Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 12

உண்மையான இறைநம்பிக்கையைக் காட்டுங்கள்!

உண்மையான இறைநம்பிக்கையைக் காட்டுங்கள்!

இறைநம்பிக்கையைச் சோதிக்கும் சூழ்நிலைகள் வாழ்க்கையில் உண்டாகும் என இறைவன் தம் மக்களுக்கு எச்சரிக்கிறார். “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள். உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என வேதம் கூறுகிறது. (1 பேதுரு 5:8) உங்கள் இறைநம்பிக்கையை அழிக்க சைத்தான் எப்படி முயற்சி செய்யலாம்?

இதுபோன்ற எதிர்ப்பை சந்தித்திருக்கிறீர்களா?

பரிசுத்த வேதத்தை நீங்கள் படிப்பதைத் தடுப்பதற்கு சைத்தான் மற்றவர்களைத் தூண்டிவிடலாம், ஏன், உங்களுடைய சொந்தபந்தங்களையே தூண்டிவிடலாம். அதனால்தான், “ஒரு மனிதனுக்கு அவனுடைய வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று இயேசு சொல்லி வைத்தார். (மத்தேயு 10:36) பரிசுத்த வேதத்தில் உள்ள அற்புதமான சத்தியங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் அறியாமல் இருக்கலாம். அல்லது, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என அவர்கள் பயப்படலாம். ஆனால், ‘மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்’ என்று வேதம் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:25) மனிதரைப் பிரியப்படுத்துவதற்காக பரிசுத்த வேதத்தைக் கற்பதை நீங்கள் நிறுத்திவிட்டால் அது இறைவனைப் பிரியப்படுத்துமா? நிச்சயம் பிரியப்படுத்தாது! மறுபட்சத்தில், உண்மையான இறைநம்பிக்கையைக் காட்டும்போது இறைவன் நமக்குத் துணைபுரிவார். ‘நாம் பின்வாங்கி அழிந்துபோகிறவர்கள் அல்ல, நம்பிக்கையாயிருந்து நம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள்.’—எபிரெயர் 10:39.

இப்போது... டூமஸின் அனுபவத்தை மறுபடியும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். முதலில், அவருடைய இறைநம்பிக்கையைக் கண்டு மனைவி கேலி செய்தாள். பிற்பாடு, இறை வார்த்தையைக் கற்றுக்கொள்வதில் அவளும் அவருடன் சேர்ந்துகொண்டாள். அதுபோலவே, சரியானதைச் செய்வதில் நீங்கள் உறுதியுடன் இருந்தால்... உங்களுடைய நண்பர்களும் அன்புக்குரியவர்களும் இறை வார்த்தையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உண்மையான இறைநம்பிக்கையாளருடைய “கற்புள்ள நடத்தையையும்,” “ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து” இறைநம்பிக்கை இல்லாத குடும்ப அங்கத்தினர்கள் மனம் மாறியிருக்கிறார்கள்.—1 பேதுரு 3:1, 2.

அதோடு, வேதத்தைப் படிக்க முடியாதளவுக்குத் தங்களுக்கு அதிக வேலை இருப்பதாக மக்களை சைத்தான் நினைக்க வைக்கிறான். உதாரணத்திற்கு, பண நெருக்கடி போன்ற பலவித கஷ்டங்கள்... உங்கள் இறைநம்பிக்கையை ‘நெருக்கிப் போட’ வேண்டுமென விரும்புகிறான். (மாற்கு 4:19) ஆனால், அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்! ‘ஒரே உண்மையான இறைவனாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்’ என்று வேதம் சொல்கிறது. (யோவான் 17:3) ஆம், இறைவனையும் மேசியாவாகிய இயேசுவையும் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்வதே இன்பவனத்தில் முடிவில்லா வாழ்வைப் பெற முக்கியமான வழி!

உதவிக்காக இறைவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள்

எகிப்தின் அரண்மனை வாழ்வை ருசி பார்த்த மூஸாவைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் நினைத்திருந்தால்... செல்வத்தை, புகழை, அதிகாரத்தை நாடியிருக்கலாம். ஆனால், ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, இறைவனுடைய மக்களோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பதையே’ மூஸா விரும்பினார். ஏன்? ஏனென்றால், “காணமுடியாதவரைக் காண்பதுபோல் . . . தொடர்ந்து உறுதியாக இருந்தார்.” (எபிரெயர் 11:24, 25, 27) ஆம், மூஸாவுக்கு இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. சுயநல ஆசைகளுக்கு அல்ல, இறைவனுடைய சித்தத்திற்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார்; அதனால், இறைவனும் அவர்மீது அளவிலா ஆசீர்வாதத்தைப் பொழிந்தார். நீங்களும் அப்படிச் செய்தால், இறைவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்.

சைத்தான் உங்களைக் கண்ணியில் சிக்க வைக்க பல்வேறு விதங்களில் முயற்சி செய்யலாம். ஆனால், நீங்கள் அவனுக்கு இரையாகிவிட வேண்டியதில்லை. இறை வார்த்தை இவ்வாறு நம்மை உந்துவிக்கிறது: “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7) அவனை எப்படி எதிர்த்து நிற்கலாம்?

பரிசுத்த வேதத்தைத் தொடர்ந்து படியுங்கள். இறை வார்த்தையைத் தினமும் வாசியுங்கள். அதன் போதனைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்... அறிவுரைகளைக் கடைப்பிடியுங்கள். அப்படிச் செய்தால், ‘இறைவன் தருகிற முழு கவசத்தையும் அணிந்துகொண்டு’ சைத்தானின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கலாம்.—எபேசியர் 6:13.

உண்மையான இறைநம்பிக்கையாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த வேதத்தை வாசிக்கிற, கற்றுக்கொள்கிற, கடைப்பிடிக்கிற ஆட்களைக் கண்டுபிடியுங்கள். இப்படிப்பட்டவர்கள் ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார்கள் . . . ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துகிறார்கள்.’ உண்மையான இறைநம்பிக்கையில் வளர உங்களுக்கும் உதவி செய்வார்கள்.—எபிரெயர் 10:24, 25.

உண்மையான இறைநம்பிக்கை உள்ளவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். உதவிக்காக இறைவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள், அவர்மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு உதவி செய்ய இறைவன் விரும்புகிறார் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். ‘இறைவன் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.’ (1 பேதுரு 5:6, 7) ‘இறைவன் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்.’—1 கொரிந்தியர் 10:13.

வாழ்வில் துன்பங்கள் வந்தால் இறைவனைத் தொழுவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள் என்று சொல்லி இறைவனைச் சைத்தான் நிந்திக்கிறான். ஆனால்... சைத்தான் பொய்யன் என்பதை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது! “என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று இறைவன் சொல்கிறார். (நீதிமொழிகள் 27:11) ஆம், உங்களுக்கு உண்மையான இறைநம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்ட உறுதிபூண்டிருங்கள்!