Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உன் பெற்றோரை நீ எவ்வாறு கருதுகிறாய்?

உன் பெற்றோரை நீ எவ்வாறு கருதுகிறாய்?

அதிகாரம் 10

உன் பெற்றோரை நீ எவ்வாறு கருதுகிறாய்?

தங்கள் பெற்றோரைப் பற்றித் தாங்கள் உணருவதை மற்றவர்கள் உனக்குச் சொல்லுகையில், தங்களைப் பற்றியுங்கூட ஏதோ உன்னிடம் சொல்லுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆம், உன் பெற்றோரைக் குறித்து நீ சொல்லுகிறதும் செய்வதும் உன் சொந்த மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறதென்பதை வெளிப்படுத்துகிறது. இப்பொழுது தானேயும் நீ என்ன வகையான ஆளாக இருக்கிறாய் என்பதைப் பற்றி அது பேரளவாய்ச் சொல்லுகிறது. மேலும் எதிர்காலத்தில் நீ என்ன வகையான ஆளாகக்கூடும் என்பதைப் பற்றியும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இது ஏனென்றால் வீட்டில் நீ வளர்த்து உருவாக்கும் நடத்தைக்குரிய மாதிரிகள் படிப்படியாய் உன்னில் ஒரு பாகமாகிவிடுகின்றன.

2சில இளைஞர்கள் ஏறக்குறைய எல்லாவற்றிலுமே தங்கள் பெற்றோரிடமாக ஓர் எதிர் மறையான மனப்பான்மையை வளர்க்கின்றனர். தங்கள் பெற்றோர் தங்களை ஒருபோதும் விளங்கிக் கொள்ளுகிறதில்லை அல்லது விளங்கிக்கொள்ள முயலுகிறதுங்கூட இல்லை, அவர்கள் மாற்ற முடியாத வண்ணமாய்ப் பழங்காலத்தினராய் இருக்கின்றனர் விரைவாய் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் உபயோகமுள்ள எந்த வழிநடத்துதலையும் அவர்கள் கொடுக்க முடியாது என்பதாகப் பலர் உணருகின்றனர். இந்த உணர்ச்சியானது சீக்கிரத்தில் கலகத்துக்குரிய ஒரு பொது மனப்பான்மைக்கு வளருகிறது. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இது எளிதில் ஒரு பழக்கமாகிவிடுகிறது. குடும்ப வட்டாரத்துக்குப் புறம்பேயுள்ள ஆட்களிடம் நடந்துகொள்ளும் முறையில் இது தன்னை வெளிப்படுத்தும். என்ன நடக்கிறதென்பதை நீ உணருவதற்குமுன்பாக, அது உன்னைக் கவலைக்கிடமான தொந்தரவுக்குள் வழி நடத்திவிடக்கூடும்; மனித சமுதாயத்தின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குக்கீழ்ப்படிய மனமற்றுப் போனதனிமித்தம் அவ்வாறு நடக்கக்கூடும்.

3என்றபோதிலும் இவ்வாறு உணராமலும் நடக்காமலும் இருக்கிற மற்றவர்களும் இருக்கிறார்கள். தங்கள் பெற்றோரை மரியாதையுடன் கருதுகிறவர்களாய் அவர்கள் வளருகிறார்கள். இந்த உலகம் ஏன் இவ்வளவு அதிக தொந்தரவுக்குள் இருக்கிறதென்பதையும் எதிர்காலம் தங்களுக்கு என்ன வைத்திருக்கிறதென்பதையும் இந்த இளைஞர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்கள் அநேகமாய்க் கொண்டிருக்கிற அந்த எதிர்மறையான மனநிலைக்குள் தங்களை ஒத்துப்போக வைக்கும்படி வற்புறுத்தப்படுகிற நிலையில் அவர்கள் இல்லை. மனித நடத்தைக்குரிய மிக உயர்ந்த நியமங்களாகிய, தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற நியமங்களுக்கு மரியாதையைத் தங்கள் பெற்றோர் தங்களுக்குள் படிப்படியாய் அறிவுறுத்தியிருக்கிறதை அவர்கள் நன்றியோடு மதிக்கிறார்கள். பைபிள் அறிவுரை கொடுக்கிற பிரகாரம்: “தகப்பன்மாரே உங்கள் பிள்ளைகளை எரிச்சல்படுத்திக் கொண்டிராதேயுங்கள், ஆனால் யெகோவாவின் சிட்சையிலும் மன ஒழுங்கிசைவுபடுத்துதலிலும் அவர்களைத் தொடர்ந்து வளர்த்துவாருங்கள்.” இந்த இளைஞர்கள் இந்தப் பயிற்றுவிப்புக்கு ஆதரவாய் இணங்கிக் கீழ்ப்பட்டு, மனப்பூர்வமாய்த் தங்கள் பாகத்தை நடப்பிக்கிறார்கள். இதன் பயனாக குடும்ப ஏற்பாட்டில் அவர்கள் தங்கள் இடத்தை நன்றியோடு மதிக்கிறார்கள். வீட்டில் நல்ல உறவு இருந்துவருகிறது.—எபேசியர் 6:4.

பெற்றோருக்கு உரிய கீழ்ப்படிதல்

4ஆனால் பைபிள் நியமங்களைத் தங்களுக்குக் கற்பிக்க முயலாத பெற்றோர்களையுடைய பிள்ளைகளைப் பற்றியதென்ன? இது, அவர்கள் தங்கள் பெற்றோருக்கு மரியாதையையும் கீழ்ப்படிதலையும் கொடுக்கவேண்டியதில்லை என்று அர்த்தங் கொள்ளுகிறதா? பெற்றோருடைய வழிநடத்துதல் கடவுளுடைய தராதரங்களைவிட்டு விலகியிருப்பதால் கெடுதலாய்ப் பாதிக்கப்படுமென்பது உண்மையாயிருக்கையில், இது இளைஞர் தங்கள் பெற்றோரிடமாக நல்ல மனநிலையை வளர்த்துவர வேண்டிய தேவையைக் குறைக்கிறதில்லை. ஏன்? பல காரணங்கள் இருக்கின்றன.

5உன் சொந்த செலவிலும் முயற்சியிலும் நீ ஒருபோதும் இருந்திராததனால், உன் பெற்றோர் உனக்குச் செய்திருக்கிற எல்லாவற்றையும் நீ ஒருவேளை முற்றிலுமாய் மதித்துணரமாட்டாய். ஆனால் சற்று நின்று யோசித்துப் பார்: உன் பிறப்பு முதற்கொண்டு உன் தகப்பனும் தாயும் உன்னைத் தினந்தோறும் கவனித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உனக்கு உணவையும் உடையையும், வாழ்வதற்கு ஒரு வீட்டையும் கொடுத்து வந்திருக்கிறார்கள், உன் படிப்புக்கு வேண்டிய ஏற்பாட்டையும் செய்து வந்திருக்கிறார்கள்.

6உன் பிறப்பு முதற்கொண்டு உன் பெற்றோர் உனக்குச் செய்து வந்திருக்கிறதைச் செய்வதற்கு நீ யாராவது ஒருவரைக் கூலிக்கு அமர்த்தவேண்டியதாக இருந்திருந்தால் நீ பெருந் தொகையைச் செலவு செய்ய வேண்டியதாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் உன் பெற்றோர் மரியாதை செய்யப்படுவதற்குத் தகுந்தவர்களாக இருக்கிறார்கள். பின்னால், நீ விவாகம் செய்து ஒரு பெற்றோராக ஆவாயானால், உன் பெற்றோர் உனக்கு எவ்வளவு அதிகம் செய்தார்கள் என்பதை மேலும் முழுமையாய் மதித்துணர்வாய். என்றாலும் இப்பொழுதேயும் அவர்களுக்கு நன்றி மதித்துணர்வைக் காட்டலாமல்லவா? மரியாதையையும் கீழ்ப்படிதலையும் அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் நீ அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிற அன்பில் சிறிதைத் திரும்பச் செலுத்துவாயானால், அப்பொழுது நீ ஒரு முதிர்ச்சியுள்ள ஆளாக, நல்ல உள்ளுணர்வுள்ள ஒருவனாக, தனக்கு நன்மை செய்கிறவர்களை மதிக்கிற ஒருவனாக வளர்ந்து கொண்டிருக்கிறாயென காட்டுகிறாய்.

7இது உன் பெற்றோர் பரிபூரணர் என்று சொல்லுவதற்கில்லை. நிச்சயமாகவே அவர்கள் தவறுகளைச் செய்கிறார்கள். என்றாலும் நீயுங்கூட தவறுகளைச் செய்கிறாய். வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் அனுபவம் உனக்கு இல்லாததனால், நீ அநேகமாய் அவர்களைப் பார்க்கிலும் இன்னும் அதிகமான தவறுகளைச் செய்யக்கூடும். உன் பெற்றோர் செய்யும் தவறுகளுக்காக அவர்களை நீ குறை கூறுகிறாயா, என்றபோதிலும் உன்னுடைய தவறுகளைப் பற்றி அவர்கள் ஒன்றும் சொல்லக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயா? முரண்பாடில்லாமல் இருக்க, நீ செய்யும் தவறுகள் பலவற்றை அவர்கள் கவனியாமல் விட வேண்டியதாய் இருப்பதைப் போலவே நீயும் அவர்கள் செய்யும் தவறுகளையும் கவனியாமல் விட கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மிக கனமான உத்தரவாதம் இருக்கிறதால் சில சமயங்களில் அவர்கள் தவறக்கூடுமென்பது விளங்கிக்கொள்ளக்கூடியதே. பின்வரும் பைபிள் நியமம் நன்றாய்ப் பொருந்துகிறது: “இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.”—யாக்கோபு 2:13.

8என்றபோதிலும், சில காரியங்களில், பெற்றோருடைய தவறு என்று நீ கருதுவதானது, வெறுமென உன்னுடையதிலிருந்து வேறுபடுகிற ஒரு நோக்குநிலையாக இருக்கலாம். இப்படியிருக்க, இக்காரியத்தில் உன் பெற்றோர் திட்டவட்டமான உறுதிநிலையை ஏற்றிருக்கையில், நீ என்ன செய்யவேண்டும்?

9உன் பெற்றோர் வகிக்கும் ஸ்தானம் உன்னுடையதற்குச் சமமானதாக இல்லை என்பதை நீ மனதில் வைக்கவேண்டும். காரியங்களுக்குரிய கடவுளுடைய ஏற்பாட்டில் பெற்றோர் ஒருவர் மேலான ஒருவரை பிரதிநிதித்துவம் செய்கிறார். உனக்கு இன்னும் இராத அதிகாரத்தையும் உத்தரவாதத்தையும் கடவுள் உன் பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறார். ஆகையால், உன்னைப் பாதிக்கிற காரியங்களில் கடைசி தீர்மானங்களைச் செய்வது உன் பெற்றோருக்கு உரியது. இதன் காரணமாகவே கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு புத்திமதி சொல்லுகிறது: “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” நிச்சயமாகவே, இது, உங்கள் பெற்றோர் கேட்கிற, கடவுளுடைய சட்டங்கள் மீறப்படாத, எல்லாக் காரியத்திலேயும் அவர்களுக்குக் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது.—கொலோசெயர் 3:20.

10மனித சமுதாயத்தில் ஒழுங்கு இருக்கவேண்டுமென்பதைக் கவனி. ஒழுங்கு இல்லாவிட்டால், அமைதிக்கேடும் குழப்பமுமே ஏற்படும். உதாரணமாக, ஒரு கப்பலை எப்படிச் செலுத்தவேண்டுமென்று ஒரு மாலுமி, தலைமை மாலுமிக்குக் கட்டளையிடுகிறதில்லை, பந்து விளையாட்டுக் கழகத்தை எப்படி நடத்துவது என்று பந்து விளையாடுகிற ஒருவன் அதன் மேலாளருக்குச் சொல்லுகிறதில்லை. ஒரு நல்ல தலைவனும் ஒரு நல்ல மேலாளனும், தங்கள் வழிநடத்துதலின் கீழ் இருக்கிறவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதை வரவேற்கிறார்கள், உண்மையில், அவ்விதம் செய்யும்படி உற்சாகப்படுத்துகிறார்கள். என்றபோதிலும் என்ன செய்யப்பட வேண்டுமென்று அந்த மற்றவர்கள் தங்களை அதிகாரமாய் ஏவிக்கொண்டும் கட்டளையிட்டுக்கொண்டும் இருக்க அவர்கள் அனுமதிப்பார்களானால், அவர்களுடைய அதிகாரம் சீக்கிரத்தில் அழிக்கப்பட்டுப்போகும், குழப்பமும் தாறுமாறுமே விளைவாக ஏற்படும். இதை நீ ஒப்புக்கொள்ளுகிறாயல்லவா?

11இதைப்போலவே, குடும்ப வட்டாரத்திலும் ஒழுங்கு இருக்கவேண்டும். அங்கே தகப்பனைத் தலைவனாகவும் தாயை அவனோடு நெருங்க ஒத்துழைப்பவளாகவும் கடவுள் நியமித்திருக்கிறார். பெற்றோர் இருவரும் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிப்பவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகையால், இரவில் வீட்டுக்குள் நீ இருக்கவேண்டிய நேரம், நீ யாரிடம் கூட்டுறவு கொள்ளலாம், உன் முடியை ஒழுங்குபடுத்தும் முறை முதலியவற்றைப்போன்ற சில கட்டளைகளை உன் பெற்றோர் உனக்குக் கொடுக்கையில் நீ அவற்றிற்குக் கீழ்ப்படிகிறாயென்றால், அப்பொழுது நீ கடவுளுடைய ஏற்பாட்டுக்கு மரியாதை கொடுக்கிறாய். உன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமற் போகையில் கடவுளுடைய இந்த ஏற்பாட்டுக்கு அவமரியாதை செய்கிறாய். இது உன்னையும் உன் பெற்றோரையும் படைத்த சிருஷ்டிகராகிய கடவுளுக்கு விரோதமாக எதிர்த்து நிற்பதைக் குறிக்கிறது! இங்கே தோல்வியடையப்போவது யார் என்று உனக்குத் தெரியும். ஆகையால், உன் பெற்றோரின் வழிநடத்துதலுக்கு நீ எப்படி பதிலளிக்கிறாய் என்பது, உன் பெற்றோரைப் பார்க்கிலும் உயர்ந்தவராகிய, அவர்கள் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிற, யெகோவா தேவனைப் பற்றி நீ எப்படி உணருகிறாய் என்பதைப் பிரதிபலிக்கிறது.

12இதன் காரணமாகவே கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “தகப்பனை பரியாசம் பண்ணி, தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.” ஆம், பெற்றோரிடமாகக் கொண்டிருக்கும் தவறான மனப்பான்மை இளைஞர் தங்கள் உயிரை இழப்பற்கும் ஏதுவாகும்.—நீதிமொழிகள் 30:17.

கீழ்ப்பட்டிருப்பதிலிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்

13ஏதோ ஒருநாள், நீ சட்டப்பூர்வ வயதை அடைந்து ஒருவேளை உன் சொந்த குடும்பத்தை உடையவனாக இருக்கையில் உன் பிள்ளைகள் உனக்கு மரியாதையையும் கீழ்ப்படிதலையும் கொடுக்க நீ விரும்புவாயல்லவா? நீ தானேயும் உன் சொந்தப் பெற்றோருக்கு இவற்றைக் கொடுக்கக் கற்றுக் கொள்ளவில்லையென்றால், இப்படிப்பட்ட மரியாதையை உன் பிள்ளைகள் கொடுக்கும்படி அவர்களை நீ வெகு வெற்றிகரமாய்ப் பயிற்றுவிக்கக்கூடுமா? நீ விதைக்கிறதையே அறுப்பாய் என்று பைபிள் சொல்லுகிறது. (கலாத்தியர் 6:7) இப்பொழுது நீ இருக்கிற கீழ்ப்பட்ட நிலையைச் சமாளிப்பது எப்படியென்று கற்றுக்கொள், இது பின்னால், முதிர்ச்சியடைந்த பருவத்தின் ஒருவேளை பெற்றோராயிருக்கும் நிலையின் பெரிதான உத்தரவாதத்தைச் சமாளிப்பதற்கு உனக்கு உதவி செய்யும்.

14மேலும் உன் பெற்றோரிடமாக எதிர்மறையான மனப்பான்மையை நீ வளர்த்து வருவாயானால், நீ பின்னால் செய்யப்போகிற மற்றக் காரியங்களில் இது தன்னை வெளிப்படுத்தக்கூடும். உதாரணமாக, உன்னை வேலைக்கு அமர்த்தியவருக்கு, நீ வேலை செய்வாயென்றால், உன் மேல் அவருக்கு இருக்கும் அதிகாரத்தை நீ வெறுத்து எப்பொழுதும் மனக்கசப்படைவாயா? செய்யும்படி அவர் உனக்கு ஏதாவது வேலை கொடுக்கையில் அதற்கு இணங்கிக் கீழ்ப்படிவதை நீ கடினமாய்க் காண்பாயா? உன் வேலையைப் பற்றி நீ விடாமல் குறைகூறிக்கொண்டிருப்பாயா? உன்னிடம் வேலை செய்கிறவர்களிடமாக உன்னுடைய மனப்பான்மையைப் பற்றியதென்ன? அவர்களைப் பற்றி எப்பொழுதும் குறைகூறிக்கொண்டிருப்பவனாக, அவர்கள் உனக்குச் செய்யக்கூடிய நல்ல காரியங்களுக்காக அவர்களுக்கு ஒருபோதும் நன்றி செலுத்தாதவனாக நீ உன்னைக் காணக்கூடும். அல்லது ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள நீ பள்ளிக்குப் போவாயென்றால், அல்லது வேலையில் நீ பயிற்றுவிக்கப்படுவாயென்றால், ஒரு சில வாரங்களுக்குப் பின்னால், நீ ஒருவேளை, உனக்குக் கற்பிக்கிறவரைப் பார்க்கிலும் அதிகம் தெரிந்திருப்பதாக உணரத் தொடங்கக்கூடும். இந்த மனப்பான்மைகள் யாவும் உனக்கு எளிதில் மிகுந்த துக்கத்தையும் தொந்தரவையும் உண்டு பண்ணக்கூடும். முதலிடத்தில் இவை உன் பெற்றோரிடமாகத் தவறான மனப்பான்மையை வளர்த்து வந்ததன் விளைவாக இருக்கக்கூடும்.

15ஆகையால், குடும்ப வாழ்க்கையின் உண்மை நிலையையும் அதில் உன் இடத்தையும் ஏற்றுக்கொள். அது கடவுளுடைய வழி என்பதையும், அவருடைய வழியே எல்லாவற்றையும்விட மிகச் சிறந்தது என்பதையும் நன்றியோடு மதித்துணருவாயாக.

16உன்னுடைய பருவ வயது ஆண்டுகளில் குடும்பத்தில் உனக்குரிய சரியான இடத்தை நீ ஏற்க மறுப்பாயானால், அப்பொழுது நீ தொந்தரவைக் கேட்டு வாங்குகிறவனாய் இருக்கிறாய். இது, உன் பெற்றோருடனும் மற்றவர்களுடனுமுள்ள உன் உறவையும் அதோடு உன் பிற்கால வாழ்க்கையையும் பாதிப்பது மட்டுமல்லாமல்; எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமாய்க் கடவுளுடன் கொண்டுள்ள உன் நிலைநிற்கையையும் கெடுத்துப் போடும். தம்முடைய புதிய ஒழுங்குமுறையில் நீ என்றும் வாழ்வாயா அல்லது இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறை சீக்கிரத்தில் அழிக்கப்படுகையில் அழிந்து இல்லாமற்போவாயா என்பதைத் தீர்மானிப்பவர் அவரே. அவருடைய இந்த அழைப்புக்குச் செவிகொடு: “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப் பண்ணும்.”—நீதிமொழிகள் 3:1, 2.

17நம்முடைய பரலோகத் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவருடைய சட்டத்தை மறவாதவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற வெகுமதியைச் சற்று எண்ணிப்பாருங்கள். “நீடித்த நாட்களும், தீர்க்காயுசும், சமாதானமுமே” அந்த வெகுமதி. உனக்கு வேண்டியது இதுதானா? நீடித்த நாட்கள் வாழ்ந்து, சமாதானமும் சந்தோஷமுமுள்ள ஒரு வாழ்க்கையை உண்மையில் அனுபவித்து மகிழ உனக்கு விருப்பமா? அப்படியானால் உன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி ஊக்கப்படுத்தும் கடவுளுடைய ஊக்கமூட்டுதலுக்குச் செவி கொடுப்பதன் மூலம் உன்னுடைய விருப்பத்தை நிரூபி.

[கேள்விகள்]

1-3. (எ) தன் பெற்றோரிடமாக ஒருவன் கொண்டிருக்கிற மனப்பான்மை அவனைப்பற்றித்தானே என்ன சொல்லுகிறது? (பி) உனக்குத் தெரிந்திருக்கிற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடமாக என்ன மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்? அவர்களுடைய மனப்பான்மை சரிதான் என்று நீ ஒத்துக்கொள்கிறாயா? (சி) தன் பெற்றோருக்கு மரியாதை கொடுக்க என்ன வகையான பயிற்றுவிப்பு ஓர் இளைஞனுக்கு உதவி செய்யக்கூடும், ஏன்?

4-6. (எ) உன் வாழ்க்கையில் இதுவரையாக உன் பெற்றோர் உனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? (பி) நீ அதை நன்றியோடு மதித்துணர்வதை எப்படிக் காட்டக்கூடும்? (எபேசியர் 6:1, 2)

7-12. (எ) தன் பெற்றோர் செய்யும் தவறுகளை ஓர் இளைஞன் எப்படிக் கருதவேண்டும்? (மத்தேயு 6:14, 15) (பி) பைபிளில் காட்டப்பட்டிருக்கிறபடி பெற்றோருக்குக் கடவுள் என்ன இடத்தைக் கொடுத்திருக்கிறார்? (நீதிமொழிகள் 6:20) இது ஏன் அவசியமான ஓர் ஏற்பாடு? (சி) தன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமற்போவது எப்படிப்பட்ட கவலைக்கிடமான காரியம்?

13-17. (எ) உன் பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவும் கீழ்ப்படியவும் நீ கற்றுக்கொள்வது, நீ தானேயும் ஒரு தகப்பனாகையில் அல்லது தாயாகையில் உனக்கு எப்படி உதவி செய்யக்கூடும்? (பி) இது எப்படி பள்ளியிலும், உன்னை வேலைக்கு அமர்த்தியவருக்கு நீ வேலை செய்கையிலும் உனக்கு உதவி செய்யக்கூடும்? (சி) மிக முக்கியமாய் கடவுளுடன் உன் நிலைநிற்கையை இது எப்படிப் பாதிக்கும்?

[பக்கம் 76-ன் படம்]

பெற்றோருக்கு உரிய மரியாதையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்களா?