Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பால் சம்பந்தப்பட்டதில் உங்கள் கருத்து—என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது?

பால் சம்பந்தப்பட்டதில் உங்கள் கருத்து—என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது?

அதிகாரம்13

பால் சம்பந்தப்பட்டதில் உங்கள் கருத்து—என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது?

பால் சம்பந்தப்பட்ட எதையும் பைபிள் கண்டனம் பண்ணுகிறதென்று சிலர் கருதுகின்றனர். எனினும், பைபிளை ஆராய்ந்து பார்த்தால் இது உண்மையல்லவென வெளிப்படுகிறது. முதல் ஆணையும் பெண்ணையும் கடவுள் சிருஷ்டித்ததைப் பற்றிச் சொன்ன பின்பு, பைபிள் மேலும் தொடர்ந்து பின்வருமாறு சொல்லுகிறது: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, . . . ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.”—ஆதியாகமம் 1:27, 28.

2அப்படியானால், தெளிவாகவே, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பாலுறவுகள் தெய்வீக அங்கீகாரத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கட்டுப்பாடற்ற பாலுறவைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா? இது வாழ்க்கையில் மிக அதிக இன்ப அனுபவத்தைக் கொண்டுவருமா? இது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் உண்மையான சமாதானத்திலும் பாதுகாப்பிலும் பலன்தருமா?

3மனிதருடைய மற்ற இயக்கங்களைப்போல் பாலுறவும் தவறான உபயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறது. சாப்பிடுவது நல்லது மற்றும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனினும் பெருந்திண்டி சுகத்தைக் கெடுத்து ஒருவனின் வாழ்நாளைக் குறைத்துப் போடக்கூடும். தூக்கமும் இன்றியமையாததே. ஆனால் மட்டுக்கு மீறிய தூக்கம் வாழ்க்கையில் காரியங்களை நிறைவேற்ற முடியாமற்போகச் செய்கிறது, உடலையும் பலவீனப்படுத்தலாம். வாழ்க்கையின் மெய்யான இன்ப அனுபவம் எவ்வாறு பெருந்திண்டி, குடிவெறி, சோம்பல் ஆகியவற்றின் பலனாக வருவதில்லையோ அவ்வாறே ஒருவரின் பால் சம்பந்தப்பட்ட சக்திகளைக் கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துவதன் பலனாகவும் அது வருகிறதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குரிய மனித அனுபவம் இதற்குச் சாட்சி பகருகிறது. நம் சொந்தக் கசப்பான அனுபவத்திலிருந்தே இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? அதைப்பார்க்கிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறது.

4பாலுறவைக் குறித்ததில், இப்பொழுதும் எதிர்காலத்திலும் நம்முடைய மகிழ்ச்சியைப் பாதுகாக்கும் சமநிலையான கருத்தை கடவுளுடைய வார்த்தை கொடுக்கிறது. எனினும், இந்த இயல்பான சக்திகளைப் பயன்படுத்துவதைக் குறித்த கடவுளுடைய தராதரங்களை நாம் கற்றுக் கடைப்பிடிக்க வேண்டியது நம்முடைய சொந்த சமாதானத்தின் மற்றும் பாதுகாப்பின் பொருட்டு மாத்திரமேயல்ல. அதைவிட அதிக முக்கியமாய், நம்முடைய சிருஷ்டிகருக்கு மரியாதை கொடுப்பதற்கு அவ்வாறு செய்ய வேண்டும். ஈடற்ற அரசாட்சியைப் பற்றிய விவாதத்தில் அவருடைய சார்பில் நாம் உண்மையில் நிலைநிற்கை கொண்டால் இந்தக் காரியத்திலும் அவருடைய ஈடற்ற உன்னத ஞானத்துக்கும் அரசாதிகாரத்துக்கும் நாம் மகிழ்ச்சியுடன் நம்மைக் கீழ்ப்படுத்துவோம்.—எரேமியா 10:10, 23.

விவாகத்தை யாவருக்குள்ளும் கனமுள்ளதாக வைத்தல்

5பைபிள் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்ம் அசுசிப் படாததாயுமிருப்பதாக; வேசிக் கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) ஆகவே, விவாகத்துக்கு வெளியே பாலுறவுகளில் ஈடுபடுவதைக் கடவுள் எதிர்க்கிறார். இது, முதல் மனிதனுக்கு ஒரு துணைவியை அளித்தபோது, அவ்விருவரும் நிலையான ஐக்கிய கட்டில் “ஒரே மாம்சம்” ஆவதே தம்முடைய சித்தம் என்று கடவுள் காட்டின இந்த உண்மையுடன் ஒத்திருக்கிறது. ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால், கடவுளுடைய குமாரன், தம்முடைய தகப்பன் இந்தத் தராதரத்தை விட்டுவிடவில்லை என்று காட்டினார். (ஆதியாகமம் 2:22-24; மத்தேயு 19:4-6) ஆனால் இப்படிப்பட்ட ஒரு தராதரம் அவசியமற்ற தடைக் கட்டுப்பாடுடையதாக இருக்கிறதா? நன்மையான ஏதோவொன்றை நாம் அனுபவியாதபடி இது விலக்கி வைக்கிறதா?

6விபசாரம் இந்தத் தெய்வீக தராதரத்தை மீறுவதாகிறது, மேலும் விபசாரக்காரருக்கு எதிராக நியாயத்தீர்ப்பில் தாம் “தீவிரமான சாட்சி” ஆவாரென யெகோவா தேவன் வாக்குக் கொடுக்கிறார். (மல்கியா 3:5) விவாக ஐக்கியத்துக்கு வெளியிலுள்ள ஒருவரோடு பாலுறவுகள் கொள்வதனால் உண்டாகும் கெட்ட விளைவுகள், கடவுளுடைய சட்டத்தின் ஞானத்தை அறிவுறுத்துகின்றன. விபசாரம், நம்பிக்கை முறிவையும் அவநம்பிக்கையையும் உண்டுபண்ணுகிறது. அது பாதுகாப்பற்ற நிலையை உண்டுபண்ணி விவாகத்துக்குரிய சமாதானத்தை அடியரித்துக் கெடுத்துப் போடுகிறது. இதன் விளைவாய் உண்டாகும் மனக்கசப்பும் இருதயமுறிவும் பல தடவைகளில் விவாக ரத்துக்கு வழிநடத்துகிறது. தங்கள் குடும்பம் பிளவுண்டுபோவதைக் காண்கையில் பிள்ளைகள் துயரத்துக்காளாகிறார்கள். கடவுள் விபசாரத்தைக் கண்டனஞ்செய்வது நம்முடைய நன்மைக்கேயாகும். அயலான்பேரில் மெய்யான அன்புடைய எவனும் விபசாரக் குற்றம் செய்யமாட்டான் என்று அவருடைய வார்த்தை காட்டுகிறது.—ரோமர் 13:8-10.

7நாம் கவனித்தபடி, வேசித்தனஞ் செய்கிறவர்களுக்கு விரோதமாகவும் பைபிள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்திக் கூறுகிறது. வேசித்தனம் என்றால் சரியானபடி என்ன? இந்தப் பதத்துக்குரிய பைபிளின் உபயோகம், விவாகமாகாத ஆட்கள் பாலுறவில் ஈடுபடுவதையும் அதோடு விபசாரத்தையும் உட்படுத்தலாமெனினும், இது அநேகமாய் அதைவிட மிக விரிவான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் சொன்ன கூற்றுகளைப் பதிவு செய்கையில் பயன்படுத்தப்பட்ட “வேசித்தனம்” என்ற இந்தச் சொல்லுக்குக் கிரேக்கப் பதம் போர்னியா என்பதாகும். இது நவீன பதமாகிய “போர்னோகிராபி” தோன்றிய அதே வேர்ச் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. பைபிள் காலங்களில் போர்னியா என்பது விவாகத்துக்கு வெளியே விரிவாய்ப் பரந்த சட்ட விரோதமான பாலுறவுகளைக் குறிப்பிடுவதில் பயன்படுத்தப்பட்டது. போர்னியா, (இயற்கையான அல்லது இயற்கைக்கு முரணான தகா முறையில்) குறைந்தது ஒரு மனிதனுடைய பாலுறுப்பு (அல்லது உறுப்புகள்) மிக இழிவான ஒழுக்கக்கேட்டு உபயோகம் செய்வதை உட்படுத்துகிறது. மேலும் இந்த ஒழுக்கக்கேட்டுக்கு மற்றொரு சார்பினரும்—மனிதரில் ஆணோ பெண்ணோ அல்லது ஒரு மிருகமோ—இருந்திருக்கவேண்டும்.

8“வேசிமார்க்கத்துக்கு விலகியிரு”க்கும்படி அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு வற்புறுத்திக் கூறுகையில், அதற்குப் பலத்தக் காரணங்களையும் கொடுத்து சொன்னதாவது: “இவ்விஷயத்தில் ஒருவனும் தன் சகோதரனின் உரிமைகளின்பேரில் தீங்கிழைப்பதும் அடாமுறையில் நுழைவதுமான அந்த அளவு வரையாகச் செல்லாதிருக்கவும் வேண்டுமென்பதே.” ஏனென்றால் “இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றினிமித்தமும் கர்த்தரே [யெகோவாவே, NW] பழிவாங்குகிறவர். கடவுள் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தமாவதற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டை பண்ணுகிறவன் மனுஷனையல்ல . . . கடவுளையே அசட்டை பண்ணுகிறான்.”—1 தெசலோனிக்கேயர் 4:3-8, NW, தி.மொ.

9வேசித்தனக் குற்றஞ் செய்கிறவன் நிச்சயமாகவே ‘மற்றவர்களின் உரிமைகளின்பேரில் தீங்கிழைத்து அடாத முறையில் நுழைகிறான்.’ உதாரணமாக, சட்டப் பூர்வ விவாகத்துக்குரிய நன்மை இல்லாமல் ஒன்றுசேர்ந்து வாழும் ஜோடிகளைக் குறித்ததில் இவ்வாறு இருக்கிறது. அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? தாங்கள் விரும்பியபோது இந்த ஐக்கியத்தை உதறித் தள்ளிவிடலாம் என்பதே பொதுவாய்க் காரணமாயிருக்கிறது. பொறுப்புள்ள விவாகம் கொண்டுவரவேண்டிய பாதுகாப்பை இவர்கள் தங்கள் துணைக்குக் கொடுக்கிறதில்லை. ஆனால் இருவரும் மனமொத்து, இந்த உறவில் உட்பட்டிருந்தாலும் அவர்கள் ‘மற்றவர்களின் உரிமைகளின்பேரில் தீங்கிழைத்து அடாத முறையில் நுழைபவர்களாக’ இருக்கிறார்களா? ஆம், சந்தேகமில்லாமல் அவ்வாறே இருக்கிறார்கள்.

10விபசாரக்காரருடைய செயல்களின் பல விளைவுகள் நிச்சயமாகவே ‘மற்றவர்களின் உரிமைகளின்பேரில் அடாத முறையில் நுழைகின்றன.’ ஒரு காரியமானது, வேசித்தனத்தில் பங்குகொள்ளும் எவனும் அந்த மற்றவரின் மனச்சாட்சியையும் அதோடுகூட கடவுளுடன் அவருக்கு ஒருவேளை இருந்திருக்கும் சுத்தமான நிலைநிற்கையையும் கெடுத்துப் போடுவதில் பங்குகொள்கிறான். மேலும், சுத்தமான தொடக்கத்துடன் விவாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அந்த மற்றவருக்கு இருக்கும் வாய்ப்பையும் வேசியானவன் அழித்துப்போடுகிறான். அந்த மற்ற ஆளின் குடும்ப உறுப்பினர்மீதும் அதோடு தன் சொந்தக் குடும்பத்தினரின்மீதும் அவமரியாதையையும் நிந்தனையையும், வருத்தத்தையும் அவன் பெரும்பாலும் கொண்டுவருகிறான். மேலும் அந்த மற்ற ஆளின் மனம், உணர்ச்சி, உடல் சம்பந்தப்பட்ட ஆரோக்கியத்தையும் அவன் அபாயத்துக்குள்ளாக்கலாம். பாலுறவுனால் கடத்தப்படும் உயிருக்கு ஆபத்தான AIDS (சம்பாதித்துக்கொண்ட நோய்த் தடைகாப்பு இல்லாமை நோய்க்குறி) போன்ற பயங்கர நோய்கள் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடுடன் அடிக்கடி இணைக்கப்படுகின்றன.

11இந்தத் தீங்குகளுக்குக் கவனம் செலுத்தாமல் தங்கள் கண்களை மூடிக்கொள்ள பலர் தெரிந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்களின் உரிமைகளை இவ்வாறு உணர்ச்சியற்று மதியாமற் போவதை நீதியுள்ள கடவுள் தண்டியாமல் விடுவாரென நீங்கள் நம்புகிறீர்களா? கடவுள் ஏற்படுத்தின பரிசுத்த விவாக ஏற்பாட்டை இழிவுபடுத்தவோ அவமதித்துத் தள்ளவோ அல்ல, ‘கனப்படுத்தும்படியே’ கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறது.—எபிரெயர் 13:4; மத்தேயு 22:39.

12ஓரின சம்போகத்தைப் பற்றியதென்ன? நாம் பார்த்தபடி, இயேசுவும் அவருடைய சீஷர்களும் பயன்படுத்தின சொல்லாகிய, போர்னியா (“வேசித்தனம்”) என்பதில் இந்தப் பழக்கமும் அடங்கியிருக்கிறது. சோதோம் கொமோராவின் மனிதருடைய இயற்கைக்கு மாறான பாலுறவு நடத்தைகளைக் குறிப்பிடுகையில் சீஷனாகிய யூதா இந்தச் சொல்லைப் பயன்படுத்தினான். (யூதா 7) அங்கே ஓரின சம்போகம் இழிநிலையை உண்டுபண்ணி, முறையிடும் உரத்தக் “கூக்குரலை” எழும்பச் செய்தது. அது, அந்த நகரங்களையும் அவற்றின் குடிமக்களையும் கடவுள் அழிப்பதற்கு வழிநடத்தினது. (ஆதியாகமம் 18:20; 19:23, 24) அது முதற்கொண்டு கடவுளுடைய கருத்து மாறிவிட்டதா? இல்லை. உதாரணமாக, ஒன்று கொரிந்தியர் 6:9, 10-ல் இத்தகைய ஒரு பழக்கத்தில் தொடர்ந்திருந்தால் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டார்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் “ஆண் புணர்ச்சிக்காரரும்” குறிப்பிடப்படுகின்றனர். மேலும், ‘இயற்கைக்கு மாறான உபயோகத்திற்கு மாம்சத்தை’ நாடிச் சென்று ‘அசுத்தத்தில் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்துகிற’ ஆட்களுக்கு உண்டாகும் விளைவுகளை விவரித்து, பைபிள், அவர்கள் “ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி ஆணோடு ஆண் அவலட்சணமானதை நடப்பித்துத் தங்கள் தப்பு நடக்கைக்குத்தக்க [முழு] பிரதிபலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்,” என்று சொல்லுகிறது. (ரோமர் 1:24, 27, தி.மொ.) இத்தகைய ஆட்கள் கடவுளுடைய கண்டனத்துக்குள்ளாவது மட்டுமல்லாமல், மனதும் உடலும் சீரழிவதன் “பிரதிபலனையுங்”கூட அடைகிறார்கள். உதாரணமாக, இன்று, ஓரின சம்போகக்காரருக்குள் கிரந்தி நோயும் ஏட்ஸும் (AIDS), பாலுறவினால் கடத்தப்படும் மற்ற நோய்களும் அளவு மீறிய உயர்ந்த விகிதத்தில் இருந்து வருகின்றன. கடவுளுடைய வார்த்தையில் குறித்து வைக்கப்பட்டுள்ள உயர்ந்த தராதரங்கள் ஏதோ நன்மையானதொன்றை அனுபவியாதபடி நமக்கு விலக்கி வைப்பதற்கு மாறாக, இத்தகைய தீங்குக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கிறது.

விவாகரத்தின் பேரில் கடவுளுடைய கருத்தை ஏற்றல்

13“தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்.” தங்கள் விவாகத் துணைவர்களுக்குத் ‘துரோகம் பண்ணினவர்களைத்’ தாம் கடிந்து கொண்டபோது இவ்வாறே யெகோவா தேவன் தம்முடைய உணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறினார். (மல்கியா 2:14-16) விவாகத்தை வெற்றிகரமாக்கவும் விவாகரத்துவின் மனக் கசப்பைத் தவிர்க்கவும் விவாக ஜோடிகளுக்கு உதவிசெய்ய அவருடைய வார்த்தை மிகுதியான ஆலோசனை கொடுக்கிறது. ஒருவன் தன் விவாக வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவனாக இருப்பதைப் பரிசுத்த பொறுப்பாகக் கடவுள் கருதுகிறார் என்றும் அது தெளிவாய்க் காட்டுகிறது.

14விவாகரத்துக்கு ஒரே ஒரு தகுதியான காரணத்தை மாத்திரமே அவர் அங்கீகரிக்கும் இந்த உண்மை இதை அறிவுறுத்துகிறது. இது என்னவென இயேசு காட்டினார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் [போர்னியா] செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” (மத்தேயு 19:9; 5:32) நாம் பார்த்தபடி போர்னியா என்பது விவாகத்துக்கு வெளியே, இயற்கையாகவோ இயற்கைக்கு மாறாகவோ, ஈடுபடும் பாலுறவுகளைக் குறிக்கிறது.

15ஒருவரின் விவாகத் துணைவர் வேசித்தன குற்றமுள்ளவராகையில், இது, அந்த விவாக இணைப்பைத் தானாகவே பிளந்து விடுகிறதா? இல்லை, அது பிளப்பதில்லை. குற்றமில்லாதத் துணைவர் மன்னிக்கவோ மன்னியாதிருக்கவோ தீர்மானிக்கலாம். விவாகரத்து செய்யும்படி தீர்மானிக்கையில் இவ்வுலகப் பிரகாரமான அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கிறிஸ்தவன் அங்கீகரிப்பது அந்த விவாகத்தைச் சட்டப் பூர்வமாய் ரத்து செய்யும்படி அவனைச் செய்விக்கும்; உண்மையான காரணத்தின்பேரில் அவ்வாறு செய்வான். (ரோமர் 13:1, 2) இந்த நடவடிக்கைகள் முடிவாக நிறைவேற்றப்பட்ட பின்பு மறு விவாகம் அனுமதிக்கப்பட முடியும். ஆனால் இத்தகைய விவாகம் மற்றொரு கிறிஸ்தவருடன், அதாவது, உண்மையில் “கர்த்தருக்குள்” இருப்பவருடன் மாத்திரமே செய்யப்பட வேண்டுமென வேத வார்த்தைகள் அறிவுரை கூறுகின்றன.—1 கொரிந்தியர் 7:39.

16நாட்டின் சட்டங்கள், பாலுறவு ஒழுக்கக்கேட்டுக் காரணத்தின்பேரிலும் எவ்வகை விவாகரத்துவையும் அனுமதியாவிடில் என்ன செய்வது? இப்படிப்பட்ட நிலையில், குற்றமற்றத் துணைவர், விவாகரத்து அனுமதிக்கப்படுகிற ஒரு நாட்டில் அதைப் பெறலாம். சந்தர்ப்ப நிலைமைகள் இதை ஒருவேளை சாத்தியமாக்காது. ஆனால் எதாவது ஒருவகையான சட்டப் பூர்வ பிரித்துவைப்பு ஒருவருடைய சொந்த நாட்டில் ஒருவேளை கிடைக்கலாம், அதை அவர் நாடலாம். எவ்வாறாயினும், குற்றமற்றத் துணைவர் குற்றமுள்ளவரைவிட்டுப் பிரிந்து, விவாகரத்து செய்வதற்குரிய வேதப்பூர்வ காரணத்தின் திட்டவட்டமான நிரூபணத்தை, யெகோவாவின் சாட்சிகளின்ள்ளூர் சபையிலுள்ள மூப்பருக்கு அளிக்கவேண்டும். அவர் பின்னால் வேறொரு துணையை ஏற்கும்படி தீர்மானித்தால் என்ன செய்வது? தற்போதைய விவாகத் துணைக்கு உண்மையுடனிருப்பாரென்ற வாக்குறுதியும் அந்த முந்தின விவாகம் சட்டப் பூர்வமாயோ மரணத்தாலோ முடிவுற்றால், சட்டப் பூர்வ விவாக உறுதிச் சீட்டைப் பெறுவாரென்ற ஒப்பந்தமும் அடங்கிய எழுதப்பட்ட வாக்குமூலத்தை அவர் சபைக்கு அளித்தால், சபை அவரை விபசாரக்காரரென சபைநீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்காது. எனினும், சபைக்கு வெளியேயுள்ள உலகத்தைக் குறித்தவரையில், இதனால் ஏற்படக்கூடிய எந்த விளைவுகளையும் அவர் எதிர்ப்பட்டுத் தாங்கவேண்டியிருக்கும். ஏனெனில் கடவுளுடைய சட்டம் மனித சட்டங்களுக்கு மேலானதென்பதையும், சம்பந்தப்பட்ட அதிகாரங்களையே மனிதச் சட்டங்கள் கொண்டிருக்கின்றன என்பதையும் உலகம் பொதுவாய் அங்கீகரிக்கிறதில்லை.—அப்போஸ்தலர் 5:29-உடன் ஒத்துப் பாருங்கள்.

எல்லா அசுத்தத்தையும் பால்சம்பந்த பேராசையையும் ஞானமாய்த் தவிர்த்தல்

17விவாகமான ஆட்களின் வாழ்க்கையில் பாலுறவுகள் ஒரு தகுதியான இடத்தைத் தெளிவாய்க் கொண்டிருக்கின்றன. பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கு வழியாகவும், பெற்றோருக்கு இன்பந்தரும் ஊற்றுமூலமாகவும் கடவுள் இதை அளித்தார். (ஆதியாகமம் 9:1; நீதிமொழிகள் 5:18, 19; 1 கொரிந்தியர் 7:3-5) எனினும், இந்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்தார்.—எபேசியர் 5:5.

18இன்று பால்சம்பந்தக் காரியங்களில் அழுத்தம் வைக்கப்படுவதனால் இளைஞர் பலர், தாங்கள் விவாகஞ்செய்யும் நிலைக்கு வருவதற்கு முன்பே தங்கள் ஆசை எழுப்பப்பட்டிருப்பதைக் காண்கின்றனர். இதன் விளைவாக, இவர்களில் சிலர் தங்கள் பாலுறுப்புகளைக் தாங்களாகத் தூண்டிவிடுவதன்மூலம் இன்பத்தைத் தேடுகின்றனர். இது செயற்கைத் தற்புணர்ச்சிப் பழக்கம் அல்லது தற்பழிப்பு. இது சரியான அல்லது ஞானமான பழக்கமா?

19வேத எழுத்துக்கள் பின்வருமாறு அறிவுரை கூறுகின்றன: “ஆகையால், வேசித்தனம், அசுத்தம், மோகம், துர் இச்சை , தகா பேராசை ஆகியவற்றைக் குறித்து பூமியின்மேலிருக்கும் உங்கள் உடல் உறுப்புகளை மரத்துப் போகச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:5, NW) தற்புணர்ச்சி பழக்கத்தில் ஈடுபட்டுவருகிறவன் ‘மோகத்தைக் குறித்து தன் உடல் உறுப்புகளை மரத்துப்போகச் செய்து’ கொண்டிருக்கிறானா? அதற்கு எதிர்மாறாக, அவன் அந்த மோகத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு வழிநடத்துகிற சிந்தனையையும் நடத்தையையும் ஒருவன் தவிர்க்கும்படியும், அவற்றினிடத்தை ஆரோக்கியமான செயலால் நிரப்பும்படியும், தன்னடக்கத்தை வளர்க்கும்படியும் பைபிள் அவனை ஏவி ஊக்குவிக்கிறது. (பிலிப்பியர் 4:8; கலாத்தியர் 5:22, 23) இதைச் செய்ய ஊக்கமான முயற்சி எடுத்தால், இத்தகைய தற்பழிப்பைத் தவிர்க்க முடியும், இது மனதின், உணர்ச்சிவசத்தின் மற்றும் ஆவிக்குரிய பிரகாரம் நன்மைகளைக் கொண்டுவரும்.

20“அசுத்தம், மோகம், துர் இச்சை” ஆகியவற்றைக் குறித்து பைபிள் சொல்வது, விவாகமாகாத மற்றும் விவாகமான எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவரோடொருவர் பாலுறவுகளில் ஈடுபடுவதற்கு வேதப் பூர்வ உரிமை உண்டென்பது மெய்யே. ஆனால் அவர்கள் எல்லாக் கட்டுப்பாட்டையும் எறிந்துவிடலாம் என்று இது பொருள்படுகிறதா? தன்னடக்கத்தை வளர்த்துவரும்படி கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்கள் எல்லாரையும் ஏவுகிற இந்த உண்மை இத்தகைய கருத்துக்கு எதிராக விவாதிக்கிறது. (2 பேதுரு 1:5-8) கணவன் மற்றும் மனைவியின் இனப்பெருக்கு உறுப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து பூர்த்திச் செய்யும் இயற்கையான முறையை, தேவாவியால் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளன் விளக்கிக் கூற வேண்டியதாக இல்லை. ஒரே பாலினத்தவரின் பாலுறவுகள் இந்த இயற்கையான முறையைப் பின்பற்ற முடியாதென்பது தெளிவாயிருக்கிறது. ஆகவே, ஆண்களிலும் பெண்களிலும் ஒரே பாலின புணர்ச்சிக்காரர்கள் “இழிவான இன வேட்கைகளைத்” திருப்தி செய்வதெனவும் “அவலட்சணமான” பழக்கச் செயல்கள் எனவும் அப்போஸ்தலன் குறிப்பிடுகிற வேறு முறைகளில் பாலுறவில் ஈடுபடுகிறார்கள். (ரோமர் 1:24-32, NW) விவாகமான தம்பதிகள் தங்கள் சொந்த விவாகத்தில் இத்தகைய ஒரே பாலினத்தவரின் பாலுறவு முறைகளைப் பின்பற்றி அதே சமயத்தில் கடவுளுடைய பார்வையில் தாங்கள் “இழிவான இன வேட்கைகளை” அல்லது “துர் இச்சை”களை வெளிப்படுத்துவதிலிருந்து விலகியிருக்கக்கூடுமா?

21வேத எழுத்துக்கள் சொல்வதைச் சிந்தித்துப் பார்க்கையில், ஒருவன் இந்தக் காரியங்களின்பேரில் தான் முன்பு கொண்டிருந்த எண்ணம் “எல்லா ஒழுக்க உணர்வையும் தாண்டினவர்கள்,” என்று பைபிள் சொல்லுகிறபடி இருக்கும் ஆட்களால் உருப்படுத்தப்பட்டதென்பதை உணரக்கூடும். ஆனால் நீதிக்குரிய கடவுளுடைய தராதரங்களுக்குப் பொருந்த உருப்படுத்தப்படும் “புதிய சுபாவத்தை” அவன், கடவுளுடைய உதவியைக் கொண்டு ‘தரித்துக்கொள்ளக்கூடும்.’ (எபேசியர் 4:17-24, NW) ஒருவன் தான் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புவதாகச் சொல்லுகையில் அதை உண்மையில் கருதியே சொல்லுகிறான் என்பதை இம்முறையில் காட்டுகிறான்.

உங்கள் கருத்து, உங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் முக்கியமாய்ப் பாதிக்கிறது

22பால் சம்பந்த ஒழுக்கத்தைக் குறித்து கடவுளுடைய வார்த்தை கொடுக்கிற அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவது பாரமாயில்லை. பைபிள் குறிப்பிடும் வழியின் பலனோடு உலகத்தின் உயர்ந்த விகித விவாக ரத்து, பிளவுபட்ட குடும்பங்கள், குற்றத்துக்காளாகும் பிள்ளைகள், வேசித்தனம், நோய், பாலீடுபாடு காமவெறியின் சம்பந்தமாய் நடப்பிக்கப்படும் வன்முறைச் செயல்கள், கொலைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு வேறுபாட்டைக் காணுங்கள். (நீதிமொழிகள் 7:10, 25-27) கடவுளுடைய வார்த்தையின் ஞானம் எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது! தன்னல ஆசையின்பேரில் அடிப்படை கொண்டிருக்கிற உலகச் சிந்தனையைத் தள்ளிவிட்டு, யெகோவாவின் அறிவுரைக்கு இணங்க உங்கள் சிந்தனையைக் கொண்டுவருகையில் உங்கள் இருதயம், நேர்மையான ஆசைகளில் வெகுவாய்ப் பலப்படுத்தப்படுகிறது. விரைந்து சென்றுவிடுகிற பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டு இன்பங்களுக்குப் பதிலாக, சுத்தமான மனச்சாட்சியையும் நிலைத்திருக்கும் மன சமாதானத்தையும் நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்கள். விவாகத் துணைவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நம்பிக்கை வளர்வதாலும், பிள்ளைகள் மரியாதை கொடுப்பதாலும் விவாகமும் குடும்ப இணைப்புகளும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

23நித்திய ஜீவனுக்குரிய உங்கள் நம்பிக்கைதானேயும் உட்பட்டிருக்கிறதென்ற இந்த உண்மையை மறந்துவிடாதீர்கள். வேதப் பூர்வ ஒழுக்கப் பண்பு உங்ளுடைய தற்போதைய சுகத்தைப் பார்க்கிலும் அதிகப்படியானதை உங்களுக்குக் கொடுக்கும். (நீதிமொழிகள் 5:3-11) கடவுளை மதியாத ஆட்கள் செய்யும் அருவருக்கத்தக்கக் காரியங்களினிமித்தம் நீங்கள் மெய்யாகவே புலம்புகிறீர்கள் என்பதற்கும், ஒழுக்கக்கேடு அல்ல, நீதிவாசமாயிருக்கப்போகிற கடவுளுடைய “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைத்திருப்பதற்காக நீங்கள் ‘அடையாளம்’ போடப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்குமுரிய அத்தாட்சியின் பாகமாக இது ஆகும். அப்படியானால், கடைசியாக ‘நீங்கள் கறையற்றவர்களாயும் பிழையில்லாதவர்களாயும் சமாதானத்திலும் கடவுளால் காணப்படும்படி இப்பொழுது உங்களால் இயன்றதையெல்லாம் செய்வது’ எவ்வளவு இன்றியமையாதது.—எசேக்கியேல் 9:4-6. 2 பேதுரு 3:11-14, NW.

[கேள்விகள்]

1-3. (எ) ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பாலுறவுகள் தெய்வீக அங்கீகாரத்தை உடையனவென பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (பி) ஒருவன் தன் பால் சம்பந்த சக்திகளை மனம்போனபோக்கில் கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துவது அவனுக்கு நன்மையாக இருக்குமா?

4. பால் சம்பந்தப்பட்டதில் கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்கு எது நம்மைத் தூண்டுவிக்கும் உள்நோக்கமாக இருக்கவேண்டும்?

5. விவாகத்துக்கு வெளியே பாலுறவுகளில் ஈடுபடுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

6. விபசாரத்துக்கு எதிரான கடவுளுடைய சட்டம் நம்முடைய நன்மைக்கானதே என்று எது காட்டுகிறது?

7. பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி “வேசித்தனம்” குறிப்பதை விளக்குங்கள்.

8. எந்தப் பலத்தக் காரணங்களினிமித்தம், “வேசிமார்க்கத்துக்கு விலகியிரு”க்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் வற்புறுத்திக் கூறினான்?

9, 10. (எ) எதிர்ப்பாலார் ஒருவருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறபோதிலும், சட்டப்பூர்வ விவாகஞ் செய்துகொள்வதிலிருந்து சிலர் பின்வாங்குவது ஏன்? (பி) ஒருவருக்கொருவர் ஒப்புக்கொண்டு வேசித்தனத்தில் ஈடுபட்டாலும், அது எவ்வாறு ‘மற்றவர்களின் உரிமைகளின்பேரில் தீங்கிழைத்து அடாதமுறையில் நுழைவதாக’ இருக்கிறது?

11. வேசித்தனக் குற்றத்தைக் கடவுள் பாராமல் மன்னித்துவிடுவார் என நம்புவதற்கு ஏன் எவருக்கும் எந்தக் காரணமுமில்லை?

12. (எ) ஓரின சம்போகத்தைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்? (பி) ஓரின சம்போகத்துக்கு எதிராகத் தடையுத்தரவிடும் கடவுளுடைய சட்டம் எதற்கு எதிராக நம்மைப் பாதுகாக்கிறது?

13. ஒருவன் தன் விவாக வாக்குறுதிகளுக்கு உண்மையுடனிருப்பது எத்தகைய பயபக்திக்குரியது?

14, 15. (எ) விவாகரத்து செய்வதற்குத் தகுதியான ஒரே அடிப்படை என்ன? (பி) “வேசித்தனம்” விவாக இணைப்பைத் தானாகவே பிளந்துவிடுகிறதா? (சி) எந்தச் சூழ்நிலைமைகளில் மறுவிவாகத்தை அனுமதிக்க முடியும்?

16. எந்த அடிப்படையின்பேரிலும் விவாகரத்துவை உலகப்பிரகாரமான சட்டம் அனுமதியாத நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் இந்தக் காரியத்தில் கடவுளுடைய சட்டத்துக்கு எவ்வாறு மதிப்புக் காட்டுகின்றனர்?

17. விவாகமான ஆட்களின் வாழ்க்கையில் பாலுறவுகள் கொண்டிருக்கும் தகுதியான இடத்தை வேத வசனங்களைக் கொண்டு விளக்குங்கள்.

18, 19. (எ) தற்புணர்ச்சி பழக்கம் அல்லது தற்பழிப்பு கிறிஸ்தவனுக்கு ஏன் தகுந்ததல்ல? (பி) இத்தகைய பழக்கத்தைத் தவிர்ப்பதற்கு எது ஒருவருக்கு உதவிசெய்யும்?

20. கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் கொள்ளும் தங்கள் பாலுறவுகளில் எல்லாக் கட்டுப்பாட்டையும் எறிந்துவிடுவது சரியல்லவென எது காட்டுகிறது?

21. சென்ற காலத்தில் ஒருவன் நடத்தின வாழ்க்கைமுறை எத்தகையதாயினும் இப்பொழுது அவனுக்கு என்ன வாய்ப்பு திறந்திருக்கிறது?

22. பால்சம்பந்த ஒழுக்கத்தைக் குறித்ததில் கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவோருக்கு என்ன உடனடியான நன்மைகள் உண்டாகும்?

23. பால் சம்பந்தக் காரியங்களை ஒருவன் கருதும் முறை எவ்வாறு அவன் கடவுளுடைய “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைப்பதற்கு ‘அடையாளம்’ போடப்படுவதில் ஒரு காரணமாயிருக்கிறது?