Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளும், விவாக நோக்குடன் பழகுதலும்

திர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளும், விவாக நோக்குடன் பழகுதலும்

அதிகாரம் 19

திர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளும், விவாக நோக்குடன் பழகுதலும்

இயல்பான ஒவ்வொரு ஆளும் வாழ்க்கையில் மெய்யான இன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புகிறான். இது சரியென்று பைபிள் காட்டி சந்தோஷத்தைக் கடவுளுடைய ஆவியின் “கனிகளில்” ஒன்றாகக் குறிப்பிடுகிறது. (கலாத்தியர் 5:22) இளைஞர் பலர், முக்கியமாய் மேற்கத்திய நாடுகளில், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பை இன்பத்தைக் கண்டடையும் முக்கியமான ஒரு வழிவகையாக நோக்குகின்றனர். அவர்கள் துணைக் காவலாகத் தங்களோடு எவரும் இராமல் தனியே எதிர்பாலினரான ஒருவரோடு, நேரத்தைச் செலவிட அடிக்கடி ஏற்பாடு செய்து கொள்ளுகின்றனர். இதைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?

2எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, பல இடங்களில் அவ்வளவு சாதாரண காரியமாக இருப்பதனால், அது இயல்பான, எதிர்பார்க்கப்படும் ஒரு பழக்கமே என்பதாக நீ ஒருவேளை கருதிக்கொள்ளக்கூடும். என்றபோதிலும் அது எப்பொழுதுமே அவ்வாறு இருக்கவில்லை; ஆங்கிலத்தில் சமுதாய சூழமைவில் குடும்பம் என்ற புத்தகம் விளக்குகிற பிரகாரம்: “நாம் தெரிந்திருக்கிறபடியான எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு ஒருவேளை முதல் உலகப் போருக்குப் பின்பே தோன்றியிருக்கலாம்.” என்றபோதிலும், பல நாடுகளில் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு ஒருபோதும் பழக்கமாகவில்லை. உண்மையில், எதிர்கால மணவாட்டியும் மணவாளனும் தங்கள் திருமண நாள் வரையாக இன்னும் ஒருவரையொருவர் சந்தியாதவர்களாகவே இருக்கலாம். அவர்களுடைய திருமணத்துக்கான ஏற்பாடுகள் அவர்களுடைய பெற்றோரால் அல்லது “மண இணைப்பாளரால்” அல்லது “இடையீட்டாளரால்” செய்யப்படுகின்றன.

3நிச்சயமாகவே, எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பும், விவாக நோக்குடன் பழகுதலும் இயல்பானதாக ஏற்கப்பட்டுள்ள இடத்தில் நீ வாழ்கிறாயென்றால் சில நாடுகளில் இந்தப் பழக்கம் இல்லாதிருப்பதை விளங்கிக் கொள்வது உனக்குக் கடினமாகத் தோன்றக்கூடும். என்றாலும் அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், நீ வாழும் நாட்டிலுள்ள இந்தப் பழக்கங்களைக் குறித்து அதே விதமாக விளங்காமல் திகைப்பார்கள். எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பையும், விவாக நோக்குடன் பழகுதலையும் ஞானமற்ற காரியங்களாக அல்லது ஒருவாறு அவமதிப்பானவை என்றுங்கூட அவர்கள் கருதக்கூடும். இந்தியாவிலிருந்து வந்த பெண் பிரசித்திப்பெற்ற ஒரு மேற்கத்திய திருமண ஆலோசகரிடம் பின்வருமாறு விளக்கினாள்: “நாங்களே சந்தித்து நட்புகொண்ட ஒரு பையனின் குணத்தை நாங்கள் எப்படித் தீர்மானிக்கக்கூடும்? நாங்கள் இளைஞராகவும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கிறோம். எங்கள் பெற்றோர் எங்களைவிட முதியோராகவும் ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், நாங்கள் ஏமாற்றப்படக்கூடியதைப்போல் அவர்கள் அவ்வளவு எளிதாக ஏமாற்றப்படமாட்டார்கள். . . . நான் மணம் செய்யும் அந்த மனிதர் சரியானவராக இருக்க வேண்டுமென்பது அவ்வளவு முக்கியமானது. அவரை நானே எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருந்தால், நான் வெகு எளிதாகப் பிழை செய்யக்கூடும்.”

4ஆகவே, காரியங்களைச் செய்யக்கூடிய ஒரே வழி, உன் சொந்த வட்டாரத்திலுள்ள மக்கள் அவற்றைச் செய்கிற முறைப்படியே என்ற குறுகிய மனப்பான்மையையும் எண்ணத்தையும் ஏற்பதற்கு மாறாக உன் எண்ணத்தை விரிவாக்குவது நல்லது. கடைசியாகப் பகுத்தறிகையில், காரியங்கள் எப்படி முடிவடைகின்றன, அவற்றின் விளைவுகளென்ன என்பதே குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் எவ்வளவு நல்லவை அல்லது எவ்வளவு கெட்டவை என்பதைத் தீர்மானிக்கின்றன. பைபிளில் பிரசங்கி 7:8-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதன் முடிவு நல்லது.” மேலும், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பும், விவாக நோக்குடன் பழகுதலும் பழக்கவழக்கமாக இருக்கிற நாடுகள் பலவற்றில் திருமண எண்ணிக்கைகளின் ஒரு பெரும் சதவீதம் வெற்றிகரமாயிராமல் அவை விவாகரத்துவில் முடிவடைகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அப்படியானால் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பைப் பற்றியதென்ன?

5காரியங்களை நியாயமாய்க் கலந்தாலோசிப்பதில் நீ நம்புகிறாயென்றால் வெறுமென எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பின் குறுகிய பாதிப்புகளை மட்டுமேயல்லாமல் அதன் நீண்டகால விளைவுகளையுங்கூட ஆழ்ந்து கவனிக்க நீ விரும்புவாய். காரியங்களை இந்த நீண்டகால நோக்கு நிலையிலிருந்து காணும்படி நம்முடைய சிருஷ்டிகர் நமக்கு உதவி செய்கிறார். நமக்கு நீடித்து நிலைத்திருக்கும் மெய்யான சந்தோஷத்தைக் கொண்டுவருவதையே நாம் அடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆகையால் அவர் தம்முடைய வார்த்தையில் பின்வருமாறு நம்மை ஊக்கப்படுத்துகிறார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும் உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.” (பிரசங்கி 11:9, 10) இதன் கருத்தென்ன?

6இது, நீ உன் இளம் வயதை அனுபவித்து மகிழும்படியும், ஆனால், அதே சமயத்தில், பின்னால் உன் வாழ்க்கையைத் தீங்கான முறையில் பாதிக்கும் நடத்தையில் நீ ஈடுபடாமலிருக்க வேண்டுமென்றும் சிருஷ்டிகர் விரும்புகிறார் என்று கருத்துக் கொள்ளுகிறது. தற்கால ஓர் எழுத்தாளன் தானேயும் குறிப்பிட்டபடி, விசனகரமாய், இதுவே அடிக்கடி நடக்கிறது: “மனிதவர்க்கத்தின் மிகப் பெரும் பாகமானவர்கள் தங்கள் [வாழ்க்கையின்] முதல் ஆண்டுகளை, தங்கள் கடைசி ஆண்டுகளைத் துயர் மிகுந்ததாக்குவதற்கே பயன்படுத்துகின்றனர்.” இது உனக்கு நேரிடும்படி நீ விரும்புகிறதில்லையல்லவா? கடவுளுங்கூட இப்படி நேரிடும்படி விரும்புகிறதில்லை. என்றபோதிலும், இளைஞர் தாங்கள் செய்யும் காரியங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகும்படி கடவுள் வைக்கிறாரென்று இங்கே பிரசங்கியில் பைபிள் காட்டுகிறது. அவர்கள் தாங்கள் தெரிந்துகொள்ளும் போக்கின் விளைவுகளை எதிர்ப்படுவதிலிருந்து இளமை அவர்களை விடுவித்துவிடாது.

7இதெல்லாம் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பின் காரியத்தின் பேரில் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கிறது. எப்படி? உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: “நான் ஏன் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு செய்ய விரும்புகிறேன்? உதாரணமாக, ஒரு தொகுதியின் பாகமாக நான் அனுபவிக்க முடியாத எதற்காக நான் நாடித் தேடுகிறேன்? எதிர்பாலினரான ஓர் ஆளுடன், ஜோடியாகத் தனித்து செல்வதற்கு நான் ஏன் விரும்புகிறேன்?” எதிர்பாலாரிடமாக நீ உணரும் வளர்ந்து கொண்டே போகும் கவர்ச்சியே அடிப்படை காரணமல்லவா? உடல் சம்பந்தமான கவர்ச்சியே பொதுவாய் “எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புக்கு” ஒருவர் விருப்பப்படுவதற்கு முக்கியமாயிருக்கிறதென்ற இந்த உண்மையிலிருந்து இது காணப்படக்கூடியதாய் இருக்கிறது.

8எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு செய்கிற இளைஞர் பலர் தற்போது விவாகத்தைப் பற்றிக் கவலையுடன் சிந்தியாதவர்களாக இருக்கின்றனர், அல்லது தாங்கள் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு செய்யும் அந்த ஆளைத் தங்கள் திருமணத் துணையாக ஏற்கக்கட்டாயமாய் விரும்புவர் என்பதுமில்லை. எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு வழக்கமான ஒன்றாகக் கருதப்படும் பெரும்பான்மையான இடங்களில், அது வெறும் ஒரு பொழுதுபோக்கு முறையாகவே, ஒரு சாயங்காலத்தை அல்லது ஒரு வார முடிவைக் கழிப்பதற்கான ஒரு வழியாகவே கருதப்படுகிறது. சில ஆட்கள், தங்கள் சொந்த வயதுக்கொப்பானவர்கள் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு செய்வதன் காரணமாகத் தாங்கள் “வேறுபட்டவர்களாகக்” கருதப்பட விரும்பாமல் அதில் ஈடுபடுகின்றனர். என்றபோதிலும், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு ‘சஞ்சலத்துக்கும்’ ‘தீங்குக்குங்கூட’ வழி நடத்தக்கூடுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏன் என்பதை நாம் ஆலோசிக்கலாம்.

உடல் தொடுவதன் பாதிப்புகள்

9அநேகமாய், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு ஓரளவாக உடல் தொடுவதோடு—கைகளைப் பற்றியிருப்பது, முத்தமிடுவது, அல்லது அதற்கும் மேற்பட்ட ஏதாவது—உட்பட்டதாய் இருக்கிறது. முதன் முதல், அந்த மற்ற ஆளின் கையை வெறுமென தொடுவது தானேயும் வெகு இன்பம் தருவதாய், அனல் பொங்கியெழும் உணர்ச்சியை ஒருவர் அடையும்படி செய்யக்கூடும். ஆனால் சிறிது நேரத்துக்குப்பின்பு அது அதன் கிளர்ச்சியை இழந்துவிடக்கூடும், முன்னிருந்த அதே பாதிப்பை உடையதாக இராமற் போகலாம். முத்தமிடுவதைப் போன்ற இன்னும் ஏதோ அதிகம் கவர்ச்சிகரமாயிருக்கலாம். ஆனால், பின்பு, அதுவுங்கூட சாதாரணமாகிவிடலாம், ஒருவேளை சிறிது சலித்துப் போனதாகவும் ஆகிவிடலாம். ஏன்?

10பால் சம்பந்தப்பட்ட காமம் உட்பட்டிருக்கையில், இதெல்லாம் ஒரு திட்டமான விளைவுக்கு வழிநடத்தும்படி கருதப்பட்ட கோர்வையான நிகழ்ச்சிகளின் பாகமாக இருக்கிறது. முதன் முதல் தொடுதலே அந்த முதல் இணைப்பு. கடைசி இணைப்பு பாலுறவு கொள்ளுதல், இது விவாகத் துணைவர்களுக்கு மாத்திரமே தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. இவற்றிற்கு இடையிலுள்ள எல்லாம் அந்தச் சங்கிலியின் இந்தக் கடைசி இணைப்புக்கு வழிநடத்தக்கூடும். ஆகையால், நீ திருமணம் செய்யவில்லையென்றால் அந்த முதல் இணைப்பையோ, அல்லது மற்ற எந்த இணைப்பையோ தொடங்குவது ஞானமாயிருக்குமா? அப்படிச் செய்வது அநேகமாய் “சஞ்சலத்தைக்” கொண்டுவரும். ஏன்? ஏனென்றால் உன் உடல் இப்பொழுது பெறக்கூடாத ஒன்றாகிய அந்தக் கடைசி இணைப்பைப் பெறுவதற்குத் தன்னை ஆயத்தமாக்கப்போகிறது. பாலுறவுக்காக ஆசையைத் தூண்டிவிட்டு அந்த ஆசையை நிறைவேற்றாமற் போவது ஏமாற்றத்திற்கும் நரம்பு விறைப்புக்கும் வழிநடத்தக்கூடும்.

11வேசித்தனம் “சஞ்சலத்தை” முடிவடைய செய்யாது. அதற்கு மாறாக, அது “தீங்குக்கு” வழிநடத்தக்கூடும். எப்படி? பற்பல வழிகளில். அது மேக நோயில் விளைவடையக்கூடும். அந்தப் பெண் கர்ப்பந்தரித்தவளாகக்கூடும். இது அந்த ஜோடியைத் தாங்கள் உண்மையில் ஆயத்தமாயிராத திருமணத்துக்கு உட்படும்படி வற்புறுத்தி, அவர்களுடைய எதிர்கால சந்தோஷத்தைக் கேடுண்டாகப் பாதிக்கக்கூடும். அல்லது அந்த இளைஞன் அந்த இளம் பெண்ணை மணஞ் செய்துகொள்ள ஒருவேளை மறுத்துவிடலாம், அப்பொழுது அவள் அந்தப் பிள்ளையைக் கணவனில்லாமல் தான் தனியே வளர்க்கக் கடமைப்பட்டவளாகிறாள். அல்லது கருச்சிதைவு செய்துகொள்ள அவள் தூண்டப்படக்கூடும், கருச்சிதைவு ஒரு வகையான கொலை என்று பைபிள் காட்டுகிறது. இது “தீங்கு” அல்லவா? எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு உனக்கு இந்த விளைவுகளைக் கொண்டுவராதென்று நீ தீர்மானமாயிருக்கலாம். என்றாலும் உன்னைப்போலவே அவ்வளவு தீர்மானமாய் இருந்த பலர் கடைசியாக இந்தத் தொல்லைகளை எதிர்ப்படுபவர்களாகியிருக்கிறார்கள். அப்படியானால், மெய்யாகவே, நீ திருமணத்துக்கு ஆயத்தமாய் இருக்கிறாயா இல்லையா என்ற கேள்வி திரும்பவும் வருகிறது.

உன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி

12எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு நேர்முகமாய்த் “தீங்குக்கு” வழிநடத்தாதபோதிலும், அது மற்றக் கெடுதியான முறைகளில் பாதிக்கக்கூடும். வெகு சீக்கிரத்திலேயே உன் அக்கறையை ஒரே ஓர் ஆளிடமாகக் குறுகச் செய்யும் போக்கு அதில் ஒன்றாகும். மேலும், உன்னுடைய சொந்த உணர்ச்சி சம்பந்த முதிர்ச்சியின் வளர்ச்சிக்காக, விரிவாய்ப் பல்வேறு ஆட்களின் கூட்டுறவிலிருந்து நீ மிக அதிக நன்மையை அடையக்கூடிய ஒரு சமயத்தில் இது ஏற்படுகிறது. நீ ஆணாக உன் இளம் முழு வளர்ச்சிப் பருவத்தில் இருக்கிறாயென்றால், சரியானதற்கு மதிப்பைக் காட்டுகிற மற்ற முதிர்ச்சியடைந்த ஆண்களோடு உன்னுடைய முக்கிய நட்பை வைத்துக்கொள்வதன் மூலம் ஒரு மெய்யான ஆணாவதில் நீ முதலாவதாக உன் மனதை ஒருமுகமாய் ஊன்ற வைப்பது நல்லதல்லவா? அவர்களிடமிருந்து ஆண்மை திறமைகளையும் வழிகளையும் நீ கற்றுக் கொள்ளலாம். நீ பெண்ணாக உன் இளம் முழு வளர்ச்சிப் பருவத்தில் இருக்கிறாயென்றால், சிறந்த பெண்மைக்குரிய திறமைகளையும் வழிகளையும் கடைப்பிடிக்கிறவர்களும் அவற்றை உன்னில் வளர்க்க உனக்கு உதவி செய்யக்கூடியவர்களுமாய் இருக்கிறவர்களோடு கூட்டுறவு கொள்வதிலிருந்து மெய்யான ஒரு பெண்ணாக வளருவதில் முதலாவதாக உன் அக்கறையை ஊன்ற வைக்கலாமல்லவா? எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு இப்படிப்பட்ட வளர்ச்சியை உண்மையில் குறுக்கிட்டுத் தடுத்து தாமதப்படுத்துகிறது.

13எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, பொதுவாக விரும்பப்படும் பழக்கமாவதற்கு முன்பாக, இளைஞர் தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு ஏராளமான காரியங்களைக் கண்டடைந்தனர். நீயுங்கூட அவ்வாறு கண்டடையலாம். உரையாடல், கல்விகற்றல், தனி திறமைகளை விருத்தி செய்தல், செயல்முறைத் திட்டங்களில் வேலை செய்தல், விளையாட்டுகளை விளையாடுதல், இடங்களுக்குச் சென்று காரியங்களைக் காணுதல் ஆகியவற்றில் நீ மெய்யான மகிழ்ச்சியைக் கண்டடையலாம். இவற்றை உன் சொந்த பாலாரான ஒருவரோடு அல்லது ஒரு தொகுதியோடு செல்வதில் நீ மிகுந்த இன்பத்தைக் கண்டடையலாம். அந்தத் தொகுதியில் எவ்வளவுக்கெவ்வளவு பல வயதினர்—அதாவது சிலர் உன் சொந்த வயதினராக, சிலர் அதற்கு முதியோராக, சிலர் இளைஞராக—இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மகிழ்ச்சியும் உனக்கு உண்டாகும்.

எப்பொழுது திருமணம் செய்துகொள்வது?

14என்றபோதிலும், இயல்பாய் இளைஞர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒரு சமயம் வருகிறது. இதற்கு மிகச் சிறந்த காலம் எது—நீ இன்னும் பருவ வயதிலிருக்கும்போதா? பொதுவாய் அப்படியில்லை. ஏனென்றால் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ அதைப் பார்க்கிலும் முதிர்ந்த வயதை அடைந்திருக்கையில் திருமணம் வெற்றிகரமாக இருப்பதைப்போல் பருவ வயது திருமணங்கள் மிகப் பல இருப்பதில்லையென்று கடினமான உண்மை காரியங்கள் காட்டுகின்றன. மனித சமுதாய வளர்ச்சி, இயல்பு முதலியவற்றைப் பற்றிய ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்ட பிரகாரம்: “பிற்பட்ட வயதில் செய்யப்படும் திருமணங்களோடு ஒப்பிட, பருவ வயது திருமணங்களில் விவாகரத்து அல்லது சந்தோஷமில்லாமை ஆகியவை பொதுவாக உயர்ந்த வீதத்தில் ஏற்படுபவையாக இருக்கின்றன.”

15மறுபட்சத்தில், இப்படிப்பட்ட இளைஞருக்குள் திருமணமே கூடாதென்று கண்டிப்பாய்ச் சொல்வதற்கு வேதப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை. பொதுவாக, நாட்டின் சட்டங்கள், பெற்றோர், எது தங்கள் பிள்ளைகளின் மிகச் சிறந்த அக்கறைகளுக்கேதுவாக இருந்து, அவர்களுடைய மிகச் சிறந்த சந்தோஷத்துக்கும் நன்மைக்கும் வழி நடத்துமென்று தாங்கள் நம்புகிறார்களோ அதைச் செய்ய தீர்மானிப்பதற்குத் தங்கள் முதிர்ச்சியடைந்த பகுத்தறிவைப் பயன்படுத்தும்படி உரிமை அளிக்கின்றன. தங்கள் அதிகாரத்தின் கீழுள்ள குமாரருக்கு அல்லது குமாரத்திகளுக்குத் திருமணத்தை அனுமதிக்க அல்லது அனுமதியாதிருக்க அவர்கள் தீர்மானிக்கலாம். நிச்சயமாகவே, நம்முடைய காலங்களில் பல பிரச்னைகளும் திருமணத்தோல்விகளின் பெரும் சதவீதமும் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனிருக்கும்படி அவர்களைச் செய்விக்க வேண்டும். மேலும் இது, யோசனையுள்ள இளைஞரும்—‘அவசரப்பட்டு மணம் செய்து பிறகு எண்ணி மனம் வருந்துவதற்குப் பதிலாக’—அவ்வாறே எச்சரிக்கையுடனிருக்கும்படி அவர்களைச் செய்விக்க வேண்டும். அடுத்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்று எந்த நல்ல அறிவும் உனக்கு இல்லாதபோது, ஒரு கதவு திறந்திருப்பதன் காரணமாகத்தானே அதனுள் துரிதமாய் நுழைவது முட்டாள்தனமாகும்.

விவாகத் துணையைத் தேர்ந்தெடுத்தல்

16சில இடங்களில் குறைந்த பட்சம் பெற்றோரில் ஒருவரோ, அல்லது வேறு முதியவர் எவரோ அங்கிருந்தால் மாத்திரமே ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணோடு இருக்கும்படி அனுமதிக்கப்படுகிறான். என்றபோதிலும், மேற்கத்திய நாடுகள் பலவற்றில் இப்படிப்பட்ட இளைஞர் துணைக்காவல் எவரும் இல்லாமல் அடிக்கடி ஒன்றாகத் தனித்திருப்பார்கள். அப்படியானால், இப்படிப்பட்ட விரிவான சுயாதீனம் அனுமதிக்கப்படுகிற இடத்தில், விவாக நோக்குடன் பழகுதல் உண்மையில் சந்தோஷமுள்ள வெற்றிகரமான திருமணத்துக்கு வழி நடத்தும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் என்ன செய்ய வேண்டும் என்பது கேள்வியாய் இருக்கிறது.

17சுயாதீனம் எப்பொழுதும் அதோடு உத்தரவாதத்தையும் கொண்டு வருகிறது. ஆகையால், நீ இப்பொழுது எதிர்ப்படுவது இந்தக் கேள்வியே என்றால், கலாத்தியர் 5:13-ல் குறித்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறந்த நியமத்தை நீ மனதில் வைப்பது நல்லது. இங்கே அப்போஸ்தலனாகிய பவுல், நிச்சயமாகவே, கிறிஸ்தவத்தை ஆர்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அது கொண்டுவந்த ஆவிக்குரிய சுயாதீனத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். என்றாலும் இந்த நியமம் எந்த வகையான சுயாதீனத்துக்கும் பொருந்துகிறது, முக்கியமாய், அதைப் பயன்படுத்துவது சிறந்த நன்மைகளையும் கடவுளுடைய தயவையும் கொண்டுவரும்படி நாம் விரும்புகிறோமென்றால் அவ்வாறு இருக்கிறது. இந்த அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதுகிறான்: “சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல் அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.” கடவுள்பேரிலும், நாம் ஒருவேளை விவாக நோக்குடன் பழகும் அந்த ஆள் உட்பட, நம்முடைய அயலான் பேரிலுமுள்ள—மெய்யான அன்பு நமக்கிருக்கும் எந்தச் சுயாதீனத்தையும் தன்னல, தீங்கான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க நமக்கு உதவி செய்யும்.

18சரியானபடி, விவாக நோக்குடன் பழகுதலானது திருமணத்தை நோக்கமாகக் கொண்டே செய்யப்பட வேண்டும். ஆகையால், ஒருவன் மணமான வாழ்க்கையின் உத்திரவாதங்களை ஏற்க ஆயத்தமாக இருப்பதற்கு முன்பாகக் காதல் தொடங்கப்படக்கூடாது. நிச்சயமாகவே, தொடக்கத்தில்தானே ஓர் ஆளை நீ மணம் செய்துகொள்ள விரும்புகிறாயா இல்லையா என்பது தெரியாது. ஆகையால் எந்த ஒரு தனியாளின் பேரிலும் உன் கவனத்தை நீ வெகு விரைவில் ஊன்ற வைக்காமல் இருப்பது அறிவுள்ள காரியமாகும். ஆனால் இது வெறும் விளையாட்டுக் காதலீடுபாடாக அல்லது இவ்வகையான தொடர்ந்த காதலீடுபாடுகளாகத்தானே இருக்குமானால் “விவாக நோக்குடன் பழகுதலைத்” தொடர்வதற்கு எவ்விதக் காரணமுமில்லை.

19எவராவது ஒருவரில் நீ “அக்கறை கொள்கிறா”யென்றாலுங்கூட, அப்படிப்பட்டவரோடு உன் கூட்டுறவைச் சிறிது காலத்திற்கு வெறும் ஒரு தொகுதியின் பாகமாகவே, தொகுதியின் நடவடிக்கைகளிலேயே வைத்துக்கொள்ள முயலுவது உன் பங்கில் ஞானமாயிருக்கும். ஏன்? ஏனென்றால், அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஓர் ஆள் உண்மையில் என்னவாக இருக்கிறான்[றாள்] என்பதைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உனக்கு அநேகமாய் கிடைக்கும். இது ஏனென்றால் எவராவது நமக்கு விசேஷித்த கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்ற உணர்ச்சியின் அழுத்தத்தின்கீழ் நான் இல்லையென்றால் நாமெல்லாரும் “நாம் உண்மையில் இருக்கிறபடி” இருக்க மனம் சாய்வோம். ஆனால் ஒரு ஜோடியாகத் தொகுதியிலிருந்து தனியே பிரிகையில், அப்பொழுதிருந்து அந்த மற்ற ஆள் நீ இருக்க விரும்புகிற வண்ணம் இருக்க வேண்டுமென்பதே, அவனுடைய அல்லது அவளுடைய விருப்பங்களையும் வெறுப்புகளையுமே பிரதிபலிக்க வேண்டுமென்பதே இயல்பான போக்காயிருக்கும். சில சமயங்களில், இது ஒருவரின் உண்மையான சுபாவத் தன்மையை மறைத்துப்போடக்கூடும். இருவராகத் தனியே செல்கையில் அந்த ஜோடி, விரைவில் உணர்ச்சிவசமாய் உட்படுகிறவர்களாகவும் கூடும், ஆகவே அவர்கள் ஒருவரையொருவர் “ரோஸ்நிற கண்ணாடிகள்” மூலம் பார்க்கத் தொடங்குகின்றனர். ஒரு ஜோடி இப்படிப்பட்ட உணர்ச்சிவச திடீர் எழுச்சியின் கீழ் திருமணம் செய்து கொள்வார்களேயாகில், அவர்கள் அநேகமாய் திடுக்கிடச் செய்யும் நிலைக்கு விழித்தெழுவதை எதிர்ப்படுவார்கள்.

20பொதுவாய், ஆண்தானே, அந்தப் பெண்ணில் அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் விவாக நோக்குடன் பழகுதலைத் தொடங்குகிறான். அவன் அதைப் பற்றி நேர்மையுள்ளவனாகவும் உண்மையில் கருத்துள்ளவனாகவும் இருக்கிறானென்றால், அவன் திருமணம் செய்ய எண்ணுகிறான் என்றாவது நம்ப அந்தப் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பின்பு என்ன செய்வது? அப்பொழுது, அவள், தான் அவனோடு திருமணத்தில் இணையக்கூடுமென்று நம்புகிறாளா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய உத்தரவாதத்தையுடையவளாக இருக்கிறாள். தான் அவனைத் தன் எதிர்கால கணவனாகக் கருதமாட்டாளென்று அவள் நிச்சயமாக இருந்தால், அவன் அவளில் ஆழ்ந்த அக்கறையை வளர்க்க அனுமதிப்பது அவள் பங்கில் குரூரமாக இருக்கும். சில இளம் பெண்கள் தங்கள் பிரசித்தியின் அல்லது தகுதியின் தோற்றத்தை வெறுமென உயர்த்திக் கொள்வதற்காக எவராவது தங்களைக் விவாக நோக்குடன் பழகும்படி விட மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள், இவ்வாறு மற்ற ஆண்கள் இப்பொழுது தங்கள் பேரில் கவனம் செலுத்துவார்களென்று நம்புகிறார்கள். சில இளம் ஆண்களுங்கூட தாங்கள் ‘ஆட்டக் களத்தில் ஆடி’ நல்ல நேரத்தை அனுபவித்து காரியங்கள் மீறிய வினைமையாவதற்கு முன்பாக விட்டு விலகிவிடலாமென்று எண்ணி இதைப்போல் செய்திருக்கின்றனர். ஆனால் ஒருவருடைய சுயாதீனத்தின் இப்படிப்பட்ட தன்னல உபயோகம் மெய்யான மனவேதனையை, கடுமையான காயங்களை உண்டுபண்ணக்கூடும், இவை ஆறுவதற்குப் பல மாதங்கள் மேலும் வருடங்களுங்கூட எடுக்கும்.

21தன்னலமற்ற முறையில் பயன்படுத்தினால் மாத்திரமே விவாக நோக்குடன் பழகுவதற்கான இந்தச் சுயாதீனம் நன்மைகளைக் கொண்டு வரக்கூடும். உன் வாழ்க்கையின் மீதி பாகத்தை யாரோடு செலவிட நீ எண்ணுகிறாயோ அந்த ஆளுடன் நன்றாய் அறிமுகமாவதற்கான வாய்ப்பை அது அளிக்கக்கூடும். ஒருவருக்கொருவர் எவ்வளவு நேர்மையுள்ளவர்களாக இருக்கிறீர்களோ அதைப் பொறுத்தே, ஒருவர் மற்றொருவருடைய விருப்பு வெறுப்புகள், தராதரங்கள், பழக்கவழக்கங்கள், மன நோக்குநிலைகள், ஆம், பிரச்னைகளும் தொந்தரவுகளும் வரும்போது ஒருவர் மற்றொருவருடைய மனப்பான்மை, மனப்போக்கு, பிரதிபலிப்பு ஆகியவற்றை நீங்கள் அறிந்து கொள்வது சார்ந்திருக்கிறது. அவன் [அல்லது அவள்] கனிவும், தயாளமும் பிறர் நலத்தை எண்ணிப் பார்க்கிற தன்மையும் உடையவனாக[ளாக] இருக்கிறானா[ளா?] பெற்றோருக்கும் முதியோருக்கும் மரியாதை காட்டுவதைப் பற்றியதென்ன? பணிவு, மனத்தாழ்மை ஆகியவற்றிற்குரிய நல்ல அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா, அல்லது அவன் [அவள்] தற்பெருமை பேசும், பிடிவாதமுள்ள ஒருவனா[ளா?] தன்னடக்கத்தையும் சமநிலையையும் நான் காண்கிறேனா, அல்லது, அவற்றிற்குப் பதில், திடமற்றத் தன்மையையும் சிறுபிள்ளைத் தனத்தையும், ஒருவேளை சிடுசிடுப்பான அல்லது வெறிக் கொண்டு எழும்புகிற தன்மையையுங்கூட காண்கிறேனா? வாழ்க்கையின் பெரும்பாகம் வேலையாக இருப்பதனால், சோம்பல், பொறுப்பற்றத் தன்மை அல்லது பணத்தைக் குறித்ததில் வீணாக்கும் மனப்பான்மை ஆகியவற்றிற்குரிய அறிகுறிகளைப் பற்றியதென்ன? எதிர்காலத்திற்கான திட்டங்களைப் பற்றியதென்ன? ஒரு குடும்பம் விரும்பப்படுகிறதா அல்லது ஏதோ விசேஷித்த வாழ்க்கைத் தொழிலில் அக்கறை இருக்கிறதா? போன்ற காரியங்களை சரியாகவே தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். “விவாக நோக்குடன் பழகுதலில் அபாய அறிகுறிகள்” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு கட்டுரையில் ஓர் எழுத்தாளன் பின்வருமாறு கூறுகிறான்: “நிச்சயம் செய்யப்பட்டவர்கள், சந்தோஷமான மற்றும் சந்தோஷமற்ற மணவாழ்க்கை நடத்துபவர்கள் ஆகியோரைப் பற்றிய எங்களுடைய ஆராய்ச்சியில், சந்தோஷமற்ற மணவாழ்க்கை நடத்துபவர்கள் வாழ்க்கை இலக்குகளிலும் மதிப்புகளிலும் பெரும்பாலும் கருத்து ஒற்றுமை இல்லாதவர்களாக இருந்தனரென்று கண்டோம்.”

22எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த மற்றவரின் அக்கறைகளிலும் திட்டங்களிலும் கடவுளுடைய நோக்கங்கள் எவ்வளவாக இடம்பெற்றிருக்கிறதென்று அறிய நீ விரும்பவேண்டும். ஆம், இந்த முழு காட்சியும் நிரப்பப்பட்டபின்பு, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருந்துகிறீர்கள்? வினைமையான வேறுபாடுகள் இருக்கிறதென்றால் திருமணம் தானாக அவற்றைத் தீர்த்துவிடுமென்று எண்ணி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. அவை உண்டாக்கும் உராய்வைத் திருமணம் இன்னும் அதிகக் கடுமையாக உணரும்படியே செய்விக்கலாம்.

விவாக நோக்குடன் பழகுதலில் பண்பொழுக்கமான நடத்தை

23பெற்றோர், துணைக்காப்பாளர் இல்லாமல் கூட்டுறவை அனுமதிக்கும் நாடுகளில், விவாக நோக்குடன் பழகுதலில் ஈடுபடும் ஜோடிகள் அன்பை வெளிப்படுத்துபவர்களாக, கைக்கோத்தல், முத்தமிடுதல், அணைத்துத் தழுவுதல் ஆகியவற்றைப் போன்றதில் அநேகமாய் ஈடுபடுகிறார்கள். நிச்சயமாகவே, பெற்றோர் அவர்கள் தங்களை நடத்திக்கொள்ள வேண்டிய தராதரங்களைக் குறித்து தங்கள் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும் கற்பிக்கக் கடமைப் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் இளைஞருடைய கவனத்தைக் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற நல்ல சரியான வழிநடத்தும் நியமங்களுக்குச் செலுத்தும்படி வழிநடத்தக்கூடும். வாழ்க்கையில் ஒரு ஞானமான போக்கை ஏற்கவேண்டுமென்று மனப்பூர்வமாய் விரும்புகிற எவரும், இப்படிப்பட்ட அறிவுரைக்கு மனப்பூர்வமாயும் மகிழ்ச்சியுடனும் செவிகொடுப்பர்.

24வேசித்தனத்தை, அதாவது, நிச்சயம் செய்யப்பட்டுள்ள ஜோடிகள் உட்பட, திருமணம் செய்யாத ஆட்கள்—பாலுறவு கொள்ளுதலை, பைபிள் திட்டவட்டமாய்க் கண்டனம் செய்வது மட்டுமல்லாமல், விவாக நோக்குடன் பழகும்போது நடக்கக்கூடிய ஒழுக்கக்கேட்டுக்கும் “அசுத்தத்திற்கும்” எதிராகவும் எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21) இந்த எச்சரிக்கைக்குச் செவி கொடுக்கிற எந்த ஜோடியும் தங்களுக்கு மிகுந்த துக்கம் உண்டாவதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வார்கள், மேலும் ஒழுக்கக்கேடான ஏதாவது நடத்தை திரும்பத் திரும்ப நினைவுக்குவந்து தங்களுக்குத் தொல்லையுண்டாக்குவதன் அபாயத்தையும் தவிர்த்திருப்பார்கள். ஆனால், பைபிளின் தராதரங்களின்படி அசுத்தமான நடத்தை என்பது என்ன? அதில் எதுவும் உட்படக்கூடும்?

25கைகளைப் பற்றிப் பிடித்திருப்பது மணஞ் செய்துகொள்ள கருதியிருக்கும் ஆட்களிடையே பாசத்தின் சுத்தமான வெளிக்காட்டாக இருக்கக்கூடும். இது ஒரு கிளர்ச்சியூட்டும் பாதிப்பை உடையதாய் இருக்கிறதென்பது மெய்யே, என்றபோதிலும் அது இயல்பானதே, மேலும் அது கெட்டதாக இருக்க வேண்டியதுமில்லை. ஒருவர் மணம் செய்துகொள்ள எண்ணியிருக்கும் அந்த ஆளின் வெறும் தோற்றம்தானேயும் கிளர்ச்சியூட்டி, ‘இருதயம் விரைவாய்த் துடிக்கும்படி செய்விக்கலாம்.’ (சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:9) இருந்தபோதிலும், மனித இயல்பு என்னவாக இருக்கிறதென்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம், உடல் தொடுவது பால் சம்பந்த கவர்ச்சியின் “ஈர்ப்பை” நிச்சயமாகவே அதிகரிக்கிறது. ஆகவே, அது வழிநடத்தக்கூடிய விளைவுகளை உணருவதன் காரணமாக, சில ஆட்கள் விவாக நோக்குடன் பழகும்போது உடல் தொடுதலைக் குறித்ததில் வெகு கண்டிப்பாகத் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருமே அவர்களுடைய மனச்சாட்சிக்குரிய நிலையை இகழ்ந்து பேசவோ அற்பமாய்க் கருதவோ கூடாது.

26முத்தமிடுதலுங்கூட திருமணம் செய்துகொள்ள கருதியிருக்கும் ஆட்களிடையே பாசத்தின் சுத்தமான வெளிக்காட்டாக இருக்கலாம்—அல்லது அது அப்படியில்லாமலும் இருக்கலாம். உண்மையில் கேள்வியானது, எந்த அளவுக்குக் காமம் இந்தக் காட்சியில் நுழைகிறது என்பதே. அந்த ஜோடி பால்சம்பந்த தீவிர உணர்ச்சியால் எழுப்பப்படும் நிலைக்குக் காமத்தைத் தூண்டும் வகையில் முத்தமிடுதல் செய்யப்படலாம். பால் சம்பந்த எழுப்புதல் அந்த ஜோடியைப் பாலுறவு கொள்வதற்கு ஆயத்தம் செய்கிறது. ஆனால் கடவுளுடைய சட்டத்தின் பிரகாரம் இந்தச் சிலாக்கியம், மணம் செய்த ஆட்களுக்காக மாத்திரமே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஜோடி வேண்டுமென்றேயும் வெட்கமில்லாமலும் காம வெறியை எழுப்பும் நடத்தையில் ஈடுபட்டு, கடவுளுடைய சட்டத்தைத் தெரிந்தும் துணிகரத்துடன் மீறி, ஒருவர் மற்றொருவருடைய பாலுறுப்புகளைத் தொட்டு விளையாடியோ அல்லது வேறு வகையிலோ, நடந்து கொண்டால் அவர்கள் “அசுத்தமும்” “காம விகாரமும்” நடப்பித்தக் குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

27நமக்கு நாமே நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்தக் காரியங்களில் நமக்கு உறுதியான தன்னடக்கம் இல்லையென நாம் அறிந்திருக்கிறோமென்றால், அப்பொழுது வருவது வரட்டுமென்ற துணிகரத்தால் நம்முடைய எதிர்காலத்தையோ அந்த மற்ற ஆளின் எதிர்காலத்தையோ நாம் இடருக்கு உட்படுத்தக்கூடாது. ஒரு காரின் தடுத்து நிறுத்தும் கருவிகள் சரியாக வேலை செய்கிறதில்லையென நீ அறிந்திருக்கிறாயென்றால், அந்தக் காரைச் செங்குத்தான ஒரு சுழல் பாதையில் கீழ் நோக்கி ஓட்டிச் செல்வாயா? இந்தக் காரியத்தின் பேரில் உன் மனதில் தீர்மானித்து உன் இருதயத்தை அமர்த்தி முடிவுக்கு வருவது, இவற்றைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யப்பட வேண்டும், தொடங்கின பின்பல்ல. உடல் சம்பந்த ஆசைகள் கிளர்ந்தெழும்பத் தொடங்கிவிட்ட பின்பு அவை வளர்ந்து கொண்டு போவதை தடுப்பது பொதுவாய் வெகு கடினம். பாலுறவை நாடும் அளவுக்குக் காமம் தங்களில் வளரும்படி அனுமதிக்கிறவர்கள்—திருமணமாகாதவர்களாய் அதற்கு உரிமையற்றிருக்கையில்—தங்களை மன உலைவுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாக்குகிறார்கள். இது பரப்பரப்பூட்டும் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்து—அதன் கடைசி அதிகாரத்துக்கு வருகையில் அதில்லாமல் கிழிக்கப்பட்டிருப்பதைக் காண்பதற்கு ஒப்பாக இருக்கிறது.

28விவாக நோக்குடன் பழகுதலில் நெருங்கிய உறவுக்கு இணங்கி, அது அடிக்கடி நிகழுவதிலும், தீவிரத்திலும் படிப்படியாய் அதிகரித்துக்கொண்டே வரும்படி விட்டுக் கொடுக்கிறவர்களைப் பார்க்கிலும் அதில் தங்கள் உறவை உயர்ந்த தரத்தில் வைத்துக் கொள்கிறவர்கள், விவாகத்தில் மிக மேம்பட்ட தொடக்கத்தை அடைகிறவர்களாக இருப்பார்கள். ‘அணுகாமலிருக்க வைக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க’ வேண்டியதாயுள்ள ஒருவனிடமாக ஓர் இளம் பெண் எவ்வளவு மதிப்புணர்ச்சி உடையவளாக இருப்பாள்? ஆனால் மரியாதையுள்ள தன்னடக்கத்தையும் திடமான மனவுரத்தையும் காட்டுகிற இளைஞன் மரியாதையைச் சம்பாதித்துக் கொள்கிறான். ஒரு பெண்ணைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது. அவளுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட நேரமெடுக்குமென்றாலும் ஓர் ஆணைக் குறித்ததில் இது அநேகமாய் உண்மையாக இருப்பதில்லை என்பதை அவள் முக்கியமாய்த் தெரிந்திருக்க வேண்டும். அவன் எளிதாகவும் விரைவாகவும் பால் சம்பந்தமாய் எழுப்பப்பட்டவனாவான்.

29அடிக்கடியும், மேலும் மேலுமதிகமாகவும் காம உணர்ச்சி வெளிப்பாட்டுகளுக்கு விட்டுக்கொடுப்பது உரிய காலத்திற்கு முற்பட்ட திருமணத்துக்கு வழிநடத்தக்கூடும். வளரிளமையும் இளமைப் பருவமும் என்ற ஆங்கில புத்தகமானது பின்வருமாறு சொல்லுகிறது: “விவாக நோக்குடன் பழகுதலின் முதல் நிலைகள் அநேகமாய் நடக்க முடியாத காதல் கதை இயல்பு வாய்ந்தவை. அந்தச் சமயத்தில் மணம் செய்துகொள்வதானது எந்த மணமும் மெய்யாகக் கைக்கூடி வரச்செய்ய முடியாத அதிகத்தை அந்தத் திருமணத்திலிருந்து எதிர்பார்க்கும்படி ஒருவரை வழிநடத்தக்கூடும். விவாக நோக்குடன் நீடித்து பழகுதல் பொதுவாய் அந்த மற்ற ஆளை அதிக நியாயப்படி தெளிவாய்த் தெரிந்துகொள்வதில் விளைவடைகிறது. இவ்வாறாக, நோக்கமறிந்த திருமணத்தில் பலனடையக்கூடும்.” விவாக நோக்குடன் நீடித்து பழகும்போது தன்னடக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும்—மற்றபடி பால் சம்பந்தத் தூண்டுதலின் சக்தி வெகு சீக்கிரத்திலேயே வளர்ந்து இவ்வாறு மெய்யான அபாயத்துக்கேதுவாய்விடும்.

30விவாக நோக்குடன் பழகும்போது, காமம் காட்சியை முனைப்பாய் மிகைப்படுத்தும்படி அனுமதிக்கப்பட்டால், திருமணத்துக்குப் பின்பு வினைமையான சந்தேகங்களும் அவநம்பிக்கைகளுங்கூட எழும்பக்கூடும். நாம் உண்மையில் அன்பினிமித்தமாகவே மணம் செய்தோமா? அல்லது நாம் வெறும் காமத்தால் பிடிக்கப்பட்டோமா? இது ஞானமான தெரிவுதானா? அந்தப் பெண்ணுங்கூட, தான் எப்படிப்பட்டவள் என்பதற்காக அல்லாமல் வெறுமென தன்னுடைய உடலுக்காகவே தன் கணவன் தன்னை மணந்து கொண்டானா என்பதாக எண்ணி தன் கணவனுடைய அன்பின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கவும் மனம்சாயலாம்.

31ஆகையால், உன்னையும் உன் எதிர்கால சந்தோஷத்தையும் பாதுகாக்க, காமத் தூண்டுதலுக்கு ஏதுவான சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தவிர்த்திரு. தனிமையான இடங்கள், இருள் ஆகியவை உன் விவாக நோக்குடன் பழகுதலை மதிப்புக்குரியதாகக் காத்து வைக்க உனக்கு உதவி செய்யப் போவதில்லை. மேலும் மிகுந்த நேரமிருந்து பாசத்தின் வெளிக்காட்டுதல்களில் ஈடுபடுவதைத் தவிர செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதாகத் தோன்றும். சந்தர்ப்ப நிலைமைகளும் உதவி செய்வதில்லை. ஆனால் பனிச்சருக்கு விளையாட்டு, டென்னிஸ் பந்தாட்டம் அல்லது இவற்றைப் போன்ற மற்ற விளையாட்டுகளில் பங்குகொள்ளுதல், ஓர் உணவு விடுதியில் ஒன்றாகச் சாப்பிடுதல், ஏதோ பொருட்காட்சி சாலைக்கு அல்லது அவ்விடத்திலுள்ள அழகு வாய்ந்த கவனத்தைக் கவரும் இடத்துக்குச் செல்லுதல் ஆகியவற்றைப் போன்ற நடவடிக்கைகளில் சுத்தமான மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். தனிப்பட்ட அறிமுகமானவர்கள் சுற்றியிராததன் காரணமாக ஓரளவு தனிப்பட்ட உணர்ச்சியை அனுபவிக்கையில், மற்ற ஆட்களிலிருந்து முற்றிலுமாய்த் தனிப்படுத்தி வைக்கப்படாதிருப்பதன் பாதுகாப்பை நீ உடையவனாக[ளாக] இருப்பாய்.

32தன்னடக்கத்தைக் காட்டுவதன் மூலம் நீ எதை “அடையாமற்போகிறாய்” என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்திற்காக நீ எதை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிரு. அப்பொழுது வரப்போகிற எல்லா ஆண்டுகளிலும் நீ உன் விவாக நோக்குடன் பழகுதலை வெறுப்புடனும், சென்றதை எண்ணிக் கவலைப்படும் விசாரத்துடனும் அல்லாமல், இன்பத்துடனும் மனதிருப்தியுடனும் நினைவுபடுத்திப் பார்க்கக் கூடியவனாய்[ளாய்] இருப்பாய்.

[கேள்விகள்]

1-4. (எ) எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு எவ்வளவு சமீபத்தில் ஒரு பொது பழக்கமாயிற்று? (பி) எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, பழக்கமாயிராத நாடுகளில் திருமணங்கள் எப்படி ஏற்பாடு செய்யப்படலாம்? (சி) கடைசி பகுத்தாராய்ச்சியில் இந்தப் பழக்கங்கள் எவ்வளவு நல்லவை எவ்வளவு கெட்டவை என்பதை எது தீர்மானிக்கிறது?

5-8. (எ) பிரசங்கி 11:9, 10-ல் சொல்லப்பட்டிருப்பது, நம்முடைய நடத்தையைப் பற்றியதில் நீண்டகால நோக்குநிலையை ஏற்கும்படி நமக்கு எப்படி உதவி செய்கிறது? (பி) இளைஞர் பலர், ஏன் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு வைத்துக்கொள்ள நாடுகின்றனர்?

9-11. (எ) எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பில் என்ன உடல் தொடுதல் பொதுவாய் உட்பட்டிருக்கிறது? படிப்படியாய் இன்னுமதிகம் நெருங்க வேண்டுமென்ற இயல்பான ஆவல் ஏன் அங்கே இருக்கிறது? (பி) திருமணமாகாத ஓர் ஆளுக்கு இது ஏன் நரம்பு விறைப்பில் விளைவடையக்கூடும்? (சி) அந்த உடல் தொடுதல் வேசித்தனத்துக்கு வழிநடத்துகிறதென்றால், அது எப்படிப் பற்பல வகைகளான தீங்கில் விளைவடையக்கூடும்?

12, 13. எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு எப்படி ஒருவருடைய வளர்ச்சியைத் தடை செய்யக்கூடும்? ஆகையால், என்ன வகையான உறவுகள் அதிக நன்மை பயக்குபவையாய் இருக்கக்கூடும்?

14, 15. (எ) பருவவயதினர் திருமணம் செய்து கொள்வது நல்லதென்று நீ நினைக்கிறாயா? (பி) தங்கள் பிள்ளை மணம் செய்துகொள்ள விரும்புவதன் சம்பந்தமாய் பெற்றோருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

16-19. (எ) விவாக நோக்குடன் பழகுதல் அனுமதிக்கப்படுகிற இடங்களில் கலாத்தியர் 5:13-ல் உள்ள நியமத்தைப் பொருத்திப் பிரயோகிப்பது எப்படி நன்மை பயக்குவதாய் நிரூபிக்கும்? (பி) விவாக நோக்குடன் பழகுதலின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? ஆகையால் அதில் ஈடுபடுகிறவர்கள் எதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்? (சி) எதிர்பாலாரான ஒருவருடன் நீ தன்னந்தனியே பழகுவதற்குப் பதிலாக ஒரு தொகுதியின் பாகமாக அவரோடு அறிமுகமாவது ஏன் உன்னுடைய அனுகூலத்திற்கு ஏதுவாயிருக்கும்?

20-22. (எ) நேர்மையான தன்னலமற்ற நோக்குடன் விவாக நோக்குடன் பழகுதலை அணுகுவது ஏன் முக்கியமானது? (பி) விவாக நோக்குடன் பழகும் காலப் பகுதியின்போது எதிர்கால துணையைப் பற்றி நீ என்ன கற்றுக்கொள்ளக்கூடும்? ஒரு துணையில் முக்கியமாய் என்ன பண்புகள் இருக்கும்படி நீ விரும்புவாய்?

23-26. (எ) மணம் செய்யும்படி திட்டமிடும் ஜோடியின் பங்கில் கைகளைப் பற்றிப் பிடித்தல், முத்தமிடுதல், அணைத்துத் தழுவுதல் ஆகியவற்றைப் பற்றி நீ எப்படி உணருகிறாய்? (பி) ஒருவர் எப்படி “காமவிகாரம்,” “அசுத்தம்” ஆகியவற்றை நடப்பித்துக் குற்றமுள்ளவராகக்கூடும்? இப்படிப்பட்ட காரியங்களைத் தவிர்ப்பது ஏன் முக்கியமானது? (கலாத்தியர் 5:19, 21)

27-30. திருமணத்துக்கு முன்பாகக் காமத்தை எழுப்பிவிடும் நடத்தையைத் தவிர்ப்பதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?

31, 32. தங்கள் விவாக நோக்குடன் பழகுதலைப் பாழ்ப்படுத்துகிற காமத்தை எழுப்பும் நடத்தையைத் தவிர்க்க ஒரு ஜோடிக்கு எது உதவி செய்யக்கூடும்?

[பக்கம் 153-ன் படம்]

விவாக நோக்குடன் பழகும் சந்திப்புகளில் கட்டுப்பாடின்றி காம உணர்ச்சிகளின் தொடர்ச்சியான வெளிக்காட்டுதல்களாக இருந்தால், இது வெற்றிகரமான விவாகத்தின் எதிர்பார்ப்புகளை எப்படிப் பாதிக்கும்?

[பக்கம் 155-ன் படம்]

இளைஞர்கள் பங்கு கொள்வதற்கு அதிக தூய்மையும் மகிழ்ச்சியுமான காரியங்கள் இருக்கின்றன