Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாக நாளுக்குப் பின்

விவாக நாளுக்குப் பின்

அதிகாரம் 3

விவாக நாளுக்குப் பின்

உங்கள் விவாகம் நடந்து விட்டது, நீங்களும் உங்கள் துணையும் ஒரு புதிய தனி குடும்பமாகக் குடியமைக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சி நிறைவானதாயிருக்கிறதா? நீங்கள் இனிமேலும் தனிமையாக இல்லை, அந்தரங்களை நம்பிக்கையாகத் தெரிவிக்கவும் உங்கள் மகிழ்ச்சிக்குரியவற்றையும் உங்கள் பிரச்னைகளையுங்கூட பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணையை உடையவர்களாக இருக்கிறீர்கள். பிரசங்கி 4:9, 10 (தி.மொ.) உங்கள் காரியத்தில் உண்மையாக இருப்பதாய் நீங்கள் காண்கிறீர்களா?—“தனியனாயிருப்பதிலும் இருவராயிருப்பது நலம்; அவர்கள் உழைப்பினால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான், தனியாயிருந்து விழுபவன் நிலைமை பரிதாபம், அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே?” இந்த வகையான ஒத்துழைப்புடன் உங்கள் விவாகம் செழித்தோங்குகிறதா? இரண்டு வாழ்க்கைகள் இவ்வாறு மகிழ்ச்சியாய் இணைந்து ஒன்றுபட சாதாரணமாய்ச் சிறிது காலமும் முயற்சியும் வேண்டியதாயிருக்கிறது. ஆனால், பல விவாகங்களில் இவ்வாறு ஒன்றுபடுவது ஒரு போதும் நேரிடாமல் போகிறதென்று வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

2காதல் கதைகளில், காதல் கொண்டிருக்கிற இருவரை ஒன்றாகக் கொண்டுவருவதே அடிக்கடி பிரச்னையாயிருக்கிறது. அதன் பின் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். மெய்யான வாழ்க்கையில் அதன் பின் மகிழ்ச்சியாக வாழ்வதே நாளுக்கு நாள், உண்மையில் சவாலை அளிக்கிறது. விவாக நாளின் பெருமகிழ்ச்சிக்குப் பின் வழக்கமான அன்றாடக வாழ்க்கை நடைமுறையொழுங்கு வருகிறது: அதிகாலையில் எழுந்திருப்பது, வேலைக்குச் செல்வது, கடைக்குச் செல்வது, சாப்பாடு சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது முதலியவை.

3விவாக உறவானது தக்கவாறு பொருத்திக் கொள்ளும் படியான சரிப்படுத்தல்களைத் தேவைப்படுத்துகிறது. அநேகமாய் நடைமுறையிலும் மெய்ம்மையிலும் இராத ஏதோ சில எதிர்பார்ப்புகளுடனும் குறிக்கோள்களுடனும் நீங்கள் விவாகத்திற்குள் பிரவேசித்தீர்கள். இவை நிறைவு செய்யப்படாதிருக்கையில், முதல் சில வாரங்களுக்குப் பின் ஓரளவு ஏமாற்றம் உண்டாகக்கூடும். ஆனால் உங்கள் வாழ்க்கையில், ஒரு பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறீர்களென்பதை நினைவுகூருங்கள். நீங்கள் இனிமேலும் தனியாக அல்லது உங்கள் வாழ்நாளெல்லாம் கூட இருந்து வந்திருக்கிற ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டில்லை. இப்பொழுது நீங்கள் ஒரு புதிய ஆளுடன் இருக்கிறீர்கள், நீங்கள் தெரிந்திருப்பதாக எண்ணிய அளவுக்கு அவனை அல்லது அவளை உண்மையில் அறிந்தில்லையென்று நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும். உங்கள் கால அட்டவணை புதியதாயிருக்கிறது, உங்கள் வேலை ஒருவேளை புதியதாயிருக்கலாம், உங்கள் வரவு செலவு திட்டம் வேறுபட்டதாயிருக்கிறது, மேலும் நீங்கள் பழக்கப்பட்டுக் கொள்ள வேண்டிய புதிய நண்பர்களும் திருமண சம்பந்தத்தினால் உறவினராகிறவர்களும் இருக்கிறார்கள். உங்களைத் தக்கவாறு பொருத்திக் கொள்ள நீங்கள் மனமுள்ளவர்களாக இருப்பதன் பேரிலேயே உங்கள் விவாகத்தின் வெற்றியும் உங்கள் மகிழ்ச்சியும் சார்ந்திருக்கின்றன.

நீங்கள் பணிந்துபோகிறவர்களாக இருக்கிறீர்களா?

4சிலர், பெருமையின் காரணமாக, பணிந்து போகிறதைக் கடினமாகக் காண்கின்றனர். ஆனால் பைபிள் சொல்லுகிற பிரகாரம், “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” பிடிவாதத்தில் விடாது தொடர்வது கடுந்துயரத்தை உண்டு பண்ணக்கூடும். (நீதிமொழிகள் 16:18) “உன் உள் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறவனுக்கு உன் மேல் வஸ்திரத்தையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரக் கட்டாயஞ் செய்தால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ,” என்று இயேசு சொன்னபோது ஒருவன் பணிந்துபோகவும் விட்டுக் கொடுக்கவும் மனமுள்ளவனாயிருக்க வேண்டுமென்பதை சிபாரிசு செய்தார். உங்களுக்கு நெருங்கியவராயிருக்கும் ஒருவரோடு வாதாடிக் கொண்டிருப்பதை விட “நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளக்கூடாது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கேட்டான். (மத்தேயு 5:40, 41; 1 கொரிந்தியர் 6:7) மற்றவர்களோடு சமாதானத்தைக் காத்துக் கொள்வதற்காக கிறிஸ்தவர்கள் இவ்வளவு உச்ச அளவுகளுக்குச் செல்லக்கூடுமென்றால், நிச்சயமாகவே அன்பு கொண்டுள்ள விவாகமான இரண்டு ஆட்கள், தங்களுடைய இந்தப் புதிய உறவை வெற்றிகரமாக்கும்படி பணிவுடன் தக்கவாறு பொருத்திக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

5ஒருவன் மகிழ்ச்சியாகவோ மகிழ்ச்சி இல்லாமலோ இருப்பதற்கு எங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எதற்கு விழிப்பாயிருப்பீர்கள்? நீங்கள் உடன்பாடானவற்றில் உங்கள் கவனத்தை ஊன்ற வைப்பீர்களா அல்லது எதிர்மறையானவற்றிலேயே நினைவூன்றியிருக்கச் செய்வீர்களா? புதிய மனைவியானவள் ஒருவேளை பின்வருமாறு எண்ணலாம்: ‘இப்பொழுது நாங்கள் விவாகம் செய்துவிட்டிருக்க, என்னை வெளியே உற்சாகமூட்டும் இடங்களுக்கு அழைத்துச் சென்று என்னோடு நேரத்தை செலவிட்டு வந்திருக்கிற காதல் உணர்ச்சி நிறைந்த அந்த மனிதன் எங்கே? அவர் ஒரே ரீதியான வாழ்க்கை முறையில் அமைந்து விட்டார். அவர் என்னை அறியாமலே ஏதோ அச்சமயத்திற்கு ஏற்பவராக இருக்கிறார். அவர் நிச்சயமாகவே நான் முன்பு அறிந்த மனிதனாக இல்லை!’ அல்லது அவள், தன் கணவன் தன்னுடைய குடும்பத்திற்கு நல்ல பராமரிப்பை அளிப்பவனாக இருக்கும்படி இப்பொழுது கடினமாக உழைக்கிறான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டு நன்றியோடு மதிக்கிறவளாக இருக்கிறாளா? மறுபட்சத்தில் இந்தப் புதிய கணவன், தன்னுடைய மனைவி சமைக்கவும் சுத்தம் செய்யவும் கடினமாக உழைக்கிறாள், சில சமயங்களில் மிகவும் களைத்துப்போயிருக்கிறாள், கவர்ச்சிகரமாய்த் தோன்ற முயலும்படி நேரத்தைச் செலவிடுவதற்கு முன்பிருந்தது போல் அவளுக்கு அவ்வளவு அதிக நேரமில்லை என்பவற்றைக் கவனிக்கிறானா? அல்லது: ‘நான் விவாகம் செய்த அந்தக் கவர்ச்சிகரமான இளம் பெண்ணுக்கு என்ன நேரிட்டுவிட்டது? இப்பொழுது அவளுக்கு அவளுடையவன் கிடைத்துவிட்டதனால் அவள் மாறிவிட்டாள்,’ என்று தனக்குள் தானே சொல்லிக் கொள்கிறானா?

6இருவரும் முதிர்ச்சியுள்ளவர்களாய், விவாகத்திற்கு முன்பாகச் செய்யப்பட்ட எல்லாக் காரியங்களையும் செய்வதற்குத் தங்கள் இருவருக்குமே இப்பொழுது நேரமோ சக்தியோ இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பணிந்து போகும் தன்மையைக் காட்டி விவாக வாழ்க்கை ஒழுங்காக நடைபெறும்படி செய்வதற்குரிய ஆழ்ந்த திருப்தியளிக்கும் உத்தரவாதத்தை ஏற்பதற்கு இதுவே காலமாயிருக்கிறது. ஒரே ஆள் விவாக வாழ்க்கையைப் பாழாக்கக்கூடும், ஆனால் அவ்வாழ்க்கை ஒழுங்காக நடைபெற செய்வதற்கு இரண்டு ஆட்கள் தேவைப்படுகின்றனர். விவாக வாழ்க்கை நன்றாக நடைபெற செய்வது ஒரு சாதனையாக இருக்கிறது. சாதனை என்பது இடையூறுகளின் மத்தியிலும் ஒன்றை வெற்றிகரமாய் நிறைவேற்றுவதைக் குறிக்கிறது. இந்த முயற்சியில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்கையில் உங்கள் ஒவ்வொருவரிலும் ஒரு பாகம் இந்தச் சாதனையில் ஒன்றுபடுகிறது. இருவரும் ஒன்றுபட்ட இலக்குடன் எடுக்கும் ஒன்றுகூடிய இந்த முயற்சி உங்களை ஒன்றாகக் கட்டியிணைக்கிறது; இது உங்களை நெருங்க பற்றியிருக்கச் செய்கிறது; இருவராகிய உங்களை இது ஒருவராகச் செய்கிறது. காலப்போக்கில் இது, விவாகத்தை எதிர்பார்க்கையில் உணர்ந்ததைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட அன்பிணைப்பை உண்டுபண்ணுகிறது, மேலும் இப்படிப்பட்ட ஒன்றுபடுத்தும் சந்தோஷத்தில், உங்களுக்கு இருக்கும் வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் சரிப்படுத்தி அமைத்துக் கொள்வதில் பணிந்து போவது இன்பமாகிறது.

7அன்பு வளர வளர பெருமை படிப்படியாக மறைந்து போய் விடுகிறது, இவ்வாறு நியமமல்ல, ஆனால் தனிப்பட்ட விருப்பம் உட்பட்டிருக்கையில், கொடுப்பதில் மட்டுமல்ல, விட்டுக்கொடுப்பதிலும் மகிழ்ச்சியுண்டாகிறது. அது ஒருவேளை வீட்டுக்கு ஏதோ பொருளை வாங்குவதாக இருக்கலாம், அல்லது விடுமுறையை எப்படிச் செலவிடுவது என்பதாக இருக்கலாம். மற்றவர்களுடைய சந்தோஷத்திற்குக் கரிசனை காட்டுகையில் இந்தத் தம்பதிகள் அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் வார்த்தைகளைப் பொருத்தத் தொடங்குகிறார்கள்: “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”—பிலிப்பியர் 2:4.

பாலுறவைப் பற்றிய சமநிலை நோக்கு

8பாலுறவைப் பற்றி பைபிள் போலி நாணப் பாசாங்கு செய்கிறதில்லை. செய்யுள் இயல்பான சொல்லணிகளின் மூலம் இது, கணவனுக்கும் மனைவிக்கும் கொண்டுவரவேண்டிய மெய்மறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் காட்டுகிறது; மேலும் பாலுறவு கணவன் மனைவிக்கு மாத்திரமே உரியதாக கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்று அறிவுறுத்திக் கூறுகிறது. இந்தப் பகுதி நீதிமொழிகள் 5:15-21-ல் (தி.மொ.) காணப்படுகிறது, அதாவது:

“உன் தொட்டியில் வைத்த ஜலத்தையும் உன் கிணற்றில் ஊறும் நீரையும் குடித்திரு. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் ஓடைகள் வீதிகளிலேயும் பாயத்தகுமோ? அவைகள் உனக்கே உரியனவாக, அந்நியர்க்கும், உன்னோடு உரித்தாக வேண்டாம். உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுக, உன் இளவயதின் நாயகியோடு மகிழ்ந்திரு. அவள் பிரிய பெண்மான், அழகிய வரையாடு, அவள் மார்பு உன்னை எப்பொழுதும் மகிழ்விக்க, அவள் காதலில் நீ மயங்கியிருக்க. மகனே, நீ பரஸ்திரீ மயக்கங்கொள்வதேனோ? அந்நியபெண் மார்பைத் தழுவவேண்டியதேனோ? மானிடன் வழிகள் யெகோவாவின் கண்முன் உள்ளன, அவன் பாதைகளை எல்லாம் அவர் கவனிப்பார்.”

9என்றபோதிலும், விவாகத்தின் வெற்றி அந்தத் தம்பதிகளின் பாலுறவு சம்பந்தப்பட்ட வாழ்க்கையின் பேரிலேயே அடிப்படை கொண்டிருப்பதாக, அல்லது மற்ற உறவு பகுதிகளில் ஏற்படும் கவலைக்கேதுவான குறைபாடுகளை இந்தப் பாலுறவு சரியீடு செய்துவிடக்கூடும் என்பதாகத் தோன்றவைக்கும் நிலைக்கு அதை மட்டுக்குமீறி வலியுறுத்துவது தவறாயிருக்கும். புத்தகங்கள், திரைப் படங்கள், வியாபார விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும்—பெரும்பாலும் காம ஆவலைத் தூண்டிவிடும்படி திட்டமிடப்பட்ட பாலுறவு சம்பந்தப்பட்ட ஏராளமான தகவல்கள் அதை அவ்வளவு இன்றியமையாததாகத் தோன்றச் செய்கின்றன. என்றபோதிலும் கடவுளுடைய வார்த்தை இதற்கு முற்றிலும் வேறுபடுகிறது. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இச்சையடக்கத்தை அது சிபாரிசு செய்கிறது. விவாக வாழ்க்கையிலுங்கூட எல்லாக் கட்டுப்பாடுகளையும் எறிந்து விடுவதானது, விவாக உறவை மதிப்புக் குறைவாக்கும் பழக்கங்களுக்கு வழிநடத்தக்கூடும்.—கலாத்தியர் 5:22, 23; எபிரெயர் 13:4.

10விவாகத்திற்குப் பின் பாலுறவு சம்பந்தமாய் ஒருவருக்கொருவர் சரிப்படுத்தியமைவது அடிக்கடி கடினமாயிருக்கலாம். சிறிது காலமும் எடுக்கலாம். சாதாரணமாய் அறிவுக் குறைவும் தன் துணையின் தேவைகளை தெளிந்துணர்ந்து கொள்ள தவறுவதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். விவாகம் செய்துள்ள, மதிக்கப்படும் ஒரு நண்பருடன் முன்னதாகவே இதைப் பற்றிப் பேசுவது ஒருவேளை உதவியாயிருக்கலாம். ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்களாய் உண்டாக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் வேறுபட்ட உணர்ச்சியையும் உடையவர்களாக இருக்கிறார்கள். கனிவு காட்டப்படும்படி விரும்புகிற பெண்ணுடைய இந்தத் தேவைக்குக் கவனம் செலுத்துவது முக்கியமானது. ஆனால் போலி அடக்கம் அல்லது போலி நாணத்துக்குரிய எதிர்மறையான உணர்ச்சி அல்லது பாலுறவு எவ்வகையிலோ வெட்கக் கேடானதென்பதான உணர்ச்சி இருக்கக்கூடாது. அதே சமயத்தில் சில ஆண்களின் காரியத்தில் இருப்பதுபோல் அது, வெற்றிப் பெற்று கீழ்ப்படுத்துவதற்கான தறுவாய் என்பதாகவும் இருக்கக்கூடாது. “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்,” என்று பைபிள் சொல்லுகிறது. மேலும் இப்படிச் செய்வதில் பின்வரும் பைபிள் நியமம் பொருத்தமாயிருக்கிறது: “ஒவ்வொருவனும் தன் சுய பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” இருவரிலும் இப்படிப்பட்ட அன்பும் ஒருவருக்கொருவர் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலும் இருக்கிறதென்றால் தக்கவாறு நன்றாய்ச் சரிப்படுத்தியமைத்துக் கொள்ளக்கூடும்.—1 கொரிந்தியர் 7:3; 10:24.

வெறுக்கத்தக்கவர்களாயிராமல் வேறுபடுவது

11பூமியில் எந்த இரண்டு ஆட்களும் சரியாய் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொருவரும் திட்டவட்டமாய் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இது, எந்த இரண்டு ஆட்களும் எல்லாவற்றிலும் ஒத்துப் போகிறவர்களாக இருக்கமாட்டார்கள் என்றும் அர்த்தங்கொள்ளுகிறது. கருத்துவேறுபாடுகள் பெரும்பாலும் அற்பமானவையாக இருக்கலாம், ஆனால் அவற்றில் சில பாரக் கவலைக்குரியனவாக இருக்கக்கூடும். சில குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் விரைவில் கூச்சல் போடுவதையும், பொருட்களை எறிதல், தள்ளுதல், அடித்தல் ஆகியவற்றையும் எழும்பச் செய்யக்கூடும்; சில நாட்கள் அல்லது வாரங்கள் அடங்கிய ஒரு காலப்பகுதிக்கு துணைவனோ துணைவியோ வீட்டை விட்டுப் போய்விடக்கூடும், அல்லது அவர்கள் ஒருவருடனொருவர் பேசுவதை நிறுத்திவிடக்கூடும். இப்படிப்பட்ட நிலைமை எழும்பச் செய்யாமலே வேறுபடுவது முற்றிலும் கூடிய காரியமாயிருக்கிறது. எப்படி? குறிப்பிட்ட அடிப்படையான சத்தியத்தை எதிர்ப்படுவதன் மூலமேயாகும்.

12நாமெல்லாரும் அபூரணர், நம்மெல்லாருக்கும் குறைபாடுகள் இருக்கின்றன, மிக நல்ல உள்ளெண்ணங்களுடனுங்கூட, பலவீனங்கள் தங்களை வெளிப்படுத்துகின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய காரியத்தில் இது உண்மையாயிருந்ததாகக் கண்டான்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” (ரோமர் 7:19) நாம் நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து பாவத்தைச் சுதந்தரித்திருக்கிறோம். பரிபூரணமானது நம்முடைய சக்திகளுக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. ஆகையால், “என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?”—நீதிமொழிகள் 20:9; சங்கீதம் 51:5; ரோமர் 5:12.

13நம்முடைய சொந்த பலவீனங்களை நாம் ஒப்புக்கொண்டு அவற்றிற்குக் காரண விளக்கங்களைச் சொல்லுகிறோம். அவ்வாறே நம்முடைய விவாகத் துணையின் பலவீனங்களையும் நாம் ஒப்புக்கொண்டு மன்னித்து விடலாமல்லவா? நாம் பாவிகள் என்பதை நாம் சந்தேகமில்லாமல் உடனடியாக ஒப்புக்கொள்வோம்; ஆனால் தனிப்பட்ட ஒரு பாவத்தை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறவர்களாகவும் எதிர்த்து வாதாடுகிறவர்களாகவும் நாம் இருக்கிறோமா? தவறில் இருப்பதாக ஒப்புக்கொள்ள இவ்வாறு தயங்குவது நம்முடைய விவாகத் துணை உட்பட பொதுவாக மக்களுடைய இயல்பாக இருக்கிறதென்பதை விளங்கிக் கொள்ள நமக்கு உட்பார்வை இருக்கிறதா? இதற்கு நாம் இடமளிக்கிறோமா? “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை,” என்று தேவாவியால் ஏவப்பட்ட நீதிமொழி சொல்லுகிறது. சந்தேகமில்லாமல் நீங்களும் அநேகமாய் மற்ற எல்லாரையும் போல, “பொன் விதி”யின் நியமத்தை ஆதரிக்கிறீர்கள். இயேசு இதைத் தம்முடைய பிரசித்திப் பெற்ற மலைப் பிரசங்கத்தில் கூறினார், அதாவது: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” பெரும்பான்மையான மக்கள் இதற்கு உதட்டு சேவையே செய்கின்றனர்; ஒரு சிலரே இதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறார்கள். இதை உண்மையாய்ப் பொருத்திப் பிரயோகிப்பது விவாகம் உட்பட மனித உறவுகளுக்குரிய பிரச்னைகளைத் தீர்க்கும்.—நீதிமொழிகள் 19:11; மத்தேயு 7:12.

14நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாட்களாக எண்ணப்பட்டு நடத்தப்படும்படி விரும்புகிறோம். ஒருவன் ஒருவேளை நம்முடைய பண்புகளை அல்லது திறமைகளைத் தாழ்வாக நோக்குகிறவனாய் நம்மை வேறொரு ஆளுடன் சாதகமற்ற முறையில் ஒப்பிடுகையில் நாம் அதற்கு எப்படிப் பிரதிபலிக்கிறோம்? பொதுவாய் நாம் புண்படுத்தப்பட்டவர்களாய் உணருகிறோம் அல்லது கோபங் கொள்ளுகிறோம். ‘ஆனால் நான் அந்த ஆள் அல்ல’ நான் நானாக இருக்கிறேன்,’ என்று நாம் செயல்முறையளவில் சொல்லுகிறோம். இப்படிப்பட்ட ஒப்பிடுதல்கள் பொதுவாய் செயல் தூண்டுதலளிப்பவையாக இல்லை, ஏனென்றால் நாம் விளங்கிக் கொள்ளப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம்.

15உதாரணமாக இந்தக் குறிப்பை விளங்கிக்கொள்ள: கணவனாக நீங்கள், உங்கள் மனைவி தயாரிக்கும் உணவுகளுக்காகப் போற்றுதலைத் தெரிவிக்கிறீர்களா அல்லது அவள் உங்கள் தாய் சமைப்பதைப் போல் சமைக்க முடியாதென்று நீங்கள் குறை கூறுகிறீர்களா? உங்கள் தாய் புதிதாக விவாகம் செய்திருந்த போது எவ்வளவு நன்றாகச் சமைக்கக்கூடியவர்களாக இருந்தார்களென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை அவர்கள் அப்பொழுது சமைத்ததைப் பார்க்கிலும் நன்றாக உங்கள் மனைவி இப்பொழுது சமைக்கலாம். உங்கள் மனைவி தன்னுடைய புதிய வேலைகளில் படிப்படியாக முன்னேறி அவற்றில் கைதேர்ந்தவளாக ஆக அவளுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். மறுபட்சத்தில் மனைவியாகிய நீங்கள், உங்கள் தகப்பன் கொண்டுவருகிற சம்பளத்தை உங்கள் புதிய கணவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறதில்லை என்று குறை கூறுகிறீர்களா? உங்கள் தகப்பன் புதிதாக விவாகம் செய்திருந்தபோது என்ன சம்பாதித்தார்? இதுவுங்கூட அவ்வளவு முக்கியமானதல்ல. உண்மையில் முக்கியமாயிருப்பது நீங்கள் உங்கள் கணவனுக்குக் கொடுக்கும் உதவியே. அவருடைய பிரயாசங்களை நீங்கள் ஆதரித்து நன்றியோடு மதிக்கிறீர்கள் என்று அவர் உணருவதற்கேதுவாக நீங்கள் காலையில் எழுந்திருந்து அவர் வேலைக்குப் போவதற்கு முன்பாகக் காலையுணவை தயாரித்து அவருக்குக் கொடுக்கிறீர்களா? மாமனார் மாமியார் ஆகியோரைக் குறித்ததில் ஒருவருடனொருவர் சண்டை போட்டுக் கொள்ளுகிறீர்களா, அல்லது எவரிடம் சிநேகப்பான்மையை வளர்க்க வேண்டும் அல்லது எந்தப் பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும் என்பவற்றில் மனவேறுபாடுடையவர்களாக இருக்கிறீர்களா? இவையும் மற்ற வேறுபாடுகளும் எழும்பக்கூடும். இவற்றை நீங்கள் எப்படிச் சரிசெய்வீர்கள்?

16சிக்கல்களைத் தீர்ப்பதில் சண்டைச் சச்சரவுகள் உபயோகமுள்ளவை என்று நவீன உளநூல் வல்லுநர் சிலர் வாதாடுகிறார்கள். எண்ணக்குலைவு அதிகமதிகமாகக் குமுறிக் கொண்டிருப்பது அழுத்தத்தை உண்டாக்கி கடைசியாக வன்முறையான சச்சரவில் வெடிக்குமென்பது அவர்களுடைய கோட்பாடு. வெகுகாலம் அடக்கி வைக்கப்பட்டுள்ள மனக்கசப்புகள் இப்படிப்பட்ட கோப சொல்வீச்சு விவாதங்களின் மும்முரத்தில் வெளியே உளறிக் கொட்டப்பட்டு உலரவிட்டு ஒழித்துக்கட்டப்படுகின்றன—என்பதாக இந்தக் கோட்பாடு விவரித்துக் கொண்டு போகிறது. இது நடக்கும் வரையில், அந்த எண்ணக்குலைவுகள் உள்ளே கொதித்துப் புழுங்கிக் குமுறி, பின்னால் ஒரு சமயத்தில் பொங்கி வழியும்படி உள்ளுக்குள் அடக்கி வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட கோபாவேச திடீர் வெடிப்புகள் நீங்கள் உண்மையில் கருதாத காரியங்களைச் சொல்லும்படி உங்களைச் செய்விக்கும், இவ்வாறு புண்படுத்தப்பட்ட காயங்கள் ஆற்றமுடியாத அளவுக்குச் சென்றுவிடக்கூடும். அந்த மற்ற ஆளுக்கு விரோதமாக நீங்கள் அவ்வளவு கடுமையாய்த் தவறு செய்ததனால் அதன் பின் உடைத்து வழி உண்டுபண்ணமுடியாத ஒரு தடங்கல் உங்களுக்கு இடையில் எழுப்பப்பட்டதாகிவிடுகிறது. நீதிமொழிகள் 18:19 எச்சரிக்கிறபடி: “அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப் பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.” பைபிளில் காணப்படுகிற மிகநல்ல புத்திமதியானது, “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு,” என்பதே.—நீதிமொழிகள் 17:14.

பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்!

17மனவேறுபாடுகள், வெடிக்கும் நிலையை அடையும் வரையில் அவற்றை உங்களுக்குள் கட்டியெழுப்பி வரும்படி அனுமதிப்பதைப் பார்க்கிலும் மிகமேலானது, அவை எழும்புகையிலேயே அவற்றைக் கலந்து பேசித் தீர்ப்பதாகும். ஒருவர் செய்தத் தவறை மனதில் வைத்து நினைத்துக் கொண்டே இருப்பதானது அந்தத் தவறு உண்மையில் இருப்பதைப் பார்க்கிலும் அதிக மோசமாய் இருப்பதாகவே அநேகமாய் எப்பொழுதும் தோன்றச் செய்கிறது. இப்பொழுதே அதைப் பற்றிக் கலந்து பேசிவிடுங்கள், அல்லது அதை மறந்துவிடுங்கள். அது யோசியாமல் தற்செயலாகச் சொன்ன வார்த்தையா? அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள். அதைக் கலந்து பேசுவது அவசியமாயிருக்கிறதா? உங்களுக்கு மனவேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஏதோவொன்றை உங்கள் துணை செய்துவிட்டாரா? சாதுரியமில்லாமல் உடனடியாகக் கண்டனம் செய்யாதிருங்கள்; அந்தக் குறிப்பை ஒரு கேள்வி முறையில் எழுப்ப, அல்லது அதைக் கலந்து பேசுவதற்கு வழி திறக்கக்கூடிய ஒரு கருத்தை வெளிப்படுத்த முயலுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒருவேளை பின்வருமாறு சொல்லலாம்: ‘அன்பே, எனக்கு ஒன்று விளங்காதிருக்கிறது, நீ எனக்கு உதவி செய்யக்கூடுமா?’ பின்பு செவிகொடுத்துக் கவனியுங்கள். அந்த மற்றவரின் நோக்குநிலையை விளங்கிக் கொள்ள முயலுங்கள். நீதிமொழிகள் 18:13-ன் பின்வரும் எச்சரிக்கைக்குச் செவிகொடுங்கள்: “காரியத்தைக் கேட்குமுன் பதிலுரைப்பவனுக்கு அது புத்தியீனமும் இலச்சையுமாம்.” எவராவது நம்மைப் பற்றித் தவறான முடிவுகளுக்கு அவசரப்பட்டு வருகையில் அதை நாம் எவரும் விரும்புகிறதில்லை. ஆகையால் உடனடியாக எதிர்ச் செயலாற்றுவதற்கு மாறாக, அந்தச் செயலுக்குப் பின்னாலுள்ள உள்நோக்கத்தை அல்லது உள்ளெண்ணத்தைத் தெளிவாய்க் கூர்ந்தறிந்து கொள்ள முயலுங்கள். நீதிமொழிகள் 20:5 அறிவுரை கூறுவது போல் செய்யுங்கள்: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.”

18சிடுசிடுப்பு, கோபமெளனம், வெறுப்பு, கிளர்ச்சியில்லாமை ஆகியவற்றைப் போன்ற மனநிலைகளுக்கு ஆட்பட்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட மனநிலைகளுக்கு உட்படுகிற ஓர் ஆளுடன் வாழ்வது கடினம். இப்படிப்பட்ட மன உணர்ச்சி நிலைகளை அடக்கியாளுவது நமக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் இந்நிலைகள் மூளையிலுள்ள இரசாயனப் பொருட்களால் அடக்கியாளப்படுகின்றனவென்று சிலர் வாதாடுகிறார்கள். இப்படி இருக்கிறதோ இல்லையோ, எப்படியாயினும் உணர்ச்சிகள் தொற்றும் தன்மையுடையனவாக இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ளவர்களால் நாம் மகிழ்ச்சியூட்டப்படலாம் அல்லது சோர்வடைய செய்யப்படலாம், இன்னிசை நம்மில் பற்பல வகையான மன உணர்ச்சி நிலைகளை உண்டுபண்ணக்கூடும். கதைகளுங்கூட இவ்வாறு செய்யக்கூடும். நம்முடைய மனதில் பேணி வைத்து வரும் எண்ணங்கள் நாம் உணருகிற முறையைப் பாதிக்கக்கூடும். எதிர்மறையான காரியங்களின் பேரிலேயே சிந்தனை செய்து கொண்டிருப்பீர்களானால் நீங்கள் சோர்வுற்றிருப்பீர்கள்; மனவுறுதி கொண்ட செயலால் உங்கள் மனம் உடன்பாடான, நம்பிக்கைத்தருகிற எண்ணங்களை எண்ணும்படி நீங்கள் வற்புறுத்தக்கூடும். இவற்றின்பேரில் சிந்தனை செய்யுங்கள். (பிலிப்பியர் 4:8) இதைக் கடினமாகக் காண்பீர்களானால், உடல் சம்பந்தப்பட்ட ஏதாவது சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபட்டுப் பாருங்கள்—ஏதாவது கடினமான வேலையைச் செய்யலாம், அது களைகளைப் பிடுங்கிப் போடுவதாக அல்லது தரையைத் துடைத்துத் துப்புரவாக்குவதாக இருந்தாலும் சரிதான்; வெளியே சென்று உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது சற்று உலாவுங்கள்; அல்லது, இவற்றிற்கும் மேலாக, எவருக்காவது ஏதாவது உதவி செய்யுங்கள்—உங்கள் கவனத்தையும் சக்திகளையும் வேறு எங்கேயாவது செலுத்துவதற்கு எதையாவது செய்யுங்கள். ஒரு கெட்ட மனநிலையை ஊட்டி வளர்ப்பதைப் பார்க்கிலும் ஒரு நல்ல மனநிலையை பேணிக்காப்பது மிக அதிக மேலானது மேலும், இது உங்களுக்கும், மிக நிச்சயமாகவே உங்கள் துணைக்கும் மிக அதிக மகிழ்ச்சிக்கேதுவானதாயிருக்கும்!

19என்றபோதிலும் சம்பவங்கள் உங்களுக்கு ஆழ்ந்தத் துக்கத்தைக் கொடுக்கும் சமயங்கள் இருக்கின்றன, அல்லது கடும் நோயும் வேதனையும் உங்களைத் தாக்கலாம். அல்லது, உங்கள் மனைவியின் காரியத்தில் மாதவிடாயும் கர்ப்பம் தரித்துள்ள நிலையும், நரம்பு மண்டலத்தையும் உணர்ச்சி வேகத்தையும் பாதிக்கிற சக்தி வாய்ந்த இயக்குநீர்கள் சுரப்பதில் பெரும் மாறுபாடுகளை உண்டுபண்ணுகின்றன. ஒரு பெண் இன்னதென்று அறியாமலே மாதவிடாய்க்கு முந்திய உடல் நலங்குலைந்த சோர்வை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். இது, கணவன் எரிச்சலூட்டப்படுகிறவனாவதற்குப் பதிலாக உட்பார்வைக் காட்டும்படி, மனதில் வைக்க வேண்டிய முக்கிய காரணமாயிருக்கிறது. இப்படிப்பட்ட தனி சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கணவன் மனைவியாகிய இருவரும், அந்த மனநிலை மாற்றத்திற்குக் காரணமென்னவென்பதைக் கண்டுணர்ந்து கட்டியெழுப்பும் முறையில் பிரதிபலிக்க வேண்டும். “ஞானியின் இருதயம் அவன் வாய் உட்பார்வையைக் காட்டும்படி செய்விக்கும், அவனுடைய உதடுகளுக்கு அது கவர்ச்சி வன்மையைக் கூட்டுகிறது.” மேலும் “உண்மையான தோழன் எக்காலத்திலும் நேசிக்கிறான், துன்பம் உண்டாயிருக்கையில் உதவி செய்ய பிறந்திருக்கிற சகோதரனாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 16:23; 17:17, NW.

20உங்கள் விவாகத் துணை வைராக்கியமுள்ளவராக இருக்கிறாரா? தன்னுடைய மற்றும் தன் விவாகத்தின் மதிப்பைப் பற்றியும் ஒருவர் வைராக்கியமுள்ளவராயிருப்பது சரியே. இயக்குநீர் இருதயத்துடிப்பை மறுபடியுமாகத் தொடங்கி வைப்பது போல், வைராக்கியமுங்கூட நெஞ்சார நேசிக்கும் ஒன்றின் பாதுகாப்புக்கு ஆத்துமாவை எழுச்சியுறப் பண்ணுகிறது. வைராக்கியத்திற்கு எதிரானது அசட்டை மனப்பான்மையாகும், நம்முடைய விவாக வாழ்க்கையைக் குறித்ததில் நாம் அசட்டையுள்ளவர்களாக இருக்கக்கூடாது.

21ஆனால் இன்னொரு வகையான வைராக்கியம் இருக்கிறது இது, சந்தேக மனப்பான்மையால் தூண்டப்படுகிறது, கற்பனையால் பேணி வளர்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நியாயமற்ற, மட்டுக்குமீறிய உடைமை உணர்ச்சியடைய வைராக்கியம் விவாக வாழ்க்கையை நம்பிக்கையும் உண்மையான அன்பும் தொடர்ந்திருக்க முடியாத சந்தோஷமற்ற சிறைச்சாலை வாழ்க்கையாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட விதமாக “அன்பு பொறாமை கொள்ளாது.” சுற்றி மனதை ஆக்ரமிக்கும் சந்தேகப் பொறாமை கொண்ட இந்த வைராக்கியம் “எலும்புருக்கி”யாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 13:4; நீதிமொழிகள் 14:30.

22சந்தேக வைராக்கியத்தின் காரணமாக பாதுகாப்பற்ற உணர்ச்சியடைவதற்கு உங்கள் துணைக்கு நியாயமான காரணம் இருக்கிறதென்றால் அந்தக் காரணத்தை உடனடியாக அகற்றுங்கள். உண்மையான காரணம் எதுவும் இல்லையென்றால், சந்தேகம் கொண்டவரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்படி வார்த்தைகளின் மூலமும் அதிக முக்கியமாய் உங்கள் செயல்களின் மூலமும் உங்களால் கூடிய எல்லாவற்றையும் செய்யுங்கள். இருதயத்தை எட்டுங்கள்!

23விவாகமான ஆட்களுக்கிடையே மனவேறுபாடுகளைத் தீர்த்து சரி செய்வதில் வெளியிலுள்ள ஆட்கள் உதவியாய் இருக்கக்கூடுமா? ஒருவேளை கூடியதாக இருக்கலாம், என்றாலும் விவாகத் துணைவர்கள் இருவரும் இதற்கு ஒப்புக்கொண்டால் தவிர அவர்கள் அழைக்கப்படக்கூடாது. முதலாவதாக, “நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.” (நீதிமொழிகள் 25:9) கணவனின் அல்லது மனைவியின் தாய்த் தகப்பன் அல்லது உடன் பிறப்பாளர்களை நடுவராயிருந்து தீர்ப்பு செய்யும்படி கேட்பதில் ஒரு தனி அபாயம் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் ஒரு புறம் சாயாமல் இருக்க முடியாது. ஞானமாய் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்.” (ஆதியாகமம் 2:24) மனைவியைக் குறித்ததிலும் தன்னுடைய பெற்றோரும் கணவனும் சம்பந்தப்பட்ட காரியத்தில் இதுவே பொருந்துகிறது. பெற்றோரையோ அல்லது மாமன் மாமியாரையோ நடுவராயிருந்து—ஒரு துணைவருக்கு எதிராக மற்றொருவர் பக்கம் சாய்ந்து—தீர்ப்பு செய்யும்படி கேட்பதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும், தங்கள் பிரச்னைகள் தாங்கள் இருவரும் பங்கு கொள்ளுகிறவை, அவற்றைத் தாங்கள் ஒன்றாக உழைத்துச் சரி செய்ய வேண்டுமென்று தெரிந்துணருகிறவர்களாய் ஒன்றாக இசைந்திருக்க வேண்டும். மற்றத் துணையின் அனுமதியில்லாமல் வெளியிலுள்ளவர்களை அழைப்பது, மற்றவர்களின் பார்வையில் இருவரையும் மதிப்புக் குறைவாக்குகிறது. வெளிப்படையாயும், நேர்மையாயும், அன்புடனும் நீங்கள் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கலந்து பேசுவீர்களானால், நீங்கள் தாமே உங்கள் பிரச்னைகளை உங்களுக்குத் தீர்த்துக் கொள்ளக் கூடாமற் போவதற்கு எவ்விதக் காரணமுமில்லை. ஆலோசனைக்காக முதிர்ச்சியுள்ள மற்ற ஆட்களிடம் கலந்தாலோசிக்கலாம். ஆனால் கடைசியாகத் தீர்வு செய்யும் பொறுப்பு உங்கள் மேலும் உங்கள் துணையின் மேலுமே தங்கியிருக்கிறது.

24“தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” இருக்க வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் புத்திமதி கூறுகிறான். (ரோமர் 12:3) பின்னும் “கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்,” என்று மேலுமாகச் சொல்லுகிறான். (ரோமர் 12:10) சில சமயங்களில் நம்முடைய பெருமை பங்கப்படுத்தப்படுகையில், நாம் உண்மையில் அவ்வளவு பெரியவர்களாக இல்லையென்பதை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டு வர அது உதவுகிறது. நிச்சயமாகவே பூமியுடன் ஒப்பிடுகையில் நாம் பெரியவர்களாக இல்லை, இந்தப் பூமிதானேயும் இந்தச் சூரிய மண்டலத்தில் சிறியதாயிருக்கிறது, தன் முறையாக, சூரிய மண்டலம்தானே இப்பிரபஞ்சத்தில் மிகச் சிறியதாயிருக்கிறது. யெகோவாவின் பார்வையில் “சகல ஜாதிகளும் . . . ஒன்றுமில்லை . . . அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும் வெறுமையில் வெறுமையாகவும் எண்ணப்படுகிறார்கள்.” (ஏசாயா 40:17, தி.மொ) இப்படிப்பட்ட எண்ணங்கள் காரியங்களைச் சரியான தோற்ற அமைவில் வைக்கவும் மனவேறுபாடுகள் இப்படிப்பட்ட இன்றியமையாத காரியங்களை உட்படுத்தாதபடி பார்த்துக் கொள்ளவும் உதவி செய்கின்றன.

25சில சமயங்களில் ஓரளவு நகைச்சுவையான மனப்பான்மையுங்கூட நம்மை மட்டுக்குமீறி முக்கியத்துவமுடையவர்களாய் எண்ணிக் கொள்வதிலிருந்து தடுத்து வைக்க உதவி செய்யக்கூடும். உங்களைக் குறித்துத்தானே நீங்கள் சிரித்துக் கொள்ளக்கூடியவர்களாயிருப்பது முதிர்ச்சிக்குரிய ஒரு குறியாக இருக்கிறது, இது வாழ்க்கையில் பல இக்கட்டான கட்டங்களையும் சமாளித்து சரி செய்ய உதவுகிறது.

“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு”

26வேறுபாடுகளைச் சமாதானமாய்த் தீர்த்துக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் துணை சாதகமாய்ப் பிரதிபலிக்கிறதில்லையென்றால் என்ன செய்வது? “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்,” என்ற பைபிளின் இந்தப் புத்திமதியைப் பின்பற்றுங்கள். நாம் பின்பற்றுவதற்கு இயேசு நம்முடைய மாதிரியாயிருக்கிறார்: “அவர் வையப்படும்போது பதில் வையவில்லை.” ஆட்களுக்குள் இருந்துவரும் சாதாரண பழக்கமானது சரிக்குச்சரி செய்வதே. ஆனால், நீங்கள் இந்தப் போக்கைப் பின்பற்றுவீர்களானால் மற்றவர்கள் உங்களை உருப்படுத்தியமைக்க, உங்கள் சுபாவத்தை மாற்றியமைக்க இடங்கொடுக்கிறீர்கள். உண்மையில் தாங்கள் இருக்கிறபடியே உங்களையும் இருக்கச் செய்கிறார்கள். இது நடக்கும்படி அனுமதிப்பது, உங்களையும், நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வதையும், நீங்கள் அருமையாய்ப் பற்றியிருக்கும் நியமங்களையும் மறுதலிப்பதாகும். இதற்குப் பதிலாக, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுங்கள். அவர் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் பலவீனங்களால் மாற்றப்படாதவராய்த் தாம் இருக்கிறபடியே இருப்பதை உண்மையாய்க் கடைப்பிடிக்கிறார்: “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்க முடியாது.”—ரோமர் 12:17; 1 பேதுரு 2:23; 2 தீமோத்தேயு 2:13, தி.மொ.

27திரும்பத் திரும்ப சுழன்று வருகிற தீமையை நன்மையால் நிறுத்த நீங்கள் போதிய பலமுள்ளவர்களாக இருக்கிறீர்களென்றால் நீங்கள் நன்மைக்குரிய ஒரு சுழற்சியைத் தொடங்கி வைக்கக்கூடும். “சாந்தமான பதில் கோபத்தை அகற்றும்.” (நீதிமொழிகள் 15:1, தி.மொ.) சாந்தமான பதில் பலவீனத்திலிருந்து வருகிறதில்லை, பலத்திலிருந்தே தோன்றுகிறது, உங்கள் துணை இதை உணரக்கூடும். மிகப் பலர் சரிக்குச்சரி திரும்ப செய்வதனால், நீங்கள் அதை நன்மையால் தகர்த்து வழி உண்டாக்குவதானது அந்தச் சுழற்சியைத் தீமைக்குரியதாக இருப்பதிலிருந்து நன்மைக்குரியதாகத் திருப்பிவிடக்கூடும். வேதவாக்கியங்கள் சில இதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன: “எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” “நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய்.” (நீதிமொழிகள் 11:25; லூக்கா 6:38; பிரசங்கி 11:1) உங்கள் நற்குணம் உங்கள் துணையிடமிருந்து நல்லதை அறுவடையாகக் கொண்டு வருவதற்கு காலம் எடுக்கலாம். நீங்கள் ஒரு நாள் விதையை விதைத்து அடுத்த நாளிலேயே அறுவடை செய்கிறதில்லை. இருந்தபோதிலும், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் . . . நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:7-9.

28விவாக துணைவர்கள் கவனமாய்ச் சிந்தித்துப் பார்ப்பதற்கு இதோ சில வேதவசனங்களும் கேள்விகளும்:

நீதிமொழிகள் 14:29: “நீடிய சாந்தமுள்ளவன் மிகுந்த உணர்வுள்ளான், முற்கோபி புத்தியீனத்தை உயர்த்துவான்.” (தி.மொ.) யோசித்துப் பார்ப்பதற்கு உங்களுக்கு நேரத்தைக் கொடுப்பீர்களானால், கோபப்படுவதற்கு நல்ல காரணம் எதுவும் இல்லையென்று நீங்கள் அடிக்கடி கண்டுணருகிறீர்களல்லவா?

நீதிமொழிகள் 17:27: “அறிவாளி தன் வாயை அடக்குவான், உணர்வுள்ளவன் அமர்ந்த மனதுடையான்.” (தி.மொ.) உங்கள் மனதின் ஆவியை அமர்ந்திருக்கச் செய்து வருகிறீர்களா? உங்கள் துணையின் ஆவி பொங்கியெழும்பச் செய்யக்கூடிய வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கிறீர்களா?

நீதிமொழிகள் 25:11: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” ஒரு சமயத்திற்கு ஏற்றதாயுள்ள வார்த்தை மற்றொரு சமயத்திற்கு ஒருவேளை ஏற்றதாயிராது. சரியான சமயத்திற்குச் சரியான வார்த்தை எதுவென்பதை நீங்கள் விரைவில் தெரிந்துணரக்கூடியவர்களாக இருக்கிறீர்களா?

நீதிமொழிகள் 12:18: “யோசனையின்றிப் பேசிப் பட்டயம்போற் குத்துவோருண்டு, ஞானமுள்ளோரின் நாவு காயமாற்றும்.” (தி.மொ.) நீங்கள் பேசுவற்கு முன்பாக சற்று நின்று, உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையை எவ்வகையில் பாதிக்குமென்பதை யோசித்துப் பார்க்கிறீர்களா?

நீதிமொழிகள் 10:19: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” சில சமயங்களில் நாம் மனம் குலைந்த நிலையிலிருக்கையில் நாம் உண்மையில் கருதுவதற்கு மிஞ்சியவற்றைப் பேசிவிடுகிறோம், பின்னால் அதற்காக வருந்துகிறோம். இவ்விதம் செய்யாதபடி உங்களைப் பாதுகாத்து வருகிறீர்களா?

நீதிமொழிகள் 20:3: “வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக் கொள்வான்.” விவாதிப்பதற்கு இருவர் வேண்டும். உங்களை நிறுத்திக் கொள்வதற்கு நீங்கள் போதிய முதிர்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

நீதிமொழிகள் 10:12: “பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.” பழைய வாக்குவாதங்களைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கிறீர்களா, அல்லது உங்கள் துணையைப் போதியளவு நேசிப்பதனால் அவற்றை மறந்து, விட்டுவிடுகிறீர்களா?

நீதிமொழிகள் 14:9, New English Bible: “சரி செய்துகொள்ள மூடன் மட்டுக்கு மீறி அகந்தையுள்ளவனாயிருக்கிறான்; நேர்மையுள்ள மனிதரோ ஒப்புரவாகுதல் எதைக் குறிக்கிறதென்று அறிந்திருக்கிறார்கள்.” உங்கள் விவாக வாழ்க்கையில் விட்டுக்கொடுப்பதற்கும் சமாதானத்தைத் தேடுவதற்கும் நீங்கள் மட்டுக்குமீறி பெருமையுடையவர்களாக இருக்கிறீர்களா?

நீதிமொழிகள் 26:20: “விறகில்லாவிடில் நெருப்பு அவிந்திடும்.” தர்க்கிப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்ளக்கூடுமா அல்லது கடைசி வார்த்தையை நீங்கள்தான் சொல்லவேண்டுமா?

எபேசியர் 4:26: “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” வேறுபாடுகளின் பேரிலேயே நினைவை ஊன்ற வைத்து இவ்வாறு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் துயர்நிலையை நீடிக்கச் செய்கிறீர்களா?

29ஞானமான ஆலோசனையை நடைமுறையில் பிரயோகிக்கையிலேயே அது நன்மை பயக்குகிறது. அதைப் பிரயோகித்துப் பாருங்கள். அதைப்போலவே உங்கள் துணை உதவியாகச் சொல்லக்கூடிய யோசனையையும் பிரயோகித்துப் பார்க்க மனமுள்ளவர்களாக இருங்கள். அது பயனுள்ளதாயிருக்கிறதாவென்று பாருங்கள். ஏதாவது தவறாகப் போய்விடுமானால் யாரைக் குற்றஞ்சாட்டுவது? இது முக்கியமானதல்ல. காரியங்களை எப்படிச் சரிசெய்வதென்பதே முக்கியமானது. பணிந்து கொடுக்கிறவர்களாக இருங்கள், வேறுபாடுகளை மனதில் பேணி வைக்காதிருங்கள், அவற்றை வாய்விட்டுக் கலந்து பேசுங்கள், உங்களை மட்டுக்கு மீறி முக்கியத்துவமுடையவர்களாக எடுத்துக் கொள்ளாதேயுங்கள். பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்! ‘உங்களைப்போல் உங்கள் துணையையும் நேசிப்பீர்களானால்’ விவாக உறவில் சரிப்படுத்தி அமைந்து அதைச் சந்தோஷமுள்ளதாக்குவது மட்டுக்கு மீறி கடினமுள்ளதாயிருக்க வேண்டியதில்லை.—மத்தேயு 19:19.

[கேள்விகள்]

1. பிரசங்கி 4:9, 10-ல் விவரிக்கப்பட்டிருக்கிற இந்த வகையான ஒத்துழைப்பு ஒருவருடைய விவாக வாழ்க்கைக்கு எப்படி நன்மை பயக்கக்கூடும்?

2, 3. (எ) விவாக நாளுக்குப் பின் வாழ்க்கையின் எந்த மெய்ம்மைகளை எதிர்ப்பட வேண்டும்? (பி) ஒருவர் விவாகம் செய்த பிற்பாடு தக்கவாறு பொருத்திக் கொள்வதற்கேதுவாக சரிப்படுத்தல்களைச் செய்யவேண்டியதிருக்குமென்று எதிர்பார்ப்பது ஏன் நியாயமாகவே இருக்கிறது?

4. சரிப்படுத்தல்களைச் செய்துகொள்ள, வேதப்பூர்வ எந்த நியமங்கள் விவாகம் செய்த ஒருவருக்கு உதவி செய்யக்கூடும்? (1 கொரிந்தியர் 10:24; பிலிப்பியர் 4:5)

5. தன்னுடைய விவாகத் துணையைப் பற்றி ஒருவர் எப்படி எதிர்மறையான அல்லது உடன்பாட்டு முறையில் எண்ணக்கூடும்?

6. தங்கள் விவாகத்தை வெற்றிகரமாக்க கணவனும் மனைவியும் உண்மையில் உழைக்கையில் இது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள தங்கள் உறவை எப்படிப் பாதிக்கிறது?

7. தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயிருக்கிறதென்றால் பணிந்து கொடுப்பது எப்பொழுது நல்லது?

8, 9. விவாக பாலுறவுகளைப் பற்றிய வேதப்பூர்வ கருத்தென்ன?

10. பாலுறவு சம்பந்தமாய் ஒருவருக்கொருவர் சரிப்படுத்தியமையும்படி விவாகத் தம்பதிகளுக்கு உதவி செய்தவற்கேதுவாகக் கவனிக்க வேண்டிய சில காரியங்கள் யாவை?

11-13. வேறுபாடுகளிருக்கையில், இவை பார கவலைக்கேதுவான பிளவுகளாக உற்பத்தியாகாதபடி நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

14, 15. (எ) ஒருவன் தன் விவாகத் துணையை வேறொரு ஆளுடன் சாதகமற்ற முறையில் ஒப்பிடுகையில் என்ன விளைவுண்டாகக்கூடும்? (பி) எந்தக் காரியங்களைக் குறித்ததில் இப்படிப்பட்ட ஒப்பிடுதல்கள் சில சமயங்களில் ஞானமற்ற முறையில் செய்யப்படுகின்றன?

16. வன்முறையான சச்சரவுகள் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவி செய்கின்றன என்ற இந்தக் கோட்பாட்டில் என்ன தவறு இருக்கிறது?

17. மன வேறுபாடுகள் ஒருவரில் உள்ளுக்குள் கட்டியெழுப்பப்பட்டு வெடிக்கும் நிலைகளை எட்டுவதைத் தடுக்க என்ன செய்யப்படக்கூடும்?

18. சிடுசிடுப்பு, கோபமெளனம் ஆகியவற்றைப் போன்ற எதிர்மறையான மனநிலைகளைப் போக்க எது உதவி செய்யக்கூடும்?

19. தன் விவாகத் துணையின் இப்படிப்பட்ட மனநிலைகளை ஒருவன் எப்படிப் புரிந்து கொள்ளும் தன்மையுடன் கையாளக்கூடும்?

20-22. (எ) தகாத வைராக்கியம் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்? (பி) தன் விவாகத் துணைக்கு பாதுகாப்பான உணர்ச்சியைக் கொடுப்பதற்கு என்ன செய்யப்படலாம்?

23. விவாகப் பிரச்னைகளைத் தீர்த்து சரி செய்வதில் வெளியிலுள்ளவர்களின் உதவியைத் தேட ஒருவர் மனம் சாய்கையில் எது நன்மை பயக்கும் வண்ணமாய்க் கருதப்படலாம்?

24, 25. விவாகப் பிரச்னை ஒன்றைத் தீர்ப்பதில் பெருமை தலையிடுமாகில் ஒருவன் என்ன செய்யலாம்?

26, 27. மன வேறுபாடுகளைச் சமாதானமாய்த் தீர்க்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருவரின் விவாகத் துணை சாதகமாய்ப் பிரதிபலிக்கிறதில்லையென்றால் எந்தப் பைபிள் நியமங்கள் பொருத்திப் பிரயோகிக்கப்பட வேண்டும்? ஏன்?

28. சந்தோஷமுள்ள விவாக வாழ்க்கையை முன்னேற்றுவிக்க உதவி செய்யக்கூடிய, பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் காணப்படுகிற சிறந்த நியமங்கள் சில யாவை? எப்படி உதவி செய்கின்றன?

29. சந்தோஷமுள்ள விவாக வாழ்க்கையைக் காத்துவர நாடுகையில் மனதில் வைக்கவேண்டிய சில அடிப்படையான காரியங்கள் யாவை?