Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்

பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்

அதிகாரம் 8

பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்

வாழ்க்கையில் பல சம்பவங்கள் வெகு மட்டுப்பட்ட அளவிலேயே நம்மைப் பாதிக்கின்றன. மற்றவை பெரிய அளவில் நிலையான பாதிப்பையுடையனவாக இருக்கின்றன. ஒரு குழந்தை பிறப்பதானது தெளிவாகவே இந்த மற்றவை என்று குறிப்பிட்டதில் ஒன்றாக இருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கை முன்னிருந்தபடி இதன் பின்பு ஒருபோதும் இராது. சின்னஞ்சிறியதாக இருக்கிறபோதிலும் வீட்டிலிருக்கும் இந்தப் புதிய ஆளானது மற்றவர்கள் தன்னைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாத வண்ணமாய் குரலுடனும் தோற்றத்துடனும், தானிருப்பதை உணரும்படி செய்யும்.

2பெற்றோருக்கு வாழ்க்கை முன்னிருந்ததைவிட அதிக நிறைவாகவும் அதிக மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்க வேண்டும். என்றபோதிலும் இது ஒரு சவாலை நிச்சயமாகவே முன் வைக்கிறது, இதில் மிகச் சிறந்த பலன்களையுடைய, இந்தச் சவாலானது பெற்றோரான இருவராலும் எதிர்ப்பட வேண்டும். அந்தப் பிள்ளையை உண்டுபண்ண நீங்கள் இருவரும் பங்குகொள்ள வேண்டியதாயிருந்தது, பிறப்பு முதற்கொண்டு உங்கள் குழந்தையின் வளர்ச்சியிலும் நீங்கள் இருவரும் இன்றியமையாத பாகத்தை வகிப்பீர்கள். மனப்பூர்வமான, ஒற்றுமைப்பட்ட—மேலும் மனத்தாழ்மையான—ஒத்துழைப்புக்குரிய தேவை, இப்பொழுது இருப்பதைப் பார்க்கிலும் அதிகப்பட்டதாக ஒருபோதும் இருக்கவில்லை.

3பெற்றோர் இருவரும் அவரவர் பாகத்தையும் இந்தப் பாகங்களை எப்படி இசைவாய்ப் பொருந்தக்கூடுமென்பதையும் விளங்கிக் கொள்வது, உங்கள் குழந்தையின் தேவைகளை நிறைவுபடுத்தி, சந்தோஷமான பலன்களை உண்டுபண்ணுவதில் வெகுவாய் உதவி செய்ய வேண்டும். சமநிலை தேவைப்படுகிறது. மனம் நியாயப்படி இருக்கப் பிரயாசப்படுகிற போதிலும் உணர்ச்சி வேகங்கள் அடிக்கடி காரியங்களை சமநிலை குலையும்படி செய்விக்கிறது. மட்டுக்குமீறிய சிறியதிலிருந்து மட்டுக்கு மீறிய அதிகத்திற்கும், மறுபடியுமாக மட்டுக்கு மீறிய சிறியதிற்குமாக இருபுறத்திலும் மிதமிஞ்சி செல்லும் போக்குடையவர்களாய் நாம் ஒருவேளை இருக்கலாம். தகப்பன் தன் தலைமை வகிப்பைச் செலுத்துவது விரும்பத்தக்கதாய் இருக்கிறது. ஆனால், அதை அவன் அளவு மீறி செய்வானாகில், அவன் கர்வத்தோடு அடக்குகிறவனாகிறான். தாய், பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதிலும் சிட்சிப்பதிலும் பங்குகொள்வது நல்லது, ஆனால் தகப்பனைத் தவிர்த்துவிட்டு, தானே அந்தக் கடமைகளை எடுத்துக் கொள்வது குடும்ப அமைப்பை அடியரித்துக் கெடுத்துப் போடுகிறது. நல்லது நல்லதே, என்றாலும் ஒரு நல்ல காரியம் மிதமிஞ்சி கொண்டு செலுத்தப்பட்டால் கெட்டதாகிவிடுகிறது.—பிலிப்பியர் 4:5, NW.

தாயின் இன்றியமையாத பாகம்

4புதிதாய்ப் பிறந்த குழந்தை அதன் உடனடியான தேவைகளுக்கு அதன் தாயின் பேரிலேயே முழுவதுமாய்ச் சார்ந்திருக்கிறது. இந்தத் தேவைகளை அவள் அன்புடன் திருப்தி செய்து வருவாளாகில் குழந்தை பாதுகாப்பாய் உணருகிறது. (சங்கீதம் 22:9, 10) அது நன்றாகப் பாலூட்டப்பட்டு சுத்தமாகவும் அனலுள்ளதாகவும் வைக்கப்படவேண்டும்; ஆனால் உடல் சம்பந்தப்பட்ட தேவைகளை மாத்திரமே கொடுத்து திருப்தி செய்வது போதுமானதல்ல. உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகள் இவற்றைப் போலவே முக்கியமாக இருக்கின்றன. குழந்தை அன்பைப் பெறாவிட்டால் அது பாதுகாப்பற்றதாகிறது. தன்னுடைய குழந்தை கவனிப்புக்காக அழுகையில் இந்தத் தேவை உண்மையில் எவ்வளவு அதிகமாயிருக்கிறதென்பதைச் சொல்ல ஒரு தாய் சீக்கிரத்தில் கற்றுக் கொள்ளக்கூடும். ஆனால் அதன் அழுகைகள் தொடர்ந்து கவனிக்கப்படாமல் விடப்பட்டால் அது நோயுற்றதாகக்கூடும். உணர்ச்சி சம்பந்தமாய் அதற்குக் கொடுக்க வேண்டியவை ஒரு காலப் பகுதிக்குமேல் கொடாமல் விடப்பட்டால் அதன்பின் அதன் வாழ்நாளெல்லாம் அது, உணர்ச்சி சம்பந்தப்பட்டதில் வளர்ச்சி குறுக்கப்பட்டதாகிவிடக்கூடும்.

5பல வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பின்வரும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியிருக்கின்றன: பேசுவது, தொடுவது, தடவிக் கொடுப்பது, அரவணைப்பது ஆகியவற்றின் மூலமாய் வெளிப்படுத்திக் காட்டப்படுகிற அன்பு, குழந்தைகளுக்குக் கொடுக்கப்படாமல் விடப்பட்டால் அவை நோயுறுகின்றன, மரித்துங்கூட போகின்றன. (ஏசாயா 66:12; 1 தெசலோனிக்கேயர் 2:7 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) மற்றவர்கள் இதைச் செய்தாலுங்கூட, யாருடைய கருப்பையில் குழந்தை உயிருக்கு வந்து அதன் வாழ்க்கையின் முதல் சில மாதங்களில் ஊட்டி வளர்க்கப்பட்டதோ அந்தத் தாயே இதைச் செய்வதற்கு நியாயப்படி மிக நன்றாய்ப் பொருந்துகிறவளாக இருக்கிறாள் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. ஓர் இயல்பான ஒருவருக்கொருவர் பரிமாற்றமான செயல் தாய்க்கும் பிள்ளைக்குமிடையில் நடந்தேறுகிறது. புதிதாய்ப் பிறந்த அந்தக் குழந்தையைத் தனக்கு நெருங்க அனைத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவளுடைய இயல் அகத் தூண்டுதல் குழந்தை அவளுடைய மார்பைத் தேடும் இயல்புணர்ச்சியுடன் ஒத்தியலுகிறது.

6குழந்தையின் மூளை வெகு சுறுசுறுப்பாய் இருக்கிறதென்றும், அதன் உணரும், கேட்கும், காணும், நுகரும் புலனுணர்வுகள் தூண்டப்படுகையில் மன வளர்ச்சி முன்னேற்றம் செய்யப்படுகிறதென்றும் ஆராய்ச்சி காட்டியிருக்கிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கையில், தாயுடைய தோலில் அனலையும் மணத்தையும் புலனால் உணருகிறது. அவள் அதற்குப் பாலூட்டிக் கொண்டிருக்கையில் அது ஏறக்குறைய இடைவிடாமல் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவள் அதனிடம் பேசுகையில் அல்லது அதற்குப் பாடுகையில் அது அவளுடைய குரலை மட்டுமல்ல, தான் கருப்பையில் இருக்கையிலேயே கேட்ட ஒரு சத்தமாகிய அவளுடைய இருதயத் துடிப்பையுங்கூட கேட்கிறது. நார்வே தேசத்துப் பிரசுரம் ஒன்றில் பிள்ளை உளநூல் வல்லுநராகிய ஆனிமாரிட் டூவே பின்வருமாறு சொல்லுகிறாள்:

“கண்மணிகளின் சுறுசுறுப்பு எந்த அளவுக்கு மூளை வேலைசெய்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுவதனால், மிக அதிக அளவாய்த் தோல் கிளர்ச்சியூட்டப்படுதல், மிக அதிக அளவான தொடுதல்—பாலூட்டுதலோடு சம்பந்தப்பட்ட தொடுதல் இதில் குறைந்த அளவானதல்ல—மனம் செயல்படுவதைத் தூண்டி ஊக்குவிக்கக்கூடும் என்று நம்புவதற்கு நமக்கு காரணம் இருக்கிறது. அது தன் முறையாக வாலிபப் பருவத்தில் மேலும் அதிகப்படியான அறிவுத் திறமைக்கு வழிநடத்தக்கூடும்.”

7ஆகையால், குழந்தை தாயின் தொடுதலை அடிக்கடி உணருகையில், அவள் அதைத் தூக்கியெடுக்கையில், அரவணைக்கையில் அல்லது குளிப்பாட்டி துடைக்கையில், அது பெறும் உணர்ச்சித் தூண்டுதல் அதன் வளர்ச்சியிலும் பின்னால் வாழ்க்கையில் அது எவ்வாறு இருக்குமென்பதிலும் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறது. அழும் குழந்தையைச் சாந்தப்படுத்த இரவில் எழுந்து நேரத்தைச் செலவிடுவது மிக அதிக மகிழ்ச்சி தருகிற பொழுதுபோக்காக ஒருவேளை இராதென்றாலும், இது பின்னால் கொண்டுவரக்கூடிய நன்மைகளைப் பற்றிய இந்த அறிவு, தூக்கம் இழந்ததற்கு ஓரளவான சரியீடு செய்யக்கூடும்.

நேசிக்கப்படுவதன் மூலம் நேசிப்பதை கற்றுக்கொள்ளுதல்

8குழந்தை நேசிக்கப்பட்டு வருவது அதன் உணர்ச்சி வேக வளர்ச்சிக்கு இன்றியமையாத வண்ணமாய் முக்கியமாயிருக்கிறது. தான் நேசிக்கப்படுவதன் மூலம், அன்பின் முன்மாதிரிகள் தன்னைப் பாதிக்கும்படி செய்யப்படுவதன் மூலம் அது நேசிக்கக் கற்றுக் கொள்ளுகிறது. கடவுளை நேசிப்பதைப் பற்றிப் பேசுவதாய் 1 யோவான் 4:19 பின்வருமாறு சொல்லுகிறது: “அவர் முந்தி நம்மில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூருகிறோம்.” அன்பில் கொடுக்கப்படவேண்டிய முதல் பாடங்கள் முக்கியமாய்த் தாயின் பங்கில் விழுகிறது. அதன் படுக்கையில் படுத்திருக்கும் குழந்தையிடமாகத் தாய் குனிந்து தன் கையை அதன் நெஞ்சில் வைத்து அதை இலேசாகக் குலுக்குகிறவளாய்த் தன் முகத்தைக் குழந்தையின் முகத்திற்கு அருகில் வைத்து ‘உன்னைப் பார்க்கிறேன்! உன்னைப் பார்க்கிறேன்!’ என்று சொல்லுகிறாள். அந்தக் குழந்தை, நிச்சயமாகவே, அந்த வார்த்தைகளை அறியாதிருக்கிறது (எப்படியும் இவை உண்மையில் தனிப்பட பகுத்தறிவுக்குப் பொருத்தமானவையாக இல்லை). என்றாலும் குழந்தை நெளிந்து பெரும் மகிழ்ச்சியால் குழைந்து கூவுகிறது. ஏனெனில் அந்த விளையாட்டான கையும் அந்தக் குரலின் தொனியும் அதனிடம், ‘நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்னை நேசிக்கிறேன்!’ என்று தெளிவாக தன்னிடம் சொல்வதாக அது உணருகிறது; அது திரும்ப உறுதி செய்யப்படுகிறது பாதுகாப்பான உணர்ச்சியடைகிறது.

9அன்பு காட்டப்படுகிற குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் அதற்கு நன்றியுணருகின்றனர், மேலும் அந்த அன்பின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய், அவர்கள் அதை நடைமுறையில் பிரயோகிக்கின்றனர், சின்னஞ்சிறிய புயங்களைத் தாயின் கழுத்தைச் சுற்றிப்போட்டு உணர்ச்சிக் கனிந்த முத்தங்களைக் கொடுக்கின்றனர். இதன் பலனாகத் தங்கள் தாயிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கும், இருதயத்திற்கு அனலூட்டும் உணர்ச்சிகரமான பதிலால் அவை மிகுந்த மகிழ்ச்சியடைகின்றன. அன்பைப் பெறுவதில் மட்டுமல்லாமல் அன்பைக் கொடுப்பதிலும் சந்தோஷம் இருக்கிறது, அன்பை விதைப்பதன் மூலம் பலனாகத் தாங்கள் அன்பை அறுவடை செய்கிறார்கள் என்ற இந்த மிக முக்கிய பாடத்தை அவை கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. (அப்போஸ்தலர் 20:35; லூக்கா 6:38) தொடக்கத்திலேயே தாயிடம் பற்றுதல் உண்டாக்கப்படாமலிருந்தால், பின்னால் மற்றவர்களிடம் ஆழ்ந்த பற்றுதல் கொள்வதையும் கடமைப் பொறுப்புகளை மேற்கொள்வதையும் பிள்ளை வெகு கடினமாகக் காணக்கூடுமென்று அத்தாட்சி காட்டுகிறது.

10பிறந்த உடனடியாகவே பிள்ளைகள் கற்றுக்கொள்ள தொடங்குவதால், முதல் ஒரு சில ஆண்டுகள் அவற்றிற்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த ஆண்டுகளின்போது தாயின் அன்பு மிக இன்றியமையாதது. மனம்போன போக்கில் விடுவதல்ல—அன்பைக் காட்டுவதிலும் கற்பிப்பதிலும் அவள் வெற்றியடைவாளாகில் நீடித்து நிலைத்திருக்கும் நன்மையை அவள் செய்யக்கூடும்; இதில் அவள் தவறுவாளாகில், நீடித்தத் தீங்கைச் செய்யக்கூடும். நல்ல தாயாக இருப்பது, ஒரு பெண் கொண்டிருக்கக்கூடிய மிக அதிக சவாலான மற்றும் பலன்தரும் வேலைகளில் ஒன்றாயிருக்கிறது. இது கடும் உழைப்பையும் பல தேவைகளையும் வற்புறுத்துவதாய் இருக்கிறபோதிலும், உலகம் கொடுக்க முன்வரும் எந்த “வாழ்க்கைத் தொழில்” தனி விளைவு வளமுடையதாயிருப்பதிலும் நிலையான திருப்தியளிப்பதிலும், இதை அணுகத் தொடங்கக்கூடும்?

தகப்பனின் இன்றியமையாத பாகம்

11பிள்ளையின் வாழ்க்கையில் அதன் முதல் தொடக்க சிசு பருவத்தில் தாய் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை வகிப்பது இயல்பாயிருக்கிறது. என்றாலும் குழந்தையின் பிறப்பு முதற்கொண்டு தகப்பனுங்கூட குழந்தையினுடைய உலகத்தின் ஒரு பாகமாக இருக்கவேண்டும். பிள்ளை இன்னும் சிசுவாக இருக்கையிலேயுங்கூட தகப்பன், சில சமயங்களில் குழந்தையைக் கவனிப்பதன் மூலமும், அதோடு விளையாடுவதன் மூலமும், அது அழுகையில் அதை அமர்த்தி சாந்தப்படுத்துவதன் மூலமும் தானும் அதோடு தன்னை இணைத்துக் கொள்ளக்கூடும், இணைத்துக் கொள்ளவும் வேண்டும். இவ்வாறு தகப்பன் அந்தப் பிள்ளையின் மனதில் நிலைநாட்டப்பட்டு வருகிறார். காலம் கடந்துகொண்டுவருகையில் தகப்பனின் பாகம் படிப்படியாய் அதிக முக்கியத்துவத்தை ஏற்று வரவேண்டும். இதைச் செய்ய தொடங்குவதற்கு அவர் அதிகக் காலம் காத்திருப்பாராகில், அது ஒரு பிரச்னையின் தொடக்கமாயிருக்கக்கூடும், இந்தப் பிரச்னை முக்கியமாய், அந்தப்பிள்ளை இருபது வயதுக்குட்பட்ட பருவத்தையடைந்து சிட்சை கொடுப்பது அதிகக் கடினமாகையில் மேலெழும்புகிறது. இருபது வயதுக்குட்பட்ட மகனுக்கு முக்கியமாய் தன்னுடைய தகப்பனின் உதவி தேவையாயிருக்கும். ஆனால் முன்னதாகவே ஒரு நல்ல உறவு நிலைநாட்டப்படாதிருக்குமானால், பல ஆண்டுகளடங்கிய ஒரு காலப் பகுதியினூடே உண்டாக்கப்பட்ட இந்தப் பெரும் பிளவானதை ஒரு சில வாரங்களில் இணைத்துவிட முடியாது.

12பிள்ளை பையனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, தகப்பனுடைய ஆண்மை தன்மையின் செல்வாக்கு அதன் தனி சுபாவத் தன்மை முழுமையாய் உருப்பட்டு சமநிலையாய் வளர்ச்சியடைந்து வருவதற்கு இன்றியமையாத வண்ணமாய் உதவி செய்யக்கூடும். தகப்பன் குடும்பத்தின் தலைவனாக இருக்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. பொருள் சம்பந்தமாய் அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து வருவதற்கு அவன் பொறுப்புள்ளவனாயிருக்கிறான். (1 கொரிந்தியர் 11:3; 1 தீமோத்தேயு 5:8) என்றபோதிலும், “மனுஷன் ஆகாரத்தினால் மாத்திரமல்ல யெகோவாவின் வாயிலிருந்து பிறக்கிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” தன் பிள்ளைகளைக் குறித்ததில், ‘யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து வளர்த்து வரும்படியும்’ தகப்பன் கட்டளையிடப்பட்டிருக்கிறான். (உபாகமம் 8:3, தி.மொ.; எபேசியர் 6:4, NW) தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தத் தெய்வீகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தன்னால் கூடிய மிகச் சிறந்ததைச் செய்ய, தன்னுடைய பிள்ளையின் பேரிலுள்ள இயல்பான உள்ளன்பு தகப்பனைத் தூண்ட வேண்டியதாயிருக்கையில், தன்னுடைய சிருஷ்டிகரிடம் கொண்டுள்ள ஓர் உத்தரவாத உணர்ச்சியே எல்லாவற்றிற்கும் மேலாக அதைச் செய்ய அவனைத் தூண்டி இயக்க வேண்டும்.

13தாய் வெளிப்படுத்திக் காட்டுகிற பாசத்தோடும், கனிவான உருக்கத்தோடும் இரக்கத்தோடுங்கூட, தகப்பன் உறுதிக்கும் ஞானமான வழிநடத்துதலுக்குமுரிய, திடமாக நிலைப்படுத்தும் செல்வாக்குச் செலுத்துபவனாய்த் தன் பங்கைச் செய்யக்கூடும். கடவுளால் ஒப்படைக்கப்பட்ட தன்னுடைய இந்தப் பொறுப்பை அவன் கையாளுகிற முறையானது, பின்னால் தன்னுடைய பிள்ளைகள், மனித மற்றும் தெய்வீக அதிகாரத்தினிடமாகக் காட்டப்போகிற அவர்களுடைய மனப்பான்மையின்பேரில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை உண்டாக்கக்கூடும்; அவர்கள் இவ்வித அதிகாரத்தை எவ்வளவாய் மதிப்பார்கள், எதிர்த்து வாக்குவாதம் செய்யாமல் அல்லது கலகம் செய்யாமல் மற்றொருவரின் வழிநடத்துதலின் கீழ் அவர்கள் எவ்வளவு நன்றாய் வேலை செய்யக்கூடும் என்பவற்றைக் குறிப்பிடத்தக்க வண்ணமாய்ப் பாதிக்கக்கூடும்.

14தனக்கு ஒரு மகன் இருக்கிறானென்றால், தகப்பனின் முன்மாதிரியும் காரியங்களை அவன் கையாளும் முறையும் அந்தப் பையன் மன உறுதியில்லாத, தீர்மானமில்லாத ஆளாக, வளருகிறானா, அல்லது ஆண்மை, சமநிலை உறுதி, நம்பிக்கையில் தைரிய பற்றுறுதி ஆகியவற்றையுடையவனாகவும், பொறுப்பைத் தாங்குவதற்கு மனமுள்ளவனாகவும் இருக்கும் ஆளாக வளருகிறானா என்பதைத் தீர்மானிக்க அதிகத்தைச் செய்யக்கூடும். அந்த மகன் கடைசியாக எவ்வகையான கணவனாகிறான் அல்லது தகப்பனாகிறான்—விடாக் கண்டிப்பான, நியாயமற்ற, கடுகடுத்த சுபாவமுள்ளவனாகவா, அல்லது சமநிலையும், பகுத்துணர்வும் தயவிரக்கமுள்ளவனாகவா என்பதைப் பாதிக்கக்கூடும். குடும்பத்தில் ஒரு மகள் இருக்கிறாளென்றால், தன்னுடைய தகப்பனின் செல்வாக்கும் உறவும் ஆண்பாலினரின்பேரில் அவளுடைய முழு மனோபாவத்தையும் பாதிக்கக்கூடும். இது அவளுடைய எதிர்கால விவாகத்தில் வெற்றிக் கேதுவாக அவளுக்கு உதவியாயிருக்கலாம் அல்லது அதற்கு மாறாக இடையூறாய் நிரூபிக்கலாம். தகப்பனுடைய இந்தச் செல்வாக்கின் விளைபயன் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது.

15தகப்பனுடைய இந்தக் கற்பிக்கவேண்டிய பொறுப்பின் விரிவான தன்மை உபாகமம் 6:6, 7-ல் (தி.மொ.) தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்த கடவுளுடைய கட்டளைகளில் காட்டப்பட்டிருக்கிறது: “இந்த நாளில் நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்திலே பதிந்திருக்கவேண்டும். நீ அவைகளை உன் பிள்ளைகளின் மனதில் படும்படி போதிக்கவேண்டும்; நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும் வழியில் நடக்கிறபோதும் படுத்துக்கொள்ளுகிறபோதும் எழுந்திருக்கிறபோதும் அவைகளைப் பற்றிப் பேச வேண்டும்.”

16கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற வெறும் வார்த்தைகள் மட்டுமேயல்ல அவை கொடுக்கும் செய்தியுங்கூட பிள்ளையின் மனதில் தினந்தோறும் ஆழப்பதியும்படி செய்யப்படவேண்டும். எப்பொழுதும் வாய்ப்புகள் இருக்கின்றன. தோட்டத்திலுள்ள பூக்கள், ஆகாயத்திலுள்ள பூச்சிகள், பறவைகள் அல்லது மரங்களிலுள்ள அணில்கள், கடற்கரையிலுள்ள கடற்சிப்பிகள், மலைகளிலுள்ள ஊசி இலை மர கூம்புபோன்ற காய்கள், இரவில் வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்கள்—இந்த எல்லா அதிசயங்களும் சிருஷ்டிகரைப் பற்றிப் பேசுகின்றன, இவற்றின் பேச்சுகளின் உட்பொருளை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். சங்கீதக்காரன் சொல்லுகிறதாவது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.” (சங்கீதம் 19:1, 2) சரியான நியமங்களைத் தெளிவாக விளக்கி அறிவுறுத்துவதற்கும், கடவுளுடைய ஆலோசனையின் ஞானத்தையும் நன்மையையும் எடுத்துக் காட்டுவதற்கும் இந்தக் காரியங்களையும், முக்கியமாய் வாழ்க்கையின் அனுதின விவகாரங்களிலிருந்து உதாரணங்களையும் உபயோகிக்க தகப்பன் விழிப்புள்ள கவனத்துடன் இருப்பதன் மூலம், தன்னுடைய பிள்ளையின் மனதிலும் இருதயத்திலும், எதிர்காலத்திற்கான மிக இன்றியமையாத மூல ஆதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடும், இந்த மூலாதாரமானது; கடவுள் இருக்கிறார் என்றதுமட்டுமல்லாமல், “அவர் தம்மை ஆவலாய்த் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறாரென்றும்” உறுதியாய் நம்பும் விசுவாசமாகும்.—எபிரெயர் 11:6, தி.மொ.

17சிட்சை கொடுப்பதுங்கூட தகப்பன் வகிக்கும் பாகத்தின் ஒரு பகுதியாயிருக்கிறது. “தகப்பன் சிட்சியாத மகனுண்டோ?” என்பதே எபிரெயர் 12:7-ல் கேட்கப்படுகிற கேள்வி. ஆனால் அது மட்டுக்குமீறிய அளவுகளுக்குச் செல்லாதபடி, அதாவது எரிச்சல் உண்டாக்கும் அல்லது நச்சரிக்கும் நிலையளவாக மிதமீறி தண்டியாதபடி, தகுந்த ஒரு முறையில் இதைச் செய்வது தகப்பனுடைய கடமையாயிருக்கிறது. தகப்பன்மாருக்கு, கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “உங்கள் பிள்ளைகள் மனந்தளர்ந்து போகாதபடி அவர்களுக்கு எரிச்சலுண்டாக்காதிருங்கள்.” (கொலோசெயர் 3:21) கட்டுப்பாடுகள் அவசியமே, என்றாலும் கட்டளைகளை பாரமாக்கி மனத்தளர்வுண்டாக்கும் வரையாகவும் சிலசமயங்களில் நாம் கட்டளைகளை மிகுதியாகப் பெருக்கி விரிவாக்கிவிடக்கூடும்.

18பூர்வகால பரிசேயர்கள் கட்டளைகளை விதிப்பதில் பிரியங்கொண்டவர்களாக இருந்தார்கள்; அவற்றைக் குவியல் குவியல்களாகக் கூட்டிக் குவித்து பாசாங்குக்காரரை திரள்திரளாய் உற்பத்தி செய்தார்கள். வெறுமென கூடுதலான சட்டங்களை அமைப்பதன் மூலம் பிரச்னைகளைத் தீர்த்துவிடக்கூடும் என்று எண்ணுவது மனிதத் தவறேயாகும்; இருதயத்தை எட்டுவதே அவற்றைத் தீர்க்கும் மெய்யான வழி என்று வாழ்க்கையின் அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகையால் கட்டளைகளைக் கொடுப்பதில் மிதமாயிருங்கள்; அதற்குப் பதிலாக நியமங்களைப் படிப்படியாக அறிவுறுத்த முயலுங்கள், கடவுள் தாமே குறிபார்க்கிற இலக்கில் அதைச் செலுத்துங்கள்: “என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்.”—எபிரெயர் 8:10.

தகப்பனும் தாயும் பங்காளிகள்

19வழக்கமாய் தகப்பனே வாழ்க்கைத் தேவைக்கானவற்றைச் சம்பாதிக்கிறான், அவன் வேலையிலிருந்து வீட்டுக்கு வருகையில், களைப்பாயிருக்கலாம், மேலும் இன்னும் செய்துமுடிக்க மற்ற அலுவல்களும் அவனுக்கு இருக்கலாம். என்றபோதிலும் தன்னுடைய மனைவியோடும் பிள்ளைகளோடும் செலவிட அவன் நேரத்தை உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும். அவன் தன் குடும்பத்தோடு நல்ல கூட்டுறவு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பமாகக் காரியங்களைக் கலந்து பேசுவதற்கும், குடும்ப செயல்முறை ஏற்பாடுகளுக்கும், குடும்பமாக விளையாடி மகிழ்வதற்கும் அல்லது உல்லாசப் பிரயாணங்கள் செய்வதற்கும் அவன் நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். இம்முறையில் குடும்ப ஒற்றுமையும் கூட்டுப் பொறுப்புணர்வும் கட்டியெழுப்பப்படுகின்றன. ஒருவேளை பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பாகத் தானும் தன்னுடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே மிகுதியான நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வகையில் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இங்குமங்கும் ஓடிக்கொண்டிருப்பவர்களாய், ஒருவேளை பிந்திய மணி நேரங்களில் வீட்டுக்கு வருகிறவர்களாய் இருப்பார்களானால் நடைமுறை வாழ்க்கையில் பெற்றோருக்குரிய பொறுப்பை ஏற்று வாழத் தவறுகிறவர்களாக இருப்பார்கள். இது அவர்களுடைய பிள்ளைகளுக்கு மிகவும் அநியாயம் செய்வதாயிருக்கும். சீக்கிரத்திலோ பிந்தியோ பெற்றோர் தாங்கள் ஒழுங்கில்லாமலும் பொறுப்பற்றவர்களாகவும் இருந்ததற்குரிய நஷ்டத்தைக் கொடுத்துத் தீர்க்க வேண்டியதாயிருக்கும். பெரியவர்களைப்போலவே, பிள்ளைகளும், தங்களுடைய வாழ்க்கை, அடிப்படையான சமநிலை உறுதியும் ஒழுங்குமுடையதாக இருக்கிறதென்றால், நல்ல ஆரோக்கிய நிலையில் வளருகிறார்கள்; இது அவர்களுடைய மன, உடல், மற்றும் உணர்ச்சி சம்பந்தமான சுகத்திற்கு உதவியாகத் தன் பங்கைச் செய்கிறது. குடும்ப வாழ்க்கையின் அன்றன்று நடைமுறை ஒழுங்கிலுள்ள நிலை மாற்றங்கள் போதுமே; அத்துடன் பெற்றோர் அவற்றுடன் கூட்டுவதற்குத் தேவையில்லை.—மத்தேயு 6:34; கொலோசெயர் 4:5 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.

20பிள்ளைகளைக் கையாளுவதில், அவர்களுக்குக் கற்பிப்பதில், அவர்களுக்கு வரையறைகளை வைப்பதில், அவர்களைச் சிட்சிப்பதில், அவர்களை நேசிப்பதில் தகப்பனும் தாயும் ஒத்துழைக்க வேண்டும். “ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்க மாட்டாதே.” (மாற்கு 3:25) பின்பற்ற வேண்டிய சிட்சையைப் பெற்றோர் கலந்தாலோசிப்பது நல்லது; அப்பொழுது, சிட்சையைப் பற்றியதில் ஒற்றுமைப்படாத கருத்துச் சாய்வுகளைத் தங்கள் பிள்ளைகள் கண்கூடாகக்காண வைப்பதை அவர்கள் தவிர்க்கக்கூடும். இல்லையென்றால் பிள்ளைகள் ‘பிரிவுண்டாக்கி வெற்றியடைய’ முயலும்படி அவர்களைத் தூண்டுவிக்கக்கூடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோரில் ஒருவர் துரிதமாய்ப் பிரதிபலிப்பவராய் அல்லது கோபத்தில் மட்டுக்கு மீறிய சிட்சையை அல்லது எல்லா உண்மைகளும் ஆலோசித்துக் கவனிக்கப்படுகையில் ஒருவேளை கொடுப்பதற்கு உண்மையில் அவசியமே இராத சிட்சையைக் கொடுக்க நேரிடலாமென்பது உண்மையே. இதைப் பற்றி பெற்றோர்கள் தனிமையில் பேசக் கூடியவர்களாக இருக்கலாம். பின்பு, ஞானமில்லாமல் நடந்து கொண்ட அந்தப் பெற்றோரில் ஒருவர் பிள்ளையுடன் தனிப்பட்டு காரியங்களைச் சரிசெய்ய தெரிந்து கொள்ளலாம். அல்லது, பெற்றோர் இவ்வாறு ஒருவரோடொருவர் தனியே பேசுவது கூடாதிருக்கையில் தன் துணையை ஆதரிப்பது அநீதியை ஆதரிப்பதாயிருக்குமென்று உணருகிற பெற்றோரானவர் ஒருவேளை பின்வருவதைப்போன்று ஏதாவது சொல்லலாம்: ‘நீ ஏன் கோபப்படுகிறாய் என்பதை நான் விளங்கிக் கொள்ளுகிறேன், நானும் அவ்வாறே உணருவேன். ஆனால் ஒருவேளை நீ தெரிந்திராத ஒன்று இருக்கலாம், அதாவது . . . ’ என்று தொடங்கி, பின்பு, கவனிக்கத் தவறியது எதுவோ அதைத் தெளிவாக்கலாம். இது சிட்சிக்கப்பட்ட பிள்ளையின் முன்னிலையில் பிரிவினை அல்லது கருத்து வேறுபாட்டைக் காட்டாமல் சாந்தப்படுத்தும் ஒரு பாதிப்பை உண்டுபண்ணக்கூடும். தேவாவியால் ஏவப்பட்ட நீதிமொழி சொல்லுகிற பிரகாரம்: “அகந்தையினால் மாத்திரம் வாதுபிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.”—நீதிமொழிகள் 13:10; பிரசங்கி 7:8-ஐயும் பாருங்கள்.

21சிட்சிப்பது இருவரும் பங்குகொள்ள வேண்டிய கடமையாயிருக்கிறதென்று எபிரெய வேத எழுத்துக்கள் காண்பிக்கின்றன: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களுங்கூட இவ்வாறே சொல்லுகின்றன: “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுதான் நியாயம்.” பிள்ளைகளை சிட்சிப்பது தன்னுடைய மனைவியின் வேலை என்பதாக சில சமயங்களில் தகப்பன் கருதுகிறான். அல்லது மனைவி இதற்கு நேர் எதிரான கருத்தை ஏற்பவளாய், தவறாக நடக்கும் பிள்ளையை, ‘இரு, இரு, அப்பா வரட்டும்!’ என்று பயமுறுத்துவதைப் பார்க்கிலும் அதிகம் எதுவும் செய்யாதிருக்கலாம். ஆனால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டுமென்றால் மேலும் பெற்றோர் இருவரும் பிள்ளைகளின் அன்பையும் மரியாதையையும் பெற வேண்டுமென்றால், அவர்களிருவரும் இந்தக் கடமையில் பங்குகொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:1, தி.மொ.

22இதில் பெற்றோரின் ஒற்றுமைப்பட்ட ஒத்துழைப்பையும் அவர்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய பொறுப்பைத்தாங்க மனமுள்ளவர்களாயிருப்பதையும் பிள்ளைகள் காண்பது அவசியம். எதற்காகவோ கெஞ்சிக் கொண்டிருக்கிற பிள்ளை, ‘போய் உன் அம்மாவைக் கேள்,’ என்றே எப்பொழுதும் தகப்பன் சொல்வதைக் கேட்கிறானென்றால், அல்லது தாய் அதே மாதிரியாய்த் தகப்பன் தீர்மானிக்கும்படி திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறாளென்றால், பிள்ளை கேட்கிற காரியத்திற்குத் தான் “இல்லை” என்று பதில் சொல்ல வேண்டியதாய்க் காண்கிற தகப்பன் அல்லது தாய் கொடிய ஆளின் பாகத்தை வகிப்பவராக எண்ணப்படுகிறான்[ள்]. நிச்சயமாகவே, சில சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் ஏற்படலாம். அப்பொழுது தகப்பன், ‘ஆம், சிறிது நேரத்திற்கு நீ வெளியே போய்வரலாம்—ஆனால் சாப்பாடு எப்பொழுது தயாராக இருக்குமென்று முதலாவதாக உன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்,’ என்று சொல்லக்கூடும். அல்லது சில சமயங்களில் தாய் ஒருவேளை, பிள்ளை கேட்கும் ஏதோ ஒன்றை அனுமதிப்பதற்குத் தனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை என்பதாக தோன்றுகிறபோதிலும், அந்தக் காரியத்தின் பேரில் தன் கணவன் தன் கருத்தைத் தெரிவிக்க வேண்டுமென்பதாக உணரக்கூடும். என்றாலும் பிள்ளை தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி பெற்றோரை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் போராடும்படி செய்விக்க எவ்வகையிலும் அந்தப் பிள்ளையைத் துணிவூட்டாதபடி அல்லது அனுமதிக்காதபடி பார்த்துக் கொள்ள பெற்றோர் இருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஞானமுள்ள மனைவியானவள் தன் பங்கான அதிகாரத்தைப் போட்டியிடும் முறையில் உபயோகித்து, தன்னுடைய பிள்ளையின் பாசத்தைத் தன் கணவன் இழக்குமளவில் தான் பெரும் பங்கை அடைய தனிச் செல்லம் கொடுக்க முயலுவதற்கு எதிராகவும் தன்னைத் தடுத்துக் காத்துக்கொள்வாள்.

23உண்மையில், குடும்பத் தீர்மானங்களில் ஒவ்வொரு அங்கத்தினரும் அவரவர் தீர்மானம் முக்கிய கவனம் செலுத்துவற்குத் தகுதியாயுள்ள பகுதிகளை உடையவராக இருக்கலாம். தகப்பன், முழுமையாகக் குடும்பத்தின் சுகநலம் உட்படும் கேள்விகளின்பேரில் தீர்மானிக்கும் பொறுப்பை உடையவராக இருக்கிறார். அநேகமாய், குடும்ப அங்கத்தினரோடு கலந்துபேசி, அவர்களுடைய விருப்பங்களையும் பிரியங்களையும் எண்ணிப் பார்த்து அதன் பின்பு இவற்றைத் தீர்மானிப்பார். தாய் சமையலறை மற்றும் குடும்பத்தைச் சார்ந்த சில தீர்மானங்களைச் செய்யக்கூடும். (நீதிமொழிகள் 31:11, 27) பிள்ளைகள் வளர்ந்து வருகையில் தங்கள் விளையாட்டுப் பகுதிகளைப் பற்றியதில் உடையைக் குறித்ததில் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரியங்களில் ஓரளவு தெரிவு செய்யும்படி அனுமதிக்கப்படலாம். ஆனால் சரியான நியமங்கள் பின்பற்றப்படும்படியும், பிள்ளைகளின் பாதுகாப்பு அபாயத்துக்குட்படாதபடியும், வரம்புமீறி மற்றவர்களின் உரிமைகளுக்குள் தலையிட்டு விடாதபடியும் பார்த்துக் கொள்ள பெற்றோரின் போதிய கண்காணிப்பு இருக்கவேண்டும். இது, தீர்மானம் செய்வதில் படிப்படியாய் முன்னேறும்படியான ஒரு தொடக்கத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடும்.

பெற்றோராகிய உங்களை கனம் பண்ணுவது எளிதாயிருக்கிறதா?

24“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக,” என்று பிள்ளைகள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 6:2; யாத்திராகமம் 20:12) பிள்ளைகள் இதைச் செய்வது கடவுளுடைய கட்டளைக்குக் கனம் பண்ணுவதாயும் இருக்கும். இதை அவர்களுக்கு எளிதாக்குகிறீர்களா? மனைவியே, நீ உன் கணவரைக் கனம்பண்ணும்படியும் அவருக்கு மரியாதை கொடுக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கிறாய். கடவுளுடைய வார்த்தை அவருக்குக் கட்டளையிடுகிற பிரகாரம் வாழ்வதற்கு அவர் அதிகம் அல்லது எவ்வித முயற்சியுமே எடுக்கிறதில்லையென்றால், அவ்விதம் கனம்பண்ணி மரியாதை கொடுப்பது உனக்கு அதிகக் கடினமாயிருக்கிறதல்லவா? கணவனே, நீ உன் மனைவியை, உனக்கு உதவி செய்யும் அன்பான துணையாக, நெஞ்சார நேசித்து கனம்பண்ண வேண்டும். அவள் உதவியாயிராவிட்டால் இவ்வாறு செய்வது கடினமாயிருக்கிறதல்லவா? அப்படியானால், பெற்றோராகிய உங்களைக் கனம்பண்ணும்படி தங்களுக்குக் கூறும் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதை உங்கள் பிள்ளைகளுக்கு எளிதாக்குங்கள். சமாதானமான குடும்ப வாழ்க்கையையும், நல்ல தராதரங்களின் ஒரு தொகுதியையும், உங்கள் சொந்த நடத்தையில் நல்ல முன்மாதிரிகளையும், சரியான போதனையும் பயிற்றுவிப்பும், தேவைப்படுகையில் அன்புள்ள சிட்சையையும் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய மரியாதையைச் சம்பாதியுங்கள்.

25“ஒண்டியாயிருப்பதிலும் இருவர்கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்,” என்று அரசனாகிய சாலொமோன் கூறினான். (பிரசங்கி 4:9) இருவர் ஒன்றாகச் சேர்ந்து நடக்கையில், ஒருவன் விழுந்தால் அவனைத் தூக்கி விடுவதற்கு உதவி செய்ய மற்றவன் அங்கே இருக்கிறான். அவ்வாறே குடும்பத்திலும் கணவனும் மனைவியும் தாங்கள் வகிக்கும் அவரவருடைய பாகங்களில் ஒருவரையொருவர் ஆதரித்து ஊக்குவிக்கவேண்டும். தாங்கள் வகிக்கும் இப்பாகங்கள் பெற்றோர் நிலைக்குரிய மிகப் பல பகுதிகளில் ஒன்றின்மேல் ஒன்று படிந்து ஒத்திருக்கின்றன. இது குடும்ப ஒற்றுமைக்கு நல்லதாயிருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரை பொதுவான பயிற்றுவிப்பு வேலையில் ஒன்றுபட செய்கிறவர்களாய் அவர்களை மேலும் நெருங்கி ஒன்று சேரும்படி கொண்டுவர வேண்டும். பிள்ளை எப்படிப் பயிற்றுவித்து சிட்சிக்கப்படவேண்டுமென்பதன் பேரில் பிரிவினையான கேள்விகள் சில சமயங்களில் எழும்பக்கூடும். சில சமயங்களில் மனைவி, பிள்ளையின் மேல் அவ்வளவு அதிக கவனத்தைப் பொழிந்து கொண்டிருக்க அவளுடைய கணவன் தான் கவனியாமல் விடப்படுவதாய், ஒருவேளை கோபமாகவுங்கூட உணரக்கூடும். இது பிள்ளையினிடமாக அவனுடைய மனப்பான்மையைப் பாதிக்கக்கூடும். அவன் அதனிடமாகக் கிளர்ச்சியற்றவனாக இருக்கக்கூடும், அல்லது, அதற்குப் பதிலாக, அதன்பேரில் தன் பாசத்தை மிகுதியாகப் பொழிந்து தன் மனைவியினிடமாகத் தன் கவனத்தைக் குறைத்து விடக்கூடும். கணவனோ மனைவியோ சமநிலை குலைந்தவர்களாகையில் உயர்ந்த விலையைச் செலுத்த வேண்டியதாகிறது.

26ஏற்கெனவே முதிய பிள்ளை இருக்க ஒரு புதிய குழந்தை பிறக்கையில் இன்னுமொரு பிரச்னையும் எழும்பக்கூடும். இந்தப் புதிய குழந்தையினிடமாகத் தாய் பேரளவான நேரத்தைச் செலவிட வேண்டியதாயிருக்கும். முதிய பிள்ளை தான் கவனியாது விடப்படுவதாக உணருவதையும் பொறாமை அடைவதையும் தவிர்த்து வைக்க தகப்பன் அந்த முதிய பிள்ளைக்குச் சற்று அதிகப்படியான கவனத்தைக் கொடுக்கலாம்.

27நிச்சயமாகவே ஒருவரைவிட இருவர் இருப்பதே நலம், என்றாலும் ஒருவருமே இல்லாதிருப்பதைவிட ஒருவர் இருப்பது மேலாகும். சந்தர்ப்ப சூழ்நிலைமையால், தாயானவள், ஒரு தகப்பனுடைய உதவியில்லாமல் தானே தனிமையாகப் பிள்ளைகளை வளர்த்துவர வேண்டியதாக இருக்கலாம். அல்லது, இதே சவாலை தகப்பன் எதிர்ப்படக்கூடும். பலர் காரியங்களில், குடும்பங்கள் மதப் பிரகாரமாய் பிரிவினையுடையனவாய் இருக்கலாம். பெற்றோரில் ஒருவர், யெகோவா தேவனின் ஊழியராக பைபிளின் ஆலோசனையில் முழு நம்பிக்கையுடையவராக இருக்கிறார், மற்றவருக்கு அவ்வித விசுவாசமில்லை. கணவன் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவனாக இருக்கிறானென்றால், தான் குடும்பத் தலைவனாக, பிள்ளைகளைப் பயிற்றுவித்து சிட்சிப்பதில் பின்பற்றப்பட வேண்டிய போக்கைக் குறித்ததில் அதிகப்படியான அதிகாரத்தை உடையவனாயிருக்கிறான். என்றபோதிலும் அவன் மிகுதியான பொறுமையும் தன்னடக்கமும் சகிப்புத் தன்மையும் காட்ட வேண்டியதாக இருக்கலாம்; பாரமான கவலைக்குரிய பிரச்னை இருந்து வருகையில் அவன் உறுதியாக இருக்க வேண்டும். என்றபோதிலும் கோபமூட்டப்பட்ட நிலையிலுங்கூட நியாயமுள்ளவனாகவும் தயவாயும் இருந்து, சந்தர்ப்ப நிலைமைகள் எங்கெங்கு அனுமதிக்கின்றனவோ அங்கெல்லாம் இசைந்து கொடுக்கிறவனாகவும் இருக்க வேண்டும். விசுவாசியாக இருப்பவர் மனைவியாக இருந்து, ஆகவே கணவனுக்குக் கீழ்ப்பட்டவளாக இருக்கிறாளென்றால், அவள் தொடரும் முறை கணவனுடைய மனப்பான்மையின் பேரில் பேரளவாய்ச் சார்ந்திருக்கும். அவன் வெறுமென பைபிளில் அக்கறையில்லாதவனாக இருக்கிறானா, அல்லது அவன் தன் மனைவி தன் நம்பிக்கைகளை நடைமுறையில் செயல்படுத்துவதையும் அவற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க அவள் எடுக்கும் முயற்சிகளையும் அவன் எதிர்க்கிறானா? அவன் அவளை எதிர்க்கிறானென்றால் அப்போஸ்தலன் குறிப்பிட்டிருக்கும் பின்வரும் இந்தப் போக்கின்பேரில் அவள் சார்ந்திருக்க வேண்டும்: சிறந்த முன்மாதிரியான முறையில் மனைவி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவும், தன்னுடைய மரியாதையான மனப்பான்மையின் மூலமாகவும் தன்னுடைய கணவனை “போதனையின்றி, ஆதாயப்படுத்திக் கொள்ளக்கூடும்.” மேலும் தன் பிள்ளைகளை பைபிள் நியமங்களில் பயிற்றுவிப்பதற்குத் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அவள் பயன்படுத்திக் கொள்வாள்.—1 பேதுரு 3:1-4.

வீட்டு சூழ்நிலைகள்

28அன்பு நிலவுகிற ஒரு வீட்டு சூழ்நிலையை அளிப்பது பெற்றோர் இருவருக்குமுரிய பங்காயிருக்கிறது. இந்த அன்பு சூழ்நிலை பிள்ளைகளால் உணரப்படுகிறதென்றால் அவர்கள் தங்கள் சந்தேகங்களை அல்லது தவறுகளைத் தங்கள் பெற்றோருக்குச் சொல்ல பயப்படுவதனால், அவற்றை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்து, அங்கே அவை மென்மேலும் பெருகிக் கொண்டுவரும் இந்நிலை ஏற்படாது. தங்கள் மனதிலுள்ளவற்றைத் தாங்கள் வெளிப்படுத்திக் கூறலாம், அவை புரிந்து கொள்ளப்பட்டு, காரியங்கள் அன்புள்ள அக்கறையுடன் கையாளப்படுமென்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 யோவான் 4:17-19; எபிரெயர் 4:15, 16 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) வீடு, தங்குமிடமாக மட்டுமல்லாமல் புகலிடமாகவும் இருக்கும். பெற்றோரின் கனிவான பாசம் பிள்ளைகளின் ஆவியை வளர்த்து செழிக்கும்படி செய்யும்.

29ஒரு கடற்பஞ்சுவை நீங்கள் காடிக்குள் போட்டு அது தண்ணீர் நிறைந்ததாகும்படி எதிர்பார்க்க முடியாது. அதைச் சுற்றியுள்ளதை மாத்திரமே அது உறிஞ்சக் கூடும். இந்தக் கடற்பஞ்சு தண்ணீரில் மூழ்கப்பட்டிருந்தால் மாத்திரமே அது தண்ணீரை உறிஞ்சக்கூடும். பிள்ளைகளுங்கூட சுற்றுப்புறங்களை உறிஞ்சுகிறார்கள் அல்லது உட்கிரகித்துக் கொள்ளுகிறார்கள், தங்களைச் சுற்றி நிலவியிருக்கிற மனப்பான்மைகளை அவர்கள் உணர்ந்து பழக்கமாய்ச் செய்யப்பட்டு வருகிற காரியங்களையும் கவனிக்கிறார்கள். இவற்றை அவர்கள் கடற்பஞ்சுகளைப் போல் உட்கிரகித்துக் கொள்ளுகிறார்கள். இவை உங்களை எளிதில் மன அமைதி இழக்கச் செய்கின்றனவா அல்லது நீங்கள் மன அமைதியுடன் தளர்ந்த நிலையில் இருக்கிறீர்களா என்ற உங்கள் உணர்ச்சிகளைப் பிள்ளைகள் கண்டுணர்ந்து கொள்ளுகிறார்கள். குழந்தைகளுங்கூட வீட்டு சூழ்நிலையின் தன்மைகளை உட்கிரகித்துக் கொள்ளுகிறார்கள். ஆகையால் ஒருவருடைய விசுவாசமும், அன்பும், ஆவிக்குரிய தன்மையும், யெகோவா தேவன் பேரிலுள்ள திடநம்பிக்கையும் அருமதிப்புள்ளவையாக இருக்கின்றன.

30உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: உங்கள் பிள்ளை என்ன தராதரங்களை நிறைவு செய்யும்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? பெற்றோராகிய நீங்கள் இருவரும் அவற்றை நிறைவு செய்து வருகிறீர்களா? உங்கள் குடும்பம் ஆதரிக்கும் இலட்சியங்கள் என்ன? உங்கள் பிள்ளைக்கு நீங்கள் என்ன வகையான முன்மாதிரிகளாக இருக்கிறீர்கள்? நீங்கள் குறைகூறுகிறீர்களா, குற்றங்கண்டுபிடிக்கிறீர்களா, மற்றவர்களுடைய பிழைகளை நுட்பமாய் எடுத்துக் காட்டுகிறீர்களா, எதிர்மறையான எண்ணங்களின்பேரில் மனதை ஊன்ற வைத்துப் பேசுகிறீர்களா? இவ்வகையான பிள்ளைகள்தான் உங்களுக்கு வேண்டுமா? அல்லது, உங்கள் குடும்பத்திற்கு உயர்ந்த தராதரங்களை நீங்கள் வைத்திருந்து, அவற்றின்படி நீங்கள் வாழ்ந்து, உங்கள் பிள்ளைகளும் அவ்வாறு செய்யும்படி எதிர்பார்க்கிறீர்களா? இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க சில தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்யவேண்டும், குறிப்பிட்ட நடத்தை ஏற்கத் தகுந்ததாயிருக்கிறது, குறிப்பிட்ட சில செயல்களும் மனப்பான்மைகளும் ஏற்கத் தகாதவையாக இருக்கின்றனவென்பதை அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்களா? குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கும் இந்தப் பாதுகாப்பை உணர பிள்ளைகள் விரும்புகிறார்கள். ஆகையால் குடும்ப தராதரங்களை அவர்கள் பூர்த்தி செய்கையில் அவர்கள் உங்கள் அங்கீகாரத்தையும் ஏற்பையும் உணரும்படி செய்யுங்கள். மக்கள் தங்களிடமாக எதிர்பார்க்கப்படுகிறதற்கு ஏற்ப வாழும் ஒரு போக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளையைக் கெட்டதென்று வகைப்படுத்துவீர்களானால், நீங்கள் அவ்வாறு செய்தது சரி என்பதாகவே அவன் ஒருவேளை நிரூபிப்பான். அவனிடமிருந்து நல்லதை எதிர்பாருங்கள், அதற்கேற்ப வாழும்படி அவனை நீங்கள் ஊக்குவியுங்கள்.

31மக்கள் தங்கள் வார்த்தைகளைப் பார்க்கிலும் தங்கள் செயல்களைக் கொண்டே அதிகமாய்த் தீர்க்கப்படுகிறார்கள். பிள்ளைகளுங்கூட செயல்களில் கவனம் வைக்கிற அளவில் வார்த்தைகளின்பேரில் கவனத்தை வைக்காமலிருக்கலாம், மேலும் அடிக்கடி, எவ்வித பாசாங்குத்தனத்தையும் கண்டுகொள்வதில் அவர்கள் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள். மட்டுக்கு மீறிய வார்த்தைகள் பிள்ளைகளுக்குள் குழப்பத்தை உண்டாக்கக்கூடும். உங்கள் வார்த்தைகள், உங்கள் பழக்கச் செயல்களால் ஆதரிக்கப்படும்படி நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.—1 யோவான் 3:18.

32நீங்கள் தகப்பனாக இருந்தாலும்சரி தாயாக இருந்தாலும்சரி நீங்கள் வகிக்கும் பாகம் சவாலுள்ளதாய் இருக்கிறது. ஆனால், உயிரைக்கொடுப்பவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தச் சவாலை சந்தோஷமான பலன்களுடன் எதிர்த்து மேற்கொள்ளலாம். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பங்கை, யெகோவாவுக்குச் செய்வதைப் போல் மனச்சாட்சியுடன் நிறைவேற்றுங்கள். (கொலோசெயர் 3:17, NW) மட்டுக்கு மீறி செய்வதைத் தவிருங்கள். உங்கள் சமநிலையைக் காத்துக்கொள்ளுங்கள், “உங்கள் நியாயமானத்தன்மை” உங்கள் பிள்ளைகள் உட்பட “எல்லாருக்கும் தெரிய வருவதாக.”—பிலிப்பியர் 4:5, NW.

[கேள்விகள்]

1-3. (எ) ஒரு குழந்தை பிறப்பதானது பெற்றோரை எவ்வாறு பாதிக்கும்? (பி) பெற்றோராகத் தாங்கள் வகிக்கவேண்டிய பாகங்களைத் தகப்பனும் தாயும் விளங்கிக் கொள்வது ஏன் முக்கியமானது?

4 . தன் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையாயிருக்கிற காரியங்களில் சில யாவை?

5-7. சமீப ஆராய்ச்சியின்படி குழந்தை அதன் தாயின் அன்பாலும் கவனிப்பாலும் எப்படிப் பாதிக்கப்படுகிறது?

8-10. (எ) ஒரு குழந்தை தன் தாயின் அன்பிலிருந்து என்ன கற்றுக் கொள்ளுகிறது? (பி) இது ஏன் முக்கியமானது?

11. (எ) தகப்பன் தான் வகிக்கும் பாகத்தைப் பிள்ளையின் மனதில் எப்படி நிலைநாட்டக்கூடும்? (பி) இது ஏன் இன்றியமையாதது?

12, 13. (எ) குடும்பத்தில் தகப்பன் வகிக்கும் பாகம் என்ன? (பி) தகப்பன் தன் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதானது எப்படி, அதிகாரத்தைப் பற்றிய தன்னுடைய பிள்ளைகளின் கருத்தைச் சரியான முறையில் பாதிக்கக்கூடும்?

14. தகப்பனுடைய நல்ல முன்மாதிரி மகன் அல்லது மகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?

15, 16. (எ) கற்பித்தலுக்குரிய என்ன பொறுப்பை பைபிள் தகப்பன்மேல் வைக்கிறது? (பி) இதை எப்படி நிறைவேற்றலாம்?

17, 18. (எ) தகப்பன் தன் பிள்ளைகளை எப்படிச் சிட்சிக்க வேண்டும்? (பி) பல கட்டளைகளை உண்டு பண்ணுவதைவிட அதிக பலன் தரத்தக்கதாக இருப்பது எது?

19. வீட்டில் நல்ல கூட்டுறவு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?

20. பிள்ளைகளைச் சிட்சிக்கும் காரியத்திற்கு வருகையில், பெற்றோர் தங்கள் முயற்சிகளில் ஒற்றுமைப்பட்டவர்களாக இருக்கும்படி என்ன செய்யலாம்?

21. சிட்சை கொடுப்பதை பெற்றோரில் ஒருவர் மாத்திரமே செய்யும்படி விட்டுவிட வேண்டுமா? ஏன் அல்லது ஏன் விடக்கூடாது?

22. பிள்ளையின் வேண்டுகோள்களைக் கையாளுகையில் எது தவிர்க்கப்பட வேண்டும், ஏன்?

23. குடும்பத்தில் தீர்மானம் செய்வது தகப்பனுக்கே மட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமா?

24. பிள்ளைகள் தங்கள் தகப்பனையும் தங்கள் தாயையும் கனம் பண்ண வேண்டுமென்ற இந்த உண்மை பெற்றோர் மீது என்ன உத்தரவாதத்தை வைக்கிறது?

25. பிள்ளைகள் எப்படிப் பயிற்றுவிக்கப்பட வேண்டுமென்பதைக் குறித்ததில் பெற்றோர் ஒற்றுமைப்பட்டவர்களாக இராதபோது என்ன பிரச்னைகள் எழும்பக்கூடும்?

26. தாய், தன் நேரத்தில் பெரும் பாகத்தைப் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனிப்பதில் ஈடுபடுத்த வேண்டியதாயிருக்கையில், முதிய பிள்ளைக்குப் பொறாமை உணர்ச்சி உண்டாகாதபடி காத்து வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

27. விவாகத் துணைவர்களில் ஒருவர் அவிசுவாசியாயிருக்கையில் பிள்ளைகள் ஆவிக்குரிய பிரகாரமாய் எப்படி உதவி செய்யப்படக்கூடும்?

28, 29. என்ன வகையான வீட்டு சூழ்நிலை விரும்பத்தக்கதாயிருக்கிறது, ஏன்?

30. தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிநடத்துதலைத் தாங்கள் கொடுத்து வருகிறார்களா என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள பெற்றோர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளக்கூடிய கேள்விகள் என்ன?

31. பெற்றோரின் அறிவுரைகளை எது எப்பொழுதும் ஆதரிப்பதாக இருக்க வேண்டும்?

32. யாருடைய ஆலோசனையை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும்?

[பக்கம் 100-ன் படம்]

“நான் உன்னை நேசிக்கிறேன்,” என்று தாயின் பாசமிக்க பார்வையும், தொடுதலும், தொனியும் குழந்தைக்குத் தெரிவிக்கிறது

[பக்கம் 104-ன் படம்]

உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து செய்வதற்கான காரியங்களைத் திட்டமிடுகிறீர்களா?