Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவுரை

முடிவுரை

“விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபிரெயர் 6:12.

1, 2. நாம் இப்போது விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது ஏன் அவசரம்? உதாரணம் தருக.

விசுவாசம். ஓர் அழகான வார்த்தை, மனங்கவரும் குணத்தை வர்ணிக்கிற வார்த்தை. அதேசமயத்தில், இதைக் கேட்டவுடனே இன்னொரு வார்த்தையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்; அதுதான், “அவசரம்!” நமக்கு விசுவாசம் இல்லையென்றால், முதலில் அந்தக் குணத்தை வளர்க்க வேண்டியது அவசரம்! நமக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அந்தக் குணத்தை விட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டியதும்... அதை மேன்மேலும் வளர்க்க வேண்டியதும்... அவசரம்! ஏன்?

2 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: பரந்துவிரிந்த ஒரு பாலைவனத்தில் பயணம் செய்கிறீர்கள். தண்ணீருக்காகத் தவியாய்த் தவிக்கிறீர்கள். கொஞ்சம் தண்ணீர் கிடைக்கிறது. என்ன செய்வீர்கள்? வெயிலில் ஆவியாகிப் போய்விடாதபடி அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்கள். அதுமட்டுமல்ல, எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்குமோ அங்கெல்லாம் நிரப்பிக்கொள்வீர்கள். அப்போதுதான் பயணத்தின் இறுதிவரை உங்களிடம் தண்ணீர் இருக்கும். ஆன்மீக அர்த்தத்தில், இன்று நாம் ஒரு பாலைவனத்தில் இருக்கிறோம்; ஆம், இந்த உலகில் உண்மையான விசுவாசத்துக்கு, தண்ணீரைப் போல் தட்டுப்பாடு; அதுமட்டுமல்ல, அந்த விசுவாசத்தை நீங்கள் பாதுகாக்காவிட்டால்... அதிகரித்துக்கொண்டே இருக்காவிட்டால்... அதை இழந்துவிடுவீர்கள். விசுவாசம் நமக்கு அவசரமாகத் தேவை; தண்ணீர் இல்லாமல் எப்படி உயிர்வாழ முடியாதோ அப்படித்தான் விசுவாசம் இல்லாமல் ஆன்மீக ரீதியில் உயிர்வாழ முடியாது.—ரோ. 1:17.

3. நம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள யெகோவா என்ன உதவி செய்திருக்கிறார், நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள் யாவை?

3 நமக்கு விசுவாசம் மிக அவசரமாகத் தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும்; இன்று அதை வளர்த்துக்கொள்வதும் காத்துக்கொள்வதும் எவ்வளவு கஷ்டம் என்பதுகூட அவருக்குத் தெரியும். அதனால்தான், நாம் பின்பற்றுவதற்கு நிறைய முன்னுதாரணங்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். “விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று எழுதும்படி அப்போஸ்தலன் பவுலைத் தூண்டினார். (எபி. 6:12) ஆகவே, விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பின்பற்ற கடினமாய் முயற்சி செய்ய வேண்டுமென யெகோவாவின் அமைப்பு நம்மை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. அவர்களில் சிலரை இந்தப் புத்தகத்தின் வாயிலாகச் சந்தித்தோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நம் நம்பிக்கையை மனதில் தெள்ளத்தெளிவாகப் பதியவைக்க வேண்டும்.

4. நம் விசுவாசத்திற்கு சாத்தான் எப்படி எதிரியாக இருக்கிறான், என்றாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?

4 விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானே நம் விசுவாசத்திற்கு மிகப் பெரிய எதிரி. விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும் விஷயத்தில், இந்த உலகத்தைப் பயங்கர பாலைவனமாக ஆக்கியிருக்கிறான். வேறு வார்த்தையில் சொன்னால், விசுவாசத்தைக் காத்துக்கொள்ள மிகக் கஷ்டமான இடமாக ஆக்கியிருக்கிறான். அவன் நம்மைவிட பல மடங்கு பலசாலி. அதனால், நம்முடைய விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவோ பலப்படுத்திக்கொள்ளவோ முடியாதென நினைத்துக் கவலைப்பட வேண்டுமா? வேண்டியதே இல்லை. உண்மையான விசுவாசத்தை வளர்க்க விரும்புகிற எல்லோருக்கும் யெகோவா உற்ற நண்பராக இருக்கிறார். அவர் நம் பக்கம் இருக்கும்போது நம்மால் பிசாசை எதிர்க்க முடியும்... ஏன், விரட்டியடிக்கவே முடியும்... என்ற உறுதியை அவர் நமக்கு அளிக்கிறார். (யாக். 4:7) நம் விசுவாசத்தை வளர்க்க... பலப்படுத்த... தினந்தோறும் நேரம் செலவிடுவதன் மூலம் நாம் பிசாசை எதிர்த்து நிற்கலாம். எப்படி?

5. விசுவாசத்திற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விசுவாசம் எப்படிக் கிடைத்தது? விளக்கம் தருக.

5 நாம் அறிந்தபடி, விசுவாசத்திற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த ஆண்களும் பெண்களும் பிறக்கும்போதே விசுவாசத்துடன் பிறக்கவில்லை. யெகோவாவின் சக்தியால் கிடைக்கிற ஒரு குணம்தான் விசுவாசம் என்பதற்கு அவர்களுடைய வாழ்க்கையே அத்தாட்சி. (கலா. 5:22, 23) அவர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார்கள், யெகோவாவும் அவர்களுடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி வந்தார். நாமும் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக; தமது சக்தியைக் கேட்டு ஜெபம் செய்பவர்களுக்கு... ஜெபத்திற்கு இசைவாக நடப்பவர்களுக்கு... யெகோவா அதைத் தாராளமாகக் கொடுக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாமல் இருப்போமாக. (லூக். 11:13) நாம் வேறென்ன செய்ய வேண்டும்?

6. பைபிள் பதிவுகளைப் படிப்பதிலிருந்து எப்படி முழுமையாய்ப் பயனடையலாம்?

6 விசுவாசத்தில் தலைசிறந்து விளங்கியவர்களில் சிலரைப் பற்றியே இந்தப் புத்தகத்தில் சிந்தித்தோம். இன்னும் எத்தனை எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! (எபிரெயர் 11:32-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் ஓர் ஆழ்கடல் எனச் சொல்லலாம்; ஜெபம் செய்து அவற்றைப் படித்தால்... கருத்தூன்றிப் படித்தால்... ஆன்மீக முத்துக்களை அள்ளியெடுப்போம். ஆனால் மேலோட்டமாகப் படித்தால், நம் விசுவாசத்தை அவ்வளவாகப் பலப்படுத்த முடியாது. அந்தப் பதிவுகளிலிருந்து நாம் முழுமையாகப் பயனடைய வேண்டுமென்றால், நேரமெடுத்துப் படிக்க வேண்டும், அவற்றின் சூழமைவையும் பின்னணியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த அபூரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் “நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான்” இருந்தன; அதை எப்போதும் நினைவில் வைத்தால், அவர்களுடைய உதாரணம் நமக்கு உயிருள்ள உதாரணமாக விளங்கும். (யாக். 5:17) நம்மைப் போலவே அவர்களும் சவால்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தபோது எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை நன்கு கற்பனை செய்து பார்க்க முடியும்.

7-9. (அ) இன்றைக்கு நாம் யெகோவாவை வழிபடுவதைப் போலவே அன்றைக்கு வழிபட அந்த விசுவாசிகளுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்கள்? (ஆ) செயல்கள் மூலம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவது ஏன் அவசியம்?

7 செயல்கள் மூலமாகவும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். ‘செயல்கள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறதே.’ (யாக். 2:26) இன்று யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் வேலையைப் பூர்வகால விசுவாசிகளுக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

8 உதாரணத்துக்கு, ஆபிரகாமை எடுத்துக்கொள்ளலாம். வனாந்தரத்தில் கற்களால் பலிபீடம் கட்டி யெகோவாவை வணங்க வேண்டியதில்லை... ரம்மியமான ராஜ்ய மன்றங்களிலும் மாநாடுகளிலும் அன்பான சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வணங்கலாம்... என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்? அவர் ‘தொலைவிலிருந்து கண்ட’ வாக்குறுதிகள் அந்தக் கூட்டங்களில் அருமையாக விளக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்? (எபிரெயர் 11:13-ஐ வாசியுங்கள்.) இப்போது எலியாவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம். பொல்லாத பாகால் தீர்க்கதரிசிகளைக் கொல்ல வேண்டியதில்லை... விசுவாசதுரோக ராஜாவின் ஆட்சியில் வாழ்ந்துகொண்டு யெகோவாவைச் சேவிக்கப் போராட வேண்டியதில்லை... ஆனால் சமாதானமாகப் போய் மக்களைச் சந்தித்து ஆறுதலான, நம்பிக்கையான செய்தியை அறிவிக்க வேண்டும்... என அவரிடம் சொல்லப்பட்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்? இன்றைக்கு நாம் யெகோவாவை வழிபடுவதைப் போலவே அன்றைக்கு வழிபட அந்த விசுவாசிகளுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அதைச் சட்டென்று பிடித்துக்கொண்டிருப்பார்கள் அல்லவா!

9 ஆகவே, செயல்கள் மூலம் நம் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவோமாக. அப்படிச் செய்கையில், இந்த விசுவாசச் செம்மல்களின் முன்மாதிரியை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, அவர்களை நம் நெருங்கிய நண்பர்களாகக் கருதுவோம். அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவர்களுடைய நண்பர்களாகும் வாய்ப்பைச் சீக்கிரத்தில் பெறுவோம்.

10. பூஞ்சோலை பூமியில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை அனுபவிப்போம்?

10 நம்பிக்கையை மனதில் தெள்ளத்தெளிவாகப் பதிய வையுங்கள். கடவுள் தந்த நம்பிக்கையை எப்போதும் சிந்தித்துப் பார்த்ததால்தான் விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் பலம் பெற்றார்கள். நீங்களும் அப்படிப் பலம் பெறுகிறீர்களா? உதாரணமாக, உயிர்த்தெழுந்து வருகிற நீதிமான்களைச் சந்திக்கும்போது அடையும் சந்தோஷத்தைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். (அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்.) அவர்களிடம் என்ன கேள்விகளைக் கேட்க விரும்புகிறீர்கள்?

11, 12. புது உலகத்தில் இவர்களிடம் என்ன கேள்விகளைக் கேட்க விரும்புகிறீர்கள்: (அ) ஆபேலிடம்? (ஆ) நோவாவிடம்? (இ) ஆபிரகாமிடம்? (ஈ) ரூத்திடம்? (உ) அபிகாயிலிடம்? (ஊ) எஸ்தரிடம்?

11 ஆபேலைச் சந்திக்கும்போது, அவருடைய அப்பா அம்மா பார்க்க எப்படியிருந்தார்கள் எனக் கேட்க விரும்புகிறீர்களா? அல்லது அவரிடம், “ஏதேன் தோட்டத்தைக் காவல்காத்த கேரூபீன்களிடம் எப்போதாவது பேசினீர்களா, அவர்கள் உங்களுக்குப் பதில் சொன்னார்களா?” எனக் கேட்பீர்களா? நோவாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்? “ராட்சதர்களைப் பார்த்துப் பயப்பட்டீர்களா? பேழைக்குள் இருந்த அத்தனை மிருகங்களையும் ஒரு வருடமாக எப்படிப் பார்த்துக்கொண்டீர்கள்?” என்றெல்லாம் கேட்பீர்களா? ஆபிரகாமைப் பார்க்கும்போது, “சேமைச் சந்தித்திருக்கிறீர்களா? யெகோவாவைப் பற்றி யார் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது? ஊர் நகரத்தைவிட்டுப் போவது கஷ்டமாக இருந்ததா?” என்றெல்லாம் கேட்பீர்களா?

12 அதேபோல், உயிர்த்தெழுந்து வருகிற விசுவாசமுள்ள பெண்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள் சிலவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். “ரூத்... யெகோவாவை வணங்குவதற்கு எது உங்களைத் தூண்டியது?” “அபிகாயில்... தாவீதுக்கு நீங்கள் உதவி செய்ததைப் பற்றி நாபாலிடம் சொல்ல பயப்பட்டீர்களா?” “எஸ்தர்... பிற்காலத்தில் உங்களுக்கும் மொர்தெகாய்க்கும் என்ன நடந்தது, அதைப் பற்றி பைபிளில் எந்த விவரமும் இல்லையே?”

13. (அ) உயிர்த்தெழுந்து வருவோர் உங்களிடம் என்ன கேள்விகளைக் கேட்கலாம்? (ஆ) பூர்வ காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் சந்திக்கப்போவதைக் குறித்து எப்படி உணருகிறீர்கள்?

13 இதேபோல், உங்களிடம் கேட்பதற்கு அவர்களுக்கும் நிறையக் கேள்விகள் இருக்கும். கடைசி நாட்களில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களைப் பற்றி... கஷ்ட காலங்களில் யெகோவா தமது மக்களை ஆசீர்வதித்ததைப் பற்றி... அவர்களுக்குச் சொல்லும்போது எவ்வளவு பூரிப்பாய் இருக்கும்! யெகோவா தமது வாக்குறுதிகள் அனைத்தையும் எப்படி நிறைவேற்றினார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அவர்களும் நெகிழ்ந்துபோவார்கள் இல்லையா? புதிய உலகில் வாழும்போது, பைபிளில் சொல்லப்பட்டுள்ள உண்மை ஊழியர்களைப் பற்றி நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அவர்களே நம்முடன் பூஞ்சோலை பூமியில் இருப்பார்கள்! அதனால் இப்போதே அவர்களை நிஜமான நபர்களாக நினைத்துப் பார்க்க எல்லா முயற்சியும் செய்யுங்கள். அவர்களுடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். உங்கள் உற்ற நண்பர்களாய் இருக்கும் அவர்களுடன் சேர்ந்து யெகோவாவுக்கு என்றென்றும் ஆனந்தமாய்ச் சேவை செய்வீர்களாக!