Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியெங்கும் சமாதானமும் பாதுகாப்பும்—நம்பத்தக்க எதிர்பார்ப்பு

பூமியெங்கும் சமாதானமும் பாதுகாப்பும்—நம்பத்தக்க எதிர்பார்ப்பு

அதிகாரம் 9

பூமியெங்கும் சமாதானமும் பாதுகாப்பும்—நம்பத்தக்க எதிர்பார்ப்பு

உண்மையில் சமாதானமுள்ள, பாதுகாப்பான நிலைமைகள் எங்கும் வியாபித்திருந்தால்—இந்தப் பூமி வாழ்வதற்கு மிக அதிக இன்பமும் கவர்ச்சிகரமுமான ஓர் இடமாக இருக்கக்கூடும். இப்பொழுது சற்றேனும் அவ்வாறு இராதபோதிலும், இனியும் பூமி மனித குடும்பம் வாழ்க்கையை முழு நிறைவாய் அனுபவித்து மகிழக்கூடிய மிகச் சிறந்த ஒரு வீடாகப் போகிறதென்று பைபிள் முன்னறிவிக்கிறது.

2பைபிளில் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறது? அது நிறைவேற்றமடையுமென்று நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?

நம்பிக்கை வைப்பதற்கு உறுதியான ஆதாரம்

3சர்வலோகத்தைச் சில அடிப்படையான சட்டங்கள் அடக்கியாளுகின்றன. இவற்றில் பலவற்றை நாம் ஆராய புகாமலே மெய்யென்று ஏற்றுக்கொள்ளுகிறோம். சூரிய உதயம், சூரிய மறைவு, சந்திரனின் வளர்ச்சிப் படிகள், பருவங்கள் ஆகியவை மனித வாழ்க்கையின் உறுதிநிலைப்பாட்டுக்கு உதவி அளிக்கும் ஒரு வகையில் வந்துபோய்க் கொண்டிருக்கின்றன. மனிதர் பஞ்சாங்கங்களை வகுத்து இயற்றி பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றனர். சூரியன், சந்திரன், கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் நம்பத்தக்கவையென அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4இந்தச் சட்டங்களை இயற்றியவர் முற்றிலும் நம்பத்தக்கவர். அவர் சொல்வதிலும் செய்வதிலும் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவராக அவருடைய பெயரிலேயே, நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்கு பைபிளில் வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஏசாயா 45:18, 19) நம்முடைய வாழ்க்கையின் அனுதின நடைமுறை ஒழுங்கில் மற்ற ஆட்கள்பேரில்—சந்தைக்கு உணவு கொண்டுவருகிறவர்கள், தபால் கொண்டுவந்து கொடுப்பவர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரில்—பொதுவாய் ஏதோ ஓர் அளவுக்கு நம்பிக்கை வைக்கிறோம். அப்படியானால், கடவுளிலும் அவருடைய வாக்குத்தத்தங்களின் நிச்சய நிறைவேற்றத்திலும் மிக மிக அதிக அளவில் நாம் திட நம்பிக்கை வைப்பது நியாயமல்லவா?—ஏசாயா 55:10, 11.

5மனிதரின் வாக்குகள் அடிக்கடி நம்பத்தகாதவையாக இருந்தாலும், கடவுளுடைய வாக்குகள் முற்றிலும் நம்பத்தகுந்தவை. மேலும் அவை அவருடைய சொந்த நன்மைக்கல்ல, நம்முடைய நன்மைக்கே கொடுக்கப்பட்டவை. கடவுளுக்கு நம்மிடத்திலிருந்து எதுவும் தேவையில்லை, என்றபோதிலும், தம்மில் விசுவாசம் வைக்கிறவர்கள் தம்மையும் தம்முடைய நீதியுள்ள வழிகளையும் நேசிப்பதனால் அவர் மெய்யாகவே அவர்களில் பெரும் மகிழ்ச்சியடைகிறார்.—சங்கீதம் 50:10-12, 14.

6பின்னும், பைபிள், பகுத்தறிந்து முடிவு செய்யும் நம் திறமைகளைக் கவர்ந்து தூண்டுகிறது. குருட்டுத்தனமான விசுவாசத்தையோ எளிதில் நம்பும் தன்மையையோ அது கேட்பதில்லை. உண்மையில் அது, மெய் விசுவாசத்தை “நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான மெய்ப்பிப்பு,” என்று விவரிக்கிறது. (எபிரெயர் 11:1, NW) பைபிளில் கடவுள் விசுவாசத்துக்கு நல்ல ஆதாரத்தை நமக்குக் கொடுக்கிறார். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவில் நாம் வளர்ந்துகொண்டும், அதன் சத்தியம் நம் செர்ந்த வாழ்க்கையிலும் அதன் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்திலும் செயல்படுவதைக் கண்டும் வருகையில் இந்த ஆதாரத்தின் உறுதியான தன்மை மேலும் மேலும் அதிகத் தெளிவாகிறது.—சங்கீதம் 34:8-10.

7எதிர்கால ஆசீர்வாதங்களைப்பற்றி பைபிளில் கொடுத்துள்ள வாக்குத்தத்தங்கள் மனிதர் அளிக்கத் துணிவுடன் முன்வரும் எல்லாவற்றையும் தாண்டும் மிக மேம்பட்டவை. எனினும் அந்த வாக்குத்தத்தங்கள், மனித அனுபவம் எல்லாவற்றிற்கும் எதிராகச் செல்லும் காரியங்களில் நம்பிக்கை வைக்கும்படி நம்மைக் கேட்பதில்லை. மனிதரின் இயல்பான விருப்பங்களுக்கு எதிர்மாறாகவும் அவை இல்லை. இந்த மகத்தான ஆசீர்வாதங்கள் சிலவற்றை ஆழ்ந்து கவனித்து இது எவ்வாறு உண்மையெனக் காணுங்கள்.

பூமி ஒரு தோட்ட வீடாகப்போகிறது

8பரதீஸ் என்றச் சொல் பூர்வ காலங்களில் பயன்படுத்தப்பட்ட இதற்கொப்பான சொற்களிலிருந்து (எபிரெயுவில், பர்-தீஸ்; பெர்சிய மொழியில், பாய்-ரி-தேயீஸா; கிரேக்கில், ப-ராதேய்-ஸாஸ்), அதாவது, அப்பொழுது பூமியில் உண்மையாக இருந்தக் காரியங்களை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே வருகிறது. இந்தச் சொற்கள் யாவும் அழகிய பூங்கா அல்லது பூங்காவைப் போன்ற தோட்டம் என்ற இந்த அடிப்படை கருத்தைக் கொண்டிருக்கின்றன. பூர்வ காலங்களில் இருந்ததுபோல் இன்றும் இப்படிப்பட்ட இடங்கள் பல இருக்கின்றன, இவற்றில் சில மிகப் பரந்த பெரும் பூங்காக்கள். இவற்றின் அழகின்பேரில் மனிதன் இயல்பான வாஞ்சை கொண்டிருக்கிறான். இந்த முழு கிரகமும் இத்தகைய பூங்காவைப் போன்ற தோட்டமாக அல்லது பரதீஸாக இருக்கப்போகும் அந்த நாள் வருகிறதென்று பைபிளில் வாக்குக் கொடுத்திருக்கிறது!

9கடவுள் முதல் மனித ஜோடியை சிருஷ்டித்தபோது ஏதேன் தோட்டத்தை அவர்களுக்கு வீடாகக் கொடுத்தார், ஏதேன் என்பதன் பொருள் “இன்பப் பரதீஸ்” ஆகும். ஆனால் பரதீஸ் அந்த ஓர் இடத்தில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பதில்லை. கடவுள் அவர்களிடம்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . கொள்ளுங்கள்.” என்று சொன்னார். (ஆதியாகமம் 1:28; 2:8, 9) இது பரதீஸின் எல்லைகளைப் பூமியின் கடைமுனைகள் வரையில் பரவச் செய்வதை உட்படுத்தும், கடவுள் கூறின நோக்கம் ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையின் போக்கால் முடிவு செய்யப்படவில்லை. இயேசு கிறிஸ்துதாமே தமக்கருகில் மரித்த மனிதனுக்கு, இத்தகைய பூமிக்குரிய பரதீஸில் வாழ்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுமென்று வாக்குக் கொடுத்தபோது இந்த நோக்கத்தில் திட நம்பிக்கையைத் தெரிவித்தார். (லூக்கா 23:39-43) இது எவ்வாறு நடந்தேறும்?

10வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்தில்,” கடவுள், ‘பூமியை அழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அழிவைக் கொண்டுவருவதனால்’ உள்வரும் தம்முடைய பூமிக்குரிய பரதீஸுக்கு இடையூறாயிருக்கும் எல்லாவற்றையும் நீக்கிப் போடுவார். (வெளிப்படுத்துதல் 11:18, NW) இவ்வாறு கடவுள், மனித அரசாங்கங்கள் ஒருபோதும் செய்யமுடியாததைச் செய்வார். வியாபார பேராசையைத் திருப்தி செய்ய இந்தப் பூமியைத் தன்னலத்துடன் அசுத்தப்படுத்தி வரும் எல்லாரையும், பாழாக்கும் போர்களை நடத்தும் யாவரையும், கடவுள் அருளியிருக்கிற ஏராளமான பரிசுகளை மதியாததன் காரணமாய் இந்தப் பூமியைத் தவறான முறையில் பயன்படுத்துகிற எல்லாரையும் அவர் முற்றிலும் நீக்கிப் போடுவார்.

11அப்பொழுது அந்தப் பூமி முழுவதும் அழகினால் மலர்ச்சியுறும்; அதன் காற்று, தண்ணீர், நிலம் ஆகியவை அப்பொழுது துப்புரவும் தூய்மையும் அடைந்திருக்கும். பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவது நம்பமுடியாத அல்லது மனித அனுபவத்துக்கு நேர்மாறான ஒன்று அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்ரவேல் ஜனம் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து வெளிவந்தபோது, யெகோவா தேவன் அவர்களைத் தங்கள் சுயதேசத்துக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்தார், அப்போது, அந்தத் தேசம் பயனற்றுப் பாழாய்க் கிடந்தது. எனினும், அவர்கள்மீதும் அவர்களுடைய வேலையின்மீதும் கடவுளுடைய ஆசீர்வாதம் இருந்ததன் காரணமாக அந்தத் தேசம் விரைவில் அவ்வளவு மிக அழகாக மாறினதனால் அக்கம் பக்கத்திலிருந்த ஜனங்கள்: ‘இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று!’ என ஆச்சரியத்துடன் கூறினர். மேலும் அது மிகப் பலன் தருவதாகி, பசி பஞ்சம் ஆகியவற்றின் பயமுறுத்தல் எதுவும் இல்லாமற்போகச் செய்தது. (எசேக்கியேல் 36:29, 30, 35; ஏசாயா 35:1, 2; 55:13) முன்னால் அப்போது கடவுள் செய்தது, தம்முடைய வாக்குகளை நிறைவேற்ற பூகோள அளவில் அவர் வருங்காலத்தில் செய்யப்போவதை, ஒரு சிறிய அளவில் விளக்கிக் காட்டினது. அப்பொழுது வாழ்வதற்குத் தகுதியுள்ளோராகக் கருதப்படும் எல்லா ஆட்களும் பரதீஸில் கடவுள் அருளும் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து மகிழ்வர்.—சங்கீதம் 67:6, 7; ஏசாயா 25:6.

வறுமைக்கும் பொருளாதார அடிமைத்தனத்துக்கும் முடிவு

12வறுமையும் தேசீய பொருளாதார ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதும் உலகமெங்கும் பொதுவாயிருக்கின்றன. வாழ்க்கைக்குப் போதுமானதாயிராத வெறும் பிழைப்புக்காக லட்சக்கணக்கானோர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெரிய இயந்திரத்தின் சக்கரத்தில் பொதுக்கட்டான ஒரு பல்லைப்போல் ஒருவனை இருக்கச் செய்யும் சலிப்பூட்டும் வேலையைச் செய்துகொண்டிருந்தால் பரதீஸை உண்மையில் அனுபவித்து மகிழ முடியாது.

13இந்தக் காரியத்தில் கடவுள் மனிதனுக்காகக் கொண்டிருந்தச் சித்தம், பூர்வ இஸ்ரவேலர் சம்பந்தமாக இத்தகைய காரியங்களை அவர் கட்டளையிட்ட முறையில் காணப்படுகிறது. அங்கே, ஒவ்வொரு குடும்பமும் ஒரு சுதந்தரவீத நில உடைமையைப் பெற்றது. (நியாயாதிபதிகள் 2:6) இதை விற்கலாமெனினும், தனித்த ஆட்களுங்கூட கடனுக்குட்பட்டால் தங்களைத்தாமே அடிமை வேலைக்கு விற்கலாமென்றாலும், சிறிது சிறிதாகப் பெருக்கி மிகப் பெரிய நில உடைமைகளைத் தனதாக்கி வருவதற்கு அல்லது ஆட்களை நீண்டகாலம் அடிமைத்தனத்தில் வைத்து வருவதற்கு எதிராகப் பாதுகாக்கும்படி யெகோவா இன்னும் ஏற்பாடுகளைச் செய்தார். எவ்வாறு?

14அவர் தம்முடைய ஜனத்துக்குக் கொடுத்த நியாயப் பிரமாணத்தில் செய்திருந்த பொருளாதார ஏற்பாடுகளின் மூலமாகும். அடிமைத்தனத்தின் ஏழாவது ஆண்டு ‘விடுதலை வருஷமாக’ இருந்தது, அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்த எந்த இஸ்ரவேலனும் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு 50-ம் ஆண்டும் அந்த முழு ஜனத்துக்கும் ஒரு “யூபிலி” ஆண்டாகும், அது தேசமெங்கும் அதன் குடிகளுக்கெல்லாம் “விடுதலை கூற” வேண்டிய ஓர் ஆண்டு. (உபாகமம் 15:1-9; லேவியராகமம் 25:10) விற்கப்பட்ட சுதந்தரவீத உடைமை எதுவும் அப்பொழுது அதன் முதல் உடைமையாளனுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஒருவேளை ஏழு ஆண்டுகள் கடந்திராவிடினும் அடிமைத்தனத்தில் இருந்த எல்லாரும் விடுதலை செய்யப்பட்டனர். குடும்பம் திரும்ப சந்தோஷமாய் ஒன்றுபடவும் பொருளாதார பிரகாரமாய் வாழ்க்கையைப் புதிதாய்த் தொடங்கவும் அது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய காலமாயிருந்தது. இவ்வாறு எந்த நிலமும் எல்லாக் காலத்துக்கும் விற்கப்பட்டுப் போகாது. அதன் விற்பனை உண்மையில், குறைந்தது யூபிலி ஆண்டில் முடிவடைய போகும் குத்தகைக்கு விடுவதாகவே இருந்தது.—லேவியராகமம் 25:8-24.

15இவை யாவும் அந்த ஜனங்களின் பொருளாதார திட நிலைக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் உதவியளித்தன. இந்தச் சட்டங்களைக் கைக்கொண்டபோது, இன்று பல நாடுகளில் நாம் காண்கிறதுபோல் மட்டுக்குமீறிய நிலைகளில் செல்வமும் வறுமையும் அருகருகில் இருந்துவரும் விசனகரமான காட்சிக்குள் விழாதபடி அந்த ஜனம் காத்துவைக்கப்பட்டது. தனி ஆளுக்கு உண்டாகியிருந்த நன்மைகள் அந்த ஜனத்தைப் பலப்படுத்தின, எப்படியெனில் மோசமான பொருளாதார நிலைமைகளால் எவரும் சமுதாய அடிநிலை வகுப்பாராக ஒடுக்கப்படுவோராயிருக்க வேண்டியதில்லை. அரசன் சாலொமோனின் ஆட்சியின்போது அறிவிப்பு செய்யப்பட்டபடி: “யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச் செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:25) இன்று பலர் தங்களுடைய எல்லாத் தனித் திறமைகளையும், முயற்சிதொடங்கும் பண்பையும் பயன்படுத்த முடியாது, ஏனெனில், ஒருசிலரின் அல்லது ஒரே ஆளின் விருப்பங்களைச் சேவிக்கும்படி வற்புறுத்தும் பொருளாதார ஒழுங்கு முறைகளுக்குள் அவர்கள் அகப்பட்டிருக்கின்றனர். கடவுளுடைய சட்டங்களின்கீழ், ஊக்கமாய் உழைக்கும் ஆள் தன் திறமைகளை எல்லாருடைய சுகநலனுக்காகவும் சந்தோஷத்துக்காகவும் பயன்படுத்தும்படி உதவி செய்யப்பட்டான். இது, கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனடைகிறவர்கள் அனுபவித்துக் களிக்கப்போகும் தனிப்பட்டவருடைய தகைமை மற்றும் மதிப்புணர்ச்சியைப் பற்றி நமக்குக் குறிப்பாய்த் தெரிவிக்கிறது.

16மீகா 4:3, 4-ன் தீர்க்கதரிசனம் பூமியெங்கும் அதிசயமாய் நிறைவேற்றமடையும். கடவுளுடைய நீதியுள்ள ஆட்சியின்கீழ் வாழும் சமாதானத்தை நேசிக்கும் ஆட்கள் “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளின் யெகோவாவினுடைய வாய் இதைச் சொல்லிற்று.” (தி.மொ.) கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் எவரும், ஏழ்மைப்பட்ட அழுக்கடைந்த சேரிகளிலும் நெருக்கமான வாடகைக் குடியிருப்புகளிலும் வாழமாட்டார்கள். அவர்கள் தங்களுக்குச் சொந்தமாயிருக்கும் நிலத்தையும் வீடுகளையும் கொண்டிருப்பார்கள். (ஏசாயா 65:21, 22) ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்,’ என்று அரசர் கிறிஸ்து இயேசு வெகுகாலத்துக்கு முன்னால் வாக்குக் கொடுத்தார். இது நடக்கும்படி பார்த்துக்கொள்ள ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்’ அவருக்கு இருக்கிறது.—மத்தேயு 5:5; 28:18.

நீடித்திருக்கும் உடல் நலமும் உயிரும்

17எனினும், நோயும் முதுமையும் மரணமும் எதிர்காலத்தைத் துயரமுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் வரையில் இந்த மிகச் சிறந்த நிலைமைகள் எதுவும் வாழ்க்கையை மெய்யாய்ச் சமாதானமும் பாதுகாப்புமுள்ளதாக்க முடியாது. வருத்தந்தரும் இந்தக் காரியங்களிலிருந்து விடுதலையடைய நம்புவது பகுத்தறிவுக்கோ மனித அனுபவத்துக்கோ மாறானதா? இதை விரும்புவது நிச்சயமாகவே மனித இயல்புக்கு மாறாக இல்லை, ஏனென்றால் இதை நிறைவேற்றும் முயற்சியில் மனிதர் தங்கள் வாழ்நாட்களையும் சொல்லமுடியாத அளவான பணத் தொகைகளையும் செலவிட்டிருக்கின்றனர்.

18நீடித்திருக்கும் உடல் நலத்தையும் உயிரையும் அடைவதைப் பற்றிய நம்பிக்கை பகுத்தறிவுக்குப் பொருந்தாமல் இல்லை. உண்மையில், நியாயத்துக்குப் பொருந்தாதிருப்பது பின்வரும் இதுவே: மனிதர், அறிவையும், அனுபவத்தையும், பயனுள்ள காரியங்களைச் செய்யும் திறமையையும் கொண்டிருக்கத் தொடங்கும் ஒரு வயதை அடைகையில், அவர்கள் வயோதிபமடைய தொடங்கி பின்பு இறுதியில் மரிக்கின்றனர். எனினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும் மரங்கள் இருக்கின்றன! கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் ஏன், அறிவற்ற சில தாவரம் உயிர்வாழும் காலத்தில் ஒரு சிறு பகுதி அளவான காலம் மாத்திரமே உயிர்வாழ வேண்டும்? நியாயப்படி அவன் அவற்றைப் பார்க்கிலும் மிக மிக அதிகக் காலம் நீடித்து வாழவேண்டுமல்லவா?

19முதுமைப்படுதலைப் பற்றி ஆராய்ச்சிசெய்யும் நிபுணர்களுக்கு இந்த முதுமைப்படும் பாங்கு பெரும்பாலும் விளங்கா புதிராகவே இன்னும் இருக்கிறது. மனித மூளை உண்மையில் எல்லையற்ற அளவுகளில் தகவலை உட்கொள்ளும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிற இந்த உண்மையுங்கூட திகைக்கவைக்கும் புதிராயிருக்கிறது. ஒரு விஞ்ஞான எழுத்தாளர் சொன்னபடி, மூளை, “மனிதர் அதன்மீது வைக்கக்கூடிய கல்வியறிவும் ஞாபகமுமானவற்றின் எந்த பளுவையும்—மேலும் அந்த அளவைப் பார்க்கிலும் நூற்றுக் கோடிக்கணக்கான மடங்குகள் அதிகப்பட்டதையுங்கூட—கையாள முற்றிலும் திறமையுடையது.”55அது, 70 அல்லது 80 ஆண்டுகள் நீடிக்கும் ஆயுள்காலத்தில் நீங்கள் அதன்மீது வைக்கும் எந்தப் பளுவையும் மட்டுமேயல்ல, அதைப்போல் நூறு கோடி மடங்குகள் இன்னும் கூடுதலான பளுவையும் கையாள உங்கள் மூளை திறமையுள்ளதென்று குறித்துக் காட்டுகிறது! அறிவைப் பெற அப்பேர்ப்பட்ட நாட்டமும், காரிங்களைச் செய்யவும் நிறைவேற்றவும் கற்றுக்கொள்ள அப்பேர்ப்பட்ட ஆவலும் மனிதனுக்கு இருப்பதில் அதிசயமொன்றுமில்லை. எனினும், அவனுடைய வாழ்க்கை குறுகிய தாயிருப்பதால் அவன் தடுத்து நிறுத்தப்படுகிறான். மனித மூளை அதிசயமான மிகப் பேரளவான திறமையைக் கொண்டிருக்கையில், அதன் ஆற்றல்வளத்தில் மிகச் சிறிய பின்னப் பகுதி மாத்திரமே பயன்படுத்தப்படுவது விளங்கிக் கொள்ள முடிகிற அறிவாயிருக்கிறதா? பைபிள் காட்டுகிறபடி, மனிதன் பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு யெகோவா தேவன் அவனைத் திட்டமிட்டு அமைத்து, அந்த நோக்கத்துக்குப் பயன்பட நேர்த்தியாய்ப் பொருந்திய ஒரு மூளையை அவனுக்குக் கொடுத்தார் என்ற முடிவுக்கு வருவது மிக அதிகப் பொருத்தமாயிருக்கிறதல்லவா?

20ஆரம்பத்தில் மனிதன் என்றென்றும் வாழும் வாய்ப்பைக் கொண்டிருந்தான், ஆனால் கலகத்தின்மூலம் அதை இழந்தான் என்று பைபிள் காட்டுகிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமினால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆனால் திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில் “இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா.” என்ற கடவுளுடைய வாக்குத்தத்தமும் பைபிளில் அடங்கியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4, தி.மொ.; 7:16, 17, ஒத்துப் பாருங்கள்.) பாவத்தின் விளைவுகள் நீங்கிய நித்திய ஜீவனே மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய நோக்கம் என்று அது கூறுகிறது. (ரோமர் 5:21; 6:23) இதற்கும் அதிகமாய்க் கடவுளுடைய புதிய ஒழுங்கின் இந்த ஆசீர்வாதங்கள் கடந்த காலத்தில் மரித்த கோடிக் கணக்கானோருக்கும் திறந்து வைக்கப்படுமென்று அதில் வாக்குக் கொடுத்திருக்கிறது. எவ்வாறு? மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக் குழியை வெறுமையாக்கும் உயிர்த்தெழுதலின் மூலமே. இயேசு திட நம்பிக்கையுடன் பின்வருமாறு முன்னறிவித்தார்: “அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள்.”—யோவான் 5:28, 29, NW.

21இன்று மருத்துவ விஞ்ஞானம் “அற்புத மருந்துகளை” உண்டுபண்ணவும் ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பு நம்ப முடியாதவையாகத் தோன்றியிருக்கும் அறுவை மருத்துவ அருஞ் செயல்களை நடப்பிக்கவும் கூடியதாயிருக்கிறது. மனிதரைச் சிருஷ்டித்தவர் இவற்றைப் பார்க்கிலும் மிக அதிக அதிர்ச்சியூட்டும் சுகப்படுத்தும் அருஞ் செயல்களைச் செய்யக்கூடுமென்பதை நாம் சந்தேகிக்கலாமா? நீதியுள்ள இருதயத்தையுடைய ஆட்களை ஆரோக்கியத்தால் துடிக்கும் உடல் நலத்துக்குத் திரும்ப நிலைநாட்ட, முதுமையடையும் போக்கையும் எதிர்முகமாகத் திருப்ப நிச்சயமாகவே சிருஷ்டிகருக்கு வல்லமையுண்டு. மேலும், மருந்துகளையோ, அறுவை மருத்துவத்தையோ, செயற்கை உறுப்புகளையோ உதவியாக நாடாமல் அவர் அதைச் செய்ய முடியும். இத்தகைய ஆசீர்வாதங்களுக்காக நம்பி காத்திருப்பது மட்டுக்குமீறி எதிர்பார்ப்பதல்லவெனக் காட்டும் அத்தாட்சிகளைக் கடவுள் நமக்கு இரக்கமாய் அளித்திருக்கிறார்.

22தம்முடைய குமாரன் பூமியிலிருக்கையில் வல்லமைவாய்ந்த சுகப்படுத்தும் செயல்களை நடப்பிக்கும்படி கடவுள் அவருக்கு அதிகாரமளித்தார். இந்தச் செயல்கள் எந்தப் பலவீனமோ, ஊனமோ, நோயோ சுகப்படுத்துவதற்கான கடவுளுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டில்லையென நமக்கு நிச்சயமளிக்கின்றன. தன் மாம்சம் குஷ்டரோகத்தால் நிரம்பியிருந்த ஒரு மனிதன், தன்னைச் சுகப்படுத்தும்படி இயேசுவைக் கெஞ்சிக் கேட்டபோது, இயேசு இரக்கத்துடன் அந்த மனிதனைத் தொட்டு: “சுத்தமாகு” என்று சொன்னார். சரித்திரப் பதிவு சொல்லுகிற பிரகாரம், “உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.” (மத்தேயு 8:2, 3) சரித்திராசிரியனாகிய மத்தேயு அறிவிக்கிறபடி, இயேசு இதைப் போன்ற காரியங்களைப் பல சாட்சிகளின் முன்னிலையில் வெளிப்படையாகச் செய்தார்: “சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையர் முதலிய அநேகரைத் திரளான ஜனங்கள் அவர் பாதத்தில் கொண்டுவந்து விட்டார்கள்; அவர்களை அவர் குணமாக்கினார். . . . ஜனங்கள் கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.” (மத்தேயு 15:30, 31, தி.மொ.) இத்தகைய சுகப்படுத்தல்களைப் பற்றிய சரித்திரப் பூர்வ அறிவிப்பு எவ்வளவு உண்மைப்படியும் வாழ்க்கை நடைமுறைக்குப் பொருத்தமாயும் இருக்கிறதென்பதைக் காண யோவான் 9:1-21-ல் உள்ள விவரத்தை நீங்கள்தாமே வாசித்துப் பாருங்கள். இந்தச் சம்பவங்களின் உண்மைக்கு மருத்துவனான லூக்கா உட்பட பல சாட்சிகள் சாட்சிபகர்ந்திருக்கின்றனர்.—மாற்கு 7:32-37; லூக்கா 5:12-14, 17-25; 6:6-11; கொலோசெயர் 4:14.

23இவற்றைப்போன்ற காரணங்களினிமித்தம் “மரித்தோர் உயிர்த் தெழுந்திருப்பது உண்டென்ற” பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கை, நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதென நாம் கருதவேண்டியதில்லை. (அப்போஸ்தலர் 24:15) ஒருவன் மரித்துப் பல ஆண்டுகள் சென்ற பின்னும் அவனுடைய குரல், தோற்றம், செயல்கள் ஆகியவற்றை மென்தகட்டின் அல்லது தொலைக்காட்சி நாடாவின் பதிவிலிருந்து திரும்பக் கொண்டுவரக்கூடும். மனிதனைச் சிருஷ்டித்தவரும், ஆகவே இழையும் வழுவாமல் சரியாய் மனிதனின் அணுவும் அணுதிரண்மமுமானவற்றின் அமைப்பைத் தெரிந்திருக்கிறவருமானவர் அதைப் பார்க்கிலும் மிக அதிகம் செய்ய வல்லவர் அல்லவா? மனிதன் உண்டுபண்ணின கணக்கிடும் பெரிய பொறிகள் சொல்லர்த்தமாய் நூற்றுக் கோடிக்கணக்கான செய்திக் குறிப்பு துணுக்குகளைத் தொகுத்து ஓரினப்படுத்தக் கூடும். ஆனால் கடவுள் மலைக்கவைக்கும் இப்பிரபஞ்சத்தை அதன் நூற்றுக்கோடிக்கணக்கான பால்வீதி மண்டலங்களுடன் சிருஷ்டித்தார், ஒவ்வொரு பால்வீதி மண்டலமும் நூற்றுக்கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்தம் ஆயிரங்கோடி, கோடி கோடிக்கும் மேற்பட்டதாகிறது! எனினும், சங்கீதம் 147:4 சொல்வதாவது: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்!” இத்தகைய மிகப் பெரும் ஞாபக சக்தியையுடைய கடவுளுக்கு, ஆட்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவர தனித்தனியே அவர்கள் ஒவ்வொருவருடைய சுபாவத்தன்மைகளையும் மறவாதிருப்பது நிச்சயமாகவே வெகு எளிதாகும்.—யோபு 14:13.

24மேலும், இத்தகைய அதிசயமான நம்பிக்கையில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு யெகோவா தேவன் சரித்திரப் பூர்வ முன்மாதிரிகளைக் கொடுத்தார். தம்முடைய குமாரன் பூமியின்மேல் தம்முடைய நீதியுள்ள ஆட்சியைச் செலுத்தும் காலத்தின்போது பெரிய அளவில் செய்யப் போவதை சிறிய அளவில் கண்கூடாகச் செய்து காட்டும்படி அவருக்குக் கடவுள் வல்லமையைக் கொடுத்தார். மரித்த சில ஆட்களை இயேசு உயிர்த்தெழுப்பினார், அநேகத் தடவைகளில், பார்த்துக் கொண்டிருக்கும் எல்லாருடைய முன்னிலையிலும் இதைச்செய்தார். எருசலேமுக்கு அருகில் அவர் உயிர்த்தெழுப்பின லாசரு, மரித்து அவனுடைய உடல் அழுகத் தொடங்குவதற்கும் போதிய அளவான காலம் சென்றுவிட்டிருந்தது. நிச்சயமாகவே உயிர்த்தெழுதலின் நம்பிக்கை நல்ல ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது.—லூக்கா 7:11-17; 8:40-42, 49-56; யோவான் 11:38-44.

இவ்வளவு ஜனத்தொகையைக் கொண்டிருக்க பூமியின் ஆற்றல்

25மரித்தோர் உயிர்த்தெழுவதனால் உண்டாகும் இத்தனை பெரும் ஜனத்தொகைக்கு வசதியாக வாழும் இடத்தை இந்தக் கிரகம் அளிக்கக்கூடுமா? 1800-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் பூமியின் ஜனத்தொகை ஒரு நூறு கோடியை எட்டுவதற்கு 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் எடுத்தது. இன்று, அது ஏறக்குறைய ஐந்நூறு கோடியை எட்டியிருக்கிறது.

26ஆகையால், இன்று உயிரோடிருக்கிறவர்கள், பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கையின் ஒரு பெரும் பகுதியைக் குறிக்கின்றனர். மனித சரித்திரம் முழுவதிலும் மொத்த ஜனத்தொகை ஏறக்குறைய 15,00,00,00,000 ஆட்களென சிலர் மதிப்பிட்டிருக்கின்றனர். பூமியின் நிலப்பகுதி 36,00,00,00,000 ஏக்கர்களுக்கு மேற்பட்டது. இது ஒவ்வொரு ஆளுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட ஏக்கர்களை அனுமதிக்கும். இது உணவு உற்பத்திக்கு இடமளிப்பதுமட்டுமல்லாமல் காடுகளுக்கும், மலைகளுக்கும், மற்றும் வேறு இயற்கைக் காட்சி பகுதிகளுக்கும்—பரதீஸில் தகாத நெருக்கமெதுவும் இல்லாமல்—இடமளிக்கும். பின்னும், இப்பொழுது வாழும் எல்லாரும் தப்பிப்பிழைத்து அந்தப் புதிய ஒழுங்கில் வாழப்போவதில்லையென்றும் பைபிள் காட்டுகிறது. “அழிவுக்குப் போகும் வழி அகலம், வாசலும் விரிவு; அதின் வழியாய் உட்செல்கிறவர்கள் பலர்,” என்று நிச்சயமாகவே இயேசு சொன்னார். மேலும், உலக அழிவு வருகையில், யெகோவாவின் சித்தத்தைச் செய்துகொண்டிராத எவரும் “நித்திய அறுப்புண்டுபோதலுக்குள் செல்லவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.—மத்தேயு 7:13; 25:46, NW.

27ஆனால் இத்தனை பல மக்களுக்குப் போதுமான உணவை இந்தப் பூமி விளைவிக்கக் கூடுமா? இன்றைய நிலைமைகளின் கீழும் அது அவ்வாறு விளைவிக்கக்கூடுமென விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். டொரோன்டோ ஸ்டார் என்பதில் ஓர் அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “ஐக்கிய நாட்டு உணவுக்கும் விவசாயத்துக்குமுரிய அமைப்பு (FAO) சொல்லுகிறபடி, பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு 3,000 கலோரி வீதம் உணவளிக்க ஏற்கெனவே பூகோள முழுவதிலும் போதிய தானியம் விளைவிக்கப்படுகிறது, இது . . . ஏற்கத்தகுந்த குறைந்த மட்டளவுக்குமேல் ஏறக்குறைய 50% உயர்ந்ததாகும்.”56எதிர்காலத்தைக் குறித்து, இன்றைய நிலைமைகளின் கீழும், தற்போதைய உலக ஜனத்தொகைக்கு இரட்டிப்பான மக்களின் தேவைகளைத் திருப்திசெய்ய போதிய உணவு இருக்கக் கூடுமென அது விளக்கிற்று. மேலும், பூமியின் விவசாய மூலவாய்ப்பு வளத்தைச் சரியானபடி பயன்படுத்த யெகோவா தம்முடைய ஜனத்தை வழிநடத்துவார் என்பதையும் நாம் நினைவுகூரவேண்டும். இவ்வாறே சங்கீதம் 72:16 (NW) நமக்கு உறுதியளிக்கிறது: “பூமியில் ஏராளமான தானியம் இருக்கும்; மலைகளின் உச்சியில் பொங்கிவழியும்.”

28முதல் மானிட ஜோடிக்கு ஆரம்பத்தில் கூறின கடவுளுடைய நோக்கம் என்னவென்று நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஏதேனின் எல்லைகளைப் பூமியின் கடைகோடிகள் வரையாக விரிவாக்கும்படி “பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்த”வேண்டும் என்று சொல்லப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:28) தெளிவாகவே இது, பூமியை மக்களால் வரம்புமீறி நிரப்புவதையல்ல, அதைச் செளகரியமான அளவுக்கு, நிரப்புவதையே குறிக்கிறது. ‘கீழ்ப்படுத்தப்பட்ட’ பூமி, மனிதனின், பூங்காவைப் போன்ற முதல் வீட்டின் மாதிரிபடி, ஒரு பூகோள பூங்காவாக இருப்பதற்கு அது இன்னும் இடமளிக்கும். ஆகவே, ஜனத்தொகை வளர்ச்சி, கடவுளுடைய உரிய காலத்திலும் வழியிலும் கட்டுப்படுத்தப்படுமென இந்தத் தெய்வீகக் கட்டளை குறிப்பாய்த் தெரிவிக்கிறது.

நிலையான மகிழ்ச்சிக்கு உறுதியான ஆதாரம்

29எனினும், அழகிய சுற்றுப்புறங்களும், பொருள்சம்பந்த செழுமையும், ஆர்வத்தைத் தூண்டும் வேலையும், நல்ல சுகமும் உங்கள் மகிழ்ச்சி நிலையாயிருக்குமென உறுதியளிக்காது. இன்று பலர் இந்தக் காரியங்களைக் கொண்டிருக்கிறார்கள், என்றாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியில்லை. ஏன்? ஏனென்றால் அவர்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் தன்னலக்காரராயும், சண்டைக்காரராயும், பாசாங்குக்காரராயும், அல்லது பகைக்கிறவர்களாயும் இருக்கலாம். கடவுளுடைய புதிய ஒழுங்கில் நிலையான மகிழ்ச்சி பூமியெங்கும் ஜனங்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே பேரளவில் வரும். கடவுள்மீதுள்ள அவர்களுடைய அன்பும் மரியாதையும் அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற அவர்களுடைய ஆவலும் ஆவிக்குரிய செழுமையைக் கொண்டுவரும். இது இல்லாமல், பொருள்சம்பந்த செழுமை திருப்தி தராததாயும் வெறுமையாயும் ஆகிறது.

30ஆம், நீங்கள் உண்மையில் நேசித்து நம்பக்கூடிய, மேலும் அவர்கள்தாமே உங்களைப் பற்றி அதே முறையில் உணரும்—தயவும் மனத்தாழ்மையும், சிநேகப்பான்மையுமுள்ள ஆட்கள் மத்தியில் இருப்பது உண்மையில் இன்பந்தருகிறது. (சங்கீதம் 133:1; நீதிமொழிகள் 15:17) கடவுளை நேசிப்பதே அயலானை நேசிக்கும் மெய்யான நேசத்தை உறுதிப்படுத்துகிறது. இது அவருடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் வாழ்க்கையை அவ்வளவு அதிக இன்பகரமாக்கும். கடவுள் தயவுகூர்ந்து நித்திய ஜீவனை அளிக்கப்போகும் யாவரும் கடவுள் பேரிலும் தங்கள் அயலான்பேரிலும் தங்கள் அன்பை நிரூபித்திருப்பார்கள். இத்தகைய அயலாரும், நண்பர்களும், வேலைத்தோழர்களும், சூழ்ந்திருக்க, நீங்கள் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலையான மகிழ்ச்சியையும் அனுபவித்துக் களிக்க முடியும்.—1 யோவான் 4:7, 8, 20, 21.

31மெய்யாகவே, இப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான எதிர்பார்ப்பு உங்களுக்குத் திறந்திருக்கிறது! ஆகவே அதைப் பெற்றுக்கொள்ள என்ன தேவை என்பதைக் கண்டுபிடிப்பது நடைமுறைக்குரிய ஞானமான போக்காகும். வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்தி”னூடே அழிக்காமல் உயிர்தப்பவிடுவதற்குக் கடவுள் கட்டளையிடும் தகுதிகளுக்கிணங்க உங்கள் வாழ்க்கையைச் சரிசெய்வதற்கான காலம் இதுவே.—2 பேதுரு 3:11-13.

[கேள்விகள்]

1, 2. பைபிளில் முன்னறிவித்துள்ள என்ன நிலைமைகள், இந்தப் பூமியை, வாழ்வதற்கு மிக அதிக இன்பமான இடமாக்கும்?

3, 4. (எ) இந்தச் சர்வலோகத்தைக் கட்டுப்படுத்தும் அடிப்படை சட்டங்களின் நம்பத்தக்கத் தன்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? (பி) அந்தச் சட்டங்களை இயற்றியவர் யார்? ஆகவே வேறு எதிலும் நம் நம்பிக்கையை வைப்பதற்கு நமக்கு நல்லக் காரணம் இருக்கிறது?

5. கடவுள் வாக்குக் கொடுத்திருப்பதில் எவ்விதத் தன்னல உள்நோக்கமும் இல்லாதது எப்படி நமக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறது?

6. என்ன வகையான விசுவாசத்தை அடையும்படி பைபிள் நமக்கு உதவி செய்கிறது?

7. எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றிய பைபிளின் வாக்குத்தத்தங்களை நாம் ஆராய்கையில், அவற்றில் நம்பிக்கை வைப்பது, நம்மிடத்தில் என்ன கேட்குமென்று நாம் எதிர்பார்க்கக்கூடாது?

8, 9. (எ) “பரதீஸ்” என்ற பதம் என்ன எண்ணத்தை நம்முடைய மனதில் கொண்டுவரவேண்டும்? (பி) இத்தகைய ஒன்று பூமியில் எப்பொழுதாவது இருந்ததா? (சி) பரதீஸ் பூமி எங்கும் வியாபித்திருக்க வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமென எது காட்டுகிறது?

10. வெளிப்படுத்துதல் 11:18-ல் சொல்லியிருக்கிறபடி பரதீஸுக்குத் தடையாயிருக்கும் என்ன இடையூறுகளை நீக்குவதாகக் கடவுள் வாக்குக் கொடுக்கிறார்?

11. (எ) பூமியைப் பாதீஸிய நிலைமைக்குத் திரும்பக் கொண்டுவருவது மனித அனுபவத்துக்கு நேர்மாறாக இல்லையென எந்தச் சரித்திரப் பூர்வ சம்பவம் காட்டுகிறது? (பி) வாக்குபண்ணப்பட்ட எந்த ஆசீர்வாதத்தில் இது நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது?

12. வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க பொருளாதார மற்றும் வேலை சம்பந்தப்பட்ட என்ன நிலைமைகள் சரிசெய்யப்பட வேண்டும்?

13-15. (எ) இந்தக் காரியத்தில் கடவுள் மனிதனுக்காகக் கொண்டிருக்கும் சித்தம் என்னவென காட்டும் சரித்திரப் பூர்வ முன்மாதிரியை நாம் எங்கே காண்கிறோம்? (பி) ஒவ்வொரு தனி ஆளும் குடும்பமும் வாழ்க்கையில் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பதற்கு இந்த ஏற்பாடு எவ்வாறு உதவிசெய்தது?

16. வாழ்க்கை நிலைமைகளையும் ஒருவரின் பொருளாதார சூழ்நிலைமைகளையும் குறித்ததில் கடவுளுடைய ராஜ்யம் அதன் குடிமக்கள் எல்லாருக்கும் எதை ஏற்பாடு செய்து தரும்?

17-19. (எ) உடல்நலத்தையும் நீடித்த வாழ்க்கையையும் விரும்புவது மனிதவர்க்கத்துக்கு இயல்பானதென எது காட்டுகிறது? (பி) மனித வாழ்க்கையையும் தாவரவர்க்கத்தையும் பற்றிய என்ன உண்மைகள் மனிதனின் குறுகிய வாழ்க்கைக் காலத்தை விசித்திரமாய்த் தோன்றச் செய்கின்றன? (சி) மனித மூளையைப் பற்றிய என்ன காரியம், மனிதன் என்றும் வாழ்வதற்குத் திட்டமிட்டு அமைக்கப்பட்டான் என்று நம்புவது நியாயமெனக் காட்டுகிறது?

20. மரணம் உட்பட பாவத்தின் விளைவுகளைக் குறித்து கடவுள் மனிதவர்க்கத்துக்கு என்னசெய்ய வாக்குக் கொடுத்திருக்கிறாரென பைபிளில் சொல்லியிருக்கிறது?

21, 22. முழு உடல்நலத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்படும் எதிர்பார்ப்பு ஏன் நம்புவதற்கு மட்டுக்கு மீறியதாயில்லை?

23, 24. மரித்தோர் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுவரென நம்புவது ஏன் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாயில்லை?

25, 26. மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுகையில் எல்லாரும் வாழ்வதற்கு இடம் எங்கிருக்கும்?

27. அவர்கள் எல்லாருக்கும் போதிய உணவை இந்தப் பூமி விளைவிக்கக்கூடுமா?

28. மக்கள் என்றென்றும் வாழ்ந்திருக்க, காலாகாலத்தில் இந்தப் பூமி மட்டுக்குமீறி நெருக்கமுள்ளதாகும் என்ற அபாயம் ஏன் இல்லை?

29. மற்ற ஆட்களோடுள்ள உறவுகள் ஒருவனின் மகிழ்ச்சியை எவ்வாறு பாதிக்கின்றன?

30. கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ்வோர் மற்றவர்களின் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் உதவியாயிருக்கும் ஆட்களாக மாத்திரமே இருப்பரென நாம் எவ்வாறு அறிவோம்?

31. கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனடைய நாம் உண்மையில் விரும்பினால் இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

[பக்கம் 98-ன் படம்]

பூமி முழுவதும் பரதீஸாக மாற்றப்படவிருக்கும் அந்த நாள் சீக்கிரம் வருகிறது