இக்காலத்திற்கும் பிற்காலத்திற்கும் வாழ்தல்
அதிகாரம் 1
இக்காலத்திற்கும் பிற்காலத்திற்கும் வாழ்தல்
உன் இளமை உன் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த ஒரு காலமாக இருக்கவேண்டும். இது ஓர் ஆண்டின் தளிர்ப்புப் பருவத்தைப்போல் இருக்கிறது. இளமை புதுப்பொலிவோடு கூடிய பலம் ததும்புகிற ஒரு பருவமாய் இருக்கிறது. உன் உடல் மேலும் மேலும் உறுதிவாய்ந்ததாகிக் கொண்டு வருகிறது உன் மனமும்கூட முதிர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. காரியங்களைக் கற்பதற்கும் செய்வதற்கும் பல வாய்ப்புகள் திறக்கின்றன. ஆகையால் இளமை மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தருகிற காலமாக இருக்கவேண்டுமென்பதற்கு மிகப் பல காரணங்கள் இருக்கின்றன.
2என்றாலும், உனக்கு அது அப்படிப்பட்டதாய் இருக்கிறதா, அல்லது இருக்குமா? இதில் உனக்கு உதவி செய்யக்கூடிய அல்லது தடையாக இருக்கக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றைக் குறித்து நீ எதுவும் செய்யமுடியாது. என்றாலும் இவற்றில் பலவற்றைக் குறித்து நீ ஏதாவது செய்யலாம். இந்தப் புத்தகமானது, உன் இளமையை நீ மிக நன்றாய்ப் பயன்படுத்தி நிரந்தரமான நன்மைகளை அடைய உனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
3இளமை சவால் நிறைந்த ஒரு காலமாய் இருக்கிறது. நீ காண்கிறபடி இன்று வாழ்க்கைப் பாதை பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாய் இருக்கிறது. இவற்றை எதிர்ப்பட தைரியம் வேண்டும். இந்த மேடு பள்ளங்களை எதிர்த்து சமாளிப்பது எப்படி என்பதை நீ தொடக்கத்திலேயே கற்றுக்கொள்வாயானால், அப்பொழுது மீதியான பாதை உனக்குப் பேரளவாய்ச் சமமாகக்கூடும். ஒரு பிரச்னையை வெற்றிகரமாய் மேற்கொள்ளும் ஒவ்வொரு சமயமும் உன் நம்பிக்கை வளர்ந்துகொண்டே வரும்.
4நெருக்கடிகளும் பிரச்னைகளுமாகிய இந்த மேடு பள்ளங்கள் உன்னைப் பக்கப்பாதையில் திருப்பிவிடுவதற்கு இடமளிப்பதைப் பார்க்கிலும் இளமையின் இந்தச் சவாலை எதிர்ப்பட்டு சமாளிப்பது எவ்வளவு மேம்பட்டதாயிருக்கும். வாழ்க்கை வேறுபட்டது, அது
உண்மையில் இருக்கிறபடி இல்லை என்று வெறுமென கனவு காண்பது அல்லது பாவனை செய்து உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வது நிச்சயமாகவே எளிதாய் இருக்கும். என்றாலும் இவ்வாறு செய்பவர்கள் சீக்கிரத்திலோ பிந்தியோ கடினமான உண்மைக்குள் நிச்சயமாகச் சிக்கிக்கொள்வார்கள். அப்பொழுது அதிலிருந்து விடுபட்டு முன்னேறுவது வெகு கடினமாக இருக்கக்கூடும். பெருமதிப்புவாய்ந்த காலத்தை இழந்துவிடக்கூடும், ஏனென்றால் முதுமொழி சொல்கிற பிரகாரம், நீ இளைஞனாய் இருப்பது ஒரே ஒரு தடவைதான்.5இப்பொழுது நீ ஒரு மாற்ற இடைநிலைப் பருவத்தில், அதாவது மாறுதலடையும் ஒரு காலப் பகுதியில் இருக்கிறாய். உதாரணமாக, உன் உடல் முழு வளர்ச்சியை அடையப்போகிற நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இருபதுக்கும் இருபத்திமூன்றுக்கும் இடைப்பட்ட வயதாகும் வரையில் உடல் இந்நிலையை எட்டுகிறதில்லை. உணர்ச்சி வேகம் சம்பந்தப்பட்ட முதிர்ச்சியை நீ அடைய இன்னுமதிகக் காலம் எடுக்கக்கூடும். உன்னில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மாற்றங்களில் சில உன்னைக் குழப்ப உணர்ச்சி அடைய அல்லது உன்னைக் குறித்து உறுதியற்ற ஓர் உணர்ச்சியை அடைய செய்யக்கூடும். உனக்குள் புதிய அழுத்தங்கள் உண்டாகி வருவதை நீ உணருகையில், அவற்றை எவ்வாறு கையாளுகிறாய்? இளமையின்போது ஏற்படும் இம்மாற்றங்களையும் இவற்றை வெற்றிகரமாய்ச் சமாளிப்பது எப்படி என்பதையும் இந்தப் புத்தகம் ஆழ்ந்து சிந்திக்கிறது. இவை கொண்டுவருகிற சவால்களை எதிர்த்துச் சமாளிப்பது உனக்கு மகிழ்ச்சிதரும் அனுபவமாயுங்கூட இருக்கக்கூடும், ஏனென்றால் இவை யாவும், ஒரு தனி மனிதனாகும், ஒரு தனித்த ஆளாகும் இந்த மிகச் சிறந்த அனுபவத்தின் பாகமாக இருக்கின்றன, அந்த ஆளே—நீ.
உன் வாழ்க்கைப் போக்கைத் திட்டமிடுவதற்கு உதவிகள்
6வாழ்க்கை வெகு கட்டுப்பாடுள்ளதாய், “செய்,” “செய்யாதே” என்ற கட்டளைகள் நிரம்பி இருப்பதாகச் சில சமயங்களில் உனக்குத் தோன்றலாம். ஆனால் வேறு வகையில் அதை எண்ணிப் பார்ப்பாயானால், நீ இளைஞனாக இருக்கையில் உனக்கு இருக்கிற ஒரு வகையான சுயாதீனம் பின்னால் உனக்கு இராது. பெரியவர்களுக்கு இருக்கிற அந்த எல்லா உத்தரவாத பாரச் சுமைகளாலும் நீ கட்டுப்பட்டவனாய் இராமல், அறிவைப் பெருக்குவதற்கும், உன் ஆற்றல்களையும் தனி கைத்திறமைகளையும் விருத்தி செய்தவற்கும் மிகுதியான நேரத்தைச் செலவிடுவதற்கு நீ சுயாதீனனாய் இருக்கிறாய். மற்ற ஆட்கள் செய்திருக்கிறவற்றை அல்லது செய்து கொண்டிருக்கிறவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், சிந்தனை செய்யவும் அதிக நேரம் உனக்கு இருக்கிறது.
அவர்களுடைய வெற்றிகளையும் அவர்களுடைய தோல்விகளையும் பற்றி நீ கற்று, அவர்கள், ஞானமான தெரிந்துகொள்ளுதலை அல்லது மடமையான தவறுகளைச் செய்தது எப்பொழுது என்பதை நீ காணக்கூடும். இது, நீ உன் வாழ்க்கைப் பாதையில் எந்தப்போக்கைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதை அறிய உனக்கு உதவி செய்யக்கூடும்.7இந்தப் போக்கை, எந்த உதவியுமில்லாமல், சுயமாக நீயே தீர்மானிக்கக்கூடுமா? அப்படிச் செய்ய முயலுவது அறிவுள்ள காரியமாய் இருக்குமா? பின்வரும் உதாரணங்களைக் கவனி:
8நீ ஒரு மோட்டார் காரின் இயந்திரத்தை அமைக்க விரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம். அனுபவமுள்ள இயந்திர அமைப்பு நிபுணர்கள் உனக்குச் சொல்லக்கூடியதை முதலாவதாக கற்றுக்கொள்ளாமல் சுயமாக நீயே அதைச் செய்யத் தொடங்குவாயா? அப்படிச் செய்வாயானால், அந்த இயந்திரம் முடிவில் எப்படிப்பட்டதாயிருக்கும்? அல்லது எவராவது தைப்பதை ஒருபோதும் கண்டிராமல், அல்லது ஒரு மாதிரியும் இல்லாமல், ஒரு பெரிய விருந்தினர் கூட்டத்திற்குச் செல்ல உனக்கு ஒரு சிறப்பான உடையைத் தைக்க நீ முயலுவாயா? முடிவில் அந்த உடை எப்படி இருக்கும் என்பதை நீயே கற்பனை செய்து பார்க்கலாம்.
9மனித வாழ்க்கை ஒரு கார் இயந்திரத்தையோ ஒரு சிறப்பான உடையையோ பார்க்கிலும் மிக மிக அதிகச் சிக்கலானது என்பதைச் சொல்லிக் காட்டுவதற்கு அவசியமில்லையல்லவா?
உன்னோடு பேச்சுத்தொடர்பு கொள்ள இடம் கொடு
10நாம் ஒவ்வொருவரும், நமக்கு முன்னிருந்தவர்கள் கற்றுக்கொண்டவற்றின்மீதே கட்டுகிறோம் என்பது வாழ்க்கையின் ஓர் எளிய உண்மை. ஆனால் பேச்சுத்தொடர்பு இல்லாமல் இதை நீ செய்யமுடியாது. பேச்சுத்தொடர்பு, அதாவது—உரையாடல், வாசித்தல், கற்றுக்கொள்ளும்படி மற்றவர்களைக் கவனித்தல் ஆகியவை—இல்லை என்றால் மற்றவர்கள் அடைந்திருக்கிற அறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் நாம் பயன்பெற முடியாது.
11உன் இளமையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்ள, மற்றவர்கள் ஏற்கெனவே கற்றிருக்கிறவற்றை நீ அனுபவப்படுத்திக்கொள்ள வேண்டும். உன் உடலை எப்படி மிக நன்றாய்க் கவனித்துக் கொள்வது, உண்மையில் நல்ல நண்பர்களை எப்படி அடைந்து அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வது, எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள், விவாக
நோக்குடன் பழகுதல் ஆகியவற்றிற்கு உதவியான அறிவுரைகள், விவாகம், பாலுறவு, மதுபானங்களின் அல்லது போதை மருந்துகளின் உபயோகத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில்கள் ஆகிய இப்படிப்பட்ட காரியங்களும் அதில் உட்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் ஆலோசிக்கப்படுகின்றன.12ஒருவேளை, உன்னைச் சுற்றியுள்ள உலகத்தில் இன்று நீ காண்பவற்றைப்பற்றி நீ சிந்தனை செய்துகொண்டிருக்கலாம். அங்கு மிகுதியான தன்னலம் காணப்படுகிறது. பல ஆட்கள் நேர்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். மேலும் மோசடி, தூய்மைக்கேடு, பெருங் குற்றச்செயல்கள், போர், பொய்ப்பேசுதல், பாசாங்குத்தனம் ஆகியவை பெருகியிருக்கின்றன. ‘ஆகவே, காரியங்களைப் பெரியவர்கள் இப்பேர்ப்பட்ட சீர்குலைவு செய்துவைத்திருக்கையில், அவர்களிடமிருந்து நான் என்ன கற்றுக் கொள்ளக்கூடும்?’ என்று ஒருவேளை நீ கேட்கலாம்.
13இந்நிலைமைகள் ஏற்படுவதற்குப் பெரியவர்கள் பலர் குற்றப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது மெய்யே. அவர்கள் இந்தத் தவறுகளில் பங்கு கொள்ளுகிறவர்களாகவோ அல்லது இந்நிலைமைகளை உண்டுபண்ணுகிற அந்த ஒழுங்குமுறைகளோடு ஒத்துச் சென்று அவற்றை ஆதரிக்கிறவர்களாகவோ இருக்கிறார்கள்.
14மறுபட்சத்தில், உன்னைப்போலவே, காரியங்கள் சென்றுகொண்டிருக்கும் போக்கைக் கண்டு வெறுப்படைகிற பெரியவர்கள் பலரும் இருக்கிறார்களல்லவா? இந்தப் பிரச்னைகள் ஒரே சந்ததிக்குள் உண்டாகத் தொடங்கவில்லையே. உன் பெற்றோர், இப்பொழுது நீ இருக்கிற அதே வயதுள்ளவர்களாக இருக்கையில், அவர்களுங்கூட இவ்வுலகக் காட்சி மனச்சோர்வை உண்டாக்குவதாகக் கண்டார்கள். உண்மையில், கடந்த பாதி நூற்றாண்டு காலமாக, முக்கியமாய் 1914-1918-ன், முதல் உலகப்போரின் முதற்கொண்டு, மக்கள் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொன்றுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொன்றும் கையாளுவதற்கு மேலும் மேலும் கடினமாகிக்கொண்டு போவதாகவும் தோன்றுகிறது.
15வயதில் பெரியவர்களாக அல்லது அதிக அனுபவமுள்ளவர்களாக இருப்பதுதானேயும் வாழ்க்கையின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான எல்லாப் பதில்களையும் அளித்துவிடுகிறதில்லை என்பது தெளிவாய் இருக்கிறது. மற்றப்படி எல்லா இடங்களிலும் காரியங்கள் எப்பொழுதும் மேலும் மேலும் நல்ல நிலைமைக்கு முன்னேறிக்கொண்டிருக்குமே. ஆனால் அப்படியில்லை. ஆகவே மற்றவர்களின் அனுபவத்தோடுகூட, உனக்கு வேண்டிய தகவலையும் உதவியையும் நீ பெறக்கூடிய, அதைப் பார்க்கிலும் மேம்பட்ட மற்றொரு ஊற்று மூலம் இருக்கிறதா?
16ஆம், இருக்கிறது. அதைப்பற்றி நாம் இப்பொழுது பேசுவோம்.
[கேள்விகள்]
1-5. இளமை ஏன் மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கவேண்டும்? என்றபோதிலும் எது அதைச் சவால் நிறைந்ததாக்குகிறது?
6-9. மற்ற ஆட்கள் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கற்பதன் மூலம் நீ எப்படிப் பயன்பெறக்கூடும்?
10-16. (எ) பெரியவர்களிடமிருந்து தாங்கள் கற்றுக்கொள்ள விரும்பாதவர்களாய்ச் சில இளைஞர் உணருவதேன்? இதைப் பற்றி நீ எப்படி உணருகிறாய்? (பி) பெரியவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்பதைத் தவிர, வாழ்க்கையைப் பற்றிய வேறு ஏதோ ஒரு தகவல் ஊற்றுமூலமுங்கூட நமக்கு ஏன் தேவையாக இருக்கிறது?
[பக்கம் 4-ன் முழுபடம்]