைய மாமியாரின் மேற்பார்வையின்கீழ் வைக்கிறது. வேறு இடங்களில் மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆகியோர் குடும்ப விவகாரங்களில் கடுமையான அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆனால் இது உண்மையில் சந்தோஷத்தில் பலனடைகிறதா? குடும்பத்தை உண்டாக்கினவர் எது மிகச் சிறந்ததென்பதை அறிந்திருக்கிறார், அவர் சொல்வதாவது: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்.” (ஆதியாகமம் 2:24) தீர்மானங்கள் செய்யும் பொறுப்பு இப்பொழுது, கணவனுடைய பெற்றோரின் பேரிலுமல்ல மனைவியின் பெற்றோரின் பேரிலுமல்ல கணவன் பேரிலேயே தங்கியிருக்கிறது. “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. (எபேசியர் 5:23) இந்த ஏற்பாடு மதிக்கப்படுகையில் முழு வளர்ச்சியடைந்த உங்கள் பிள்ளைகளுக்கும் பின்னால் உங்கள் பேரப் பிள்ளைகளுக்கும் காரியங்களைச் செய்வதில் உண்டாகும் இன்பம் மிகப்பேரளவாய் மிகுதியாகக்கூடும்.

மற்றவர்களுக்குக் காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடையுங்கள்

12நம்முடைய வாழ்க்கை உபயோகமுள்ளதாக இருக்கிறது, நோக்கமுள்ளதாக இருக்கிறது என்று உணரவேண்டிய தேவை நம்மெல்லாருக்கும் இருக்கிறது. இந்தத் தேவையைத் திருப்தி செய்வது உங்கள் சொந்த சுகநலத்திற்கு முக்கியமானது உங்கள் பிள்ளைகளைத் தவிர, தங்கள் வாழ்க்கையில் ஒரு தேவையை நிரப்ப நீங்கள் உதவி செய்யக்கூடிய ஆட்கள் வேறு மிகப் பலரும் இருக்கின்றனர். உங்கள் சொந்த விவாகத்துணையைப் பற்றியதென்ன? உங்கள் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தபோது உங்கள் கவனம் பேரளவாய் அவர்கள்பேரில் செலுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் அதிகப்பட்ட காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. இது உங்கள் உறவை மேலும் ஆழ்ந்ததாக்க உதவி செய்யக்கூடும். ஆனால் உங்கள் தயவான செயல்களை உங்கள் சொந்த வீட்டாருக்கென ஏன் மட்டுப்படுத்துகிறீர்கள்? நோயுறும் அயலகத்தாருக்கு உதவி கொடுப்பதன் மூலம் அல்லது தன்னந்தனிமையாயிருக்கிற முதியோருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அல்லது தங்களுடைய சொந்தக் குற்றத்தினால் அல்லாமல், பொருள் சம்பந்தப்பட்ட தேவைக்குள்ளாகியிருக்கிற ஆட்களுக்கு உங்களால் கூடிய எந்த வழிகளிலாவது பொருளுதவியைக் கொடுப்பதன் மூலம் உங்களை நீங்கள் ‘விரிவுபடுத்தக்’கூடும். (2 கொரிந்தியர் 6:11, 12, NW) விதவைகளின் சார்பாக தொற்காள், “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டு வந்ததன்” காரணமாக, வெகுவாய் நேசிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தாள் என்று பைபிள் அவளைப் பற்றி நமக்குச் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 9:36, 39) இக்கட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரக்கத்தைக் காட்டும் ஆட்களை பைபிள் போற்றுகிறது. (நீதிமொழிகள் 14:21) கடவுளுக்குப் பிரியமாயிருக்கிற வணக்கத்தின் இன்றியமையாத பாகமாக வேத எழுத்துக்கள் ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பதை’ சேர்க்கிறது. (யாக்கோபு 1:27) மேலும் “நன்மை செய்வதையும் மற்றவர்களோடு காரியங்களைப் பகிர்ந்துகொள்வதையும் மறவாதிருங்கள், ஏனெனில், இப்படிப்பட்ட பலிகளில் கடவுள் மிகவும் பிரியப்படுகிறார்,” என்று பைபிள் நம்மெல்லாரையும் தூண்டி ஊக்கப்படுத்துகிறது.—எபிரெயர் 13:16, NW.

13அப்படியானால் மனித பண்புக்கடுத்த அறச்செயல்களில் மாத்திரமே நாம் முழுவதுமாய் ஆழ்ந்திருப்பவர்களாகி விடுவது மகிழ்ச்சிக்கு உயிர்நாடியாய் இருக்கிறதென்று அர்த்தங்கொள்ளுகிறதா? உண்மையில், இதன் உள்நோக்கம் ஆவிக்குரிய ஒன்றாய், அன்பைக் காட்டுவதில் கடவுளின் மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்ற ஓர் ஆவலாக இருந்தால் தவிர, இது ஏமாற்றத்திற்கே வழி நடத்தக்கூடும். (1 கொரிந்தியர் 13:3; எபேசியர் 5:1, 2) ஏன்? ஏனென்றால் உங்களுடைய தயவை ஆட்கள் நன்றியோடு மதியாமற் போகையில் அல்லது உங்கள் தயாள குணத்தை நேர்மையற்றவண்ணமாய் அனுகூலப்படுத்திக் கொள்ள அவர்கள் முயலுகையில் நிச்சயமாகவே உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படலாம்.

14மறுபட்சத்தில் ஒருவன் தன் வாழ்க்கையைக் கடவுளுடைய சேவையில் உண்மையாகவே உபயோகிக்கையில், தான் செய்து கொண்டிருப்பது தன்னுடைய சிருஷ்டிகருக்கு முற்றிலும் பிரியமானதென்று அறிவதில் அவனுக்கு மிக அதிக மனத்திருப்தி உண்டாகிறது. மற்ற ஆட்களுக்காக காரியங்களைச் செய்வதற்குரிய அவனுடைய திறமையானது பொருள் சம்பந்தப்பட்ட வருவாய்களால் மட்டுப்படுத்தப்பட்டில்லை. ‘சந்தோஷமுள்ள கடவுளாகிய யெகோவாவின் மகிமையான நற்செய்தியை’யும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் சிலாக்கியத்தையும் அவன் உடையவனாயிருக்கிறான். (1 தீமோத்தேயு 1:11) இப்பொழுது வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்ப்பட்டு சமாளிப்பதெப்படி என்பதையும் எதிர்காலத்திற்கு கடவுள் அளிக்கும் மகத்தான நம்பிக்கை என்னவென்பதையும் பைபிளிலிருந்து அவன் அறிந்திருக்கிறான். இப்படிப்பட்ட நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், பின்பு அதன் ஊற்று மூலமான யெகோவா தேவனிடம் அவர்களுடைய கவனத்தை இழுப்பதும் ஆ, எப்பேர்ப்பட்ட இன்பமாயிருக்கிறது! சங்கீதம் 147:1-ஐ எழுதினவனாகிய தேவாவியால் ஏவப்பட்ட இந்த எழுத்தாளன் சொன்ன பிரகாரம்: “கர்த்தரை [“யா” வை] துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.”

15வாழ்க்கையின் சம்பந்தமாக யெகோவாவின் சித்தத்தை நாம் விளங்கிக் கொண்டு அவரை நாம் கனம் பண்ணுகையில் தானே நம்முடைய சொந்த வாழ்க்கை அர்த்தத்தால் நிரம்பியதாகிறது. (வெளிப்படுத்துதல் 4:11) உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு, பைபிள் சத்தியங்களை மற்ற ஆட்களுடன் பகிர்ந்து கொள்ளுதலில் நீங்கள் முழுமையாய் பங்கு கொள்வீர்களானால் உண்மையான மனத்திருப்தி உங்களுடையதாயிருக்கும். உங்கள் சொந்த பிள்ளைகள் தாமே வளர்ந்து பெரியவர்களாகிவிட்டிருக்கலாம் என்றாலும், ‘ஆவிக்குரிய பிள்ளைகள்’ வளரும்படி உதவி செய்வதை நீங்கள் அனுபவித்து மகிழலாம். அவர்கள் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக வளருவதை நீங்கள் காண்கையில், அப்போஸ்தலனாகிய பவுல் தான் இவ்வாறு உதவி செய்திருந்த சிலருக்குப் பின்வருமாறு எழுதினபோது உணர்ந்தது போல் நீங்களும் உணருவீர்கள்: “எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? . . . நீங்களல்லவா . . . நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.”—1 தெசலோனிக்கேயர் 2:19, 20.

சூழ்நிலைமைகள் மாறுகையில் தக்கப்படி மாற்றி அமைத்துக் கொள்ளுகிறவர்களாக இருங்கள்

16காலாகாலத்தில், நிச்சயமாகவே, பெரும்பான்மையான ஆட்கள் தாங்கள் ஒரு காலத்தில் செய்த அந்த அளவுக்கு இனிமேலும் செய்யக் கூடாதவர்களாகத் தங்களைக் காண்கிறார்கள். இவர்கள் தக்கவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். பொருத்தமான சரிப்படுத்தல்களைச் செய்துகொள்ள மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கிறதென்றால் இவற்றிக்குக் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இந்தக் காரியங்களில் கவனத்தை அவ்வளவு முழுவதுமாய் ஆழ்த்தி வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அளிக்கிற வாய்ப்புகளைக் காணத் தவறுகிறவர்களாகாமல் சமநிலையைக் காத்துக் கொள்ளுகிறவர்களாக இருப்பது விவேகமாகும். பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும், அவற்றைப் பற்றி ஒருவன் செய்யக்கூடிய பயன்தருவதற்கேதுவான ஏதாவதிருந்தால் அதைச் செய்வது ஞானமாகும். ஆனால் கவலைப்படுவது ஒன்றையும் நிறைவேற்றுகிறதில்லை, காரியங்கள் வித்தியாசமாயிருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதும் அவற்றை மாற்றி விடுகிறதில்லை. ஆகையால் கடந்த காலத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தற்போதிருக்கிற வாய்ப்புகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

17வாழ்க்கையின் பிற்பட்ட ஆண்டுகளில் நீங்கள் மறுபடியுமாக உங்களைத் தனிமையான நிலையில் காண்கிறீர்களென்றால் அப்பொழுதும் இதே காரியங்கள் உங்களுக்குப் பொருந்துகின்றன. உங்களுக்குச் சந்தோஷமான விவாக வாழ்க்கை இருந்திருக்குமானால், கனிவான அன்புக்குரிய ஞாபகங்களை நீங்கள் சந்தேகமில்லாமல் மனதில் வைத்துக் காத்து வருவீர்கள். ஆனால் வாழ்க்கை போய்க் கொண்டேயிருக்கிறது, இந்தக் காலத்தில் தான் பொருத்தமான சரிசெய்தல்கள் தேவைப்படுகின்றன. புதிய சவால்களை எதிர்ப்பட வேண்டியதாக இருக்கிறது, கடவுளில் விசுவாசத்தைக் காட்டுகிற ஒரு முறையில் நீங்கள் வாழ்வீர்களானால், இவற்றை எதிர்த்து சமாளிப்பதில் நீங்கள் தனியாக இருக்க மாட்டீர்கள்.—சங்கீதம் 37:25; நீதிமொழிகள் 3:5, 6.

18வாழ்க்கையில் இன்பந்தராத அம்சங்கள் இருக்கிறபோதிலும் நமக்கு இன்பத்தைக் கொண்டுவரக்கூடிய அதிகமும் இருக்கின்றன—நல்ல நண்பர்கள், மற்ற ஆட்களுக்குக் காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள், நல்ல சாப்பாட்டை அனுபவித்து மகிழ்வது, ஒளிவண்ணமார்ந்த அழகிய சூரிய மறைவு, பறவைகள் பாடுதல் முதலியன. மேலுமாக நம்முடைய தற்போதைய சூழ்நிலைமைகள் முழு நிறை நலம் வாய்ந்ததாக ஒருவேளை இராதபோதிலும், தாம் பொல்லாப்புக்கு முடிவைக் கொண்டு வந்து எல்லாத் துக்கத்தையும் தத்தளிப்பையும், நோயையும் மரணத்தையுங்கூட மனிதவர்க்கத்திலிருந்து நீக்கிப் போடுவார் என்ற கடவுளுடைய உறுதி நமக்கு இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.

19வாழ்க்கையில் பொருள் சம்பந்தப்பட்ட நோக்குநிலையையே பெரும்பாலும் ஏற்றிருக்கிற ஒருவன் தன்னுடைய பிற்பட்ட ஆண்டுகள் வெகு வெறுமையாய் இருப்பதாகக் காணக்கூடுமென்பது மெய்யே. பிரசங்கி புத்தகத்தின் எழுத்தாளன் இப்படிப்பட்ட வாழ்க்கையின் விளைவுகளை “எல்லாம் மாயை” என்று சொல்லி விவரித்தான். (பிரசங்கி 12:8) ஆனால், ஆபிரகாமையும் ஈசாக்கையும் போன்ற விசுவாசமுள்ள மனிதரைக் குறித்து, அவர்கள் நல்ல ‘முதிர் வயதிலே திருப்தியடைந்தவர்களாய்த்’ தங்கள் வாழ்க்கையின் முடிவை எட்டினார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 25:8; 35:29) இந்த வித்தியாசத்தை உண்டு பண்ணினதெது? இந்த மனிதர் கடவுளில் விசுவாசம் வைத்திருந்தார்கள். கடவுளுடைய உரிய காலத்தில் மரித்தோர் மறுபடியுமாக உயிர் வாழ்வார்கள் என்று அவர்கள் உறுதியாய் நம்பியிருந்தார்கள். மேலும் கடவுள் தாமே மனிதவர்க்கம் முழுவதற்கும் நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிக்கப் போகும் அந்தக் காலத்திற்காக அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.—எபிரெயர் 11:10, 19.

20உங்களுடைய சூழ்நிலைமையிலுங்கூட தற்போதைய பிரச்னைகள், உங்களைச் சுற்றியுள்ள பல நல்ல காரியங்களையும் கடவுள் தம்முடைய ஊழியருக்கு வைத்திருக்கும் அதிசயமான எதிர்காலத்தையும் காணாதபடி உங்களைக் குருடாக்க நீங்கள் அனுமதியாமல் இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை நோக்கமும் பயனுள்ளதாயிருக்கும், ஒவ்வொரு நாளும் உங்களுக்கு மனத் திருப்தியைக் கொண்டுவரும், தொடர்ந்து உங்களுடைய பிற்பட்ட ஆண்டுகளினூடேயும் அவ்வாறு இருக்கும்.

[கேள்விகள்]

1, 2. (எ) பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்ற பின்பு என்ன பிரச்னைகள் எழும்பக்கூடும்? (பி) முதுமையடையும் இந்தப் பிரச்னையைச் சிலர் எப்படிக் கையாள முயலுகின்றனர்?

3. இன்பப் பொழுதுபோக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கையில், எதைத் தவிர்க்க வேண்டும்?

4, 5. எதிர்பாலாருக்குத் தான் இன்னும் கவர்ச்சிகரமாக இருப்பதாய் நிரூபிக்க வேண்டுமென்று முதுமையடையும் ஆள் உணருகையில் என்ன விளையக்கூடும்?

6. விவாக உடன்படிக்கைக்கு அவமரியாதை செய்வதை யெகோவா தேவன் எப்படிக் கருதுகிறார்?

7. விவாக உடன்படிக்கைக்கு அவமரியாதை செய்வது ஏன் மகிழ்ச்சிக்கு வழிநடத்தாது?

8. விவாக வாழ்க்கையில், உடல் அழகைப் பார்க்கிலும் பெருமதிப்புள்ளது எது?

9-11. (எ) பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமுள்ள உறவு வாழ்க்கை முழுவதிலும் ஒரே மாதிரியாக நிலைத்திருக்க வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாக இருக்கிறதா? (பி) வயதுவந்த தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கொடுக்கக்கூடிய ஆலோசனையை இது எப்படிப் பாதிக்கிறது? (சி) தங்கள் பிள்ளைகளுக்கு விவாகமான பின்பு யாருடைய தலைமை வகிப்பைப் பெற்றோர் மதிக்க வேண்டும்?

12. (எ) தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய சொந்த குடும்பங்களை ஸ்தாபித்த பின்பு, பெற்றோர் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை எப்படி ஆழமாக்கலாம்? (பி) தங்கள் வாழ்க்கையை மேலுமதிக உபயோகமுள்ளதாகவும் நோக்கமுள்ளதாகவும் ஆக்குவதற்கு வேறு எதையும் அவர்கள் செய்யலாம்?

13. எந்த உள்நோக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்வதை பயனுள்ளதாக்குகிறது?

14, 15. எது வாழ்க்கையை உண்மையில் சந்தோஷமுள்ளதாகவும் திருப்தியுள்ளதாகவும் ஆக்குகிறது?

16, 17. (எ) பிரச்னைகளை எதிர்ப்படுகையில், எது தவிர்க்கப்பட வேண்டும்? (பி) ஒருவர் தன் விவாகத் துணையை மரணத்தில் இழந்துவிட்டாலுங்கூட, புதிய சவால்களை எதிர்ப்படுவதில் அவர் தனியாயிராதபடி எது அவருக்கு உதவி செய்யும்?

18-20. பிற்பட்ட ஆண்டுகளிலுங்கூட என்ன காரியங்கள் வாழ்க்கையை நோக்கமும் பயனுள்ளதாக்கக்கூடும்?

[பக்கம் 176-ன் படம்]

இருவர் வாழ்வும் அதிகமாக எந்தளவுக்கு ஒத்திருக்கிறதோ, அந்தளவுக்கு இருவரும் ஒன்றாகிறார்கள்