Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களைப் பற்றி ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?

மற்றவர்களைப் பற்றி ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?

அதிகாரம் 15

மற்றவர்களைப் பற்றி ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?

மற்றவர்கள்பேரில் தன்னலமற்ற அக்கறை கொள்வது இன்று வெகு அரிதாயிருக்கிறது. நேசிக்கும் ஆற்றலுடன் எல்லாரும் பிறந்திருக்கிறபோதிலும், மற்றவர்கள் நேர்மையற்ற முறையில் தங்கள் சொந்த அனுகூலத்தைத் தேடுகையில் அல்லது அன்பு காண்பிக்க ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சிகள் தவறாகக் கருதிக் கொள்ளப்படுகையில் அவர் வெறுமென தனக்கானவற்றை மாத்திரம் பார்த்துக்கொள்வதே சிறந்ததென முடிவு செய்யலாம். தங்கள் உடனொத்த மனிதரைச் சுரண்டிப் பிழைக்கிற சிலர் பொருள் சம்பந்தமாய்ச் செழிப்பதைக் கண்டு, மற்றவர்கள், இதுவே வெற்றிக் காண்பதற்கு வழியென எண்ணலாம். இதன் விளைவு என்னவெனில், பலர் அவநம்பிக்கையான ஆவியைக் கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு உண்மையான நண்பர்கள் எவராவது இருந்தால், அவர்கள் வெகு சொற்பப்பேரே. காரியங்களின் இந்த வருந்தத்தக்க நிலைக்குக் காரணம் என்ன?

2அன்பே தேவைப்படுகிறது. மற்றவர்களின் நிலையான சுகநலத்துக்காக உள்ளார்ந்த அக்கறை கொள்வதில் தன்னை வெளிப்படுத்துகிற வகையான அன்பே தேவை. இது ஏன் காணப்படுகிறதில்லை. இந்தப் பிரச்னையின் மூலகாரணத்துக்கு நேரே சென்று, பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) மெய்யே தன்னலத்தை நாடிக்கொண்டிருக்கும் பல ஆட்கள் கடவுளில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உரிமை பாராட்டுகிறார்கள், சர்ச்சுக்கும் போகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவர்கள் உண்மையில் கடவுளை அறியவில்லை. கடவுளை அறிவது, அவருடைய குண இயல்புடன் நன்றாய்ப் பழக்கப்பட்டிருப்பதையும், அவருடைய அதிகாரத்தை அங்கீகரிப்பதையும், பின்பு அவரைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கு இணங்க நடப்பதையும் குறிக்கிறது. (எரேமியா 22:16; தீத்து 1:16) அப்படியானால், அன்பை வெளிப்படுத்திக் காட்டியும் அதைப் பெற்றும் வருகையில் மாத்திரமே வாழ்க்கையில் கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சி அனுபவத்தைக் கண்டடைய, நாம் கடவுளை நன்றாய் அறிய பிரயாசப்படவும், கற்பதைப் பொருத்திப் பயன்படுத்தவும் வேண்டும்.

3“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது,” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான். “நாம் தேவனிடத்தில் [முதலாவது] அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (1 யோவான் 4:9-11) மனிதவர்க்கத்தின் அன்பற்ற நடத்தை தம்முடைய சொந்த அன்பைத் தணியவைக்கக் கடவுள் அனுமதிக்கவில்லை. ரோமர் 5:8-ல் கூறப்பட்டிருக்கிறபடி: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”

4உங்களுக்கு ஒருபோதும் ஒன்றும் செய்திராத ஒருவருக்கு உங்கள் உயிரைக் கொடுக்க மனமுள்ள அந்த அளவுக்கு நீங்கள் எத்தனை ஆட்களை நேசிக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், உங்கள் பிள்ளையை அவருக்காக மரிக்கவைக்கும்படி நீங்கள் மனங்கொள்ளும் எவராவது உண்டா? கடவுள் நமக்குக் காட்டினது இந்த வகையான அன்பே. (யோவான் 3:16) இதை அறிவது கடவுளிடம் எவ்வாறு உணரும்படி உங்களைச் செய்விக்கிறது? அவர் செய்திருப்பதை நாம் உண்மையில் நன்றியோடு மதித்துணர்ந்தால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை எவ்வகையிலும் பாரமாக நாம் காணமாட்டோம்.—1 யோவான் 5:3.

5தம்முடைய மரணத்துக்கு முந்தின இரவில், இந்தக் கட்டளைகளில் ஒன்றை இயேசு தம்முடைய சீஷருக்குக் கொடுத்தார். இது அவர்களை, இவ்வுலகத்திலுள்ள மற்றவர்களிலிருந்து வேறுபட்டிருப்பதாக அடையாளப்படுத்திக் காட்டும். அவர் பின்வருமாறு கூறினார்: “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” வெறுமென தங்களில் தாங்கள் அன்புகூர்ந்ததுபோல் அல்ல, ஆனால், “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” அவர்கள் மற்றவர்களில் அன்புகூரவேண்டும்—அதாவது ஒருவருக்கொருவர் தங்கள் உயிரைக் கொடுக்க மனமுள்ளோராக இருக்கவேண்டும்—என்று சொன்னதில் இயேசுவின் கட்டளை “புதிதாக” இருந்தது. (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:16) எந்த மனிதனும் தன் சொந்த உயிரை அபாயத்துக்குட்படுத்தும் நிலையில் கடவுளுக்குக் கீழ்ப்படியமாட்டான் என்ற பிசாசின் விவாதத்தை, இந்த வகையான அன்பு பொய்யென நிரூபிப்பதன் மூலம் கடவுளுக்கு நம்முடைய பக்தியை வெளிப்படுத்துகிறது. (யோபு 2:1-10) தெளிவாகவே, இந்தப் “புதிதான கட்டளை”க்குக் கீழ்ப்படிவது ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதைத் தேவைப்படுத்துகிறது.—யாக்கோபு 1:27; 2:15, 16; 1 தெசலோனிக்கேயர் 2:8.

6கிறிஸ்து மனிதவர்க்க உலகத்துக்காக மரித்தார், தம்முடைய சீஷர்களுக்காக மாத்திரமல்ல. ஆகவே வேதவார்த்தைகள் நம்மைப் பின்வருமாறு ஏவுகின்றன: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) ‘யாவருக்கும் நன்மை செய்வதற்கு’ வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் கிடைக்கின்றன. நம்முடைய அன்பு கஞ்சத்தனமாயிராமல், திறந்த மனதுடனும் தாராள மனப்பான்மையுடனும் இருந்தால், நாம் கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றுகிறோம், எப்படியெனில், “அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.”—மத்தேயு 5:43-48.

மற்ற ஆட்களையும் அவர்களுடைய உடைமைகளையும் மதித்தல்

7அன்பற்ற ஓர் உலகத்தின் மத்தியில் நாம் வாழ்கிறோம். நீங்கள் ஒருவேளை உங்களால் கூடிய அளவில் மற்றவர்களைப் பற்றிக் கரிசனையுடன் எல்லாச் சமயத்திலும் இருக்கவில்லையென உணரலாம். ஆனால், ஒருவன் கடவுளைச் சேவிக்கவேண்டுமென்றால், ‘தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு’ மனச்சாட்சிக்கு இசைந்து முயற்சியெடுப்பது தேவை. (ரோமர் 12:1, 2) மற்ற ஆட்களிடமும் அவர்களுடைய உடைமையைக் குறித்தும் தன் மனப்பான்மையை அவன் மாற்றிக் கொள்ள வேண்டும்.

8சில பகுதிகளில் மற்ற ஆட்களின் உடைமைகளுக்குத் திடுக்கிட வைக்கும் அவமதிப்பு காட்டப்படுகிறது. வெறும் “கிளர்ச்சிக்”காக, இளைஞர்கள் தனிப்பட்டவருடைய மற்றும் பொது உடைமையை அழிக்கின்றனர். அல்லது மற்றவர்கள் கடினமாய் உழைத்துச் சம்பாதித்துள்ள பொருட்களை வேண்டுமென்றே உருக்குலைத்துப் போடுகின்றனர். இத்தகைய வேண்டுமென்றே கலைநாசம் செய்யும் நடத்தையின்பேரில் தங்கள் திகைப்பை வெளியிட்டுக் கூறும் சிலர், பூங்காக்களிலும், தெருக்களிலும் அல்லது பொதுக் கட்டடங்களிலும் குப்பைக் கூளங்களை எறிவதன்மூலம் அதில் பங்குகொண்டு உதவியளிக்கின்றனர். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்,” என்ற இயேசுவின் அறிவுரையுடன் இச்செயல்கள் ஒத்திருக்கின்றனவா? (மத்தேயு 7:12) இத்தகைய அன்பற்ற நடத்தை, இந்தப் பூமி ஒரு பரதீஸாகவேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்துடன் ஒருவன் முற்றிலும் ஒத்திசைந்தில்லை என்று மெய்ப்பித்துக் காட்டுகிறது.

9பல இடங்களில், உயிருக்கும் உடைமைகளுக்கும் பயந்து கதவுகளைப் பூட்டியும், பலகணிகளைத் தாழிட்டும், காவல் நாய்களை வைத்தும் இருப்பது சாதாரணமாயிருக்கிறது. திருடப்பட்டதைச் சரியீடு செய்ய கடைகள் விலைகளை உயர்த்துகின்றன. ஆனால், கடவுளுடைய புதிய ஒழுங்கில் திருடுவதற்கு இடமிராது. ஆகவே, அங்கே இருக்க நம்புகிற எவரும் தங்கள் உடனொத்த மனிதரின் பாதுகாப்புக்கு உடனுதவியளிக்கும் முறையில் இப்பொழுதே வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதன் “தன்னுடைய எல்லாக் கடின உழைப்புக்கும் பலனைக் காண்”பது “கடவுள் கொடுத்தப் பரிசு” என்று பைபிள் காட்டுகிறது. ஆகவே அவனுடைய வேலையின் பலன்களை அவனிடத்திலிருந்து பறித்துக்கொள்ள முயற்சி செய்வது (பிரசங்கி தவறாகும். 3:13, NW; 5:18) சென்ற காலத்தில் நேர்மையற்று நடந்த பல ஆட்கள் இப்பொழுது மாறிவிட்டனர். இவர்கள் திருடுவதைத் தவிர்த்திருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மகிழ்ச்சியையும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 20:35) கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலுடன், எபேசியர் 4:28-ல் எழுதியிருப்பதை இருதயத்தில் கவனமாய் ஏற்றிருக்கின்றனர்: “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.”

10பெரும்பாலும், முக்கியமாய்க் காரியங்கள் தவறாகப் போகையில், மற்றவர்களுக்குப் பொருள் சம்பந்தமான ஏதோவொன்றல்ல, ஆனால் உருக்கமான தயவே தேவையாயிருக்கிறது. எனினும், ஒருவருடைய குறைபாடுகள் வெளிப்படும் சந்தர்ப்பங்களில் என்ன நடக்கிறது? கோபமாய் வீரிட்டுக் கத்துதல், திட்டுதல், அல்லது குத்தலாகக் குற்றத்தை எடுத்துரைத்தல் நடக்கலாம். இந்தப் போக்கு தவறு என்று ஒப்புக்கொள்ளுகிற சிலருங்கூட தங்கள் நாவை அடக்கி வைக்கத் தவறுகின்றனர். ஒருவன் எப்படி இத்தகைய பழக்கத்தை அடக்கி மேற்கொள்ளலாம்? அடிப்படையாய்க் குறைவுபடுவது அன்பே, இது, கடவுளை அறிந்துகொள்வதற்கான தேவை அங்கிருப்பதைத் தெரிவிக்கிறது. ஒருவன் தனக்குக் கடவுள் காட்டியிருக்கிற இரக்கத்தின் அளவை நன்றியோடு மதித்துணருகையில், தான் மற்றவர்களுக்கு மன்னிப்பதை அவ்வளவு கடினமாய்க் காணமாட்டான். அவன், அந்தத் தீங்கு செய்தவனின் உதவிக்கு வருவதற்கான வழிகளைக் காண்பதற்குங்கூட தொடங்கி, அவனுடைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தயவான உதவியளிக்கவும் முன்வரலாம்.—மத்தேயு 18:21-35; எபேசியர் 4:31-5:2.

11உண்மையே, மற்ற ஆட்கள் நம்மோடு காரியங்களைக் கையாளுகையில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் இந்தச் சிறந்த ஆலோசனையைப் பொருத்திப் பயன்படுத்தாமல் இருக்கலாம். நாம் உண்மையுள்ள உள்நோக்கங்களைக் கொண்டிருந்தும், அவர்களுடைய கொடூர இகழ்ச்சிக்கு நாம் இலக்காவதைச் சில சமயங்களில் காணலாம். அப்பொழுது நாம் என்ன செய்வது? பைபிள் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு [தொடர்ந்து வென்றுகொண்டிரு, NW].” (ரோமர் 12:17-21; 1 பேதுரு 2:21-23) நம்மைப் பற்றிய வரையில் நாம் தொடர்ந்து உருக்கமான தயவைக் காட்டிவருவது, அவர்களுடைய மனப்பான்மையை உண்மையில் அமைதியடைய செய்து அவர்களுடைய மேம்பட்ட பண்புகளை வெளிப்படுத்த வைக்கலாம். அவர்களுடைய பிரதிபலிப்பு எவ்வாறிருந்தாலும், நாம் தொடர்ந்து உருக்கமான தயவைக் காட்டுகையில், அன்பில் ஆதாரங்கொண்ட கடவுளுடைய ஆளும் முறையை நாம் உறுதியாய்க் கடைப்பிடிக்கிறோமெனக் காட்டுகிறோம்.

ஜாதி, தேச, சமுதாய பேதத் தப்பெண்ணங்களை வெல்லுதல்

12மெய்யன்புள்ள ஒருவன், ஜாதி, தோல்நிறம், தேசம் அல்லது சமுதாயப்படிநிலை ஆகியவற்றால் பாதிக்கப்படமாட்டான். ஏன்? ஏனென்றால் “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே [ஒரே மனிதனிலிருந்து] தோன்றப்பண்ணி”னார் என்ற இந்த பைபிள் சத்தியத்தை அவன் மதித்துணருகிறான். (அப்போஸ்தலர் 17:26) ஆகையால் மனிதர் எல்லாரும் உறவினரே. எந்த ஜாதியும் மற்றொன்றைப் பார்க்கிலும் இயல்பாய் உயர்தரமானதல்ல.

13தன்னுடைய முன்னோர் குல மரபு, ஜாதி, நிறம், தேசீயம் அல்லது வாழ்க்கைநிலை ஆகியவற்றின் காரணமாகத் தற்பெருமை பேச ஒருவருக்கும் எத்தகைய காரணமும் இல்லை. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி”விட்டனர். (ரோமர் 3:23) ஆகவே, கிறிஸ்துவின் மீட்கும் கிரய பலியின்மீதே எல்லாரும் சார்ந்திருக்கிறோம். வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்தி”னூடே அழிக்கப்படாமல் காக்கப்பட போகிறவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வருகின்றனர் என்று பைபிள் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14-17.

14தன்னுடைய தப்பெண்ணத்தைச் சரியென்று காட்ட முயன்று, ஒருவன், ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது தேசத்தைச் சேர்ந்த எவருடனோ தனக்கு உண்டாயிருந்த ஒரு கெட்ட அனுபவத்தை நினைவுக்குக் கொண்டு வரலாம். ஆனால் அந்த ஜாதியை அல்லது தேசத்தைச் சேர்ந்த எல்லாருமே அந்தத் தவறில் உட்பட்டிருந்தார்களா? மேலும், தன் சொந்த ஜாதி அல்லது தேச மக்கள்தாமேயும் அதே குற்றஞ் செய்திருக்கிறார்களல்லவா? கடவுளுடைய சமாதானமுள்ள புதிய ஒழுங்கில் வாழும்படி நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தால், மற்ற ஆட்களிடமிருந்து நம்மை உறவு தொலைவாக்கச் செய்யும் இயல்பையுடைய எத்தகைய பெருமையையும் நம்முடைய இருதயத்திலிருந்து முற்றிலும் விலக்கிப் போடுவது அவசியம்.

15நம்முடைய இருதயத்தில் இருப்பது சீக்கிரத்திலோ பிந்தியோ நம்முடைய வாயிலிருந்த வெளிப்படும். கிறிஸ்து இயேசு சொன்ன பிரகாரம்: “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” (லூக்கா 6:45) ஜாதிபேத தப்பெண்ணத்தைப் பிரதிபலிக்கும் குறிப்புகள், யெகோவாவின் அமைப்பில் அக்கறை காட்டும் ஒருவருக்கு இடறுதல் உண்டாக்கினால் என்னவாகும்? இந்தக் காரியம் அவ்வளவு வினைமையானதால் இயேசு பின்வருமாறு எச்சரித்தார்: “விசுவாசமுள்ள இந்தச் சிறியரில் ஒருவன் இடறிவிழக் காரணமாயிருக்கிறவன் எவனோ அவன் கழுத்தில் பெரிய ஏந்திரக் கல்லைக் கட்டிச் சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலம்.”—மாற்கு 9:42, தி.மொ.

16ஜாதி, தேசீயம் அல்லது வாழ்க்கைநிலை ஆகியவற்றைக் கருதாமல் மற்றவர்களில் அன்புள்ள அக்கறைக் காட்ட கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். (யாக்கோபு 2:1-9) இயேசு ஊக்கப்படுத்தினபடி: “நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழை, அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய் [மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பாய், NW]; அவர்கள் உனக்குக் கைம்மாறு செய்ய வகையற்றவர்கள்.” (லூக்கா 14:13, 14, தி.மொ.) நாம் மற்ற ஆட்களில் இவ்வகையான கவனிக்கும் அக்கறை எடுப்பதன்மூலம் நம்முடைய பரலோகத் தகப்பனின் அன்புள்ள பண்புகளைப் பிரதிபலிக்கிறோம்.

மற்றவர்களின் நித்திய சுகநலத்துக்காக அன்புள்ள அக்கறை கொள்ளுதல்

17மற்றவர்களுக்காக நாம் கொள்ளும் அக்கறை, அவர்களுடைய உடல் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. மேலும் எல்லா வகையான ஆட்களிடமும் நாம் தயவுடன் இருக்கும் இந்த வெறுங் காரணத்தால் மாத்திரமே நம்முடைய அன்பு பூரணப்படாது. ஏனெனில் வாழ்க்கை மெய்யான அர்த்தமுடையதாயிருக்க மக்கள் யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் அறிய வேண்டும். தம் தகப்பனிடம் செய்த ஜெபத்தில் இயேசு பின்வருமாறு சொன்னார்: “ஒரே மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் பெற்று வருவதே, நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தொடக்கத்திலிருந்து வாசித்திருந்தால், இந்தப் பரிசைப் பெறுவது எவ்வாறென அறிந்திருக்கிறீர்கள். “மிகுந்த உபத்திரவத்”தைப் பற்றி வேத எழுத்துக்கள் முன்னறிவிப்பவற்றையும், அது சமீபித்திருப்பதை உறுதிப்படுத்தும் இயற்கை சம்பந்தப்பட்ட அத்தாட்சிகளையும் நீங்கள்தாமே கண்டிருக்கிறீர்கள். கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்துக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்பதை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இந்த இன்றியமையாத அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள யெகோவாவின்பேரிலும் உங்கள் உடன்தோழரான மனிதரின்பேரிலுமுள்ள அன்பு உங்களைத் தூண்டுவிக்கிறதா?

18“இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்”பற்றி தாம் பேசிக் கொண்டிருந்தபோது இயேசு: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், பின்பு முடிவு வரும்,” என்று முன்னறிவித்தார். (மத்தேயு 24:14, NW) இந்தச் “சாட்சி” கொடுப்பதில் ஒருவன் பங்கு கொள்கையில், சர்வலோகத்தின் ஈடற்ற உன்னத பேரரசராகிய யெகோவாவையே பிரதிநிதித்துவஞ் செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்! இந்த விசேஷித்த வேலையில் பங்குகொள்ளும் வாய்ப்பு இன்னும் திறந்திருக்கிறது, ஆனால், இனிமேலும் அதிகக் காலத்துக்குத் திறந்திராது.

19“சகல ஜாதிகளுக்கும் சாட்சி” கொடுப்பதில் பங்குகொள்ளும் எதிர்பார்ப்பைப் பற்றிச் சிந்திக்கையில், ஒருவரின் தனிப்பட்ட திறமையல்ல, ஆனால் இந்தச் செய்தி பலன்களை விளைவிக்கும்படி செய்கிறவர் கடவுளே என்பதை மதித்துணர்வது நல்லது. (அப்போஸ்தலர் 16:14; 1 கொரிந்தியர் 3:6) தானாக விரும்பி முன்வரும் இருதயத்தால் நீங்கள் தூண்டுவிக்கப்பட்டால், தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா உங்களை உபயோகிக்கக்கூடும். அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி: “நாங்கள் கிறிஸ்துவின் மூலமாய்க் கடவுளினிடம் இப்படிப்பட்ட திட நம்பிக்கையுடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் எங்களாலே எதையும் யோசித்துத் தீர்க்கிறதற்கு நாங்களாகவே தகுதியுள்ளவர்களென்பதல்ல; எங்கள் தகுதி கடவுளிடமிருந்து வருகிறது.”—2 கொரிந்தியர் 3:4-6, தி.மொ.

20இந்த நற்செய்திக்கு எல்லாரும் ஆதரவாகப் பிரதிபலிப்பார்களென நிச்சயமாகவே நாம் எதிர்பார்க்கக் கூடாது. பலர் அசட்டை மனப்பான்மையுடனிருப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். எனினும் அவர்கள் மாறலாம். ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தின தர்சு பட்டணத்தானாகிய சவுல், இயேசுவின் வைராக்கியமுள்ள ஓர் அப்போஸ்தலன் ஆனான். (1 தீமோத்தேயு 1:12, 13) மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிடினும், இந்த ராஜ்ய செய்தி அவர்களுக்குத் தேவை. ஆகவே நாம் அவர்களைப்பற்றி அக்கறையுடனும், அவர்களுடைய நிலையான சுகநலத்தை முன்னேற்றுவிக்க நம்மை முழுவதும் செலவிடுவதற்கு மனங்கொண்டும் இருக்கவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்தாலும், நன்மை நிறைவேற்றப்படுகிறது. சாட்சி கொடுக்கப்படுகிறது, யெகோவாவின் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்படுகிறது, ஜனங்களைப் ‘பிரித்தல்’ நிறைவேற்றப்படுகிறது, நாமும் யெகோவாவுக்கு நம்முடைய சொந்த உண்மைத் தவறாமையை மெய்ப்பித்துக் காட்டுகிறோம்.—மத்தேயு 25:31-33.

உங்கள் சொந்தக் குடும்பத்தைக் கவனித்தல்

21யெகோவாவின் அன்புள்ள ஏற்பாடுகளிலிருந்து நன்மையடையும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்ய நீங்கள் எடுக்கும் பிரயாசங்கள் உங்கள் சொந்தக் குடும்பத்துக்கும் செலுத்தப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு குடும்பத் தலைவர் தன் குடும்பத்தின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பொறுப்புள்ளவர். இது, கடவுளுடைய வார்த்தையைக் குடும்பமாகக் கலந்தாலோசிப்பதற்கு அவர் செய்யும் ஏற்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதால் நேர்முகமாய்ப் பாதிக்கப்படுகிறது. குடும்பத்தின் சார்பாகச் செய்யும் தகப்பனின் ஜெபங்கள் ஆழ்ந்த பக்தியையும் நன்றியுணர்வையும் காட்டுகையில், அக்குடும்பத்தினர் அனைவரின் மனப்பான்மையையும் இது உருப்படுத்தி அமைக்கக்கூடும்.

22சிட்சை கொடுப்பதும் அவருடைய பொறுப்பில் உட்பட்டிருக்கிறது. பிரச்னைகள் எழும்புகையில், அவற்றைப் பொருட்படுத்தாமல் விடுவது எளிதாகத் தோன்றலாம். ஆனால் தகப்பன் தான் எரிச்சலடைகையில் மாத்திரமே சிட்சை கொடுத்தால், அல்லது பிரச்னைகள் மோசமான நிலைக்குள்ளாகையில் மாத்திரமே அவற்றைக் கையாண்டால் ஏதோ ஒன்று குறைவுபடுகிறது. நீதிமொழிகள் 13:24-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: ‘மகன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்.’ ஆகவே அன்புள்ள தகப்பன் சிட்சைக் கொடுப்பதில் நிலையாயிருக்கிறார். அவர் பொறுமையுடன் காரியங்களைத் தன் பிள்ளைகளுக்கு விளக்கிக் காட்டுகிறார், மேலும் அவர்கள் ஒவ்வொருவருடைய மனம், உணர்ச்சி, உடல் சம்பந்தப்பட்ட வரம்புகளைக் கவனத்தில் வைத்து நடத்துகிறார். (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21) நீர் ஒரு தகப்பனென்றால் உம்முடைய பிள்ளைகளிடம் இவ்வகையான அன்பு உமக்கு இருக்கிறதா? தற்காலத்தை மட்டுமல்லாமல் உம்முடைய குடும்பத்தின் எதிர்கால சுகநலத்தையும் கவனித்துப் பார்த்து, இந்த பொறுப்பைத் தாங்க மனமுள்ளவராக இருக்கிறீரா?—நீதிமொழிகள் 23:13, 14; 29:17.

23மனைவியுங்கூட, தன் பங்கில் குடும்பத்துக்குப் பெரும்படியான உதவி செய்ய முடியும். கடவுள் பக்திக்குரிய வழியில் பிள்ளைகளின் வாழ்க்கையை உருப்படுத்தி அமைப்பதில் அவள் தன் கணவனோடு ஒத்துழைப்பதும் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்துவதும் பொதுவாய் பிள்ளைகளின் நடத்தையிலும் மனப்பான்மையிலும் பிரதிபலிக்கிறது. (நீதிமொழிகள் 29:15) தகப்பன் இல்லாதக் குடும்பத்திலும், பைபிளிலிருந்து கவனமாய்க் கற்பித்து அதோடுகூட நல்ல முன்மாதிரியை வைப்பது நல்ல பலன்களைக் தருகிறது.

24ஆனால் குடும்பத்தில் இருக்கும் தகப்பன் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையென்றால், அல்லது தன் மனைவியையும் துன்புறுத்தினால் என்ன செய்வது? அவள் என்ன செய்யவேண்டும்? அவள் யெகோவாவை நேசித்தால், நிச்சயமாகவே அவரைவிட்டு விலகிச் சென்றுவிட மாட்டாள். துன்பங்களுக்கு உட்படுத்தினால், மனிதர் கடவுளை விட்டு விலகிவிடுவர் என்று குற்றஞ்சாட்டினவன் சாத்தானே. சாத்தான் கேட்பதைச் செய்ய அவள் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை. (யோபு 2:1-5; நீதிமொழிகள் 27:11) அதே சமயத்தில், தன் கணவனின் நிலையான சுகநலத்தைத் தேடும்படி பைபிள் அவளை ஏவுகிறது. சத்தியம் என்று தான் அறிந்திருக்கிறதைவிட்டு விலகுவது இருவருக்கும் நித்திய ஜீவனை இழப்பதைக் குறிக்கும். ஆனால் தன் விசுவாசத்தில் அவள் உறுதியாக நிலைத்திருந்தால், இரட்சிப்படைவதற்கு அவள் அவனுக்கு உதவி செய்ய முடியும். (1 கொரிந்தியர் 7:10-16; 1 பேதுரு 3:1, 2) மேலும், இக்கட்டுகளின் கீழும் தன் விவாக வாக்குறுதிகளைத் தொடர்ந்து மதித்து வருவதன்மூலம் விவாகத்தை ஏற்படுத்தினவராகிய யெகோவா தேவனுக்குத் தன் ஆழ்ந்த மரியாதையைக் காட்டுகிறாள்.

25எதிர்ப்பை எதிர்ப்பட்டிருக்கையில் கடவுளிடத்தில் உண்மைத் தவறாமல் நிலைத்திருக்க விசுவாசமுள்ள பெற்றோருக்கு இருக்கும் மற்றொரு வல்லமை வாய்ந்தக் காரணம் பிள்ளைகளே. தம்முடைய பக்தியுள்ள ஊழியரின் இளம்பிள்ளைகள், வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்தி”னூடே பாதுகாத்து வைக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையைக் கடவுள் அளிக்கிறார். பெற்றோரில் ஒருவர் மாத்திரமே யெகோவாவின் ஊழியராக இருந்தாலும், இப்படிப்பட்ட இளம் பிள்ளைகளைப் ‘பரிசுத்தமுள்ளதென’ கடவுள் கருதுகிறார். (1 கொரிந்தியர் 7:14) ஆனால் அந்தப் பெற்றோர் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து “தப்பிக்கொள்ள வகைதேடு”பவராக இருந்தால், அப்பொழுது என்னவாகும்? இத்தகைய பெற்றோர், கடவுளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைத் தமக்கு மாத்திரமல்லாமல் அந்த இளம் பிள்ளைகளுக்குங்கூட இழந்து விடுவார். (எபிரெயர் 12:25) இது எவ்வளவு கடுந்துயர இழப்பாயிருக்கும்!

26அப்படியானால், வாழ்க்கையின் எப்பக்கம் நாம் பார்வை செலுத்தினாலும் சரிதான், நம்மை மாத்திரமல்லாமல் மற்றவர்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டுமென்பது தெளிவாய்த் தெரிகிறது. மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதைப் பழக்கமாக்கிக் கொண்டால் நாம்தாமே அன்பைப் பெறுவோம். (லூக்கா 6:38) குறுகிய பார்வையுள்ள மனித விவாத விளக்கத்தால் தவறாக வழி நடத்தப்படாமல் மெய்யான அன்பைக் காட்டுவதற்கு, நாம் யெகோவா தேவனை அறியவும் அவரோடு நல்ல உறவை அனுபவித்துமகிழவும் வேண்டும். எனினும், அவ்வாறு செய்வது தனிப்பட்டவராய் நாமே செய்ய வேண்டிய ஒரு தெரிவை உட்படுத்துகிறது.

[கேள்விகள்]

1. (எ) மற்றவர்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் தங்களுக்கானவற்றை மாத்திரமே பார்த்துக்கொள்ளும்படி பல ஆட்களைச் செய்திருப்பது எது? (பி) இதன் விளைவு என்ன?

2. (எ) இந்தப் பிரச்னையின் மூலகாரணத்தை பைபிள் எவ்வாறு திட்டமாய்ச் சுட்டிக் காட்டுகிறது? (பி) கடவுளை அறிவது என்பதன் பொருளென்ன?

3. மனிதவர்க்கத்தின்மீதுள்ள தம்முடைய மிகுந்த அன்பைக் கடவுள் எவ்வாறு காட்டியிருக்கிறார்?

4. இது கடவுளிடத்தில் நீங்கள் தனிப்பட்டவராய் எவ்வாறு உணரும்படி உங்களைச் செய்விக்கிறது?

5. (எ) இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த அந்தப் “புதிதான கட்டளை” என்ன? (பி) கடவுள் அரசராக அவருக்கு நம்முடைய பக்தியைக் காட்டுவது இதில் எப்படி உட்பட்டிருக்கிறது? (சி) அப்படியானால், இந்தப் “புதிதான கட்டளைக்குக்” கீழ்ப்படிவது எதைத் தேவைப்படுத்துகிறது?

6. வேறு யாருக்கும் அன்பு காட்டவேண்டும்? ஏன்?

7. நாம் மற்ற ஆட்களையும் அவர்களுடைய உடைமைகளையும் கையாளும் முறையை எது பாதிக்கும்?

8. (எ) மற்றவர்களுடைய உடைமையை அவமதிப்பது எங்கும் பரவியிருப்பதாக எது காட்டுகிறது? (பி) பைபிளிலுள்ள எந்த ஆலோசனையைப் பின்பற்றினால் இத்தகைய காரியங்களைச் செய்வதிலிருந்து ஒருவனைத் தடுத்து வைக்கும்?

9. (எ) திருடுவது எல்லாருடைய வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கிறது? (பி) திருடுவது ஏன் கடவுளுடைய பார்வையில் தவறாக இருக்கிறது?

10. (எ) மற்றவர்களிடம் நாம் பேசும் முறையில் அவர்களுக்கு எப்படிப் பரிவு காட்டலாம்? (பி) இம்முறையில் அன்பு காட்டுவதற்குக் கற்றுக்கொள்ள ஒருவனுக்கு எது உதவி செய்யும்?

11. மற்றவர்கள் நம்மிடம் அன்பற்று நடந்துகொள்ளும்போதும், நம்முடைய பேச்சு ஏன் புண்படுத்தும் முறையில் இருக்கக்கூடாது?

12, 13. ஜாதி, தேச அல்லது சமுதாய பேதத் தப்பெண்ணம் சம்பந்தப்பட்ட எத்தகைய உணர்ச்சிகளையும் தன்னை விட்டு அகற்ற பைபிள் எப்படி ஒருவருக்கு உதவி செய்கிறது?

14. தனக்கு உண்டான கெட்ட அனுபவம், குறிப்பிட்ட ஜாதி அல்லது தேச ஆட்களிடம் வெறுப்பு உணர்ச்சிகளைக் கொண்டிருக்க அனுமதிப்பது ஏன் சரியானதல்ல?

15. ஒரு ஜாதி அல்லது தேசத்தைப் பற்றி ஒருவன் சொல்லும் குறிப்புகள் உடன் விசுவாசியை இடறலடைய செய்தால், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக அவனுடைய சொந்த நிலைநிற்கையை இது எவ்வாறு பாதிக்கும்?

16. மற்றவர்களுக்கு நாம் காட்டவேண்டிய பட்சபாதமற்றத் தன்மையை இயேசு எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டினார்?

17. (எ) மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய மிக அதிக மதிப்புள்ள காரியம் எது? (பி) அப்படிச் செய்ய தூண்டப்படும் உணர்ச்சி நமக்கு ஏன் இருக்கவேண்டும்?

18. (எ) நம்முடைய நாளில் செய்யப்பட வேண்டிய என்ன வேலையை இயேசு மத்தேயு 24:14-ல் முன்னறிவித்தார்? (பி) அதில் பங்குகொள்வதை நாம் எவ்வாறு கருதவேண்டும்?

19. நமக்குத் திறமை இல்லை என்ற எந்த உணர்ச்சியும் இந்த வேலையில் பங்குகொள்வதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்க ஏன் இடங்கொடுக்கக்கூடாது?

20. (எ) இந்த நற்செய்திக்கு எல்லாரும் ஆதரவாய்ப் பிரதிபலிப்பார்களா? (பி) அசட்டை மனப்பான்மையுடனிருக்கும் அல்லது எதிர்க்கும் ஆட்களுக்குப் பிரசங்கிப்பதால் என்ன நிறைவேற்றப்படுகிறது?

21. தன் சொந்த வீட்டாரின் ஆவிக்குரிய சுகநலத்தைக் குறித்து குடும்பத் தலைவனுக்கு இருக்கும் பொறுப்பு என்ன?

22. தகப்பன் தன் பிள்ளைகளைச் சிட்சிப்பது ஏன் முக்கியம்? சிட்சை கொடுக்க எது அவரைத் தூண்டுவிக்க வேண்டும்?

23. தன் குடும்பத்தின் ஆவிக்குரிய சுகநலத்துக்குத் தாய் எவ்வாறு உடனுதவி அளிக்கலாம்?

24. (எ) தன் மணத் துணைவரின் எதிர்ப்புக்கெதிரில், விசுவாசி எந்த விவாதத்தைத் தன் மனதில் வைத்திருக்கவேண்டும்? (பி) இத்தகைய சூழ்நிலையில் அவிசுவாசியான அந்தத் துணைவருக்கு மெய்யான அன்பு காட்டுவது எப்படி?

25. பெற்றோரின் தீர்மானம் பிள்ளைகளுடைய வாழ்க்கை எதிர்பார்ப்புகளை எவ்வாறு பாதிக்கிறது?

26. நமக்கும் மற்றவர்களுக்கும் மெய்யான நன்மையுண்டாகும்படி நடந்துகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்?

[பக்கம் 171-ன் படம்]

யெகோவாவின் ஊழியருக்கு இருக்கவேண்டிய வகையான அன்பு ஜாதி, தேசம், அல்லது வாழ்க்கைநிலை எவற்றையும் கருதாமல் மற்றவர்களுக்கு உண்மையான அக்கறை காட்டும்படி அவர்களைக் கடமைப்படுத்துகிறது