Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதர் கொண்டுவர முடியுமா?

நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதர் கொண்டுவர முடியுமா?

அதிகாரம் 2

நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதர் கொண்டுவர முடியுமா?

நம்பிக்கைக்கு ஏதாவது அர்த்தமிருக்க வேண்டுமானால், அது உண்மையில், சத்தியத்தில் ஆதாரங் கொண்டிருக்கவேண்டும். ஆதாரமற்ற நம்பிக்கைகள் உண்மையைக் காணாதபடி மக்கள் கண்களை மறைத்தே போடுகின்றன. ஆகையால், நாம் பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்குத் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் எவ்வளவு பெரியவை என்பதை நாம் மதித்துணருகிறோமா? நிலைமை எவ்வளவு அவசரமாகிவிட்டதென்பதை நாம் தெளிவாகக் காண்கிறோமா? மனிதப் பரிகாரங்கள் இந்த அளவில்லா மிகப் பெரிய வேலைக்கு நிகராயிருக்குமென்று காட்டுவதற்கு ஏதாவது அத்தாட்சி உண்டா?

2ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர் நிலையான சமாதானத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாடித் தேடியும் வெற்றிப் பெறாதிருக்கின்றனர். ஆனால் இப்பொழுது அணுசக்திப் போரின் பயமுறுத்தலின் காரணமாக மிக அதிக அவசரநிலை ஏற்பட்டிருக்கிறது. கானடாவின் அறிக்கை ஒன்று பின்வருமாறு எச்சரித்தது: “வெல்லக்கூடிய அணுசக்திப் போர் என்ற இத்தகைய காரியம் எதுவுமில்லை ஏனெனில் அதன் தீங்கான பின்விளைவு அவ்வளவு பயங்கரமாயிருக்குமாதலால் தப்பிப்பிழைத்திருப்பவர்கள் மரித்தோர்பேரில் பொறாமைப்படுவார்கள்.”3காரணத்தைக் காட்டி, வான்கணிப்பாளர் கார்ல் சாகன் பின்வருமாறு கூறினார்: “இப்பொழுது 50,000-த்துக்கு மேற்பட்ட அணுசக்தி படைக்கலங்கள் இருக்கின்றன, . . . பத்து லட்சம் ஹிரோஷிம்மாக்களை அடியோடு அழித்துப்போட போதுமானவை.” அவர் மேலும் தொடர்ந்து: “சந்தேகமில்லாமல், நம்முடைய பூகோள நாகரிகம் அழிக்கப்படும்,”4என்று சொன்னார்.

3அதோடுகூட, மற்றப் பயமுறுத்தல்களும் பூமியில் வாழ்க்கையை இடுக்கண்ணுக்குள்ளாக்குகின்றன. ஒன்று, உலகமெங்கும் நிலம், காற்று, தண்ணீர் ஆகியவற்றின் தூய்மைக்கேடு. மற்றொன்று, ஜனத்தொகை வெடியும் அதோடு சேர்ந்துவரும் பசி, நோய், அமைதிகுலைவு ஆகியவையும்.

4மனிதவர்க்கம் இப்பொழுது எதிர்ப்படுகிற பல்வேறு பயமுறுத்தல்களைக் குறித்து நார்வேயிலுள்ள சமாதான ஸ்தாபனம் ஒன்று பின்வருமாறு கூறினது: “இன்றைய சர்வதேச நிலைமை, பொருளாதாரமும் சமுதாயமும், அரசியலும் இராணுவமும், ஆவிக்குரியவையும் ஒழுக்கச் சம்பந்தமானவையும் ஆன மனித நடவடிக்கையின் ஏறக்குறைய எல்லாத் துறைகளையும் ஊடுருவிப் பரவியுள்ள ஆழமான நெருக்கடியால் முனைப்பாய்த் தோன்றி நிற்கிறது.” மேலும் தொடர்ந்து: “வன்முறை பெருகிக்கொண்டிருக்கிறது, அரசாட்சி கலையிலும் செயல்முறையிலும் வற்புறுத்தலைக் கருவியாகப் பயன்படுத்துவது விரிவாய்ப் பரவியிருக்கிறது. . . . சமாதானத்துக்கும் போருக்கும் இடையில் சமநிலை மேலும்மேலும் உறுதியற்றதாகிக் கொண்டிருக்கிறது,”5என்று கூறினது. இது எதற்கு வழிநடத்துகிறது? “ஒரு புதிய சர்வதேச அமைதிக்கேட்டுக்கு நாம் அபாயகரமாய் அருகில் இருக்கிறோம்,”6என்று ஐநா-வின் தலைமை செயலாளர் எச்சரித்தார்.

போரற்ற உலகம் மனித முயற்சிகளால் வருமா?

5மனிதர், போருக்கு முடிவு கொண்டுவர முடியுமென்று நம்புவதற்கு ஏதாவது காரணம் உண்டா? சரித்திரப்படி, இந்தப் பூமி போரிலிருந்து முற்றிலும் விடுதலையாகியிருந்த ஆண்டுகள் இங்குமங்கும் சிதறிய ஒருசில ஆண்டுகளேயாகும். இந்த 20-ம் நூற்றாண்டில் மட்டுமே, ஏறக்குறைய 10 கோடி மக்கள் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்! முன்னாளின் சர்வதேச சங்கமோ இந்நாளின் ஐக்கிய நாட்டுச் சங்கமோ இந்தப் படுகொலையை நிறுத்த முடியவில்லை.

6அணுசக்தி போர்த்தளவாடங்களால் அழிவு ஏற்படுவதைப் பற்றிய பயம் இதை மாற்ற முடியாதா? முன்னே 1945-ல் அணுக்குண்டுகள் இரண்டு ஜப்பானிய நகரங்களை முற்றிலும் அழித்தபோது அணுசக்தி போர்த்தளவாடங்களைப் பற்றிய போதிய பயம் எழுப்பப்பட்டதல்லவா? என்றாலும், அது முதற்கொண்டு மிகப் பேரளவில் மேலுமதிக சக்திவாய்ந்த அணுசக்தி போர்த்தளவாடங்களின் சேகரிப்புக் குவியல்கள் ஆயிரமடங்காகப் பெருகியிருக்கின்றன. 1945 முதற்கொண்டுதானே 100-க்கு மேற்பட்ட நாடுகளில் போர்களிலும் கலகங்களிலும் 3,50,00,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். சமீப ஆண்டு ஒன்றில் 45 நாடுகள் சண்டைகளில் உட்பட்டிருந்தன!7இல்லை, அணுசக்தி போர்த்தளவாடங்களின் பயம் போரை நிறுத்திவிடவில்லை.

7தேசங்கள், படைவலிமைக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கும் சமாதான உடன்படிக்கைகளுக்கும் கையொப்பமிட்டும் ஒருவேளை தொடர்ந்து அவ்வாறு செய்துகொண்டுமிருக்கலாம். நூற்றாண்டுகளினூடே சொல்லர்த்தமாய் ஆயிரக்கணக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. என்றாலும், போர் ஆர்வ உணர்ச்சி போதியளவு கடுமையானபோதெல்லாம் அந்த ஒப்பந்தங்கள் மதிப்பற்றக் காகிதத் துண்டுகளைப் போலாயின. ஐக்கிய நாட்டுச் சங்கமுங்கூட போரை நிறுத்தத் தவறிவிட்டது, ஏனெனில் இன்று ஏறக்குறைய எல்லா நாடுகளும் ஐநா-வின் பாகமாக இருக்கிறபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அவரவர் பிரியப்படி செல்கிறார்கள். கடந்த காலத்திலிருந்தவர்களைப் பார்க்கிலும் மேலாக எதிர்கால உலகத் தலைவர்கள் தங்கள் வார்த்தைத் தவறாதிருப்பார்களென்று நம்புவது உண்மைக்குப் பொருத்தமாயிருக்கிறதா?

8மறுபட்சத்தில், பைபிளில் சொல்லியிருப்பது சரித்திரம் கற்பிக்கும் பாடங்களுக்கு ஒத்திசைவில் இருக்கிறது. சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மனிதரின் முயற்சிகளில் நம்முடைய நம்பிக்கையை வைப்பதை அது சிபாரிசு செய்கிறதில்லை. அதற்கு முற்றிலும் மாறாக, மனிதரின் முயற்சிகள் நிலையான சமாதானத்தை ஒருபோதும் கொண்டுவராதென வெகு காலத்துக்கு முன்பே முன்னறிவித்தது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குச் சற்றுமுன் ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பி’ போர்களும் குழப்பங்களும் உலகமெங்கும் பெருகியிருக்குமென அது முன்னெச்சரிக்கை செய்தது. (லூக்கா 21:9, 10, 31; வெளிப்படுத்துதல் 6:1-4) 1914 முதற்கொண்டு நடந்துவரும் சம்பவங்கள் இந்தத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றின. ஆகவே பொய் நம்பிக்கைகளை எழுப்புவதைப் பார்க்கிலும், பைபிள் உண்மையுடன் பின்வருமாறு அறிவிக்கிறது: “மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லை . . . தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை.”—எரேமியா 10:23, தி.மொ.

ஜனத்தொகை வெடியை மனிதர் சமாளிக்க முடியுமா?

919-வது நூற்றாண்டில் பூமியின் ஜனத்தொகை நூறு கோடியை எட்டியது. இப்பொழுது அது ஏறக்குறைய ஐந்நூறு கோடியாக8இருக்கிறது, அதோடு ஒவ்வொரு புதிய நூறு கோடியும் மேலும் மேலும் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி அதிகம் மக்கள் கூடுதலாகி வருகின்றனர்! வறுமையும் பசியும் நோயும் ஏற்கெனவே நடப்பில் இருந்துவரும் பகுதிகளில் இந்தப் பெருக்கம் மேலும் துன்பத்தைக் கூட்டுகிறது. இந்த ஜனத்தொகை பெருக்கம் நல்லக் காரணத்துடன் ஜனத்தொகை வெடிகுண்டு என்று அழைக்கப்படுகிறது. தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “அணுசக்தி அழித்துப் பாழ்ப்படுத்துவதைப் போலவே, சமாளிக்க முடியாத ஜனத்தொகை நெருக்கடிகளும் வறுமையும் பூமியின் பெரும் பகுதிகளை வனாந்தரமாக மாற்றிவிடக்கூடும்.”9

10உலகப் பசியின் பரப்பளவைக் குறித்து டைம் பத்திரிகையில் பின்வருமாறு சொல்லப்பட்டது: “இன்று இந்தப் பசி பிரச்னை கடந்த காலத்தில் இருந்ததிலிருந்து மிகப் பேரளவில் வேறுபடுகிறது. . . . இப்பொழுது உலகத்தின் மிகப் பல பகுதிகளில் உணவு மிகக் குறைவான அளவில் இருப்பதால், வருடாவருடம், பூகோள ஜனத்தொகையின் முழு 25% பசியுடன் அல்லது உணவுபோதாக் குறைவுடன் இருக்கின்றனர்.”10சத்துக்குறைவு உணவு மற்றும் நோயின் பாதிப்புகளின் காரணமாக ஒவ்வொரு ஆண்டிலும் 1 கோடி 10 லட்சக் குழந்தைகள் தங்கள் முதல் பிறந்த நாளுக்கு முன்னரே சாகின்றனர் என்று ஒரு செய்தி மூலம் மதிப்பிடுகிறது.

11அதே அறிவிப்பு கூறுவதாவது: “குறைந்தது ஐந்தில் ஒருவர் முழுமையான வறுமையில் அகப்பட்டிருக்கின்றனர், போக்கற்ற நிலை அவ்வளவு முழுமையாக இருப்பதனால் அது அமைதியான இன அழிவாக இருக்கிறது.”11இது, “பத்தாண்டுக்குள், ஒரு பிள்ளையும் பசியுடன் படுக்கைக்குச் செல்லாது, ஒரு குடும்பமும் அடுத்தநாள் சாப்பாட்டுக்காக பயப்படாது, ஒரு மனிதனின் எதிர்காலமும் சத்துக்குறைவு உணவால் வளர்ச்சி தடைப்படாது,”12என்று பத்தாண்டுக்கு முன் ரோமில் நடந்த உலக உணவு கலந்தாய்வுக் கூட்டம் உறுதியெடுத்ததற்குப் பின் இருக்கும் நிலையென தி டொரான்டோ ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிட்டது. இத்தகைய வாக்குகள் எவ்வளவு வெறுமையானவையாக நிரூபித்தன! உண்மை நிலையானது இங்கிலாந்தின் கார்டியன் செய்தித்தாளில் கூறப்பட்டபடி: “இந்த உலகம் மனித அழிவு எல்லையை எட்டிய நிலையில் இருக்கிறது. . . . முழு கண்டங்கள் தங்கள் எதிர்கால நம்பிக்கைகள் மறைந்துபோவதைக் கண்டிருக்கின்றன.”13

12பேரளவில் இந்தப் பிரச்னைக்குக் காரணம் பூமியின்பேரில் சார்ந்தில்லை, அதிபதிகளின்பேரிலும், ஜனங்களின்பேரிலும் அவர்களுடைய மனநிலைகளின்பேரிலும் சார்ந்திருக்கிறது. உதாரணமாக, லட்சக்கணக்கான ஆட்கள் பட்டினியாயிருக்கையில் தேசங்கள் இப்பொழுது ஒவ்வொரு ஆண்டிலும் ஏறக்குறைய லட்சங்கோடி டாலர்கள் போர்த்தளவாடங்களுக்குச் செலவிடுகின்றன. மிகப் பேரளவாய் இராணுவத்தைக் கட்டியெழுப்பும் இத்திட்டங்களை விட்டு விலகினாலும், இந்த உலகத்தின் பிரிவுபட்ட பொருளாதார ஒழுங்குமுறைகள் இந்தப் பிரச்னையை உண்மையில் தீர்க்கக்கூடிய எதற்கும் எதிராக இயங்கும். உணவு கிடைக்கக்கூடிய சமயங்களிலும் பெரும் லாபம் சம்பாதிப்பதற்கான ஆசை, தேவையிலிருப்போருக்கு அதைப் பகிர்ந்தளிப்பதை அடிக்கடி தடைசெய்கிறது. மிகுதியான விளைச்சல் விலைமதிப்புகளை வெகுவாய்க் குறைக்குமென்ற காரணத்தால் சில இடங்களில், அரசாங்கங்கள் சில பயிர்களைப் பயிரிடாதிருக்கும்படி விவசாயிகளுக்குப் பணம் கொடுத்திருக்கின்றன. மிகைப்பட்டிருந்ததனால் உணவு ஏராளமான அளவில் அழித்தும் போடப்பட்டது.

13இவ்வாறு, நவீன சமுதாயம், அதன் எல்லா விஞ்ஞான முன்னேற்றங்களைக் கொண்டிருந்தும், பைபிள் முன்னறிவித்த அதே நிலைமைகளைத் தவிர்க்க முடியாமற்போயிற்று. ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்போது’ கடுமையான “உணவு குறைபாடுகள்” உண்டாவதைப் பற்றி பைபிள் திருத்தமாய் முன்னறிவித்தது.—மத்தேயு 24:3, 7; வெளிப்படுத்துதல் 6:5-8.

மனிதர் இந்தப் பூமியுடன் சமாதானம் செய்துகொள்ளக் கூடுமா?

14பல பத்தாண்டுகளாக மனிதர் தாங்கள் வாழும் இந்தப் பூமியுடன்தானே போர் செய்துகொண்டிருக்கின்றனர். நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் நீரிலும் காற்றிலும் நிலத்திலும் போய்ச் சேரும்படி செய்கின்றனர். டொரான்டோ ஸ்டார் செய்தித் தாளின் தலைப்பு ஒன்று: “தூய்மைக்கேடு பூமியை அபாயத்தில் வைக்கிறது,” என்று அறிவித்தது. அந்தக் கட்டுரை சொன்னதாவது: “கிரகமாகிய பூமி கொடிய தாக்குதலின்கீழ் இருக்கிறது. வலுச்சண்டை செய்கிறவன் மனிதனே.” மேலும், “அவனுடைய முன்னேற்றத்தின் நச்சுப் பொருட்கள்” இப்பொழுது அவன் உயிர்வாழ்வதையே பயமுறுத்துகிறதென அது குறிப்பிட்டு, “சுற்றுப்புறம் கெட்டு தரம் குறைக்கப்படுவது எல்லா வகையிலும் அணுசக்திப் போரின் பயமுறுத்தலுக்கு ஒப்பாக வினைமையுள்ளதென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்,”14என்றும் கூறியது.

15உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களைப் பற்றி டிஸ்கவர் பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது: “அபாயமான இரசாயனங்களும் உலோகங்களும் பூமிக்குள் ஊறிச் செல்வது ஆழத்தில் புதைந்திருக்கும் தேசத்தின் தண்ணீர் சேமிப்புகளைக் கெடுக்கும் பயத்தை உண்டாக்குகிறது. அவற்றில் கால் பாகத்தைப் பாதுகாப்பதற்கும் ஏற்கெனவே மிகப் பிந்திவிட்டிருக்கலாமென நீரின் பண்பியல்களைப் பற்றிய ஆய்வாளர் சிலர் பயப்படுகின்றனர்.”15இங்கிலாந்தில் இரசாயன தூய்மைக்கேடு “இங்கிலாந்தின் குடிநீரின் மிகப் பெரும்பாகத்தை”16அசுத்தப்படுத்திவிட்டதென தி அப்ஸர்வர் செய்தித்தாள் கூறியது. மேலும் நியூ சயின்டிஸ்ட் பத்திரிகையில் பின்வருமாறு கூறப்பட்டது: “தூய்மையற்றத் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய்கள் ஒவ்வொரு நாளும் 50,000 ஆட்களைக் கொல்லுகின்றனவென்று உலக சுகாதார அமைப்பு சொல்லுகிறது.”17

16ஐக்கிய மாகாணங்களில், ஆகாயத்தில் நச்சுத்தன்மைவாய்ந்த பொருட்கள், உயர்ந்த அளவுநிலைகளில் இருப்பதை அமெரிக்க சட்ட மாமன்றத்து விசாரணை வெளிப்படுத்திற்று. தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு அறிவித்தது: “புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளும் மற்ற வெகு அபாயமான பொருட்களும் ஆயிரக்கணக்கான டன்கள் அளவாக நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்பட்டு ஆகாயமண்டலத்துக்குள் செல்ல விடப்படுகின்றன.”18இதோடுகூட மண்ணிலும் ஆபத்தான இரசாயனங்கள் போடப்படுகின்றன. உதாரணமாக, பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவை, இவற்றில் வளருபவற்றை மிருகங்கள் உண்டு அவற்றிலிருந்து மனிதர் உணவுக்குள் செல்கின்றன.

17தொழில் துறை விஞ்ஞானம் மீட்புதவிக்கு வரக்கூடுமா? பிரச்னைகளில் பலவற்றை அது உண்டாக்கியிருப்பதால், அதை நம்பக்கூடுமா? என்வைரன்மென்டல் எத்திக்ஸ் என்ற ஆங்கில புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “தொழில்துறை விஞ்ஞானம் மட்டுப்பட்ட பயனுடைய ஊழியனே, மேலும் வெகுவாய் நம்பத்தகாதது. ஒரு பிரச்னையை அது உண்மையில் தீர்க்கையில், இரண்டு புதிய பிரச்னைகளை அது அடிக்கடி உண்டுபண்ணிவிடுகிறது—மேலும் அவற்றின் பக்க விளைவுகளை முன்னறிவது பொதுவாய்க் கடினமாயிருக்கிறது.”19

18அன்றியும், பூமியின் வளங்களைப் பயன்படுத்துவதில் மனிதன் காட்டும் ஞானமற்றத் தன்மையை பைபிள் முன்னறிவித்தது. வெளிப்படுத்துதல் 11:18-ல் உள்ள தீர்க்கதரிசனத்தில் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கு” கடவுள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்தக் காலத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. மனிதர் ஒப்புக்கொள்கிறபடி இந்தப் பூமியின் சிக்கலான சூழ்நிலையியல் அவர்களுக்கு முழுமையாய் விளங்குகிறதில்லை. ஆனால் கடவுள் அதைப் படைத்ததனால் அதை நன்றாய் அறிந்திருக்கிறார். பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த மூலக் காரணரை நோக்குவது ஞானமல்லவா?

குற்றச் செயல்களை நீக்குவதால் பாதுகாப்பு

19தூய்மைக்கேடு, மனிதர் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதக் காரியங்களுக்கே அபாயத்தைக் கொண்டுவருகிறது. ஆனால் குற்றச் செயல்களின் பெருக்கமே மேலுமதிக எண்ணிக்கையான மக்கள் பயத்திலிருக்கச் செய்கிறது. பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய பட்டணங்களிலும் கிராமப் பகுதிகளிலுங்கூட குற்றச் செயல் மேலும் மேலும் மிகுதியான ஆட்களின் தனிப்பட்ட பாதுகாப்பைப் பறித்துப் போடுகிறது. உடைமைகள் மட்டுமல்ல, ஆட்களின் உடலும் உயிருங்கூட அடிக்கடி ஆபத்திலிருக்கின்றன.

20ஒருவேளை புதிய சட்டங்களைக் கொண்டு இந்த ஆபத்துகளிலிருந்து மனிதர் உண்மையான பாதுகாப்பைக் கொண்டுவரக்கூடுமா? ஏற்கெனவே ஆயிரக்கணக்கான சட்டங்கள் உலகத்தின் சட்டப் புத்தகங்களில் இருக்கின்றன. என்றாலும், இவை குற்றச் செயலை நிறுத்திப் போடவில்லை. மேலும், சட்டத்தை வற்புறுத்திச் செயல்படுத்தும் துறையிலுள்ள அதிகாரிகளுக்குள்தானே ஆழமாய் வேரூன்றிய இலஞ்ச ஊழல் தோன்றி வளருகிறது. பொறுப்புள்ள உயர் பதவியிலுள்ளவர்களுக்குள் நேர்மையில்லாமை, நேர்மையுடன் சட்டத்தை வற்புறுத்திச் செயல்படுத்த எடுக்கும் முயற்சிகளைப் பயனற்றுப்போகச் செய்யும்.

21துப்பறிந்து குற்றத்தைத் தடைசெய்யும் புதிய முறைகளில் இதற்குப் பதில் அடங்கியிருக்கிறதா? முன்கொண்டுவரும் ஒவ்வொரு புதிய முறைக்கும், அதை வெல்லும் புதிய வழிவகைகளைக் குற்றஞ் செய்கிறவர்கள் திட்டமிடுகிறார்கள். அப்படியானால் செல்வச் செழிப்பை மிகுதியாக்குவது இந்தப் பிரச்னையைத் தீர்க்குமா? குறைந்த வருவாயுள்ள தொகுதிகளைச் சேர்ந்தவர்களே சாதாரணமாய்க் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனரென்ற முடிவுக்கு வருவது தவறாகும். மதிப்பான பதவியிலுள்ளவர்களுக்குள்ளும் குற்றச் செயல்கள் உச்சநிலைக்கு ஏறிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் இத்தகைய குற்றச் செயல்களின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவில் 8,000 கோடி டாலர்கள் இழக்கப்படுகின்றன. தோல்வியடையும் எல்லா வகைத் தொழில்களிலும் 30 சதவீதம் இதன் காரணமாகத் தோல்வியடைகின்றன. வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறவர்கள் செய்யும் களவு ஓர் ஆண்டில் 1,500 தொழில்களைத் தோல்வியுறச் செய்கிறதென்று தென் ஆப்பிரிக்காவின் அறிக்கை கூறுகிறது.20

22குற்றச் செயல்களின் பெருக்கம் ஒருசில நாடுகளுக்கு மாத்திரமே மட்டுப்பட்டில்லை. எல்லா இடங்களிலும் ஏற்படுகிறது. உலகைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் பத்திரிகைத் தலைப்புகள் சிலவற்றைக் கவனியுங்கள். பிரேஸில்: “குற்றச் செயல்களின் வீதம் வானளாவ உயருகிறது.” கானடா: “பெண்கள் குற்றச் செயல் வீதம் வானளாவ உயருகிறது.” இங்கிலாந்து: “பிள்ளைகளின் குற்றச் செயல்கள் விடாது எழும்பிக் கொண்டிருக்கின்றன.” இந்தியா: கூட்டிணைவான குற்றச் செயல்கள் ஒரு தொழில்துறை வளர்ச்சியாகிவிட்டது.” சோவியத் யூனியன்: “குற்றச் செயல்களின் பெருக்கத்தால் சோவியத் அதிர்ச்சியடைகிறது.”21மக்ளீன் பத்திரிகை பின்வருமாறு கூறியது: “டெட்ராய்ட்டில் வன்முறைக் குற்றச் செயல் அவ்வளவு சாதாரணமாயிருப்பதால் கொலைகளுங்கூட செய்தித்தாள்களின் பின் பக்கங்களில் ஒரு சுருக்கமானக் குறிப்புக்குப் போதியவையாகச் சில சமயங்களில் மதிப்பிடப்படுகின்றன.”22இவ்வாறு, குற்றச்செயல்கள் எழும்புவது சர்வதேச பிரச்னை, மனித முயற்சிகள் மாத்திரமே அதைத் தீர்க்க முடியாது. மனிதரால் தீர்க்கக் கூடியதென்றால், இந்த எல்லாக் காலத்துக்கும் முயற்சிகளுக்கும் பின் குற்றச் செயல்கள் இனிமேலும் பிரச்னையாயிருக்க வேண்டியதில்லை.

23நடந்துகொண்டிருப்பது வெகு காலத்துக்கு முன் பைபிளில் பின்வருமாறு முன்னறிவித்தப்படியே இருக்கிறது: “கடைசி நாட்களில் கொடிய [கையாளுவதற்குக் கடினமான, NW] காலங்கள் வரும், . . . எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . . . தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், . . . இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-4) கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியைச் ‘சாந்தக் குணமுள்ளவர்கள்’ மாத்திரமே குடியிருக்கும் இடமாக்குவதற்கு முன்பு, “அக்கிரமம் மிகுதியாவது” அந்தக் காலப்பகுதியைத் தனிப்பட வேறுபடுத்திக் காட்டுமெனவும் இயேசு முன்னறிவித்தார். “அக்கிரமம் மிகுதியாவது” நம்முடைய நாளில் வாழ்க்கையின் உண்மை நிகழ்ச்சியாயிருக்கிறது.—மத்தேயு 24:12; 5:5; சங்கீதம் 37:29.

எல்லாவற்றையும்விட மிகப் பெரிய பிரச்னைகள்

24போர், வறுமை, பசி, தூய்மைக்கேடு, குற்றச்செயல் ஆகிய இப்பிரச்னைகளை மனிதர் தீர்க்கக் கூடுமென்று வைத்துக்கொள்வோம். இது உங்களுக்கு முழு சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருமா? இல்லை, ஒன்று இன்னும் குறைவாயிருக்கும். நோயும் மரணமும் வெல்லப்படாதச் சத்துருக்களாக இன்னும் தொடர்ந்திருக்கும். நீங்கள் நேசிக்கும் ஒருவர் நோயுற்று மரிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், அல்லது உங்கள் சொந்த உடல் உயிருக்கு ஆபத்தான நோயால் தாக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கையில், நிச்சயமாகவே, மற்றப் பிரச்னைகளிலிருந்து விடுதலையாயிருப்பதில் என்ன பயன்?

25மருத்துவ முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறபோதிலும், இது நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையைக் கொண்டுவந்திருக்கிறதா? ஒரு மருத்துவ அதிகாரி பின்வருமாறு பதில் சொல்லுகிறார்: “தொற்று நோய்கள் சிறிதும் அடக்கப்படவில்லை. அவை உலகத்தில் மரணத்துக்கு முதன்மையான காரணமாக இன்னுமிருக்கின்றன, இங்கே [ஐக்கிய மாகாணங்களில்], நோய்க்கு முதன்மையான காரணமாயிருக்கின்றன.”23ஆப்பிரிக்காவில், இந்த நோய் அவ்வளவு மிகுதியாய்ப் பரவியிருப்பதால் “பிறக்கும் 1,000 பிள்ளைகளில் 500 பேர் 5 வயதாவதற்கு முன்பே மரித்துவிடுகின்றனர்,”24 என்று ஓர் அறிக்கை சொல்லுகிறது. உலக முழுவதிலும் கோடிக்கணக்கான ஆட்கள் மலேரியா, தூக்கநோய் (ஆப்பிரிக்க நச்சுநோய்), வாந்திபேதி, குஷ்டரோகம், மேலும் மற்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். முன்னேற்றமடைந்த நாடுகள் சிலவற்றில் ஏற்படும் சாவுகளின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதியளவு இருதய நோய்களின் காரணமாக உண்டாகின்றன, மேலும் ஐந்தில் ஒருவர் புற்று நோயால் சாகின்றனர். மேலும் தி லான்சட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது: “உலக முழுவதிலும் ஆண்டுதோறும் ஏறக்குறைய 25 கோடிபேர் மேகவேட்டை நோயால் புதிதாய்ப் பாதிக்கப்படுகிறார்கள், 5 கோடி கிரந்தி நோயால் புதிதாய்ப் பாதிக்கப்படுகிறார்கள். பாலுறவினால் கடத்தக்கூடிய மற்ற நிலைமைகள் இன்னும் மிகச் சாதாரணமாகவும் இருக்கலாம்.”25

26புற்றுநோய்க்கும், இருதய நோய்க்கும், சிறுநீரக நோய்க்கும் நிவாரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்ற நோய்கள் மேலும் பேரளவாய்க் கொல்லுபவையாகிவிடுமென ஒரு விஞ்ஞானி கூறினார். அவர் குறிப்பிட்டதாவது: “சமீப எதிர்காலத்தில் உயிர்நீடிப்பு செய்வதை நாம் வெகுவாய் அதிகரிப்பதற்கு அல்லது முதுமைப்படுதலைத் தள்ளிவைப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை.”26மேலும் சோவியத் யூனியனிலுள்ள மருத்துவர்கள் சொல்வதாவது: “மருத்துவத்தின் எல்லா வெற்றிகளும் இருந்துங்கூட, பதிவு செய்யப்பட்ட சரித்திரத்துக்குள் மனித உயிர் நீடிப்பு கால அளவு மாறாமல் தொடர்ந்திருக்கிறது.”27

27பைபிளில் யோபு 14:1, 2-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இன்னும் எவ்வளவு உண்மையாய்த் தொடர்ந்திருக்கின்றன: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.” நாம் பின்னால் பார்க்கப்போகிறபடி, பைபிள் இதற்குக் காரணத்தையும் தெரிவிக்கிறது, மனிதனின் எல்லாப் பிரச்னைகளுக்குமுரிய காரணத்தையும் அடையாளங்காட்டுகிறது.

நீங்கள் எதில் நம்பிக்கை வைப்பீர்கள்?

28முழு நேர்மையுடன் கவனித்தால், மனிதவர்க்கம் எதிர்ப்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மனிதரில் நம்பிக்கை வைப்பது உண்மையில் நடைமுறை ஞானமாக இருக்கிறதா? அல்லது பைபிளில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிற பரிகாரத்தில், அதாவது, நீதியுள்ள பரலோக அரசாங்கத்தைக் கருவியாகக் கொண்டு கடவுள்தாமே எடுக்கும் நடவடிக்கையில் நம்பிக்கை வைப்பது அதிக நடைமுறையானதாக இருக்கிறதா?

29வெகு காலத்துக்கு முன் தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் பின்வரும் வார்த்தைகளை எழுதினான்: “பிரபுக்களிலும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனிலும் நம்பிக்கை வையாதேயுங்கள். அவன் ஆவி பிரிந்துபோம், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழியும். யாக்கோபின் கடவுளைத் தன் துணையாகக் கொண்டிருந்து தன் கடவுளாகிய யெகோவாவை நம்பிக் காத்திருக்கிறவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW]. அவரே வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கினவர்.”—சங்கீதம் 146:3-6, தி.மொ.

30மனிதர் எவ்வளவாய் உள்ளத்தில் உண்மையுடனிருந்தாலும் அல்லது உலகத் தலைவர்கள் எவ்வளவு செல்வாக்கு அல்லது வல்லமை வாய்ந்திருந்தாலும், அவர்களெல்லாரும் சாகும் சிருஷ்டிகளே என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாதிருக்கையில், மற்றவர்களை எப்படிக் காப்பாற்ற முடியும்? அவர்களால் முடியாது. கடவுள் மாத்திரமே, தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தின் மூலமாய் அதைச் செய்ய முடியும்.

[கேள்விகள்]

1. என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

2, 3. (எ) சமாதானத்தையும் பாதுகாப்பையும் நாடித் தேடுவது இன்று ஏன் மேலுமதிக அவசரம்? (பி) வேறு என்ன காரியங்கள் பூமியின் வாழ்க்கைக்குப் பயமுறுத்தல்களாக இருக்கின்றன?

4. இன்று மனிதவர்க்கத்தின் சூழ்நிலை எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது?

5. போருக்கு முடிவு கொண்டுவர மனிதனுக்குத் திறமை உண்டா என்பதைக் குறித்து சரித்திரம் என்ன காட்டுகிறது?

6. அணுசக்திப் போரைப் பற்றிய பயம் சமாதானத்துக்கு நல்ல ஆதாரமாகுமா?

7. படைவலிமைக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கு அல்லது சமாதான உடன்படிக்கைகளுக்குக் கையொப்பமிடுவது நிலையான சமாதானத்தை உறுதியளிக்கிறதா?

8. நிலையான சமாதானத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதில் மனிதன் தோல்வியடைவதைப் பற்றிய உண்மை பைபிளில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது?

9-11. (எ) பூமியின் ஜனத்தொகை எவ்வளவு விரைவாய்ப் பெருகுகிறது? (பி) என்ன நிலைமை பெரும் எண்ணிக்கையான ஜனங்களைப் பாதிக்கிறது?

12. இராணுவத்தில் செலவிடும் தொகையைக் குறைப்பது இந்தப் பிரச்னையை உண்மையில் தீர்க்குமா?

13. உலகத்தின் முடிவில் இருக்கும் நிலைமைகளைப் பற்றி பைபிளில் முன்னறிவிக்கப்பட்டது திருத்தமாயிருந்ததா?

14-16. தூய்மைக்கேட்டின் பிரச்னை எந்த அளவில் வினைமையுள்ளதாயிருக்கிறது?

17. தொழில் துறை விஞ்ஞானம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கக்கூடுமா?

18. தூய்மைக் கேட்டை எதிர்த்து சமாளிப்பதில் எந்த இன்றியமையாத அறிவு மனிதருக்கு இல்லை, ஆனால் யார் அந்த அறிவை உடையவர்?

19. இன்று பலர் எதைப் பற்றிய பயத்திலிருக்கின்றனர், ஏன்?

20, 21. (எ) புதிய சட்டங்களை இயற்றுவது ஏன் குற்றச் செயல்களை ஒழித்துவிடாது? (பி) செழுமை அதிகரிப்பு அல்லது குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்குரிய புதிய முறைகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்குமா?

22. தனியே மனித முயற்சி குற்றச் செயல் பிரச்னையைத் தீர்க்க முடியாதென எந்த அத்தாட்சி காட்டுகிறது?

23. நம்முடைய நாளின் நிலைமைகளைப் பற்றி பைபிள் முன்னறிவித்தது நிறைவேற்றமடைந்திருக்கிறதா?

24. இதுவரை ஆலோசித்த எல்லாப் பிரச்னைகளையும் மனிதர் தீர்க்கக் கூடுமென்று வைத்துக்கொண்டாலும், எந்த மிகப் பெரிய சத்துருக்கள் தொடர்ந்திருக்கும்?

25, 26. நோயை அடக்கி வெல்லுவதற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்ன எதிர்கால வாய்ப்புகளைக் காண்கின்றனர்?

27. (எ) மனித வாழ்க்கை நீடிப்பின்பேரில் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள எந்தக் குறிப்பு இன்றும் உண்மையாயிருக்கிறது? (பி) மனிதனுடைய வாழ்நாள் அவ்வளவு குறுகியதாயும் பிரச்னைகள் நிரம்பியதாயும் இருப்பதற்குக் காரணத்தை நாம் எங்கே கற்றறியலாம்?

28-30. மனிதவர்க்கம் எதிர்ப்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, மனிதனுடையதைப் பார்க்கிலும் கடவுளுடைய பரிகாரத்தில் நம்பிக்கை வைப்பதே ஏன் அதிக நடைமுறையானது?

[பக்கம் 13-ன் படம்]

மனித சரித்திரம் முழுவதிலும் மனிதர்—போர், பெருகிக்கொண்டிருக்கும் குற்றச் செயல்கள், தூய்மைக்கேடு, வறுமை, இன்னும் மற்றப் பல—இடுக்கண்கள் ஒன்றையடுத்து மற்றொன்றுக்குக் குருட்டுத்தனமாய்த் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். பைபிள் உண்மையாய்க் கூறுகிறபிரகாரம்: “தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை.”

[பக்கம் 21-ன் படம்]

“இரட்சிக்கத் திராணியில்லாத மனுப்புத்திரனில் நம்பிக்கை வையாதேயுங்கள்”