Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவ்வுலக மதங்கள் சரியான வழிநடத்துதலைக் கொடுக்கின்றனவா?

இவ்வுலக மதங்கள் சரியான வழிநடத்துதலைக் கொடுக்கின்றனவா?

அதிகாரம் 3

இவ்வுலக மதங்கள் சரியான வழிநடத்துதலைக் கொடுக்கின்றனவா?

மதம், சரித்திரத்தில் மிக அதிக வல்லமைவாய்ந்த சக்திகளில் ஒன்றாக இருந்துவருகிறது,”28என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா கூறினது. ஆனால் இவ்வுலக மதங்கள் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் உண்மையான சக்தியாக இருந்துவருகின்றனவா? சகோதர அன்பு, தேசீய எல்லைகளையும் ஜாதிபேதங்களையும் வென்று மேலோங்க வேண்டுமென்று தங்களைப் பின்பற்றுவோருக்கு அவை கற்பித்திருக்கின்றனவா? மேலும், கிறிஸ்தவ மண்டல, கத்தோலிக், புராட்டஸ்டண்ட், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள், இயேசு கிறிஸ்துவை “சமாதான பிரபு”வாகப் பின்பற்றும் தங்கள் உரிமை பாராட்டலுக்கு உண்மையாய் நிரூபித்திருக்கின்றனவா? அல்லது மனிதனின் எதிர்காலத்தை இடுக்கணுக்குள்ளாக்கும் பகைமைகளுக்கே உண்மையில் உடனுதவியளித்திருக்கின்றனவா? பதிவைப் பார்வையிடுவது ஆச்சரியந்தரும் பதிலைக் கொடுக்கும்

2இதைக் குறித்து, பரேட் பத்திரிகை பின்வருமாறு கூறினது: “கற்றுக்கொள்ள மனமுள்ளோருக்குச் சரித்திரம் பாடங்களைக் கற்பிக்கிறது. மத மற்றும் மத உட்கட்சி பேதங்களில் ஆதாரங்கொண்ட சண்டைகள் அநேகமாய் எப்பொழுதும் மிக அதிகக் கொடியனவாயும் மிக அதிகம் நீடிப்பவையாயும் தீர்ப்பதற்கு மிக அதிகக் கடினமாயும் இருக்கின்றனவென்பது முதன் முதலான பாடங்களில் ஒன்றாகும்.”29மேலும் சிக்காகோ டிரிப்யூன் பின்வருமாறு கூறினதுபோல்: “ஒவ்வொரு பெரும்படியான மதமும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் இரக்கத்தையும் பிரசங்கிக்கிறது, என்றாலும் சரித்திரத்தில் மிக அதிகக் கொடுமையும் பொறுக்க முடியாத மிகக் கொடூரமுமான துன்புறுத்தல்களில் சில கடவுளுடைய பெயரில் நடப்பிக்கப்பட்டிருக்கின்றன.”30இத்தகைய சரித்திரப்பூர்வ உண்மை நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு, செய்தித்தாள் பதிப்பாசிரியர் C.L. சுல்ஸ்பெர்கர் சரியாகவே பின்வருமாறு கேட்கிறார்: “இந்த விவாதப் பொருள் மனதுக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும்,—பேரரசு ஆட்சிமுறை, ஜாதிபேத உணர்ச்சி, போர் மனப்பான்மை ஆகியவற்றைப் போன்ற மற்றக் காரணங்களோடுகூட மதம் இடைவிடாமல் மனித உயிருக்கு மேலுமதிக பயமுறுத்தலாக வளர்ந்து மேம்பட்டிருக்கிறதை நாம் தெளிவாக உணரவேண்டுமல்லவா?”31

3ஆம், மதம் ஆதரித்த சண்டைகளில் சிந்தப்பட்ட இரத்தத்தால் சரித்திரம் கறைப்பட்டிருக்கிறது. நம்முடைய நூற்றாண்டில் மாத்திரமே இரண்டு உலகப் போர்களின்போதும் அவற்றின் பின்னும், உடன் தோழரான மதத்தினர் ஒருவரையொருவர் கொல்லும் வெட்கக்கேடான பழக்கத்தை—கத்தோலிக்கர் கத்தோலிக்கரைக் கொல்வதையும், புராட்டஸ்டண்டினர் புராட்டஸ்டண்டினரைக் கொல்வதையும், இஸ்லாமியர் இஸ்லாமியரைக் கொல்வதையும், இவ்வகையான மற்றவற்றையும் நாம் கண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகளில் பாதிரிமார் ஒரே மதத்தினரானபோதிலும், தங்கள் மத சகோதரர்களைச் சீக்கிரத்தில் கொல்லப்போகும் படைகளை ஆசீர்வதித்தார்கள்.

4இந்தக் காரியத்தில் மிக அதிகக் குற்றப் பொறுப்புள்ளவர்களுக்குள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் இருக்கின்றன. ஏன்? ஏனென்றால் அவர்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளையும் பின்வருமாறு கூறின அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமை பாராட்டுகிறார்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) எனினும் இதற்கு நேர்மாறாக எல்லாவற்றையும்விட மிக மோசமான படுகொலைகள் கிறிஸ்தவ மண்டலத்துக்குள்தானே நடந்தன. ஐயோவாவின் உவாட்டர்லூ கோரியர் செய்தித்தாள் பதிப்பாசிரியர் கட்டுரை ஒன்றில் அறிவிக்கப்பட்டபடி: “கிறிஸ்தவர்கள் மற்றக் கிறிஸ்தவர்களின்பேரில் போர் தொடுப்பதைப் பற்றி ஒருபோதும் சங்கட உணர்ச்சியடையவுமில்லை. அவர்கள் அவ்வாறு உணர்ந்திருந்தால், ஐரோப்பாவில் நடந்த மும்முரமான போர்களில் பெரும்பான்மை ஒருபோதும் நடந்திரா. . . . கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைக் கொல்வதைக் குறித்து எல்லாக் காலத்துக்கும் பதிவுகளை வைத்த, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் ஒருபோதும் நடந்திருக்க முடியாது.”32

5இந்தக் காரியத்தைக் குறித்து பைபிள் திட்டவட்டமாயிருக்கிறது: கடவுளை உண்மையில் சேவிப்போர், “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடர”வும், “தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக . . . அடி”க்கவும், ‘இனி . . . யுத்தம் கற்காதிருக்கவும்’ அதில் கட்டளை கொடுத்திருக்கிறது. (1 பேதுரு 3:11; ஏசாயா 2:2-4, தி.மொ.) “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் . . . பொல்லாங்கனால் [பிசாசாகிய சாத்தானால்] உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம்.” (1 யோவான் 3:10-12) ஆனால் இவ்வுலக மதங்களைப் பின்பற்றுவோர், காயீன் செய்ததைப்போல் தங்கள் சகோதரரைத் தொடர்ந்து கொலை செய்கிறார்கள், அவர்களுடைய பாதிரிமார் இந்தப் போக்கைப் பின்தொடருவோரை ஆதரித்தனர். நீங்கள் ஒரு மதத்தைச் சேர்ந்திருந்தால் உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பூமியிலுள்ள எல்லாரும் என் மதத்தைச் சேர்ந்திருந்தால், போர்கள் நின்றிருக்குமா? இந்தப் பூமி இப்பொழுது உண்மையான சமாதானத்துக்குரிய இடமாயிருக்குமா?’

6உலக மதங்கள் பிரிவுற்றும் போரிட்டுக்கொண்டுமிருக்கும் இந்த நிலைமை கடவுள் அவர்களை ஆதரிக்கிறதில்லையென நிரூபிக்கிறது. மதம் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைபாராட்டுவதால் எல்லா மதமும் நல்லதென நினைப்போருக்கு இது ஆச்சரியத்தை உண்டாக்கலாம். எனினும் “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல் சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்,” என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 14:33) மேலும் உண்மையான மதமும் பொய் மதமும் இரண்டும் இருப்பதாகவும் அது காட்டுகிறது. மேலும் சத்தியத்தில் ஆதாரங்கொண்டு, பாசாங்குத்தனத்துக்கு விலகியிருக்கும் வணக்கத்தை மாத்திரமே கடவுள் ஆதரிக்கிறார் என்றும் அது கூறுகிறது.—மத்தேயு 15:7-9; யோவான் 4:23, 24; தீத்து 1:16.

7இவ்வுலக மதங்கள் அரசியல், வியாபார, சமுதாய லாபங்களுக்காகத் தங்களை வேசித்தனத்துக்கு உட்படுத்தினதன் காரணமாக, பைபிள் அவற்றை வேசியைப்போல் சித்தரித்துக் காட்டுகிறது. இந்த “வேசியை” விவரித்து அது பின்வருமாறு சொல்லுகிறது: “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 17:1-6; 18:24) ஆம், இவ்வுலக மதங்கள், உலக சரித்திரத்தில் நடந்த எல்லா படுகொலையின் சம்பந்தமாகவும் கனத்த இரத்தப் பழியைச் சுமக்கிறது! இதற்காக அவை கணக்கு ஒப்புவிக்கச் செய்யப்படும்.

8தெளிவாகவே, பைபிளுக்கு நேர்மாறான செயல்களைச் செய்துவரும் எந்த மதமும் மனிதவர்க்கத்தை உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் வழிநடத்துவதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. இதன் காரணமாகவே இயேசு தம்முடைய நாளிலிருந்த பொய் மதத் தலைவர்களைக் குறித்து: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே,” என்று சொன்னார். (மத்தேயு 15:14) அதுபோல், இன்று உலக மதங்கள், போர் சம்பந்தப்பட்ட காரியத்திலும் வாழ்க்கையின் மற்ற இன்றியமையாத அம்சங்களிலுங்கூட, “குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்.”

உலக மதங்கள் நல்நடத்தையை முன்னேற்றுவிக்கின்றனவா?

9நல்நடத்தைக்குரிய உண்மையான தராதரங்களை விடாது காத்துவராவிடில் எவராவது தன் அயலாரிடம் உண்மையான சமாதானத்தை அல்லது மெய்யான பாதுகாப்பை அனுபவித்து மகிழக்கூடுமா? இத்தகைய தராதரங்கள் இராத இடத்தில் பொய்யும், களவும், விபசாரமும், இவ்வகை மற்றப் பழக்கச் செயல்களும் சாதாரணமாயிருக்கின்றன. மறுபட்சத்தில் அயலான்பேரில் உண்மையான அன்பு கொண்டிருந்து நல்நடத்தையை முன்னேற்றுவிக்க வேண்டும்.

10நல்நடத்தையின்பேரில் கடவுளுடைய கருத்து பைபிளில் பின்வருமாறு வெளிப்படுத்தியிருக்கிறது: “பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றியாயிற்று. எப்படியென்றால், விபசாரஞ்செய்யாதே, கொலை செய்யாதே, களவுசெய்யாதே, இச்சியாதே என்கிற இந்தக் கற்பனைகளும் வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரு என்கிற ஒரே வார்த்தையில் தொகையாய் அடங்கியிருக்கின்றன. அன்பு அயலானுக்குத் தீமைசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாம்.”—ரோமர் 13:8-10, தி.மொ.

11என்றாலும், நல்நடத்தைக்குரிய கடவுளுடைய தராதரங்களை ஒருவன் பழக்கமாக கடைப்பிடிக்கிறதில்லையென்றால் அவன், கடவுளுடைய தயவையும் பாதுகாப்பையும் கொண்டிருக்கும் நிச்சயத்துடன் அவரோடு சமாதானத்துடன் இருக்கிறானென்று நீங்கள் நம்புகிறீர்களா? இது அதைவிட அதிக முக்கியம். தம்மைச் சேவிப்பதாக உரிமை பாராட்டுகிறவர்களிடம் இத்தகைய நல்நடத்தையை வற்புறுத்தாதக் கடவுளை நீங்கள் மதிக்கக்கூடுமா?

12தம்முடைய தராதரங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென கடவுள் கட்டளையிடுவதற்கு, அந்தத் தராதரங்கள் யாவை என்பதை அவர் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இதை அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் தெரிவித்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்த ஒழுக்கத் தராதரங்களைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டுமென்று சொல்வது ஒவ்வொருவனும் தன் சொந்த ஊர்தி போக்குவரவு நடமாட்ட சட்டங்களை உண்டுபண்ணிக்கொண்டு அதன்படி செல்லவேண்டுமென்று சொல்வதுபோல் பகுத்தறிவுக்கு முரணாயிருக்கிறது. இதன் விளைவு என்னவாகுமென்பது உங்களுக்குத் தெரியும். கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டுவருகிற ஒரே ஒரு வழியே உண்டென பைபிள் நியாயப்படி காட்டுகிறது. இயேசு சொன்னபடி, மற்ற எல்லா பாதைகளும் அழிவுக்கே வழிநடத்துகின்றன.—மத்தேயு 7:13, 14; லூக்கா 13:24.

13முக்கியமாய்க் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் நல்நடத்தைக்குரிய கடவுளுடைய தராதரங்களை உறுதியாய்க் கடைப்பிடித்து இவ்வாறு மீதியான உலகத்துக்கு வழிநடத்துதலை வைக்கின்றனவா? இந்தச் சர்ச்சுகளைச் சேர்ந்துள்ள பலரின் வாழ்க்கை எதை வெளிப்படுத்துகிறது? நீங்கள் ஒரு சர்ச்சை சேர்ந்தவர்களா? அப்படியானால் உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் மதத்தின் உறுப்பினர் வாழ்வதுபோல் பூமியிலுள்ள எல்லாரும் வாழ்ந்தால், அது, குற்றச் செயல்கள், நேர்மையற்ற வியாபார பழக்கச் செயல்கள், சண்டை, பால்சம்பந்த ஒழுக்கக்கேடு ஆகியவற்றிற்கு முடிவைக் கொண்டுவருமா?’

14“புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்” என்றும் “துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்” என்றும் பைபிள் எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:9; 1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) இந்தக் காரணத்தினிமித்தம், “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனே கூடப் புசிக்கவுங்கூடாது. . . . அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப் போடுங்கள்,” என்றும் பைபிளில் கட்டளையிட்டிருக்கிறது.—1 கொரிந்தியர் 5:11-13.

15உண்மைதான், ஒருவன் தவறி, பின்பு திரும்பவும் திருந்தக்கூடும். ஆனால் இத்தகைய காரியங்களைச் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்கிறவர்களைப் பற்றியதென்ன? இவர்கள் கடவுளைச் சேவிப்பதாக உரிமை பாராட்டினால் பாசாங்குக்காரரே. நிச்சயமாகவே பாசாங்குத்தனத்தை நீங்கள் வெறுக்கிறீர்கள், கடவுளும் அதை வெறுக்கிறார், பாசாங்கு பழக்கக்காரரையும் வெறுக்கிறார். (மத்தேயு 23:27, 28; ரோமர் 12:9) அப்படியானால், உங்கள் மதத்தைப் பற்றியதென்ன? விடாது தொடர்ந்து கடவுளுடைய சட்டங்களை மீறிக்கொண்டு, உண்மையான மனந்திரும்புதலைக் காட்டாமலும் இருப்பவர்களைத் “தள்ளிப்போடுங்கள்” என்று பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை அது பின்பற்றுகிறதா? அல்லது இத்தகையோர் நல்ல நிலைநிற்கையில் தொடர்ந்திருக்க அனுமதித்து, இவ்வாறு மற்றவர்கள் அபாயத்துக்குள்ளாகச் செய்கிறதா? தவறுசெய்தலை உண்மையில் கண்டுங்காணாததுபோல் இருந்து, அல்லது அதைக் கண்டிக்காமல் மழுப்பிவிட்டு வெறும் உதடுசேவையை மட்டுமே அது செய்கிறதா?—மத்தேயு 15:7, 8.

16வேசித்தனமும், விபசாரமும், ஓரினப் புணர்ச்சியும் தவறு என்று சொல்வதற்கில்லையென மேலும் மேலுமான பாதிரிமார் சொல்லுகின்றனர். ஆனால் அவை கடவுளுடைய எண்ணத்திற்கு ஒத்தில்லை. அவருடைய வார்த்தை பின்வருமாறு திட்டவட்டமாகக் கூறுகிறது: “மோசம்போகாதிருங்கள்; வேசிமார்க்கத்தார் விக்கிரகாராதனைக்காரர் விபசாரக்காரர் தற்புணர்ச்சிக்காரர் ஆண்புணர்ச்சிக்காரர் திருடர் பொருளாசைக்காரர் வெறியர் உதாசினர் கொள்ளைக்காரராகிய இவர்கள் கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10, தி.மொ.

கடவுளுடைய வார்த்தையைத் தள்ளிவிட்டதன் விளைவுகள்

17இவ்வுலக மதங்கள் இத்தகைய பிரிவுற்ற, பெருங் குழப்ப நிலையில் இருப்பதன் அடிப்படை காரணம், அவை, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிற அவருடைய சட்டங்களைப் புறக்கணிப்பதேயாகும். நிச்சயமாகவே, பாதிரிமார் பலர் பைபிளைக் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாக ஏற்க மறுக்கின்றனர். என்றாலும், தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு அறிவித்தான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) மேலும் பைபிளை “மனுஷ வசனமாகவல்ல தெய்வ வசனமாகவே ஏற்றுக்”கொள்ள வேண்டும், “அது மெய்யாகவே தெய்வ வசனந்தான்” என்றும் பவுல் நம்மை ஊக்கப்படுத்தினான். (1 தெசலோனிக்கேயர் 2:13, தி.மொ.) மலைக்கவைக்கும் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் நிச்சயமாகவே, ஒரு புத்தகம் எழுதப்பட செய்து, நூற்றாண்டுகளினூடே அதன் சத்தியம் மாறாமல் காத்துவரப்படும்படி பார்த்துக்கொள்ளக்கூடும்!

18என்றாலும், நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “நவீன விஞ்ஞான மற்றும் சரித்திர அறிவைக் கொண்டு தீர்ப்பு செய்தால் பைபிளிலுள்ள கூற்றுகள் பல வெறுமென உண்மையல்ல.”39ஒரு குரு, U.S. கத்தோலிக் பத்திரிகையில் எழுதி, பூமியின் படைப்பு ஆதியாகமத்தில் விவரித்திருக்கிற முறையில் நடந்திருக்க முடியாதென்று கூறினார். மேலும் மனிதன் படைக்கப்பட்டதைப் பற்றிய அதன் விவரப் பதிவைக் குறித்து: “மனிதகுலம் அவ்வாறு தொடங்கவில்லை,”40என்று கூறினார். ஓர் எப்பிஸ்கோபல் பிஷப் பின்வருமாறு கூறினார்: “பைபிளில் தவறுகள், நுட்பப் பிழைகள், மற்றும் முரண்பாடுகள் அடங்கியிருக்கின்றன. ஆகவே பெரும் பகுதி கிறிஸ்தவ சர்ச்சுகள் பைபிளைத் தவறாத் தன்மையுடையதாகக் கருதாததன் காரணம் விளங்கத்தக்கதே.”41 இங்கிலாந்தில், ஆங்கில பிஷப் ஒருவர், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை “எலும்புகளைக்கொண்டு செய்யும் மாயவித்தை மோசடி”42என்று குறிப்பிட்டார்.

19இவ்வாறு பாதிரிமார் பலர் பைபிளை மதிப்புக்குறைவாகப் பேசுகின்றனர் அல்லது தங்களைப் பின்பற்றுவோர் பைபிளை மதிக்கவும் அதில் அடங்கியுள்ள கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொள்ளவும் அவர்களுக்குக் கற்பிக்கிறதில்லை. கிறிஸ்தவமண்டலம் முழுவதிலும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திடுக்கிட வைக்கும் அறியாமை இருப்பதற்கு முக்கிய காரணம் இதுவே. மத உரையாசிரியர் M.J. மக்மனஸ், சர்ச்சுக்குப் போகிறவர்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: “1980-ம் ஆண்டுகளில், ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மதத்தை அடியரித்து வீழ்த்தும் அவ்வளவு பயமுறுத்தலாகவுள்ள பைபிள் அறிவின் வருந்தத்தக்க நிலையைப்போல் இருப்பவை வெகு சில போக்குகளேயாகும்.” சர்ச்சுக்குப் போகும் பெரும்பான்மையருக்கு “பைபிள், வாசிக்கப்படாத அன்னிய பத்திரம்போல் தொடர்ந்திருக்கிறது,”43என்றும் அவர் குறிப்பிட்டார்.

20இந்த எல்லாவற்றின் விளைவுகள் என்ன? பைபிள் போதகங்களை அவமதித்து அதே சமயத்தில் சமாதானத்தையும் நல்நடத்தைக்குரிய பண்புகளையும் தங்களைப் பின்பற்றுவோருக்குள் தாங்கள் விளைவிக்கக்கூடுமென்று இவ்வுலக மதங்கள் மெய்ப்பித்துக் காட்டிவிட்டனவா? இதற்கு எதிர்மாறாக பூமியெங்கும் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவமல்லாத மற்ற மதங்களைக் கடைப்பிடிக்கும் தேசங்கள் மேலும் மேலும் அதிகரிக்கும் அமைதிக் குலைவு, பிரிவினை, அரசியல் ஊழல், படிப்படியாய் மோசமாகிவரும் ஒழுக்கப் பண்புகள் ஆகியவற்றின் காட்சியாகிவிட்டிருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவமண்டலமோ தனிப்பட்டவண்ணமாய்க் குற்றச் செயல்கள், பாலின ஒழுக்கக்கேடு, போதைப்பொருள் துர்ப்பழக்கம், ஜாதிபேத சண்டை, போர் ஆகியவற்றிற்கு நீடித்தக் காலம் வெகுக் கடுமையாய் ஆளாகி வந்திருக்கிறது. கடவுளுடைய நம்பத்தக்க வார்த்தை பின்வருமாறு முன்னறிவித்தபடியே இது நடந்தேறிவிட்டது: “யெகோவாவின் சொல்லைத் தள்ளிப் போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?”—எரேமியா 8:9, தி.மொ.

21இந்த அத்தாட்சி மறுக்கமுடியாதது. இவ்வுலக மதங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர உதவிசெய்யும் உண்மையான சக்தியாக இல்லையென இது காட்டுகிறது. மேலும் தங்களைப் பின்பற்றுவோரை உண்மையான நம்பிக்கையாகிய—கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறியாமையிலிருக்க அவை விட்டிருக்கின்றன. அப்படியானால், இதெல்லாம் குறிப்பதென்ன?

உலக மதங்களின் முடிவு நெருங்குகிறது

22“என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 15:13) இவ்வுலக மதங்கள் விளைவித்துள்ள கெட்ட கனி, அவை கடவுள் நட்டவையல்லவென நிரூபிக்கிறது. இவ்வாறு, பொய்மத ஒழுங்குமுறைகள் எல்லாவற்றிற்கும் வரப்போகிற அழிவு பைபிளில் முன்னறிவித்திருக்கிறது.

23வேசியைப் போன்ற “மகா பாபிலோன்” என்னும் அடையாளக் குறிப்பின்கீழ் இந்த மத ஒழுங்குமுறைகளைப் பற்றிப் பேசி, கடவுள், இந்தப் பொய்மத உலகப் பேரரசைக் குறித்துப் பின்வருமாறு சொல்லுகிறார்: “அவள் பாவங்கள் வானமட்டும் குவிந்துநின்றன; அவள் அநியாயங்கள் கடவுளின் நினைவிலேயே இருந்தன [நினைவுகூர்ந்தார்]. . . . சாவு துக்கம் பஞ்சமாகிய வாதைகள் அவளுக்கு ஒரே நாளில் வரும்; அவள் அக்கினியினால் சுட்டெரிக்கப்படுவாள்; அவளை நியாயந்தீர்க்குங் கடவுளாகிய ஆண்டவர் [யெகோவா, NW] வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:2, 5-8, தி.மொ.

24இந்த அழிவு “ஒரே நாளில்” என்பதுபோல், திடுக்கிட வைப்பதாய்த் திடீரென வரவேண்டியதைக் கவனியுங்கள். பலருக்குத் திகைப்பும் கலக்கமும் உண்டாக, பொய்மதம் எவரோடு வெகு காலம் வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்ததோ அதே அரசியல் ராஜ்யங்களால் பாழாக்கப்பட்டு அழிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 18:10-17, 21; 17:12, 16.

25ஆகவே அந்தத் தெய்வீக அழைப்பு கொடுக்கப்படுகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்.” (வெளிப்படுத்துதல் 18:4) இத்தகைய நடவடிக்கை எடுப்பது, ஒருவன் பொய் மதத்தைக் கடவுள் காண்கிறதுபோல் காண்கிறான் என்று குறிக்கிறது. அதன் மோசமான கனிகள், அதன் பாசாங்குத்தனம், அதன் போலிக் கோட்பாடு ஆகியவற்றினிமித்தம் ஒருவன் அதை அறவே வெறுத்தொதுக்குவதைக் குறிக்கிறது. பொய் மதம் மனிதவர்க்கத்தின் முன்னிலையில் கடவுளைத் தவறுபடக் காட்டியுள்ள முறையினிமித்தமும் மக்கள் துன்பப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் அது காரணமாயிருந்த வகையினிமித்தமும் கடும் அருவருப்பு உணர்ச்சி அடைய வேண்டும். (ரோமர் 2:24; எரேமியா 23:21, 22) இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இத்தகைய மதங்களுக்குக் கொடுக்கும் எல்லா ஆதரவையும் விலக்கிக் கொள்வீர்கள், இவ்வாறு அவற்றிற்குக் கொடுத்திருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு உங்கள் முழு ஆதரவை மெய்ப்பித்துக் காட்டுவீர்கள்.

26என்றாலும், வெறுமென விலகிக் கொள்வது மாத்திரமே போதுமானதல்ல. முன்னறிவிக்கப்பட்ட அழிவு வருகையில் கடவுளுடைய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உங்களுக்குக் கொண்டுவரும் பாசாங்குத்தனமற்ற உண்மையான வணக்கத்தை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். இத்தகைய உண்மையான வணக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் ஏற்கெனவே ‘தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடித்து, இனிமேலும் யுத்தம் கற்காத’ ஆட்களாக இருக்க வேண்டும். (ஏசாயா 2:4, தி.மொ.) கடவுளுடைய வார்த்தையை நம்பி அதன்படி வாழ்ந்து, அதைத் தங்கள் வாழ்க்கையில் வழிநடத்தும் சக்தியாயிருக்கவிடும் ஆட்களாக இருக்க வேண்டும். (சங்கீதம் 119:105) தங்கள் உடன்தோழரான மனிதருக்கு அவர்கள் பாசாங்குத்தனமற்ற உண்மையான அன்பு காட்ட வேண்டும். (யோவான் 13:35; ரோமர் 13:8) இன்று இத்தகைய வணக்கம் ஏதாவது உண்டா? லட்சக்கணக்கானோர் யெகோவாவின் சாட்சிகளுக்குள் இதைக் கண்டிருக்கின்றனர். அவர்கள், பைபிளில் காணப்படுகிற கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொள்ளுகிறவர்களென உலகமெங்கும் அறியப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுதேயும் அவர்கள் அனுபவித்து மகிழும் சமாதானமும் பாதுகாப்பும் கடவுளுடைய வார்த்தையின் உண்மையையும் வல்லமையையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

27பொய் மதம் ஜனங்களைக் கொண்டுவந்து விட்டிருக்கும் இந்த ஆபத்தான சூழ்நிலைமையைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் ஆழ்ந்தக் கவலைகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தைக்கு முதலிடத்தைக் கொடுக்க உள்ளப்பூர்வமாய் முயற்சி செய்கிறார்கள். உங்கள் வட்டாரத்திலுள்ள அவர்கள் ராஜ்ய மன்றத்துக்கு நீங்கள் வந்து அவர்கள் கூட்டங்களைக் கவனிக்கவும், அவர்கள் எந்த அளவுக்குக் கடவுளுடைய ஆவியைப் பிரதிபலித்து அது கொண்டுவருகிற சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ்கிறார்களென்பதை நீங்கள்தாமே நேரில் சோதித்தறியவும் அழைக்கப்படுகிறீர்கள். மேலும், வரப்போகிற அழிவைத் தப்பிப்பிழைத்து, கடவுளுடைய பரலோக ராஜ்ய ஆட்சியின்கீழ் அவருடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் வாழப்போகிறவர்களில் கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளை அவர்கள் எவ்வாறு கற்றறிந்து பொருத்திப் பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

[கேள்விகள்]

1. இவ்வுலக மதங்களைக் குறித்து இங்கே என்ன முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

2. சரித்திரப் பூர்வ பதிவைப் பற்றி பல்வேறு செய்திமூலங்கள் நமக்கு என்ன தெரிவிக்கின்றன?

3. நம்முடைய 20-ம் நூற்றாண்டின் சரித்திரம் என்ன வெட்கக்கேடான மத பழக்கத்தை வெளிப்படுத்துகிறது?

4. (எ) கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் ஏன் மிக அதிகக் குற்றப் பொறுப்புள்ளவை? (பி) ஒரு பதிப்பாசிரியர் கட்டுரையில் போரைப் பற்றி என்ன குறிப்பு சொல்லியிருக்கிறது?

5. (எ) கடவுளை உண்மையில் சேவிக்கிறவர்களைப் பற்றி பைபிளில் என்ன தெளிவாகச் சொல்லியிருக்கிறது? (பி) தங்கள் சொந்த சர்ச்சைக் குறித்ததில் என்ன கேள்வியை சர்ச் உறுப்பினர் எதிர்ப்பட வேண்டும்?

6. இவ்வுலக மதங்கள் பிரிவுற்றும் போரிட்டுக்கொண்டும் இருக்கும் நிலைமை எதை நிரூபிக்கிறது?

7. (எ) இவ்வுலக மதங்களை விவரிக்க என்ன சொல் பைபிளில் பயன்படுத்தியிருக்கிறது? (பி) என்ன குற்றப்பழி அவற்றிற்கு விரோதமாகச் சாட்டப்பட்டிருக்கிறது?

8. “குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்களைப்” பற்றிய இயேசுவின் வார்த்தைகள் இன்று எப்படிப் பொருந்துகின்றன?

9, 10. (எ) ஏன் ஒழுக்க நடத்தைக்குரிய உண்மையான தராதரங்களைக் கடைப்பிடிப்பது சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் முக்கியம்? (பி) பைபிளில் கற்பித்துள்ளபடி இத்தகைய நல்நடத்தையை எது முன்னேற்றுவிக்கிறது?

11, 12. (எ) நல்நடத்தைக்குரிய தராதரங்களைக் கடைப்பிடிக்காத ஒருவன் கடவுளுடன் சமாதானத்தை அனுபவித்து மகிழும்படி எதிர்பார்க்க முடியுமா? (பி) சரியானபடி இந்தத் தராதரங்களை யார் அமைத்து வைக்கிறார்?

13-15. (எ) நல்நடத்தை சம்பந்தமாக ஒருவன் தன் சொந்த சர்ச் உறுப்பினரைக் குறித்து என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? (பி) கடவுளுடைய சட்டங்களைத் தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கும் சபை உறுப்பினனை என்ன செய்யவேண்டுமென பைபிளில் சொல்லியிருக்கிறது? (சி) சர்ச்சுகளில் இவ்வாறு செய்கிறார்களா?

16. (எ) பாலுறவு நடத்தையைப் பற்றி பாதிரிமார் பலர் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள்? (பி) அத்தகைய நடத்தையைப் பற்றி பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது?

17-19. (எ) அப்போஸ்தலனாகிய பவுல் பைபிளை எவ்வாறு கருதினான்? (பி) இன்று பாதிரிமார் பலர் பைபிளை எவ்வாறு கருதுகின்றனர்?

20, 21. பைபிளின் போதகங்களைத் தள்ளிவிட்டதன் விளைவுகள் யாவை?

22, 23. இவ்வுலக பொய் மதங்களின்மீது என்ன வருமென்று பைபிளில் சொல்லியிருக்கிறது?

24. இத்தகைய அழிவு எவ்வாறு வரும், எந்த மூலகாரணத்திலிருந்து வரும்?

25. (எ) வெளிப்படுத்துதல் 18:4-ல் கடவுளுடைய அங்கீகாரத்தை விரும்புகிற ஆட்கள் என்ன செய்யும்படி துரிதப்படுத்தப்படுகிறார்கள்? (பி) இத்தகைய நடவடிக்கை எடுக்க எது ஒருவரைத் தூண்ட வேண்டும்?

26. (எ) மேலும், அவன் கடவுளுடைய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ எதைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்? (பி) உண்மையான வணக்கத்தை நடைமுறையில் அனுசரிக்கிறவர்களைக் கண்டுபிடிக்கத் தேடுகையில் என்ன வகையான ஆட்களுக்காக அவன் நோக்க வேண்டும்?

27. யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் அவர்கள் கூட்டங்களுக்குப் போவதால் நீங்களே நேரில் எதைக் கவனித்தறிய முடியும்?

[பக்கம் 29-ன் பெட்டி]

பின்வரும் மாதிரி தலைவரிகளும் செய்திக் குறிப்புகளும் காட்டுகிறபடி, பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டு நடத்தையென பைபிள் கண்டனம் செய்வதை மேலுமதிக பாதிரிமார் நல்நடத்தையாக ஏற்கின்றனர்:

“கெட்டது நல்லதாகையில் பாதிரிமார் நமக்குத் தெரிவிப்பார்கள்.” “[தி சர்ச் ஆப் இங்லண்ட்] அதன் பழைய நடைபாணி ஆட்சியாதிக்கக் கொள்கை உருவை இப்பொழுது களைந்துபோடுகிறது. திருமணத்துக்கு முன்பாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோழர்களுடன் பாலுறவு கொள்வது, . . . இதுமுதற்கொண்டு ஒழுக்க நடத்தைப்படி ஏற்கத் தகுந்ததாய்க் கருதப்படும்.”—அல்பெர்ட்டா ரிப்போர்ட்.33

“திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வதன்பேரில் குருமாரின் மெளனம்.” “அமெரிக்காவின் குருமார் திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வதன்பேரில் பிரசங்கம் செய்வதில் பாவமுள்ள மெளனம் சாதிக்கின்றனர் . . . தங்கள் சேகரத்தார் சிலரை இழந்துவிடுவரென்று அவர்கள் பயப்படுகின்றனர். ஏசாயா இத்தகைய குருக்களை அறிந்திருந்தான். அவனுடைய புத்தகத்தின் 1-ம் அதிகாரத்தில், அவர்களைப் பற்றிக் கர்த்தர் பின்வருமாறு சொல்வதை எடுத்துக் குறிப்பிட்டான், ‘என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.’”—டெலிகிராஃப், நார்த் பிளாட்டி, நெப்ராஸ்கா.34

“விபசாரம் அனுதாபம் காட்டும் நிலையில்.” “ஆங்கில பாதிரி . . . ஏழாவது கற்பனையைக் குறித்ததில் சர்ச்சின் தளர்ந்த நோக்குநிலையை வெளிப்படுத்திப் பேசுகையில் திடுக்கிடச் செய்தார். . . . ‘நம்முடைய மனப்பான்மை கண்டனத் தீர்ப்பு செய்வதற்குப் பதிலாக ஆதரவு காட்டுவதாய் இருக்கவேண்டும்,’ என்று அவர் சொன்னார்.”—தி சண்டே டைம்ஸ், பெர்த், ஆஸ்திரேலியா.35

“யூனிட்டேரியன் சபையினர் ஒத்தப் பாலினத்தவர் மணஞ்செய்தலை ஆதரிக்கின்றனர்.”—தி நியூ யார்க் டைம்ஸ்.36

“கானடாவின் யுனைட்டட் சர்ச்சின் வேலைக்காரப்படை ஒத்தப் பாலின புணர்ச்சியில் ஈடுபடுகிறவர்களைக் கிறிஸ்தவ ஊழியராக அபிஷேகஞ் செய்வதை ஆதரித்தது.”—தி டொரான்டோ ஸ்டார்.37

“வேசித்தனத்தைச் சட்டப்பூர்வமாக்குங்கள்—இதுவே புனிதமான தீர்க்கும் முறை.” பிலடெல்பியா டேய்லி நியூஸ் தாளில் ஒரு கத்தோலிக்க பெருந்தகைக் குருவின் பதிப்பாசிரியர் குறிப்பு.38

[பக்கம் 25-ன் படங்கள்]

மத குருமார் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவளித்துத் தங்கள் கைகளை இரத்தம் நிறைந்தவை யாக்கியிருக்கின்றனர்