Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசாகிய உயிரை மதித்தல்

பரிசாகிய உயிரை மதித்தல்

அதிகாரம் 14

பரிசாகிய உயிரை மதித்தல்

பரிசாகிய உயிருக்கு ஆழ்ந்த மதிப்பு கொடுப்பது உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஓர் ஆதாரமாகும். ஆனால் விசனகரமாய் இன்று உயிருக்கு இத்தகைய மதிப்பு இல்லை. உயிரை எடுத்துப் போடுவதில் மனிதர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள், ஆனால் ஒரு தடவை உயிர் போய்விட்டபின் அவர்களில் எவரும் அதைத் திரும்பக் கொண்டுவர முடியாது.

2உயிரை மதிப்பது உயிரைக் கொடுத்தவராகிய யெகோவா தேவனுக்குச் செலுத்த வேண்டிய பரிசுத்தக் கடமையாகும். அவரைக் குறித்து சங்கீதக்காரன்: “உம்மிடத்திலேயே ஜீவ ஊற்று இருக்கிறது,” என்று சொன்னான். (சங்கீதம் 36:9) நம்முடைய உயிருக்காக நாம் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம், அவர் மனிதனைச் சிருஷ்டித்ததற்காக மாத்திரமல்ல, ஆனால் இதுவரையில் மனிதவர்க்கம் தொடர்ந்திருக்க அவர் அனுமதித்து உயிரை ஆதரித்து வருவதற்கான வழிவகைகளை அருளிச் செய்திருப்பதற்காகவுங்கூட. (அப்போஸ்தலர் 14:16, 17) இதற்கும் மேலாக, தம்முடைய குமாரன் மனித குடும்பத்தைத் தன்னுடைய உயிர்-இரத்தத்தைக் கொண்டு வாங்குவதன் மூலம் அதன் திரும்ப-விலைக்கு வாங்குபவர் அல்லது மீட்பராகும்படி அவர் ஏற்பாடு செய்தார். (ரோமர் 5:6-8; எபேசியர் 1:7) இதன்பலனாக, அதை ஏற்க மனமுள்ளோர் யாவருக்கும் தம்முடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் என்றென்றும் வாழ்வதற்கு வாய்ப்பை அவர் இப்பொழுது நீட்டுகிறார். இவற்றையெல்லாம் கருதுகையில், கடவுள் கொடுத்த பரிசாகிய உயிருக்கு நம்முடைய ஆழ்ந்த மதிப்பையும் நன்றியுணர்வையும் நாம் எவ்வாறு காட்டலாம்?

3ஒரு முறையானது, நாம் உண்மையில் உயிருக்கு மதிப்புக் காட்டுவதைப் பற்றிப் பொறுப்புணர்ச்சியுடன் இருந்தால், வெறுமென பொழுதுபோக்குக்காக வன்முறைச் செயல்களை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரல்களால் தங்கள் மனதை உண்பித்து வருவோரோடு நாம் சேர்ந்துகொள்ள மாட்டோம். “பொழுதுபோக்காக” வன்முறைச் செயல்களை ஏற்பது, மனிதர் துன்பமனுபவிப்பதையும் உயிரிழப்பதையும் குறித்ததில் இருதயம் கடினப்படவும் உணர்ச்சியற்றுப் போகவும் பலரைச் செய்வித்திருக்கிறது. ஆனால், கடவுளுடைய நற்குணத்துக்காகவும் அவர் கொடுக்கும் நம்பிக்கைக்காகவும் நாம் நன்றியுடன் இருந்தால் இத்தகைய ஆவியைத் தடுத்து நிறுத்துவோம். கடவுளிடமிருந்து பெற்ற பரிசான உயிருக்கு நன்றியுள்ள மதித்துணர்வை நம்மில் வளர்த்து வருவோம். இது, நம்முடைய சொந்த உயிரை நாம் பயன்படுத்தும் முறையையும், மற்றவர்களை நாம் நடத்தும் முறையையும், இன்னும் பிறந்திராதவர்களை நாம் கருதும் முறையையும் பாதிக்கும்.

இன்னும் பிறந்திராதவரின் உயிரை மதித்தல்

4உயிரைக் கடத்துவதற்குள்ள வல்லமை கடவுள் கொடுத்த மகத்தான சிலாக்கியம். பிறப்பின்போதல்ல, கருதரிக்கும் அந்தச் சமயத்திலேயே இந்த உயிர் கடத்தப்படுகிறது. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிற பிரகாரம், அப்பொழுதே “அந்தத் தனி நபரின் வாழ்க்கை சரித்திரம், தனிவேறாகவும் உயிர் நூல் பிரகாரமாயுள்ள ஒரு பொருளாகவும் தொடங்குகிறது.” மேலும் அது: “ஆண்பாலின் சக்திவாய்ந்த கருவுயிர் நீர்மத்தின் மூலப் பொருள்கள் கருவளமுள்ள பெண்பாலின் கருவுறா முட்டையுடன் இணைந்து ஒன்றுபடுகையில் ஒரு புதிய ஆள் படைக்கப்படுகிறான்,”60என்றும் சொல்லுகிறது. அதைப்போல், ஒரு மனித உயிரில் கடவுளுடைய அக்கறையும் அதன் பிறப்புக்கு முன்பே ஆரம்பிக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது, கடவுளை நோக்கிப் பேசி, பின்வருமாறு எழுதினான்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:13-16; பிரசங்கி 11:5.

5பிறவாத இலட்சக்கணக்கான பிள்ளைகளின் உயிர்கள், வேண்டுமென்றே கருச்சிதைவின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இது நீதிமுறைப்படி சரியா? பிறவாதக் குழந்தைக்கு வாழ்க்கையைப் பற்றிய உணர்வில்லை கருப்பைக்கு வெளியே வாழ முடியாதென சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் புதிதாய்ப் பிறந்தக் குழந்தையைக் குறித்ததிலும் அடிப்படையாக இவ்வாறே இருக்கிறது. பிறப்பின்போது வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய எவ்விதக் கிரகிப்பும் அதற்கு இல்லை, இடைவிடாத பராமரிப்பிலிருந்து விலகி அது தொடர்ந்து உயிர்வாழவும் முடியாது. கருதரிப்பின் சமயத்தில் உருவாகிய அந்த உயிரணு, தடை செய்யப்படாவிட்டால் இத்தகைய குழந்தையாகிறது. புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையின் உயிரைக் கொல்வது அநேகமாய் எல்லா இடங்களிலும் கடுங்குற்றமெனக் கருதப்பட்டு, அகாலப் பிறவி குழந்தைகளையுங்கூட காப்பாற்றி வைப்பதற்குப் பெரும் முயற்சி எடுக்கப்படுகிறதென்றால், இன்னும் பிறவாதக் குழந்தையின் உயிரைப் போக்குவதும் ஏன் கடுங்குற்றமல்ல? உயிர் கருப்பையை விட்டு வெளியே வந்தபின் மாத்திரமே அதை ஏன் பரிசுத்தமாகக் கருதவேண்டும், கருப்பைக்கு உள்ளே இருக்கையிலும் ஏன் அவ்வாறு கருதக்கூடாது?

6வெறுமென மனிதர் காரியங்களைக் கருதும் முறையல்ல, உயிரைக் கொடுத்தவராகிய கடவுள் என்ன சொல்லுகிறார் என்பதே முக்கியமான காரியம். இன்னும் பிறந்திராதப் பிள்ளையின் உயிர் யெகோவா தேவனுக்கு அருமையானது, அதை அற்பத்தனமாய்க் கையாளக்கூடாது. பிறவாத பிள்ளையின் உயிரைத் திட்டமாய்ப் பாதுகாக்கும் ஒரு சட்டத்தை அவர் பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். இரண்டு ஆண்களுக்கிடையே உண்டான சண்டையில் கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குத் தீங்கிழைக்கப்பட்டால் அல்லது கருச்சிதைவு விளைவாக உண்டாயிற்றென்றால், கொடுக்கவேண்டிய கண்டிப்பான தண்டனைகளை இந்தச் சட்டம் விவரமாய்க் குறிப்பிட்டது. (யாத்திராகமம் 21:22, 23) பிறந்திராத பிள்ளையின் உயிரை வேண்டுமென்றே கொல்வது அதைப் பார்க்கிலும் அதிக மோசமானது. மனித உயிரை வேண்டுமென்றே கொன்றவன் கடவுளுடைய சட்டத்தின்படி, கொலைபாதகனாக மரணத்தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். (எண்ணாகமம் 35:30, 31) இப்பொழுதும் உயிருக்கு அதே உயர்வான மதிப்பையே கடவுள் கொண்டிருக்கிறார்.

7இன்னும் பிறந்திராதப் பிள்ளையின் உயிரைக் குறித்தக் கடவுளுடைய சித்தத்துக்கு ஆழ்ந்த மதிப்பைக் கொடுப்பது மெய்யான நன்மையைக் கொண்டுவருகிறது. பெற்றோரை அந்த உயிருக்கு முழு பொறுப்புள்ளவர்களாக்குவதனால், பாலுறவு சம்பந்தப்பட்ட தாறுமாறையும் அதன் எல்லாக் கெட்ட விளைவுகளையும் தடுத்துவைக்கும் ஒரு தடைகாப்பை யெகோவா அருளுகிறார். இந்த விளைவுகளில், பாலுறவின் மூலம் கடத்தப்படும் நோய்கள், வேண்டாதக் கர்ப்பந்தரிப்புகள், முறைகேடாய்ப் பிறக்கும் பிள்ளைகள், பிளவுபட்ட குடும்பங்கள், அசுத்தமான மனச்சாட்சியினால் உண்டாகும் கடும் மனச் சோர்வு ஆகியவை அடங்கியிருக்கின்றன. இவ்வாறு, உயிரை மதித்தல் இப்பொழுதும் குடும்ப சமாதானத்துக்கு உதவி செய்யும், மேலும் எதிர்கால ஆசீர்வாதங்களை நாம் அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாயுள்ளது.

உங்கள் சொந்த உயிரை மதித்தல்

8நம்முடைய சொந்த உயிரை நாம் நடத்தும் முறையைப் பற்றியதென்ன? ‘பிறக்கும்படி நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆகவே என் உயிரைக் கொண்டு நான் என்ன செய்கிறேனோ அது என்னைப் பொருத்தது. எனக்குப் பிரியமான எதையாகிலும் நான் செய்வேன்,’ என்று பல ஆட்கள் சொல்லுகின்றனர். ஆனால் ஒரு பரிசைப் பெற்றுக் கொள்ளுகிறவன் அதை நன்றியோடு மதிப்பதற்கு அந்தப் பரிசை அவன் கேட்க வேண்டுமா? உயிர்தானேயும் மறுக்கமுடியாத வண்ணம் நல்லது. மனிதரின் கெட்ட போக்கும் அபூரணமுமே வாழ்க்கையின் பேரளவான மகிழ்ச்சியைப் பறித்துப்போடுகின்றன. அதற்காக யெகோவா தேவனைக் குற்றஞ்சாட்ட முடியாது. தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தைக்கொண்டு தாம் அதைத் திருத்துவாரென அவர் வாக்குக் கொடுக்கிறார். ஆகவே, அவர் கொடுக்கிற உயிரை, அவருடைய சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் மதிப்பு காட்டுகிற முறையில் பயன்படுத்தி நாம் வாழவேண்டும்.—ரோமர் 12:1.

9இத்தகைய மதித்துணர்வை நாம் காட்டக்கூடிய ஒரு வழி உணவிலும் பானத்திலும் மிதமாயிருப்பதாகும். பெருந்திண்டியையும் குடிவெறியையும் கடவுள் கண்டனஞ்செய்கிறார். (நீதிமொழிகள் 23:20, 21) மேலும், மிதமாய் உண்பது தகுந்ததாயிருப்பதுபோலவே மதுபானங்களை மிதமாய்ப் பயன்படுத்துவதும் தகுந்ததே. இது வேதவசனங்கள் பலவற்றில் காட்டப்படுகிறது.—உபாகமம் 14:26; ஏசாயா 25:6; லூக்கா 7:33, 34; 1 தீமோத்தேயு 5:23.

10ஆகவே குடிப்பது பைபிளில் கண்டனம் செய்யப்பட்டில்லை. மதுபான குடிவெறி துர்ப்பழக்கமே கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. நல்லக் காரணத்துடன் அப்படிச் செய்யப்பட்டிருக்கிறது, ஏனெனில் அது உடலைச் சேதப்படுத்துகிறது, குடிவெறியிலிருப்போரை முட்டாள்தனமாக நடக்கச் செய்கிறது, மற்றவர்களுக்கு அபாயமாகவும் செய்கிறது. (நீதிமொழிகள் 23:29-35; எபேசியர் 5:18) ஐக்கிய மாகாணத்தில் மாத்திரமே, குறைந்தது ஒரு கோடி மக்கள் குடிவெறி பழக்கத்தினால் துன்பமனுபவிக்கின்றனர், இதன் ஒரு விளைவு, ஈரலரிப்பு நோயால் ஆண்டுதோறும் 30,000-த்துக்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்படுகின்றன. குடிவெறி விளைவின்பேரில் தி நாஷனல் கவுன்ஸில் பின்வருமாறு சொல்லுகிறது: “வராது கடமைத்தவறுதல், சுகநல சேவைகள், உடைமை சேதம், மருத்துவ செலவுகள் ஆகியவற்றின் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் மொத்த செலவு, ஆண்டுக்கு ஏறக்குறைய 4,300 கோடி டாலர்கள் (60,200 கோடி ரூபாய்கள்) ஆகும். . . . இன்று பெருஞ்சாலைகளில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான எல்லா விபத்துகளிலும், 50% மதுபானம் உட்பட்டவை. தீயால் உண்டாகும் மரணங்களில் 80%-த்துக்கும் மேற்பட்டவை, மூழ்கி செத்ததில் 65%, வீட்டு விபத்துகளில் 22%, இடறிவிழுதலில் 77%, நடந்து செல்கிறவர்களில் ஏற்பட்ட விபத்துகள் 36%, மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 55% மதுபான உபயோகத்தோடு இணைக்கப்படுகின்றன. விபத்துகளில் உட்பட்ட விமானம் இயக்குபவரில் 44% மதுபானம் அருந்தினவர்கள். மதுபான உபயோகமே காரணமெனக்கூறும் வன்முறை நடத்தையால் ஏறக்குறைய 65% கொலைகள், 40% திடீர் தாக்குதல், 35% கற்பழித்தல்கள், 30% பாலுறவு சம்பந்தப்பட்ட மற்றக் குற்றச் செயல்கள், 30% தற்கொலைகள், 55% சண்டைகள் அல்லது வீட்டில் திடீர் தாக்குதல்கள், 60% பிள்ளைகளை முறைகேடாய்ப் பயன்படுத்தின குற்றங்கள் நடக்கின்றன.”61பிளவுபட்ட குடும்பங்கள், பாழ்படுத்தப்பட்ட வாழ்க்கைகள், மனித பாடனுபவிப்பு ஆகியவற்றில் இழப்புகள் கணக்கிட முடியாதவை. ஆகவே கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்வது ஆச்சரியத்தை உண்டாக்குவதில்லை: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், . . . வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.

11உலக சூழ்நிலைமையின் சோர்வூட்டும் பாதிப்பைச் சிலர் வெகு கடுமையாய் உணருவது உண்மையே. அதன் போர்கள், கடுங்குற்றச் செயல்கள், பணவீக்கம், ஏழ்மை, மேலும் அதன் நெருக்கடிகளும் தொல்லைகளும் தனிப்பட்ட பிரச்னைகளை உண்டாக்குகின்றன. ஆனால் தீங்குண்டாக்கும் மட்டுக்குமீறிய அளவில் குடிப்பதன் மூலம் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயலுவதில் எந்த நன்மையும் உண்டாகிறதில்லை. இது அவனுக்கும் மற்றவர்களுக்கும் மேலுமதிக பிரச்னைகளையே உண்டுபண்ணி வாழ்க்கையில் அவனுக்குரிய உண்மையான மதிப்பையும் நோக்கத்தையும், கடவுளிடம் அவனுக்குள்ள நிலைநிற்கையையும் காலப்போக்கில் அழித்துப் போடுகிறது.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல்

12மக்கள் பலர் வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கொள்ள முயன்று, மயக்கமூட்டி மாயக்காட்சி விளைவிக்கும் போதைப் பொருட்களை உட்கொள்வதில் ஈடுபடுகின்றனர். இத்தகைய போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் உண்மையிலுள்ள நிலைக்குப் பதில் கற்பனையான கனவு உணர்ச்சியை அல்லது பரவசமாவதைப் போன்ற நிலையைப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். ஹெரோய்ன், கொக்கேன் போன்ற வெறியூட்டும் போதைப் பொருட்களைப் பலர் பயன்படுத்துகின்றனர். சிலர், மாத்திரை வகையில் பற்பல போதைப் பொருட்களைப் பெரும்படியான அளவுகளில் உட்கொள்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

13இந்தப் போதைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்துவது எளிதில் தன்னடக்கத்தை இழப்பதற்கு வழிநடத்தி, குடிவெறியிலிருக்கும் ஓர் ஆளில் காணப்படுகிறவற்றிற்கு ஒப்பான விளைவுகளை உண்டுபண்ணுகிறது. (நீதிமொழிகள் 23:29-34) இந்தப் போதைப் பொருட்கள் அபாயகரமாயும் இருக்கலாமென பொதுவாய் ஒப்புக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக நியூ யார்க் நகரத்தில், ஹெரோய்ன் வெறி பழக்கம், 18-க்கும் 35-க்கும் இடையேயுள்ள வயதுகளிலிருக்கும் ஆட்களுக்குள் ஏற்படும் மரணத்துக்கு முக்கிய காரணமாயிருக்கிறது. இந்தப் பரிசாகிய உயிருக்கு இது, எப்பேர்ப்பட்ட படுமோசமான அவமதிப்பு!

14ஆனால் வெறியூட்டாத போதைப் பொருளான மரிஹுவானாவைப் பற்றியதென்ன? இதுவும் பல வழிகளில் அபாயகரமாக இருக்கும். மரிஹுவானாவைப் பயன்படுத்துவோர், போதைப் பொருட்கள் விற்போருடனும் அவற்றைப் பயன்படுத்தும் மற்றவர்களுடனும் கொள்ளும் தொடர்புகளின் மூலம் வெறியூட்டும் போதைப் பொருட்களை அடையக்கூடிய நிலையில் பாதுகாப்பின்றி விடப்படுகின்றனர். மேலும், மனக்கவலையையும் சோர்வையும் தளர்த்துமென்ற நம்பிக்கையில் இந்தப் போதைப் பொருளைச் சார்ந்திருக்கப் பழகிய பல ஆட்கள் இதைவிட அதிக வெறியூட்டும் போதைப் பொருட்களைப் பெரும்பாலும் நாடிச் செல்பவராகலாம்

15இது சம்பவிக்காவிடினும், மரிஹுவானா புகை குடிப்பது அபாயகரமானது. புற்றுநோய் உண்டுபண்ணும் காரணிகள் சிகரெட்டுகளில் இருப்பதைப் பார்க்கிலும் அதிகம் இதில் அடங்கியிருக்கின்றன, மேலும் இது நுரையீரல்களுக்கும் அதைவிட அதிகக் கெடுதியுண்டுபண்ணுகிறது. மரிஹுவானாவைத் தொடர்ந்து பயன்படுத்துவது ஈரல் சேதம், பிறப்புமூலத்துக்குரிய ஊனங்கள், மூளைக்கடுத்த கெடுதி, ஆகியவற்றை உண்டுபண்ணலாம். மரிஹுவானா, “சுகத்துக்கு விரிவான பல தீங்குகள் விளைவிக்கக்கூடிய வீரியம் வாய்ந்த போதைப் பொருள்,” என்று கானடாவிலுள்ள துர்ப்பழக்கத்துக்கு அடிமையாதலை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் கூறுகிறது.62போதைப் பொருள் நிபுணர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்; “மரிஹுவானா மிக தீங்கு செய்யும் போதைப் பொருள். அது சுகத்துக்குக் கொண்டுவரக்கூடிய அபாயத்தைக் குறிப்பிட்டு கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞான சமுதாயத்தில் ஏறக்குறைய 10,000 தாள்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.” “படித்து நினைவில் வைக்க முயலும் வளர் இளம் பருவத்தினரில் வெகு வினைமையாயுள்ள [இதன்] ஒரு கடும் அபாயத்தை”யும் அவர் குறிப்பிட்டார், எப்படியெனில், நினைவு சேமிப்பையும் கவனத்தை ஒருமுகப்படுத்தி ஊன்றவைக்கும் திறமையையும் இது பலவீனப்படுத்துகிறது. மரிஹுவானா பயன்படுத்துபவனைக் குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “அவன் மோட்டார் வண்டியைச் சரியாய் ஓட்டவோ தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்தவோ முடியாது. நீடித்த உபயோகம், நோய்க்கு எதிராகப் போராடி உடலைப் பாதுகாக்கிற தடைக்காப்பு அமைப்புக்கு மேலுமதிக வினைமையான கெடுதியைச் செய்கிறது.”63கர்ப்பந்தரித்திருக்கையில் மரிஹுவானா புகை குடிக்கும் பெண்கள், மூளைக்குச் சேதமுண்டான பிள்ளைகளைப் பிறப்பிக்கும் மிகப் பெரும் அபாயத்துடன் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கவனிக்கையில் மரிஹுவானாவைப் பயன்படுத்துவது இந்தப் பரிசாகிய உயிருக்கு மதிப்பைக் காட்டுவதென சொல்லக்கூடுமா?

16போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு மற்றொரு வல்லமைவாய்ந்த காரணமும் உண்டு. ஓர் ஆள் பேய்களின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதற்கான வழியை இவை திறந்து வைக்கக்கூடும். போதைப் பொருட்களை மந்திர கொள்கையோடு இணைப்பது எவ்வகையிலும் புதிய காரியமல்ல. சென்ற காலத்தில் மந்திரவாதிகள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினர். வைன் என்பவர் எழுதிய ‘புதிய ஏற்பாடு சொற்களுக்குரிய விளக்க அகராதி’ என்று ஆங்கிலத்தில் தலைப்பைக் கொண்ட அகராதி பின்வருமாறு குறிப்பிடுகிறது: “மாந்திரீகத்தில், போதை மருந்து பொருட்களின் உபயோகம் சாதாரணமாயினும் சக்திவாய்ந்ததாயினும், மந்திர உச்சரிப்புகளோடும் மந்திர சக்திகளிடம் வேண்டுதல்களோடும் பொதுவாய் இணைந்திருந்தது.” கலாத்தியர் 5:20-ல் (தி.மொ.) “மாந்திரியம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல்லின் (பார்மாகியா, சொல்லர்த்தமாய் “வெறிமயக்க மருந்தூட்டுதல்”) சம்பந்தமாகவே இந்தக் குறிப்புகள் கொடுக்கப்பட்டன. (வெளிப்படுத்துதல் 9:21; 18:23 ஆகியவற்றையும் பாருங்கள்.) ஆகவே, போதைப் பொருட்கள் ஒருவனைப் பேய்களின் செல்வாக்குக்குள்ளாவதற்குப் பாதுகாப்பின்றி விடலாம். தனக்கு உயிரைக் கொடுத்தவரை பக்தியோடு மதிக்கும் ஒருவன், வெறும் கணநேர உணர்ச்சிக்காகத் தன்னை அந்த அபாயத்துக்காளாகும்படி எவ்வாறு வைக்க முடியும்?

17போதைப் பொருட்களின் உபயோகம் சமுதாயத்தில் கடுங்குற்றச் செயல்களுடனும் ஒழுக்கச் சீர்குலைவுடனும் இணைபிரியா வண்ணம் இணைக்கப்பட்டிருப்பது யாவருக்கும் தெரிந்ததே. கூட்டு ஒத்துழைப்புடன் செய்யப்படும் குற்றச் செயல்களுக்கு, சட்டவிரோதமான போதைப் பொருட்கள் விற்பனை தொகுதிகளே பெரும்படியான வருமான ஆதாரமாக இருக்கின்றன. போதைப் பழக்கத்துக்கு அடிமையான பலர் தங்கள் பழக்கத்தை ஆதரிப்பதற்குத் திருடுகின்றனர். மற்றவர்கள் வேசித்தன தொழிலுக்குத் திரும்புகின்றனர். குடும்ப உறுப்பினரில் ஒருவர் போதை வெறி பழக்கத்துக்கு அடிமையாகையில் குடும்பங்கள் பிளவுறுகின்றன. கர்ப்பந்தரித்துள்ள தாய்மார் இந்தப் போதை வெறி பழக்கத்தைத் தங்கள் குழந்தைகளுக்குக் கடத்துகின்றனர். இக்குழந்தைகள் இந்தப் பழக்கத்தை விட்டு விலகும் கடும் வேதனைகளுக்கு உட்பட்டிருக்கையில் சில சமயங்களில் மரித்தும் போகின்றனர். பெரும்பான்மையான நாடுகளில், இத்தகைய போதைப் பொருட்களை மருத்துவம் சம்பந்தப்படாத காரணங்களுக்காகத் தங்களிடம் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது.—மத்தேயு 22:17-21.

18இந்த எல்லாக் கெட்ட விளைவுகளோடும் சம்பந்தப்பட்டுள்ள பழக்கத்தோடு எவ்வகையிலாவது தொடர்பு வைத்துக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு செய்ய விரும்புகிறதில்லை! கிளர்ச்சியுறும் அனுபவங்களுக்காக அல்லது உண்மை நிலையிலிருந்து தப்பியோடுவதற்காகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் எவ்வகை பங்கும் கொள்ள விரும்புகிறதில்லை. உயிரை அவர்கள் உயர்வாய் மதிக்கின்றனர், கடவுளுடைய சித்தத்துக்கு ஒத்திருக்கும் முறையில் அதைப் பயன்படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர்.

புகையிலை மற்றும் அதற்கொப்பான பொருட்களைப் பயன்படுத்துதல்

19புகையிலையையும், சில நாடுகளில் வெற்றிலைப் பாக்கையும் கோக்கா இலைகளையும் பயன்படுத்துவது இன்று மிகச் சாதாரணமாயுள்ளது. இவை ஒவ்வொன்றும் உடலுக்கும், சிலர் காரியங்களில் மனதுக்கும் கெடுதி செய்கிறது. நுரையீரல் புற்று நோய், இருதய நோய்கள், நீடித்த மார்புச்சளி, சீழ்க்கட்டி போன்ற நோய்கள், புகையிலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் குறித்து அரசாங்கங்கள் எச்சரித்திருக்கின்றன. துர்ப்பழக்கத்துக்கு அடிமையாக்கித் தீங்குவிளைவிக்கும் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது, இந்தப் பரிசாகிய உயிருக்கு மதிப்பைக் காட்டுவதாகுமா?

20இந்தப் பொருட்களெல்லாம் கடவுளுடைய சிருஷ்டிப்பே என்று ஒருவேளை எவராவது சொல்லலாம். மெய்யே, காளான்களும் கடவுளுடைய சிருஷ்டிப்பே. எனினும் அவற்றில் சில வகைகளைச் சாப்பிட்டால் அவை மரணத்தைக் கொண்டுவரும். ஒருவேளை வேறொருவர், இத்தகைய பழக்கங்களை பைபிள் திட்டவட்டமாய்க் கண்டனஞ் செய்வதில்லை என்று சொல்லலாம். இல்லை, ஆனால் நாம் கண்டபடி, பைபிளில் திட்டவட்டமாய்க் கண்டனஞ்செய்யப்பட்டிராத பல காரியங்கள் சந்தேகமில்லாமல் தவறாக இருக்கின்றன. தன் அயலானின் புழக்கடையைக் குப்பை கொட்டுவதற்கு இடமாகப் பயன்படுத்தக்கூடாதென பைபிளில் எங்கேயும் திட்டவட்டமாய்க் கட்டளையிட்டில்லை. எனினும், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டும்,” என்ற அதன் கட்டளை, அது எவ்வளவு தவறென்பதைக் கண்டுகொள்ள நம்மில் எவருக்கும் போதுமானதாயிருக்கவேண்டும். அதைப்போல், புகைக் குடிப்பதும் அன்பு குறைவைக் காட்டுகிறது, ஏனெனில் அந்தப் புகை மற்றவர்களுடைய உறுப்புக்கு எரிச்சலுண்டாக்கக்கூடும், அவர்களுடைய சுகத்தையும் கெடுக்கலாம்.—மத்தேயு 22:39.

21“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்”தும்படி, 2 கொரிந்தியர் 7:1-ல் கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. ஏதோவொன்று “பரிசுத்த”மாயிருப்பதற்கு அது “சுத்தமாயும், கறையற்றதாயும், கெடுக்கப்படாததாயும்” இருக்கவேண்டுமென்பதைக் குறிக்கிறது. யெகோவா பரிசுத்தமற்ற ஒரு முறையில் நடக்க தம்மை ஒருபோதும் தாழ்த்தாமல், தம்மைக் கெடுதலுக்கு நீங்கலாகச் சுத்தமாய் வைத்துக்கொள்கிறார். மானிடராகிய நமக்குக் கூடியவரையிலும் தொடர்ந்து “பரிசுத்தமாகுதலைப் பூரணப்படுத்தி” வரும்படி நேர்மையாகவே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (ரோமர் 12:1) மேலும் நாம் அவரை ‘நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் நேசிக்கும்படியும்’ அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் தன் உடலை அசுத்தமாக்கி, தன் சுகத்தைக் கெடுத்து, தன் வாழ்நாளைக் குறைக்கும் பழக்கங்களில் அவன் தன் மனம்போன போக்கில் ஈடுபட்டால், இதை அவன் எவ்வாறு செய்ய முடியும்?—மாற்கு 12:29, 30.

22இத்தகைய பழக்கங்களில் ஒன்றோ மற்றொன்றோ ஓர் ஆளின்பேரில் ‘சாவுப் பிடியைக்’ கொண்டிருப்பதுபோல் தோன்றலாமெனினும், அவன் அதை மேற்கொண்டு விடுதலையடைய முடியும். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அறிவு அவ்வாறு செய்வதற்கு வல்லமைவாய்ந்த உள்நோக்கத் தூண்டுதலை அளிக்கிறது. ஓர் ஆள் ‘தன் மனதைத் தூண்டும் சக்தியில் புதியவனாக்கப்பட’ முடியும். (எபேசியர் 4:23, NW) இது, தனிப்பட்டவருக்கு மனத் திருப்தியைக் கொடுப்பதில் பலன் தந்து கடவுளுக்குக் கனமுண்டாக்குகிற ஒரு புதிய வாழ்க்கை முறையைத் திறந்து வைக்கும்.

இரத்தத்தால் குறிக்கப்படுகிற உயிரை மதித்தல்

23உயிரைப்பற்றி நாம் பேசுகையில் நம்முடைய இரத்தமும் முக்கிய கவனம் செலுத்தப்பட தகுதியுள்ளது. கடவுள், மனிதருடைய மற்றும் மிருகங்களுடைய இரத்தத்தை, உயிரைக் குறிக்கும் அடையாளமாகத் தெரிந்துகொண்டார். நோவாவுக்கும் பின்னால் இஸ்ரவேல் ஜனத்துக்கும் அவர் கொடுத்த சட்டத்திலிருந்து இது தெரிகிறது. இரத்தத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உபயோகம் பலிக்குரியதே. (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10-14) மனிதவர்க்கத்துக்காகத் தம்முடைய உயிர் இரத்தத்தை ஊற்றின இயேசுவின் அந்த ஒரே பலியை அந்தப் பலிகள் யாவும் படமாகக் குறிப்பிட்டன. (எபிரெயர் 9:11-14) இதுதானேயும், இந்தக் காரியத்தில் கடவுளுடைய சித்தத்துக்கு ஜாக்கிரதையான கவனம் செலுத்தும்படி நம்மைச் செய்விக்கவேண்டும்.

24இரத்தத்தின் உபயோகத்தைக் குறித்த கடவுளுடைய தடையுத்தரவு உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறதா? ஆம், முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபையின் அப்போஸ்தலராலும் மற்ற மூப்பர்களாலும் செய்யப்பட்ட அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காட்டப்பட்டிருக்கிறபடி செல்லத்தக்கதாகவே இருக்கிறது. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ் அவர்கள் பின்வருமாறு எழுதினார்கள்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும் [ஆகவே, இரத்தம் வடிக்கப்படாதது], வேசித்தனத்திற்கும் நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும்.”—அப்போஸ்தலர் 15:28, 29.

25இரத்தத்தைக் குறித்தக் கடவுளுடைய சித்தத்தைப் பலர் மதிக்கிறதில்லை. உணவிலும் மருத்துவ, நோக்கங்களுக்காகவும், வியாபார உற்பத்திப் பொருள்களிலுங்கூட அவர்கள் இரத்தத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவேண்டியதில்லை, ஏனெனில் இந்தப் பரிசாகிய உயிருக்குத்தானேயும் இவ்வுலகம் அவ்வளவு குறைந்த மதிப்பைக் காட்டுகிறது. என்றாலும் நாம், உயிரையும் கடவுளுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டியதையும் நன்றியோடு மதித்தால், அவருடைய சித்தத்தைப் புறக்கணிக்கமாட்டோம் அல்லது அவருடைய கட்டளைகளை மீறுவதனால் அவரை அவமதிக்கமாட்டோம்.

26இவ்வாறு, நாம் நம்முடைய சுகத்தைப் பற்றி அக்கறையுடனிருந்து, நம்முடைய உயிரைப் பாதுகாக்கத் தேடினாலும், கடைப்பிடிக்க வேண்டிய சில வரையறைகள் இருக்கின்றன. இயேசு பின்வருமாறு சொன்னபோது இதைத் தெளிவாக்கினார்: “தன் ஜீவனை நேசிக்கிறவன் அதை இழந்து போவான். இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவனுக்கென்று காத்துக் கொள்ளுவான்.”—யோவான் 12:25, தி.மொ.

27கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்காக மரணத்தை எதிர்ப்படுவதா அல்லது மரணத்தைத் தவிர்ப்பதற்காக அவருக்குக் கீழ்ப்படியாமற்போவதா என்பது கேள்வியாயிருந்தால், கடவுளுடைய ஊழியன் கீழ்ப்படியாமற் போவதற்குப் பதில் மரணத்தையே மேலாகத் தெரிந்துகொள்வான். இயேசு, கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போய் மரணத்தைத் தப்பியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு முன்னிருந்த மனிதரும் முறிக்கமுடியாத அதே பக்தியைக் காட்டினர். (மத்தேயு 26:38, 39, 51-54; எபிரெயர் 11:32-38) நித்திய ஜீவனுக்குத் தங்களைத் தகுதியாக்குவதற்கு இடையூறாகத் தங்களுடைய தற்போதைய உயிர் நிற்பதற்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை.

28நீங்களும் இவ்வாறே உயிரைக் கருதுகிறீர்களா? வாழ்க்கை மெய்யான உட்பொருளைக் கொண்டிருக்க, கடவுளுடைய சித்தத்துக்கிணங்க நீங்கள் வாழவேண்டுமென்பதை மதித்துணருகிறீர்களா? இந்த நோக்குநிலையை இப்பொழுது வளர்த்து வருவது கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ்வதற்கான முன்னேற்பாட்டின் பாகமாயிருக்கிறது. பூமியில் வாழும் எல்லாரும் கடவுளுடைய பரிசாகிய உயிரை உண்மையாய் மதிப்பவர்கள் என்பதை அறிந்து அப்பொழுது எந்த இடத்திலும் எந்தச் சமயத்திலும் எவ்வளவு பாதுகாப்பாயும் பத்திரமாயும் நாம் உணருவோம்!

[கேள்விகள்]

1, 2. இந்தப் பரிசாகிய உயிருக்கு நாம் ஏன் ஆழ்ந்த மதிப்பைக் காட்ட வேண்டும்?

3. பொழுதுபோக்காக வன்முறைச் செயல்களை ஒருவன் பார்த்துக்கொண்டிருப்பது உயிரினிடம் அவனுடைய மனப்பான்மையை எவ்வாறு பாதிக்கிறது?

4. (எ) உயிர் எப்பொழுது ஒருவனுடைய சந்ததிக்குக் கடத்தப்படுகிறது? (பி) மனித உயிர் பிறப்பதற்கு முன்பாகவே கடவுள் அதில் அக்கறைகொண்டிருக்கிறாரென எது காட்டுகிறது?

5. கருச்சிதைவு சரியென்று நிரூபிக்க முயற்சி செய்வதில் கொண்டுவரப்படும் விவாதங்கள் ஏன் நல்ல ஆதாரமுடையவை அல்ல?

6. இன்னும் பிறந்திராத பிள்ளையின் உயிரை வேண்டுமென்றே கொல்வதைக் கடவுள் எவ்வாறு கருதுவதாக பைபிள் காட்டுகிறது?

7. இன்னும் பிறந்திராத பிள்ளையின் உயிரைக் குறித்த கடவுளுடைய சித்தத்தை நாம் மதிக்கையில் எதிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்?

8. நம் சொந்த உடலை நாம் நடத்தும் முறையில் கடவுளுடைய சித்தத்துக்கு ஏன் மதிப்பு காட்ட வேண்டும்?

9. பெருந்திண்டியையும் குடிவெறியையும் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

10. (எ) குடிவெறியன் எவ்வாறு உயிருக்கு அவமதிப்பைக் காட்டுகிறான்? (பி) 1 கொரிந்தியர் 6:9, 10-ல் காட்டியிருக்கிறபடி, குடிவெறியைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்?

11. மிதமீறி குடிப்பதன்மூலம் தனிப்பட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்கொள்ள முயலுவது அறிவுள்ள காரியமா?

12. பலர் ஏன் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்?

13. இந்தப் போதைப் பொருட்களில் சில, அவற்றைப் பயன்படுத்துவோரில் என்ன விளைவுகளை உண்டுபண்ணுகின்றன? இவற்றைக் குறித்து பைபிள் எவ்வாறு எச்சரிக்கிறது?

14, 15. மரிஹுவானா புகைக் குடிப்பவர்கள் ஏன் பரிசாகிய உயிருக்கு மதிப்பு காட்டுகிறதில்லை

16. போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது வேறு என்ன பயங்கர அபாயத்துக்குள்ளாவதற்கேதுவாக ஒருவனை வைக்கலாம்? இது, இந்தக் காரியத்தில் நம்முடைய கருத்தை எவ்வாறு பாதிக்க வேண்டும்?

17, 18. (எ) போதைப் பொருட்களின் உபயோகத்துடன் வேறு என்ன கெட்ட விளைவு இணைக்கப்பட்டுவருகிறது? (பி) ஆகவே போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் எவ்வாறு கருதுகின்றனர்?

19. புகையிலை, வெற்றிலைப் பாக்கு, கொக்கா செடியின் இலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஒருவர் கருதும் முறையில் பரிசாகிய உயிருக்கு மதிப்பு கொடுப்பது ஏன் கொண்டுவரப்படுகிறது?

20, 21. (எ) பைபிள் இத்தகைய பழக்கங்களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனஞ் செய்யாதது இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றர்த்தமாகுமா? (பி) கடவுளுடைய ஊழியர்களின் வாழ்க்கையில் இத்தகைய பழக்கங்களுக்கு இடமில்லை என்று எந்த பைபிள் நியமங்கள் காட்டுகின்றன?

22. இத்தகைய கெட்ட பழக்கம் தன்மீது கொண்டிருக்கும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எது ஒருவனுக்குச் சக்தியளிக்கும்?

23. (எ) இஸ்ரவேலுக்குக் கொடுத்தத் தம்முடைய சட்டத்தில் கடவுள் அனுமதித்த இரத்தத்தின் அந்த ஒரே உபயோகம் என்ன? (பி) அந்தப் பலிகளின் உட்பொருள் இந்தக் காரியத்தில் கடவுளுடைய சித்தத்தைக் கவனமாய்ச் சிந்திக்க நம்மை ஏன் செய்விக்கவேண்டும்?

24. இரத்தத்தின் உபயோகத்தைப் பற்றிக் கிறிஸ்தவர்கள் கவனத்தில் வைத்திருக்கவேண்டியதைக் குறித்து அப்போஸ்தலர் 15:28, 29-ல் என்ன சொல்லியிருக்கிறது?

25. என்ன பழக்கச் செயல்களினால் உலகம், இரத்தத்தின் உபயோகத்தைக் குறித்தக் கடவுளுடைய சித்தத்துக்கு அவமதிப்பைக் காட்டுகிறது?

26, 27. கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போவதனால் ஒருவன் தன் தற்போதைய உயிரைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் ஏன் அவருக்கு மதிப்பு காட்டுவதாக இல்லை?

28. பைபிளில் உயிர் கருதப்பட்டுள்ள முறைக்கு நாம் மதித்துணர்வை வளர்ப்பதனால் எதற்கு ஆயத்தஞ்செய்கிறோம்?