Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 10

இறைநம்பிக்கையைக் குலைக்கும் எதிரி

இறைநம்பிக்கையைக் குலைக்கும் எதிரி

இறைவன் இந்தப் பூமியைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பு, சுவர்க்கத்தில் தூதர்களைப் படைத்தார். ஆனால் காலப்போக்கில், அந்தத் தூதர்களில் ஒருவன் இறைவனுக்கே உரிய வழிபாட்டைப் பெற ஆசைப்பட்டான். பிறகு அந்த ஆசையின்படி செயல்பட்டபோது அவன் சைத்தானாக ஆனான். சைத்தான் என்றால் “எதிர்ப்பவன்,” அதாவது இறைவனை எதிர்ப்பவன், என்று அர்த்தம். சைத்தான் எப்படி இறைவனுக்கு எதிராகச் செயல்பட்டான்?

ஹவ்வாவை ஏமாற்ற சைத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தினான்

சைத்தான் சூழ்ச்சி செய்து ஹவ்வாவை இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்தான். எப்படி? நன்மையான ஏதோ ஒன்றை கொடுக்காமல் இருப்பதற்காகவே ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று யெகோவா சொன்னதாக சைத்தான் தந்திரமாக அவளிடம் சொன்னான். அதுமட்டுமல்ல, ‘நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் இறைவன் அறிவார்’ என்றான். இவ்வாறு, ‘இறைவன் ஒரு பொய்யர்’ என்று முத்திரை குத்தினான்; அதோடு, அவருடைய வழிகாட்டலை நிராகரிக்கும்படியும் ஹவ்வாவிடம் மறைமுகமாகக் கூறினான். (ஆதியாகமம் 3:5) சைத்தான் சொன்ன பொய்யை ஹவ்வா முட்டாள்தனமாக நம்பினாள். இறைவனுடைய சட்டத்தை... தான் மீறியது மட்டுமல்லாமல் ஆதாமும் மீறும்படி செய்தாள். அதுமுதல், உண்மையான இறைநம்பிக்கையைக் காட்டும் அனைவருக்கும் சைத்தான் எதிரியானான். இன்றுவரை மக்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறான். எப்படி?

போலி இறைநம்பிக்கை பரவுகிறது

மக்களை ஏமாற்ற சிலை வழிபாட்டையும் மனித பாரம்பரியங்களையும் சைத்தான் பயன்படுத்தியிருக்கிறான்

இஸ்ரவேல் சந்ததியாரை தீய வழியில் கொண்டு செல்வதற்காக சிலை வழிபாட்டையும் மனித பாரம்பரியங்களையும் சைத்தான் பயன்படுத்தினான். இஸ்ரவேலின் மதத் தலைவர்கள், ‘மனிதர்களுடைய கட்டளைகளை இறைவனுடைய கோட்பாடுகளாக’ கற்பித்து வந்ததால் அவர்களுடைய வழிபாடு வீணானது என்று மேசியா, அதாவது இயேசு, சொன்னார். (மத்தேயு 15:9) இஸ்ரவேலர் மேசியாவை நிராகரித்ததால் இறைவனும் அவர்களை நிராகரித்துவிட்டார். ‘இறைவனுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் கொடுக்கப்படும்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 21:43) பிற்பாடு இயேசுவின் சீடர்கள் இறைவனுக்குப் பிரியமான மக்களாக ஆனார்கள்.

அடுத்ததாக, இயேசுவின் சீடர்களுடைய இறைநம்பிக்கையைக் குலைக்க சைத்தான் முயற்சி செய்தான். அவனுடைய முயற்சி பலித்ததா? அதைப் பற்றி இயேசு ஓர் உவமையின் மூலம் முன்னரே அறிவித்தார். அந்த உவமையின்படி, வயலில் ஒரு மனிதன் கோதுமையை விதைக்கிறான். பின்பு, ஓர் எதிரி வந்து கோதுமைக்கு மத்தியில் களைகளை விதைத்துவிடுகிறான். ஆனால், களைகள் உடனே பிடுங்கப்படாமல் அறுப்பு காலம்வரை வளர விடப்படுகின்றன. பிறகு, அவை பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. கோதுமையோ எஜமானின் களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது.

பின்பு அந்த உவமையின் அர்த்தத்தை இயேசு தம் சீடர்களுக்கு விளக்கினார். விதை விதைப்பவர் இயேசுதான். ‘நல்ல விதை இறைவனுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்; களைகளோ பொல்லாதவனின் பிள்ளைகள்; அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், . . . தூதர்கள்’ என்று கூறினார். (மத்தேயு 13:38, 39) இயேசு தமக்கு உண்மையுடன் இருந்த சீடர்களை கோதுமைக்கு ஒப்பிட்டார். ஆனால், இந்தச் சீடர்கள் மத்தியில், களைகளைப் போல, போலி சீடர்களை சைத்தான் விதைத்தான். ஆம், இயேசு சொன்ன மாதிரியே, அவருடைய மறைவுக்குப் பின்வந்த நூற்றாண்டுகளில் போலி சீடர்கள் பலர் உருவானார்கள். இவர்கள் பல தவறான போதனைகளைப் பரப்பினார்கள்; உதாரணத்திற்கு, திரித்துவ கோட்பாட்டை, அதாவது ஒரே இறைவனில் மூவர் என்ற கோட்பாட்டை, பரப்பினார்கள். போலி சீடர்கள் சிலை வழிபாட்டிலும் ஈடுபட்டார்கள், அரசியல் விவகாரங்களிலும் தலையிட்டார்கள். ஆனால் சிலர் மட்டுமே இயேசுவின் போதனைகளை உண்மையுடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

உண்மையான இறைநம்பிக்கை நிலைத்திருக்கும்

இருந்தாலும், இயேசு முன்னரே சொன்னது போல் காலப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்படும். போலி இறைநம்பிக்கையாளர்களை அழிப்பதற்காக இறைத்தூதர்கள் அவர்களைப் பிரித்தெடுப்பார்கள். அப்போது, உண்மையான இறைநம்பிக்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். கடைசியில், பிசாசாகிய சைத்தானும், அதாவது இறைநம்பிக்கையின் முதல் எதிரியும், அழிக்கப்படுவான். அப்போது உண்மையான இறைநம்பிக்கை மட்டுமே நிலைத்திருக்கும்!

ஆனால், உண்மையான இறைநம்பிக்கையாளர்களை இன்று நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பதில் அடுத்தப் பக்கத்தில்...

உண்மையான இறைநம்பிக்கையை நாடுகிறவர்களை இறைத்தூதர்கள் தேடுகிறார்கள்