Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 3

வாழ்வை மேம்படுத்தும் அறிவுரைகள்

வாழ்வை மேம்படுத்தும் அறிவுரைகள்

நீங்கள் வசிக்கும் பகுதிக்குப் புதிதாக ஒரு டாக்டர் வந்திருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் போக முதலில் நீங்கள் தயங்கலாம். ஆனால், உங்கள் நண்பர்கள் சிலர் அவரிடம் போய் குணமாகியிருப்பதைப் பார்க்கும்போது என்ன செய்வீர்கள்? ‘நாமும் போய் பார்க்கலாமே’ என்று நினைக்க மாட்டீர்களா?

ஒருவிதத்தில், பரிசுத்த வேதமும் அந்த டாக்டரைப் போலத்தான். அதிலுள்ள அறிவுரைகளைப் புரட்டிப் பார்க்க முதலில் சிலர் தயங்குகிறார்கள். ஆனால், அவற்றைப் பின்பற்றும்போது தங்கள் வாழ்க்கை மேம்படுவதைப் பார்க்கிறார்கள். இதோ சில உதாரணங்கள்...

மணவாழ்வில் வரும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது

“கல்யாணம் ஆன புதிதில் என் வீட்டுக்காரர் என்னைக் கண்டுகொள்ளாதது மாதிரி இருந்தது” என்று சுமியதூன் தனது கணவர் டூமஸைப் பற்றி சொல்கிறார். “எரிச்சலில் அவரைக் கன்னாபின்னாவென்று திட்டுவேன், கத்திக் கூச்சல் போடுவேன், கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசுவேன், அவரை அடித்தும் இருக்கிறேன். சில நேரங்களில், ரொம்ப விரக்தியடைந்து அப்படியே மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்.

“என் வீட்டுக்காரர் பரிசுத்த வேதத்தைப் படிக்க ஆரம்பித்தபோது அவரைக் கேலி செய்தேன். ஆனால், அவர் படிக்கிற சமயங்களில் பக்கத்து அறையில் உட்கார்ந்துகொண்டு அவருக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் ஒட்டுக் கேட்டேன். ஒருநாள் அப்படிக் கேட்டுக்கொண்டிருந்தபோது... ‘மனைவிகளே, நம்முடைய எஜமானருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். . . . மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்’ போன்ற வேதவசனங்கள் என் காதில் வந்து விழுந்தன. (எபேசியர் 5:22, 33) இந்த வார்த்தைகள் என் இதயத்தில் ஈட்டிபோல் பாய்ந்தன. இவ்வளவு காலமாய் என் கணவரைக் கேவலமாக நடத்தியதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டேன், இனிமேலாவது ஒரு நல்ல மனைவியாக இருக்க உதவி செய்யும்படி வேண்டினேன். சீக்கிரத்தில், என் கணவரோடு சேர்ந்து நானும் வேதத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.”

டூமஸ், சுமியதூன்

‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும்கூட பரிசுத்த வேதம் சொல்கிறது. (எபேசியர் 5:28) சுமியதூன் தொடர்ந்து சொல்கிறார்: “இதையெல்லாம் கற்றுக்கொண்ட பிறகு நாங்கள் ரெண்டு பேருமே எங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தோம். என் கணவர் வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது அவருக்கு டீ போட்டு கொடுக்க ஆரம்பித்தேன், அவரோடு அன்பாகப் பேசினேன். அவரும் என்னிடம் ரொம்ப பாசமாக நடந்துகொண்டார், வீட்டு வேலைகளில் எனக்கு கூடமாட உதவி செய்தார். ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுவதற்கு, ஒருவரையொருவர் தாராளமாக மன்னிப்பதற்கு’ நாங்கள் இரண்டு பேருமே முயற்சி செய்தோம். (எபேசியர் 4:32) அதனால், நாங்கள் ஒருவர்மீது ஒருவர் காட்டிய அன்பும் மதிப்புமரியாதையும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது. இப்போது, நாங்கள் 40 வருஷமாக சந்தோஷமாய் குடும்பம் நடத்தி வருகிறோம். மறைநூல் தந்த ஞானமான அறிவுரைகள்தான் எங்கள் மணவாழ்க்கையைக் காப்பாற்றியது!”

கோபத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

டேயிப் என்பவரின் அனுபவத்தைக் கேளுங்கள்: “நான் எதற்கெடுத்தாலும் பயங்கரமாகக் கோபப்படுவேன். அதனால், நிறைய பேரிடம் சண்டை போட்டிருக்கிறேன். பல தடவை துப்பாக்கியைக் காட்டியும் ஆட்களை மிரட்டியிருக்கிறேன். கோபத்தில் மனைவி என்றுகூட பார்க்காமல் அவளையும் அடித்து உதைத்து கீழே தள்ளியிருக்கிறேன். என்னைக் கண்டாலே எல்லாரும் பயந்து ஓடுவார்கள்.

குஸ்திரியாவும் டேயிபும் ஒவ்வொரு நாள் ராத்திரியும் ஒன்றாய் சேர்ந்து இறைவனிடம் வேண்டுகிறார்கள்

“ஒருநாள் இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை வாசித்தேன்: ‘நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.’ (யோவான் 13:34) இந்த வார்த்தைகள் என்னை ரொம்பக் கவர்ந்தன, ‘இனிமேல் இப்படி இருக்கக்கூடாது... மாறிவிட வேண்டும்...’ என்று தீர்மானித்தேன். எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தபோதெல்லாம், அதைக் கட்டுப்படுத்த உதவி செய்யுமாறு இறைவனிடம் வேண்டினேன். என் கோபம் அப்படியே தணிந்துவிடும். ‘சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று எபேசியர் 4:26, 27-ல் சொல்லப்பட்டுள்ள அறிவுரையை நானும் என் மனைவியும் கடைப்பிடித்தோம். ஒவ்வொரு நாள் ராத்திரியும் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பரிசுத்த வேதத்தைப் படித்தோம், இறைவனிடம் வேண்டினோம். இப்படிச் செய்ததால் அந்தந்த நாளுக்குரிய டென்ஷனெல்லாம் அந்தந்த நாளோடு போய்விட்டது. நாங்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானோம்.

“இப்போது... ‘சாந்தமான மனிதர்’ என்று பேரெடுத்திருக்கிறேன். என் மனைவி குஸ்திரியாவும் பிள்ளைகளும் என்னை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இறைவனிடமும் நெருங்கி வந்திருக்கிறேன், உண்மையிலேயே சந்தோஷமுள்ள ஒரு மனிதனாக இருக்கிறேன்.”

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவர உதவுகிறது

கொய்ன்

“ஒரு இளைஞர் பட்டாளத்தோடு நான் கூட்டு வைத்திருந்தேன். எப்போதும் சிகரெட்டும் கையுமாகத்தான் இருப்பேன். தினமும் ராத்திரி எக்கச்சக்கமாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பேன்” என்கிறார் கொய்ன். “அதுமட்டுமல்ல, மரிஹூவானா... எக்ஸ்டஸி... போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தினேன். அவற்றை குண்டு துளைக்காத உள்சட்டைக்குள் ஒளித்துவைத்து விற்றும் வந்தேன். நான் ஒரு முரடனாக இருந்தாலும் எப்போதும் எனக்குள் ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்தது.

“ஒருநாள் இந்த வசனத்தை எனக்கு ஒருவர் எடுத்துக் காட்டினார்: ‘என் மகனே, என் போதகத்தை மறவாதே; அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.’ (நீதிமொழிகள் 3:1, 2) நீண்ட ஆயுசுடன் வாழ வேண்டும்... சமாதானமாய் வாழ வேண்டும்... என்றெல்லாம் நானும் ஏங்கினேன். இன்னொரு வசனத்தையும் நான் படித்தேன், ‘அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. தேவபயத்தோடு நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காண்பிப்போமாக’ என்று அது சொன்னது. (2 கொரிந்தியர் 7:1) அதனால், போதைப் பழக்கத்தையும் பழைய கூட்டாளிகளோடு வைத்திருந்த சகவாசத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு இறைவனுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தேன்.

“போதைப் பழக்கத்தைவிட்டு இப்போது 17 வருஷம் ஆகிறது. எனக்கு... நல்ல ஆரோக்கியம், சந்தோஷமான குடும்பம், சுத்தமான மனசாட்சி கிடைத்திருக்கிறது; நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்காமல் படுக்கையில் நிம்மதியாக படுத்துத் தூங்குகிறேன்.”

இன வேற்றுமைகளை உடைத்தெறிய உதவுகிறது

“வாலிப வயசில்... ஒரு ரௌடியாகத் திரிந்தேன்” என்கிறார் பாம்பாங். “நான் பழிவாங்கியவர்களில் முக்கால்வாசி பேர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கண்டாலே எனக்கு ஆகாது.

“ஆனால் போகப் போக... இறைவனைத் தேட ஆரம்பித்தேன். அப்போதுதான், பரிசுத்த வேதத்தைப் படித்துவந்த ஒரு தொகுதியினரைக் கண்டுபிடித்தேன். அவர்களுடைய கூட்டத்திற்கு ஒருமுறை போனபோது... எந்த இனத்தாரை வெறுத்தேனோ அந்த இனத்தாரே என்னை அன்போடு வரவேற்றார்கள்! அங்கு யாரும் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை. வெவ்வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அன்பாகப் பழகினார்கள், சந்தோஷமாக இருந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்! ‘கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்’ என்ற வசனத்தின் அர்த்தத்தை அன்றைக்குத்தான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.—அப்போஸ்தலர் 10:34, 35.

“இப்போது... இன வேற்றுமை என்ற நஞ்சு என் மனசில் கொஞ்சம்கூட இல்லை. சொல்லப்போனால், ஒருகாலத்தில் நான் வெறுத்த இனத்தவர்களில் சிலர் இன்றைக்கு என் ஆருயிர் நண்பர்கள். பரிசுத்த வேதத்தின் மூலம் இறைவன் எனக்கு அன்பைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.”

பாம்பாங் இப்போது இன வேற்றுமை பார்க்காமல் எல்லாருடனும் சகஜமாகப் பழகுகிறார்

வன்முறையைக் கைவிட உதவுகிறது

“டீனேஜில் மூன்று தடவை ஜெயிலுக்குப் போய் வந்தேன். அதில்... இரண்டு தடவை திருடினதற்காக, ஒரு தடவை ஒரு ஆளை வெறித்தனமாகத் தாக்கியதற்காக” என்கிறார் கரோகா. “பிற்பாடு, ஒரு கலகக்கார கும்பலோடு சேர்ந்துகொண்டு நிறைய பேரைக் கொன்று குவித்தேன். சண்டை முடிந்த பிறகு, ஒரு ‘தாதா’ மாதிரி இருந்துகொண்டு ஒரு கும்பலை வைத்து மக்களிடமிருந்து பணம் பறித்து வந்தேன். என்னைச் சுற்றி எப்போதுமே அடியாட்கள் இருந்தார்கள். மொத்தத்தில்... மூர்க்கனாக, கொடூரனாக இருந்தேன்.

மூர்க்கனாய் இருந்த கரோகா இப்போது எல்லாராலும் மதிக்கப்படும் ஒருவராக... இறை வார்த்தையைப் போதிக்கும் ஒருவராக... இருக்கிறார்

“பின்பு ஒருநாள் இந்த வசனத்தை வாசித்தேன்: ‘அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது.’ (1 கொரிந்தியர் 13:4, 5) இந்த வார்த்தைகள் என்னைச் சிந்திக்க வைத்தன. அதனால், வேறொரு இடத்திற்குக் குடிமாறிப் போனேன்; வேதத்தைப் படித்து அதிலுள்ள அறிவுரைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தேன்.

“இப்போதெல்லாம்... யாரும் என்னை ஒரு முரடனாகப் பார்ப்பதில்லை. இறை வார்த்தையைப் போதிக்கும் மனிதனாகப் பார்க்கிறார்கள். இப்போது நான் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறேன்... திருப்தியான வாழ்க்கை வாழ்கிறேன்.”

இறை வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது

இந்த அனுபவங்களும் இதுபோன்ற எண்ணற்ற பிற அனுபவங்களும் ‘இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகின்றன. (எபிரெயர் 4:12) இறை வார்த்தையில் உள்ள அறிவுரை எளிமையானது... காலத்துக்கு ஏற்றது... நன்மை தரக்கூடியது.

பரிசுத்த வேதம் உங்களுக்கும் உதவ முடியுமா? ஆம், உதவ முடியும்—எந்தப் பிரச்சினை இருந்தாலும் சரி! ‘வேதவசனங்கள் எல்லாம் இறைவனுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், இறைவனுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன. அதனால் இறைவனுடைய ஊழியன் எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு முழுமையான திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவனாக இருப்பான்.’—2 தீமோத்தேயு 3:16, 17.

இப்போது... பரிசுத்த வேதத்தில் காணப்படும் சில அடிப்படை போதனைகளைச் சிந்திப்போம்.