Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதலாவது உலக அழிவு—பின்பு உலக சமாதானம்

முதலாவது உலக அழிவு—பின்பு உலக சமாதானம்

அதிகாரம் 4

முதலாவது உலக அழிவு—பின்பு உலக சமாதானம்

பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், மனிதவர்க்கத்தினர் நிலையான சமாதானத்தை அனுபவித்துக் களிக்கக் கூடியதற்கு முன்பு, ஓர் உலக அழிவு முதலாவது நடந்தேற வேண்டும். (2 பேதுரு 3:5-7) ஆனால் அது ஏன் அவசியம்? இந்த அழிவு எங்கிருந்து வருகிறது? இந்தக் கிரகத்திலுள்ள மனிதருக்கு இது எதைக் குறிக்கிறது?

2பைபிள் முன்னறிவித்துள்ள இந்த உலக அழிவு உலகத் தலைவர்கள் பலரும் விஞ்ஞானிகளும் மற்றவர்களும் எச்சரித்துக் கொண்டிருக்கும் அதே பூகோள அழிவல்ல என்பதை நாம் முதலாவது விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் பேசிவரும் பேராபத்து, மனிதன் உண்டுபண்ணும் அழிவாக, தூய்மைக்கேடு அல்லது அணுசக்திப் போர்த்தளவாட போட்டி அல்லது இரண்டுமே போன்ற ஏதோ வகையில் வரும். ஆனால் நிச்சயமாகவே இத்தகைய அழிவு இந்தக் கிரகத்தில் நிலையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒரு நம்பிக்கையும் விட்டு வைக்காது.

3உயிருள்ள சிருஷ்டிகளுக்கு இந்தப் பூமி பாழாக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, அணுசக்திக் கதிர்வீச்சு அல்லது வரக்கூடுமென ஊகிக்கப்படும் “அணுசக்திக் குளிர் பருவம்” தப்பிப்பிழைப்பவர்களை மரித்தவர்களைப் பார்க்கிலும் எவ்விதமும் மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்லாது—இல்லையென்றால் அவர்களிலும் மிக மோசமான நிலையிலேயே விடும். ஏழைகளே முதலாவது துன்பம் அனுபவிப்போராக இருக்கலாமெனினும், தப்பிப்பிழைப்பது பெரும்பாலும் தற்செயலான ஒரு காரியமாகவே இருக்கும். இத்தகைய பேரழிவிலிருந்து தப்பிப்பிழைத்திருப்போருக்குள் நீங்கள் இருப்பீர்கள் என்ற என்ன நம்பிக்கை உங்களுக்கு இருக்கக்கூடும்? நீங்கள் தப்பிப்பிழைத்தாலும், வாழ்க்கை, இப்பொழுது வியாபித்திருந்துவரும் இதே சச்சரவு நிறைந்த நிச்சயமில்லாமைக்குள் திரும்பவும் சென்றுவிடாதென்ற என்ன நம்பிக்கை இருக்க முடியும்?

பைபிள் முன்னறிவிப்பது நம்பிக்கையளிக்கிறது

4பைபிளில் முன்னறிவித்துள்ள உலக அழிவை வேறுபடுத்துவது என்னவெனில், இது தெரிந்தெடுக்கும் பாங்குடையதாக, நோக்கமுள்ளதாக இருப்பதேயாகும். இது வெறுமென மனிதன் செய்யும் பெரும் பிழைகளின் உச்சநிலையாக வருகிற ஏதோ ஓர் இடுக்கண் அல்ல. இது, கண்மூடித்தனமாக வெறுமென எவருக்கும் மரணத்தைக் கொண்டுவருவதாயிராது. அதைப் பார்க்கிலும், உண்மையில் அழிவுக்குப் பாத்திரராயிருப்போரையே இந்தப் பூமியிலிருந்து ஒழிக்கும். இவ்வகையான உலக அழிவு நீதிமொழிகள் 2:21, 22-ல் கொடுக்கப்பட்டுள்ள தெய்வீக நியமத்துக்குப் பொருந்தியிருக்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”

5அப்படியானால், எது அழிக்கப்படும்? இந்தக் கிரகப் பூமியும் அதிலுள்ள யாவும் முற்றிலுமாய் எரிக்கப்பட்டுப் போவதையே பைபிள் முன்னறிவிக்கிறதென்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. “சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், ஏனெனில் அவர்கள் இந்தப் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்,” என்று இயேசு கிறிஸ்துதாமே சொன்னார். (மத்தேயு 5:5, NW) நிச்சயமாகவே இந்தச் ‘சுதந்தரம்’ உயிரற்றக் கரியாக எரித்துப் போடப்படப் போவதில்லை! மக்கள் வாழ்வதற்குரிய இடமாக இந்தப் பூமி என்றென்றும் நிலைத்திருக்குமென்ற கடவுளுடைய திட்டவட்டமான உறுதிவாக்கையும் பைபிள் கொடுக்கிறது.—சங்கீதம் 104:5; ஏசாயா 45:18; மத்தேயு 6:9, 10.

6இதற்கிணங்க, அந்த “மிகுந்த உபத்திரவம்” கடந்து சென்ற பின்பு, பூமியில் நிலைத்திருக்கப்போகிற தப்பிப்பிழைத்தவர்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. “நோவாவின் நாட்கள் எப்படி இருந்தனவோ, அப்படியே மனுஷ குமாரனின் வந்திருத்தலும் இருக்கும்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். நோவாவின் காலத்தில் பூகோள அழிவு நடந்தேறியபோது அதைத் தப்பிப்பிழைத்தவர்களும் இருந்தார்கள்.—மத்தேயு 24:21, 37, NW; 2 பேதுரு 2:5, 9; வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14.

7எது அழிக்கப்படவிருக்கிறது? பூமியில் மனிதர் கட்டியமைத்திருக்கிற உலகளாவிய காரிய ஒழுங்குமுறையே அழிக்கப்படும்—கடவுளையும் இந்தப் பூமிக்கு அவர் வாக்குக் கொடுத்திருக்கிற ஆட்சியையும் நோக்கியிருப்பதைப் பார்க்கிலும் இந்த ஒழுங்குமுறையையே ஆதரித்துப் பற்றியிருக்கும் யாவருங்கூட அதோடு அழிக்கப்பட்டுப் போவர். (சங்கீதம் 73:27, 28) இதன் காரணமாகவே, பைபிளின் சில மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிற “உலகத்தின் முடிவு” என்ற இந்தச் சொற்றொடர் மற்ற பைபிள்களில் “யுக முடிவு” (தி.மொ.), “இந்த யுகத்தின் பூர்த்தி” (Ro), “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” (NW) என அதிகத் திருத்தமாய் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.—மத்தேயு 24:3.

8வரப்போகிற இந்த உலக அழிவின் மூலகாரணர்—மனிதர் அல்லர்—யெகோவா தேவனே. மனித அறியாமை, தவறு, ஊழல் ஆகியவற்றின் விளைவாக உண்டாயிருக்கும் தூய்மைக்கேடு, பஞ்சம், அணுசக்தித் திகில், மேலும் இவற்றைப் போன்ற மற்ற தற்கால அழிவுக் காரணங்கள் இந்த அழிவை உண்டாக்கப்போகிறவை அல்ல. அதற்குப் பதிலாக, இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் தன்னலத்துக்கும் முழு தோல்விக்கும் நிரூபணமாக இவை இருக்கின்றன. இந்த ஒழுங்குமுறையை முற்றிலுமாய் ஒழித்துப் போடுவதற்கு இவை யெகோவா தேவனுக்கு நியாயமான காரணத்தை அளிக்கின்றன. இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறை நொறுங்கி விழும் ஒரு நிலையை அடைவதற்கு முன் அல்லது தன் சொந்த சுய-அழிவை நிறைவேற்றுவதற்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத் தாம் எடுப்பார் என்று அவர் வாக்குக் கொடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:17, 18) ஆனால் உண்மையில் இருக்கும் ஒரே வழி இப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைத்தானா?

உண்மையான சமாதானம் வருவதற்கு இந்த ஒழுங்குமுறை ஏன் முடிவடைய வேண்டும்

9இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையை அழிப்பதைப் பார்க்கிலும் வெறுமென சில மாற்றங்களைக் கடவுள் அதில் செய்யவேண்டுமென்று சிலர் உணரக்கூடும். ஆனால் அது சீர்திருத்த முடியாத நிலைக்கு மீறிவிட்டதென கடவுள் மெய்யாய்த் தெரிந்திருக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது.

10நூற்றாண்டுகளினூடே மனிதர் செய்துவந்திருக்கும் பல மாற்றங்களை நீங்கள்தாமே சிந்தித்துப் பாருங்கள். மனிதர் உருவாக்கியுள்ள பற்பல அரசாங்க வகைகள் யாவற்றையும் எண்ணிப் பாருங்கள். நகராட்சிகள், முடியாட்சிகள், குடியாட்சிகள் பொதுவுடைமை மற்றும் சமதர்ம அரசாங்கங்கள், சர்வாதிகார ஆட்சிகள் ஆகிய பலவகைகள் இருந்துவந்திருக்கின்றன. ஆட்சியில் இருந்துவரும் அதிபதி, அல்லது அரசாங்கம்—தேர்தலின் மூலமோ, திடீர் அரசியல் புரட்சியின் மூலமோ, மக்கள் புரட்சியின் மூலமோ—எவ்வளவு அடிக்கடி ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டு, புதிய ஒருவர் அல்லது ஒன்று அமர்விக்கப்பட்டு வந்திருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். எனினும் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கோ எவ்வித நிலையான தீர்வும் இல்லை. மனிதனின் நிலைமையை முன்னேற்றுவிக்க முயற்சி செய்கிற நல்லெண்ணத்தால் தூண்டப்படும் மனிதருங்கூட, தாங்கள்தாமே அடைபட்டிருக்கிற இந்தக் காரிய ஒழுங்குமுறையால் தங்கள் முயற்சிகள் குலைக்கப்படுவதைக் காண்கின்றனர். பூர்வ காலங்களிலிருந்த விவேகமுள்ள ஓர் அரசன் கண்டுபிடித்தப் பிரகாரம், “கோணலாக்கப்பட்டது” மனித முயற்சிகளால் மாத்திரமே “நேராக்கப்பட முடியாது.”—பிரசங்கி 1:14, 15, NW.

11உதாரணமாக, இவ்வுலகத்தின் நகரங்கள் தொல்லைப்படுத்தும் பிரச்னைகளால் நிறைந்திருக்கின்றன. ஆனால் மனிதர் அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கிப் புதிதாகத் தொடங்க முடியாது. இவ்வுலகத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை ஒழுங்குமுறைகள் முழுவதைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. மனிதவர்க்கம் முழுமைக்கும் நன்மைக்கேதுவாகச் செய்யப்படும் எந்த மெய்யான மாற்றத்தையும், தன்னலமும் நாட்டுப் பற்றும் அடியரித்துக் கெடுத்துத் தடை செய்கின்றன.

12இவ்விதம் இந்தக் காரிய ஒழுங்குமுறை முழுவதும் இழிவான திட்டங்களைக்கொண்டு போடப்பட்ட மோசமான அஸ்திபாரத்தின்மேல் குறைபாடுள்ள பொருட்களால் கட்டப்பட்ட ஒரு வீட்டைப்போல் இருக்கிறது. இந்த வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளைத் திரும்ப ஒழுங்குபடுத்துவதோ, வீட்டைப் புதிய மாதிரியில் அமைப்பதோ என்ன நன்மை பயக்கக்கூடும்? அது நின்றுகொண்டிருக்கும் வரை, பிரச்னைகளும் தொடர்ந்திருக்கும், அந்த வீடு படிப்படியாய் மோசமாகிக் கொண்டே போகும். அதை இடித்துப் போட்டு, நல்ல ஓர் அஸ்திபாரத்தின்மேல் வேறொன்றைக் கட்டுவதே செய்யவேண்டிய அறிவுள்ள ஒரே காரியம்.

13மக்கள் “புது திராட்ச ரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்து வைக்கிறதும் இல்லை,” என்று சொன்னதில் இயேசு கிறிஸ்து ஓரளவு இதற்கு ஒப்பான விளக்க உதாரணத்தைப் பயன்படுத்தினார். பழைய திராட்சரசத் துருத்தி புதிய திராட்ச ரசத்தால் வெடித்துக் கிழிந்துபோகும். (மத்தேயு 9:17) ஆகையால் அவர், தாம் அதன்கீழ் வாழ்ந்த அந்த யூதக் காரிய ஒழுங்குமுறையைச் சீர்திருத்தம் செய்ய முயலவில்லை. அதற்குப் பதிலாக அவர், கடவுளுடைய ராஜ்யமே சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒரே நம்பிக்கையென பிரசங்கித்தார். (லூக்கா 8:1; 11:2; 12:31) ஆகவே, நம்முடைய நாளிலுங்கூட யெகோவா தேவன் இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையை வெறுமென சரிசெய்து வைக்கப் போவதில்லை, ஏனென்றால் இது நிலையான நன்மையைக் கொண்டுவர முடியாது.

14சட்டமியற்றி மக்களுடைய இருதயங்களுக்குள் நீதியைச் செலுத்த வைப்பது கூடாதக் காரியமென்ற உண்மையைக் கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. நேர்மையை அவர்கள் நேசிக்கிறதில்லையென்றால், எத்தனையளவான சட்டங்களும் அதை அங்கே ஒருபோதும் வைக்க முடியாது. ஏசாயா 26:10-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.”—நீதிமொழிகள் 29:1-ஐ ஒத்துப் பாருங்கள்.

15கடினமான உண்மை என்னவெனில், மக்கள் பலர் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் தோல்விகளையும் தீமைகளையுங்கூட பொருட்படுத்தாமல் அதோடு நிலைத்திருப்பதையே விரும்பித் தெரிந்துகொள்கின்றனர். நீதிக்குத் திரும்பி கடவுளுடைய ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த அவர்கள் விரும்புகிறதில்லை. இவ்வுலகத்தின் அரசியல் ஒழுங்குமுறைகளின் ஊழல்களையும், அதன் போர்களின் பயனின்மையையும், அதன் மதங்களின் பாசாங்குத்தனத்தையும், அதன் தொழில்துறை விஞ்ஞானம் தீர்த்திருக்கிறதைப் பார்க்கிலும் உண்டாக்கியிருக்கும் பிரச்னைகள் மிக அதிகமெனக் காட்டும் தெளிவான அத்தாட்சிகளையும் அவர்கள் காணக்கூடும். ஆனால் இந்த எல்லாவற்றையுங்கூட பொருட்படுத்தாமல், தங்கள் நிலையைக் காத்துவருவதில் அக்கறைகொண்டுள்ள மத மற்றும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் பொய்ப் பாதுகாப்பு உணர்ச்சிக்குள் தூங்கவைக்கப்படுவதையே பலர் மேலானதாகத் தெரிந்துகொள்கின்றனர். கடவுள் பின்வருமாறு சொன்ன அந்த இஸ்ரவேலரைப்போல் இவர்கள் இருக்கின்றனர்: “தீர்க்கதரிசிகள் கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்ன செய்வீர்கள்?”—எரேமியா 5:31; ஏசாயா 30:12, 13.

16தங்களுடைய சொந்த, மற்றும் தங்கள் குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அபாயத்துக்குள்ளாக்கும் பழக்கங்களையுடைய ஆட்களை நீங்கள் அநேகமாய் அறிந்திருக்கலாம். எனினும் தங்களை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யும்படி எடுக்கும் எல்லா முயற்சிகளையும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் கடவுளுடைய அறிவுரையையும் வழிநடத்துதலையும் ஆட்கள் ஏற்காது தள்ளுகையில், காரியம் அதைப் பார்க்கிலும் மிக வினைமையுள்ளது. இவ்வாறு செய்கிறவர்கள் தாங்கள் உண்மையில் சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கிறதில்லையென்று காட்டுகிறார்கள். இத்தகையோரைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் [கருத்தை] உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் [கடவுள்] அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.”—மத்தேயு 13:15.

17சரியாகவே, கடவுளுடைய பொறுமைக்கும் இரக்கத்துக்கும் எல்லைகள் உண்டு. இல்லையென்றால், நீதியுள்ளவர்களுக்கு அவர் எவ்வாறு அன்பு காட்ட முடியும்? பூமியின்மேல் அக்கிரமம் கொண்டுவருகிற பாடுகளிலிருந்து விடுதலை செய்யவேண்டுமென்று மன்றாடும் அவர்களுடைய வேண்டுதல்களுக்கு அவர் செவிசாய்க்காமல் இருந்துவிட முடியாது. (லூக்கா 18:7, 8; நீதிமொழிகள் 29:2, 16) ஆகவே, சூழ்நிலைமைகள் உலக அழிவை அவசியப்படுத்துகின்றன. நேர்மைக்குக் கடவுள் உண்மையுள்ளவராக நிலைத்திருக்கவும் நேர்மையை நேசிக்கிறவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கவும் வேண்டுமென்றால், நடவடிக்கை எடுக்கும்படி இவை கடவுளைக் கடமைப்படுத்துகின்றன. இது, மனிதவர்க்கத்தின்மேல் அழிவைக் கொண்டுவருவதில் கடவுள் இன்பங்கொள்ளும் ஒரு காரியமல்ல. “துன்மார்க்கனின் மரணத்தை நான் விரும்புவேனோ?—இது யெகோவாவின் திருவாக்கு—அவன் தன் வழிகளைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையல்லவோ நான் விரும்புகிறேன். . . . ஆகவே மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.”—எசேக்கியேல் 18:23, 32, தி.மொ.

18அப்படியானால், நேர்மையை நேசிக்கிறவர்களைப் பாதுகாப்பற்ற நிலையிலிருந்தும் பாடனுபவிப்பதிலிருந்தும் மீட்பதற்குச் செலுத்தப்படவேண்டிய கிரயம் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையை விரும்பித் தெரிந்துகொள்கிறவர்களின் அழிவேயாகும். இது: ‘நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கன் . . . மீட்கும் பொருளாவான்’ என்ற பைபிள் நியமத்துக்கு ஒத்திருக்கிறது.—நீதிமொழிகள் 21:18; ஏசாயா 43:1, 3, 4-ஐ ஒத்துப் பாருங்கள்.

நன்மை பயக்கும் பலன்கள்

19தற்போதைய ஒழுங்குமுறையும் அதை ஆதரிப்போரும் அழிவது பூமியெங்கும் நீதியுள்ள புதிய ஒழுங்குமுறை வருவதற்கு இடமளிக்கும், அதில் தப்பிப்பிழைத்திருப்போர் தன்னல போட்டியில் அல்ல, ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து உழைக்க முடியும். பிரிவினைக்குரிய தேசீய எல்லைப் பகுதிகளும் அரசியல் வரம்புகளும் வீழ்ந்துபோகும். இராணுவ செலவின் நொறுக்கும் சுமை போய்விட்டிருக்கும். மனிதவர்க்கம் ஒன்றுபட்ட குடும்பமாக இருப்பதிலிருந்து தடுத்து வைக்கும் சமுதாயத் தடங்கல்களுங்கூட போய்விட்டிருக்கும். அப்பொழுது வாழ்வோர் யாவரும் ஒருவருக்கொருவர் சத்தியமாகிய ‘ஒரே சுத்தமான பாஷையைப்’ பேசி, தங்கள் சிருஷ்டிகரை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கி வருவதே இந்த எல்லாவற்றிலும் இன்றியமையாதக் காரணமாயிருக்கும். இது அவர்களை, பிரிவினையுண்டாக்கும் மத சம்பந்தமான போலிக் கோட்பாடுகளிலிருந்தும், பாரம்பரியங்களிலிருந்தும், மனிதன்ண்டாக்கின விசுவாசப் பிரமாணங்களிலிருந்தும் விடுதலையாக்கி வைக்கும்.—செப்பனியா 3:8, 9; யோவான் 4:23, 24.

20கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு ஆளும் கடவுளுடைய அரசாங்கம் பூமி முழுவதன்மீதும் தனி ஆட்சியைச் செலுத்திக்கொண்டிருக்கையில் பைபிளின் இந்தப் பூர்வ சங்கீதம், நிறைவேற்றத்தைக் காணும்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.”—சங்கீதம் 72:7, 8.

21வரப்போகிற இவ்வுலக அழிவினால் பூமி நன்மையடையும். பேராசையினால் தூய்மைக் கேடு செய்கிறவர்களாலும் இரக்கமின்றி அழித்துப் போடுகிறவர்களாலும் பூமி இனிமேலும் பாழ்படுத்தப்படாது. ஏரிகளும், நதிகளும், சமுத்திரங்களும் ஆகாயமும் தங்களுக்குள் ஏராளமாய்க் கொட்டப்படுகிற கழிவுப் பொருட்களிலிருந்து விடுதலையடைந்து விரைவில் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும். தங்கள் சிருஷ்டிகரின் மிக உயர்வான பண்புகளைப் பிரதிபலிக்கும் மக்கள் நிரம்பிய தூய்மையான, தோட்டத்தைப் போன்ற கிரகத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்ற தம்முடைய நோக்கத்தைத் தாம் கைவிடவில்லையென கடவுள் இவ்வாறு மெய்ப்பித்துக் காட்டுவார்.—ஆதியாகமம் 1:26-28; ஏசாயா 45:18; 55:10, 11.

22ஆகவே, கடவுள் உலக அழிவைக் கொண்டுவருவது அவர் ‘சமாதானத்தின் கடவுளாக’ இருப்பதற்கு முரணாக இல்லை; இயேசு “சமாதானப் பிரபு”வாக இருப்பதற்கும் முரணாக இல்லை. சமாதானத்தையும் நீதியையும் அவர்கள் நேசிப்பதன் காரணமாகவே, தூய்மையான, நீதியுள்ள ஒரு நிலைக்கு பூமியைத் திரும்பக் கொண்டுவருவதற்கு அவர்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 14:33; ஏசாயா 9:6, 7.

23அப்படியானால், தனிப்பட்ட ஆட்களாக நாம் என்ன செய்யவேண்டும்? கடவுளுடைய கட்டளைகளைப் பொருட்படுத்தாமல் விடுபவர்கள் எதிர்காலத்துக்குரிய தங்கள் நம்பிக்கைகளை “மணலின்மேல்” கட்டுகின்றனர் என்றும், அத்தகைய கட்டிடம் வரப்போகிற அழிவுக்குரிய புயல்களை ஒருபோதும் தாங்கி நிற்காது என்றும் இயேசு காட்டினார். சமாதானமும் பாதுகாப்புமுள்ள எதிர்காலத்தை நாம் கொண்டிருக்கவேண்டுமென்றால் நம்முடைய நம்பிக்கைகளைக் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலின்பேரில் கட்டவேண்டிய இன்றியமையாதத் தேவையை அவர் விளக்கிக் காட்டினார்.—மத்தேயு 7:24-27.

24ஆனால் அக்கிரமத்தையும் துன்பப்படுதலையும் முடிவுக்குக் கொண்டுவர கடவுள் ஏன் இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்தார்? இந்தக் கேள்விக்கும் பைபிள் பதிலளித்து, கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதன் சம்பந்தமாகக் கடந்த எல்லா நூற்றாண்டுகளின்போதும் என்ன செய்து வந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

[கேள்விகள்]

1-3. (எ) மனிதத் தலைவர்கள் எச்சரித்துவரும் அந்த உலக அழிவு எது? (பி) இது ஏன் நிலையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் வழியை உண்டாக்குமென பைபிள் குறிப்பிடும் உலக அழிவல்ல?

4. பைபிள் குறிப்பிடும் இந்த உலக அழிவில் யார் அழிக்கப்படுவர்?

5, 6. (எ) இந்த உலக அழிவின்போது இப்பூமிக்குத்தானே என்ன ஏற்படும்? (பி) இதைக் குறித்தவரையில் அது எவ்வாறு “நோவாவின் நாட்கள் எப்படி இருந்தனவோ, அப்படியே” இருக்கும்?

7. அச்சமயத்தில் எது அதன் முடிவுக்கு வரும்?

8. (எ) இந்த அழிவு எந்த மூலகாரணத்திலிருந்து வரும்? (பி) இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறை எந்த நிலைமையை அடைவதற்கு முன்னால் இது நடைபெற வேண்டும்?

9, 10. இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையை வெறுமென சீர்திருத்துவதைப் பார்க்கிலும் அதிகத் தீவிரமான ஒன்று அவசியமென மனித சரித்திரம் எப்படிக் காட்டுகிறது?

11-13. (எ) மனிதவர்க்கம் முழுவதற்கும் நன்மை பயக்குவதற்கேதுவாக இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையில் மாற்றங்களை உண்டுபண்ணுவதிலிருந்து மனிதரை எது தடைசெய்கிறது? (பி) ஆகவே தேவைப்படும் இந்த மாற்றத்தின் அளவை என்ன உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்?

14. புதிய சட்டங்களை இயற்றுவது மக்களை நீதியை நேசிக்கும்படி செய்விக்குமா?

15, 16. மக்கள் பலர் நீதியை உண்மையில் நேசியாதது கடவுளுடைய சித்தத்துக்கு அவர்கள் பிரதிபலிக்கும் முறையில் எவ்வாறு காட்டப்படுகிறது?

17. மனிதவர்க்கத்தின்மேல் அழிவைக் கொண்டுவருவதில் கடவுள் இன்பங்கொள்கிறதில்லை என்பது உண்மையென்றால், பின் ஏன் அவர் அதைச் செய்யப்போகிறார்?

18. நேர்மையை நேசிக்கிற ஆட்களைப் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து மீட்பதற்குச் செலுத்தப்படவேண்டிய கிரயம் என்ன?

19. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் அழிவினால் உலக சமாதானத்துக்குத் தடையாயிருக்கும் என்ன இடையூறுகள் நீக்கப்படும்?

20. சங்கீதம் 72-ல் குறிப்பிட்டுள்ளபடி என்ன நிலைமை பூமியெங்கும் நிலவியிருக்கும்?

21. வரப்போகிற உலக அழிவிலிருந்து இந்தப் பூமிதானேயும் எவ்வாறு நன்மையடையும்?

22. இத்தகைய அழிவைக் கொண்டுவருவது எவ்வாறு கடவுள் ‘சமாதானத்தின் கடவுளாக’ இருப்பதுடன் ஒத்திருக்கிறது?

23, 24. சமாதானமும் பாதுகாப்புமுள்ள எதிர்காலத்தை நாம் அனுபவித்துக் களிக்க வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் இப்பொழுது என்ன செய்வது இன்றியமையாதது?

[பக்கம் 37-ன் படம்]

ஜலப்பிரளயத்தை மக்கள் தப்பிப்பிழைத்ததைப்போல், “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைப்போர் இருப்பர்