ஆளும் குழுவிடமிருந்து ஓர் கடிதம்
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
காவற்கோபுர பொது இதழின் முதல் பதிப்பில், ஜனவரி 1, 2008 பதிப்பில், “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்ற அற்புதமான தொடர் கட்டுரை அறிமுகமானது. அதுமுதல், ஒரு புதிய கட்டுரை அவ்வப்போது இந்தத் தொடரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் கட்டுரைகளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது? மார்த்தாளைப் பற்றிய கட்டுரையை வாசித்த பின்பு ஒரு வாசகி இப்படி எழுதினார்: “அதை வாசிக்கும்போது எனக்குச் சிரிப்பு வந்தது, ஏனென்றால் நானும் மார்த்தாளைப் போலத்தான். வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளை விழுந்துவிழுந்து கவனிப்பேன்; ஆனால், அவர்களோடு உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்பதையே மறந்துவிடுவேன்.” எஸ்தரின் கதையை வாசித்த பின்பு ஒரு டீனேஜ் பெண் என்ன முடிவுக்கு வந்தாள் தெரியுமா? “புதுப்புது துணி... புதுப்புது பேஷன்... இதிலேயே நாம மூழ்கிவிடுறது ரொம்ப ஈஸி. நாம நல்லா டிரஸ் பண்ணிக்கிறதுல எந்தத் தப்புமில்லதான். . . . ஆனா, அளவுக்குமீறி போகக் கூடாது” என்று சொல்கிறாள். அதோடு, “நம்மோட தோற்றத்த இல்ல, மனசதான் யெகோவா பாக்கிறார்” என்றும் சொல்கிறாள். அப்போஸ்தலன் பேதுருவைப் பற்றிய கட்டுரையை வாசித்தபின் ஒரு சகோதரி உற்சாகம் பொங்க இப்படிச் சொன்னார்: “அத வாசிக்க வாசிக்க அப்படியே மெய்மறந்து போனேன். எல்லாம் என் கண்முன்னாடி நடக்கிற மாதிரியே இருந்துச்சு; நேரடியா இல்லாத விஷயங்களையெல்லாம் கற்பன செஞ்சு பாத்தேன்!”
இந்தத் தொடர் கட்டுரைகளைப் பாராட்டி எழுதிய இவர்களும் சரி எண்ணற்ற மற்றவர்களும் சரி, “முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகளைத்தான் எதிரொலிக்கிறார்கள். (ரோ. 15:4) மதிப்புமிக்க பாடங்களை நமக்குப் புகட்டவே யெகோவா இந்தப் பதிவுகளை பைபிளில் சேர்த்திருக்கிறார். எவ்வளவு காலம் சத்தியத்தில் இருந்திருந்தாலும் சரி, நாம் எல்லோரும் இவற்றிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி உங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக, உங்கள் குடும்ப வழிபாட்டில் சிறிது நேரம் ஒதுக்குங்கள்; பிள்ளைகள் நிச்சயம் ரசிப்பார்கள்! உங்கள் சபை பைபிள் படிப்பில் இப்புத்தகத்தைப் படிக்கும்போதும் வாராவாரம் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். அவசர அவசரமாக ஓடாமல் நிறுத்தி நிதானமாக வாசியுங்கள். உங்கள் கற்பனைத் திறனை உபயோகியுங்கள், புலனுணர்வுகளைப் பயன்படுத்துங்கள். பைபிள் கதாபாத்திரங்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று உணர்ந்து பாருங்கள், அவர்கள் பார்த்தவற்றைப் பார்க்க முயலுங்கள். ஒரு சூழலில் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்றும், அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் எப்படி நடந்திருப்பீர்கள் என்றும் ஒத்துப்பாருங்கள்.
இந்தப் புத்தகத்தை உங்களுக்கு வழங்குவதில் பேரானந்தம் கொள்கிறோம். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆசீர்வாதமாய் இருப்பதாக! அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு